தீமையைச் சுட்டிக்காட்டித் தடுப்பதும் இஸ்லாமியக்  கடமையல்லவா?

in 1990 டிசம்பர்

தீமையைச் சுட்டிக்காட்டித் தடுப்பதும் இஸ்லாமியக்  கடமையல்லவா?

தொடர்-4

 H. அப்துல் சமது

உபைதா பின் தாபித்(ரழி) அவர்களின் அறிக்கையின் படி அல்லாஹ்வின் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடமிருந்து பெற்ற உறுதிமொழியில் மற்றும் பல விஷயங்களோடு கீழே குறிப்பிடப்படுவது ஒரு முக்கிய அம்சமாக உட்ப்படுத்தப்பட்டிருந்தது என அறிகிறோம்.

…..நாங்கள் எங்கிருந்த போதிலும் அல்லாஹ்(வையும் அவனது மார்க்கம்) சம்பந்தப்பட்ட காரியங்களில் எங்களைக் குறை கூறுபவர்களின் வெறுப்பைச் சட்டை செய்யமாட்டோம்’ என்று எங்களிடம் உறுதிமொழி பெற்றார்கள்.   (முஸ்லிம், புகாரீ)

பிரச்சார மேடை முதல் தூக்குமேடை வரை, பள்ளிவாசல், மதரஸா முதல் அரசவை வரை உண்மை (இறைமறை)யை எடுத்துரைக்க வேண்டும் என்பதே அந்நபிமொழிக் கோருவது, ஆனால் நாம் நடைமுறையில் காண்பதென்ன? மாாக்கக் கோட்பாடுகளிலும் செயல்களிலும் வழிக்கேட்டை கண்கூடாகக் காண்கிறார்கள்; அத்து மீறிய செயல்கள் அவை என்பதையும் நன்குணர்ந்துள்ளார்கள்; இருந்தாலும் அவைகளுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட சொல்லுவதில்லை. காரணம்? அம்மக்கள் தம்மீது கோபம் கொண்டு தம்மை ஒதுக்கி விடக் கூடாதே என்ற பயமே!

அபூஸயீது(ரழி) அவர்கள், அறிவித்ததாக திர்மிதீயில் காணப்படும் ஒரு நீண்ட நபிமொழியில் கீழ்வரும் வாக்கியங்கள் குறிப்பிடத்தக்கவை:-

நீங்கள் உண்மையை உள்ளபடியே அறிந்திருக்கும்போது மக்களைப் பற்றிய பயமோ அவர்களின் கோபமோ உங்களை அதை வலியுறுத்திக் கூறுவதினின்றும் தடையாக நிற்கலாகாது’   (திர்மிதீ)

மற்றொரு நபிவழியில் இவ்வாறுக் கூறப்பட்டுள்ளது:-

உங்களில் யாரேனும் தீமை நிகழ்வதைக் காணும் போது, மக்கள் தம் மீதுக் கோபம் கொள்ளார்களே என்ற பயம், எதைச் சீர்த்திருத்துவதினின்றும் உங்களைத் தடுத்துவிட வேண்டாம்.

இதைக் கூறிவிட்டு அபூஸயீது(ரழி) அவர்கள் அழ ஆரம்பித்து விட்டார்கள், அவர்களின் கண் முன்னே தீமைகள் இழைக்கப்பட்டும். மக்களின் மீது இருந்த பயம், அத்தீமைக்கு எதிராக அவர்களைப் பேச விடாமல் தடுத்து விட்ட இழிநிலையை எண்ணியே அபூ ஸயீது(ரழி) அவர்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள். அபூ ஸயீது(ரழி) அவர்களின் காலத்தில் உண்மை மறைக்கப்படுவதும் திரிக்கப்படுவதும் வெகு அபூர்வமாகவே காணப்பட்டது. இந்நிலையிலும்  அதை உணர்ந்து உண்மையைக் கூறி சீர்த்திருத்த முற்படுபவர்கள் சமுதாயத்தில் குறைவில்லாமல் இருந்தனர். உமையாக்களின் காலத்தில் உண்மையாளர்கள் இரத்தம் சிந்த வேண்டிய நிலை ஏற்ப்பட்டது உண்மையே. இதில் குறிப்பிடத்தக்கது என்னவெனில் இங்ஙனம் பல உண்மையாளர்களின் தலைகள் வெட்டப்படவில்லையாயின் கொடுங்கோல் ஆட்சியைப் பற்றி உலகம் அறிய வாய்ப்பில்லாமல் போய் இருக்கும்; உமையாக்களுக்கு அவப்பெயரும் ஏற்ப்பட்டிருக்காது.

ஆனால் இன்றைய நிலை என்ன? உண்மையை மறைப்பதே மார்க்கமாகி விட்டது; உண்மையைக் குழித்தோண்டிப் புதைப்பவர்கள் வெறுக்கப்படவில்லை; ஆதரிக்கப்படுகிறார்கள்; உண்மையை உள்ளபடி வலியுறுத்த துணிபவர்களே வெறுத்து ஒதுக்கப்படுகிறார்கள், உண்மையில் நாமே கண்ணீர் சிந்த வேண்டியவர்கள்!

ஆர்வமின்மையும், வெட்கமின்மையும் உண்மை (அறிவு) மறைக்கப்படுவதற்குரிய மற்ற காரணங்களாகும். குர்ஆனும் அது நல்கும் அறிவும் பொதுச்சொத்து, எனவே முஸ்லிம் ஒவ்வொருவருக்கும் அதைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் ஆர்வம் கொள்ள வேண்டும். அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏற்றி வைத்த அறிவொளி வீசும் விளக்குகள் எவ்விதப் பாகுபாடுமின்றி மனித இனத்திற்கு கலங்கரை விலக்குகளாவன. இந்த விளக்குகளில் ஏதேனும் அணைக்கப்பட்டால் மனிதர் ஒவ்வொருவரும் ஒளியை இழந்தவராவார். எனவே அவ்வொளி விளக்குகளைப் பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.

அவ்விளக்குகள் அணைக்கப்படுவதைக் காணும் ஒருவர் தம் சொந்த வீட்டிலுள்ள விளக்கு அணைக்கப்படுவதாக உணர வேண்டும். இதுப் போலவே அல்லாஹ் வழங்கிய உரிமைகளும் ஏவியக் கடமைகளும் விதித்த வரையரைகளும் சட்டத்திட்டங்களும் நமது பாதுகாப்பிற்காக, நலனுக்காக அருளப்பட்ட பொதுச் சொத்துக்களாவன. அவைப் பாதுகாக்கப்பட்டாலே நாம் வாழ முடியும். அவை அழிந்தால் நாமும் அழிவோம். அவரவரது சக்திக்கேற்ப பாதுகாக்க முயற்ச்சிக்க வேண்டும். அவை மறைக்கப்படவோ திரிக்கப்படவோ அனுமதிக்கவும் கூடாது.

ஒருவருடைய உடைமைகள் கொள்ளை அடிக்கப்படும் போது அவரது அண்டைவீட்டார் அவரது உடைமைகளை பாதுகாக்க துணை புரியாமல் இருப்பது; ஒருவர் கொலை செய்யப்படுவதைக் கண்டவர்கள் கொலையாளியைப் பிடித்து அரசாங்கத்திடம் ஒப்படைத்து நீதியை நிலைநாட்ட உதவாமல் இருப்பது; ஒரு அப்பாவிப் பெண் கொடூரமாக பொது இடத்தில் பகிரங்கமாக பழிக்கப்படும் போது அதைப் பார்ப்பவர்கள் விரைந்து சென்று அப்பெண்ணை பாதுகாக்காமல் செயலற்று நிற்பது; குற்றவாளிகளுக்கு எதிராக நீதி மன்றத்தில் சாட்சி கூற முன் வராமலிருப்பது; இறைமறையும் அதன் நெறிமுறைகளும் வெளிப்படையாக அவமதிக்கப்படும்போதும் இகழ்ந்துரைக்கப் படும்போதும் அதைச் செவியுற்ற கண்ணியவான்கள் நாணமடையாமலும் உணர்ச்சி வசப்படாமலும் இருப்பது; இவை யாவும் தெளிவுறுத்துவதென்ன?

மக்கள் தன்மான உணர்ச்சியற்றவர்களாகி விட்டனர்; கவுரவத்தையும் கண்ணியத்தையும் இழந்து விட்டார்கள்; தங்களின் சொந்த உயிர்கள் உடமைகள் பற்றி மதிப்புணர்வு அறவே ஒழிந்துவிட்டது; தங்களின் சொந்த உயிர்கள் உடமைகள் பற்றி மதிப்புணர்வு அறவே ஒழித்து விட்டது; தங்களின் தாய்மார்கள், சகோதரிகள், பெண்மக்கள் பழிக்கப்படுவதை நேரிடையாகக் கண்டாலும் செயலற்று நிற்கும் அவல நிலைக்கு உந்தப்பட்டு விட்டனர்; எனும் உண்மைகள் அல்லவா?

உண்மை (திருமறை), மனிதரின் பொது உடமையாகக் கருதப்படவேண்டும் என்பது பற்றி திருமறைக் கூறுகிறது;

எவனொருவன் மற்றொருவனை அவன் செய்த கொலைக்குப் பிரதியாகவோ அல்லது நாட்டில் தீமையை விளைவித்ததற்காகவோ அன்றி அநியாயமாக -(காரணமின்றி) கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் அனைவரையும் கொலை செய்தவன் போலாவான். அன்றி எவன் ஒரு உயிரை வாழ வைக்கின்றானோ அவன் மனிதர்கள் அனைவரையும் வாழவைத்தவன் போலாவான்.  (5:33)

சற்றே சிந்தியுங்கள்; குற்றமற்ற மனிதன் ஒருவனைக் கொலை செய்தவன் எங்ஙனம் மனித வர்க்கத்தையே கொலை செய்தவன் ஆகிறான்? கொலை செய்யப்படுவதினின்று ஒருவனைக் காப்பாற்றியவன் எவ்விதம் மனித வர்க்கத்தையே காப்பாற்றியவன் ஆகிறான்? குற்றமற்ற ஒரு மனிதனைக் கொன்ற கொலையாளி செய்ததென்ன? மனித வர்க்கத்தின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் நல்கி மனித உயிரின் மாண்பை நிலைப் பெறச் செய்யும் புனித விதிமுறையையே அழித்து விடுவதன் காரணமாக அவன் முழு மனித இனத்தையே கொலை செய்தவனாகிறான்.

மாறாக குற்றமற்ற ஒரு உயிரை, அநியாயமாக கொல்லப்படுவதினின்றும் காப்பாற்றுவதன் மூலம் முழு மனித சமுதாயத்திற்குப் பாதுகாப்பு அளிக்கும் ஒரு நியதி பாதுகாக்கப்படுகிறது. இதிலிருந்து நாம் பெறும் நியதி யாது, நிகழும் ஒவ்வொரு கொலையும், கற்ப்பழிப்பும், கொடூரச் செயலும் , அநீதியும யாவுமே சமுதாயத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளாக கருதப்பட வேண்டும், என்பதே. வேறு விதமாக கூற வேண்டுமாயின் குற்றமற்ற ஒரு உயிரைப் பறித்த கொலை, சமுதாயத்தையே அழித்த படுகொலையாகவும், ஒரு பெண்ணின் கற்ப்பழிப்பு சமுதாய இகழ்ச்சியாகவும் அட்டூழியமாகவும் ஆகும் என்பதே.

Previous post:

Next post: