ஐயமும், தெளிவும்
ஐயம்: நபி(ஸல்) அவர்கள் வெயிலில் நடந்தால் அவர்களின் நிழல் கீழே விழுவதில்லை காரணம் அவர்களுக்கு மேகம் குடை பிடித்துக் கொண்டிருந்தது என்று கூறுகிறார்களே இது உண்மையா! பி.ஷாஹுல் ஹமீது, கோவை.
தெளிவு: தாங்கள் கூறுவதுபோல், நபி(ஸல்) அவர்களின் நிழல் பூமியில் விழுவதில்லை என்பதற்கும், இவ்வாறே அவர்கள் மணலில் நடந்து சென்றால் பாதம் பூமியில் பதிவதில்லை. பாரையில் அவர்கள் நடந்து செல்லும் போது பாதங்கள் அதில் பதியும் என்றெல்லாம் நபி(ஸல்) அவர்களைப் பற்றி கூறப்படும் கூற்றுக்கள் அனைத்தும் கப்ஸாவும், கதையளப் புகளுமே தவிர ஸஹீஹான ஹதீஸ்களில் இவற்றிற்குச் சிறிதும் ஆதாரமில்லை.
ஐயம்: ஒருவர் தமது மனைவியைத் “தலாக்” என்றோ, “முத்தலாக்” என்றோ கூறிய பின்னர் மீண்டும் அவன் அவருடைய வீட்டிற்கு வந்தால் சேர்த்துக் கொள்வது கூடுமா? ஷேக் மீரான், பத்ராவதி.
தெளிவு: ஒரே நேரத்தில் எத்தனை “தலாக்” சொன்னாலும் அவற்றை ஒரு தலாக் என்பதாகவே கணிக்கப்படும். இவ்வாறு தலாக் கூறப்பட்ட பெண் அவருடைய 3 துஹ்ரு (மாதவிடாய் நீங்கி சுத்தமாயிருக்கும் காலம்) முடியும் வரை எவ்வித நிபந்தனையுமின்றி மீட்டிக் கொள்வது ஆகும். மேற்கூறப்பட்டுள்ள தவணை கழிந்து விட்டால் திருமண உறவை-நிகாஹ்வைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஒரு நபித்தோழர் தமது மனைவியை நோக்கி, “நான் உன்னை நிரந்தரமாக “தலாக்” கூறி விடமாட்டேன் என்றார். அதற்கு அவர் மனைவி அவ்வாறு எப்படி உங்களால் செய்ய முடியும்? என்று கேட்க, அதற்கு அவர், உன்னை நான் “தலாக்” சொல்லிவிட்டு உனது தவணை முடியும் தருவாயில் மீட்டிக் கொள்வேன்” என்றார். உடனே அப்பெண் நபி(ஸல்) அவர்களிடம் வந்து இந்த விஷயத்தை எடுத்துக் கூறியபோதுதான், பின்வரும் வசனம் அருளப்பட்டது.
(மீட்டிக்கொள்வதற்கான) தலாக் இரண்டு முறைகள் நாம் கூறலாம். பின் (தவணைக்குள்) முறைப்படி கணவன், மனைவியாகச் சேர்ந்து வாழலாம். அல்லது நேர்மையான முறையில் பிரிந்து போக விட்டுவிடலாம். (2:229)
மீட்டமுடியாதவாறு (அதாவது இரண்டு தடவை “தலாக்” சொன்ன பின்னர் மூன்றாம் “தலாக்” சொல்லிவிட்டால் கணவன் அப்பெண்ணை மறுமணம் செய்துகொள்ள முடியாது. ஆனால் அவன் வேறு ஒருவனை மணந்து, அவனும் அவனைத் தலாக் சொல்லிவிட்டால், அதன்பின்னர் (முதற்) கணவன் – மனைவி சேர்ந்து வாழ நாடினால்-அதன் மூலம் அல்லாஹ்வுடைய வரம்புகளை நிலை நிறுத்த முடியும் என்று எண்ணினான் அவர்கள் இருவருமே (மறு மணம் செய்துகொண்டு மண வாழ்வில்) மீளுவது குற்றமில்லை. (2:220)
நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில் யாதொரு நபித்தோழரும், தமது மனைவியை நோக்கி ஒரே நேரத்தில் மூன்று தலாக் கூறி அதனை நபி(ஸல்) அவர்கள் மூன்றாக கணித்தார்கள் என்பதற்காக ஆதாரம் ஏற்கத் தக்க வகையிலுள்ள எந்த ஹதீஸிலும் கிடையாது என்பது தெளிவு. இதற்கு மாற்றமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்துமே ஹதீஸ் கலாவல்லுநர்களின் ஏகோபித்த முடிவின்படி பலகீனமானவையாகவும், ஏன் இட்டுக் கட்டப்பட்டவையாகவுமே உள்ளன. ஆனால் ஸஹீஹ் முஸ்லிமிலும், மற்றும் ஸுனன்கள், முஸ்னதுகள் ஆகியவற்றில் ஆதாரமாகக் கொள்ளப்படும் வகையில் கீழ்காணும் ஸஹீஹான ஹதீஸ் ஒன்று இடம் பெற்றிருப்பதை எவராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. அதாவது இப்னு அப்பாஸ்(ரழி), அவர்கள் கூறியுள்ளதாக “தாவூஸ்” அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
“தலாக்” என்பதானது நபி(ஸல்) அவர்களின் காலத்திலும், அபூபக்ரு(ரழி) அவர்களின் ஆட்சிக்காலத்திலும், உமர்(ரழி) அவர்களின் ஆட்சி காலத்தில் இரண்டு ஆண்டுகளிலும் ஒரே சந்தர்ப்பத்தில் கூறப்படும் மூன்று தலாக்கள் ஒன்றாகவே கணிக்கப்பட்டுவந்துள்ளன. பின்னர் மக்கள் நிதானமாக நடக்க வேண்டிய விஷயத்தில் (நிதானமிழந்து) அவசரப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே அதை (அவர்கள் அவசரப்பட்டு ஒரே சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் கூறுவதை) நாம் செல்லுபடியாக்கினோமானால் அவர்கள் மீது அது செல்லுபடியாகிவிடும் என்று உமர்(ரழி) அவர்கள் (முறைகேடாக தலாக் சொல்பவர்களை எச்சரிக்கும் வகையில்) கூறினார்கள். இப்னு அப்பாஸ்(ரழி) முஸ்லிம்.
ஒரு முறை “ரகாத்துபின்அப்துல்யஜீத்” எனும் நபித்தோழர் தமது மனைவியை ஒரே சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் கூறிவிட்டு பின்னர் அதற்காக கடுமையான கவலை அடைந்தார். அப்போது அவரிடம் நபி(ஸல்) அவர்கள் “நீர் அப்பெண்ணை எவ்வாறு தலாக் கூறினீர் என்று கேட்க, அதற்கு அவர் அப்பெண்ணை மூன்று முறை தலாக் கூறிவிட்டேன் என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி, “ஒரே சந்தர்ப்பத்திலா?” என்று கேட்டதற்கு அவர் “ஆம்” என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவ்வாறெனில் அதுவெல்லாம் (சேர்த்து) ஒரு தலாக்தான். உமக்கு விருப்பமிருப்பின் அப்பெண்ணை நீர் மீட்டிக் கொள்வீராக! என்றார்கள். இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறுகிறார்கள் (அதன்படி அப்பெண்ணை மீட்டிக் கொண்டார். (இப்னு அப்பாஸ்(ரழி), முஸ்னத் அஹ்மத்)
முஸ்லிமில் காணப்படும் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களின் வாயிலாக அறிவிக்கப்படும் மற்றொரு ரிவாயத்தில் “அபுஸ் ஸஹ்பாஃ” (ரழி) அவர்கள் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களை நோக்கி, நபி(ஸல்) அவர்களுடைய காலத்திலும், அபூபக்ரு(ரழி) அவர்களின் காலத்திலும், உமர்(ரழி) அவர்களின் மூன்றாண்டிலும் மூன்று தலாக் என்பதை ஒன்றுதான் என்று கணிக்கப்பட்டு வந்தது உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்க, அதற்கு இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் “ஆம்” அதை நான் நன்கு அறிவேன். அது அவ்வாறு தான் இருந்தது என்றார்கள். ஆனால் உமர்(ரழி) அவர்களின் காலத்தில் மக்களிடையே முறைகேடாக ஒரே சந்தர்ப்பத்தில் மூன்று தலாக்குகள் கூறும் நிலை அதிகரிப்பதைக் கண்ட அவர்கள் (மக்களை அந்த முறைகேட்டிலிருந்து தடுக்கும் நோக்கத்தோடு) ஒரே சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் கூறினால் அது மூன்று தலாக்காகவே ஆகிவிடும் என்பதாக உமர்(ரழி) அவர்கள் அக்காலத்தவர் மீது செல்லுபடியாக்கினார்கள் என்று இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறினார்கள். (தாவூஸ்(ரழி), முஸ்லிம்)
மேற்காணும் அறிவிப்புகளில் நபி(ஸல்) அவர்கள் காலத்திலும், அபூபக்ரு(ரழி) அவர்கள் காலத்திலும், ஏன் உமர்(ரழி) அவர்களின் இரண்டு, மூன்று ஆண்டுகளிலும் ஒரே சந்தர்ப்பத்தில் மூன்று தலாக்கள் கூறப்பட்டால் அவற்றை ஒரு தலாக்தான் என்று கணிக்கப்பட்டு வந்திருக்கும்போது, ஒரே சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் கூறினால் அது மூன்று தலாக்காகவே ஆகிவிடும் என்று மக்களின் தவறான போக்கைத் தடுக்கும் வகையில் உமர்(ரழி) அவர்கள் சுயமாக கூறியிருப்பதைக் காணுகிறோம்.
ஆனால் உமர்(ரழி) அவர்களின் இச்செயலை மேலுள்ள ஹதீஸில் காணப்படும் “அபுஸ் ஸஹபாஸ்” (ரழி) அவர்கள் உள்பட அநேக நபித்தோழர்களும் மற்றும் தாபியீன்களும் ஆட்சேபித்துள்ளார்கள். சட்ட ஒழுங்கை நிலை நிறுத்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை உமர்(ரழி) அவர்கள் செய்ய என்ன அதிகாரம் இருக்கிறது என்று கண்டனம் செய்துள்ளார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்:
மூமின்களே! அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள். மேலும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களின்(நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களிடையே ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால்-மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் அதை அல்லாஹ்விடமும்(அவன்) தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள். இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாயிருக்கும். (4:59)
மேலும் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்றிக் கட்டளையிட்டுவிட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (33:36)
மேற்காணும் வசனத்தில் நம்மிடையே மார்க்க விஷயத்தில் பிணக்கு ஏற்பட்டு விட்டால் உடனே அதை அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள் என்று கூறியிருப்பதானது, உடனே குர்ஆனிலிருந்தும், ஹதீஸிலிருந்தும் எந்த விஷயத்தில் பிணக்கு ஏற்பட்டுள்ளதோ அந்தப் பிரச்சணைக்கு என்ன முடிவு என்பதைத் தெரிந்து, அதற்கேற்ப செயல்படுங்கள் என்ற கருத்தில் கூறப்பட்டதாகும்.
ஆகவே ஒருவர் ஒரே சமயத்தில் மூன்று தலாக் கூறிவிட்டால் அது ஒரு தலாக்காகவே கணிக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்பதாக “ரகானத்துபின் அப்து யஜீத்” எனும் நபித்தோழருடைய சம்பவம் முஸ்னத் அஹ்மதில் இடம் பெற்றிருப்பதோடு, நபி(ஸல்) அவர்களுடைய காலத்திலும், அபூபக்ரு(ரழி) அவர்களின் காலத்திலும் ஏன் உமர்(ரழி) அவர்களின் ஆட்சி காலத்தில் முதல் இரண்டு, மூன்று வருடங்களிலும் இவ்வாறே ஒரே சந்தர்ப்பத்தில் கூறப்பட்ட மூன்று தலாக் ஒரு தலாக்காகவே கணிக்கப்பட்டு வந்திருக்கும்போது, அதன் பின்னர் ஒரே சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் கூறினால் அது மூன்று தலாக்காக ஆகிவிடும் என்று கூறுவதற்கு யாருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? மார்க்க விஷயமாக சட்டம் இயற்றுவதற்கு அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் எந்த அதிகாரமுமில்லை. அல்லாஹ்வின் தூதரும் அல்லாஹ் கூறிய சட்டத்தை மக்களுக்கு எடுத்துக் கூறித்தான் அதிகாரம் பெற்றுள்ளார்களே தவிர சுயமே-தன்னிச்சையாக யாதொரு சட்டத்தையும் கொண்டு வருவதற்கு அதிகாரம் உள்ளவர்கள் அல்லர்.
ஐயம்: அந்நஜாத்தில் காதணிகள் அணியக்கூடாது என்பதாக எழுதப்பட்டிருந்தது. ஆகவே ஒட்டுத்தோடு, கம்மல் முதலியவை அணிந்து கொள்வது ஆகுமா? சகோதரி ஸாஜிதா, கமுதி.
தெளிவு: ஒரு முறை இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்களுடன் நீங்கள் பெருநாளில் இருந்துள்ளீர்களா? என்று கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் “ஆம்” என்று கூறிவிட்டு நபி(ஸல்) அவர்கள் பெருநாளன்று புறப்பட்டு (பெருநாள் தொழுகை) தொழுதார்கள். பின்னர் குத்பா – பிரசங்கம் செய்தார்கள். ஆனால் பாங்கு, இகாமத், எதுவும் சொல்லவில்லை. பின்னர் பெண்கள் பகுதிக்கு வந்து அவர்களுக்கு உபதேசம் செய்துவிட்டு அவர்களை ஸதகா தர்மம் செய்யும்படி ஏவினார்கள். அப்போது அப்பெண்கள் தமது காதுகளிலும், கழுத்துக்களிலும் உள்ளவற்றைக் குனிந்து கழற்றி பிலால்(ரழி) அவர்களிடம் கொடுத்தார்கள். பிறகு அவர்களும் கழற்றி பிலால்(ரழி) அவர்களிடம் கொடுத்தார்கள். பிறகு அவர்களும் பிலால்(ரழி) அவர்களும் அவர்களின் வீட்டுக்கு எடுத்துச் சென்று விட்டார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி) புகாரீ, முஸ்லிம்)
புகாரீயின் அறிவிப்பில் அப்பெண்கள் தமது காது வலிகளையும் மோதிரங்களையும் கழற்றிக் கொடுத்தார்கள் என்பதாக உள்ளது. ஆகவே மேற்காணும் ஸஹீஹான ஹதீஸ்களில் சஹாபா பெண்கள் தமது காதுகளைக் குத்தி வாலி போட்டுக் கொள்வது ஆகும் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. ஆகவே வாலி மட்டுமின்றி தாங்கள் கேட்டிருப்பது ஒட்டுத்தோடு அன்றியே காது குத்தி, தோடு, கம்மல் முதலிய நகைகள்ட போட்டுக் கொள்வதை மார்க்கம் தடை செய்யவில்லை என்பதை அறிகிறோம். ஆரம்பத்தில் அந்நஜாத்தில் காது குத்தக் கூடாது என்ற கட்டுரை தவறுதலாக இடம் பெற்று விட்டது.
ஐயம்: அந்நஜாத்தில் வெளிவரும் “நபி வழியில் நம் தொழுகை” பகுதி ஆண்களுக்கு மட்டும்தானா? சகோதரி ஷபானா, கமுதி.
தெளிவு: ஏன் “நபி வழியில் நம் தொழுகை” எனும் பகுதி ஆண், பெண் இரு சாராருக்கும் பொதுவானதுதானே? நபி(ஸல்) அவர்கள் ஆண்களுக்கு ஒரு விதமாகவும், பெண்களுக்கு ஒரு விதமாகவும் தொழுகையைக் கற்றுக் கொடுக்கவில்லை. பொதுவாக “நீங்கள் என்னை எவ்வாறு தொழ கண்டீர்களோ அவ்வாறு நீங்களும் தொழுங்கள்” (மாலிக்குப்னுல் ஹுவைரிஸ்(ரழி) புகாரீ, முஸ்லிம்) என்று அவர்கள் கூறியுள்ள ஹதீஸே இருசாராரின் தொழுகையிலும் வித்தியாசம் இல்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது. மத்ஹபுவாசிகள் தொழுகையில் சில விஷயங்களில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் வித்தியாசம் இருப்பதாக அவர்களின் நூல்களில் தன்னிச்சையாக எழுதி வைத்துள்ளார்கள். அவற்றிற்கு ஹதீஸ்களின் ஆதாரமில்லை.
ஐயம்: நபி(ஸல்) அவர்கள் தொடர்ந்து எத்தொழுகையிலும் “குனூத்” ஓதவில்லை என்பதை ஹதீஸ்களின் வாயிலாக நாம் அறிந்திருக்கிறோம். இப்போது யுத்த அபாயம் ஏற்பட்டிருப்பதை முன்னிட்டு வாரத்திற்கு இரு முறை மஃரிபு தொழுகையின் மூன்றாவது ரகாஅத்தில் குனூத்து ஓதி வருகிறார்கள். இவ்வாறே ஒரு சில பள்ளிகளில் மஃரிபு, இஷா ஆகிய இரு நேரத் தொழுகைகளிலும் ஓதுகிறார்கள். சில பள்ளிகளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஓதுகிறார்கள். இது சரியா? Y.A. கலீலுர் ரஹ்மான், மக்கா.
தெளிவு: யுத்த அபாயம் போன்ற நேரங்களில் குனூத் ஓதுவது மிகமிகப் பொருத்தமாகும். நபி(ஸல்) அவர்கள் கூட சந்தர்ப்பத்தில் “நமது சில தொழுகையில் அரபியர்களின் சில குடும்பத்தவரை சபித்து குனூத்து ஓதினார்கள் எனும் ஹதீஸ் அபூஹுரைரா(ரழி) வாயிலாக புகாரீ, முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது. இதன்படி மக்காவில் குனூத்து ஓதப்படும் முறை சரியானதாகும்.