ஆஷூரா தினத்தைப் பற்றிய கதையளப்புகள்!

in 1990 ஜூலை-ஆகஸ்ட்

ஆஷூரா தினத்தைப் பற்றிய கதையளப்புகள்!

ஹாபிஸ் மிஸ்பாஹி

முஹர்ரம் எனபதற்கு “புனித மிக்கது” என்பது பொருள். இதன் புனிதத்திற்குச் சான்றாக பின்வரும் ஹதீஸ் அமைந்திருக்கிறது. அபூஹுரைரா(ரழி) அறிவித்துள்ளார்கள். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ரமழானுக்குப் பின் நோன்புகளில் மிக்க விசேஷமான நோன்பு ஷஹ்ருல்லாஹ்-அல்லாஹ்வின் மாதமாம் முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும். பர்லான தொழுகைக்குப் பின் மிக்க விசேஷமான தொழுகை இரவுத் தொழுகையாகும். (முஸ்லிம்)

அபூ கதாதா(ரழி) அறிவித்துள்ளார்கள்:

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆஷூரா தினத்தன்று நோற்கப்படும் ஒரு நோன்பானது, அல்லாஹ் அதை கடந்த ஒரு வருடத்தின் பாவங்களுக்குப் பரிகாரமாக்கி விடுவான் என்று நான் உறுதியாக நம்புகிறேன் (திர்மிதீ)

இப்னு அப்பாஸ்(ரழி) அறிவித்துள்ளார்கள்:

நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு(ப் புதிதாக) வந்த நேரத்தில் யூதர்களை ஆஷூரா தினத்தன்று நோன்பு நோற்பவர்களாகக் கண்டார்கள். அவர்களை நோக்கி நீங்கள் நோன்பு நோற்றுள்ள இந்நாளின் மகத்துவம் என்ன? என்று வினவினார்கள். அதற்கவர்கள் இது ஒரு புனித மிக்க தினம் இன்று தான் நபி மூஸா(அலை) அவர்களையும், அவர்கள் தம் சமூகத்தாரையும் அல்லாஹ் காப்பாற்றி (அவர்களின் எதிரிகளான) ஃபிர் அவ்னையும், அவனது கூட்டத்தாரையும் நீரில் மூழ்கடித்தான். அதற்கு நன்றி செலுத்தும் பொருட்டு நபி மூஸா(அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதன் அடிப்படையில் நாங்களும் நோன்பு நோற்றிருக்கிறோம் என்றார்கள்.

இதைச் செவியுற்ற நபி(ஸல்) அவர்கள் நபி மூஸா(அலை) அவர்களின் இவ்விஷயத்தில் நானே உங்களைப் பார்க்கிலும் மிக்க தகுதியுடையோனும், கடமை உணர்வு மிக்கவனுமாவேன் என்று கூறிவிட்டு தாமும் நோன்பு நோற்று, பிறரையும் நோற்கும்படி கட்டளைவிட்டார்கள். (புகாரீ. முஸ்லிம்)

இப்னு அப்பாஸ்(ரழி) அறிவித்துள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் ஆஷூரா, தினத்தன்று தாமும் நோன்பு நோற்று பிறரையும் நோற்கும்படி தாம் ஏவியபோது, அல்லாஹ்வின் தூதரே! இத்தினத்தை யூதர்களும், கிறிஸ்தவர்களும் சிறப்பானதாக மதிக்கிறார்கள். (நாம் அவர்களுக்கு மாற்றம் செய்ய வேண்டியவராயிற்றே) என்றார்கள். அதற்கு நான் (இன்ஷா அல்லாஹ்) வரும் வருடம் உயிருடனிருந்தால் ஒன்பதாம் நாளன்றும் நோன்பு வைப்பேன் என்றார்கள். (முஸ்லிம்)

ஆகவே நாம் ஹதீஸின் அடிப்படையில், ஆஷூரா தினத்தைப் பற்றி அலசிப்பார்க்கும்போது, அன்றைய தினம் நோன்பு நோற்பதோடு அதற்கு முன் தினம் முஹர்ரம் ஒன்பதாம் நாள் நோன்பு நோற்பது சுன்னத்து என்பதை அறிகிறோம்.

உண்மையான ஹதீஸ்களின் அடிப்படையில் முஹர்ரம் மாதத்தின் சிறப்பைக் கண்டோம். இந்நிலையில் ஒரு சில மவ்லவிகள் தாங்கள் ஏதோ ஒரு அரபு நூலில் படித்த கதைகளை “கால,கீல” என்ற சொற்றொடர்களுடன் சேர்த்து ஹதீஸ்களாக தங்களது சொற்பொழிவுகளிலும், பள்ளி பயான்களிலும் அரங்கேற்றிக் கொண்டுள்ளனர். அவர்களின் இக்கூற்றுகளை முதலில் பார்ப்போம்.

அவர்கள் ஹதீஸ்களின் பெயரால் அரங்கேற்றும் கூற்றுகள்:

அல்லாஹு தஆலா முஹர்ரம் பத்தாவது தினமாகிய இந்த ஆஷூரா தினத்தில் தான்:

– வானத்தையும், பூமியையும் படைத்தான்.

– முதன் முதலாக பூமியில் மழையைப் பெய்ய வைத்தான்.

– நபி ஆதம்(அலை) அவர்களையும் படைத்தான்.

– அவர்களின் தவ்பாவை ஏற்று அவர்களை மன்னித்தான்

– நபி இத்ரீஸ்(அலை) அவர்ளுக்கு உயர் பதவியை வழங்கினான்.

– நபி நூஹ்(அலை) அவர்களின் கப்பலை “ஜூதிய்யு” மலையின் மீது தங்கச் செய்தான்.

– நபி இப்றாஹீம்(அலை) அவர்களை நெருப்பிலிருந்து காப்பாற்றினான்.

– நபி தாவூத்(அலை) அவர்களின் தவறை மன்னித்தான்.

– நபி சுலைமான்(அலை) அவர்களுக்கு ஆட்சியை மீண்டும் கொடுத்தான்.

– நபி அய்யூபு(அலை) அவர்களுக்கு நோயின் கஷ்டத்தை அகற்றினான்.

– நபி யூனூஸ்(அலை) அவர்களை மீனின் வயிற்றிலிருந்து வெளியில் கொண்டு வந்தான்.

– நபி யுஃகூபு(அலை) அவர்களையும். அவர்கள் தம் மகனார் நபி யூசுபு(அலை) அவர்களையும் பல்லாண்டுகளுக்குப் பின் ஒன்று சேர்த்து வைத்தான்.

– நபி ஈஸா(அலை) அவர்களைப் பிறக்கச் செய்தான்.

– நபி ஈஸா(அலை) அவர்களை மீண்டும் அவர்களைப் பல்லாண்டுகளுக்குப் பிறகு இதே தினத்தில் வானத்தின் பால் உயர்த்தினான்.

Previous post:

Next post: