மெளலூது

in 1990 செப்டம்பர்

மெளலூது

 அபூ அப்தில்லாஹ்

ரபீஉல் அவ்வல் மாதம் பிறந்துவிட்டது. பெரும்பாலான பள்ளிகளிலும், வீடுகளிலும் நபி(ஸல்) அவர்களின் பெயரால் ்’சுபுஹான மெளலூது” வெகு பக்திசிரத்தையோடு ஓதப்படும். பலர், தேக்ஷாக்களில் பிரியாணி ஆக்கி பெரும் விருந்து நடத்துவர். ஆக சுபுஹான மெளலூது ஓதுவதால் தங்கள் தொழில்களிலும் வீடுகளிலும் விளை நிலங்களிலும் “பரகத் சொரியும் என்பது இவர்களின் நம்பிக்கை. தங்களை உண்மையான முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்ளும் இவர்கள் இப்படி மெளலூது ஓதுவதற்குரிய ஆதாரத்தை எங்கிருந்து பெற்றார்கள் என்று கேட்டால் அது அவர்களுக்கே தெரியாது. குறைந்தபட்சம் அந்த “சுபுஹான மெளலூது யாரால் எக்காலத்தில் இயற்றப்பட்டது என்றாவது தெரியுமா? அதுவும் தெரியாது. “சுபுஹான மெளலூது” என்றால் அதன் பொருள் என்ன? ஊஹும் அதும் தெரியாது.

மெளலூது ஓதும் உண்மை முஸ்லிம்களின் நிலை இப்படியா இருக்க வேண்டும். பேர் ஊர் தெரியாத ஒரு நபரால் கற்பனையாகக் கட்டிவிடப் பட்டது; அதுவும் கொச்சையான அரபு மொழியில் எழுதப்பட்டது. இவர்களிடம் குர்ஆனை விடச் சிறப்புக்குரியதாக ஆகிவிட்டது என்றால் இதனை எங்கேப் போய் சொல்லுவதோ? இந்த முஸ்லிம் சமுதாயம் இப்படியா சீரழிய வேண்டும்? சத்திய வேதமான குர்ஆனையும், இவ்வளவு அழகிய நடைமுறைகளைக் கொண்ட முஹம்மது(ஸல்) அவர்களை இறுதி நபியாகவும் பெற்ற சிறந்த உம்மத்-முஸ்லிம் உம்மத் இப்படியா அலங்கோலப்பட வேண்டும். “சுபுஹான மெளலூது” என்ற தலைப்பே எப்படி குர்ஆன், ஹதீஸுக்குப் பொருத்தமில்லாமல் இருக்கின்றதோ அதேப் போல் அதனுள்  இருக்கும் பக்தியோடு ஓதப்படும் கவிகளிலும் குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் பொருத்தமில்லாத பல வரிகள் இடம் பெற்றுள்ளன. அல்லாஹ்வை மட்டும் அழைத்துச் சொல்ல வேண்டிய அல்லாஹ்வுக்குரிய தனித்தன்மைகளை நபி(ஸல்) அவர்களை அழைத்துச் சொல்லும்படியாக அந்த பெயர் ஊர் தெரியாத கவிஞன் தன் நச்சுகவிகளில் பாடி வைத்துள்ளான். அதன் மூலம் இந்த முஸ்லிம் சமுதாயத்திலுள்ள பலரை, அவர்கள் அறியாமலேயே அல்லாஹ்வுக்கு இணை வைக்கும்  மாபாதக செயலுக்கு ஆளாக்கி உள்ளான். கிறிஸ்தவர்கள் எப்படி ஈஸா(அலை) அவர்களை அவர்களின் மனித அந்தஸ்தைவிட உயர்த்திப் புகழ்ந்து அல்லாஹ்விற்கு இணை வைக்கும் குற்றத்தைச் செய்கின்றனரோ அதேப் போல் இந்த முஸ்லிம்களும் நபி(ஸல்) அவர்களை மனித அந்தஸ்தை விட உயர்த்திப் புகழ்ந்து, மெளலூதுப் பாக்களில் பாடி அல்லாஹ்விற்கு இணை வைக்கும் அதேக் குற்றத்தையே செய்ய வைத்துள்ளான் இந்த மெளலூது கவிஞன்.

“பனூ ஆமிர்” தூதுக் குழு உடன் நானும் நபி(ஸல்) அவர்களிடம் சென்றிருந்தேன். அப்போது நாங்கள் அவர்களை நோக்கி ” நீங்கள் எங்களின் தலைவன் என்று கூறினோம். அதற்கு அவர்கள் “தலைவன் அல்லாஹ்வே என்றார்கள். “தாங்கள் எங்களை விட மாண்பு மிக்க கொடையாளி என்றோம். அதற்கு அவர்கள் “இவ்விதம் கூறுங்கள் அல்லது அதில் சிலவற்றைக் கூறுங்கள், (இறைவனுக்குரிய அடைமொழிகளைக் கொண்டு என்னைப் புகழ்வதன் மூலம்) உங்களுக்கு உறு துணையாக ஷைத்தானை அழைக்காதீர்கள்” என்று எச்சரித்தனர்.

 (மத்ரஃப் இப்னு அப்துல்லாஹ், அபூதாவூத்)

நபி(ஸல்) அவர்களின் தெளிவான இந்த எச்சரிக்கையை முதுகுக்குப் பின்னால் தூக்கி எறிந்து விட்டு தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் மெளலூது பாக்களில் அல்லாஹ்வுக்குரிய அடைமொழிகளைக் கொண்டு நபி(ஸல்) அவர்களை அழைத்து ஷைத்தானுக்கு  உறுதுணையாகச் செயல்படுகின்றனர். அதுவும் நபி(ஸல்) அவர்கள் பிறந்த ரபீஉல அவ்வல் மாதத்திலேயே என்னே கை சேதம்!

“இப்னு மர்யமைக் கிறிஸ்தவர்கள் மிகைப்படுத்திப் புகழ்ந்தது போன்று, நீங்கள் என்னை மிகைப்பட புகழாதீர்கள். எனினும் (என்னை) அல்லாஹ்வின் அடியார் என்றும், தூதர் என்றும் கூறுங்கள்”, என நபி(ஸல்) அவர்கள் எச்சரித்ததை உமர்(ரழி) கேட்டதாக உரைத்ததை நான் கேட்டுள்ளேன். (இப்னு அப்பாஸ்(ரழி), ரஜீன்)

இவ்வளவு தெளிவாக நபி(ஸல்) அவர்கள் எச்சரித்திருந்தும்; அந்த எச்சரிக்கையை சிறிதும் பொருட்படுத்தாமல்-மெளலூது கவிகளிலுள்ள நபி(ஸல்) அவர்களை மிகைப்பட  அவர்களின் மனித அந்தஸ்திற்கு மேல் புகழ்ந்து பாடப்பட்டுள்ளவைகளைப் பக்தியோடு பாடுகிறவர்கள், கண்ணிருந்தும் குருடர்கள், காதிருந்தும் செவிடர்கள் அன்றோ? இறுதி நபியின் தெளிவான எச்சரிக்கைகளை புறக்கணிக்கும் பெரும்பாவிகள் அன்றோ? குளிக்கப்போய் சேற்றைப் பூசிக் கொண்ட கதையாக நன்மை சேர்ப்பதாக எண்ணி தங்களின் பதிவு ஏடுகளில் தீமைகளை, அதுவும் அல்லாஹ் மன்னிக்காத, இறைவனுக்கு இணைவைக்கும் மாபாதக செயலை “ஷிர்க்கை” பதிவு செய்கின்றனர் அன்றோ?

இந்த மெளலூது பாக்களில் தவறுகள் ஒன்றும் இல்லாத நிலையிலேயே பக்தியோடு பாடுவதற்கே மார்க்கத்தில் அனுமதியில்லை. காரணம் நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தராத ஒரு நன்மைதரும் செயல் இருக்கிறதென்று நம்புவதே இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்களின் தூதுத்துவத்தில் குறை காண்பதாகும். இந்த நிலையில் நபி(ஸல்) அவர்களையே மனித அந்தஸ்தை விட்டு தெய்வ நிலைக்கு உயர்த்தும் கவிகளுள்ள இந்த மெளலூது பாக்களை பாடுவதற்கு அனுமதி இருக்க முடியுமா? என சிந்திக்க வேண்டுகிறோம்.

இந்த மெளலூது பாக்களின் பின்னணிகளைப் பார்த்தால், வயிறு வளர்க்கும் சுய நல முல்லாக்களால் மக்களை ஏமாற்றிப் பிழைக்க  ஒரு வழியாக இப்னு மெளலூதுப் பாக்கள் இயற்றப்பட்டுள்ளன. அந்த மெளலூதுப் பாக்களின் இறுதியில் “ஆடறுத்து விருந்துப் போட்டவர்களுக்கும், கஹ்வா(காப்பி, டீ) கொடுத்தவர்களுக்கும் ‘பரக்கத்’ உண்டாகட்டும் என்று எழுதி வைக்கப்பட்டுள்ளதே இதற்கு போதிய சான்றாகும். அவை இந்திய முல்லாக்களால் சுமார் 200 அல்லது 300 வருடங்களுக்கு முன்னதாக இயற்றப்பட்டுள்ளன. இந்தியர்கள் குறிப்பாக தென்னக மக்கள் எங்கெல்லாம் தொன்று தொட்டு வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார்களோ அந்தப் பகுதிகளிலேயே இந்த மெளலூது பக்தியோடு பாடப்பட்டு வருகின்றது. அரபு நாடுகளில் இந்தப் பழக்கம் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் பிழைப்புக்காக அரபு நாடுகளுக்கு சென்றுள்ள கேரள தமிழக மாநில முஸ்லிம்கள் அங்கும் பக்தியோடு இந்த மெளலூதுகளை ஓதி வருகின்றனர்.

நபி(ஸல்) அவர்கள் பெயரால் ஓதப்படும் “சுபஹான மெளலூது ” பாக்களில் காணப்படும் குர்ஆன், ஹதீஸுக்கு முரண்பட்டப் போக்கை கண்டோம்.

அப்தில் காதிர் ஜீலானி(ரஹ்) அவர்கள் பெயராலும் அப்துல்காதிர் என்ற பெயரையுடைய நாகூரார் பெயராலும் புனையப்பட்டுள்ள மெளலூதுப் பாக்களிலும் அவற்றின் இடையே எழுதப்பட்டுள்ள கட்டுக்கதைகளிலும் (ஹிகாயத்) பல ஆபாசக் களஞ்சியங்களையும், அறிவுக்கே பொருந்தாத விக்கிரன்மாதித்தன் கதைகளையும் பார்க்கலாம். பாவம் அப்பாவி முஸ்லிம்கள். அந்த மெளலூதுகள் அரபிமொழியில் பாடப்படுவதால் அவற்றின் பொருள் தெரியாமல் பக்தியோடு பாடி வருகிறார்கள். தங்களுக்கு அதனால் நன்மை கிடைக்கும் என்று மூடத்தனமாக நம்பி வருகின்றனர். அந்த அரபிக் கதைகளையும், அவற்றிர்கு இடையில் எழுதப்பட்டுள்ளதையும் தங்கள் தாய் மொழியில் பெயர்த்து பொருளுனர்ந்துப் படிப்பார்களானால் அப்போது தெரியும் இந்த மெளலூதுகளிலுள்ள வண்டவாளங்கள்.

நறுமணத்தையும், துர்நாற்றத்தையும் நுகர்ந்துணர முடியாதவன் மலத்தைச் சந்தனம் என எண்ணி மலத்தை மேனி முழுவதும் பூசிக் கொண்டவன் போல் இது காலம் வரை செயல்பட்டு வந்திருக்கின்றோமே என அவர்கள் நாணமடைந்து கூனி குறுகுவர்.

சத்தியத்தை  உணர்ந்து செயல்பட விரும்பும் உண்மை முஸ்லிம்களிடம் நாம் வைக்கும் அன்பு வேண்டுகோள் இஸ்லாமிய வரலாற்றில் மிகச் சமீப காலத்தில் மக்களை ஏய்த்து பிழைக்கும் முல்லாக்களால் திட்டமிட்டு இயற்றப்பட்ட இந்த மெளலூதுகளையும் அவற்றிற்கு துணைப் போகும் பிக்ஹு நூல்களையும் தூக்கி எரிந்துவிட்டு அல்லது நெருப்பிலிட்டு பொசுக்கிவிட்டு குர்ஆன், ஹதீஸை ஓதி உணர்ந்து அதன்படி செயல்பட முன்வர வேண்டும் என்பதேயாகும்.

Previous post:

Next post: