மனிதன்!

in 1990 டிசம்பர்

மனிதன்!

புலவர் செ. ஜஃபர் அலி, பி, லிட், நாகப்பட்டினம்.

மனிதன் என்பவன் மாசுமருவற்றவனும் அல்லன்; மாசே உருவானவனும் அல்லன்; இவ்விரண்டுக்கும் இடைப்பட்டவனாகவே மனிதன் படைக்கப்பட்டான். இவண், “மனிதன்” என யான் குறிப்பிடுவது ஆண், பெண் இருவரையும் தான். மனித இனத்தைப் பற்றி திருக்குர்ஆன் துணைக் கொண்டு ஆய்வதே இக்கட்டுரையின் விழுமிய நோக்கமாகும்.

உலக அளவில் நொடிக்கு நான்கு குழந்தைகள் பிறக்கின்றன. இந்தியாவில் மட்டும் ஒன்றரை நொடிக்கு ஒருக் குழந்தைப் பிறக்கிறது. இன்று உலகின் மொத்த மக்கள் தொகை ஐநூறு கோடியைத் தாண்டி விட்டதாக ஆய்வறிக்கைக் கூறுகிறது. அதிவேகமான மனிதப் பிறப்பைக் கண்டு நாம் பிரம்மிப்படைகிறோம். ஆனால், மனிதன் ஒவ்வொருவரும் தன்னைப் பற்றி உய்த்துணர்கிறானா? தான் ஒரு அற்பத் துளியிலிருந்து படைக்கப்பட்டதை மறந்த ஆணவம் கொண்டு அலைகின்றான்! ஆட்சியையும் அதிகாரத்தையும் நாடுகிறான்.  என்னேக் கேவலம்!

மனிதன் (தான்) எதனால் படைக்கப்பட்டிருக்கின்றான் என்பதைச் சிறிது கவனிக்கவும். குதித்து வெளிப்படும் ஒரு துளி நீரைக் கொண்டேப் படைக்கப்பட்டான். அது, முதுகுத்தண்டுக்கும் விலா எழும்புக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகின்றது’     (87:5-7)

மனிதருள் பல நிறமுண்டு; பல குணமுண்டு; பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அவர்களை அடைகின்றது; கல்வி -கல்லாமை நிலையும் உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக சிந்தனை சக்தி சிலரிடம் இருக்கும், பலரிடம் அது முறையான நெறியில் இருக்காது. அதாவது, “சிந்தனை என்பது மனித இனத்துக்குப் பொது, சிந்தித்துணராத மனிதனே இருக்க இயலாது.  ஆனால் நெறிப்படுத்திப் பார்க்கும் போது, சிலரிடம் ஒளிர்கின்றது; பலரிடம் ஒளிரவில்லை.

உறுதியாக நாம் மனிதனை மிக்க அழகான வடிவில் படைத்திருக்கின்றோம்.”   என்று அல்லாஹ் கூறுகிறான்.

கால்கள் இரண்டு கைகள் ஒன்று; தலை ஒன்று அதில் அடங்கியுள்ள செவிகள் இரண்டு; நாசித் துவாரங்கள் இரண்டு; கண்கள் இரண்டு வாய் ஒன்று! இன்னப் பிற உறுப்புகளை அந்தந்த இடத்தில் அமைத்துள்ளதை இவண், எல்லாம் வல்ல அல்லாஹ் ‘அழகான வடிவம் எனக் குறிப்பிடுகிறான். நிறம் மாறுபடலாம், மொழி மாறுபடலாம்; பழக்க வழக்கங்கள் மாறுபடலாம்; மொழி மாறுபடலாம், குணங்கள் கூட மாறுபடலாம் ஆனால் அவன் மனிதனே!

மனிதன் எதனால் சிறக்கிறான்? பகுத்தறிவைப் பயன்படுத்துமம் முறையில் சிறக்கிறான். சத்தியத்தை ஏற்று நடந்து, அசத்தியத்தைப் புறம் தள்ளும் போக்கால் சிறக்கின்றன. உண்மையை ஏற்று நீதியை நிலை நாட்ட வேண்டும். என்ற மனத்துணிவு இல்லையெனில், அவன் மனிதன் என்னும் தகுதிக்கே தகுதியற்றவனாகின்றன்.

பேராசை, வஞ்சனை, ஆணவம், கடுஞ்சினம், பழி தீர்க்கும் எண்ணம் களவு எண்ணம், காம உணர்வு, எண்ணியப்படியெல்லாம் உல்லாசமாக வாழ்தல் முதலிய  பலவித கீழ்மைப் பண்புகளால் மனிதன் சூழப்பட்டுள்ளான்.

(அவனுடைய துர்நடத்தையின் காரணமாக) பின்னர், அவனைத் தாழ்ந்தோனிலும் தாழ்ந்தோனாக நாம் ஆக்கி விடுகின்றோம்”   (95:5)

பழக்க வழக்கத்தால் அல்லாஹ்! ஆண்டவனே!” இறைவா!” என்று சொல்லுகின்றோம் ஆனால் அல்லாஹ்வின் மீது முழுமையான அழுத்தமான நம்பிக்கை வைக்கின்றோமா? என்றால் அது தானில்லை மனிதன், தன் சொத்தின் மீது நம்பிக்கை வைக்கின்றான்; தங்கத்தின் மீதும் தங்கமான மனைவியின் மீதும்-வெளிநாடு சென்றிருக்கும் பிள்ளைகளின் மீதும் நம்பிக்கை வைக்கின்றான். சொத்தும் – பணமும் போதுமானது! நம் சொத்துக்கள் ஏழு தலைமுறைகளுக்கு தேறும் ‘நம்மை ஒரு பயல் ஒன்றும் செய்ய முடியாது’ என்றும் இருமாப்புக் கொள்கிறான். திடீர் விபத்து – நெஞ்சு வலியால் மரணம்! கொலையும் செய்யப்படுகிறான். இனிப்பு நீராலும்-உப்பு நீராலும்-குறுதிக் கொதிப்பாலும் அவதியுறுகின்றான். அவன் எண்ணியதை உண்ணும் ஆரோக்கியமான உடல் அவனுக்கில்லையே! பணமிருந்தென்ன! சொத்து இருந்தென்ன! பாவம் மனிதன்!

எப்படியாவது- எந்த வழியிலாவது முன்னேற வேண்டும் என்றே மனிதன் துணிகின்றான். பணம் சேர்க்கின்றான்; படைத்தவனை மறந்து, அவன் சேர்த்த பணத்தின் மீது நம்பிக்கை வைக்கின்றான். அவன் எண்ணம் முழுவதும், தானும் தன் குடும்பமும் பல்லாண்டுகள் – நூறாண்டுகள் தாண்டியும் கூட வாழ்வோம் என்பதே! ஆனால் இறைவன் நாட்டம் வேறுவிதமாக அல்லவா உள்ளது! இம்மையே இன்பம்; மறுமையாவது மண்ணாங்கட்டியாவது என்று வாயால் சொல்லாவிட்டாலும் செயலில் நடைமுறையில் காட்டத்தானே செய்கின்றார்கள். மனிதன் அவசரப் புத்தி படைத்தவன் என்பதை கண்கூடாகவே காணுகின்றோம்.

நன்மையைக் கோரி மனிதன் பிரார்த்திப்பதைப் போலவே, (சில சமயங்களில், அறியாமையினால்) தீமையைக்கோரியும் பிரார்த்திக்கின்றான். (ஏனென்றால்) மனிதன் (இயற்கையாகவே பொறுமை  இழந்த) அவசரக்காரர்களாகவே இருக்கின்றான்.           (அல்குர்ஆன்  17:11)

“மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான். (ஆகவே அவர்களை நோக்கி, நபியே! நீர் கூறும்: “வேதனை பற்றிய என்னுடைய சான்றுகளை நான் அதிவிரைவில் உங்களுக்குக் காண்பிப்பேன், நீங்கள் என்னிடம் அவசரப்பட வேண்டாம்.”    (21:37)

மெய்யாகவே மனிதன் பதட்டக்காரனாகவே படைக்கப்பட்டுள்ளான்.”  (70:19)

கடமை உணர்வுடன்-கட்டுப்பாட்டுடன், அடக்கமாக – பணிவாக – வாழ வேண்டிய பலகீனமான மனிதன், அல்லாஹ்வின் மிகப்பெரும் பொருப்பைச் சுமந்து அவன் மனிதனாக படைத்தவனை வணங்கக் கூடியவனாக வாழ வேண்டியவன்! அதே நேரத்தில் அல்லாஹ்வின் மிகப்பெரும் பொறுப்பைச் சுமந்தும் அறியாமையில் மூழ்குபவனாக – நன்றிக் கெட்டவனாக வாழ்கின்றான்.

உறுதியாக (நம்முடைய) பொறுப்பைச் சுமந்துக் கொள்வீர்களா? என்று வானங்கள், பூமி மலைகள் முதலியவைகளிடத்தில் வினவினோம். அதற்கு அவை அதனைப் பற்றி பயந்து, அதனைச் சுமந்துக் கொள்ளாது விலகி விட்டன. அத்தகையதைத் தான் மனிதன் சுமந்துக் கொண்டான். (ஆகவே) உறுதியாக அவன் அறியாமையால் தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொண்டான்”   (33:72)

இறைவனுக்கு மாறு செய்யும் இத்தகைய மனிதர்களைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் பல இடங்களில் எச்சரிக்கின்றான். சான்றாக, ஒன்றைப் பார்ப்போம்.

“நயவஞ்சக ஆண்களையும், பெண்களையும், இணை வைத்து வணங்கும் ஆண்களையும் பெண்களையும் உறுதியாக அல்லாஹ் வேதனை செய்வான். விசுவாசியாகிய ஆண்களையும் பெண்களையும் (அவர்களுடைய குற்றங்களை மன்னித்து) அவர்கள் பால் அருள் கொண்டு நோக்குகின்றான். அல்லாஹ் மிக மன்னிப்போனும் கிருபையுடையோனுமாக இருக்கின்றான்”. (அல்குர்ஆன் 33:73)

மனித இனம் மிக மிக பலவீனமான ஒன்று! ஆகவே, அல்லாஹ் இவர்களின் இயல்புக்கேற்ப கடினமான எதனையும் அவர்கள் செய்யும் படியாக கட்டளையிடவில்லை. மாறாக இலேசானதையே விழைகின்றான்.

“அல்லாஹ் (தன் கட்டளைகளை) உங்களுக்கு இலேசாக்கவே விரும்புகிறான். ஏனென்றால் மனிதன் பலவீனமாகவே படைக்கப்பட்டுள்ளான்”.     (அல்குர்ஆன் 4:28)

அடுத்து, மனிதன் ஒரு நிலையான உறுதியான – வைராக்கியமான அழுத்தமான கொள்கைகளைப் பின்பற்றத் தயங்குகின்றான். ஒன்றின் மீது இன்று அவன் நம்பிக்கை வைக்கின்றான். மறுநாள் அதன் மீதே அவன் ஐயம் கொள்கிறான். அவன் குணமும் – பண்பும் மாறி மாறி வருகின்றது! அவனுடைய உறுதியற்ற தன்மையை இந்நிலை தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது. மேலும் அதனால் அவன் மயங்குகின்றான். சத்தியத்தையும் – அசத்தியத்தையும் பிரித்தறிய முடியாமல் தடுமாறுகின்றான் – தத்தளிக்கின்றான்.

நன்மையைக் கேட்பதில் மனிதன் தயங்குவதில்லை; எனினும் அவனை (ஒரு சிறு) தீங்கு அணுகினால், அவன் மனமுடைந்து நம்பிக்கை இழந்து விடுகின்றான்’    (41:49)

தான் எப்பொழுதும் இன்பத்திலேயே மூழ்கியிருக்க வேண்டும்; துன்பம் ஒரு பொழுதும் அறவே தன்னை நெருங்கவும் கூடாது’ – இவ்வாறாக மனித மனம் எண்ணுகின்றது. இறைவனிடம் மனிதன் பிரார்த்திப்பதெல்லாம் தனக்கு அளவற்ற நன்மை வேண்டும் என்பதே! (கேட்பதில் தவறில்லை! இறைவனிடம் இறைஞ்ச வேண்டியது தான்) ஆனால் ஒரு தீங்கு அணுகினால், ‘இறைவன் தன்னைக் கைவிட்டு விட்டான், இவ்வுலகமே சூன்யமாகிவிட்டது. எல்லாமேப் பொய்; எங்கும் பொய்; எங்கும்  மயம்; காயமே இது பொய்யடா!  வெறும் காற்றடைத்த பையடா! உலகே மாயை! காணல் நீர் என்றெல்லாம் பிதற்ற ஆரம்பித்து விடுகின்றான்! மொத்தத்தில் இன்பத்தைக் கண்டால், தலை கால் புரியாமல் துள்ளுகின்றான்; துன்பத்தைக் கண்டால் இடி விழுந்ததுப் போல் தன்னையே இழந்து நொந்துப் போகின்றான்! “நிதானம்” இல்லாமல் காட்சியளிக்கின்றான்.

மனிதனுடைய அகராதியில், ‘ இறையருள் என்பதற்கு, ‘கோடிக் கணக்கான ரூபாய்கள் தன்னிடம் இருக்க வேண்டும்; அதை நாம் அனுபவிக்க வேண்டும் என்பதாகத் தானே – பொருளாகிறது! மனிதன், தான் வாழுவது – உண்ணுவது – உழைப்பது – ஆரோக்கியமான உறங்குவது – தேவையான பொருள் வசதியுடன் நிம்மதியாக வாழ்க்கை நடத்துவதும் ‘ இறையருளே” என்பதை ஏன் ஒப்புக் கொள்ள மறுக்கின்றான்? மறக்கின்றான்! படைத்தவனுக்கு நன்றி செலுத்த வேண்டிய மனித இனம், நன்றி கெட்ட இனமாக ஏன் மாற வேண்டும்?

படைத்தவன் பாதுகாப்பான்! தேவையானதை தேவையான நேரத்தில் வழங்குவான் என்னும் நம்பிக்கை அவன் உள்ளத்தில் ஏன் துளிர்க்கவில்லை? சிந்திக்க வேண்டியவன் அவசரக்காரனாகவும், ஆணவம் கொண்டவனாகவும் தன்னைக் காட்டிக் கொள்வதேன்?

சோதனை வரும்பொது வேதனையால் விம்முகிறான்; இறைவா! எனக்கேற்ப்பட்ட துன்பத்தை நீக்கி அருள்புரிவாக! என இறைஞ்சுகின்றான். அவன் வேண்டுகோள் இறைவனிடம் ஏற்றுக் கொள்ளப்பட்டு அளவற்ற நன்மைகள் கிடைத்துவிட்டால், தன்னுடைய சமயோசித அறிவினாலும், கடம் உழைப்பினாலும் இத்துணை செல்வங்கள் வந்ததாக இறுமாப்புக் கொண்டு இங்கிதமற்றுக் கூறுகின்றான்.

மனிதனுக்கு யாதொரு தீங்கேற்ப்பட்டால் (அதனை நீக்கும்படி) அவன் தன்னுடைய (படுத்தப்) படுக்கையிலும், (உட்கார்ந்த) இருப்பிலும் (நின்ற) நிலையிலும் நம்மிடமே பிராாத்திக்கின்றான். ஆனால், அவனுடைய துன்பத்தை நீக்கும்படி  நம்மிடம் பிரார்த்தனையே செய்யாதவனைப் போல் (புறக்கணித்துச்) சென்றுவிடுகின்றான், வரம்பு மீறுவோருக்கு அவர்கள் செய்யும் காரியங்கள் இவ்வாறு அழகாக்கப்பட்டு விட்டன’     (10:12)

நம் அருளை அனுபவிக்கும்படி செய்து பின்னர் அதனை அவனிடமிருந்து நாம் நீக்கி விட்டால், உறுதியாக, அவன் நம்பிக்கை இழந்து பெறும் நன்றிக் கெட்டவனாக ஆகி விடுகின்றான்.’   (11:9)

மனிதர்களை ஏதேனும் தீங்கு அணுகும் பட்சத்தில், அவர்கள் தங்கள் இறைவன் பால் முகம் நோக்கி அவனிடம் பிரார்த்திக்கின்றார்கள். பின்னர் அவன் (அதனை நீக்கி) இவர்களைத் தன்னுடைய அருளைச் சுகிக்கும்படி செய்தால், அவர்களில் ஒரு பிரிவினர் தங்களுடைய இறைவனுக்கே இணை வைக்கின்றனர்.’    (30:33)

உறுதியாக மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்; அவனே இதற்குச் சான்றாகவும் திகழ்கின்றான்; உறுதியாக அவன் மிக்கக் கடினமாகவே பொருள்களை நேசிக்கின்றான்.   (100: 6,7,8)

தன்னுடைய பொருள்கள் தன்னைப் பாதுகாக்கும்’ என்றே மனிதன் நம்புகின்றான்; பொருளற்ற நிலையில் முன்பு இவனை பாதுகாத்தவன் யார்? என்பதை அவன் சிந்திப்பதில்லை. பொருளற்ற ஏழை – எளியவர்களைப் பாதுகாத்துக் கொண்டிருப்பவன் யார்? என்பதையும் மனிதன் உணருவதில்லை! என்னே கைசேதம்!

பெண்கள், மக்கள், பொன் வெள்ளிகளின்  பெருங்குவியல்கள், உயர்ந்த குதிரைகள், (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால் நடைகள், வேளான்மை ஆகியவற்றின் மீது ஆழ்ந்த பற்றுக் கொள்வது மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது. எனினும் இவை (யாவும் நிலையற்ற) இவ்வுலக வாழ்க்கையின் (அற்ப) இன்பங்களே! அல்லாஹ்விடத்திலோ, (நிலையான) அழகிய தங்குமிடமுண்டு’      (3:14)

நிலையானது எது? நிலையில்லாதது எது? என்பதை மனித இனம் உணர்வதில்லை; இவ்வுலகின் இன்றைய நிகழ்ச்சிகளே இதற்குச் சான்றுகளாக அமைகின்றன! நேற்று உயர்பதவி வகித்த இன்று இப்பதவியிலிருந்து இறக்கப்படுகின்றான். நேற்று செல்வந்தனாக இருந்தவன் இன்று பசிக்கு சுவள உணவு கிடைக்காமல் திண்டாடுகிறான்! நேற்று நாடோடியாக திரிந்தவன் இன்றுப் பலக்கோடி ரூபாய் சொத்துக்களுக்கு அதிபதியாகி வீற்றிருக்கின்றான்! இவ்வுலகில் எல்லா மேதலை கீழாக மாறக் கூடியது. எதுவும் நிலையானதன்று!

அல்லாஹ் வாக்குறுதி அளிக்கப்பட்ட மறுமையே நிலையானது! இந்த நம்பிக்கை மனிதனிடம் வேறூன்றி விட்டால் அவனே  கண்ணியமிக்கவனாகத் திகழ்கின்றான். பயபக்தியுடைய நல்லடியார்களை நோக்கி அல்லாஹ் கூறுகின்றான்:

மனிதர்களே உறுதியாக நாம் உங்களை ஆண், ஒருப் பெண்ணிலிருந்து தான் படைத்தோம். பின்னர் ஒருவர் மற்றவரை அறிந்துக் கொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம் (ஆதலால் உங்களில் ஒருவர் மற்றொருவரை விட மேலென்று பெரமைப் பாராட்டிக் கொள்வதற்க்கில்லை) உங்களில் எவன் மிகவும் பயபக்தியுடையவனாக இருக்கின்றானோ அவன் தான் அல்லாஹ்விடத்தில் உறுதியாக மிக்க கண்ணியவான். உறுதியாக அல்லாஹ் (யாவையும்) நன்கறிந்தோனும் நன்கு தெரிந்தோனுமாக இருக்கின்றான்.    (அல்குர்ஆன்  49:13)

இறை நல்லடியார்களே! இறைவேதமான குர்ஆனின் பொருளை நன்கு அறிந்து – உணர்ந்து செயல்பட்டு மனிதாபிமானங்கொண்ட சிறந்த மனிதர்களாக உருவாக நம்மனைவோர்க்கும் அல்லாஹ் நல்லருள் பாலிப்பானாக! (ஆமின்)

Previous post:

Next post: