விமர்சனங்கள்!   விளக்கங்கள்!!

in 1990 நவம்பர்,விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

விமர்சனங்கள்!   விளக்கங்கள்!!

*தவ்ஹீத்வாதிகளால் வெளியிடப்பட்ட “தர்கா முரசு” என்ற புத்தகத்தில் ஆலிம்களையும் அவ்லியாக்களையும் கேலிசித்திரங்களாக வரைந்தும், கிண்டலான வாசகங்களாலும் விமர்சிக்கப்பட்டுள்ளதே! இதுதான் தவ்ஹீதை போதிக்கும் முறையா?    கே. சர்புதீன், பெருவளநல்லூர்.

இன்று ஆர்வமாக அழைப்புப்பணியில் ஈடுபட்டுள்ள சகோதரர்களில் பெரும்பான்மையினரைப் பிடித்துள்ள ஒரு மயக்கம் பற்றி வினா எழுப்பியுள்ளீர்கள். அந்த மயக்கத்தைப் போக்க  மிக நீண்டதொரு  தெளிவான விளக்கத்தைத் தர நாம் கடமைப்பட்டுள்ளோம். இன்று அந்தச் சகோதரர்கள், தங்களில் ஏற்ப்பட்டுள்ள மயக்கம் காரணமாக செய்யும் தவறுகள் குர்ஆன், ஹதீஸை முறையாகவும் சரியாகவும் செயல்படுத்த முயற்சிகள் செய்யும் சகோதரர்களையும் பாதிக்கிறது. ஒட்டுமொத்தமாக அனைவரையும் சேர்த்தே சத்தியப் பணிக்கு விரோதமானவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே இதுப் பற்றிய தெளிவு அனைவருக்கும் மிக அவசியமாகத் தேவைப்படுகிறது.

“இஸ்லாம்” அல்லாஹ்வால் கொடுக்கப்பட்ட இறை மார்க்கம், அதற்குப் பூரண உரிமையாளனும் அவன் மட்டுமே. அதனைச் செயல்படுத்துகிறவர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் அல்லாஹ்வின் கட்டளையைத் தான் கவனிக்க வேண்டுமேயல்லாது மக்களின் மனோ நிலையையும் விருப்பங்களையும் அனுசரித்து இவர்களின் சொந்த யூகங்களைப் பின்பற்றக் கூடாது. இறுதித் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களையே குர்ஆனின் பல இடங்களில் இது விஷயத்தில் மிகத் தெளிவாகவும், கண்டிப்புடனும் அல்லாஹ் எச்சரித்துள்ளான். அவற்றில் சிலவற்றை கவனமாகப் பார்ப்போமாக.

‘(நபியே) அல்லாஹ் அருள் செய்த (சட்டத் திட்டத்)தைக் கொண்டே அவர்களுக்கிடையில் தீர்ப்புச் செய்வீராக. நீர் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றாதீர். அன்றி, உமக்கு அல்லாஹ் அருளியவற்றில் எதிலிருந்தும் உம்மை அவர்கள் திருப்பிவிடாதபடியும், நீர் அவர்களைப் பற்றி எச்சரிக்கையாயிருக்கும். அவர்கள் புறக்கணித்துவிட்டால், நிச்சயமாக நீர் அறிந்துக் கொள்ளும், அவர்களின் சில பாவங்களின் காரணமாக, அல்லாஹ் அவர்களுக்குக் கஷ்ட்டத்தைத் தர விரும்புகிறான். நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர், பாவிகளாகவே இருக்கின்றனர்.  (5:49)

எனக்கு இறைச் செய்தி (வஹி)யாக அறிவிக்கப்பட்டதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றவில்லை’ என்று நபியே நீர் சொல்வீராக.    (6:50)

 ‘(நபியே!) நீர் கூறும்: நான் பின்பற்றுவதெல்லாம் எனக்கு என் இறைவன் இறைச்செய்தி (வஹி) மூலம் அறிவித்ததைத்தான்”    (10 : 15)

 (அவர்கள் விருப்பப்படி) யாதொரு வசனத்தை நீர் அவர்களிடம் கொண்டு வராவிடில், (அதற்குப் பதிலாகத்தத்தங்கள் விருப்பப்படி கற்பனையாக ஒரு வசனத்தை அமைத்து) ‘இதனை நீர் வசனமாக எடுத்துக் கொள்ள வேண்டாமா” என்று கூறுகின்றனர். அதற்கு (நபியே!) நீர் கூறும்: என் இறைவனால் எனக்கு இறைச் செய்தி(வஹீ) மூலம் அறிவிக்கப்பட்டவைகளையே பின்பற்றுகிறேன்’ (என்று)     (7:203)

‘எனக்கு என்ன இறைச்செய்தி (வஹி) மூலம் அறிவிக்கப்படுகிறதோ அதை தவிர (வேறெதையும்) நான் பின்பற்றுவதில்லை. தெளிவாக அச்சமூட்டி எச்சரிப்பவனேயன்றி நான் வேறில்லை”. என (நபியே!) நீர் கூறுவீராக.   (46:9)

அவர்(தூதர்) மீதுள்ள கடமையெல்லாம் தம்மீது சுமத்தப்பட்ட (தூது செய்தியை உங்களிடம் அறிவிப்ப)து தான். எனவே நீங்கள் அவருக்குக் கீழ்ப்படிந்து நடந்தால் நீங்கள் நேர்வழிப்பெறுவீர்கள். (நம் தூதைத் தெளிவாக அறிவிப்பதைத் தவிர (வேறொன்றும் நம்) தூதர் மீது கடமையில்லை.’   (24:54)

“(நம் கட்டளைகளைத்) தெளிவாக எடுத்து விளங்குவது மட்டுமே நம் தூதர் மீது கடமையாகும் என்பதை நீங்கள் நிச்சயமாக அறிந்துக் கொள்ளுங்கள்.    (5:92, 64:12)

“(நபியே! உம்மை) எவரும் புறக்கணித்தால் (அதற்காக நீர் கவலைப் படவேண்டாம்) நாம் உம்மை அவர்கள் மேல் பாதுகாவலராக அனுப்பவில்லை.”  (4:80)

“(நபியே!) உம்முடைய  இறைவனிடமிருந்து உமக்கு இறைச்செயதி (வஹி) மூலம் அறிவிக்கப்பட்டதையே நீர் பின்பற்றுவீராக”    (6:106)

“(நபியே!) உமக்கு இறைச்செய்தி(வஹி) மூலம் அறிவிக்கப்பட்டதையே பின்பற்றி நடந்துக் கொள்வீராக.”  (10:109,33:2)

எவ்வித விருப்பு வெறுப்பின்றி இந்த இறை வசனங்களை சுய சிந்தனையுடன் படித்து விளங்குகிறவர்கள், இறைவனால் (வஹி) இறைச் செய்தி மூலம் அறிவிக்கப்பட்டதை மட்டுமே மார்க்கமாக எடுத்து நடக்க வேண்டும். மார்க்கத்தில் எந்த நிலையிலும், எந்த நோக்கத்துடனும் அது நல்ல நோக்கமாக இருந்தாலும் சரி, தீய நோக்கமாக இருந்தாலும் சரி எதனையும் மனித அபிப்ராயப்படி நுழைக்கவோ, இணைக்கவோ, அதிக படுத்தவோ முடியாது என்பதை தெள்ளத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

மக்கள் அனைவரும் இஸ்லாத்தில் வந்துவிட வேண்டும். எளிதாக இஸ்லாத்தைப் புரிந்துக் கொள்ள வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடனும் அல்லாஹ் அறிவிக்காத எதுவொன்றையும் செயல்படுத்தக்கூடாது. அப்படி நல்லது போல் தோன்றும் ஒரு திட்டத்தை எந்த அறிஞர் தந்தாலும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. காரணம் அது அல்லாஹ்வின் தனி அதிகாரத்தில் தலையிடுவதாக இருப்பதால் அப்படிச் சேர்த்துக் கொள்ள தனது இறுதித் தூதருக்கே அல்லாஹ் அனுமதி தரவில்லை என்பதை அறிகிறோம்.

மேலும் மக்கள் எப்படியும் நேர்வழிக்கு வந்துவிட வேண்டும். இறைச் செய்திகளை(வஹி) மட்டும் செயல்படுத்துவதால் மக்கள் உணர்வுப் பெற்று நேர்வழிக்கு வரமாட்டேன் என்கிறார்கள். எனவே நாம் எதையாவது செய்து அவர்களை நேர்வழியின்பால் ஆர்வமுடையவர்களாக திருப்ப வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடனும் இறைவனால் கட்டளையிடப்படாத எதனையும் செய்யக் கூடாது என்பதற்கு (நபியே! உம்மை) எவரும் புறக்கணித்தால் (அதற்காக நீர் வருந்த வேண்டாம்) நாம் உம்மை அவர்களின் மேல் பாதுகாவலராக அனுப்பவில்லை. (4:80) ஆயினும் நமது கட்டளைகளைத் தெளிவாக எடுத்து விளங்குவது மட்டுமே நமதுப் பொருப்பாகும் (பார்க்க 5:92, 64:12) எனத் தெள்ளத் தெளிவாக எச்சரித்துள்ளது தேவைக்கும் மேலதிக சான்றாக இருக்கிறது.

இந்த நிலையில் முஸ்லிம் உம்மத்தில் அறிஞர்களாக மதிக்கப்படுவோர் இறைவனது இத்தனை தெள்ளத் தெளிவான வசனங்களை எல்லாம் அறிந்தோ, அறியாமலோ புறக்கணித்து விட்டு, தங்கள் சுய சிந்தனையில் தோன்றிய அபிப்ராயங்களை எல்லாம் மார்க்கத்தில் கலப்படம் செய்து விட்டு, மார்க்கத்திற்கு பெரும் சேவை செய்துள்ளதாக மனப்பால் குடித்து வருகின்றனர். இந்தச் சாபக்கேடு நீண்ட நெடுங்காலமாக இந்தச் சமுதாயத்தைப் பற்றியுள்ளது. உலகின் மிக உன்னத சமுதாயம், இன்று அதாள பாதாளத்தில் விழுந்துக் கிடப்பதற்கு இதுவே அடிப்படைக் காரணமாகும். இன்று இந்த முஸ்லிம் சமுதாயம் பல பிரிவுகளாகச் சின்னாப் பின்னமாக்கப்பட்டு கிடப்பதற்கும் இந்த மனித அபிப்ராயங்கள் மார்க்கத்தில் நுழைக்கப்பட்டதே காரணமாகும்.

ஒரு கூட்டம் ஒரு அறிஞரின் மனித அபிப்ராயத்தைச் சரி கண்டு செயல்படுகிறது. இன்னொருக் கூட்டம் இன்னொரு அறிஞரின் மனித அபிப்ராயத்தைச் சரிக்கண்டு செயல்படுகிறது. இப்படி அல்லாஹ் கொடுத்த நேரான வழிவிட்டு தடம்புரண்டு, மனித அபிப்ராயங்களால் தோற்றுவிக்கப்பட்டுள்ள பல கோணல் வழிகளில் சென்று தன்னை மாய்த்துக் கொண்டிருக்கிறது இந்த சமுதாயம்.

ஷைத்தானின் அசல் குறிக்கோள் மனிதன் எப்படியும் அல்லாஹ்வின் கட்டளைகளை விட்டு விலக வேண்டும். தன்னைப் போல் மனிதனும் நரகில் வந்து சேர வேண்டும் என்பது தான். எனவே அல்லாஹ் கொடுத்துள்ள நேர்வழியைவிட மனித அபிப்பிராயங்களால் தோற்றுவிக்கப்பட்டுள்ள கோணல் வழிகளில் ஆர்வத்தை மனித உள்ளங்களில் போட்டு விடுகிறான். அந்த ஆர்வத்தை மேலும் தூண்ட மனிதனின் அந்த கோணல் வழிகள் மூலம் நல்ல பலன்கள் ஏற்படுவது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கிக் காட்டுகிறான். அதனால் கோணல் வழியே நேரான வழி என நம்பி வழிக்கேட்டில் மனிதன் சொல்லுகிறான். ஆக ஷைத்தான் தனது முயற்சியில் பெரும் வெற்றி பெற்று வருகிறான். இதனையே அல்லாஹ்:

‘எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவுகளை உண்டாக்கிப் (பல) பிரிவுகளாக பிரித்து விட்டனரோ (அவர்களிலாகி விட வேண்டாம். அவ்வாறு பிரிந்த)  ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள்.   (30:32)   என்றுத் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளான்.

இன்று முஸ்லிம்களிடையே ஆதிக்கம் செலுத்தி வரும் மத்ஹபுகள், குஃபிஸ் வழிமுறைகள், தரீகாக்கள் இன்னும் இவைப் போன்ற பல மனித அபிப்ராங்களால் மார்க்கத்தில் நுழைக்கப்பட்டவை அனைத்தும், கோணல் வழிகளேயாகும். ஷைத்தான் இந்த கோணல் வழிகளில் முஸ்லிம்களுக்கு நல்ல பலன்கள் கிட்டுவது போன்றதொரு மாயத்தோற்றத்தை உண்டாக்கி வைத்திருப்பதால், முஸ்லிம்களில் பெரும்பாலோர் அவற்றில் மயங்கி அந்தக் கோணல் வழிகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்தக் கோணல் வழிகளை முறியடிக்க ஸலபித் தத்துவம், அஹ்ல ஹதீஸ், முஜாஹித் இன்னும் இவைப் போன்ற தனித்தனிப் பெயர்களில் செய்யப்படும் முயற்சிகள் நல்லவையாகக் கருதப்பட்டாலும் அவையும் மனித அபிப்ராயங்களால் உருவாக்கப்பட்டவையே, ஆரம்பத்தில் நாம் எழுதியுள்ள குர்ஆன் வசனங்கள் அனைத்திற்கும் முரணானவையே. எனவே அல்லாஹ்வின் பொருத்தம் கிடைக்க வழியில்லை.

இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்களுக்கு முன்னுள்ள நபிமார்களின் உம்மத்துக்களுக்கும் இறைக் கொடுத்த நேர்வழியை விட்டு தங்கள்  அறிஞர்களின் மனித அபிப்ராயங்களால் தோற்றுவிக்கப்பட்ட கோணல் வழிகளில் சென்றே பல மதங்களையும் அந்த மதங்களில் பல பிரிவுகளையும் உண்டாக்கி வைத்துக் கொண்டு, அவை கொண்டு அல்லாஹ் சொல்வதுப் போல் மகிழ்வடைந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்போது நீங்கள் எழுதியுள்ள விமர்சனத்தின் நிலையை ஆராய்வோம். நமது வருத்தமெல்லாம் இது காலம் வரை வழிக் கேட்டில் சென்றுக் கொண்டிருப்பவர்களில் காணப்படும் அதே மயக்கம் இப்போது அழைப்புப் பணியில் ஆர்வமாக ஈடுபட்டு வரும் சகோதரர்களிடம் காணப்படுவது தான், உண்மையில் இது மிகவும் வேதனைக்குரிய ஒரு விஷயமாகும். இவர்களும் இறைவனது தெளிவான கட்டளைகளை விட தாங்கள் அறிஞர்களாக மதிப்பவர்களின் மனித அபிப்ராயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். நீங்கள் குறிப்பிட்டுள்ள “தர்கா முரசு” 1987ல் தவ்ஹீத் மவ்லவிகளால் வெளியிடப்பட்ட ‘ஆலிம் முரசு’ என்ற வெளியீட்டைக் காப்பியடித்துத் தயாரானதே.

இந்த மயக்கம் எப்படி ஏற்படுகிறது என்பதையும் விரிவாக ஆராய்வோம். நீங்கள் எழுதிக் கேட்டிருக்கும் தர்கா முரசு என்ற நூலில் காணப்படும் விஷயங்கள் அனைத்தும் ஒரு முஸ்லிமின் ஈமானைப் பறித்து அவனை நரகில் கொண்டு சேர்க்கும் ஷிர்க்கான காரியங்கள் என்பதில் ஐயமில்லை. எனவே அவைப் பற்றி மக்களை அச்சுறுத்தி எச்சரிப்பதும், மிகக் கடுமையான முறையில் கண்டிப்பதும் குர்ஆன், ஹதீஸ் வழியேயாகும். குர்ஆன் ஹதீஸை முறைப்படி அறிந்தவர்கள் இதை மறுக்க முடியாது.

ஆயினும் குர்ஆன், ஹதீஸ் வழி நின்று அவற்றை மட்டும் எடுத்துச் சொன்னால் போதும். யாருடைய உன்னத ஈமான் (நன் நம்பிக்கை) இருக்கிறதோ அவர்களுக்கு நிச்சயமாகப் பலன்தரும். அவர்கள் சத்தியத்தை விளங்கி நேர்வழிக்கு வந்து விடுவார்கள். ஆனால் இவர்களின் எண்ணிக்கை அல்லாஹ் குர்ஆனில் பல இடங்களில் கூறி இருப்பதுப் போல் மிகவும் சொற்பமாகவே இருக்கும்.

இப்போது இவர்கள் இந்தச் சொற்ப எண்ணிக்கையைக் கொண்டு திருப்தி அடையாமல் தங்கள் சொந்தத் திறமையைக் கொண்டு அதிகமான மக்களை சத்தியத்தை உணர வைத்து விட முடியும் என்று நம்புகின்றனர். ஷைத்தானும் அவர்களுக்கு அப்படி ஒரு மாயத்தோற்றத்தைக் காட்டுகிறான். உதாரணத்திற்கு இந்த “தர்கா முரசு” நூலையே எடுத்துக் கொள்வோம்.

அதில் காணப்படும் குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள் மட்டும் தொகுக்கப்பட்டு அவற்றிலுள்ள கேலிச் சித்திரங்களும், நையாண்டிகளும் இல்லாமல் இந்நூல் வெளியிடப்பட்டிருந்தால் மிகச்சொற்ப எண்ணிக்கையினரே அதனை வாங்கிப் படித்து உண்மையை உணர முற்படுவார்கள். அதே சமயம் அந்த நூலில் இந்தக் கேலிச்சித்திரங்களும், நையாண்டிகளும் இணைக்கப்பட்டிருப்பதால் முன்பு நான் குறிப்பிட்டுள்ள அந்த நூலை வாங்கிப் பார்ப்பவர்களைவிட அதிகமான எண்ணிக்கையினர் தங்களின் இயற்கையான மனித பலஹீனம் காரணமாக ஆவலுடன் வாங்கிப் படிக்கிறார்கள்.

இதனால் அந்நூலை வெளியிட்டவர்கள் இரண்டு வகையில் திருப்திபட்டுக் கொள்ள முடிகிறது. ஒன்று தங்கள் திறமையால், யூகத்தால் அதிகமான மக்களை அந்த நூலை வாங்கிப் படிக்க வைத்து குர்ஆன், ஹதீஸை விளங்க வைத்து விட்டோம் என்ற திருப்தி. நூல் அதிக எண்ணிக்கையில் விற்பனையாவதால் கிடைக்கும் பொருளாதாரம் பற்றிய திருப்தி, ஆக இறைவன் காட்டியுள்ள வழியை விட தாங்கள் கற்பனை செய்த வழி மேலானது என்ற எண்ணம் இவர்களுக்கு ஏற்ப்பட்டு விடுகிறது.

இதே சிந்தனையில் இன்று பலர் மார்க்க அடிப்படையில் கவிதைகள் மறுக்கப்பட்டிருந்தும், குர்ஆன், ஹதீஸில் மார்க்கத்தை கவிதை வடிவிலாக்கி தாங்கள் மார்க்கத்திற்கு பெரும் சேவை செய்வதாக மனப்பால் குடிக்கின்றனர். ஆக குர்ஆன், ஹதீஸ் போதனைக்கு முரணாக மனிதனின் பலஹீனத்தைப் பயன்படுத்தி மார்க்கத்தைப் போதித்து விடலாம் என இவர்கள் நப்பாசைக் கொள்கின்றனர் இதுவெறும் கானல் நீரேயாகும்.

கேலிக்கைகளிலும், நையாண்டிகளிலும், கேலிச் சித்திரங்களிலும் மற்றும் கவிதைகளிலும் மனிதனுக்கிருக்கும் பலஹீனத்தின் காரணமாக ஆர்வத்துடன் இப்படிப்பட்ட ஆக்கங்களை நெருக்கினாலும் அவர்களின் எண்ணத்திற்கேற்ப அவை அவர்களை மார்க்கத்தால் விலக்கப்பட்டவற்றில் மேலும் முன்னேறச் செய்யுமே அல்லாமல், இவர்கள் எதிர்ப்பார்ப்பதுப் போல் சத்திய மார்க்கத்தில் ஆர்வமுடையவர்களாக அவர்களைத் திருத்தாது. நிச்சயமாக அமல்கள் எண்ணத்தை வைத்தே அமையும்’ என்ற நபி(ஸல்) அவர்களின் போதனைக்கு மாற்ற மானநிலையை இவர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். இது சாத்தியமா? ஒருபோதும் சாத்தியமில்லை.

இதற்கு மேலும் விளங்கவில்லை என்றால், மக்களுக்கு நீதியையும், ஒழுக்கத்தையும் கற்ப்பிக்கும் நோக்கத்துடன் தான் நாங்கள் சினிமாப் படங்களைத் தயாரிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு அதன்படி நல்லக் கருத்துக்களைக் காட்டினாலும், மனிதனின் இயற்கையான பலஹீனம், மற்றும் அவனது எண்ணம்(நிய்யத்) காரணமாக, சினிமாவில் காட்டப்படும் நல்லவற்றை விட்டு, கெட்டவற்றையே எடுத்துச் செயல்படுத்துவதைச் சிந்தித்துப் பார்த்தாவது விளங்கிக் கொள்வார்களாக, எனவே குர்ஆன், ஹதீஸ் அனுமதிக்காத நடைமுறைகளைக் கொண்டு ஒரு போதும் மார்க்த்தை நிலைநாட்ட முடியாது என்பதை இந்தச் சகோதரர்கள் உணர வேண்டும்.

இப்படிப்பட்ட நடைமுறைகளின் காரணமாக அதிகமான மக்கள் தங்களின் பால் ஈர்க்கப்படுகிறார்கள் என்பதில் இவர்கள் மயங்கக் கூடாது. இது வெறும் மாயையேயாகும். விளங்குவதற்காக ஓர் உதாரணம் தருகிறோம்.

ஆடு, மாடுகள் ஒரு ஈத்துக்கு ஒன்று அல்லது இரண்டு குட்டிகள் போடுகின்றன. அதே சமயம் பன்றி ஒரே ஈத்தில் பதினைந்து, பதினாறு என்று பீச்சித் தள்ளுகிறது. இன்று உலகளாவிய அளவில் ஆடு, மாடுகளை உணவாக உபயோகிப்பவர்களைவிட பன்றியை உணவாக உபயோகிப்பவர்கள் குறைவு. மனித யூகப்படி பன்றி உற்ப்பத்தி அதிகம். உபயோகம் குறைவு. ஆடு மாடுகள் உற்ப்பத்திக் குறைவு. உபயோகம் அதிகம் அப்படியானால் அதிகமாக காணப்பட வேண்டியது எது? பன்றியா? ஆடுமாடுகளா?

ஆனால் உண்மையில் அதிக அளவில் எங்கும் எவற்றைப் பார்க்கிறோம். சிந்தித்துப் பாருங்கள் பன்றி மீதுள்ள இழிவின் காரணமாக அல்லாஹ் பன்றியின் உற்ப்பத்தியில் அபிவிருத்தியை (பரக்கத்) வைக்கவில்லை. ஆனால் ஆடு மாடுகளின் உற்ப்பத்தியில் அபிவிருத்தியை (பரக்கத்) வைத்திருக்கின்றான். அல்லாஹ் அபிவிருத்தியை (பரக்கத்) போடாத எந்த முயற்சியும் வெற்றி அடைவதில்லை. அப்படியானால் அல்லாஹ்வை மறந்து இவர்கள் தங்கள் மனித யூகப்படி சாதித்து விட முடியும் என்று நம்பினால் அதில் அல்லாஹ்வின் அபிவிருத்தியை (பரக்கத்) இருக்குமா? இதனை அழைப்புப் பணியில் ஆர்வமாக ஈடுபட்டுள்ள சகோதரர்கள் சிந்தித்து உணர வேண்டும்.

இத்துடன் நிறுத்திக் கொண்டால் விளக்கம் நிறைவு பெறாது. அழைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சகோதரர்களுக்கு  மயக்கத்தைக் கொடுத்திருக்கும் இன்னும் இரண்டு விஷயங்களையும் குறிப்பிட்டு விளக்கியாக வேண்டும்.

அதிகமான மக்களைத் தங்கள் பால் கவர்ந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் குர்ஆன், ஹதீஸுக்கு முரணாக தங்கள் சொந்த அனுமானப்படியும், அனுபவத்தைக் கொண்டும் இந்த இரண்டுக் காரியங்களையும் மார்க்கத்தில் நுழைத்துள்ளனர் தவ்ஹீத் மவ்லவிகளும் அவர்களைச் சார்ந்தவர்களும் ஒன்று. தவ்ஹீத் மவ்லவிகளின் புரோகித சபையான ஜ.உ.ச வாகும். மற்றது இயக்கமோ பிரிவுப் பெயரோ இல்லை என்று இவர்கள் சொல்லிக் கொண்டே சமுதாயத்திலிருந்து தங்களைப் பிரித்துக்காட்டும் ஜம்யியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ். (JAQH) என்ற பிரிவுப் பெயராகும்.

இவை இரண்டையும் நியாயப்படுத்தி இவர்கள் கூறும் காரணங்களை ஆராய்வோம். முதலில் ஜ.உ.சபையை எடுத்துக் கொள்வோம்.

முகல்லிது மவ்லவிகள் ஜ.உ.ச என்ற பெயரால் ஒரு புரோகிதர்களின் சபையை அமைத்துக் கொண்டு மார்க்க முரணான காரியங்களை மக்களுக்குக் கூறி மக்களை வழிக்கெடுத்து வருகின்றனர். மக்களும் முல்லாக்கள் மீதுள்ள அளவுக் கடந்த பக்தியால் அவர்கள் சொல்பவற்றை அப்படியே கண்ணை மூடிக் கொண்டு செயல்படுத்தி வருகின்றனர். அதற்கு மாற்றமாக நாம் என்னத்தான் கூப்பாடுப்போட்டாலும் அது மக்களின் காதில் ஏறமாட்டேன் என்கிறது. எனவே நாம் அவர்களைப் போல் ஒரு ஜ.உ.ச. அமைத்துக் கொண்டு குர்ஆன், ஹதீஸை எடுத்துச் சொன்னால் மக்கள் காதுக் கொடுத்துக் கேட்பார்கள். அது நல்ல பலனைத் தரும் என்பது தவ்ஹீத் மவ்லவிகளின் வாதம்.

இவர்களின் இந்த வாதம் வெளித்தேற்றத்தில் சரியாகவே தெரிகிறது. கடந்த 1000 வருடங்களாக மக்களின் உள்ளங்களில் ஆழப்பதிய வைக்கப்பட்டுள்ள ஒரு விஷயம் இந்த முல்லாக்கள் மீதுக் கொண்டுள்ள மூடபக்தி என்பதை நாம் மறுக்கவில்லை. அவர்கள் தான் அறிந்தவர்கள்-ஆலிம்கள், நாம் அறியாதவர்கள் அவாம்கள் என்ற தவறான எண்ணம், தாழ்வு மனப்பான்மை மக்களின் உள்ளங்களில் வேறூன்றிப் போயிருக்கின்றது. என்பதும் உண்மை தான்.

தவ்ஹீத் சிந்தனை ஏற்ப்பட்டு அழைப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் பெரும்பான்மை சகோதரர்களும் இந்த மூட நம்பிக்கையிலிருந்து இன்னும் விடுபடவில்லை என்பதும் உண்மை தான்.  அரபி மொழித் தெரியாதவர்கள் மார்க்கத்தை முழுமையாக விளங்க முடியாது என்ற மூட நம்பிக்கை இவர்களையும் ஆட்கொண்டுத்தான் இருக்கின்றது. அரபி அஜமியை விட உயர்ந்தவனும் இல்லை, அஜமி அரபியை விட உயர்ந்தவனுமல்ல. என்ற நபி(ஸல்) அவர்களின் அமுத வாக்கைவிட இவர்கள் தங்கள் மனித யூகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

எனவே அவர்களும் இந்த தவ்ஹீத் மவ்லவிகளின் ஜ.உ.சபையால் ஈர்க்கப்படுகிறார்கள்- அதனைச் சரி காண்கிறார்கள் என்பதையும் நாம் மறுக்கவில்லை. அதன் காரணமாக தவ்ஹீத் மவ்லவிகளின் ஜ.உ.ச திட்டம் நல்ல பலனைத் தருவது போன்ற ஒரு தோற்றம் உருவாகி இருக்கிறது என்பதும் உண்மைதான். ஆனால் இவர்களின் அனுபவங்கள், அனுமானங்கள் எதுவுமே மார்க்கத்தின் உரை கல்லாக முடியாது.  ஆனால் மார்க்கத்தின் உரைக்கல் குர்ஆன், ஹதீஸ் மட்டுமே.

எனவே குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் புறக்கணித்து விட்டு தங்கள் சொந்த யூகங்களைக் கொண்டு மார்க்கத்தை நிலைநாட்ட முற்ப்பட்டிருக்கிறார்கள். ஷைத்தானும் இதனை அவர்களுக்கு அழகாகக் காட்டுகிறான். எனவே அல்லாஹ்வின் திருப்தியோ, அவர்களின் முயற்சிகளில் அல்லாஹ்வின் அபிவிருத்தியோ (பரக்கத்) இருக்க முடியுமா? இதனைச் சுய சிந்தனையாளர்களே உணர முடியும். அழைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களில் பலர் முகல்லிதுகளின் ஜ.உ.சவை மறுத்தாலும் தவ்ஹீத் மவ்லவிகளின் ஜ.உ.சவை ஏற்றுக் கொண்டதால், இவர்களது தாழ்வு மனப்பான்மையில் மாற்றமில்லை – தக்லீது மனப்பான்மையில் மாற்றமில்லை என்பதே உண்மையாகும்.

ஏனெனில் முன்னய தக்லீது செய்யும் இவர்கள் தங்களைத் தக்லீது செய்வதற்கே  இவர்கள் ஜ.உ.ச அமைந்துள்ளதாகவே கொள்ள முடியும். அவர்களது வாக்குமூலமும் அதனையே உறுதிப் படுத்துகிறது. தக்லீதை மறுப்பவர்கள் ஒரு போதும் தக்லீதின் அடிப்படையில் அமைந்துள்ள ஜ.உ.சபையை ஆதரிக்க முடியாது.

எனவே தவ்ஹீத் மவ்லவிகளும் தங்களை ஒரு கூட்டம் நம்பிச் செயல்பட வேண்டும் என்று விரும்புறார்களே அல்லாமல் மக்களை சுய சிந்தனையாளர்களாக மாற்ற வேண்டும் என்ன எண்ணம் அவர்களுக்கு இல்லை என்பதையே அவர்களின் ஜ.உ.ச படம் பிடித்துக் காட்டுகிறது என்று அவர்கள் தங்களின் ஜ.உ.ச. படம்  பிடித்துக் காட்டுகிறது. என்று அவர்கள் தங்களின் ஜ.உ.ச வைக் கலைத்து விட்டு ஆலிம் – அவாம் என சமுதாயத்தில் முல்லாக்கள் ஏற்ப்படுத்தி வைத்துள்ள பாகுபாட்டினை – ஏற்றத்தாழ்வை ஒழித்து விட்டு சகோதரத்துவ சமத்துவ சமுதாயம் அமைக்க முன் வருகிறார்களோ அப்போது தான் அவர்கள் சத்தியத்தை நிலை நாட்டப் பாடுபடுகிறவர்கள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியும். மேலதிக விளக்கத்திற்கு ஜ.உ.ச ஓர் ஆய்வு’ கட்டுரையை பார்க்கவும்.

ஆக ஜ.உ.ச அமைப்பும் மனித யூகத்தாலும் மயக்கத்தாலும் இவர்களே அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாறாக அமைத்துக் கொண்ட ஓர் அமைப்பு என்பதையும் புரிந்துக் கொண்டீர்கள்.

அடுத்து தவ்ஹீத் மவ்லவிகளின் c பிரிவுப் பெயரின் நிலையையும் விரிவாக விளக்கி விடுவோம்.

 JAQH ஐ நியாயப்படுத்தி அவர்கள் கூறும் காரணங்கள்:

முஸ்லிம்களை ஒன்றிணைத்துச் செயல்படுவதற்கு உதவியாக இருக்கிறது. ஆங்காங்கே கிளைகள் அமைத்துக் கட்டுக் கோப்புடன் செயல்படுவதற்கு உறுதுணையாக இருக்கிறது. அங்காங்கேயுள்ள சகோதரர்கள் உற்சாகத்துடன் அழைப்புப் பணியில் ஈடுபடுவதற்குக் காரணமாக இருக்கிறது. பல பகுதிகளிலுள்ளவர்கள் ஒருவரோடொருவர் தொடர்பு ஏற்ப்படுத்திக் கொள்ளவும் கலந்தாலோசனைகள் செய்து தீன் பணி செய்ய மிகவும் உதவியாக இருக்கிறது.

அரசாங்க சட்டத் திட்டங்களின்படி நாம் அமைப்பு ரீதியாகச் செயல்பட வழிவகை ஏற்படுகிறது. எங்களது சொந்த அனுபவத்திலேயே இந்த எங்களின் முயற்சி காரணமாக அழைப்புப் பணியில் நல்ல வளர்ச்சி ஏற்ப்பட்டுள்ளதை நாங்கள் கண்கூடாகப் பார்க்கிறோம். எங்களது இந்த அணுகுமுறைகளை மறுப்பவர்கள் சின்னஞ்சிறிய வட்டத்தில் அழைப்புப் பணி செய்கின்றனர். நாங்களோ பெரியதொரு வட்டத்தில் அழைப்புப் பணியை வெற்றிகரமாக செய்து வருகிறோம். இவை எல்லாம் தவ்ஹீது மவ்லவிகள் தங்கள் JAQH பிரிவுப் பெயரை நியாயப்படுத்திக் கூறி வரும் கூற்றுக்களாகும்.

மேல் எழுந்த வாரியாகப் பார்ப்பவர்கள் இவை அனைத்தையும் ஏற்றுக் கொள்ளவே செய்வார்கள். ஆழ்ந்து நோக்குபவர்கள் மட்டுமே இவற்றிலுள்ள கெடுதிகளையும், நச்சுக் கருத்தையும் புரிந்துக் கொள்ள முடியும். இவை அனைத்தும் ‘பித்அத் ஹஸனா’ என்ற போர்வையில் மக்களை நரகில் சேர்க்கும் பித்அத்துக்களை நியாயப்படுத்துவோரின் வாதத்தை ஒத்த வாதங்களேயாகும்.

இவர்களது வாதப்படி, மார்க்கத்தை முறையாக நிலைநாட்டத் தேவைப்படும் சாத்தியக் கூறுக்கள் அனைத்தையும் நிறைவு செய்யாமல் நபி(ஸல்) அவர்கள் நம்மைப் பரிதவிக்க விட்டுச் சென்றுள்ளார்கள்; தனது தூதத்துவப் பணியைப் பூரணமாக நிறைவு செய்வில்லை என்று தான் பொருள் கொள்ள முடியும். குர்ஆன், ஹதீஸை மட்டும் கொண்டு மார்க்கத்தைச் செயல்படுத்த முடியாது. மார்க்கத்தை முன்னோர்களின் விளக்கங்களே நிறைவு செய்துள்ளன என்ற முகல்லிது முல்லாக்களின் வாதத்திற்கும் இவர்கள் வாதத்திற்கும் பெரிய வித்தியாசம் ஏதுவுமில்லை. மார்க்கத்தை இவர்களின் சொந்த கற்பனையான JAQH தான் தூக்கி நிறுத்துகிறது என்ற எண்ணம் எவ்வளவு பெரிய தவறான எண்ணம் என்பதை இவர்கள் புரிய வேண்டும்.

இவர்களின் இந்த மயக்கத்திற்கும் தெளிவ கொடுப்பது நமது கடமையாகும். நாம் முன்பே விளக்கியதுப் போல் மக்களின் ருசிக்குத் தக்கவாறு நாம் செயல்படத் தயாராகிவிட்டால் மக்களும் நம்மை நோக்கி ஈர்க்கப்படுவார்கள் என்பதில் ஐயமேயில்லை. இதனை அல்லாஹ் அழகாக இவ்வாறு விவரிக்கின்றான்.

‘நிச்சயமாக நாம் உமக்கு இறைச் செய்தி(வஹீ); மூலம் அறிவித்ததை விட்டு, அஃதல்லாததை நம்மீது நீர் பொய்யாகக் கற்பனை செய்து கூறும்படி உம்மை அவர்கள் திருப்பிவிடவே இருந்தார்கள். அவ்வாறு நீ செய்திருந்தால் உம்மை அவர்கள் (தங்கள்) நன்பராகவும் எடுத்துக் கொண்டிருப்பார்கள். உம்மை நாம் ஸ்த்ரப்படுத்தி வைக்காவிட்டால் நீர் ஒரு சிறிதேனும் அவர்கள் பால் சாய்ந்து விடக் கூடுமாயிருந்தது.

அவ்வாறு நீர் சாய்ந்திருந்தால், நீர் ஜீவித்திருக்கும் போதும், நீர் மரித்தப் பின்னரும் இரு மடங்கு (வேதனையை)  சுகிக்கும்படி செய்திருப்போம் அதன் பின்னர், நமக்கு எதிராக உமக்கு உதவி செய்வோர் ஒருவரையும் நீர் காண மாட்டீர்.      (17:73, 74,75)

மக்களின் மனோ நிலைக்கு ஏற்றவாறு செயல்பட்டால், அவர்கள் தமது உற்ற நண்பர்களாக ஆகிவிடுவார்களாயினும் அவ்வாறு செயல்படுவதற்கு, அல்லாஹ் தனது இறுதித் தூதருக்கும் அனுமதி வழங்கவில்லை. மிகக் கடுமையாக எச்சரித்துள்ளான், மனிதனுக்குள்ள இயற்கையான பலஹீனப்படி நபி(ஸல்) அவர்களே மக்களின் மனோ நிலைக்கு ஏற்றவாறு சாயக்கூடியவர்களாக இருந்ததையும், அவ்வாறு சாய விடாமல் தான் ஸ்திரப்படுத்தியதாகவும் அல்லாஹ் கூறுகிறான். அப்படி என்றால் மற்றவர்களின் நிலை பற்றி நாம் விளக்கவும் வேண்டுமா?

மேலும் அப்படி மக்களின் நிலைகளுக்கு ஏற்றவாறு மார்க்கத்தில் எதனையும் சேர்த்தால் இவ்வுலகிலும், மறுமையிலும் இருமடங்கு வேதனையைக் கொண்டு தண்டிப்பதாக எச்சரித்துள்ளான். எந்த சக்தியும் அதிலிருந்து காப்பாற்ற முடியாது என்றும் கண்டித்துள்ளான்.

இந்த நிலையில் இவர்களது சொந்த அனுமானப்படி அமைக்கப்பட்டுள்ள JAQH காரணமாக அதிகமானோர் ஈர்க்கப்படுகிறார்கள் என்று மயங்குவது எத்தனைப் பெரிய கொடுமை என்பதை விளங்க வேண்டும். மக்களின் மனோ நிலைக்கு ஏற்றவாறு எந்த அளவு நாம் வளைந்து கொடுக்கிறோமோ அந்த அளவு மக்களும் நம்மால் கவரப்பட்டு நம்மை நோக்கி வருவார்கள் என்பதில் சந்தேகமேயில்லை. இவர்களின் JAQHக்குப் பின்னால், இஸ்லாத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடனேயே பழனி பாபாவால் அமைக்கப்பட்டுள்ள ஜிஹாத் அமைப்பு JAQHஐ விட முஸ்லிம்களை கிளைகளை குறுகிய காலத்தில் அவர்கள் பெற்றுள்ளனர்.

இவர்களது அல் ஜன்னத் பத்திரிக்கையை விட அவர்களின் “அல்முஜாஹித்” பத்திரிக்கை முஸ்லிம்களிடையே இதழை விட பன்மடங்கு அதிகமாக வெளியிடப்படுகிறது. இவர்களை விட அவர்கள் பெரிய வட்டத்தில் செயல்படுத்தி வருகின்றனர் என்பதை இவர்களால் மறுக்க முடியுமா? இவர்களின் யூகப்படிப் பார்த்தால், சத்திய மார்க்கத்தை இவர்களை விடத் திறம்பட அவர்கள் தான் வளர்த்து வருகிறார்கள் என்று ஒப்புக்கொள்ளத் தயாரா?

காதியானிகள் அஹ்மதியா இயக்கம் மூலம் உலகளாவிய அளவில் கிளைகள் அமைத்து, இவ்வுலகில் வெற்றிக்கரமாகச் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் தாங்கள் சத்தியத்தில் இருப்பதாக உலகளாவிய அளவில் அவர்கள் செழித்து வளர்ந்திருப்பதையே ஆதாரமாகக் காட்டி வாதிடுகின்றனர். தவ்ஹீத் மவ்லவிகள் ஒப்புக்கொள்ளத் தயாரா? முல்லாக்கள் சமுதாயத்தில் கடந்த 1000 வருடங்களாக வேறூன்றச் செய்துள்ள ஆலிம் – அவாம் வேறுபாடு என்ற மூட நம்பிக்கையின் காரணமாக முகல்லிது மவ்லவி வர்க்கத்தின் பின்னால் சமுதாயத்தின் 90% சென்று கொண்டிருக்கும் பொது தவ்ஹீது மவ்லவி வர்க்கத்தின் பின்னால் ஒரு கூட்டம் சேர்வதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது. சமுதாயத்தில் திட்டமிட்டுத் திணிக்குப்பட்டுள்ள இந்த ஆலிம்-அவாம் மூட நம்பிக்கையை இவர்களும் தங்களுக்கச் சாதகமாகப் பயன்படுத்துகின்றனர் என்பதே உணமையாகும்.

இந்த நிலையில் ‘அவர் சிறிய வட்டத்தில் செயல்படுகிறார்; நாமோ பெரிய வட்டத்தில் செயல்படுகிறோம்’ என்று பெருமைப்பட்டுக் கொள்வதிலும், நம்மை நையாண்டி செய்வதிலும், இவர்கள் என்ன லாபத்தைக் கண்டு விடப்போகிறார்கள். மக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு மார்க்கத்தை எந்த அளவு வளைக்கிறோமோ அந்த அளவு மக்களின் ஆதரவு கிடைக்கும் என்பதற்கு இதைவிட ஆதாரம் வேண்டுமா? மக்களின் ஆதரவை எதிர்ப்பார்த்துச் செயல்படுகிறவன் ஒருபோதும் சத்தியத்தை உள்ளது உள்ளபடி சொல்ல முடியாது என்பதை இந்த தவ்ஹீது மவ்வலவிகளும் அவர்களது ஆதரவாளர்களும் உணர வேண்டும்.

நமது அசல் நோக்கம், அல்லாஹ்வின் பொருத்தமாக இருக்க வேண்டும். மக்களின் பொருத்தத்தை நோக்கமாகக் கொண்டு செயல்படக் கூடாது. அல்லாஹ்வின் பொருத்தத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டால் அன்றி அல்லாஹ்வின் பொருத்தம் கிடைக்காது. நமது அறிவுரையை ஒரு நபர்கூட ஏற்கத் தயாராக இல்லை என்றாலும் நாம் கூறுவது சத்தியமாகவும், அல்லாஹ்வின் பொருத்தம் நாடியும் செய்யப்பட்டிருந்தால் நிச்சயம் நாம் சுவர்க்கம் புகமுடியும். ஒரு சிலரையாவது சத்திய வழியில் கொண்டு வந்தால் மட்டுமே சுவர்க்கம் கிடைக்குமென்று அல்லாஹ் விதிக்கவில்லை.

மாறாக சத்தியத்தை உள்ளது உள்ளபடி எடுத்துச் சொல்லி விடுவதே நமது கடமை என பல இடங்களில் வலியுறுத்தியுள்ளான். பல வருடங்கள் செய்த பிரச்சாரப்பணி மூலம் ஒரு நபரைக் கூட நேர்வழிக்குக் கொண்டு வராதா பல நபிமார்கள் தன்னந்தனியாக சுவர்க்கம் புகுவார்கள் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் காணப்படுவதை நாம் மனிதில் கொண்டு செயல்பட வேண்டும். அதற்கு மாற்றமாகக் கூட்டத்தைச் சேர்ப்பதற்காக சத்தியத்தை வளைத்தால் அந்தக் கூட்டத்தோடு நரகம் புகுந்து 33:66,67,68 மற்றும் 38: 56-64 வசனங்களில் காணப்படுவதுப் போல் ஒருவரை ஒருவர் குற்றப்படுத்தியும் சபித்தும் பிரலாபித்துக் கொண்டு கடும் துன்பம் அனுபவிக்க நேரிடும்.

ஆக சத்திய மார்க்கத்தை நிலைநாட்டும் நல்ல நோக்கத்துடனும் குர்ஆன், ஹதீஸுக்கு முரணான கேலிச் சித்திரங்கள், நையாண்டிகள் கொண்ட நூல்களை வெளியிடுவது, கவிதை வடிவில் குர்ஆன், ஹதீஸ் போதனைகளை வெளியிடுவது, ஜ.உ.ச அமைப்பது JAQH  போன்ற பிரிவுப் பெயர்கள் அமைத்து தீன் பணி செய்வது, அல்லது தனியொரு இயக்கம் பெயரில் செயல்படுவது இவை அனைத்தும் மக்களிடையே நல்ல பலன்களைத் தருகின்றன என்ற மயக்கத்தைத் தந்தாலும் அவற்றின் இறுதி முடிவு மிகக் கெட்டதாகவே முடியும். அவற்றைக் கொண்டு அல்லாஹ்வின் பொருத்தமோ, அந்த முயற்சிகளில் அல்லாஹ்வின் அபிவிருத்தியோ இருக்காது என்பதை நாம் தெளிவாகப் புரிந்துக் கொள்ள வேண்டும்.

தவ்ஹீத் மவ்லவிகளும், மற்றும் அழைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களும் சத்தியத்தை விளங்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் இந்த விளக்கங்கள் தரப்பட்டுள்ளனவே அன்றி அவர்கள் மீது நமக்கு குரோதமோ, விரோதமோ கடுகளவும் இல்லை என்பதைத் தெளிவுப்பட சொல்லி வைக்கிறோம்.

———————

திருடனோ, திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்து தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கிறான்.    (5:38)

  தம் வாயதனைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்து விட அவர்கள் விரும்புகின்றார்கள். ஆனால் நிராகரிப்பவர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியைப் பூர்தியாகி வைக்காமல் இருக்க மாட்டான்.     (9:32)

Previous post:

Next post: