உணர்வதை ஏற்று நடப்போமா?

in 1990 ஜூலை-ஆகஸ்ட்

உணர்வதை ஏற்று நடப்போமா?

            M. நிஃமத்துல்லாஹ், B.A.,(CS) ஜித்தா

அறிந்தப் பின் பயன் முழுமையடைந்து என்பது அதனை நம்வாழ்வில் ஏற்று நடப்பதில் தான் உள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாத உண்மை. நம்மால் முடிந்த வரை அனைத்து காரியங்களிலும் அதன்படி நடக்க முழு முயற்சி செய்ய வேண்டும். இதையே இறைவன் திருமறையில் கீழ்க்கண்டவாறு எடுத்து இயம்புகின்றான்.

எவர்கள் விசுவாசம் கொண்டு (தங்களால் இயன்ற வரையில்) நற்காரியங்களைச் செய்கின்றார்களோ அவர்களில் ஒருவரையும், அவரது சக்தியின் அளவுக்கதிகமாக நாம் நிர்ப்பந்திப்பதேயில்லை. இத்தகையோர் தாம் சுவனவாசிகள். அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.  (7:42)

ஆனால் இன்று ஓர் இறைவனை விசுவாசங்கொண்டு, அவனால் அருளப்பட்ட வேதத்தின் உண்மைப் பொருளை அறிந்து கொண்டிருக்கும் மக்களிடையே அதை முழுமையாக தங்களின் வாழ்க்கையில் பிரதிபலிப்பதை காண்பது மிகக் அரிதாக இருக்கிறது.

கடமையாக்கப்பட்ட சில மார்க்க வழிபாட்டை செய்து விடவதனால் நம்மின் பொறுப்பு நீங்கி விடுகிறது என்ற நினைப்பே மேற்காணும் நிலைக்கு முழுக் காரணமாக அமைகிறது அல்லாஹ்வுக்கும் (அவனுடைய) தூதருக்கும் வழிபடுங்கள். அதனால் நீங்கள் (அல்லாஹ்வின்) கிருபைக்குள்ளாக்கப்படுவீாகள் (9:71) விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வுக்கு பயப்பட வேண்டியவாறு மெய்யாகவே பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிபட்ட) முஸ்லிமாகவே அன்றி, நீங்கள் இறந்து விட வேண்டாம்! (3:102)

அல்லாஹ்வுக்கும் மெய்யாக பயந்து நடப்பது  என்பது நம் அனைத்துக் காரியங்களிலும், நடப்புகளிலும் அவன் திருப்தியைப் பெற்றுத் தரக்கூடிய, அவனுடைய கட்டளையின்படி வாழ்வதிலும், அவனுடைய தூதரின் வாழ்க்கை முறைகளை அடியொற்றி பின்பற்றுதலிலும் தான் அமைந்து இருக்கிறது. இதன்படி செயல்படுவதனால் மட்டுமே நாம் அமைந்து இருக்கிறது. இதன்படி செயல்படுவதனால் மட்டுமே நாம் ஈருலக வெற்றியை அடைய முடியும். ஏனெனில் அவன் கூறுகிறான்.

அவனுக்கு வழிபட்ட முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரித்து விட வேண்டாம்.’

நிச்சயமாக மேற்கண்ட வசனம் ஆழ்ந்த சிந்தனைக்கு உரியது. காரணம் இவ்வசனம், ஆரம்பத்தில் இறைவன் விசுவாசிகளே! என்று விழித்து, பின் அவனுக்கு வழிபட்ட முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரித்து விட வேண்டாம்” என்கிறான்.

விசுவாசிகளான பெற்றோர்களுக்கு பிறந்தவர்களாயினும் சரி, அல்லது இடையில் ஓர் இறைக் கொள்கையை ஏற்று அவ்விறைவனின் கட்டளைப்படி வாழ நினைப்பவர்களாயினும் சரி, இறக்கும் பொழுது முஸ்லிம்களாகவே இறக்க அநேக சாத்தியக்கூறுகள் உள்ளன. ஆனால் இறைவன் குறிப்பாக கடைசியில் மேற்கண்டவாறு கூறுவதற்கு சரியானதொரு காரணம் இல்லாமல் இருக்க முடியாது. அதன் நிலைகளைக் காண்போம்.

நம்மில் இன்றைய நிலை வேதத்தின் ஒரு பகுதியில் கூறப்படும் கட்டளைக்கு முற்றிலும் செவி சாய்த்து மறுபகுதியில், கூறப்படும் கட்டளைக்கு அது நம்மின் மனவிருப்பத்திற்கு மாறானதாக இருப்பதால் அலட்சியமாகவும் கருதிக் கொண்டிருக்கிறோம். இதையே இறைவன் திருமறையில் கீழ்க்கண்டவாறு வினவுகிறான்

நீங்கள் வேதத்தில்(உள்ள) சில கட்டளைகளை விசுவாசித்து சில கட்டளைகளை நிராகரிக்கின்றீர்களா? உங்களில் எவர்கள் இவ்வாறு செய்கின்றார்களோ அவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர (வேரொன்றும்) பிரதிபலனாக கிடைக்காது. மறுமை நாளிலோ அவர்கள் கடுமையான வேதனையின் பால் விரட்டப்படுவார்கள். நீங்கள் செய்பவைகளைப் பற்றி அல்லாஹ் பாராமுகமாயில்லை.   (2:85)

நம் மனவிருப்பத்திற்கு மாறாக இருப்பதன் காரணத்தினால், இறைவழியை விட்டு உலக நடைமுறையின் படியோ, அல்லது மாற்றார்களின் கருத்துக்களின் படியோ நடக்க தலைபட்டு விடுகிறோம். அதன் காரணமாக இவ்வுலகில் கிடைக்க இருக்கும் அற்ப சில இன்பங்களுக்காக அடிப்பணிந்து விட தயாராக இருக்கிறோம். மிக்க வருந்தக்க நிலையே இது. இப்படி வாழ்வதினால் ஏற்படும் பிரதிபலிப்பை இறைவன் மிகத் தெளிவாக மேற்காணும் வசனத்தில் விவரித்துக் காட்டுகிறான். இந்நிலையில் உள்ளவர்களுக்கு ஈருலகிலும் கைசேதம்தான். அல்லாஹ் நம் அனைவரையும் இந்நிலையை விட்டும் காப்பானாகவும். ஆமின்.

முறையான இஸ்லாமிய அறிவைப் பெறாததின் விளைவு, சைத்தானின் தூண்டுதலினால் இறைக் கட்டளைக்கு மாற்றமாக வாழுகின்ற உருவ வழிபாட்டுக் காரர்களின் நடைமுறைப் பழக்கத்தையோ அல்லது வேதத்தை உடையவர்களின் நடைமுறைப் பழக்கத்தையோ, பின்பற்ற எத்தனிக்கும் நிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

நாம் இப்பூலகில் பிறந்ததன் பயன் யாது, நம்மின் வாழ்வு எப்படி எதைச் சார்ந்து இருக்க வேண்டும். நாம் எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றோம் என்று ஒவ்வொருவரும் சிந்தித்து வாழத் தொடங்கினால் நிச்சயமாக நேர்வழிக்கான பாதை தெள்ளத் தெளிவாக விளங்கும். இப்படி ஆராயததின் விளைவு நம்மைச் சுற்றி வாழுகின்ற மனிதர்களின் பழக்க வழக்கங்களை அஃது சரியான வழியா? இறைவனால் ஏற்றுக் கொள்ளப் படுவபைதானா? என்று சிந்திக்காமல் அதனால் ஏற்படும் முடிவை மட்டுமேக் கருத்தில்க் கொண்டு வாழ முற்ப்பட்டு விடுகின்ற நிலையை சார்ந்து விடுகிறோம்.

விளக்கமாக: உடம்பில் ஏதாவது விஷ ஜந்துக்கள் கடித்தால் உடம்பு பூராவும் சிறிது சிறிதாக வீங்கிவிடும். அப்படி ஏற்படும் பட்சத்தில் உருவவழிபாட்டுக்காரர்கள் அதற்கு உள்ள ஒரு கோயிலுக்கு மந்திரிக்கச் செல்கிறார்கள். அவ்விடத்தில் உள்ள ஒரு மந்திரீகர்(பூசாரி) வேப்பிலைக் கொண்டு மந்திரித்து, மாவுப் போன்ற வெள்ளைப் பொடியை கடித்தவரின் முகத்தில் ஊதி விடுகிறார். பிறகு சில நிபந்தனைகளையும் இடுகிறார். மீன, கறி, கருவாடு சாப்பிடக்கூடாது என்றும், பாய் துடைப்பம் முறம் போன்றவற்றை தொடக்கூடாது என்றும், மூன்று நாட்களுக்கு தொடர்ந்து வந்து மந்திரிக்க வேண்டும். இவை அனைத்தும் அக்கோயிலில் உள்ள உருவ சிலையின் முன்னிலையிலேயே நடைபெறுகிறது. அவ்வாறு செய்யும்போது சிறிது நாட்களுக்குப் பிறகு உடம்பில் ஏற்ப்பட்ட அந்நிலை மாறி விடுகிறது. இது குறிப்பிட்ட சாரரின் நடைமுறை வழக்கம்.

இறைவனின் திருமறையிலேயே கூறுகிறான்:

எந்த ஒரு தீமையும் அல்லாஹ்வின் அனுமதியின்றி வந்தடைய முடியாது.  (64:11)

அத்தீமைக்குண்டான பரிகாரத்தை நாம் இறைவனின் கட்டளைப்படியும், அவனின் தூதரின் நடைமுறைப்படியும் தான் அமைத்துக்கொள்ள வேண்டும். அந்த நடைமுறைப்படி அமைத்துக் கொள்வோமானால் நிச்சயமாக பூரண சுகம் கிடைக்கும்.

இறை சிந்தனை அற்றவர்களாக வாழும்பொழுது மேற்க்கொண்ட ஒரு நிலை(விஷ ஜந்துக் கடி) முஸ்லிமுக்கு ஏற்படும் பொழுது அவனுக்கு மற்ற எல்லா விஷயங்களும் மறந்து தன்னை சுற்றி வாழ்பவர்களின் வாழ்க்கைச் சூழலுக்கு கட்டுப்பட்டு, தனக்கு சுகம் கிடைத்தால் போதும் என்ற நினைப்பில் உருவ வழிபாட்டுக்காரர்களின் வழிமுறையைப் பின்பற்ற தலைபட்டு விடுகிறான். அவர்களிடம் (இறை நிராகரிப்பாளர்களிடம்) தங்களின் கஷ்டங்களை முறையிடுபவர்களாயும், அவர்களிடம் பரிகாரம் வேண்டி நிற்பவர்களாகவும் ஆகிவிடும் தன்மைக்கு தன்னை ஆளாக்கிக் கொள்கிறான். (இதேப்போல் அன்றாட வாழ்க்கையில் பல விசயங்களில் மாற்றார்கள் நடைமுறைப் பழக்கத்திற்கு முஸ்லிம்கள் அடிபணிந்து விடுகிறார்கள்.)

முஸ்லிம்களாக பிறந்த போதிலும் மார்க்க அறிவு சரிவர அறியாததால் நேர்வழியிலிருந்து பிசகி, தான் செய்வது சரிதானா என்று சிந்திக்கும் நிலையையும் இழந்து விடுகிறான். இவ்வாறு இறைவழியிலிருந்து பிறழ்ந்து அதாவது ஏக இறை நம்பிக்ழகையை கைவிட்டு மற்றவர்களிடம் உதவி தேட முயற்ச்சிக்கும் நிலைக்கு ஆளாகி மரணம் சம்பிக்கும் போது முஸ்லிம் அல்லாத நிலையில் மரணிக்கும் அவல நிலை  ஏற்படுகிறது. அதனால் தான் இறைவன் முஸ்லிம்களாக பிறப்பதனாலோ, முஸ்லிம்களாக வாழ்வதனாரோ மட்டும் அல்லாமல் அதே நிலையிலேயே இறக்கவும் வேண்டும் என்றும் வலியுறுத்துகிறான்.

மேற்சொன்ன நிலையில் நாம் மரணம் (முஸ்லிமாகவே) அமைய வேண்டுமானால் (அல்லாஹ் நம் அனைவருக்கும் அப்பாக்கியத்தை தரவேண்டும். ஆமின்.) நம்மின் அனைத்து நிலைகளிலும் இறைவன் கட்டளையிட்டப்படி வாழ்வதிலும், அவரின் தூதரைப் பின்பற்றுதலிலும் முழுக் கவனம் செலுத்த வேண்டும். நிச்சயமாக இதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை.

எப்பொழுதும் இறை நம்பிக்கையின் அரவனைப்பிலேயெ வாழ்வதற்கு நம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டோமேயானால் நாம் முஸ்லிம்களாகவே அன்றி வேறு நிலையில் மரணிக்க கிஞ்சிற்றும் வழியில்லை. முஸ்லிம்களான பெற்றோர்களுக்குப் பிறந்ததனால் மட்டும் நாமும் முஸ்லிம்கள் என்ற நிலையிலேயே இன்று அநேகமானோர் வாழ்ந்து வருகின்றனர். இஸ்லாம் (TOTAL SUBMISSION OF ALLAH)  என்பதின் விளக்கம் யாது? இவ்வினாவுக்கு முஸ்லிம்களாக இருக்கும் பலப்பேருக்கும் ஒன்றுமே தெரியாது.

இப்பேருலகைப் படைத்து, பரிபாலித்து வரும் ஓர் இறைவனுக்கு நம்மை முற்றிலும் அர்ப்பனித்து விடுவது, நம்மின் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து செயல்களும் அவனின் நாட்டப்படியே நடக்கிறது என்ற உண்மை தெளிவானப் பிறகு, நம்முடைய அனைத்து செயல்களையும் அவனுடையக் கட்டளைப்படியே ஆக்கிக் கொள்வதானது நம்மை அவனுக்கு அர்ப்பணித்து விட்டதாகி விடுகிறது.

இதை விளங்கிக் கொள்ளாததின் காரணமாக தாமும் சீர்கெட்டது மட்டுமில்லாமல், தம்மின் சந்ததிகளையும் அந்நிலைக்கு ஆளாக்குகிறார்கள். பெற்றோர்கள் முறையாக அறிந்தால் தானே அந்நிலையில் தம் குழந்தைகளையும் ஆளாக்க முற்படுவார்கள். முறையான இஸ்லாமிக அறிவு இல்லாததின் காரணத்தினால் ஏற்ப்பட்ட ஒரு சாபக்கேடே  இன்றைய சமுதாயத்தில் விழிப்புணர்வு இன்னும் ஏற்படாமல் இருக்கிறது.

பணத்தை (செல்வத்தை)யோ, அல்லது சுகபோக வாழ்க்கையையோ குறிக்கோளாகக் கொண்டு வாழத் தொடங்குவதினால் தாம் செய்வது இன்னது என்று அறியாமல் இவ்வுலகில் எப்படி முயற்சி செய்தாகிலும் அந்நிலையை அடைந்து விட வேண்டும் என்ற எண்ணத்திற்கு ஏராளமானோர் அடிப்பணிந்துக் கிடக்கிறார்கள். இந்நிலை முற்றிலும் மாறாத வரை விழிப்புணர்ச்சிக்கு வழியே இல்லை.

முறையான கல்விைப் பெற்று வாழ்வதனால் மட்டும் மேற்க்கொண்ட அனைத்து துர்நடத்தைகளை விட்டு நம்மைக் காத்துக் கொள்ள முடியும். அனைத்து செல்வங்களைக் காட்டிலும், கல்விச் செல்வம் மிகச் சிறப்புற்றது என்பதை இறைவன் கீழ்வரும் வசனத்தில் தெள்ளத் தெளிவாக்குகிறான்:

(அல்லாஹ்) தான் விரும்பியவர்களுக்கே (கல்வி) ஞானத்தை கொடுக்கின்றான். ஆதலால் எவர் (கல்வி) ஞானம் கொடுக்கப்படுகின்றாரோ அவர், நிச்சயமாக அநேக நன்மைகளைப் பெற்று விடுவார். ஆயினும் (இந்த ஞானக் கல்வியைக் கொண்டு) அவர்களைத் தவிர (மற்றெவரும்) உணர்ச்சி பெறமாட்டார்கள்.  (2:269)

இறை வழியில் நம்மை அர்ப்பணித்து கொள்வதோடு மட்டுமில்லாமல் அவன் கட்டளைப்படி நாம் முறையாக உழைத்து பொருளீட்டுவதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்பதை கீழ்வரும் வசனம் விளங்குகிறது.

பின்னர் (ஜும்ஆத்) தொழுகை நிறைவேற்றப்பட்டடு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளி போந்து) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள். அன்றியும் நீங்கள் வெற்றி அடையும் பொருட்டு, அடிக்கடி அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள். (62:10)

இஸ்லாமிய வாழ்வு நம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்று என்றுமே தடையாக இல்லை, உயர்வதற்கு நாம் முயற்சி செய்யும் முறையே இங்கு பிரதானமாக கொள்ளப்படுகிறது. மார்க்க விஷயங்களில் தெளிவாக இருக்கிறோம் என்று மார்தட்டி செல்பவர்கள் கூட, தற்போது இப்படி வாழ்ந்தால் தான் (இறைக் கட்டளைக்கு மாற்றமாக) நாம் முன்னேற முடியும் என்ற பழைய சித்தாந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஏனெனில் இவர்கள் மாற்றார்களின் (ஓரிறைக் கொள்கைக்கு மாறுபட்டவர்கள்) வளர்ச்சியை கருத்திக் கொண்டே உண்மையை மறந்து தான் தோன்றித் தனமாக பேசுகிறார்கள். இக்கூற்றுக் காரர்களைப் பார்த்து இறைவன் கூறுகிறான்.

(நபியே) நிராகரிப்போர் (பெரும் வர்த்தகர்களாகவும், தனவந்தர்களாகவும் ஆடம்பரமாக) நகரங்களில் திரித்துக் கொண்டிருப்பது உம்மை மயக்கி விட வேண்டாம்.

(இஃது) அற்ப சுகமாகும். இதற்குப் பின்னர் அவர்கள் புகுமிடம் நரகம் தான். அது தங்குமிடங்களில் மிகக் கெட்டது.  (3:196-197)

நிராகரிப்போரின் முடிவைப் பற்றி இறைவன் இங்குத் தெள்ளத் தெளிவாக நிர்ணயித்து விட்டான். அதனால் அவர்களின் நடைமுறை எத்தகையதாக இருந்தாலும் அதை மனதில் கொண்டு வாழத் தலைப்பட கிஞ்சிற்றும் இடமேயில்லை.

மேலும் இறைவன்: ‘ஆயினும் எவர்கள் தங்கள் இறைவனுக்கு பயந்து (ஒழுங்காக நடந்து) கொள்கிறார்களோ அவர்களுக்கு, சதா நீரருவிகள் ஓடிக் கொண்டிருக்கும் சுவனபதிகளுண்டு. அவற்றில் அவாகள் அல்லாஹ்வின் விருந்தினராக என்றென்றும் தங்கி விடுவார்கள். நல்லோருக்காக அல்லாஹ்விடம் இருப்பது மிகச் சிறந்ததாகும்.”    (3:198)

மேற்காணும் வசனத்தின் மூலம் இறைவனுக்கு பயந்து நேரான வாழ்க்கை வாழ்பவர்களின் நிலையை தெளிவாக விவரித்து விட்டோம். இதிலிருந்து எத்தகைய கஷ்டங்கள் வந்த போதிலும் நேரான இறைவாழ்வின்பாலே நம்மின் அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும் என்பது புலனாகிறது. நிச்சயமாக அவ்வாறு இறைவனுக்கு பயந்தவர்களே ஈருலகிலும் நிகரில்லா வெற்றியடைவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

மார்க்கத்தில் ஆழ்ந்த அறிவுள்ளவர்கள் கூட ஏதாவது ஒரு சோனைக்கட்டம் ஏற்படும்போது மனம் தளர்ந்து விடுகிறார்கள். இச்சோதனை நம்மின் நம்பிக்கையின்(ஈமானின்) பலத்தை அறிய இறைவனால் ஏற்ப்படுத்தப்பட்ட ஒன்றே என்ற நிலையினை மறந்து விடுகிறனர். இந்நிலைகளை இறைவன் தெளிவாக இறைமறைகளில் பல இடங்களில் விளக்கி கூறியுள்ளான்.

(விசுவாசிகளே) ஓரளவு பயத்தாலும் பசியாலும் பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் நஷ்ட்டத்தாலும் நிச்சயமாக நாம் உங்களை சோதிப்போம் எனவும் (நபியே இச்சோதனைகளால் ஏற்படும் கஷ்டங்களைச்) சகித்து கொண்டிருப்போருக்கு நீர் நன்மாராயமாக கூறுவீராக,”

“நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்” என்று கூறினால் (போதும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டுவிடப் படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா?   

நிச்சயமாக அவர்களுக்கு முன்னிருந்தார்களே அவர்களையும் நாம் சோதித்திருக்கின்றோம்- ஆகவே உண்மையுரைப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் அறிவான்: இன்னும் பொய்யர்களையும் அவன் நிச்சயமாக அறிவான். (29:2,3)

எச்சோதனைகள் ஏற்பட்ட போதிலும் நாம் மிகப் பொறுமையுடன் அவற்றை இறைவன் காட்டித் தந்த வழிப் பிரகாரம் தீர்ப்பதற்கு நம்மால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும் அச்சோதனைகள் நம்மை விட்டு அகல நாம் ஏக இறைவனிடமே முறையிட வேண்டும் ஏனெனில் இறைவன் கூறுகிறான்:

“(விசுவாசிகளே) நீங்கள் தாழ்மையாகவும், அந்தரங்கமாகவும் உங்கள் இறைவனிடமே (உங்களுக்கு வேண்டியவைகளைக் கோரி பிரார்த்தியுங்கள். நிச்சயமாக அவன் வரம்பு மீறுவோரை நேசிப்பதில்லை.

(நபியே) உம்மிடம் என்னுடைய அடியார்கள் என்னைப் பற்றி கேட்டால், (அதற்கு நீர் கூறும்) நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன். (எவரும்) என்னை அழைத்தால், அவ்வழைப்போனின் அழைப்புக்கு நான் விடையளிப்பேன். ஆதலால் அவர்கள் என்னிடமே பிரார்த்தனை செய்யவும் என்னையே விசுவாசிக்கவும் (அதனால்) அவர்கள் நேரான வழியை அடைவார்கள்.    (2:186)

உங்கள் இறைவன் கூறுகிறான். நீங்கள் (உங்களுக்கு வேண்டிய யாவரையும் கேட்க) என்னையே அழையுங்கள். நான் உங்களுடைய பிரார்த்தனைக்குப் பதிலளிப்பேன்.” (40:60)

மேற்கண்ட திருமறையின் வசனங்களின் மூலம் கேட்டுப் பெற வேண்டியது இறைவனிடம் மட்டுமே என்பதை பல நிலைகளில் தெளிவாக விளக்குகிறான். அம்மட்டோ! அப்படி நம்மின் தேவைகளை முறையிடும்போது நாம் எங்ஙனம் கேட்க வேண்டும் என்பதை பின்வரும் ஹதீஸ்கள் மிகத் தெளிவாக விளக்குகின்றன.

நிச்சயமாக உங்கள் இரட்சகன் ஜீவனுள்ளவானாகிய, தயாள சிந்தையுடையோனாவான். தனது அடியான் அவன் பக்கம் தனது கைகளை அனுப்ப வெட்கப்படுகிறான்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஸல்மான்(ரழி), திர்மீதி, அபூதாவூத் பைஹகீ)

உங்களில் ஒவ்வொருவரும் தமது ரட்சகனிடத்தில் தமது செருப்பு வார் அருந்துவிட்டால் அதைச் (செப்பனிடுதல் உள்பட) அனைத்து தேவைகளையும் கேட்டுக் கொள்வாராக! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அனஸ்(ரழி), திர்மீதி) நான் ஒரு முறை நபி(ஸல்) அவர்களின் வாகனத்தில் பின்புறமாக அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள் என்னை நோக்கி சிறுவரே! நீர் அல்லாஹ்வை அல்லாஹ்வின் கட்டளைகளைப் பாதுகாத்துக்கொள். அல்லாஹ் உம்மை பாதுகாத்துக் கொள்வான். அல்லாஹ்வை நாடிக்கொள். அவனை அவனது உதவியை உம் எதிரில் காணுவாய். நீ கேட்டால் அல்லாஹ்விடம் கேள். உதவி தேடினால் அல்லாஹ்விடம் உதவி தேடு. (ஹதீஸ் சுருக்கம் இப்னு அப்பாஸ்(ரழி), திர்மீதி, அஹ்மத்)

மேற்கண்ட ஹதீஸ் மூலம் நம்முடைய தேவைகளை கேட்கும் முறையை ரசூல் முஹம்மது(ஸல்) அவர்கள் மேற்கொள் காட்டியுள்ளார்கள். இவ்வாறு நடப்பதன் மூலம் நமக்கு நன்மையானதை நாம் அடைய முடியும். ஏனெனில் நாம் ஒன்று நினைத்து, இது இப்போது நடந்து விட்டால் நாம் எல்லாவிதமான நற்பயன்களையும் அடைந்து விடலாம் என்று கற்பனைக் கோட்டையில் மிதப்போம். ஆனால் நாம் நினைத்த பிரகாரம் நடக்காமல், அதற்கு மாற்றமாக நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

இந்நிலையில் நிச்சயமாக மனந்தளராமல் பொறுமையைக் கைக்கொள்ள வேண்டும். இறைவன் நமக்கு எதை நாடுகிறானே, அதே நமக்கு எல்லா விதத்திலும் நன்மையானதாக தான் இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். ஏனெனில் நாம் நினைத்தவற்றில் உள்ள நன்மை, தமைகளை நாம் அறிய மாட்டோம். இதையே இறைவன் கீழ்வரும் திருமறை வசனத்தில் தெளிவாக்குகின்றான்.

“ஒரு பொருள் உங்களுக்கு மிக நன்மையாகவிருந்தும் அதனை நீங்கள் வெறுக்கக் கூடும். ஒரு பொருள் உங்களுக்கு தீமையானதாக இருந்தும் அதனை நீங்கள் விரும்பக்கூடும். ஒரு பொருள் உங்களுக்கு தீங்கானதாயிருந்தும் அதனை நீங்கள் விரும்பக்கூடும் (அவை உங்களுக்கு நன்மையளிக்குமோ, தீமையளிக்குமோ என்பதை) அல்லாஹ் அறிவானே தவிர, நீங்களறியமாட்டீர்கள்.”

ஆகவே நடப்பவை அனைத்தும் நன்மையாகவே இருக்கும் என்ற எண்ணத்தில் நாம் நம் அனைத்து முயற்சிகளையும் நேர்வழியான இறைவழியின்பால் செய்ய வேண்டும். தங்களுடைய மனதில் இவ்வாறு எல்லா நிலைகளிலும் இறைவனுக்கு பயப்படும் ஒரு அடியான ஈருலகிலும் வெற்றி பெற முடியும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் இறைவன் உள்ளச்சமுடையோரின் தன்மைகளை பின்வரும் வசனத்தில் உணர்த்துகிறான்.

மேற்கிலோ கிழக்கிலோ உங்கள் முகங்களை நீங்கள் திருப்புவது (மட்டும்) நன்மை (செய்ததாக) ஆகி விடமாட்டாது. எனினும் (உங்களில்) எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் மலக்குகளையும் வேதத்தையும் நபிமார்களையும் மெய்யாகவே  விசுவாசித்துப் பொருளை (அது  எவ்வளவோ விருப்புக்குரியதாயினும்) அவனுடைய விருப்பைப் பெறுவதற்காக பந்துக்களுக்கும் அநாதைகளுக்கும் ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசர்களுக்கும், விடுதலை விரும்பிய (அடிமைகள். கடன்காரர்கள் முதலிய)வர்களுக்கும் கொடுத்து (உதவி செய்து) தொழுகைகளையும் கடைபிடித்து ஜகாத்து மார்க்க வரி)யும் கொடுத்து வருகின்றாரோ அவரும் தங்களுடைய வாக்குறுதியைச் (சரிவர) நிறைவேற்றுபவர்களும் நஷ்டத்திலும் கஷ்டத்திலும் கடுமையான யுத்த நேரத்திலும் பொருமையைக் கைக் கொண்டவர்களும் ஆகிய இவர்கள்தான் நல்லோர்கள். அன்றி இவர்கள் தான் உண்மையானவர்கள்; பயபக்தியுடையவர்கள்.   (2:177)

ஆக நம்மை மரணம் வந்து அடையும் முன்பே நம்மின் செயல்களை இறைக்கட்டளைப்படியும் அவனின் தூதரின் வாழ்க்கைப்படியும் அமைத்துக்கொள்ள முழு முயற்சி செய்ய வேண்டும். நம்மின் இவ்வுலக அனைத்து கஷ்டங்களும், நஷ்டங்களும் உயர்வும் தாழ்வும் நம் மரணம் வரைக்கும் தான் அது நம்மை வந்து அடையும் நேரத்தை  இறைவனைத் தவிர வேறு யாரும் அறிந்திருக்கவில்லை. இறைவன் கூறுகிறான்.

“யாதோர் ஆத்மாவும் (அதற்கு) குறிப்பிடப்பட்ட, அல்லாஹ்வின் கட்டளையின் பேரிலின்றி இறப்பதில்லை. “(3:145) எனினும் யாதோர் ஆத்மாவுக்கும அதற்குரிய தவனை வரும்பட்சத்தில் (அதனை) அல்லாஹ் பிற்ப்படுத்தமாட்டான்; அன்றி நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கறிந்தே இருக்கிறான். (63:11)

மேலும் இறைவன் கூறுகிறான்: “நிச்சயமாக (யுக முடிவு) காலத்தைப் பற்றிய ஞானம், அல்லாஹ்விடத்தில் (மட்டும்) தான் இருக்கிறது; அவனே மழையை இறக்கி வைக்கின்றான்; அவனே கர்ப்பங்களில் உள்ளவைகளையும் அறிவான்; (அவனைத் தவிர) எவரும், நாளைக்கு அவர் என்ன செய்வார் என்பதை அறிவார். அவர் எந்த பூமியில் இறப்பார் என்பதையும் (அதனைத் தவிர) எவரும் அறியார். நிச்சயமாக அல்லாஹ் தான் (இவைகளை) நன்கறிந்தேனும் தெரிந்தோனுமாக இருக்கின்றான். (31:34)

இறப்பு எப்பொழுதும் வந்துவிடும் என்று நிராகரிப்போர் கூட தெளிவாக அறிந்திருந்தும், அவர்கள் தான் தோன்றித்தனமாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் ஒரிறை நம்பிக்கையாளன் இம்மரணத்தை கவனத்தில் கொண்டு தம்மின் செயல்களை நேராக்கிக் கொள்ளாவிடில் அவனுக்கு மார்க்கத்தைப் பற்றி இன்னும் எந்த தெளிவும் ஏற்படவில்லை என்பதே உண்மை. அன்புள்ள சகோதர சகோதரிகளே! உண்மையான மார்க்க விஷயங்களை அறிய முற்படுவது கண்டு உளமார வரவேற்று பிரார்த்திக்கின்றோம். நம்மின் இவ்வுலக வாழ்க்கை இறைவன் கூற்றுப்படி குறுகியதாக இருப்பதால், அறிந்ததோடு மட்டும் நில்லாது அறிந்ததைக் கொண்டு நம்மால் முடிந்த அளவு வாழ்க்கையின் அனைத்துக் காரியங்களிலும் ஏற்று செயல்படுத்த முழு முயற்சியையும் மேற்கொள்வோமாக.

இறைவன் நம் அனைவருக்கும் உறுதியான ஈமானை(நம்பிக்கையை) தந்து அதே நிலையிலேயே அவனுக்கு முற்றிலும் (TOTAL SUBMISSION) வழிபட்ட முஸ்லிம்களாக மரணிக்கும் பாக்கியத்தையும் தந்தருள்வானாகவும். ஆமின்.

Previous post:

Next post: