இவற்றையும் மறுப்பாரா?

in 1990 ஜூலை-ஆகஸ்ட்

புரசை மவ்லவி

இவற்றையும் மறுப்பாரா?

ஹம்துல்லாஹ் ஜமாலி

வாசக நேயர்களே! ஜூன் இதழில் சென்னை தோழர் அபூஹாமிது எழுதி வெளிவந்த முல்லாக்களின் கிஸ்ஸாவில் “இமாம்களை அவமதிப்பதும், மக்களைக் குழப்புவதும் யார்?” என்ற ஆக்கத்தை படித்திருப்பீர்கள். அதில் புரசை மவ்லவியின் கப்ஸாக்களை குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களில் விமர்சித்திருந்தோம். இவ்விதழில் புரசை மவ்லவி அக்கட்டுரைக்கு மறுப்பு தெரிவித்தும், விமர்சித்தும் எழுதியிருந்த கடிதத்தைக் கண்டீர்கள் (பக்கங்கள் 62 முதல் 66). இக்கடிதத்தில் தான் அவ்விதம் கூறவில்லை என ஓரிடத்தில் கூறுகிறார். அதே சமயம், கருத்தில் ஒன்றுபட்டுள்ள அக்கூற்றுக்கள் வரலாற்று சான்றுகள், சரித்திர உண்மைகள் என சரடும் விட்டிருக்கிறார்.

இதன் மூலம் புரசை மவ்லவி அக்கூற்றுக்களை சரிகாணுகிறார் என்பதை உணரலாம். இக்கடிதத்தை ஏதோ ஆதாரமிக்க ஆக்கம் போல மக்காசுடர் ஆசிரியர் தனது (ஆகஸ்ட்) மாத இதழில் வெளியிட்டுள்ளார். தான் ஆடாவிட்டாலும், தன் தசை ஆடுமல்லவா? எனவே தான் புரசை முல்லாவிற்காக சென்னை மக்கா பள்ளி முல்லா ஆடியுள்ளார். இவரும் புரசை மவ்லவியின் கப்ஸாக்களை சரி கண்டுள்ளார் என்பதை உணரலாம். இதற்கு விளக்கமளித்துள்ள அபூ ஹாமிது, தானே புரசை மவ்லவியின் கப்ஸாக் கூற்றுக்களை நேரில் கேட்டதாகவும், அது உண்மையே என வாதிட்டுள்ளார். இதற்கான ஆதாரங்களை தேடி ஆய்ந்து யார் சொல்வது உண்மையானது என்பதை அறிவதற்கு முன்.

புரசை மவ்லவி:

                உள்ள உண்மைகளை மறைப்பவரா? இல்லையா?

                உள்ளதை உள்ளபடி கூறுபவரா? திரித்து கூறுபவரா?

                மார்க்க விஷயத்தில் விளையாடுபவரா? இல்லையா?

என்டபதை வாசகர்களே, முடிவெடுக்க, அவர் கைப்பட எழுதியுள்ள நூலிலிருந்து இங்கு ஆதாரங்களைத் தருகிறோம். இந்த ஆதாரங்களை நேரில் கண்டு இவரை அடையாளம் கண்டு கொள்ள வேண்டுகிறோம்.”அமல்களின் சிறப்புகள்” என்ற நூல் தப்லீக் கூட்டத்தாரிடம் மிகவும் பிரபலமாகியுள்ளதை அனைவரும் அறிவீர்கள். தஃலீம் என்ற பெயரில் குர்ஆன், ஹதீஸ்களின் இடத்தை ஆக்ரமிக்க செய்து, இந்நூல்களை பள்ளிகளில் தப்லீக் கூட்டத்தினர் பக்தி பரவசத்துடன் படித்து வருவதை சர்வ சாதாரணமாக காணலாம்.

இது தப்லீக் கூட்டத்தினருக்கு ஒரு வேத நூலைப் போன்றது என்றால் மிகயைாகாது. இந்நூலின் மூலத்தை எழுதியவர், தப்லீக்கின் மூல கர்த்தாக்களில் ஒருவரான முஹம்மது ஜகாரிய்யா ஸாஹிப் என்பவர், இந்நூலை உருதுவில் எழுதினார். இந்நூலை மேற்படி புரசை மவ்லவி தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். இதுவே இன்று தமிழக தப்லீக் கூட்டத்தாரால் பெரும்பான்மையான பள்ளிகளில் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்நூலின் மூலத்தை உருதுவில் எழுதிய முஹம்மது ஜகரிய்யா ஸாஹிப் அதில் இடம் பெரும் ஹதீஸ்களை பெரும்பாலும் தர்கீப் என்று ஹதீஸ் நூலிலிருந்து எழுத்ததாக கூறியுள்ளார். தர்கீப் என்ற நூல் மிஷ்காத் போன்ற ஒரு நூலாகும். புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், இப்னு மாஜா, தப்ரானி, அல்பராஜ் போன்ற பற்பல ஹதீஸ் மூல நூட்களிலிருந்து பொறுக்கி தொகுக்கப்பட்ட நூலாகும். மிஷ்காத்தை எழுதியவர் ஹதீஸ்களின் தராதரத்தின்படி ஃபஸ்லு அவ்வல், ஃபஸலு தானி, ஃபஸலு தாலிஃத் எனப் பாகுபடுத்தியுள்ளனர். ஆனால் தர்கீப் நூலை எழுதியவர் அவ்விதம் பாகுபடுத்தாமல் ஆங்காங்கு ஓரிரு ஹதீஸ்களின் தராதரத்தை மட்டும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக அமல்களின் சிறப்புகள், நன்மைகள் பற்றி வரும் ஹதீஸ்களில் 75 முதல் 90 சதவீதம் பலஹீனமானவைகள், ஒருசில இட்டுக் கட்டப்பட்டவைகள் என்பது ஹதீஸ் கலா வல்லுநர்களின் ஏகோபித்த கூற்றுகளாகும். அப்படிப்பட்ட பலஹீனமான ஹதீஸ்கள் பல இந்நூலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு நாம் அந்நூலில் இடம் பெற்றுள்ள பலஹீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை ஆய்வு செய்து தர விரும்பவில்லை. அவ்வேலையை செய்தால் புரசை மவ்லவி எழுதியுள்ளது போல பல நூல்களை எழுத வேண்டியதாகிவிடும்.

அது தேவையற்ற செயலாகும். முஹம்மது ஜக்கரிய்யா ஸாஹிப் தனது மூல உருது நூலில், தாகீப் நூலிலிருந்து தான் எடுத்த ஹதீஸ்களின் தரத்தையும் குறிப்பிட்டுள்ளார். அந்நூலை தமிழில் மொழிபெயர்த்த புரசை மவ்லவியும் அரபியின் மூலத்தைக் கொடுத்துள்ளார். ஆனால் மொழி பெயர்ப்பு செய்கையில் அரபி மூலத்தை முழுமையாக மொழிபெயர்க்காமல், கடைசி பகுதிகளை இருட்டடிப்புச் செய்துள்ளார். உதாரணமாக: திக்ரின் சிறப்புகள் என்ற நூலில் – மூன்றாம் பகுதியில் நடுங்கும் ஒளித்தூண் என்ற தலைப்பில் – ஹதீஸ் எண் 12 (பக்கம் 655) ஆக மொழி பெயர்க்கப்பட்டுள்ளதை பாருங்கள்.

இது அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவித்ததாக அல்-பஜ்ஜார் தனது ஹதீஸ் நூலில் – பதிவு செய்துள்ளார் என தாகீப் நூலாசிரியர் குறிப்பிடுகிறார். இதோடு நிறுத்திவிடவில்லை. இந்த ஹதீஸைப் பற்றிய தராதரத்தையும் சொல்லியுள்ளார். இது “கஃரீப்” என்ற ஒரே ஒரு அறிவிப்பாளர் வரிசையில் தான் வருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளதாகவும் குறிப்பிடுகிறார். மேலும் அந்த அறிவிப்பாளர் வரிசையில் வரும் அப்துல்லாஹ் பின் இப்ராஹீம் பின் அபீ அம்ர் என்பவர் (லயீஈபுன் ஜித்தன்) மிக மிக பலஹீனமானவர் என இமாம் தஹபீ(ரஹ்) தனது மஜ்மூஉஸ் ஸவாயித் என்ற நூலிலும் குறிப்பிட்டுள்ளார் என்பதையும் குறிப்பிடுகிறார். எனவே இதனை எழுத்தெழுதிய அனைவரும் பலஹீனமானது என்பதை மறைக்காமல் கூறியுள்ளனர்.

இவையனைத்தும் புரசை மவ்லவி மொழி பெயர்த்த நூலில் உள்ளது. ஆனால் அரபியில் உள்ளது. தமிழில் இவர் மொழி பெயர்க்கவில்லை. ஏன்? ஒரு பலஹீனமான ஹதீஸைக் கூறிவிட்டு அதனை சிறந்ததாக காட்ட விக்கிரமாதித்தன் கதையையும் புகுத்தியுள்ளார் புரசை மவ்லவி. அக்கதையின் நாயகனாக ஹஜ்ரத் அதாஉ(ரஹ்) என்பவரை வைத்துள்ளார். இந்த அதாஉ(ரஹ்) யார்? புரசை மவ்லவிக்கு தெரியுமா? அல்லது இவர் பின்பற்றும் முன்னோரான முஹம்மது ஜகரிய்யா ஸாஹிபுக்கு தெரிந்திருக்குமா?

ஹதீஸ் அறிவிப்பாளர்களில் ஒரு சிலர் அதாஉ என்ற பெயரில் இருந்ததாக தஹ்தீபுத் தஹ்திப் என்ற நூலில் காணமுடிகிறது. அவர்களின் ஒருவரா? அவரது சம்பவத்தை இவர் எங்கிருந்து எடுத்தார்? தனது முன்னோரின் நூலில் உள்ளதை அப்படியே ஆராயாமல் வாந்தி எழுத்துவிட்டேன் எனக் கூறப்போகிறார். அதாஉ என்பவர் தனது அடிமைப் பெண்ணிடம் அவமானப்பட்டது போல கதையளந்துள்ளார் புரசை மவ்லவி. அந்த அடிமைப் பெண் கவிதை பாடினாளாம். அவளது உள்ளம் (பேரின்பக் காதலினால்) எரிந்துக் கொண்டிருந்ததாம். அவள் செய்த துஆவை திருத்த போய் அவள் கவிதைப் பாடி தனது முதலாளியான அதாஉவை அவமதித்து விட்டுச் செத்தாளாம். 

    இந்த கவிதையையும், கவிஞராகிய புரசை மவ்லவி அந்நூலில் அப்படியே அரபியிலேயே எழுதி மொழி பெயர்த்துள்ளார். ஆனால் ஹதீஸின் தரத்தைப் பற்றி அவரே அரபியில் எழுத்து எழுதியுள்ளதற்கு மொழி பெயர்க்காமல் இருட்டடிப்பு செய்துள்ளார். இது மட்டுமின்றி பலஹீனமான இந்த ஹதீஸை பற்பல விளக்கவுரைகளையும் கூறி உண்மை ஹதீஸ் போல ஜோடித்துள்ளார். இது, பொய்யை உண்மையாகப் புரட்ட எடுக்கும் பகீரதப் பிரயத்தனம் அல்லவா? அதே தலைப்பில் – பகுதியில் – ஹதீஸ் எண். 38ஐப் பாருங்கள் (பக்கம் 708)

இந்த ஹதீஸ் இப்னு அப்பாஸ்(ரழி) அறிவித்ததாக உள்ளது. ஆனால் எந்த நூலில் என்ற விபரம் இவர் கொடுத்திருக்கும் அரபி மூலத்தில் இல்லை. இவரது மொழிபெயர்ப்பில் ஷுக்புல் ஈமான் எனக் குறிப்பிட்டுள்ளார். இல்லாததை கூறியுள்ளார் என்பதை இதன் மூலம் அறியலாம். அதேசமயம் இந்த ஹதீஸைப் பற்றிய தராதரம் உள்ளங்கை நெல்லிக்கனியாக அரபியில் இவரே எடுத்து தந்துள்ளதை மொழி பெயர்ப்பில் மறைத்துள்ளார். அதன் தரம் என்ன? அவர் எடுத்து எழுதியுள்ள அரபி வாசகத்தின் பொருள் என்ன? அதாவது “இந்த ஹதீஸ் (மவ்லூஉ) இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸாகும். ஏனெனில் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் இப்னு மஹ்மூயாவும், அவரது தந்தையும் விலாசமற்றவர்கள்” இது புரசை மவ்லவி அரபியில் எடுத்து எழுதியுள்ள வாசகமாகும். ஆனால் மொழிபெயர்க்கவில்லை.

மாறாக இது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் என்பதை ஆலிமாகிய இந்த புரசை மவ்லவி அறிந்து கொண்டே உண்மையான ஹதீஸாக நிலை நிறுத்த பற்பல பலஹீனமான ஹதீஸ்களைக் காட்டி விளக்கவுரை தந்துள்ளார். தல்கீன் ஓத ஸஹீஹான பல ஹதீஸ்கள் இருக்கிறதாம். அப்படியே தான் பின்பற்றும் முன்னோரான முஹம்மது ஜகரிய்யா ஸாஹிபின் எழுத்தை மொழிபெயர்த்துள்ள அரபி பண்டிதராகிய இவர் ஒரே ஒரு ஸஹீஹான ஹதீஸை தல்கீன் ஓதக் காட்டப்படும் பார்க்கலாம்.

ஒரு குர்ஆன் ஆயத்திற்குரிய பொருளையும், கருத்தையும் பலதினங்களுக்கு நமக்குப் பாடம் சொல்லித் தரும் அளவு பாண்டித்யமுள்ளதாக சவடால் விட்ட இந்த புரசை மவ்லவி ஒரே ஒரு ஸஹீனான ஹதீஸை தல்கீன் ஓத எடுத்துத் தருவாரா? இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் என்பதை அறிந்து கொண்டே பற்பல பலஹீனமான ஹதீஸ்களை ஆதாரமாக்கி அதை உண்மையாக்க முயற்சித்துள்ளார். இது மார்க்கத்தில் விளையாடும் விளையாட்டில்லையா?

“எவர் நான் கூறாததை, கூறியதாக இட்டுக் கட்டிக் கூறுகிறாரோ அவர் தங்குமிடம் நரகமாகட்டும்”

என நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ள முதவாதிரான ஹதீஸை இவர் பார்க்கவில்லையா? இந்த ஹதீஸ் இடம் பெறாத நூலே இல்லையே! அல்லது இந்த ஹதீஸுக்கு புது விளக்கம் தரப் போகிறாரோ புரசை மவ்லவி! அல்லது தான் அரபி படித்த மவ்லவி ஆலிம் என்ற கர்வமா? இதற்கு அவர் தான் பதில் சொல்லவேண்டும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல புரசை மவ்லவி மொழி பெயர்த்துள்ள நூலில், இவர் மூல நூலில் உள்ளதை மறைத்திருப்பதைக் காட்டியுள்ளோம். பலஹீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை தனது எழுத்துவன்மையால் விளக்கவுரை என்ற பெயரில் திரித்துள்ளதை உங்கள் முன் சமர்ப்பித்துள்ளோம். இவ்விதமாக தான் அரபி படித்த ஆலிம், எல்லாம் தனக்கு தெரியும் என்ற கர்வத்தில் மார்க்க விஷயத்தில் விளையாடியுள்ளதை விளக்கியுள்ளோம்.

வாசகர்கள் நேரடியாகப் பரிசீலனை செய்ய இன்னும் சில ஆதாரங்களை அதே நூலிலிருந்து தருகிறோம்.

1. திருக்குர்ஆனின் சிறப்புகள் என்ற நூலில்

ஹதீஸ் எண் 26 – பக்கம் 245 – (முன்கதிஃ) அறிவிப்பாளர் வரிசையில் தொடர் அறுப்பட்ட (பலஹீனமான) ஹதீஸ்.

ஹதீஸ் எண். 30 – பக்கம் 254 – அபூஹுரைரா(ரழி) அவர்களிடமிருந்து அல்-ஹஸன் என்பவர் கேட்காமலேயே அபூஹுரைரா(ரழி) அறிவித்ததாக உள்ள ஹதீஸ்.

ஹதீஸ் எண் 45-பக்கம் 280-இமாம் தஹபி(ரஹ்) அவர்களால் மத்ரூக் (இவர் ஹதீஸ் அறிவித்ததால்) மறுக்கப்பட வேண்டியவர் என அடையாளம் காட்டப்பட்டவரின் ஹதீஸ்.

2. ரமழானின் சிறப்புகள் என்ற நூலில் இஃதிகாபின் சிறப்புகள் என்ற பகுதியில்-

ஹதீஸ் எண் 3-பக்கம் 430-சர்ச்சைக்குரியவராக அறிவிக்கப்பட்டு பைஹகீ(ரஹ்) அவர்களால் பலஹீனமானவர் என ஒதுக்கப்பட்டவரின் ஹதீஸ்.

ஹதீஸ் எண். 4 பக்கம் 436 வேறுபட்ட பல வழிகளில் இந்த ஹதீஸ் கூறப்பட்டுள்ளதால் “அஸல்” உண்டு என ஊகம் கொள்ளப்பட்ட ஹதீஸ் இது உண்மையெனில் ஒரு ஸஹீஹான அறிவிப்பாளர் வரிசை புரசை மவ்லவி காட்டட்டும் பார்க்கலாம்.

3. கலிமா தைய்யிபாவின் சிறப்புகள் என்ற நூலில்

ஹதீஸ் எண் 23, பக்கம் 678 பலஹீனமானது. ஹதீஸ் எண் 37, பக்கம் 708: அப்துல் வஹ்ஹாப் பின் லஹ்ஹாக் என்ற (மத்ரூக்) ஒதுக்கப்பட வேண்டியவர் கூறிய ஹதீஸ்.

4. கலிமாக்களின் சிறப்புகள் என்ற நூலில் ஹதீஸ் எண் 20 பக்கம் 811 பலஹீனமானது.

மேற்படி ஆதார பக்கங்கள் Goods New Prees Pvt Ltd. Singapore. (சிங்கப்பூர்) பதிப்பிலிருந்து எடுக்கப்பட்டது. இந்நூலில் இவ்வளவுதான் குறைகள் உள்ளன. மற்றபடி தவறுகள் இல்லை என்று கூறவே முடியாது. நாம் முன்பே குறிப்பிட்டது போல இந்த அமல்களின் சிறப்பில் 75 முதல் 90 சதவீதங்கள் பலஹீனமானவையாகும். இங்கு நாம் புரசை மவ்லவி தானே எழுதி மறைத்தும், திரித்தும் எழுதியுள்ளவைகளில் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல ஒரு சில உதாரணங்களை மட்டும் எடுத்துக் குறிப்பிட்டுள்ளோம்.

நமது சென்னை தோழர்கள் மூலமாக சென்னை புரசை மவ்லவி தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கி வருவதாக அறிகிறோம். அவர்களிடையே இந்த மவ்லவி ஒரு பெரும் மார்க்க அறிஞராக திகழ்வதாகவும், இவரது சொல் வேத வாக்காக கணிக்கப்படுவதாகவும் தெரிய வருகிறோம். இவ்விதம் தனி நபர் ஆராதனைக்கு வழி வகுத்து கூட்டம் சேர்க்கும் புரசை மவ்லவியின் தில்லுமுல்லுகளை, திருகு தாளங்களை, மார்க்கத்தில் விளையாடும் போக்கை அவர் கைபட எழுதியுள்ள நூலிலிருந்தே எடுத்து தந்துள்ளோம். அக்கூட்டத்தினர், அவரை அடையாளம் கண்டு தனி நபர் ஆதாதனை விட்டு அல்லாஹ், ரசூல் வழி நடக்க வேண்டுகிறோம். அல்லாஹ் நம்மனைவருக்கும் நேர்வழி காட்ட போதுமானவன்.

இஸ்லாத்தில் தீட்டு இல்லை!

அல்லாஹ் கூறுகிறான்:

பெண்களின் மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள். நீர் கூறும். “அது(ஒரு உபாதையான) தீட்டு ஆகும். ஆகவே மாத விடாயின்போது பெண்களை விட்டும் விலகியிருங்கள். அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள். அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படிக் கட்டளையிட்டிருக்கிறானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள். (அல்குர்ஆன்: 2:222)

நான் மாதவிடாய்காரியாக இருக்கும்போது, எலும்புகளைக் கடிப்பேன். நான் வாய் வைத்த இடத்தில் ரசூல்(ஸல்) அவர்கள் வாய் வைத்து கடிப்பார்கள். மாதவிடாய்காரியாக இருக்கும்போது, பாத்திரத்தில் நீர் அருந்துவேன். நான் வாய் வைத்த இடத்திலேயே ரசூல்(ஸல்) அவர்களும் வாய் வைப்பார்கள். என நபி(ஸல்) அவர்களின் அருமை மனைவியும், நம்மனைவரின் அன்னையுமான ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம் புகாரி, நஸயீ, அபூதாவூத், அஹ்மது, இப்னு மாஜ்ஜா.

ரசூல்(ஸல்) : பள்ளிவாசலில் இருக்கும் அந்தப் பாயை என்னிடம் எடுத்து வா.

ஆயிஷா(ரழி) : நான் மாத விடாய்காரியாக (அசுத்தமாக) இருக்கிறேனே?!

ரசூல்(ஸல்) : உனது மாதவிடாய் உனது கைகளில் இல்லையே!

அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா(ரழி)

ஆதாரம்: முஸ்லிம், நஸயீ, அபூதாவூத், திர்மிதி, இப்னு மாஜ்ஜா, முஸ்னது அஹ்மது.

Previous post:

Next post: