உணரப்படாத தீமை: – பொய்- 

in 1990 அக்டோபர்

உணரப்படாத தீமை:

– பொய்- 

அப்துல்லாஹ், சென்னை.

பொய் – மனித இனத்தால் மிக மிகச் சாதாரணமாக செய்யப்படும் தீமை,பொய் சொல்வது வாழ்க்கையில் இன்றியமையாதது என்ற அளவிற்கு “பொய்” மனித குலத்தால் கடைபிடிக்கப்படுகிறது.

இஸ்லாமும், மற்றைய எல்லா மதங்களும் பொய் பேசுவது தவறு என்று அறிவுரை-அறிவுரை வழங்கிய போதும், பேசப் பழகிய குழந்தைகள் முதல் இறப்பின் விளிம்பில் இருக்கும் வயோதிகர் வரை பொய் பேசுகிறார்கள்.

வாய்மை பேசுபவரைக் கண்டால் இவருக்கு என்ன பெரிய ஹரிச்சந்திரன் என்ற நினைப்போ – அல்லது இவர் என்ன ஹரிச்சந்திரனின் நேரடி வாரிசு என்ற நினைப்போ என்று ஏளனம் செய்யும் அளவிற்கு மனித சமூகம் சென்றுவிட்டது. இந்த தீமைக்கு இஸ்லாத்தை கொள்கையாகக் கொண்ட முஸ்லிம்களும் விதி விலக்கல்ல.

இஸ்லாத்தின் அடிப்படைகளாக குர்ஆன், ஹதீஸ் பொய் பேசுபவர்களுக்கு செய்யும் எச்சரிக்கையும்-உண்மை பேசுவதற்கு மனித குலத்திற்கு செய்யும் அறிவுரையும் கீழே காண்போம்.

இறைவன் தன் மறையில் கூறுகிறான்.

“நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் இன்னும் நீங்கள் உண்மை பேசக் கூடியவர்களாக ஆகிவிடுங்கள்” (அல்குர்ஆன் 9:119)

அன்றியை தினம் பொய்யர்களுக்கு கேடுதான் (32:11)

நீங்கள் உண்மையைக் கடைபிடியுங்கள். ஏனெனில் உண்மையானது நன்மையின் பக்கம் இட்டுச் செல்கிறது. நன்மையோ சுவர்க்கத்தின்பால் இட்டுச் செல்லக் கூடியதாயிருக்கிறது. ஒருவர் உண்மை பேசிக் கொண்டும், உண்மைக்காகப் பெரும் முயற்சி செய்துகொண்டும் இருப்பார். அதன் பயனாக அல்லாஹ்விடம் “ஸித்தீக்” சிறந்த வாய்மையாளர் என்று பதிவு செய்யப்பட்டு விடுகிறார். மேலும் உங்களுக்கு பொய்யை எச்சரிக்கிறேன். ஏனெனில் பொய்யானது பாவத்தின் பக்கம் இட்டுச் செல்கிறது; பாவமோ நரகத்தின் பக்கம் இட்டுச் செல்லக் கூடியதாயிருக்கிறது. ஒருவன் பொய் பேசிக் கொண்டும் அதற்காக பிரயத்தனை செய்து கொண்டுமிருந்து இறுதியாக அல்லாஹ்விடம் பொய்யன் என்பதாக பதிவு செய்யப்பட்டு விடுவான், என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு மஸ்ஊத்(ரழி) புகாரீ, முஸ்லிம்)

ஒரு முஃமினிடத்தில் பொய், மோசடி தன்மை ஆகியவற்றை தவிர மற்ற தன்மைகள் இருக்க வாய்ப்பு இருக்கிறது. (அபூஉமாமா(ரழி), அஹ்மத்).

பொய் பேசுவது நயவஞ்சகனின் குணம்

யாரிடம் நான்கு குணங்கள் உள்ளதோ அவன் ஒரு முழு நயவஞ்சகன் அவைகளாவன:

கொடுத்த வாக்குறுதியை மீறுவான்;

அமானிதத்தை மோசம் செய்வான்;

பேசினால் பொய்யே பேசுவான்;

சண்டையிடும்போது இழிமொழியில் வசைமாறி பொழிவான். என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அப்துல்லாஹ்பின் அம்ரு(ரழி), புகாரி, முஸ்லிம்)

இதில் ஒரு குணமேனும் ஒருவனிடத்தில் அந்த அளவிற்கு அவன் நயவஞ்சகன்.

மூவர் சொர்க்கத்திற்குள் நுழைய மாட்டார்கள்

மூவரிடம் கியாமத் நாளையில் அல்லாஹ் பேசமாட்டான் அவர்களின் பக்கம் கிருபையோடு பார்க்கவும் மாட்டான். அவர்களை பரிசுத்தப் படுத்தவும் மாட்டான். மேலும் அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையுமுண்டு என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூதர்(ரழி) அவர்கள் (அப்படியாயின்) நாசமடைந்து மோசம் போய் விடுவார்கள் என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் யாவர்? எனக் கேட்டார்கள்.

(1) இடுப்பில் அணியும் வேஷ்டி, கால் சட்டை முதலியவற்றை பெருமை என்ற அடிப்படையில் கரண்டை மொழிக்கும் கீழ் பூமியில் இழுபடும் வகையில் அணிந்து கொண்டிருப்பவர்.

(2) நாம் கொடுத்த தானத்தைப் பிறரிடம் சொல்லிக் காட்டுபவர்.

(3) பொய் சத்தியம் செய்து தமது வியாபாரப் பொருள்களை விநியோகிப்பவர் என்று கூறினார்கள். (அபூதர்(ரழி), முஸ்லிம்.

ஆக முஸ்லிம் சமுதாயம் வாய்மைமிக்க சமுதாயமாக விளங்க வேண்டும் என்று அல்லாஹ்வாலும் அவன் அனுப்பிய தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களாலும் விரும்பப்படுகிறது. ஆனால் இன்று வாய்மை எல்லா துறைகளிலும் புறக்கணிக்கப்படுகிறது.

அது வியாபாரம், அலுவலகம், ஆட்சி அதிகாரத்திலும் மட்டுமல்லாமல் மார்க்கத் துறையிலும் புறக்கணிக்கப்படுகிறது. மார்க்கத்துறையில் பொய்:

1) இறைவன் இல்லையென்று பொய்:

இறைவன் இல்லையென்று சொல்வதே உலகில் மிகப் பெரிய பொய் இஸ்லாத்தின் பார்வையில் இப்படி சொல்பவர்கள் தங்கள் மன இச்சைகளையே பின்பற்றுகிறார்கள். அல்லது மூதாதையர்களை-அல்லது பிற மனிதர்களையே பின்பற்றுகிறார்கள்.

இறைவன் இறைமறையில் இயம்புகின்றான்:

“இவர்கள் வெறும் கற்பனையில்தான் மூழ்கிக் கிடக்கிறார்கள் (அல்குர்ஆன் 53:28)

கற்பனை பொய்யை உறுதிப்படுத்தும், உதாரணத்திற்கு நாம் கண்ணால் கண்ட உண்மை கம்யூனிச கொள்கை. இது ஒரு கற்பனை சித்தாந்தம்-கார்ல்மார்க்ஸ் என்ற நம்மைப் போன்ற மனிதரின் (Guess Work) கற்பனைத் திட்டம் விளைவு 50 வருடத்திற்குள், உலகை உய்ய வைக்கும் கொள்கை என்று எதிர்பாக்கப்பட்ட மனிதக் கொள்கை போன இடம் தெரியவில்லை-காரணம் இறைவனின் இயற்கை சட்டத்திற்கு முரணான மனித சட்டங்கள்.

அடுத்து இறைவன் பெயரால் பொய்:

(யூதர்கள்) மனிதர்களில் சிலர் அற்பக் கிரயத்தைப் பெறுவதற்காக வேண்டி தங்கள் கரங்களால் நூலை எழுதி வைத்துக் கொண்டு பின்னர் இது அல்லாஹ்விடமிருந்து வந்ததுதான். (அல்குர்ஆன் 2:79)

என்று இறைவன் பெயரால் பொய் கூறுகிறார்கள்.

(கிறிஸ்துவர்கள்) மர்யமுடைய மகனாகிய மஸீஹ்தான் அல்லாஹ் என்று கூறுபவர்களும் நிராகரிப்பவர்களாகி விட்டார்கள். (5:72)

நிச்சயமாக அல்லாஹ் மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்களும் காஃபிர்களே. (5:73)

இப்படி கிறிஸ்துவர்கள் வேதத்தில் இஸ்லாத்தைப் பொய்யாக மிகைப்படக் கூறி வரம்பு மீறினார்கள் (5:77). அது போன்று வேதத்தை தங்கள் கரங்களால் எழுதிய யூதர்களுக்கும் கேடுதான் அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்கும் கேடுதான் என்று இறைவன் பெயரால் பொய் கூறியவர்கள் காஃபிர்கள்-மறுமையில் கண்டனை பெறுபவர்கள் என்று எச்சரிக்கின்றனர்.

அடுத்து இஸ்லாத்தின் பெயரால் பொய்:

இறைமறையைப் பற்றி பொய் சொல்வது குர்ஆனில் இல்லாத கருத்துக்கள் இருப்பதாகசொல்வது (eg. சமாதிச் சடங்கு,சூஃபியிஸம். தக்லீது) இறை வசனத்தை மறைத்துக் கூறுவது – திரித்துக் கூறுவது – ஆயத்தைப் புரட்டுவது – குழப்புவது – உள் அர்த்தம் – வெளி அர்த்தம் என்று சொல்வது – ஹலாலை ஹராமாக்குவது – ஹராமை – ஹலாலாக்குவது, அல்லாஹ் அறிந்ததை தாங்களும் அறிந்தவர்கள் – அறிஞர்கள் என்றெல்லாம் தன் வாயில் வந்ததை மறுமையைப் பற்றிய அச்சமின்றி நாகூசாமல் பொய் சொல்வது.

நபி வழியைப் பற்றி பொய் சொல்வது:

ஹதீஸில் குழப்பம் உள்ளது. ஆகவே இமாம்களை – ஆலிம்களைத் தான் மற்றவர்கள் பின்பற்ற வேண்டும் என்று பொய் சொல்வது முஹத்திஸீன்கள்(நபிமொழி விற்பன்னர்கள்) அன்றே தரம் பிரித்து சொல்லிவிட்டார்கள். இது ஆதாரப்பூர்வமானது – ஸஹீஹ் – இட்டுக்கட்டப்பட்டது மவ்ழுவு – இது பலவீனமானது ஷயீஃப் etc. என்று ஆக பின்பற்றத்தக்கது (ஸஹீஹ்) ஆதாரப்பூர்வமானதுதான். மற்றவை ஆதாரமற்றவை பின்பற்றக்கூடாது. இப்படி தெளிவாக இருந்தும் இட்டுக் கட்டப்பட்ட – பலஹீனமானவைகளை அறிந்து கொண்டே மக்களிடம் ஹதீஸ் என்று சொன்னால் அதுவும் பொய்தான்

நபி(ஸல்) அவர்கள் சொல்கிறார்கள்.

எவன் என்மீது அறிந்து கொண்டே பொய் சொல்கின்றானோ அவன் இருக்குமிடம் நரகமாகட்டும். (அபூ ஹுரைரா(ரழி), முஸ்லிம்)

இது பெரும்பாலும் எல்லா ஹதீஸ் நூல்களிலும் காணப்படும் முதவாத்திரான(அதிக நபித்தோழர்களால் அறிவிக்கப்பட்டது) ஹதீஸாகும். இஸ்லாமிய அறிஞன் மீது பொய் பேசுவது; அவர் அமானித மோசடி செய்து விட்டார். ஊழல் செய்து விட்டார் – அவர் பொய் பேசுபவர் – என்றெல்லாம் இல்லாததை இட்டுக்கட்டி சொல்வது. இவையும் பொய்தான்.

ஒரு பெண்ணின் மீதும்-அவள் கற்பின் மீதும் அபாண்டமாக பொய் பேசுவது, குறிப்பிட்ட இஸ்லாமிய அழைப்பாளர்கள் மீது பொய் பேசுவது: அந்த ஜமாஅத்தார்கள் சொல்லாததை எல்லாம் சொன்னதாக அவர்கள் மீது பொய் பேசுவது.

இவர்கள் ஸலவாத் சொல்லமாட்டார்கள்.

இவர்கள் பெருமானாரை -ஸஹாபாக்களை – இமாம்களை மதிக்கமாட்டார்கள் என்று சொல்வது. ஆதாரம் எங்கே என்று கேட்டால் திருதிருவென்று முழிப்பதுதான்-அல்லது மழுப்பல்தான். அவர்கள் எழுதிய புத்தகத்தில்-பதிவு செய்யப்பட்ட பேச்சில்- அவர்கள் எந்தக் கூட்டத்திலாவது பேசினார்களா அல்லது பத்திரிக்கைகளில் எழுதி உள்ளார்களா என்றால் மெளனம் தான் பதில்.

வியாபாரத்தில் பொய்:

அடுத்து அழியக்கூடிய உலக ஆதாயத்திற்காக வியாபாரத்தில் வாங்குபவரும் விற்பவரும் பொய் பேசுவது வாங்குபவர் முதல் தடவைதான் அந்தக் கடைக்கு வந்திருப்பார். ஆனால் அற்ப விலை குறைப்பிற்காக கடைக்காரரிடம் எப்பவும் உங்களிடம் தான் வாங்குவது என்று பொய் கூறுவது – விலையைக் கேட்ட பிறகு பக்கத்துக் கடையில் இது இன்ன விலைதானே என்று குறைத்து சொல்வது. உண்மை என்னவெனில் ஒன்று இவர் பக்கத்து கடைக்கு சென்றே இருக்க மாட்டார். அல்லது அங்கு இதைவிட விலை கூடுதலாக இருந்து, நாகூசாமல் பொய் சொல்வது விற்பவரும் இது தரமான பொருள் என்று போலியான பொருட்களை விற்பது – அதிகமான லாபத்தை வைத்துக் கொண்டு அசல் விலைக்குத்தான் உங்களுக்கு விற்கிறேன் என்று வாங்குபவரிடம் பொய் சொல்வது – பொருளில் குறை இருந்தால் மறைத்து விற்பது.

நபி(ஸல்) அவர்கள் ஒரு பொருளை விற்கும்போது அதில் இன்ன இன்ன குறைகள் இருக்கிறது என்று வெளிப்படையாக சொல்லித்தான் விற்பார்கள். அதனால்தான் அல்அமீன் நம்பிக்கையாளர் அஸ்ஸாதிக் உண்மையாளர் என்ற சிறப்புப் பெயரை நபித்துவத்திற்கு முன்பே மக்கள் அவர்களுக்கு வழங்கினர். அவர்கள் வியாபாரமும் செழித்து வளர்ந்தது.

ஒருவர் உணவுப் பொருள் விற்றுக் கொண்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் அவரிடம் சென்று நீர் எப்படி விற்கிறீர் என்று கேட்க அதற்கு அவர்(சரியாக) விற்கிறேன் என்று பதில் கூறினார். அப்போது அவர் உணவுப் பொருளுக்குள் கையை ஒட்டிப் பார்க்கும்படி நபி(ஸல்) அவர்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டது. உடனே தமது கையை அதில் ஒட்டிப்பார்த்தபோது, உள்ளே உள்ளது ஈரமாக இருந்தது. அப்போது நபி(ஸல்) அவர்கள் பிறருக்கு மோசடி செய்பவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர் என்றார்கள். (அபூஹுரைரா(ரழி), அபூதாவூது)

நாம் நினைப்பது போல் இல்லாமல் உண்மை பேசினால் வியாபாரத்தில் அபிவிருத்தி உண்டாகும் என்பது நபி(ஸல்) அவர்களின் அன்றைய காலத்தில் மட்டுமல்லாமல் இன்றைய நவீன காலத்திலும் நாம் காணும் உண்மை நிலை. இன்ன கம்பெனியின் தயாரிப்பு ஜப்பான் நாட்டின் தயாரிப்பு என்றால் விலையைப் பற்றி கவலைப் படாமல் வாங்கக்கூடிய மக்கள் ஏராளம் . அத்தகைய கம்பெனிகள் பல நூறு ஆண்டுகளுக்கு மேல் செழித்து வளர்ந்து கொண்டு தான் இருக்கின்றன என்பதையும் நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். நாம் வாங்கும் பொருட்களில் ஏமாற்றியவனை அடப்பாவி ஏமாற்றிவிட்டானே. 1 ரூபாய் 2 ரூபாய் கூட கேட்டிருந்தாலாவது கொடுத்திருப்பேனே! இப்படி தரம் கெட்ட பொருளை பொய் சொல்லி நம் தலையில் கட்டி விட்டானே இவன். ஒரு முஸ்லிமா? ஈமான்தாரியா? என்று வருந்தும் நாம் மற்றவர்களை ஏமாற்றலாமா?

நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

தான் விரும்புவதை தன்னுடைய சகோதரனுக்கும் விரும்பாதவரை ஒருவன் உண்மையுள்ள விசுவாசியாக ஆகமுடியாது. (அனஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்)

நீதியை நிலைநாட்ட வேண்டிய வக்கீல்கள் பொய் சொல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. வக்கீல் தொழில் இப்படி பல்வேறு வகையான பொய்கள் வியாபாரத்தில் சொல்லப்படுகிறது. உத்தியோகத்தில் பொய். அது மட்டுமல்ல அரசுத் துறையில் வேலை பார்ப்பவர்கள்-எழுத்தர்கள்-டாக்டர்கள்-எஞ்சினியர்கள்-வக்கீல்கள் பெரும்பாலோர் பொய் சொல்கிறார்கள். வக்கீல் தொழில் பொய் இல்லாமல் வக்கீல் தொழில் செய்ய முடியாது என்று சர்வசாதாரணமாக சொல்வார்கள். பொய் சொல்லித்தான் அந்தத் தொழில் நடத்த வேண்டுமென்றால் அது தேவையில்லை.

இப்படி சொல்லிக் கொண்டே போனால் எல்லோரும் தாங்கள் செய்யும் தவறுகளுக்கு ஒரு நியாயத்தை சொல்லத்தான் செய்கிறார்கள். பொய் சொல்லித்தான் வக்கீல் தொழில் செய்யவேண்டும் என்றால் நீதி மன்றமே தேவையில்லையே. மேலைநாட்டவர்கள் மது அருந்துவது உடல் உஷ்ணத்தை ஏற்படுத்துவதற்காகத்தான் என்று நியாயம் சொல்கிறார்கள். பம்பாயில் விபச்சார விடுதி இல்லையேல் ரோட்டில் குடும்டபப் பெண்கள் எல்லாம் கற்பழிக்கப்படுவார்கள். ஆகவே விபச்சார விடுதி தேவைதான். இது தேவைப்படுவோருக்கு ஒரு Outlet. இதுதான் பம்பாய் நகரத்தையே ஒழுக்கமுள்ளதாக இருக்கச் செய்கிறது. இதன் அடிப்படையிலேயே விபச்சாரம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று நியாயம் சொல்கின்றார். பம்பாயின் உயர்தர போலீஸ் அதிகாரி.

பொய் பேசினால்தான் எங்கள் தொழில் நடக்கும். ஆகவே நாங்கள் என்ன செய்வது என்று ஒரு முஸ்லிம் வக்கீல் சொன்னால் அது கோழைத்தனத்தின் அடையாளம். ஆக இதுபோன்று எஞ்சினியர்கள் கொடுத்த Contractஇல் தரமில்லாத பொருட்களினாலும் – ஏமாற்று வேலைகளை செய்து அதை சரிகட்ட அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் லஞ்சம் கொடுத்து பொய் சொல்லி சம்பாதிக்கின்றார்கள். டாக்டர்களும் வாங்கும் சம்பளத்திற்கு ஒழுங்காக வேலை செய்யாமலும் அரசாங்க மருந்துகளில் பல தவறுகளைச் செய்தும் தவறான Certificate இன்னும் பல பொய்யான வகையில் பொருள் ஈட்டுகின்றனர்.

புகழ்வதில் பொய்:

கஞ்சனை பிரவு என்றும்-சில்லரை தர்மம் செய்தவனை தீதக்காதி என்றும்-கோழையை வீரன் என்றெல்லாம் புகழ்வது, ஆட்சியில் உள்ளவர்களை புகழ்வதைப் பற்றி சொல்லத் தேவையில்லை. மாண்பில்லாத – மானமில்லாத அரசயில்வாதிகளை மாண்புமிகு, மானமிகு என்று அடைமொழி இட்டு அழைக்காதவர்கள் இல்லை. இதுதான் அவர்களை புகழ்வதிலும் எல்லை இல்லை. பணக்காரர்கள் அவர்களின் கடமையை நிறைவேற்றும் வகையில் ஏழைகளுக்கு உதவ அவர்களை அவர்கள் முன்னிலையிலேயே உங்களை விட்டால் இப்படிப்பட்ட உதவி செய்ய உலகில் யாரும் இவர்-நீங்கள் தான் இறை இல்லக் கொடை வள்ளல் என்றெல்லாம் நல்ல காரியம் செய்பவர்களை அளவுக்கதிகமாக புகழ்வதால் அவர்களையும் அறியாமல் அவர்களிடம் (கிபுர்) ஆணவம் வந்தவிட நாம்தான் காரணமாகி விடுகின்றோம்ட. அதனால்தான்

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஒரு ஸஹாபி இன்னொரு ஸஹாபியை புகழ்வதைப் பார்த்த நபி(ஸல்) அவர்கள் நீர் உம்முடைய சகோதரின் தலையைக் கொய்துவிட்டீர் என்றார்கள். நேரடியாக அளவுக்கதிகமாக புகழ்வது அவனை கொலை செய்வதற்கு சமம். (அபூபக்ரா – புகாரீ, முஸ்லிம்)

மேலும் யாராவது உங்களை புகழ்ந்தால் அவன் முகத்தில் மண்ணை அள்ளி வீசுங்கள் என்றார்கள் நபி(ஸல்) அவர்கள். (மிக்தாத்பின் அஸ்வத் – முஸ்லிம்)

ஆக தவறான புகழ்ச்சி மனிதனை அழித்துவிடும். புகழும்போது நிதானம் தேவை – உள்ளதைச் சொல்ல வேண்டும். அந்த மனிதரையும் அவருக்கு இந்த நல்ல மனதை தந்த இறைவனையும் புகழ்வதுதான் நபிவழியாகும்.

சாட்சி சொல்வதிலும் பொய்:

இறைவன் இறைமறையில் இயம்புகின்றான்.

ஈமான் கொண்டவர்களே நீதியை நிலைநிறுத்துவதில் இறைவனுக்கு உறுதியான சாட்சியாக இருங்கள்-அது உங்களுக்கோ – பெற்றோருக்கோ – உறவினர்க்கோ பிடித்தவர்களுக்கோ எதிரா இருந்தாலும் சரியே. (4:135)

மக்ஜீமிய்யாவெனும் குடும்பத்தைச் சார்ந்த பெண் ஒருவன் திருடி விட்ட விஷயம் சஹாபாக்களுக்கு பெரும் பிரச்சனையாகி விட்டது. இது விஷயமாக நபி(ஸல்) அவர்களிடம் பரிந்துரைப்பது யார் என்பதாக பேசிக் கொண்டிருந்தனர். உஸாமத்து பின் ஜைத்(ரழி) அவர்களே இது வகையில் துணிந்து நபி(ஸல்) அவர்களிடம் சென்று பரிந்துரைத்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் சட்டத்தை நிறைவேற்றும் விஷயத்தில் பரிந்துரைக்கிறீர் என்று கூறி எழுந்து நின்று பிரசங்கம் செய்தவர்களாக, உங்களுக்கு முன் உள்ளோர் நாசமாக்கப்பட்டதற்குக் காரணமே அவர்களில் செல்வாக்குள்ளவன் திருடிவிட்டால் அவனை விட்டுவிடுவார்கள். அவர்களில் இயலாதவன் திருடிவிட்டால் உடனே அவனைத் தண்டித்து விடுவார்கள் என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் மீது ஆணையாக முஹம்மதுடைய மகள் பாத்திமா திருடிவிட்டால் அவனது கையையும் துண்டித்து விடுவேன் என்றார்கள். (ஆயிஷா(ரழி), புகாரீ, முஸ்லிம்)

ஆனால் இன்று நாமோ எந்த விஷயத்திலும் அட இவன் நம்ம ஊர்க்காரன்-ஜாதிக்காரன்-நம்ம பகுதி – நம்ம இனத்தான்-சொந்தக்காரன்-நம்ம கொள்கைக்காரன்-கூட்டம் என்றெல்லாம் எண்ணி நீதிக்கு புறம்பாக சாட்சியும்-தீர்ப்பும் வழங்குவது. தவ்ஹீத்வாதிகளும் குர்ஆன் ஹதீஸ் கொள்கையைக் கொண்டவர்கள் செய்யும் தவறை மிகவும் சாதாரணமாக நினைத்து மூடி மறைப்பது – மற்றவர்கள் அதைச் செய்தால் ஏதோ பெரிய தவறை செய்தவர் போல. வன்மையாக கண்டிப்பது. இந்த அணுகுமுறை தவறு என்று யாரும் சுட்டிக்காட்டினால் அவர்களை வசைபாடுவது, நம்முடைய ஒற்றுமையைக் குலைக்க வந்த சண்டாலன்-துரோகி என்றெல்லாம் சொல்லும் தவ்ஹீத்வாதிகளையும் நாம் காணத்தான் செய்கிறோம்.

ஆனால் இறைவனோ ஏழை-பணக்காரன் என்றோ சொந்தம்-பந்தம் என்றோ பார்ப்பதில்லை. நல்லவன் தீயவன் என்ற பாகுபாட்டைத்தான் பார்க்கிறான். அதைத்தான் திருமறையில் விளம்புகின்றான்.

உங்களில் தக்வா (பயபக்தி) உடையவர்கள் தாம் இறைவனிடம் உயர்வானவர்கள். (குர்ஆன் 50:13)

மேலும் இறைவன் கூறுகின்றான்.

நீங்கள் உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். (குர்ஆன் 2:42)

ஒரு விஷயத்தில் ஒருவருடைய சாட்சி தேவை. ஆனால் அவரோ நமக்கேன் வம்பு என்று மெளனமாக இருப்பதோ – அல்லது நமக்கு வேண்டப்பட்டவராயிற்றே அவருக்கு எதிராக சொல்ல வேண்டி வரும் என்பதால் மெளனமாக இருப்பதும் பொய்தான். பொய்யான சாட்சியைப் போன்று உண்மை சாட்சியை மறைப்பதும் தவறுதான். ஏனெனில் நிரபராதி தண்டிக்கப்பட்டு – குற்றவாளி விடுதலை ஆக்கப்படுவதற்கு நாம் தான் காரணமாக இருக்கின்றோம்ட. அது போன்றே அநீதி. ஆக ஒரு முஸ்லிம் எந்தவொரு விஷயத்திலும் உண்மையைத் தான் உரைக்கவேண்டும்-நீதிக்குத்தான் துணை போக வேண்டும். முஸ்லிமிடம் எல்லா விஷயங்களுக்கும் இஸ்லாம் வாய்மையைத்தான் எதிர்பார்க்கிறது. இஸ்லாம் தமாஸுக்காக, கேளிக்கைக்காக பொய் சொல்வதைக் கூட அனுமதிக்கவில்லை.

அடுத்தவனை மகிழ்விப்பதற்காக பொய் சொல்பவன் அழிந்து போகட்டும் என்றார்கள் நபி(ஸல்) அவர்கள். (பஹ்ஜம் பின் ஹகீம்,

குழந்தைகளிடம்  கூட  பொய்  சொல்லக்கூடாது.

இன்று எத்தனையோ பெற்றோர்கள் குழந்தைகளை வீட்டிற்குள் அழைப்பதற்கோ – அல்லது உணவை ஊட்டுவதற்காகவோ உனக்கு அது வாங்கித் தருகிறேன். இது வாங்கித் தருகிறோன் என்று சொல்கிறார்கள். அந்த காரியம் நிறைவேறிய பின் குழந்தைகளுக்கு ஒன்றும் கொடுப்பதில்லை. இதுவும் தவறுதான். இப்படிப்பட்ட செயல் குழந்தைகளுக்கு நாமே பொய் சொல்லக் கற்றுக் கொடுப்பதாகும். அந்த குழந்தை என்ன நினைக்கிறது இப்படி, சொல்லி விட்டு, பின்பு அப்படி எதுவும் செய்யாமலிருப்பது தவறில்லை என்று நினைத்து அதுவும் கடைபிடிக்கின்றது. இதை நபி(ஸல்) அவர்கள் வன்மையாக கண்டிக்கவும் செய்தார்கள்.

ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் ஒரு வீட்டிற்கு விருந்துருக்குச் சென்றிருந்தார்கள். அந்த வீட்டு அம்மையார் வெளியில் உள்ள தனது குழந்தையை வா உனக்கு ஒன்று தருகிறேன் என்று அழைத்தார்கள். அப்பொழுது நபி(ஸல்) அவர்கள் அவரிடம் உமது குழந்தைக்கு என்ன கொடுக்கப் போகின்றேன் என்றார், அதற்கு நபி(ஸல்) அவர்கள் அப்படி செய்யாவிட்டால் உம்மீது ஒரு பொய் பதிவு செய்யப்படும் என்றார். (அப்துல்லாஹ்பின் ஆமிர்(ரழி), அபீதாவூத், பைஹகீ)

சம்பிரதாயத்திற்காக பொய் சொல்வதையும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை சம்பிரதாயத்திற்காக ஒருவரை விருந்துக்கு அழைப்பதும் சம்பிரதாயத்திற்காக அழைக்கப்பட்டவர் மறுப்பதும் பொய்தான். இத்தகைய பொய்யையே இஸ்லாம் அனுமதிக்கவில்லையென்றால், வியாபாரத்திலும்-உத்தியோகத்திலும் இன்ன பிற கொடுக்கல் வாங்கவிலும் பொய் சொல்வதின் நிலை என்ன என்பதை முஸ்லிம்களாகிய நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஒருமுறை நபி(ஸல்) அவர்களுக்கு பால் கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்கள் எங்களிடம் சாப்பிடும்படி கூறினார்கள். அதற்கு நாங்கள் எங்களுக்கு விருப்பமில்லை என்றோம். அதற்கு அவர்கள் நீங்கள் பசியையும், பொய்யையும் சேர்த்துக் கூறாதீர்கள் என்றார்கள். (அஸ்மா பின்து யஜீத்(ரழி), இப்னு மாஜ்ஜா)

பொய் நிச்சயம் நிலைக்காது.

இறைவன் கூறுகிறான்.

சத்தியம் வந்தது – அசத்தியம் அழிந்தது – நிச்சயமாக அசத்தியம் அழிந்தே போகும். (குர்ஆன் 17:81)

ஆகவே பொய் தற்காலிக வெற்றிதானே தவிர நிரந்தர வெற்றியல்ல. இதனால் சமுதயாத்தில் பித்கள்-குழப்பங்கள் – அமைதியின்மை-அவதூறுகள்-உறவு கேடுகள் – எல்லாம் உற்பத்தி செய்யப்படுகின்றன. இத்தகைய படுபாதக விளைவுகளை ஏற்படுத்தும் பொய்யை நாம் விட்டுவிட வேண்டும். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

எவன் பாவம் செய்துகொண்டே இருக்கின்றானோ அவன் உள்ளத்தில் ஒரு கரும்புள்ளி விழுகிறது. நாள்வட்டத்தில் அவன் உள்ளம் முழுவதுமே இருளாகி கருப்பாகி விடுகின்றது. (அபூஹுரைரா(ரழி)-திர்மிதி)

இத்தகைய பொய்யிலிருந்து நம்மையும் – உற்றார் – உறவினர்- சமூகத்தையும் காப்பாற்ற இறைவன் அருள்புரிவானாக.

Previous post:

Next post: