தஜ்ஜாலியத் பணி செய்வது யார்?

in 1990 ஜூலை-ஆகஸ்ட்

தஜ்ஜாலியத் பணி செய்வது யார்?

அல்முகைதீன், பொட்டல் புதூர்.

 இப்னு குலாம், பரங்கிப் பேட்டை

“நபியே சொல்வீராக! நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாயிருப்பின் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான். (மேலும்) அல்லாஹ்வுக்கும் (அவனுடைய இறுதி) தூதருக்கும் வழிபடங்கள்!”   (3:31,32)

“நான் உங்களிடம் இரண்டை விட்டுச் சொல்கிறேன் அந்த இரண்டையும் நீங்கள் பின்பற்றும் காலமெல்லாம் நீங்கள் ஒருபோதும் வழி தவறவே மாட்டீர்கள்! ஒன்று அல்குர்ஆன், இரண்டு என் வழிமுறை(மட்டும்). (அனஸ்(ரழி), முஅத்தா)

அளப்பெரும் அருளாளன் எல்லாம் வல்ல அல்லாஹ்(ஜல்) தன் படைப்பினங்களிலெல்லாம் சிறந்தப் படைப்பாக மனிதனைப் படைத்து அவனுக்கு வாழ்க்கையின் நெறிமுறைகளை தெளிவாக அறிவித்து அதைப் பகுத்தறியும் பகுத்தறிவையும் அருட்கொடையாக வழங்கினான். இந்தப் பகுத்தறிவைப் பயன்படுத்தி அவரவர் சிந்தனைக்கேற்ப நேர்வழியில் நடக்கலாம். தீயப்பாதையிலும் செல்லலாம் என்ற சுதந்திரத்தையும் மனிதனுக்கு இறைவன் தந்திருக்கின்றான். பகுத்தறிவு சுதந்திரத்தை இம்மை வாழ்வை செம்மையாக வாழ மனிதன் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மறுமை வாழ்வில் வெற்றி பெற இறைவனோ, இறைத் தூதரோ கூறியக் கட்டளையின்படி நடந்தாலன்றி மனிதன் தன் பகுத்தறிவு சுதந்திரத்தைப் பயண்படுத்தி வெற்றிக் கொள்ள முடியாது. இறைக் கட்டளையை ஏற்று நடந்தால் இம்மை வாழ்வும் சீராக அமைந்து மறுமையிலும் வெற்றியாளர்களின் கூட்டத்தில் சேரும் பாக்கியத்தையும் பெறலாம். அதற்கான நேரான வழி இறை வேதமும், நபியின் போதனையுமேயாகும்.

இந்த இரண்டையும் தவிர மற்ற எந்நத பகுத்தறிவு சிந்தனை சுதந்திரமும் மறுமையை மனிதனுக்கு சிறப்பித்து தந்து விடாது. இறைவனின் வேதத்தை ஏற்று அவன் நமக்கு கட்டளையிட்டபடி அவனது தூதரையும் பின்பற்றி நடந்தால் மறுமையில் அதற்கான பகரமாக மனிதனுக்கு நிரந்தர சுகம் அனுபவிக்கும் சுவனபதியைத் தருவதாகவும் இறைக்கட்டளையை அலட்சியம் செய்தால் நிரந்தரமாக நரகதீயில் வீழ்ந்துன்பம் அனுபவிக்க நேரிடும் என்றும் இறைவன் மிகத் தெளிவாக அறிவித்துள்ளான்.

ஸஹீஹான ஹதீஸின்படி இறுதி நபி(ஸல்) அவர்களின் உம்மத்தின் 73 கூட்டத்தாரில் ஒரே ஒரு கூட்டத்தாரே சுவனம் புகுவர் என்பது தெளிவான ஒன்றுதான். ஆனால் அது சுன்னத்-வல் ஜமாத் என்று ஜ.உ.ச அறிக்கை விட்டிருப்பது தான் வேடிக்கையாய் இருக்கிறது. நபிவழிப் பேணி நடக்கும் ஒவ்வொரு மனிதனும் அந்த ஒருக் கூட்டத்தாரில் சேருவர். அப்படித் தான் நபிமொழிக் கூறுகிறது. சுன்னத் வல் ஜமாஅத் என்று பெயரைச் சூட்டிக் கொண்டதால் மாத்திரம் சுவனம் செல்லும் அந்த ஒருக் கூட்டத்தாருடன் சேர்ந்து விட முடியாது. நபிவழியைப் பின்பற்றி செயல்பட வேண்டும்.

ஆனால் இவர்களோ சுன்னத் வல் ஜமாஅத்  என்று பெயரை சூட்டிக் கொண்டு சுவனம் செல்லும் அந்த ஒருப் பிரிவினரும் நாங்களே என்று பிரகடனப்படுத்திக் கொண்டு செயல்வழியில் நடைமுறையில் நபிமொழியை அலட்சியம் செய்தும், புறக்கணித்தும் வருகிறார்கள். ஜமாதுல் ஆகிர் 1410 மாத அந்நஜாத் இதழில் ரூ. 500/- அபராதம் விதிக்கப்பட்ட சகோதரரைப் பற்றிப் படித்தவர்களுக்கு இது நன்றாக புரியும். தொழும்போது நபிவழியைப் பின்பற்றிய ஒரே காரணத்திற்காக அந்த சகோதரருக்கு ரூ.500/- அபராதம் சுன்னத் வல் ஜமாத்தாரே விதித்துள்ளார்கள். பர்லான தொழுகையில் அல்ஹம்து சூராவிற்கு பின் (இரண்டு முறை) நபிவழிக்கேற்ப ஆமின் என்று சப்தமாக சொன்னதற்காக  ரூ. 500/-அபராதம் (ஒரு ஆமினுக்கு 250 வீதம்) விதித்துள்ளார்கள். நபிவழியைப் பேணி ஆமின் சொன்னவரின் குரல்வளையை நெறிப்பதுப் போன்ற செயல் அல்லவா இது?

(இதுப் பற்றி தெளிவான ஹதீஸ் ஆதாரங்களுக்கு இம்மாதத்திய ஹதீஸ் பெட்டகத்தைப் பார்க்கவும்)

நபிமொழிகள் இவ்வாறிருக்க அவைகளைப் பின்பற்றி சப்தமாக ‘ஆமின்’ கூறிய சகோதரரை ஏதோ பாவம் இழைத்துவிட்டதுப் போல் அபராதம் செலுத்த செய்த ஒரு கூட்டம் தாமே சொர்க்கம் செல்லும் பிரிவினர் என்று மார்தட்டிக் கொள்கிறார்கள். முஸ்லிம் சகோதர சகோதரிகளே! நன்றாக சிந்தித்து இத்தகைய மத்ஹபு வெறியர்களை அடையாளம் கண்டுக் கொள்ளுங்கள். இவர்களுடையக் குறிக்கோள் வருமானம் ஒன்று தான். வருமானம் வருமாயின் இறைவேதத்தையும் நபிமொழியையும் மறைத்தும் திரித்தும் கூற தயங்க மாட்டார்கள்.

எதிலும் சுய ஆதாரத்தையே இலக்காகக் கொண்டு வாழும் இந்தக் கூட்டத்தினரை அடியொற்றி நடக்கும் மவ்லவி (பாஜில்.பாகவி) ஒருவர், உலமா பெருமக்களை ‘அவன் இவன்’ என்று பொதுமக்கள் பேசி அந்நஜாத் மாத இதஜ் தான் காரணம் என்று ஓர் இமாலயக் கண்டுப் பிடிப்பைக் கண்டுப் பிடித்துள்ளார்கள். இதே உலமாப் பெருமக்களை ‘கால் நடைகள்’ என்று சொற்களில் குற்றமும் கண்டுள்ளனர்.

மேலும் குர்ஆன் ஹதீதை பொதுமக்களுக்கு உள்ளது உள்ளபடி விளம்பி வரும் அந்நஜாத்தின் பணிகளை ‘தஜ்ஜாலியத் பணி என்றும் குறிப்பிட்டுள்ளனர். ஆமின் கூறியவருக்கு ரூ. 500/- அபராதம் விதிப்பவரும் சாதாரண மக்களை மிருகங்கள் என்று அழைப்போரும் தஜ்ஜாலியத் பணியை மேற்க்கொண்டுள்ளார்களா? உண்மையை உரைக்கும் அந்நஜாதா? சகோதர சகோதரிகளே சிந்தித்துப் புரிந்துக் கொள்ளுங்கள்.

மதரஸாக்களிலிருந்து தாடியுடனும் நீண்ட ஜிப்பாவுடனும் வெளிவரும் உலமாக்கள் சுன்னத்தை எப்படி பேணுகிறார்கள் என்பதையும் ஆமின் சொல்லியதற்கு அபராதம் விதித்தக் கூட்டத்தைக் கேட்டுத் தெரிந்துக் கொள்ளுங்கள். இவர்கள் தாடியுடன் வெளிவருவது பொதுமக்களை ஏமாற்றவேயல்லாமல் சுன்னத்தைப் பேணவல்ல என்பதை நிரூபிக்க இரு சோற்றுப் பதமாக இரு மவ்லவிகளை அடையாளம் காட்டுகிறோம்.

எங்கள் ஊர் வழக்கப்படி ‘மாப்பிள்ளைக்கு வைத்துக் கொடுப்பதற்கும் பெண்ணுக்கு நகைப் போடுவதற்கும் சீர் ஜாமான்கள் எடுப்பதற்கும் திருமண செலவுக்கும் சேர்த்து மொத்தம் ரூ 50,000/-தேவைப்படுகிறது. இன்னும் பணம் வைத்துக் கொடுக்கவில்லை. என் கையில் பணம் இல்லை; சேமிப்பும் இல்லை; திருமணத்தில் தான் எல்லாப் பணத்தையும் வைத்துக் கொடுக்க வேண்டும்.

என் மீதும் என் மகள் மீது உங்கள் சகோதரிப் போல் நினைத்து தாங்கள் உதவி செய்வதுடன் உங்கள் நன்பர்களிடமும் சொல்லி ஏற்பாடு செய்யும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு உதவிக் கேட்டிருப்பவர் மதரஸாவிலிருந்து தாடி ஜிப்பாவுடன் வெளி வந்தவர் தான்……..இவ்வாறு இவருக்கு தெரிந்தவர்களிடமெல்லாம் கையேந்த நிர்ப்பந்திப்பவரும் தாடி ஜிப்பாவுடன் மதரஸாவிலிருந்து வெளிவந்தவர் தான். இவர் மகளும் அரபி மதரஸாவில் தங்கி ஆலிமாக வெளிவந்தவர் தான்.

மணமகன் : ஆலிம், மெளலவி, மிஸ்பாஹி, அரபிக் கல்லூரியில் மார்க்கத்தைப் போதிக்கும் ஆசிரியர்:

மணமகள் : ஆலிமா, பெண்கள் மதரஸாவில் மார்க்கத்தைப் போதிக்கும் ஆசிரியை.

மணமகளின் தந்தையும் ஆலிம், மெளலவி, இமாம் ஜாமிஆ மஸ்ஜித் பிறருக்கு மார்க்கத்தை போதிக்கும் 2 ஆலிம்களும் ஒரு ஆலிமாவும் அல்லாஹ்வின் வாக்கையும் நபிவழியையும் எத்துணை அக்கரையோடு கடைப்பிடிக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்!

(நீங்கள் மணமுடித்த பெண்களிடம்) அவர்களுக்குக் குறிப்பிட்ட மஹரை அவர்களிடம் கண்ணியமாக நீங்கள் கொடுத்து விடுங்கள். (4:24)

இறைவன் இந்த வசனத்தில் பெண்களுக்கே ஆண்கள் மஹரை (ஒரு தொகையாக) கொடுக்க வேண்டுமென்று கூறுகிறான். இதை மக்களுக்கு போதிக்கும் உலமாக்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாக பெண்ணிடமிருந்து ஒரு பெருந்தொகையைப் பெற்றுக் கொணடு மனமுடிக்கிறார்கள். தாடியுடன் மதரஸாவிலிருந்து வெளிவரும் நோக்கமென்ன? என்பதை பொதுமக்களே தெரிந்துக் கொள்ளுங்கள்.

மஹர் தொகையை கொடுக்க வழியில்லாத உடுத்திக் கொள்ள ஒரு வேட்டியைத் தவிர மறு வேட்டிக்கு வழியில்லாத ஒரு ஸஹாபிக்கு குர்ஆன் கற்று தருவதையே மஹராக வைத்து நபி(ஸல்) அவர்கள் ஒருப் பெண்ணைத் திருமணம் செய்து வைத்தார்கள் (நபிமொழி சுருக்கம்) (ஸஹ்ல் இப்னு ஸஃது(ரழி) புகாரீ, முஸ்லிம், முஅத்தா, திர்மிதீ, அபூதாவூத்)

இவ்வாறு நபிமொழி பெண்களுக்கு மஹராக உங்களால் இயன்றவரை ஏதேனும் கொடுக்க வேண்டுமென்று வலியுறுத்த, இந்த சுன்னத்தை கற்றரிந்த ஆலிம் வர்க்கம் செய்வது என்ன? இவர்கள் சுன்னத்து வல்ஜமாஅத் என்று தம்மை அழைத்துக் கொண்டதால் சொர்க்கம் செல்லும் பிரிவினர் ஆகிவிடுவாரா? (ஆண்கள்) தங்கள் சொத்துக்களிலிருந்து பெண்களுக்கு செலவு செய்து வருவதனாலும் அவர்களை ஆண்கள் நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்  (4:34)

இறைவனின் வாக்கிற்கு எதிராகப் பெண்களை நிர்வகிக்க ஊதியமாக ரூ. 50,000/- ஐ முன் பணமாக கேட்டுப் பெற்றுக் கொள்ளகிறார்கள். ‘ஸனது’ பெற்ற மவ்லவிகள்! மறுமையில் அல்லாஹுவின் கேள்வி கணக்குகளுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்ற ஈமான் உடையவர் இவர்கள்?

ஆயினும் ஆண்களுக்கு அவர்(பெண்)கள் மீது ஒருபடி உயர்வுண்டு.  அல்குர்ஆன்   (2:228)

அல்லாஹ் ஒருப் படி உயர்த்தி வைத்து, கெளரவித்த ஆண் வர்க்கம் கேவலம் பணத்திற்காக அல்லாஹ் தந்த உயர்வைக் களைந்து, தாழ்ந்துப் படுகுழியில் விழுகிறார்களே!

மார்க்கத்தை பிறருக்கு போதிக்கும் ஆலிம்களே!

திருமறையை கற்று திருமறையை போதிக்கும் நீங்களே திருமறை ஹராமாக்கிய செயலை ‘ஊர் வழக்கம்’ என்றப் போர்வையை உபயோகித்து நடைமுறைப் படுத்தினால் சதாரண மக்களின் கதி என்ன? உண்மையில் குர்ஆனின் போதனைகள் உங்கள் உள்ளத்தில் ஊறி இருந்தால் ” ஊர் வழக்கத்தை” மறை போதனைகளுக்கும் மேலான அந்தஸ்தை அளிப்பீர்களோ? தாடியும் ஜிப்பாவும் தான் இறையுணர்வைக் காட்டும் அடையாளங்களா? நபிவழியைப் பின்பற்ற வேண்டாமா? (அதற்கு ஆதாரமாக நிக்காஹ் அழைப்பிதழ் ஒன்றையும், பெண்ணின் தந்தை மவ்லவி கைப்பட எழுதிய கடிதங்களையும் அனுப்பியுள்ளார்.-ஆசிரியர்) இல்லறம் ஏற்பதும் பேணுவதும் நபிவழி அல்லவா!

நபிவழியை ஏற்க தான் மணக்கவிருக்கும் பெண்ணிடம் ரூ. 50,000/-கேட்பது அல்லாஹ்வின் கட்டளைக்கும் அவனது ரசூலின் வழிமுறைக்கும் முரணானது என்பது தெரியவில்லையா? ஆலிம்களாகிய நீங்களும் மார்க்கத்தைப் பேணிநடப்பதில்லை; நபி சுன்னததைப் பேணி நடக்கும் மார்க்க சகோதரர்களையும் அபராதம் அளித்து அவர்களையும் தடுப்பது முறையா? தாம் கற்றதை (பிறருக்கு அறிவிக்காமல்) மறைத்து விடுபவருக்கு மறுமை நாளில் நெருப்புக் கடிவாளம் போடப்படும். என்று அண்ணல் நபி(ஸல்) அவர்களும் கூறியுள்ளார்கள். (அபூஸயீதில் குத்ரி(ரழி), அஹ்மத், திர்மிதீ, அபூதாவூத்) இந்த நபிமொழிக்கு நீங்கள் அஞ்சவில்லையா? (நபியைப் பின்பற்றுவது என்ற இறைவாக்கை அறியமாட்டீர்களா?)

எல்லாம் வல்ல அல்லாஹ் அவனுடைய மார்க்கத்தை நிறைவு செய்து விட்டான். (பார்க்க அல்குர்ஆன் 5:3) அதை அனைத்துலக மக்களுக்கு வாழ்க்கை நெறியாக இம்மை மறுமை ஈருலக வெற்றிப் பாதையில் ஆக்கி வைத்திருக்கிறான். அவனுடைய தூதருக்குப் பின் மார்க்கத்தில் சேர்க்கப்படும் புதிய செயல்களெல்லாம் பித்அத் ஆகும். பித்அத்களெல்லாம் வழிகேடாகும் என்பது நபிமொழி, மார்க்கத்தில் இல்லாததொன்றை உருவாக்கினால் அது தூக்கி எறியப்பட வேண்டும். அது நூறு (ஷரத்துகள்) நிபந்தனைகள் ஆனாலும் சரியே என்பதும் நபி மொழி. அல்லாஹ்வால் அவனது தூதருக்குப் பின் மார்க்கத்தில் புகுத்தினான் என்று (வஹீ பெற்று(?)) சொல்லத் தொடங்கியிருக்கின்றனர்!

அல்லாஹ்வின் தூதருக்குப்பின் மார்க்கமென்று சொல்லி புதிய செயலைப் புகுத்தி மக்களை வழிகெட வைப்பது ஷைத்தானின் செயலாகும். அவன் செயலை சரிகண்டு அவனுக்குத் துணைப் போகும் மக்கள் ஷைத்தானின் தோழர்களாவர். ஷைத்தானிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி அல்லாஹ்வும், அவனது தூதரும் நமக்கு எச்சரித்ததைப் பின்பற்றி ஷைத்தானிடமும், ஷைத்தானின் தோழர்களிடமும் நாம் எச்சரிக்கையாக இருந்துக் கொள்வோமாக.

இலகுவான மார்க்கத்தையே இறைவன் நமக்கு வழங்கியிருக்கின்றான்(22:78) அதையெ நம் நபி(ஸல்) அவர்களும் எளிமையாக வாழ்ந்துக் காட்டியுள்ளார்கள். இஸ்லாம் மார்க்கத்தில் ஆமின் கூறுபவருக்கு ரூ.500/- அபராதம் என்றோ, ஒருப் பெண்ணை மனைவியாக ஏற்க ருபாய் 50,000 என்றோ மார்க்கத்தில் அனுமதிக்கவில்லை. பிறரிடம் கையேந்தியேனும் தன் மகளை மணமுடிக்கும் மணமகனுக்குக் கைக்கூலி கொடுங்கள் என்று சொல்லும் மார்க்கமல்ல இஸ்லாம்! பெண்ணுக்கு ஒரு தொகை மஹராக மணமுவந்து கொடுத்து மணமுடியுங்கள் என்று வலியுறுத்தும் மார்க்கமே இஸ்லாம்! ஆனால் இந்த மவ்லவிகளின் செயலோ!

அந்நஜாத் இந்த மவ்லவிகள் செயல்களை அப்பட்டமாக எடுத்து மக்களுக்குச் சொல்லி வருவதால் தங்களின் வருமானம் தடைபடுகிறதே எனும் ஆதங்கத்தால் அந்நஜாத்தை சாடுகின்றார். அந்நஜாத் குர்ஆன் ஹதீஸை உள்ளது உள்ளபடி எடுத்துக் கூறுவதால் தம்சாயம் வெளுக்கிறதே என்ற ஆற்றாமை! பொதுமக்கள் அந்நஜாத்தைப் படிக்காதீர்கள் என்று தடைசெய்கிறார்கள்.

அல்லாஹ்வின் கட்டளைகளைப் பேணாமல் நபிவழியைப் பின்பற்றாமல் முரணாக நடந்தும் சுவனம் செல்லும் ஒரு கூட்டத்தினர் நாங்கள் தான் என்றுக் கூற என்ன அருகதை உள்ளது? முஸ்லிம் சகோதர சகோதரிகளே! இதுவரை நாம் எடுத்து வைத்த நிகழ்ச்சிகளிலிருந்து ‘தஜ்ஜாலியத் பணியை மேற்க்கொண்டிருப்பவர் யார்? என்பதை சிந்தித்து முடிவு செய்துக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வையும் நபியையும் புறக்கணிக்கும் மவ்லவிகளின் மாய வலையில் சிக்கி விடாமல் சர்வ வல்லமையிலுள்ள அல்லாஹ்வின் பொருத்தத்தை மட்டுமேக் குறிக்கோளாகக் கொண்டு வாழ வல்ல நாயன் நமக்கெல்லாம் அருள் புரிவானாக! ஆமீன்.

Previous post:

Next post: