ஹதீஸ்களில் இடைச்செருகலானவையும், பலகீனமானவையும்

in 1990 ஜூலை-ஆகஸ்ட்

ஹதீஸ்களில் இடைச்செருகலானவையும், பலகீனமானவையும்

–  அபூரஜீன்

தொடர்: 3.

25.     “எனது தோழர்கள் எல்லாம் நட்சத்திரங்களைப் போன்றோரேயாவர். அவர்களில் எவருடைய சொல்லை நீங்கள் ஏற்று நடப்பினும் நேர்வழியடைந்து விடுவீர்.

இவ்வறிவிப்பை இப்னு உமர்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து கேட்டதாக “நாஃபிஉ’வின் வாயிலாக இப்னு அப்தில் பர்ரு” பதிவு செய்துள்ளார்கள். மேலும் இதைப் பதிவு செய்த அவர்களே “நாஃபிஉ”விடமிருந்து இதை அறிவிக்கும் அறிவிப்பாளர் நம்பகமற்றவர் என்பதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

“நாஃபிஉ”விடமிருந்து இதைத் தாம் கேட்டதாகக் கூறும் “ஹம்ஸா” என்பவர் பற்றி இவர் ஹதீஸ்கலா வல்லுநர்களால் ஒதுக்கப்பட்டவர் என்று தாருகுத்னி கூறியுள்ளார். இவர் அறிவிக்கும் அநேக அறிவிப்புகள் இடைச் செருகலானவையாகவே உள்ளன என்று “இப்னுஅதீ” அவர்களும் கூறுகிறார். இமாம் தஹபீ அவர்களும் தமது “மீஜான்” எனும் நூலில் இடைச் செருகலானவற்றில் இதையும் ஒன்றாக இணைத்துள்ளார்கள். ஆகவே இவ்வறிவிப்பு இடைச்செருகலானதாகும்.

மேலும் நபி(ஸல்) அவர்கள், ஹதீஸ் எண். 15ல் இடம் பெற்றிருப்பது போல் என்து தோழர்கள் நட்சத்திரங்களைப் போன்றோர் ஆவார்கள். நீங்கள் அவர்களில் எவரைப் பின்பற்றினாலும் நேர்வழியடைந்தோர் ஆவீர்கள்” என்றோ, ஹதீஸ் எண். 25ல் உள்ளபடி எனது தோழர்கள் எல்லாம் நட்சத்திரங்களைப் போன்றோரேயாவார். அவர்களில் எவருடைய சொல்லை நீங்கள் ஏற்று நடப்பினும் நேர்வழியடைந்து விடுவீர்! என்றோ, சந்தர்ப்பத்தில் தவறிழைக்கும் தன்மை வாய்ந்தவர்களாகிய தமது சஹாபாக்களைப் பற்றி ஒட்டுமொத்தமாக இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் சுறியிருப்ப வாய்ப்பு இல்லை. காரணம்: ஒரு சில விஷயங்களில் சஹாபாக்களில் பல்வேறு அபிப்பிராயம் கொண்டோரும் இருந்திருக்கிறார்கள்.

உதாரணமாக:

அபூ தல்ஹா(ரழி) அவர்கள் தாம் நோன்பாளியாக இருந்து கொண்டே பலமான காற்றுடன் மழை பெய்யும் போது விழும் ஆலங்கட்டியைச் சாப்பிட்டுள்ளார்கள். ஒருமுறை ஆலங்கட்டி – பனிக்கட்டி மழை பெய்தது. அப்போது அபூதல்ஹா(ரழி) அவர்கள் தான் நோன்பாளியாக இருந்துகொண்டு அதை எடுத்து சாப்பிட ஆரம்பித்தார்கள். அப்போது அவர்களை “நீங்கள் நோன்பாளியாக இருந்துகொண்டே இதைச் சாப்பிடுகிறீர்களே? என்று கேட்கப்பட்டது. அதற்கு இது அல்லாஹ்வின் “பரகத்து” தானே என்றார்கள். (அனஸ்(ரழி), இப்னு ஹஜ்மு, பஜ்ஜார்)

இவ்வறிவிப்பு, “அதா” எனப்படும் நபித்தோழர்களின் செயல்பாட்டைச் சார்ந்ததாக இருக்கிறது. ஸஹீனான ஆதாரப்புர்வமானதாகவும் உள்ளது. இது இவ்வாறு பலம் வாய்ந்த அறிவிப்பாக இருப்பினும் இதன்படி நாம் செயல்படுத்துவது கூடாது. காரணம் ஒரு விஷயத்தை ஒரு நபித்தோழர் எடுத்துக் கூறினால், அது நபி(ஸல்) அவர்களின் ஹதீஸுடன் மோதாமல் இருத்தல் வேண்டும். அப்போது தான் அந்த நபித்தோழரின் கூற்று ஏற்கப்படும்.

அவ்வாறின்றி நபித்தோழரின் ஒரு கூற்று ஹதீஸுடன் மோதுவதாக இருக்குமானால் நிச்சயமாக அந்த நபித்தோழரின் கூற்று ஏற்கப்படமாட்டாது. மேற்காணும் அபூதல்ஹா(ரழி) அவர்களின் செயல் பின்வரும் ஹதீஸ்களுடன் மோதுவதைக் காண்க! “ஒருவர் பொய்யையும், தீய செயலையும் விட்டொழிக்காமல் அவர் உண்ணாமலும், குடிக்காமலும் இருப்பதில் அல்லாஹ்வுக்கு எத்தேவையுமில்லை” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இவ்வறிவிப்பில் ஒருவர் நோன்பாளியாக இருக்க வேண்டுமாயின் அவர் உண்ணாமலும் குடிக்காமலும் இருத்தல் வேண்டும் என்பதை அறிகிறோம்.

“நீங்கள் நோன்பு திறக்கும்போது பேரீத்தம் பழத்தைக் கொண்டு திறவுங்கள் அதில் “பரகத்” இருக்கிறது. அது இல்லையேல் தண்ணீரைக் கொண்டு திறவுங்கள். அது பரிசுத்தமானதாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பாளர்: ஸல்மான் பின் ஆமிர்(ரழி), ஆதாரம்: திர்மிதீ, அபூதாவூத், இப்னு மாஜ்ஜா, அஹ்மது, தாரிமீ)

இவ்வறிவிப்பில் பேரீத்தம் பழத்தைச் சாப்பிடுவதன் மூலம் நோன்பு முற்றுப் பெறுவதுபோல், தண்ணீர் குடித்தாலும் நோன்பு முற்றுப்பெற்று விடுகிறது என்பதும் தெளிவாகியது. எனவே அபூ தல்ஹா(ரழி) அவர்கள் தாம் நோன்பாளியாக இருந்துகொண்டே மழை பெய்யும்போது விழுந்த ஆலங்கட்டியைச் சாப்பிட்டிருப்பதானது மேற்காணும் ஹதீஸ்களோடு மோதுவதால், ஒரு சஹாபி இவ்வாறு செய்துள்ளது உண்மையானதாக இருந்தும், அந்த சஹாபியின் செயலைப் பின்பற்றி யாதொரு முஸ்லிமும் அவ்வாறு செயல்படக் கூடாது என்பதாக ஸஹீஹான ஹதீஸ்கள் தடைசெய்கின்றன.

ஆகவே அபூதல்ஹா(ரழி) அவர்கள் சஹாபியாக இருந்தும் அவர்கள் செய்தது போல் பிற முஸ்லிமகள் செய்வதற்கு மார்க்கத்தில் இடம் இல்லை என்று ஸஹீஹான ஹதீஸ்கள் கூறுவது ஒன்றே (எனது தோழர்கள் எல்லாம் நட்சத்திரங்களைப் போன்றோரே ஆவர். அவர்களின் எவருடைய சொல்லை நீங்கள் ஏற்று நடப்பினும் நேர்வழியடைந்து விடுவீர்) என்பது போன்ற போலியான ஹதீஸ்களை நிர்மூலப்படுத்துவதற்குப் போதுமான சான்றாக விளங்குகிறது. நபித்தோழர்களில் நோன்பாளியாக இருந்துகொண்டே ஆலங்கட்டியைச் சாப்பிட்டவர்கள் இருந்தது போல், மார்க்க அடிப்படையில் பெரிய தவறுகள் செய்து அவற்றிற்காக தண்டிக்கப்பட்டவர்களும் இருந்துள்ளார்கள்.

உதாரணமாக:

ஆயிஷா(ரழி) அவர்களின் வாயிலாக அபூதாவூதில் இடம் பெற்றிருப்பதுபோல் ஆயிஷா(ரழி) அவர்கள் மீது அவதூறு பேசிய குற்றத்திற்காக ஹஸ்ஸானு பின் ஸாபித்(ரழி), மிஸ்தஹ் பின்அஸாஸா(ரழி), ஹிம்னா பின்த் ஜஹ்ஷ்(ரழி) ஆகியோர் தலா 80 கசையடி  கொடுக்கப்பட்டுள்ளார்கள்.

ஆயிஷா(ரழி) அவர்களின் வாயிலாக புகாரீ, முஸ்லிம் ஆகிய நூல்களில் இடம் பெற்றிருப்பது போல் “மக்ஜுமிய்யா” எனும் குடும்பத்தைச் சார்ந்த ஒரு பெண் திருடிய குற்றத்திற்காக, மணிக்கட்டு வரை கை துண்டிக்கப்பட்டுள்ளார்.

அனஸ்(ரழி) அவர்களின் வாயிலா புகாரீ, முஸ்லிம் ஆகிய நூல்களில் இடம் பெற்றிருப்பது போல் ஒரு சஹாபி மது அருந்திய குற்றித்திற்காக, பிறருடைய கைகளாலும், பேரீத்த மட்டைகளாலும், ஏன்? செருப்புகளாலும் அடிக்கப்பட்டுள்ளார்.

இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் வாயிலா புகாரீயிலும், புரைதா(ரழி) அவர்கள் வாயிலா முஸ்லிமிலும் இடம் பெற்றிருப்பது போல் “மாயிஜு” பின் மாலிக்(ரழி) என்பவர் விபச்சாரம் செய்த குற்றத்திற்காக, கற்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்களின் வாயிலாக தப்ரானீயில் இடம் பெற்றிருப்பது போல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (மறுமையில்) எனது சஹாபாக்களில் சில நபர்களை எனக்கு எடுத்துக் காட்டப்படும். அவர்களை நான் பார்க்க முற்படும்போது என்னை விட்டும் வேறு பக்கம் அவர்கள் ஒதுக்கப்பட்டு விடுவார்கள். அப்போது நான் “அவர்கள் எனது தோழர்களாயிற்றே” என்பேன். அதற்கு “அவர்ள் உங்களுக்குப் பின்னால் (மார்க்கத்தில்) புதிதாக எவற்றையெல்லாம் புகுத்தியுள்ளார்கள் என்பதை நிச்சயமாக நீங்கள் அறிய மாட்டீர்கள்” என்று கூறப்படும்.

ஸஹ்லு பின் ஸயீது(ரழி) அவர்கள் வாயிலாக புகாரீ, முஸ்லிம் ஆகிய நூல்களில் இடம் பெற்றிருப்பது போல், மறுமையில் நடக்கவிருக்கும் ஒரு நிகழ்ச்சி பற்றி நபி(ஸல்) அவர்களின் முன் அறிவிப்பு:

நிச்சயமாக “ஹவ்ளுல் கவ்ஸா” எனும் தடாகத்தின் அருகில் நான் நின்று கொண்டிருக்கும்போது, அதிலுள்ள பானத்தை அருந்துவதற்காக ஒரு கூட்டத்தார் வருவார்கள். அவர்கள் இன்னார் என்பதை நான் அறிவேன். நான் இன்னார் என்பதை அவர்களும் அறிவார்கள். இந்நிலையில் என்னை நோக்கி வரும் அவர்களுக்கும், எனக்குமிடையில் தடை விதிக்கப்பட்டு அவர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள். அப்போது நான் அவர்கள் என்னைச் சார்ந்தவர்கள்” என்று  கூறுவேன். அதற்கு “அவர்கள் உங்களுக்குப் பின்னால் (நீங்கள் கொண்டு வந்த மார்க்கத்தில் தன்னிச்சையாக) புதிதாக எவற்றை எல்லாம் புகுத்தியுள்ளார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது” என்று சொல்லப்படும். உடனே நான் (அல்லாஹ்வினால் என் மூலம் அருளப்பட்ட அழகிய மார்க்கத்தில்) எனக்குப் பின்னர் கோளாறுகளை உண்டுபண்ணியுள்ள நீங்கள் தூரச் சென்று விடுங்கள்! தூரச் சென்று விடுங்கள்! என்று நான் கடிந்து கூறி விடுவேன்”

பொதுவாக நபித்தோழர்கள் இந்த உம்மத்தில் தலைசிறந்தவர்களாயிருப்பினும் அவர்களில் ஒரு சிலர் நபி வழிக்கே புறம்பாக நடந்து, அந்த நபி(ஸல்) அவர்களின் காலத்திலேயே மேற்கண்டவாறு பல குற்றங்கள் செய்து, அவர்களாலேயே தண்டிக்கப்பட்டிருக்கும்போது, இவ்வளவு கோளாறுகளையும் தமது தோழர்களுக்கு மத்தியில் நிகழ்ந்திருப்பதை நேரில் பார்த்துக் கொண்டிருந்த அந்த நபி(ஸல்) அவர்கள் ஒட்டுமொத்தமாக எனது தோழர்கள் எல்லாம் நட்சத்திரங்களைப் போன்றோரே, நீங்கள் அவர்களில் எவரைப் பின்பற்றினாலும் நேர்வழியடைந்தோராவீர்” என்று எவ்வாறு கூறியிருப்பார்கள் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

அப்படி என்றால் நாமும் அந்த சஹாபாக்களைப் பின்பற்றி இவ்வாறெல்லாம் அவர்கள் சன்மார்க்க நெறிக்குப் புறம்பாக சந்தர்ப்பத்தில் தவறிழைத்தது போல் தவறிழைக்க வேண்டும் என்றா நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருப்பார்கள்? ஆகவே மேற்காணும் “எனது தோழர்கள் எல்லாம் நட்சத்திரங்களைப் போன்றோரேயாவர், அவர்களில் எவருடைய சொல்லை நீங்கள் ஏற்று நடப்பினும் நேர்வழியடைந்து விடுவீர்” என்ற அறிவிப்பு இமாம் தஹபீ அவர்ள் தமது “மீஜான்” எனும் நூலில் சுட்டிக்காட்டியிருப்பது போல் இடைச் செருகலானது என்றும், மேலும் இந்த கருத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள அறிவிப்புகளும் இடைச்செருகலானவையே என்று கவனத்தில் கொள்வோமாக!

26.     “ஒரு மலை தனது இடத்தை விட்டு அகன்று விட்டது என்று நீங்கள் கேள்விப்பட்டால் (அதை) உண்மை என நம்புங்கள். ஆனால் ஒருவர் தமது சுய குணத்தை விட்டு மாறுபட்டு விட்டார் என்று நீங்கள் கேள்விப்பட்டால் அதை உண்மை என நம்ப வேண்டாம். ஏனெனில் நிச்சயமாக அவர் எந்த குணத்தில் படைக்கப்பட்டாரோ அதே நிலைக்கு மீண்டும் வந்துவிடுவார்” தாங்கள் ஒருமுறை நபி(ஸல்) அவர்களின் முன்னிலையில் பின்னால் நடக்கப்போகும் விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அதுசமயம் அவர்கள் மேற்கண்ட ஹதீஸைக் கூறினார்கள். (அபூதர்தாஃ(ரழி), அஹ்மத்)

இதன் அறிவிப்பாளர் தொடரில் அபூதர்தாஃ(ரழி) அவர்களிடமிருந்து “ஜுஸ் ரீ என்பவர் இதனைக் கேட்டதாக உள்ளது. ஆனால் “ஜுஹ்ரீ என்பவர் அபூ தர்தாஃ(ரழி) அவர்களை சந்திக்கும் வாய்ப்பிழந்தவராக உள்ளார். ஆகவே இவ்வறிவிப்பு “முன்கதிஉ” அறிவிப்பாளர் தொடர் இழந்ததாக உள்ளது. அதனால் இது ஏற்புக்குரிய நிலை இழந்து பலகீனமானதாகி விடுகிறது. மேலும் இவ்வறிவிப்பு பின்வரும் ஸஹீஹான ஹதீஸ்களுக்கு முரண்படவும் செய்கிறது.

“நிச்சயமாக ஒரு மூமினானவர், பிறரிடம் நற்குணத்தோடு பழகுவதன் மூலம் பகலெல்லாம் நோன்பிருந்து இரவெல்லாம் நின்று வணங்குவோரின் தரஜாவை படித்தரத்தை அடைந்து விடுகிறார்” என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன். (ஆயிஷா(ரழி), அபூதாவூத்)

“எவர் தமது குணத்தை நல்லதாக அமைத்துக் கொள்கிறாரோ, அவருக்கு உயர்தர சுவர்க்கத்தில் ஓர் இருப்பிடம் கிடைப்பதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஉமாமா(ரழி), அபூதாவூத்)

மேற்காணும் இரு ஹதீஸ்களிலும் மக்களிடத்தில் நற்குணத்தோடு பழகுவதால் அபரிமிதமான நன்மைகள் கிடைப்பதோடு, சுவர்க்கத்தில் ஒரு இருப்பிடமே கிடைக்கும் என்பதாக நன்மாராயம் கூறப்பட்டிருக்கின்றது. ஒருவர் தமது சுயகுணத்தைத் தம்மால் மாற்றிக் கொள்வது சாத்தியமாக இருப்பதை அடிப்படையாகக் கொண்டே நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள். ஆனால் மேற்காணும் அறிவிப்போ, அது சாத்தியமில்லை, ஒவ்வொருவரும் எந்த குணத்தில் படைக்கப்பட்டுள்ளாரோ, அதே குணத்திலேயே தமது இறுதி காலம் வரை நிலைத்திருப்பார் என்பதாக விதியின் மீது பழிபோடுவதாகிறது. மனிதருக்கு சாத்தியமில்லாத ஒரு காரியத்தைச் செய்யும்படி அல்லாஹ்வோ, அவனது ரசூலோ கூறவில்லை.

“அல்லாஹ் யாதொரு ஆத்மாவையும் அதற்கு இயலுமான அளவுக்கு மேல் (எதையும் செய்யும்படி) சிரமத்தைக் கொடுப்பதில்லை. (அல்குர்ஆன்: 2:286)

ஆகவே இவ்வசனத்திற்கும், மேற்காணும் இரு ஹதீஸ்களுக்கும் இவ்வறிவிப்பு முரண்படுவதால் இது முறையான அறிவிப்பு அல்ல என்பதை அறிகிறோம்.

27.     “ஒரு விஷயம் பேசும்போது தும்மல் ஏற்படுமாயின் அவ்விஷயம் உண்மையானதாகும்.”

இவ்வறிவிப்பை இப்னு “ஜவ்ஸீ” அவர்கள்  தமது இடைச்செருகல் தொகுப்பில் இடம்பெறச் செய்துள்ளார். தப்ராணியில் இடம்பெற்றுள்ள இவ்வறிவிப்பின் அறிவிப்பாளர் தொடரில் “ஜஃபரு பின் முஹம்மத்” என்பவர் காணப்படுகிறார். இவர் ஹதீஸ் கலாவல்லுநர்களிடத்தில் அறிமுகமில்லாதவராவார். ஆகவே மேற்காணும் அறிவிப்பு, நடைமுறைக்கு ஒத்துவராத ஒரு விஷயத்தை எடுத்துக் கூறுவதிலிருந்து இது பொய்யான இடைச்செருகலான அறிவிப்பு என்பதை அறிய முடிகிறது.

28.  “கொடையாளியான ஒருவர் அல்லாஹ்வுக்கும், சுவர்க்கத்திற்கும், மக்களுக்கும் அண்மையில் இருக்கிறார், ஆனால் நரகத்திற்கு வெகுதூரத்தில் இருக்கிறார். இவ்வாறே உலோபியானவர் அல்லாஹ்வுக்கும், சுவர்க்கத்திற்கும் மக்களுக்கும் தூரத்தில் தூரத்தில் இருக்கிறார். ஆனால் நரகத்திற்கு மிக சமீபத்தில் இருக்கிறார். உலோபியான வணக்கசாளியை விட கொடையாளியான ஒரு ஜாஹில்-(விவேகமற்றவர்) அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவராவார்.

இவ்வறிவிப்பை இமாம் திர்மிதீ(ரஹ்) அவர்கள் தமது நூலில் பதிவு செய்துவிட்டு, இவ்வறிவிப்பு “ஃகரீப்” ஒரே வழிச் சொல்லாகயிருக்கிறது. “ஸயீது பின் முஹம்மத்” என்பவர் மட்டும் இதை அறிவித்துள்ளார். மேலும ‘யஹ்யா பின் ஸயீத்” என்பதாக மற்றொரு அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ள ஒருவரின் மூலமாக, தான் அறிவிப்பதாகவும் கூறி, தமது கூற்றில் உறுதியில்லாமல் குழம்புகிறார். மேற்காணும் “ஸயீது பின் முஹம்மத்” என்பவரை இப்னு முயீன், இப்னு ஸஃது முதலியவர்கள் பலகீனமானவர் என்று கூறியுள்ளார்கள். ஆகவே இந்த அறிவிப்பு பலகீனமானதாகும்.

29.     “நீங்கள் பிறர் மீது தப்பு அபிப்பிராயம் கொண்டவர்களாகவே இருந்துகொண்டு (அவர்களை விட்டும்) உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

இவ்வறிவிப்பின் அறிவிப்பாளர் தொடரில் “முஆவியா பின் யஹ்யா” என்னும் பலகீனமானவர் ஒருவர் இடம் பெற்றுள்ளார். இவரை அனைத்து ஹதீஸ் கலாவல்லுநர்களும் மிகவும் பலகீனமானவர் என்றே குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் இவ்வறிவிப்பு புகாரீ, முஸ்லிம் ஆகியவற்றில் இடம் பெற்றுள்ள பின்வரும் ஸஹீஹான அறிவிப்புக்கு முரண்படுவதோடு, குர்ஆனின் வசனத்திற்கும் முரண்படுகிறது.

அதாவது: நீங்கள் பிறர் மீது தப்பபிப்பிராயம் கொள்வதை விட்டொழித்து விடுங்கள். ஏனெனில் தப்பபிப்பிராயம் என்பது மிக பொய்யான விஷயமாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூ ஹுரைரா(ரழி), புகாரீ, முஸ்லிம்)

மூமின்களே! சந்தேகமான எண்ணங்களில் பலவற்றையும் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாயிருக்கின்றன. (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிருக்கவும் வேண்டாம். (49:12) ஆகவே மேற்காணும் அறிவிப்பு குர்ஆனுக்கும், ஸஹீஹான ஹதீஸுக்கும் முரண்படுவதைக் காரணமாகக் கொண்டும் பலகீனமானதாகி விடுகிறது.

30.     “மூன்றின் காரணமாக நீங்கள் அரபிகளை நேசிக்கக் கடமைப்பட்டுள்ளீர்கள்.

1. நான் அரபியாக உள்ளேன். 2. குர்ஆன் அரபியாக உள்ளது. 3. சுவர்க்கவாதிகளின் மொழியும் அரபியாக உள்ளது.

இதன் அறிவிப்பாளர் தொடரில் “அலாஉ பின்அம்ரில்ஹனபீ” என்ற நம்பகமற்ற ஒருவர் இடம்பெற்றுள்ளார். இவரைப் பற்றி இமாம் தஹபீ(ரஹ்) அவர்கள் தமது “மீஜான்” எனும் நூலில் இவர் ஹதீஸ் கலாவல்லுநர்களால் ஒதுக்கப்பட்டவர் என்று கூறியுள்ளார்கள். மேலும் இவ்வறிவிப்பு அஹ்மதில் இடம் பெற்றுள்ள கீழ்காணும் ஸஹீஹான ஹதீஸுக்கு முரண்படுவதாகவும் உள்ளது.

அதாவது…

அரபி மொழி தெரியாதவரை விட, அரபி மொழி தெரிந்தவர் சிறந்தவர் அல்லர். இவ்வாறே கறுப்பரை விட சிவப்பானவர் சிறந்தவர் அல்லர். “தக்வா”வைப் -பயபக்தியைக் கொண்டே அன்றி” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அஹ்மத்)

31.     “சாப்பாட்டிற்கு முன்னும், பின்னும் ஒளூ செய்து கொள்வதில் சாப்பாட்டின் பரகத்து உள்ளது.”

இவ்வறிவிப்பை அபூதாவூத் அவர்கள் தமது நூலில் பதிவு செய்து விட்டு, இதன் அறிவிப்பாளர் தொடரில் “கைஸுப்னுர் ரபீஃ” என்பவர் இடம் பெற்றுள்ளார். அவர் பலகீனமானவர் என்றும் கூறுகிறார்கள். சாப்பாட்டிற்கு முன்னால் கைகளைக் கழுவ வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் ஒரு ஹதீஸும் இல்லை. அதனால் கையில் என்ன இருந்தாலும் கழுவாமல் சாப்பிடலாம் என்பது பொருளல்ல. கையைக் கழுவ வேண்டிய அளவுக்கு அதில் அழுக்கோ, மற்றவையோ இருப்பின் அதைக் கழுவி விடுவதே முறையாகும். அவ்வாறின்றி ஒருவர் ஒளூ செய்து தொழுது விட்டு, அப்போது தான் வீட்டிற்கு வந்து சாப்பிட உட்கார்ந்திருப்பார். சாப்பாடு வந்தவுடன் கை சுத்தமாகயிருக்கும் நிலையிலேயே அதைக் கழுவி விட்டு சாப்பிடுவார். இவ்வாறு கை சுத்தமாயிருக்கும் நிலையில் சாப்பிடுவதற்காகக் கையைக் கழுவ வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை.

ஒரு முறை நாங்கள் நபி(ஸல்) அவர்களிடத்தில் இருக்கும்போது அவர்கள் கழிப்பறைக்குச் சென்று திரும்பினார்கள். அப்போது உணவு கொண்டு வரப்பட்டது. அதுசமயம் அவர்களை நோக்கி நீங்கள் ஒளூ செய்யவில்லையா? என்று கேட்கப்பட்டது. அதற்கு “நான் தொழவில்லையே! ஒளூ செய்வதற்கு?” என்றார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி), முஸ்லிம்)

அபூதாவூத், திர்மிதீ, ஆகிய நூல்களில் நான் தொழுகைக்கு ஆயத்தமாகும்போது தான் ஒளூ செய்து கொள்ள வேண்டும், என்பதாக ஏவப்பட்டுள்ளேன்” என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக பதிவாகியுள்ளது.

இவ்வாறு ஸஹீஹான ஹதீஸ் இருந்தும் கூட மேற்காணும் ஹதீஸ் எண் 31ல் உள்ள பலகீனமான அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் வகையில் ஆர்வமூட்டி அந்த போலி ஹதீஸில் இடம் பெற்றுள்ள “ஒளூஃ” எனும் பதத்திற்கு தொழுகைக்கு நாம் செய்யும் “ஒளூ” என்பது பொருள் அல்ல. இரண்டு கைகளையும் கழுவி, வாயையும் கழுவுவது தான் இந்த ஒளூவுக்குப் பொருள் என்பதாக நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ்களில் காணப்படாத விசித்திரமான அர்த்தத்தை “பஃபுகஹாக்கள்” – சன்மார்க்க மேதைகள்(?) என்போர் தன்னிச்சையாகக் கூறியுள்ளார்கள்.

32.     ஒவ்வொரு பொருளுக்கும் உள்ளம் உண்டு. நிச்சயமாக குர்ஆனின் உள்ளம் “யாஸீன்” சூராவாகும்.

இதைத் திர்மிதீ அவர்கள் தமது நூலில் பதிவு செய்துவிட்டு, இதைப் பற்றி “ஹஸனுன் ஃகரீபு” என்பதாக, இவ்வறிவிப்புக்கு வேறு சான்றுகள் இருப்பது போல் எழுதியுள்ளார்கள். ஆனால் திர்மிதியின் மற்றொரு பிரதியில் “ஃகரீபு” ஒரு வழிச் சொல் என்பதாகக் காணப்படுகிறது.

ஹாபிழ் இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் இது பலகீனமான அறிவிப்பென்றே குறிப்பிட்டுள்ளார்கள். இதன் அறிவிப்பாளர் தொடரில் “ஹாரூன்” எனும் அறிமுகமற்றவர் இடம் பெற்றுள்ளார். ஆகவே இவ்வறிவிப்பு பலகீனமானதென்று ஹாபிழ் தஹபீ(ரஹ்) அவர்களும் குறிப்பிடுகிறார்கள்.

33.     “நிச்சயமாகப் பாவம் வருவாயைக் குறைப்பதில்லை, நன்மை அதைக் கூட்டியதில்லை. துஆ செய்யாதிருப்பதே பாவமாகும்.

இதை தப்ரானீ, இப்னு அதீ ஆகியோர் “இஸ்மாயீல் பின் யஹ்யா’ என்பவரின் வாயிலாக அபூ ஸயீத்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து அறிவிப்பதாக பதிவு செய்துள்ளார்கள். இவ்வறிவிப்பில் உள்ள இஸ்மாயில் என்பவர் பற்றி, தாருகுத்னீ, ஹாக்கிம் ஆகியோர் இவர் சரியான பொய்யர் என்பதாக விமர்சித்துள்ளார்கள். மேலும் இதில் “அதிய்யத்துல் ஊஃபீ ” என்னும் நம்பகமற்றவரும் இடம் பெற்றுள்ளார்.

மேலும் இது பின்வரும் ஸஹீஹான அறிவிப்புக்கு முரண்படவும் செய்கிறது. தமது வருவாய் பெருகவும், வாழ்நாள் அதிகரிக்கவும் விரும்புவோர் தமது பந்துகளிடத்தில் சேர்ந்துறவாடுவாராக!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பாளர்: அனஸ்(ரழி), ஆதாரம்: புகாரீ, முஸ்லிம்.

நிச்சயமாக ஒருவர் தாம் செய்யும் பாவத்தால் வருவாயை இழக்கிறார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பாளர்: ஸவ்பான்(ரழி), ஆதாரம்: இப்னு மாஜ்ஜா)

இந்த அறிவிப்புகளின் மூலம் பந்துகளுடன் கலந்துறவாடுவது மட்டுமே. ஒருவருடைய வாழ்நாளைக் கூட்டுவதள்குக் காரணமாக இருப்பது போல் அவருடைய வருவாய் அதிகரிக்கவும் காரணமாக உள்ளது என்பதை அறிகிறோம். மேலும் பாவமானது வருவாய்க்கு முட்டுக்கட்டையாக உள்ளது என்பதையும் பார்க்கிறோம். மேற்காணும் அறிவிப்போ இதை மறுக்கிறது.

34. நாட்களில் சிறந்தது ஜும்ஆவுடைய நாளில் வரக்கூடிய அரஃபா தினமாகும். அன்றைய தினத்தில் செய்யப்படும் ஹஜ்ஜு அதல்லாத நாளில் செய்யப்படும் 70 ஹஜ்ஜைவிடச் சிறந்ததாகும்.

இதை “ரஜீன்” என்பவர்கள் தமது “தஜ்ரீதுஸ் ஸிஹாஹ்” எனும் நூலில் பதிவு செய்துள்ளார்கள். பொதுவாக இந்நூலில் அடிப்படை இல்லாத பல அறிவிப்புகள் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் மேற்காணும் அறிவிப்பு. இவ்வறிவிப்பு ஆதாரப்பூர்வமான யாதொரு ஹதீஸ் நூலிலும் இடம் பெறவில்லை. இவ்வாறு நபி(ஸல்) அவர்களோ, அவர்களின் சஹாபாக்களோ, தாபியீன்களோ கூறியதாக ஒரு சான்றும் கிடையாது.

இவ்வாறு ஏதேனும் ஒரு ஆண்டில் வெள்ளிக்கிழமையும், அரபா தினமும் ஒன்று சேர்ந்து வந்துவிட்டால் போதும்! அந்த ஆண்டு ஹஜ்ஜுச் செய்த ஹாஜிகளில் விபரம் புரியாதவர்கள்.

“எங்களுக்கு இந்த வருஷம் ஹஜ்ஜுல் அக்பர்-கிடைத்து விட்டது” என்று இந்த போலி ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு பெருமிதமாகப் பேசிக் கொள்வதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அவர்களுக்கு இது கப்ஸாவென்பது தெரியாது.

35.     “ஹஜருல் அஸ்வத்” என்பது அல்லாஹ்வின் வலக்கரமாகும். (மக்கள் அதைத் தொடுவதன் மூலம்) அல்லாஹ் தமது அடியார்களிடம் முஸாபாஹா கைலாகு செய்துக் கொள்கிறான்.”

இதை “அபூ பக்ரு கல்லாத்” என்பவர் தமது “ஃபுஆது” எனும் நூலிலும் இப்னு அதீ அவர்கள் “அமாலி” என்ற நூலிலும் “கதீபு” அவர்கள் “தர்ஜுமத்துல் காஹிலீ” எனும் நூலிலும் பதிவு செய்துள்ளனர்.

இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ள “இஸ்ஹாக் பின் பிஷ்ருல் காஹிலீ என்பவர் முறையானவர் அல்லர். இவர் இடைச் செருகலான அறிவிப்புகளை அறிவிப்பவர் என்பதாக தாருகுத்னீ, இப்னு அதீ, தஹபீ ஆகியோர் விமர்சித்துள்ளார்கள். ஆகவே இவ்வறிவிப்பு பலகீனமானதாகும்.

36.     “ஒருவர் “சூரத்துல்லாகிஆ” எனும் அத்தியாயத்தை ஒவ்வொரு இரவும் ஓதிவந்தால் அவரை காலாகாலத்திற்கும் வறுமை தீணடாது”.

இதை இமாம் பைஹகீ, இப்னு புஷ்ரான முதலியோர் தமது நூல்களில் “அபூ ஷுஜாஃ”, “அபூ தைபா” ஆகியோர் இப்னு மஸ்ஊத்(ரழி) வாயிலாக அறிவித்துள்ளார்கள். இதில் காணப்படும் “அபூஷுஜாஃ, அபூதைபா” இருவருமே ஹதீஸ் கலா வல்லுநர்களிடத்தில் அறிமுகமில்லாதவர்களாயிருப்பதால் இந்த அறிவிப்பாளர் தொடர் பலகீனமாயுள்ளது என்று இமாம் தஹபீ அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள். மேலும் இதன் தொடரில் துண்டிப்பு இருப்பதாக தாருகுத்னீயும், வேறு பல கோளாறுகள் இருப்பதாக ஜைலயீயும் கூறுகிறார்கள். மேலும் இவ்வறிவிப்பை இமாம் அஹ்மத், அபூ ஹாத்தம், தாருகுத்னீ, பைஹகீ ஆகியோர் ஒட்டுமொத்தமாக பலகீனமானதென்றே கூறியுள்ளார்கள்.

37.     “ஸனது உம்மத்துடைய குழப்ப காலத்தில் எனது சுன்னத்தை வழிமுறையைப் பற்றி பிடித்தவருக்கு நூறு ஷஹீத்-உயிர் தியாகிகளின் கூலியுண்டு”

இதை இப்னு அதீ, இப்னு புஷ்ரான் ஆகியோர் இப்னு அப்பாஸ்(ரழி) வாயிலாக ‘ஹஸனு பின் குதைபா” அறிவிப்பதாக பதிவு செய்துள்ளார்கள். இதில் இடம் பெற்றுள்ள மேற்காணும் “ஹஸனு பின் குதைபா’ என்பவர் பற்றி இமாம் “தஹபீ’ அவர்கள் “மீஜான்” எனும் நூலில் படுமோசமானவர் என்றும், தாருகுத்னி அவர்கள் ஒதுக்கப்பட்டவர் என்றும், “அபூஹாத்தம்” அவர்கள் பலகீனமானவர் என்றும், மற்றும் பலர் பாலவிதமாக விமர்சித்துள்ளார்கள். ஆகவே இவ்வறிவிப்பு பலகீனமானது என்பதை அறிகிறோம்.

38.    நான் எனது உம்மத்துகளின் விசாரணையை, அவர்கள் பிற சமுதாயத்தவர்கள் மத்தியில், மான பங்கப்படாதிருப்பதற்காக என்னிடத்தில் ஒப்படைத்து விடும்படி அல்லாஹ்விடத்தில் கோரினேன். அதற்கு அவன் முஹம்மதே! அவர்களிடையே ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் உம்மிடத்தில் அவர்கள் மானபங்கப் படாதிருப்பதற்காக உம்மை விட்டும் அவற்றை மறைத்து, நானே அவர்களை விசாரித்துக்கொள்கிறேன் என்று கூறிவிட்டான்.

இதை இமாம் அஹ்மத், தப்ராஸீ ஆகியோர் அனஸ்(ரழி), அவர்கள் வாயிலாக “நபீத்து பின்அம்ரு, அப்துர் ரஹ்மான் பின் அபிர் ரிஜால்” ஆகியோர் மூலம் பதிவுசெய்துள்ளார்கள். இவ்வறிவிப்பை “நபீத்து பின் அம்ரு” என்பவரைத் தவிர வேறு எவரும் அறிவிக்கவில்லை. மேலும் “நபீத்து” என்பவர் இந்த அறிவிப்பைத் தவிர வேறு எதையும் அறிவித்ததாகவும் இல்லை. ஆகவே இவற்றை அடிப்படையாகக் கொண்டு இவ்வறிவிப்பு பலகீனமானதாகும்.

“சத்தியம் வந்தது: அசத்தியம் அழிந்தது; நிச்சயமாக அசத்தியமானது அழிந்தே போகும்” (அல்குர்ஆன் 17:81)

Previous post:

Next post: