பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம்
அந்நஜாத்
இஸ்லாமிய இலட்சிய மாத இதழ்
பிப்ரவரி 2020
ஜமாஅத்துல் ஆகிர் – ரஜபு 1441
- தலையங்கம்!
- முஸ்லிம்களின் போலி ஒற்றுமை வெற்றியைத் தராது!
- “மனித யூகம் மார்க்கம் ஆகாது!
- அமல்களின் சிறப்புகள்…
- ஆதிகால வேதங்களும்! இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்!!
- ஸலவாத் ஏன் கூறவேண்டும்?
- சுவர்க்கம் என்பது மறைவான இறை நம்பிக்கையில் உள்ளதாகும்!
- அறிந்து கொள்வோம்…
- இஸ்லாமியக் கொள்கை விளக்கம…
- அழைப்புப் பணி! படிப்பினை… ஷ
*********************************************************
தலையங்கம்!
எம் தாய் நாட்டின் அவலம்!
எம் தாய்நாடு இந்தியா, தன்னுடைய அஸ்ஸாம் மாநிலத்தில் குடியுரிமை பறிக்கப்பட்ட மக்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வாகனங்களில் ஏற்றி அனுப்புகின்றனர். இதை சமூக வலைதளங்களில் பரவலாக காணமுடிந்தது. எவருடைய கைகளிலும் அடுத்த வேளைக்குத் தேவையான உடமை எதையும் எடுத்துக் கொள்ள முடியாத நிலையில் ஏற்றப்படுவது பட்டவர்த்தனமாக தெரிகிறது. பெண்கள் உட்பட அனைவரும், வாகனத்தில் ஏற மனமில்லாதவர்களாய், ஏற மறுப்பவர்களாய், அணிந்திருக்கும் ஆடையுடன், மாற்றுத் துணிக்கு வழி இல்லாமல், எங்கே செல்கிறோம் என்று கூட தெரியாமல் வலுக்கட்டாயமாக ஏற்றி அனுப்பப்படுகிறார்கள். அந்த காட்சியை நினைக்கும் போதெல்லாம் எம் நெஞ்சம் பதைபதைக்கிறது. எம் அடிவயிறு பிசையப்படுகிறது. ஆகக் கொடூரமான காட்சி! இது ஜனநாயக நாடா?
“FOR THE PEOPLE, BY THE PEOPLE, OF THE PEOPLE” மக்களுக்காக, மக்களால் நடத்தப்படும் மக்களுடைய ஆட்சியா இது? இல்லையா?
“FOR THE RULER, BY THE RULER, OF THE RULER” ஆட்சியாளருக்காக, ஆட்சியாளரால், (நடத்தப்படும்) ஆட்சியாளருடைய ஆட்சி இது. அப்படியானால் எம் தாய்நாடு இந்தியா குடியரசு நாடு இல்லையா? தம் சொந்த மக்களையே கொடுமைப்படுத்தும் இதன் சூத்திரதாரிகள் எதிர்காலத்தில் அம்மக்களின் சாபத்திற்கு உள்ளாகியே தீர்வார்கள் என்பது சர்வ நிச்சயம்.
எம் தாய்நாடு இந்தியா பல மாநிலங்களையும் ஒவ்வொரு மாநிலங்களிலும் பகுதி பகுதியான இடங்களை கட்டபொம்மன் போன்ற பல குறுநில மன்னர்கள் ஆட்சி புரிந்தனர். முழு இந்தியாவையும், பல மன்னர்களும் பல பேரரசர்களும் ஆட்சி செய்தனர். மவுரியர்கள், திராவிடர்கள், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், அசோகர், அலெக்சாண்டர், மொகலாயர்கள், ஆங்கிலேயர்கள் என இன்னும் நீளும் பட்டியலில் ஒவ்வொருவரும் மாறி மாறி பல நூற்றாண்டுகளாக வெகு நீண்ட காலம் ஆட்சி செய்தனர். எல்லா காலங்களிலும் மக்கள் நிம்மதியாய் வாழ்ந்து வந்தனர்.
சந்திரகுப்த மவுரியரின் ஆட்சியை பொற்காலம் என்றும், சோழமன்னர் சிபி சக்கரவர்த்தி நீதி வழுவாத மன்னராக ஆட்சி செய்தார் என்றும், இமயவரம்பில் மீன் கொடி ஏற்றி ஆட்சி செய்த பாண்டிய மன்னன் வீர தீரனாக திகழ்ந்தான் என்றும் இப்படியாக ஒவ்வொரு ஆட்சியாளரையும் வானளாவ புகழ்கிறது சரித்திரம். “அச்சம் என்பது மடமையடா! அஞ்சாமை திராவிடர் உடமையடா!” என்று கண்ணதாசன் எழுதிச் சென்றார். ஆங்கிலேயர் உட்பட எல்லோரும் சிறப்பாக பிறர் பாராட்ட எம் தாய்நாட்டை ஆண்டனர்.
வெகு நீண்ட காலம் ஆண்ட பல இந்து மன்னர்கள் எவரும் மக்கள் மீது தம் மதத்தை திணிக்கவில்லை. பிற மதத்தினரை இந்துவாக்கியதாக வரலாறு இல்லை. எட்டு நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த எந்த மொகலாய மன்னரும் பிறரை முஸ்லிம் ஆக்கியதாக சரித்திரம் இல்லை. எந்த ஒரு ஆங்கிலேயரும் பிறரை கிறிஸ்தவராக ஆக்கியதாக ஆதாரமில்லை. ஒவ்வொரு மதத்தினரும் பிற மதத்தினரை மதித்து வந்தனர். எவரும் மற்றவரை புண்படுத்தியது இல்லை, சுதந்திரத்திற்கு முன்னரே, அரசியல் சாசன சட்டம் எதுவும் வரையப்படாமலே, மனிதநேய அடிப்படையில் எம் தாய் நாடு மதசார்பற்ற நாடாக கோலோட்சிக் கொண்டிருந்தது. இது ஆச்சரியமாக எமக்குப் படவில்லை. ஏனெனில் இதுதான் இந்தியர்களின் வழமையான பண்பாடு. அதனால் தான், உலக அரங்கில் இந்தியா தலை நிமிர்ந்து உலா வந்து கொண்டிருந்தது.
ஆங்கிலேயரிடமிருந்து விடுதலைப் பெற்று வாழ விரும்பிய எம் முன்னோர்கள் சதந்திரத்திற்காக தண்டி யாத்திரை, உப்பு சத்தியாகிரகம் போன்ற விடுதலைப் போராட்டங்கள் மூலம் போராடி சுதந்திரம் பெற்றுத் தந்தனர். தலித்கள், பிற்படுத்தப்பட்டோரை அடிமைப்படுத்துவதும் சாதி வேறுபாடுகளை முதலில் ஒழிக்க வேண்டும் என டாக்டர் அம்பேத்கார் அப்போது வலியுறுத்தினர். காந்திஜியோ நாட்டின் சுதந்திரத்திற்கு முன்னுரிமை கொடுத்தார். இருவருக்கும் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், சட்டமேதை டாக்டர் அம்பேத்கார் வரைந்த மதசார்பற்ற அரசியல் சாசனம் காந்திஜியாலும் ஒப்புக்கொள்ளப்பட்டு அதுவே இந்தியாவில் சட்டமானது.
சுதந்திரம் பெற்றதிலிருந்து ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி, நரசிம்மராவ், மன்மோகன்சிங் ஆகிய பிரதமர்களால் காங்கிரஸ் கட்சி இந்தியாவை 37 ஆண்டுகள் 303 நாட்கள் ஆண்டது. இடையே லால்பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய், சரண்சிங், வி.பி.சிங், சந்திரசேகர், வாஜ்பாய், தேவகவுடா, ஐ.கே.குஜரால் ஆகியோர் தலைமையில் ஆட்சி நடந்தது. இவர்கள் அனைவரின் ஆட்சியிலும் எம் தாய்நாடு மதசார்பற்ற நாடாக உலக அரங்கில் தனித்துவம் பெற்று விளங்கியது.
பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி பிஜேபியின் தலைமையில் 2014-ல் 282 இடங்களை கைப்பற்றியது. நரேந்திர மோடி பிரதமர் ஆனார். கூட்டணியோடு 282 இடங்களை பிடித்த பிஜேபி. 2019-ல் 303 இடங்களை தனியாகவே வென்றது. இது எப்படி சாத்தியமானது? பத்திரிக்கைகளும், ஊடகங்களும் மோடி குஜராத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறார் எனப் பிரமாதப்படுத்தி, அவரை வளர்ச்சியின் நாயகன் என்றெல்லாம் வர்ணித்து அவரை முதன்முதலாக 2014-ல் கொண்டு வந்தனர். இப்போது பாவம் அந்த பத்திரிக்கைகள், மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய செய்திகளை அவர்கள் தெரிவிக்கும் விதத்திலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. அவர்களின் தற்போதைய நிலையை புகழ் பெற்ற விகடன் போன்ற ஒரு சிலர் மட்டுமே தைரியமாக விமர்சிக்கின்றனர்.
ஆடம்பர செலவுகள், நிதி நெருக்கடி, வணிக சரிவு, இந்தியப் பொருளாதாரம் குறித்து உலக வங்கி எச்சரிக்கை, முஸ்லிம்களை குறிவைத்து வன்முறைகள், கலவரங்கள், கற்பழிப்பு, விரும்பும் உணவை தடையின்றி புசித்து வந்த மக்கள், இப்போது புசிக்க முடியாத பரிதாப நிலை, தரம் தாழ்ந்த பேச்சுக்கள், சமூக சீர்திருத்த எழுத்தாளர்கள் பலர் கொல்லப்பட்டது. தலித்துகள் கொல்லப்பட்டது, சிறுமி ஆசிபாவிலிருந்து வயதான மூதாட்டியையும் விட்டு வைக்காமல் காஷ்மீரில் நடந்த கற்பழிப்புகள், இதைக் கூறி ஐ.நா.சபையின் மனித உரிமை ஆணையத்தின் முக்கியஸ்தர் ஒருவர் ஐ.நா.சபையில் கண்ணீர் சிந்தியது என்றெல்லாம் பல சம்பவங்கள் பிஜேபி ஆட்சியில் நடந்து கொண்டிருப்பது கவலையைத் தருகிறது. வல்லுனர்களின் பொருளாதார சரிவு எச்சரிக்கை புரம் தள்ளப்பட்டு, மக்களை திசை திருப்பி குடியுரிமை சட்ட திருத்தம் என்ற கொடுமை அரங்கேற்றப்பட்டு விட்டது.
சரி! இவர்களின் கொள்கைதான் என்ன? பிஜேபி மற்றும் அது சார்ந்த ஆர்எஸ்எஸ், சிவசேனா, பஜ்ரங்கள், ராம்சேனா, அகில பாரத் வித்யார்த்தி பரிஷத் இந்து முன்னணி, விஷ்வ ஹிந்தபரிஷத், மாணவர் பிரிவு, இந்து மக்கள் கட்சி ஆகியவற்றின் கொள்கை தான் என்ன என்று தெரிந்து கொள்வோம்.
சுதந்திரத்திற்கு முன்பே ஆர்.எஸ்.எஸ். போட்ட மாஸ்டர் பிளான் இந்தியாவில் ஆட்சி ஏற்படுத்த வேண்டும் என்பதே. முஸ்லிம், கிறிஸ்தவர்களைத் தவிர மற்றவர்கள் இந்து மதத்தை சார்ந்திருப்பதாலும், இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் இந்துக்களாக இருப்பதாலும் இந்து மதத்திற்காக பாடுபடுபவர்களாக தங்களை அடையாளம் காட்டியது பிஜேபி. இதனால் இந்துக்களில் கணிசமானோரை கவர்ந்திருக்க முடிந்திருக்கலாம். ஏற்கனவே நாம் சுட்டிக்காட்டியுள்ள பல பிரச்சனைகள் ஏற்பட்ட பிறகு இந்த கணிசமான இந்துக்கள் பிஜேபிக்கு வாக்களித்திருப்பார்களா? என்ற ஐயம் ஏற்படுகிறது. “எலெக்ட்ரானிக் ஓட்டிங் மெஷின்” விவகாரம், நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இப்போது இதைப் பற்றி எழுதுவதும் பேசுவதும் தவறு.
விஷயத்திற்கு வருவோம். இந்துமத கொள்கைகள் அனைத்திற்கும் ஒத்துப்போகாமல் இந்துத்வா என்ற பெயரில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பின்தங்கிய சமூகத்தினரிடையே ஏற்றத் தாழ்வுகளை அதிகப்படுத்தல், அவர்களை கலவரங்கள், போராட்டங்களுக்கு மட்டும் பயன்படுத்தல், எஸ்.சி. மற்றும் ஆதிவாசிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கூடாது, கலவரங்களில் முஸ்லிம்கள் மற்றும் எஸ்.சி. பெண்களை பலாத்காரம் செய்ய வேண்டும். சூரத் மாடலில் யாரையும் தப்பிக்க விடக்கூடாது, இந்துத்துவாவை எதிர்ப்பவர்களை போலி என்கவுண்டர் மூலம் சாகடிக்க வேண்டும். இதுபோன்ற இன்னும் பற்பல விசித்திரமான கொள்கைகள் அவர்களது அஜந்தாவில் உள்ளது.
இதுபோன்ற கொள்கைகள் அடிப்படையில் பிஜேபி மத்திய அரசு, மெல்லமெல்ல முஸ்லிம்களின் நடைமுறையில் இருக்கும் முத்தலாக் சட்டத்தை தடை செய்தது. எங்கோ ஒருசிலரிடம் முத்தலாக் ஏற்படுவதால், முஸ்லிம் சமுதாயம் இதை அறவே கண்டுகொள்ளவில்லை. எனவே அடுத்து பாபரி மஸ்ஜித் தீர்ப்பு இதையும் முஸ்லிம்கள் கண்டுகொள்ளவே இல்லை. காரணம், மஸ்ஜித் என்றால் தினமும் ஐந்து வேளை தொழுகை நடக்கவேண்டும். 22.12.1949ல் அப்போதைய காங்கிரஸ் அரசு “பிரச்சினைக்குரிய இடம்” என லேபிளிட்டு, மஸ்ஜிதின் கதவுகளைப் பூட்டி வைத்து ஒரு இந்து காவலரையும் ஒரு முஸ்லிம் காவலரையும் ஷிப்ட் முறையில் காவல் காக்க பணியில் அமர்த்தியது.
எனவே, தொழ முடியாமல் பூட்டப்பட்ட வெத்து கட்டிடம் இனி இருந்தால் என்ன? இடிக்கப்பட்டால் என்ன? இது முஸ்லிம்களுடையது இல்லை என்று தீர்ப்பு வந்தால் தான் என்ன? என்ற மனநிலைக்கு முஸ்லிம்கள் தள்ளப்பட்டதால், இந்த தீர்ப்பை முஸ்லிம்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. அதனால் அமைதி காத்தனர். இந்த அமைதியைப் பயன்படுத்தி, அடுத்து குடியுரிமையை திருத்திய சட்டம் கொண்டு வந்தனர் எண்ணற்ற முஸ்லிம்கள் சுதந்திரத்திற்காகப் போராடியும் பிரிவினையின் போதும் பாகிஸ்தானுக்கு போகாமல் இந்தியாவை தாய்நாடாக தேர்ந்தெடுத்த முஸ்லிம்களின் உரிமையை பறிக்கும் சட்டம் இது!
நாட்டின் சுதந்திரத்திற்காக கடுகளவுகூட பங்களிக்காதவர்கள், கிரிக்கெட் மேட்ச்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தருவதாக முஸ்லிம்கள் மீது குற்றம் சுமத்தி மலிவான விளம்பரத்தைத் தேடிக் கொள்கிறார்கள். எனவே முஸ்லிம்கள் மட்டுமல்லாது மதசார்பற்ற எம் இந்திய மக்கள் வீதியில் வந்து போராடுகின்றனர். இதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஏனெனில் இதுதான் இந்திய ஜனநாயகம்.
RSSஸினர் வேறு சில கட்சிகளிலும் இருந்ததால், முன்னாள் RSS நரசிம்மராவ், காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருந்தபோது, பாபரி மஸ்ஜிதை இடிப்பதற்கு சுலபமாக வழி கிடைத்தது என்பதும், இடிப்பதைத் தடுக்க அவர் தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும், அதே நேரம் காங்கிரஸ் கட்சியும் கைகட்டி இதை வேடிக்கைப் பார்த்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. குடியுரிமைக்காக ஆவணங்கள் சமர்ப்பிப்பதில், முஸ்லிம் அல்லாதோருக்கு சலுகையும் முஸ்லிம்களுக்கு சமர்ப்பித்தே ஆகவேண்டும் என்ற நிபந்தனை விதிப்புமே, இது முஸ்லிம்களின் உரிமையை பறிக்கும் சட்டம் என்று நடுநிலையாளர் எவரும் கூறிவிடுவர்.
தலைநகர் டில்லியிலுள்ள இந்தியா கேட்டில் பதியப்பட்ட தகவலின்படி, இந்தியாவில் நடந்த ஆங்கிலேயர் ஆட்சியில் முதலாம் உலகப் போரில் நம் தாய்நாட்டிற்காக உயிர் நீத்த இந்திய வீரர் தியாகிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன, அதில் சிறுபான்மையினராக இருந்தும், முஸ்லிம்கள் பெறும் அளவில் இடம் பெற்றுள்ளது. பீ.ஜே.பி. ஆட்சியில் அதற்கான பரிசு, முஸ்லிம்கள் கொல்லப்படுவதும், கற்பழிக்கப்படுவதுமாகி விட்டது.
இந்தியா மதச்சார்பற்ற நாடு என்ற கொள்கையை முந்தைய காங்கிரஸ் அரசு கடைபிடித்ததால், மக்களின் முகவரியை வைத்து அது தற்காலிக முகவரியாக இருந்தாலும், அவர்கள் இந்திய குடிமக்கள் என்ற உண்மையை அங்கீகரித்தனர். எப்படி? காங்கிரஸ் ஆட்சியில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடிமக்கள் பதிவேடு மாநில அரசு ஊழியர்களால் ஒவ்வொரு வீட்டிலும் நேரடியாக வாய்மொழி மூலம் கணக்கெடுக்கப்பட்டது. எந்த ஆவணங்களும் கேட்கப்பட்டதில்லை.
வாய்மொழியாக தரப்பட்ட / பெறப்பட்ட 15 விவரங்கள் யாதெனில், 1. நபரின் பெயர், 2. பாலினம், 3. தந்தை பெயர், 4. தாய் பெயர், 5. பிறந்த தேதி, 6. பிறந்த இடம், 7. கல்வி தகுதி, 8. தொழில், 9.குடும்பத் தலைவருடனான உறவு, 10. திருமண நிலை, 11. துணையின் பெயர், 12. தற்போதைய முகவரி, 13. தற்போதைய முகவரியில் வசித்து வரும் காலம், 14. நிரந்தர குடியிருப்பு முகவரி, 15. தேசம் (நாடு) ஆகியவைகள் மட்டுமே.
வி.பி.சிங் காலத்திலும் இது தொடர்ந்தது பிஜேபியிடம் பெருவாரியான எம்பிக்கள் இல்லாததால், வாஜ்பாய் காலத்திலும் இந்த நிலை தொடர்ந்தது பெருவாரியான எம்.பிக்கள் கிடைத்துவிட்ட இந்த பிஜேபி ஆட்சி, இப்போது தனது சுயரூபத்தை காட்ட ஆரம்பித்து விட்டது.
மேற்கண்ட 15 விவரங்களுடன் கூடுதலாக 1. தந்தை பிறந்த தேதி, 2. பிறந்த இடம், 3. வசித்த முகவரி, 4. தாய் பிறந்த தேதி, 5. பிறந்த இடம், 6. வசித்த முகவரி என்ற 6.விவரங்கள் NPRல் சேர்க்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி இருக்கிறது.
1980ஆம் ஆண்டுக்கு முன் எவருக்கும் பிறப்பு சான்றிதழ் அரசால் வழங்கப்படாத நிலையில், 1979ல் பிறந்து, இன்று 2019ல் 40 வயது இளைஞராக இருக்கும் ஒருவர் எப்படி அவருக்கு பிறப்பு சான்றிதழ் சமர்ப்பிக்க முடியும்? அவருக்கே இல்லாதபோது அவருடைய தாய்க்கும், தந்தைக்கும் எப்படி சமர்ப்பிக்க முடியும்? அரசு அறிவார்த்தமாகத்தான் செயல்படுகிறதா?
அடுத்து, 1980ஆம் ஆண்டிலிருந்து தான் அரசு பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது என்ற நிலையில், ஏற்கனவே ஒவ்வொரு பத்து ஆண்டுக்கு ஒருமுறை எடுக்கப்பட்டு வருகின்ற மக்கள் தொகை கணக்கெடுப்பு அரசிடம் பத்திரமாக இருக்கும்போது, அந்த வழியைத் தொடருவதுதான் சிறந்தது. NPR என்ற புதிய முறைக்கு பதிலாக நடைமுறையிலிருக்கும் ஆதாரங்கள் சமர்ப்பிக்கத் தேவையில்லாத வாய்மொழி கணக்கெடுப்பை அரசு கணக்கில் எடுத்து அதையே பின்பற்றுவது தான் பிரச்சனைகளுக்கு வழிவகுக்காது.
கூடுதலான 6 ஆதாரங்கள் எம் நாட்டில் எவருக்குமே இல்லாத நிலையில் அரசு எந்திரம் என்ன செய்யும் என்பது தெரிந்த விஷயமே. வழக்கமான வழிமுறையைத்தான் பின்பற்றும். அது என்ன? ஆவணங்கள் இல்லை என்றால், படிவத்தில் “இல்லை” என்று மாநில அரசு பூர்த்தி செய்து மத்திய அரசுக்கு அனுப்பும். அவர்கள் “சந்தேகக் குடியேறிகள்” பட்டியலில் இடம் பெறுவார்கள். ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு அரசிடமிருந்து கடிதம் வரும். சமர்ப்பிக்கவில்லை என்றால், என்ன நடக்கும்? அஸ்ஸாமில் நடக்கும் நிலைதான் இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களுக்கும் ஏற்படும்!
NPR கணக்கெடுப்பு நாடு முழுவதும் ஏப்ரலில் நடைபெறும் என்கிறார். உள்துறை அமைச்சர் இது முஸ்லிம்களுக்கு ஏற்படும் ஆபத்து என அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வறிக்கை விமர்சிக்கிறது. இந்த ஆய்வறிக்கை இல்லாமலே, அந்த ஆபத்தை உணர்ந்ததால் தான் மக்கள் இன்று வீதிக்கு வந்து போராடுகின்றனர். அதனால் தான், கேரளா, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, பஞ்சாப் NPRஐ ஆதரிக்கவில்லை.
இப்போது நாட்டை ஆளும் பீஜேபி அரசு, மதம் சார்ந்து ஆட்சி செய்வதாலும் அவர்களின் தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களை குறிவைத்திருப்பதாலும் இந்தியாவில் முஸ்லிம்கள் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்து கொண்டிருந்தாலும், அதைப் பற்றி கவலைப்படாமல் அவர்களின் குடியுரிமையை ரத்து செய்து முகாம்களுக்கு அனுப்பி வைப்பார்கள். இந்தியாவில் வசித்து வரும் முஸ்லிம்கள் பயப்பட வேண்டாம் என்று உள்துறை அமைச்சர் பேசி வருகிறார். அதேசமயம், கணக்கெடுப்பிற்காக புதிய வழிமுறைகள் அறிமுகமாகிறது மறுபக்கம் இதே நாட்டில் அஸ்ஸாமில் வேறு மாதிரியாக அரசு பேசுகிறது. செயல்படுகிறது. அங்கே வாழ்ந்து கொண்டிருப்பவர்களை வலுக்கட்டாயமாக முகாம்களுக்கு அனுப்புகிறார்கள்.
எந்த சட்டமும் எழுத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் அது சட்டம் யார் பேசினாலும், பேசுவதெல்லாம் சட்டமாகிவிடாது. ஆவணங்களை முஸ்லிம்கள் சமர்ப்பித்தேயாகவேண்டுமாம். அதே நேரத்தில் இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சி மதத்தினர், கிறிஸ்தவர்கள் ஆவணங்கள் இல்லை என்றாலும் 6 ஆண்டுகள் இந்தியாவில் வசித்திருந்தால் போதுமாம் என்ற பாரபட்ச குடியுரிமை சட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்து திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு அரசை வலியுறுத்துகிறோம்.
ஆவணங்கள் சமர்ப்பிக்கத் தேவையற்ற, நடைமுறையிலுள்ள தற்போதைய வாய்வழி கணக்கெடுப்பு, சுதந்திரம் பெற்ற பின் எந்த பிரச்சனைகளும் இல்லாமல் அமைதியாக நடந்து கொண்டு வருவதால், அதைத் தொடர்ந்து செயல்படுத்துமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம்.
இந்தியா முழுதும் தற்போது நடக்கின்ற பலதரப்பட்ட மக்களின் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் ஆகியவை குறிப்பாக உ.பி.யிலும், தலைநகரிலும், சமூக விரோதிகளால் கலவரங்களாக மாறியதையும் வலைதளங்களில் கண்டோம். அங்கு நடந்த அதிர்ச்சி தந்த சோகம் யாதெனில், குடியுரிமை சட்டம் நம்மையும் பாதிக்கும் என்பதை அறியாதவர்களாக, ஓரிரு காவல்துறை அதிகாரிகள் வரம்பு மீறி தவறாக நடந்து கொள்வது சரியா? அநியாயக்காரர்களிடமிருந்து மக்களை காக்க வேண்டும் என்பதால், இத்துறைக்கு காவல்துறை என்ற பெயர் ஏற்பட்டது. அதனால்தான், “காவல்துறை உங்கள் நண்பன்” என்று சொல்கிறார்கள்.
இவர்களே மக்களை இம்சித்தால், யாரிடம் அவர்கள் உதவி கேட்பார்கள்? உங்களில் உங்களுக்குள் எத்தனையோ நல்ல ஆத்மாக்கள் இருக்கின்றீர்கள். உங்களிடம் வரும் ஒவ்வொரு புகாரிலும் நல்லவன் யார்? கெட்டவன் யார்? என்பதை, தாய், தன் பிள்ளையை அறிந்திருப்பது போல, நீங்கள் மிகவும் நன்றாக அறிந்து வைத்திருக்கின்றீர்கள். எனவே, மக்கள் யாராக இருந்தாலும், அவர்கள் பாதிக்கப்படாமல் மனிதநேயத்துடன் நியாயமாக செயல்படுவீர்கள் என்ற முழுமையாக நம்புகிறோம்.
அகிலங்களின் இறைவனின் கீழ்க்கண்ட செய்தியை அனைவருக்கும் நினைவூட்டுகிறோம். உங்கள் இறைவனிடமிருந்து சிறிதளவு வேதனை அவர்களைத் தீண்டினாலும், “எங்களுக்கே கேடுதான்! நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களாகவே இருந்தோம்” என்று அவர்கள் நிச்சயமாகக் கூறுவார்கள். (அல்குர்ஆன் : 21:46)
*********************************************************
முஸ்லிம்களின் போலி ஒற்றுமை வெற்றியைத் தராது!
அபூ ஹனிபா, புளியங்குடி
இந்திய தேசிய கொடியின் கீழ் முஸ்லிம்கள் என்ற ஒற்றை பெயரைத் தவிர வேறு எந்த பெயரையும் பயன்படுத்தாமல் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஒரு தலைமைக்கு கட்டுப்பட்டு முஸ்லிம்களால் ஒன்றிணைய முடிந்தது என்றால் வாழ்நாள் முழுவதும் முஸ்லிம்கள் என்ற ஒற்றை பெயரால் ஒன்றிணைய முடியாதா?
முஸ்லிம் சமுதாயத்திற்கு வந்த சோதனை :
முஸ்லிம்களின் மீது கொண்ட தீராத வெறுப்பின் காரணமாக CAA, NRC சட்டங்களின் மூலமாக முஸ்லிம் சமுதாயத்தை களை எடுக்க நினைக்கிறது. மத்திய காவி பாஜக அரசு. அதற்காக பல காலமாக திட்டம் தீட்டி காத்துக்கொண்டிருந்தது. இன்று அதற்கான சரியான தருணமாக நினைக்கிறது. காரணம் முஸ்லிம்களிடம் ஒற்றுமை இல்லை. ஒன்றுபட்டு எதிர்த்து கேள்வி கேட்பதற்கு அவர்களை ஒற்றுமையாக வழிநடத்துவதற்கு முஸ்லிம்களுக்கு ஒரு தலைமை இல்லை. பணம், பதவிக்காக முஸ்லிம்கள் ஆளாளுக்கு இயக்கம், கட்சி என்று ஒற்றுமை இன்றி சிதறிக்கிடக்கிறார்கள்.
இப்படி கிடக்கும் முஸ்லிம்கள் ஒரு காலமும் ஒரு தலைமைக்கு கட்டுப்பட்டு ஒன்றுபடமாட்டார்கள். இதுதான் சரியான தருணம் முஸ்லிம்களை கூண்டோடு அழிப்பதற்கு என்று தனது திட்டத்தை செயல்படுத்த துவங்கி உள்ளது. மத்திய காவி பாஜக அரசு. முஸ்லிம்களின் ஒற்றுமையின்மை தொடர்ந்து நீடித்தால் பாஜக காவி அரசு தனது திட்டத்தில் வெற்றி பெறவும் வாய்ப்பு உள்ளது.
போலியாக ஒற்றுமை கோசம் போட காரணம் என்ன?
இன்றைக்கு முஸ்லிம் இயக்க தலைவர்கள் போலி ஒற்றுமை கோசம் போடுவதற்கு காரணம் என்னவென்றால் தனது குடியுரிமை பறிபோகிவிடுமோ என்ற அச்சம் குடியுரிமை இல்லை என்றால் இயக்கம் நடத்த முடியாது. இயக்கத்தின் பெயரால் சொத்து வாங்க முடியாது. மார்க்கத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி, உழைக்காமல் உண்டு வாழமுடியாது. அடிமை வாழ்க்கை தான் வாழ நேரிடும். பேச்சுரிமை கிடைக்காது. சுதந்திரமாக சுற்றித்திரிய முடியாது போன்ற காரணங்களால் மட்டுமே இன்று போலியாக ஒற்றுமை கோசம் போடுகிறார்கள்.
பிரிவினை வாதத்தை தூக்கிப் பிடித்த முஸ்லிம்கள் :
கடந்த காலங்களில் குறிப்பிட்டு சொல்வதாக இருந்தால் தமிழகத்தில் நான்கு மத்ஹப்களாகவும் 23 இயக்கங்களாகவும் பிரிந்து செயல்பட்ட முஸ்லிம்கள், பிரிந்து செயல்படுவதால் தவறு இல்லை. பிரிந்து செயல்படுவதால் முஸ்லிம் சமுதாயத்திற்கு நன்மைதான் இருக்கிறது என்று தங்களின் இயக்கங்களையும், அரசியல் கட்சிகளின் பெயர்களையும் தனித்தனியாக பிரித்துக் காட்டி முஸ்லிம் சமுதாயத்தின் பாதுகாவலர்கள் நாங்கள் தான் எங்களால் தான் முஸ்லிம்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். எங்களால் தான் முஸ்லிம் சமுதாயத்திற்கு பல நன்மைகள் கிடைத்திருக்கிறது என்று மார்தட்டிக் கொண்டிருந்தனர். இன்று பிரிந்து போராடுவதால் நன்மை இல்லை. வெற்றி கிடைக்காது ஒன்றுபட்டு போராடினால் வெற்றி கிடைக்கும் என்று பிரிவு இயக்கங்களாகவும், அரசியல் கட்சிகளாகவும் இருந்து கொண்டிருக்கும் நிலையில் போலியாக ஒற்றுமை கோஷம் போடுகிறார்கள். இவர்களின் இந்த போலி ஒற்றுமைக்கு வெற்றி கிடைக்குமா?
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு :
முஸ்லிம்கள் பிரிவு இயக்கங்களாக அரசியல் கட்சிகளாக பிரிந்து பிரிந்து செயல்பட்டால் எந்த ஒரு வெற்றியையும் பெறமுடியாது என்ற உண்மையை இந்த குடியுரிமை சட்டத்திருத்தத்தின் மூலமாக அல்லாஹ் முஸ்லிம்களுக்கு வெளிப்படுத்திவிட்டான். அந்த உண்மையை காவி வெறியர்களின் மூலமாக இந்த முஸ்லிம் சமுதாயத்தை உணரச் செய்திருக்கிறான். அப்படி இருந்தும் இந்த முஸ்லிம் சமுதாயம் இயக்கங்களாகவும், அரசியல் கட்சிகளாகவும், இயக்க தலைவர்களை நம்பி பிரிந்து கிடக்கிறது. அல்லாஹ்வின் சொல்லுக்கு கட்டுப்படாத சமுதாயத்திற்கு வேதனையும், சோதனையும் நிச்சயமாக வரும்
“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, இல்லை என்றால், அடி வாங்கி சாவு”.
இயக்கங்களை காப்பாற்ற துடிக்கும் இயக்க தலைவர்கள் :
ஆரம்பத்தில் குடியுரிமைக்காக ஒன்றுபட்டு போராட வேண்டும் என்று முஸ்லிம் இயக்க தலைவர்கள் முயற்சிக்கவில்லை மாறாக முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் முஸ்லிம்களின் ஒற்றுமையின் அவசியத்தைப் பற்றி அப்பாவி முஸ்லிம்கள் பேச ஆரம்பித்ததின் விளைவு ஒன்றுபட்டு போராட வேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு முஸ்லிம் இயக்கத் தலைவர்கள் ஆளானார்கள். அதிலேயும் யார் தலைமையில் போராடுவது என்ற பிரச்சனை, யார் தலைமை ஏற்பது என்பதில் பிரச்சனை. இறுதியாக இந்திய தேசத்தில் வாழ்வதற்காக போராடுவதால் இந்திய தேசிய கொடியோடு போராடுவோம் என்று தேசியகொடியை தூக்கிப் பிடித்தார்கள். அதிலேயும் இயக்கவாதிகளுக்குள் ஒப்பந்தம் எந்த இயக்கம் போராட்டம் அறிவித்தாலும் அதில் மற்ற இயக்கங்கள் கலந்து கொள்ள வேண்டும். போராட்டங்களின் போது தனிப்பட்ட இயக்க கொடிகளோ போஸ்டர்களோ பயன்படுத்தக்கூடாது என்பது இயக்க தலைவர்களிடையே ஒப்பந்தம்.
இயக்க வழிகேடர்களை இனம் காட்டிய அல்லாஹ் :
இதுநாள் வரைக்கும் தனது இயக்க பெயர்களை தூக்கி பிடித்த முஸ்லிம் இயக்கவாதிகள் உண்மையில் வழிகேடர்கள் என்பதை அல்லாஹ் இந்த குடியுரிமை சட்டத்தின் மூலமாக இனம் காட்டிவிட்டான். பிரிவு இயக்கப் பெயரிகளின் பல பிரிவுகளாக பிரிந்து செயல்படலாம் என்று முஸ்லிம்களை வழிகெடுத்த இயக்க தலைவர்களின் முகத்திரையை கிழித்து அல்முஸ்லிமீன் (முஸ்லிம்கள்) அல்குர்ஆன் 22:78 என்ற பெயரில் செயல்பட்டால் தான் வெற்றி கிடைக்கும் என்பதை அல்லாஹ் நிரூபித்து விட்டான். முஸ்லிம்கள் அனைவரும் அல்லாஹ் நமக்கு பெயரிட்ட முஸ்லிம்கள் என்ற பெயரிலேயே ஒன்றுகூடி போராடினார்கள்.
2 அல்லது 3 மணி நேர போலி ஒற்றுமை :
ஒப்பந்தம் போட்டு ஒற்றுமை கோசம் போடும் முஸ்லிம் இயக்க தலைவர்கள் எவ்வளவு நேரம் ஒன்றுபட்டு போராடுகிறார்கள் 2 அல்லது 3 மணி நேரம். அதற்கு மேல் என்ன நடக்கிறது? அவர் அவர் இயக்கத்தை கவனிக்கவும், சமூக சேவை செய்யவும், அரசியல் ஆதாயம் தேடவும் தனித்தனியாக பிரிந்து சென்று விடுகின்றனர். தான் உண்டு தன்னுடைய இயக்கம் உண்டு என்று தனித்தனியாக பிரிந்து சென்று செயல்படுகின்றனர். இப்படிப்பட்ட ஒற்றுமை தான் வெற்றியை தரப்போகிறதா?
இப்படி ஆளாளுக்கு தனித்தனி இயக்கங்களாக பிரிந்து செயல்பட்டுக் கொண்டு 2 அல்லது 3 மணி நேரம் ஒன்றுபட்டு போராடுவதால் வெற்றி கிடைத்துவிடுமா? ஒரு காலமும் கிடைக்காது. காரணம், ஒற்றுமை என்பது வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டிய ஒன்று. அரை மணி நேரம், ஒரு மணி நேரம் இருக்கக் கூடாது, ஒரு கொடியின் கீழ் முஸ்லிம்கள் என்ற ஒற்றைப் பெயரில் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் ஒன்றிணைந்த இந்த முஸ்லிம் சமுதாயம், வாழ்நாள் முழுவதும் ஒன்றிணைந்து செயல்பட முடியாதா? முடியும் அந்த ஒற்றுமையைத்தான் இஸ்லாம் காட்டித் தருகிறது அதை மறைத்துத்தான் இந்த முஸ்லிம் இயக்க தலைவர்கள் முஸ்லிம்களை வழிகெடுத்து பிரித்தாழ்கிறார்கள்.
மனிதர்களுக்கு அஞ்சும் முஸ்லிம்கள் :
கேவலம் 60 அல்லது 70 ஆண்டுகள் சுதந்திரமாக வாழக்கூடிய இந்த உலக வாழ்க்கையில் தனது சுதந்திரத்தை ஒரு மனிதன் பறித்துவிடுவானோ என்ற அச்சத்தில் மனிதன் போடக்கூடிய சட்டங்களுக்கு பயந்து ஒன்றுகூடி ஒற்றுமையாக போராட வேண்டும் என்று இந்த முஸ்லிம் இயக்க தலைவர்கள் கூவுகிறார்களே. காலம் காலமாக இந்த முஸ்லிம் சமுதாயத்தை நீங்கள் ஒன்றுபடுங்கள், பிரிந்துவிடாதீர்கள், சன்மார்க்கத்தை நிலைநிறுத்துங்கள் அதில் பிரிந்துவிடாதீர்கள், நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள் அவ்வாறு கொண்டால் நீங்கள் கோழைகளாகி விடுவீர்கள், அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக ஜமாஅத்தாக பற்றி பிடியுங்கள் என்று பலவாறாக அறிவுரை சொல்கிறான். அதை எல்லாம் புறக்கணித்துவிட்டு கேவலம் மனிதனுக்கு பயந்து ஒன்றுபட கூவுகிறார்களே. இவர்கள் அல்லாஹ்விற்கு அஞ்சுகிறார்களா அல்லது மனிதர்களுக்கு அஞ்சுகிறார்களா?
“நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள், எனக்கே அஞ்சுங்கள்” என்று அல்லாஹ் சொல்கிறான். (அல்குர்ஆன் : 5:44) ஆனால் இன்று முஸ்லிம்கள் அல்லாஹ்விற்கு அஞ்சாமல் மனிதர்களுக்கே அஞ்சுகிறார்கள். அதனால்தான் அல்லாஹ் அந்த மனிதர்களை வைத்தே சோதனைகளை கொடுக்கிறான்.
அல்லாஹ்வின் தூதர் காலத்தில் முஸ்லிம்களின் ஒற்றுமை :
அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் காட்டித்தந்த ஒற்றுமையை அப்பாவி முஸ்லிம்கள் விளங்கிக் கொள்ளக்கூடாது என்பதில் முஸ்லிம் இயக்க தலைவர்கள் மிக தெளிவாக இருக்கிறார்கள். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களும், சத்திய சஹாபாக்களும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்திருந்தனர். அவர்களுக்குள் எந்த பிரிவுகளும் கிடையாது. அல்லாஹ்வின் தூதரை தலைவராக ஏற்று ஒரு தலைமைக்கு கட்டுப்பட்டு முஸ்லிம்கள் இருந்தனர். பிற்காலத்தில் முஸ்லிம்கள் கலிபாக்களுக்கு கட்டுப்பட்டு ஒரே ஜமாஅத்தாக வாழ்ந்தார்கள். ஸஹாபாக்களின் ஒற்றுமையை ஒரு தலைமைக்கு கட்டுப்படுதலை இந்த இயக்க தலைவர்கள் மறைத்து முஸ்லிம்களை பல பிரிவுகளாக பிரித்து வழிகெடுக்கிறார்கள்.
ஒரு தலைமையின் கீழ் முஸ்லிம்கள் :
ஒன்று, இரண்டு மணி நேரம் முஸ்லிம்கள் என்ற ஒற்றைப் பெயரில் முஸ்லிம்கள் அனைவரும் ஒரு தலைமைக்கு எப்படி கட்டுப்பட்டு போராட்டம் நடத்தினார்களோ அதையே வாழ்நாள் முழுவதும் ஒரு தலைமைக்கு கட்டுப்பட்டு வாழுமாறு இஸ்லாம் வலியுறுத்துகிறது. அல்லாஹ்வின் தூதரும் அவ்வாறுதான் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். இன்றைக்கு முஸ்லிம்கள் தங்களை முஸ்லிம்கள் என்று மட்டும் அடையாளப்படுத்திக் கொண்டு எந்த ஒரு பெயரையும் பயன்படுத்தாமல் ஒன்றிணைந்தார்களோ அதைத்தான் அன்றைக்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களும் செயல்படுத்தினார்கள். அவர்களுக்கு என்று ஒரு தனிப் பெயரை பயன்படுத்தவில்லை. இயக்க பெயர்களை, மத்ஹப் பெயர்களை, அரசியல் பெயர்களை பயன்படுத்தவில்லை. அல்லாஹ் இட்ட அல்முஸ்லிமீன் (முஸ்லிம்கள்) அல்குர்ஆன் 22:78 என்ற பெயரிலேயே ஒன்றிணைந்து ஒரே ஜமாஅத்தாக செயல்பட்டார்கள். அதையே தான் இன்று அனைத்து முஸ்லிம்களும் செய்யுமாறு நாம் வலியுறுத்துகிறோம். நம்முடைய ஆலோசனைகளை, அறிவுரைகளை முஸ்லிம்கள், இயக்க தலைவர்கள் ஏற்பார்களா?
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள், இன்னும் தூதருக்கும், உங்களில் அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்ப்படியுங்கள், உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால், மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் அதை அல்லாஹ்விடமும், தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள். இதுதான் மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.
*********************************************************
மனித யூகம் மார்க்கம் ஆகாது!
K.M.H. அபூஅப்தில்லாஹ்
மறு பதிப்பு :
தங்களை மார்க்க அறிஞர்கள் வல்லுனர்கள் என்று அகம்பாவத்துடன் மார்தட்டிக் கொள்ளக்கூடியவர்கள், மார்க்க விவகாரங்களில் தங்களாலும் யூகம் செய்து முடிவு செய்ய முடியும், நாங்கள் நம்பிப் பின்பற்றும் முன் சென்ற அறிஞர்கள் இப்படித்தான் யூகம் செய்து, மார்க்க விவகாரங்களை முடிவு செய்தார்கள் என்று கூறி அதற்கு ஆதாரமாக,
மேலும் பீதியோ, பாதுகாப்பைப் பற்றிய செய்தியோ அவர்களுக்கு எட்டுமானால், உடனே அவர்கள் அதைப் பரப்பி விடுகிறார்கள். அவர்கள் அதை அல்லாஹ்வின் தூதரிடமோ அல்லது அவர்களில் நின்றுமுள்ள அதிகாரிகளிடமோ தெரிவித்தால், அவர்களிலிருந்து அதை ஊகித்து அறியக்கூடியவர்கள், அதை நன்கு விசாரித்தறிந்து (தக்க ஏற்பாடுகளைச் செய்து) கொள்வார்கள். அல்லாஹ்வுடைய கிருபையும், அருளும் உங்கள் மீதில்லாதிருந்தால், உங்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் ஷைத்தானையே பின்பற்றியிருப்பீர்கள். (அல்குர்ஆன்: 4:83) என்ற இந்த ஆயத்தை எடுத்துச் சொல்கிறார்கள். இந்த வசனத்தில் வரக்கூடிய “இஸ்தின்பாத்” என்ற சொல்லை ஆதாரமாகக் கொண்டு மார்க்க விவகாரங்களில் யூகம் செய்து முடிவு செய்ய மார்க்க அறிஞர்களுக்கு அல்லாஹ் அனுமதி வழங்கியுள்ளதாக அப்பாவி மக்களை வழிகெடுக்கிறார்கள்.
இந்த 4:83 வசனத்தைத் தெளிவாகவும், நிதானமாகவும் ஓதி விளங்கக் கூடிய ஒரு நடுநிலையான சிந்தனையாளன். இந்த இறை வசனம் சிக்கலான உலகப் பிரச்சனை பற்றியது என்பதை தீர்க்கமாக விளங்கிக் கொள்ள முடியும்.
உலகில் நெருக்கடியான கட்டங்களில் பீதி ஏற்பட்டுவிட்டது அல்லது தங்கள் உயிர், உடல், பொருள் பாதுகாப்பைப் பற்றி பயம் ஏற்பட்டுவிட்டது. இந்த சூழ்நிலையில் வதந்திகளைப் பரப்பாமல், அதற்குரிய சம்பந்தப்பட்டவர்களிடம் விஷயத்தை எடுத்துச் சொல்வது கொண்டு, அவர்களிலுள்ள அறிஞர்கள், அது விஷயமாக நன்கு விசாரித்து, யூகித்து அறிந்து பயத்தைப் போக்க ஆவன செய்வார்கள் என்ற கருத்தை 4:83 வசனம் தருகின்றது. உலக காரியங்களில் இவ்வாறு நடப்பதற்கு அல்லாஹ் அனுமதி அளிக்கிறான். அவ்வாறு அறிஞர்களின் யூகப்படி செயல்பட்டோம் என்று வைத்துக் கொள்வோம்.
அதன் பின்விளைவு நல்லதா? அல்லது கெட்டதா? என்பதையும் காலப்போக்கில் நடைமுறையிலேயே நம்மால் கண்டுகொள்ள முடியும். அந்த அறிஞரின் யூகப்படி நாம் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், அந்த யூகம் தவறான விளைவை உண்டாக்குகின்றது என்பதை நிதர்சனமாகத் தெரிந்து கொண்டபின் குருட்டுத்தனமாக அதைப் பின்பற்றமாட்டோம். அதை விட்டுவிடுவோம். உலக காரியங்களில் இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு நமக்கு இருக்கின்றது.
இதற்கு நபி(ஸல்) அவர்களின் நபித்துவ காலத்திலேயே இடம்பெற்ற ஒரு சம்பவம் நமக்கு நல்லதொரு படிப்பிணையாக இருக்கின்றது. மதீனாவாசிகளான அன்சார்கள் தங்களது விவசாய முறையில் ஆண் பேரீத்த மரத்தின் பாளையை எடுத்துப் பெண் பேரீத்த மரத்தில் கட்டும் வழக்கம் உடையவர்களாக இருந்தார்கள். இதைக் கண்ணுற்ற நபி(ஸல்) அவர்கள் இச்செயலைத் தடுத்து விட்டார்கள். நபி(ஸல்) அவர்களின் யூகத்தை ஏற்று அன்சார்கள் தங்கள் பயிர் செய்முறையை விட்டுவிட்டார்கள். ஆனால் அந்த மகசூலிலேயே நிதர்சனமாகப் பலன் குறைந்துவிட்டதையும் கண்டார்கள்.
நபி(ஸல்) அவர்களிடம் முறையிடும்போது, “மார்க்க விஷயத்தில் நான் ஒன்றை உத்திரவிடும்போது அதை ஏற்று நடங்கள். என் அபிப்பிராயத்தில் நான் ஒன்றைச் சொல்வேனேயானால் நானும் ஒரு மனிதனே” (முஸ்லிம்) என்று தெளிவாக அறிவித்துவிட்டார்கள். இதிலிருந்து மார்க்க விஷயங்கள், உலக விஷயங்கள் ஆகியவற்றிலுள்ள செயல்பாடுகளையும் அவற்றால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தி விட்டார்கள்.
ஆக, உலக காரியங்களில் அறிஞர்களின் யூகம் சரியா? தவறா? என்பதை உலக நடைமுறையிலேயே கண்டுகொண்டு ஆவன செய்து கொள்ளவும், தவறைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது. ஆகவே அறிஞர்கள் இது விஷயத்தில் யூகம் செய்யவும், மற்றவர்கள் அதை எடுத்து நடக்கவும் அல்லாஹ் அனுமதி அளித்துள்ளான்.
ஆனால் மார்க்க விஷயங்களில் அறிஞர்கள் இவ்வாறு யூகம் செய்யவும் மற்றவர்கள் அதை எடுத்து நடக்கவும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்களா? என்று பார்த்தால், அதற்கு அனுமதி இல்லை என்பதே தெளிவான பேச்சாகும். காரணம் அறிஞர்களின் அந்த யூகத்தின் பலனை மரணத்திற்குப் பின்னால் தான் நாம் காணவேண்டியவர்களாக இருக்கிறோம். யூகம் செய்த அறிஞர்களும் மறுமையில் தான் அதன் பலனைக் கண்டு கொள்வார்கள்.
ஆகவே தவறாக இருந்தால், அதைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பே இல்லாமல் போய்விடுகின்றது. அதன் காரணமாகத்தான் பல அறிஞர்களின் தவறான யூகங்களைக் காலங்காலமாக, அந்த அறிஞர்கள் மீது நம்பிக்கை வைத்தவர்கள் செயல்படுத்தி வருவதன் காரணமாக வழிகேட்டில் சென்றுகொண்டிருப்பதைப் பார்க்கிறோம். அடுத்து யூகம் செய்யும்போது எத்தனை பெரிய அறிஞராக இருந்தாலும் அதில் தவறு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதற்கு நபி(ஸல்) அவர்களின் வாழ்விலேயே ஒரு சம்பவத்தை இடம்பெற வைத்து அல்லாஹ்(ஜல்) நமக்குப் பாடம் புகட்டுகிறான்.
ஆக நாம் பெறும் படிப்பினை ஒன்று நமக்கு நாளை மறுமையில் நன்மையைத் தரும் அல்லது தீமையைத் தரும் என்ற விஷயம் மறுமையைப் பற்றிய ஞானம் நிறைவாக உள்ள அல்லாஹ்(ஜல்) அறிவித்துத் தரவேண்டும் அல்லது அல்லாஹ்வின் அறிவிப்பின்படி நபி(ஸல்) நமக்கு அறிவித்துத் தரவேண்டும். அதாவது குர்ஆனிலோ, சஹீஹ் ஹதீஃதுகளிலோ காணப்படவேண்டும். குர்ஆனிலோ, ஹதீஃதிலோ காணப்படாத மனித யூகங்களால் பெறப்பட்ட, மறுமை சம்பந்தப்பட்ட ஒரு நன்மையோ, தீமையோ ஒருபோதும் இருக்க முடியாது.
குர்ஆன் 4:83 வசனம் உலகியல் சம்பந்தப்பட்டதே அல்லாமல் மார்க்க விஷயங்கள் சம்பந்தப்பட்டதல்ல. இந்த வசனத்தை மார்க்க விஷயங்களில் இணைத்துப் பேசுபவர்கள் வழிகேடர்களாக இருக்க முடியுமே அல்லாமல் நேர்வழி நடப்பவர்களாக இருக்க முடியாது. அல்லாஹ்(ஜல்) அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக. ஆமீன்.
*********************************************************
அமல்களின் சிறப்புகள்…
தொடர் : 54
- அப்துல் ஹமீத்
ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் :
புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் (1154 பக்கங்கள்)
தலைப்பு : திக்ரின் சிறப்புகள்
குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள்.
தமிழாக்கமும், வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல்.
பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 வ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த ஒரு பக்கத்திலும் இப்புத்தகம் எத்தனையாவது பதிப்பு என்பது குறிப்பிடப்படவில்லை.
அல்ஹம்துலில்லாஹ்! அமல்களின் சிறப்புகள் (அசி) புத்தகத்தின் பக்கம்: 392ன் நான்காவது பத்தியில் ஆரம்பித்து 393ன் முதல் பத்தியில் ஆக மொத்தம் மூன்று பத்திகளில் ஹதீஃத் என்ற பெயரில் “நபி(ஸல்) அவர்கள் தங்களது இரு பாதங்களும் வீங்கும் அளவுக்கு நின்று தொழுது வந்ததைப் பற்றி” தொடர்ந்து ஆய்வு செய்து கொண்டு இருக்கிறோம்.
அப்புத்தகத்தின் முதல் பத்தியில் “நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் எதுதான் ஆச்சரியமாக இல்லாமல் இருந்தது? என்று அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் கேட்டதாக” ஹதீஃதில் தெரியப்படுத்தி இருந்த செய்தியை ஆய்வு செய்து, அந்த செய்தி ஹதீஃதுகளில் இல்லை என்றும், அசி ஆசிரியர் அவரது சொந்த கற்பனையை ஹதீஃதில் சொருகி இருக்கிறார் என்பதையும் சென்ற ஜனவரி 2020 அந்நஜாத் இதழில் தெளிவுபடுத்தி இருந்தோம்.
இரண்டாம் பத்தியில் அசி புத்தகம் எழுதி இருப்பதை இன்ஷா அல்லாஹ் இப்போது ஆய்வு செய்வோம். அசி புத்தகம் தெரிவிக்கும் அந்த செய்திகளை கீழே தந்துள்ளோம். அதை கவனமாகப் படித்துப் பாருங்கள்.
அசி புத்தகத்தில் உள்ளவை :
“ஒரு தடவை நபி(ஸல்) அவர்கள் இரவில் என்னிடத்திற்கு வந்து, என்னுடைய படுக்கையில் சற்று நேரம் படுத்திருந்த பின், என்னுடைய ரப்பை, நான் வணங்குவதற்கு என்னை விடு என்று கூறிவிட்டு எழுந்து சென்று உளூச் செய்து, தொழுவதற்காகத் தக்பீர் கட்டி அழ ஆரம்பித்து விட்டார்கள். கண்ணீர் அன்னாருடைய நெஞ்சின் மீது வழிந்தோடிக் கொண்டிருந்தது. பிறகு ருகூவிலும், சுஜூதிலும் இவ்வாறே அழுதுகொண்டிருந்தார்கள். இரவு முழுவதையும் இவ்வாறே கழித்தார்கள். சுப்ஹு தொழுகைக்கு பிலால்(ரழி) அவர்களும் வந்துவிட்டார்கள்.
எமது ஆய்வு :
டிசம்பர் 2019 இதழில் நாம் காண்பித்துள்ள பல ஹதீஃதுகளில் ஒரு ஹதீஃதில் கூட அசி புத்தகம் கூறும் மேற்கண்ட சம்பவம் இடம்பெறவில்லை என்பதை அறிந்தோம். நபி(ஸல்)அவர்களை தொழவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் செயல்பட்டுக் கொண்டு இருந்தது போல, ஒரு கற்பனையை அசி ஆசிரியர் அவரது மனதில் உருவாக்கி, “என்னுடைய ரப்பை, நான் வணங்குவதற்கு என்னை விடு! என்று நபி(ஸல்) அவர்கள் அன்னை ஆயிஷா(ரழி) அவர்களிடம் கூறியதாக பச்சைப் பொய்யை எழுதி வைத்திருக்கிறார். அற்பத்தனமான செயல் இது.
அசி புத்தக ஆசிரியர், அவரது மனதில் என்னென்ன அசிங்கங்களை நினைத்தாரோ, மனதை விட்டு வீசி எறிய வேண்டிய அவைகள் அத்தனையையும், ஹதீஃத்களில் இடைச் செருகல் செய்து, அவைகளை இந்த வீணான அசி புத்தகத்தற்குள் ஹதீஃத் எனக் கூறி இடம்பெறச் செய்துவிட்டார். இதைப் படிப்பவர்கள், அசி ஆசிரியரின் எண்ணங்கள் தூய்மையாக இருக்காது என்ற முடிவுக்கு சர்வ சாதாரணமாக வந்து விடுவார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.
எண்ணம் மட்டும் இல்லை, தூய்மை இல்லாத அவரது அந்த எண்ணங்கள் அசி புத்தகத்தில் எழுதி அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் மீது வீண் பழி சுமத்தி செயல் வடிவம் கொடுத்த அவர் அல்லாஹ்விடத்தில் மாபெரும் குற்றவாளியாகிவிட்டார் என்ற முடிவுக்கே எம்மால் வரமுடிகிறது.
ஆனால், அசி புத்தகத்தின் ஆதரவாளர்கள் கூறுவது போல தப்லீக் ஜமாஅத்தில் அவரது அசி புத்தகத்தைப் படித்து தவறான வழிகளில் சென்று கொண்டிருந்த பெரும்பாலானவர்கள் தொழுகையாளிகளாக மாறி உள்ளனர். அதன் காரணமாக எவ்வளவு பெரிய பாவங்களையும் மன்னிக்கக்கூடிய அல்லாஹு ரப்புல் ஆலமீன் அவரது இந்த பாவத்தை மன்னித்து விடுவான் என்று நாம் கருத முடியுமா என்று ஆராய்ந்தால், அல்லாஹ்வின் எச்சரிக்கைகள் நம்மை பயப்பட வைக்கின்றன என்பதை அறிய முடிகிறது. இறை வசனத்தை இப்போது காண்போம்.
“மேலும், அவர்களில் எழுத்தறிவில்லாதோரும் இருக்கின்றனர். கட்டுக்கதைகளைத் தவிர வேதத்தை அறிந்து வைத்திருக்கவில்லை, மேலும், அவர்கள் கற்பனை செய்வோர்களாக அன்றி வேறில்லை”. அல்குர்ஆன்: 2:78
எழுதப் படிக்கத் தெரியாதவர்களைப் பற்றி இந்த ஆயத்தில் கூறப்பட்டிருப்பதால், எழுதப் படிக்கத் தெரிந்த அசி ஆசிரியருக்கு இந்த வசனம் பொருந்தாது என்று மெத்தப் படித்த சில அறிவு ஜீவிகள்(?) கூறலாம். உண்மையில் அவரும் இந்த அறிவு ஜீவிகளும் இந்த வசனத்தை ஆழ்ந்து சிந்திக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
எழுத்தறிவில்லாதோர் என்று அல்லாஹ் யாரை கூறுகிறான்? கட்டுக் கதைகளை கற்பனை செய்பவர்களைத்தான் அல்லாஹ் எழுத்தறிவில்லாதோர் என்று கூறியிருப்பதை இப்போதாவது தெரிந்து கொள்ளுங்கள். அதாவது எக்காலத்திற்கும் பொருந்தும் உண்மை செய்திகளைக் கூறும் ஹதீஃதுகளில், கோணலை உண்டாக்கும் நோக்குடன் அசி ஆசிரியர் அவரது கற்பனையில் உதித்த கட்டுக்கதைகளை, இடைச் செருகல் செய்யக்கூடாது என்ற அறிவு இல்லாமல் இடைச் சொருகல் செய்திருப்பதால், எழுதப் படிக்கத் தெரிந்திருந்தும் அசி ஆசிரியர் மேற்கண்ட குர்ஆன் வசனத்தின்படி எழுத்தறிவில்லாதவராக ஆகிவிட்டார்.
இவர்களைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கடுமையான எச்சரிக்கையைப் பார்த்தால், அனைவரும் இன்னும் பயப்பட வேண்டி இருக்கிறது. அந்த ஹதீஃதைப் பாருங்கள்.
என்னுடைய இயற்பெயரை நீங்களும் சூட்டிக் கொள்ளுங்கள். (அபுல் காஸிம் என்ற) சிறப்புப் பெயரை உங்கள் சிறப்புப் பெயராக்கிக் கொள்ளாதீர்கள். கனவில் என்னைக் கண்டவர், என்னையே கண்டவராவார். ஏனெனில், ஷைத்தான் என் வடிவத்தில் காட்சியளிக்கமாட்டான். மேலும் என்மீது வேண்டுமென்றே இட்டுக்கட்டிக் கூறுபவன் நரகத்தில் தன்னுடைய இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும் என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள். (ஹதீஃத் எண்.110, அத்.3 கல்வியின் சிறப்பு)
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களோ எழுதப் படிக்கத் தெரியாதவர்களாயிருந்தும், உலகிற்கு உண்மையை மட்டுமே எடுத்துரைத்து, “யாஸீன், ஞானம் நிரம்பிய இக்குர்ஆன் மீது சத்தியமாக! நீர்(நம்) தூதர்களில் உள்ளவராவீர். நிச்சயமாக நேரான பாதை மீது (இருக்கின்றீர்) அல்குர்ஆன்: 36:1-4 என்று படைத்தவனால் பாராட்டுப் பெற்ற மாபெரும் அறிவாளியாக இருக்கின்றார்கள் என்பதையும் நினைவிற் கொள்வீராக!
அல்லாஹ்வும், மேலும், அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்) அவர்களும் கூறியதற்கு மேலாக மார்க்கம் என்ற பெயரில் அசி ஆசிரியர் அவரது எண்ணங்களை ஹதீஃதுகளில் சொருகி விட்டதால், மறுமையில் அவரது முடிவு என்ன என்பதை தீர்ப்பு நாளின் அதிபதியான அல்லாஹ் ஒருவன் மட்டுமே தீர்ப்பாளனாகவும், அனைத்தையும் அறிந்தவனாகவும் இருக்கின்றான்.
அசி புத்தகம் மென்மேலும் கூறுவதைக் காணுங்கள். நபி(ஸல்) அவர்கள் தக்பீர் கட்டி அழ ஆரம்பித்துவிட்டார்களாம். பிறகு ருகூவிலும், சுஜூதிலும் இவ்வாறே அழுது கொண்டிருந்தார்களாம், இரவு முழுவதையும் இவ்வாறே கழித்தார்களாம்.
எப்படி இருக்கிறது பாருங்கள். இரவு முழுவதும் தொழுதார்களா? அல்லது அழுதார்களா? என்ற சந்தேகம் எவருக்கும் வந்துவிடக்கூடாது என்பதற்காக, தக்பீர் கட்டி அழுததாக கூறுகிறது அசி புத்தகம்.
இந்த விஷயத்தை அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவித்துள்ளதாக நல்ல பிள்ளை தனத்துடன் கூறுகிறார் அசி ஆசிரியர். ஆனால் அவரது வழக்கமான “கோல்மால் வேலையை” அதாவது அவர் கூறிய விஷயம் எந்த ஹதீஃத் நூலில் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தாமல் விட்டுவிட்டார். சரியான நரித்தந்திரம்.
ஹதீஃத் நூலைக் கூறிவிட்டால், எவரும் சுலபமாக ஹதீதைப் பார்த்து தாம் கூறிய கப்சாக்கள் ஹதீஃதில் இல்லை என்பதை தெரிந்து கொண்டு தம்மை நாறடித்து விடுவார்கள் என்பதை கணித்து வைத்து செயல்படுவது அசி ஆசிரியரின் வாடிக்கையான வழக்கம்; மட்டுமின்றி, அது அவரின் தொலைநோக்கு பார்வையும் கூட.
ஹதீஃத் நூலின் பெயரைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டால், பல லட்சக்கணக்கில் உள்ள ஹதீஃதுகளில் அவரது கப்சாவை எவராலும் கண்டுபிடிக்கவே முடியாது என்ற அவரது குருட்டு தைரியம் ஹதீஃதில் மோசடி செய்து வருகிறார். இவரின் இந்த மோசடி தனத்தால், நபி(ஸல்) அவர்கள் அழுத சம்பவங்கள் குறித்த ஹதீஃதுகளைத் தேடியதில் கிடைத்துள்ள ஹதீஃத்களை இப்போது பகிர்ந்து கொள்வோம்.
அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் மகனார் இப்ராஹீம் (அலை) அவர்கள் மரணித்த வேளையில் அழுததாக பல ஹதீஃத்கள் கூறுகின்றன.
(உதாரணம்: புகாரி: 1303)
சஅத் பின் உபாதா(ரழி) அவர்களை மரணத் தருவாயில் சந்தித்து அழுத சம்பவம் பல ஹதீஃதுகளில் இடம் பெற்றுள்ளன. (உதாரணம்: புகாரி: 1304)
நபி(ஸல்) அவர்கள் கேட்டதற்கு இணங்கி, இப்னு மஸ்வூத்(ரழி) அவர்கள் அந்நிஸா அத்தியாயத்தின் சில வசனங்களை ஓதிக் கொண்டிருக்கிறார். அப்போது, “எனவே (நபியே!) ஒவ்வொரு கூட்டதினரையும் (அவர்களுடைய) சாட்சியுடன் நாம் கொண்டு வரும்போது, நாம் இவர்கள் மீது சாட்சியாக உம்மையும் கொண்டு வந்தால் எப்படி இருக்கும்?” என்கின்ற 4:11 வசனத்தை ஓதும்போது நபி(ஸல்) அவர்கள் அழுத சம்பவம் சில ஹதீஃதுகளில் இடம் பெற்றுள்ளது. (உதாரணம். முஸ்லிம்: 1466)
தமது சமுதாயத்திற்காக அல்லாஹ்விடம் நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தபோது அழுததாக புகாரி 7448 ஹதீஃதில் காணப்படுகிறது.
உண்மை இவ்வாறு இருக்க, தமது கப்சா ஹதீஃத்கள் மூலம், நபி(ஸல்) அவர்கள் இரவு முழுவதும் தொழுது கொண்டே அழுதார்கள் என்றோ அல்லது அழுது கொண்டே தொழுதார்கள் என்றோ அசி புத்தக ஆதரவாளர்களின் மனதில் பதிய வைத்து விட்டார். அதாவது இரவு முழுதும் தூங்காமல் இறை வணக்கம் செய்ய வேண்டும் என்ற இஸ்லாம் காட்டித்தராத, இஸ்லாத்திற்கு எதிராக, அவரது தவறான கொள்கையை அசி புத்தகத்தின் மூலம் அறிமுகப்படுத்தி விட்டார் அதன் ஆசிரியர்.
நபி(ஸல்) அவர்கள் முழு இரவையும் அழுதுகொண்டே தொழுகையில் கழித்ததாக எந்த ஒரு செய்தியும் ஹதீஃத்களில் இடம்பெறவேயில்லை என்பதை எம்மால் நிச்சயமாக கூறமுடியும். அசி ஆசிரியர் சார்பாக, ஏதேனும் ஒரு கப்சா ஹதீஃதை தருவதற்கு எவரும் முன்வருவார்களேயானால், அது முழு இரவும் அல்ல என்பதை கீழ்காணும் இறை வசனங்களிலிருந்து அறிந்துகொள்ளுங்கள்.
போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே! (73:1)
இரவில் சிறிது நேரம் தவிர்த்து(தொழ) நிற்பீராக! (73:2)
அதில் பாதி அல்லது சிறிது குறைத்துக் கொள்வீராக! (73:3)
அல்லது அதைவிடச் சற்று அதிகப்படுத்திக் கொள்வீராக:
மேலும் குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி நிறுத்தியும் ஓதுவீராக! (73:4)
நிச்சயமாக நாம் விரைவில் கனமான உறுதியான ஒரு வாக்கை உம்மீது இறக்கிவைப்போம். (73:5)
நிச்சயமாக இரவில் எழுவது (அகத்தையும், புறத்தையும்) ஒருங்கிணைக்கவல்லது. மேலும் வாக்கையும் செவ்வைப்படுத்த வல்லது. (73:6)
மேற்கண்ட இறை வசனங்களுக்கேற்ப ஸஹீஹான ஹதீஃத் ஒன்று எமது தேடலில் கிடைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஹதீஃத் வேறு எந்த ஹதீஃதும் இல்லை, அசி ஆசிரியர் காண்பித்துள்ள அதே ஹதீஃத் தான் இது. இது ஒரு நீண்ட ஹதீஃத் சுருக்கத்தை மட்டும் வார்த்தைகள் சிதைவில்லாமல் தந்துள்ளோம். அன்னை ஆயிஷா(ரழி) அவர்களே, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் இரவு வணக்க வழிபாடுகள் குறித்து தெரியப்படுத்தும் செய்திகளை உள்ளடக்கிய அதே ஹதீதுதான் இது. இந்த ஹதீஃதுடன் அசி ஆசிரியரின் கூற்றை இப்போது ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.
சஅத் பின் ஹிஷாம்(ரழி) அறிவிக்கிறார் :
“முஃமின்களின் தாயே! அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது?” என்று நான் அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடம் வினவினேன். “குர்ஆனை ஓதியதில்லையா?” என்று அவர்கள் என்னிடம் கேட்டுவிட்டு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை குர்ஆன் ஆகவே இருந்தது” என்று கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கண் விழித்து தொழும் இரவுத் தொழுகையைப் பற்றி கூறுங்கள்” எனக் கேட்டேன். “போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே! என்ற அத்தியாயத்தை நீங்கள் ஓதியது இல்லையா?” என்று கேட்டுவிட்டு, மேலும் கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் முழு இரவும் தொழமாட்டார்கள்” மற்ற மாதங்கள் தவிர, மாதம் முழுதும் ரமழானில் தான் நோன்பு நோற்பார்கள்” என்று பதிலளித்தார்கள். என் வினாக்களுக்கு விடைபெற முஃமின்களின் அன்னையிடம் என்னை அனுப்பி வைத்த இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களிடம் இவற்றை தெரிவித்தேன். “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உண்மையில் இதுதான் (அல்லாஹ்வின் தூதர்(ஸல்)) அவர்களின் வழிமுறை” என்று அவர்கள் கூறினார்கள். (ஹதீஃத் சுருக்கம்) ஹதீஃத் நூல்: அபூதாவூத் (ஆங்கிலம்), தரம்: ஹதீஃத் எண்: 1342, பாடம்: 5ல் இந்த ஹதீஃதின் வரிசை எண். 93)
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், இரவு நேரத்தில் தம் பாதங்கள் வீங்கும் அளவிற்கு நின்று வணங்குவார்கள் என்ற செய்தியைத்தான் ஹதீஃதுகள் தெரிவிக்கின்றனவே ஒழிய, இரவு முழுவதும் அழுது கொண்டு தொழுதார்கள் என்று தெரிவிக்கவே இல்லை என்பது சர்வ நிச்சயம்.
அப்படி இருக்க, அசி புத்தகம் இந்த கப்சா செய்திகளின் மூலமாக எதை தெரியப்படுத்துகிறது என்றால், சுலபமான இந்த மார்க்கத்தில் மனிதர்களால் செய்ய முடியாத செயல்களை எல்லாம் செய்யச் சொல்லி, மார்க்கம் அல்லாஹ் தெரிவிப்பதுபோல லேசானது அல்ல, கடினமான ஒன்று என மக்களிடம் நிலைநாட்ட முயல்கிறது. அல்லாஹ்வும் அவனது தூதரும் இரவு முழுவதும் தொழுவதை தடை செய்திருப்பதால் அதற்கு எதிரான வழியை அறிமுகப்படுத்துதல் மட்டுமே அசி புத்தகத்தின் அடிப்படை நோக்கம் என்பதை நாம் ஒவ்வொரு ஆய்விலும் கண்டறிந்து வருகிறோம்.
எனவே, எல்லா முஸ்லிம்களும் இதைப் புரிந்து கொண்டு, அசி புத்தகம் உண்மை கூறுகிறது என்று அப்பாவித்தனமாக இருக்கும் தப்லீக் ஜமாஅத் சகோதரர்களிடம் உண்மையை நயமாக எடுத்துச் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தான் சுமந்து கொண்டிருக்கும் பொய் மூட்டையை அவிழ்த்து, அதிலிருந்து எடுத்து அள்ளி வீசும் அசி புத்தக ஆசிரியரின் அடுத்த பொய் இடம் பெற்றுள்ள மூன்றாவது பத்தியில் உள்ளதை அடுத்த இதழில் ஆய்வு செய்வோம். இன்ஷா அல்லாஹ்.
*********************************************************
ஆதிகால வேதங்களும்! இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்!!
தொடர் : 54
M.T.M. முஜீபுதீன், இலங்கை
2020 ஜனவரி மாத தொடர்ச்சி…..
முஸ்லிம்கள் நல்லவற்றில் தலைவனுக்கு கட்டுப்பட்டு நடத்தல் வேண்டும் :
இன்று உலகில் பல நாடுகளில் பல வகையான ஆட்சி முறைகள் காணப்படுகின்றன. பல ஜனநாயக நாடுகளில் பல கட்சிகள் செயல்படுகின்றன. அதில் பெரும்பான்மையினர் வாக்களித்த கட்சி ஆட்சியில் இருக்கும். ஆட்சித் தலைவர்கள் பிழை விடும்போது அவர்களை ஆக்கபூர்வமாக விமர்சிக்கும் உரிமை எதிர்க்கட்சியினருக்கு இருக்கும். ஆனால் நடைமுறையில் பல நாடுகளில் அவ்வாறு நடப்பதில்லை. ஆட்சித் தலைவன் செய்கின்ற நல்ல விஷயங்களையும், எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதைக் காண்கிறோம். அதுபோல் ஆட்சித் தலைவன் எடுக்கிற தவறான தீர்மானங்களை எதிர்க்கட்சிகள் விமர்சிக்கும்போது அதனை ஆட்சியாளர்கள் கண்டுகொள்வதில்லை. ஆட்சியாளர்கள், எதிர்க்கட்சியினரை தண்டிக்கவும் செய்கின்றனர்.
அத்துடன் ஒரு ஆட்சியாளருக்கு அதிகமான மக்கள் நல்ல கொள்கைகளுக்காகவும், நல்ல ஆட்சியை ஏற்படுத்துவதற்காகவும் ஆதரவளிப்பதில்லை. தமக்கு தகுதியில்லாத சலுகைகளை அரசிடமிருந்து பெற்றுக் கொள்வதற்காக ஆதரவை அளிக்கின்றனர். இதனால் அரசு விடும் தவறுகளைக் கண்டுகொள்வதில்லை. இந்நிலை தொடரின் பிழையான ஆட்சித் தலைமைகள் தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்குக் காரணமாக அமைகின்றது. அதனால் நாட்டுமக்கள் வாழ்க்கைத்தரம் வீழ்ச்சி அடைகின்றது. மக்களின் மனித உரிமைகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் ஜனநாயகம் தோல்வி அடைகின்றது. நாட்டில் குழப்பமும், பிரச்சனைகளும் அதிகரிக்கின்றன.
ஆனால் இஸ்லாம் மார்க்கம் ஆட்சித் தலைவருக்கு கட்டுப்படும் சந்தர்ப்பங்களையும், அதற்கான சட்டங்களையும் வகுத்து வழிகாட்டியுள்ளது. அத்துடன் ஆட்சித் தலைவர்கள் மக்களுடன் நடந்து கொள்ளும் முறைகளையும் இறைநெறிநூலான அல்குர்ஆன் முலமும், இறுதி இறைத் தூதர் மூலமும் வழிகாட்டியுள்ளது. ஒரு முஸ்லிம் எந்த அடிப்படையில் ஆட்சித் தலைவருக்குக் கட்டுப்படுதல் வேண்டும் என கவனிப்போம்.
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள். இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்ப்படியுங்கள். உங்களில் ஏதாவது விஷயத்தில் பிணக்கு ஏற்பட்டால், மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின், அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள். இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும். (அல்குர்ஆன்:4:59)
ஒரு மனிதன் நேர்மையான விஷயங்களில் அதிகாரமுடைய தலைவர்களுக்கு கட்டுப்பட்டு நடத்தல் வேண்டும். சிலர் சாதி, இனம், மொழியின் அடிப்படையில் தலைவர்களுக்கு கட்டுப்படுவது உண்டு. ஒருவரின் உடல் கட்டமைப்பையோ அல்லது நிறத்தையோ பார்த்துக் கட்டுப்படுதல் கூடாத செயல் ஆகும். கவனியுங்கள். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உலர்ந்த திராட்சை போன்ற (சுருங்கிய) தலையுடைய அபிசீனிய (கறுப்பு நிற) அடிமை ஒருவர் உங்களுக்கு தலைவராக ஆக்கப்பட்டாலும் அவரது சொல்லைக் கேளுங்கள் (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள். (புகாரி : 7142)
ஆட்சித் தலைவரிடம் தனக்குப் பிடிக்காத ஒரு விஷயத்தைக் கண்டு வெறுப்பவர் பொறுமையாக இருத்தல் வேண்டும். பின்வரும் ஹதீஃதை கவனியுங்கள். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
தம் (ஆட்சித்) தலைவரிடம் ஏதேனும் கண்டு அதை வெறுப்பவர் பொறுமையைக் கடைப்பிடிக்கட்டும். ஏனெனில், ஒருவர் (இஸ்லாமியக்) கட்டமைப்பிலிருந்து ஒரு சாண் அளவுக்குப் பிரிந்து இறந்து போனாலும் அவர் அறியாமைக்கால மரணத்தையே தழுவுவார். (புகாரி : 7143)
ஒரு முஸ்லிம் இறை கட்டளைக்கு மாறு செய்யாதவரை தலைவருக்குக் கட்டுப்படுதல் அவசியமாகும். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(இறைவனுக்கு) மாறு செய்யும்படி கட்டளையிடப்படாத வரை, ஒரு முஸ்லிம் தமக்கு விருப்பமான விஷயத்திலும் விருப்பமில்லாத விஷயத்திலும் (தலைமையின் கட்டளையைச்) செவியேற்பதும் (அதற்குக்) கீழ்ப்படிவதும் கடமையாகும். (இறைவனுக்கு) மாறு செய்யும்படி கட்டளையிடப்பட்டால் (அதைச்) செவியேற்பதோ (அதற்குக்) கட்டுப்படுவதோ கூடாது. (புகாரி : 7144)
நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறும் கூறியுள்ளார்கள். கவனியுங்கள்:
எனக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தவராவார். எனக்கு மாறு செய்தவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்தவர் ஆவார். என்னால் நியமிக்கப்பட்ட தலைவருக்குக் கீழ்படிந்தவர் எனக்குக் கீழ்படிந்தவர் ஆவார். என்னால் நியமிக்கப்பட்ட தலைவருக்கு மாறு செய்தவர் எனக்கு மாறு செய்தவர் ஆவார். (புகாரி : 7137)
நபி(ஸல்) அவர்களினால் நியமிக்கப்பட்ட தலைவருக்குக் கட்டுப்படுபவர் நபிக்குக் கட்டுப்படுபவர் எனக் கூறப்பட்டாலும் தலைவர் விடும் பிழையான கட்டளைகளுக்குக் கட்டுப்படுதல் கூடாது.
பின்வரும் ஹதீஃதை கவனியுங்கள்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு படைப்பிரிவை அனுப்பி, அவர்களுக்கு அன்சாரிகளில் ஒருவரைத் தளபதியாக்கி, அவருக்குக் கட்டுப்பட்டு நடக்கும்படி படைவீரர்களுக்கு உத்தரவிட்டார்கள். அந்த அன்சாரி (ஒரு கட்டத்தில்) படைவீரர்கள் மீது கோபம் கொண்டு, “நீங்கள் எனக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளை இடவில்லையா?” என்று கேட்டார். அவர்கள், “ஆம்” என்றனர். அவர், “விறகைச் சேகரித்து நெருப்பை மூட்டி அதில் புகுந்து விடும்படி உங்களுக்கு நான் உத்தரவிடுகின்றேன்” என்று சொன்னார். அவ்வாறே அவர்கள் விறகைச் சேகரித்து நெருப்பை மூட்டினர்.
அதில் நுழைய நினைத்தபோது ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்று கொண்டனர். அவர்களில் ஒருவர், “(நரக) நெருப்பிலிருந்து தப்பிக்கத்தானே நாம் நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றினோம். அவ்வாறிருக்க, அதில் நாம் நுழைய வேண்டுமா?” என்று கேட்டார். இதற்கிடையே நெருப்பும் அணைந்தது அவருடைய கோபமும் தணிந்தது. பிறகு நபி(ஸல்) அவர்களிடம் இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள், “அதில் மட்டும் அவர்கள் புகுந்திருந்தால் அதிலிருந்து ஒருபோதும் வெளியேறியிருக்க மாட்டார்கள். கீழ்ப்படிதல் என்பதெல்லாம் நன்மையில்தான்” என்று சொன்னார்கள். (புகாரி: 7145)
இன்று மனிதர்களில் சிலர் அரசன் எவ்வழியோ குடிகளும் அவ்வழி என வாழ முயற்சிக்கின்றனர். ஆனால் இந்த முயற்சி நல்லவற்றில் மட்டுமே இருத்தல் வேண்டும். தீயவற்றில் இருக்கக் கூடாது. இறைவனுக்கு இணை துணைகளை ஏற்படுத்துவதில், அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாறு செய்வதில் தலைவர்களுக்கு வழிபடக்கூடாது. இவ்வாறான விஷயங்களில் கருத்து முரண்பாடு வந்தால் அல்லாஹ்வின் அல்குர்ஆன் என்ற கயிற்றைப் பலமாக பற்றி, நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில் முழுமையாக நுழைந்து விடுவதே இம்மை, மறுமை வெற்றிக்கு துணையாக அமையும். அல்லாஹ் ஒவ்வொரு மனிதனையும் படைத்து அவர்களுக்கு உலகில் அதிகாரங்களையும், பொறுப்புகளையும் வழங்கியுள்ளான்.
அத்துடன் ஒவ்வொரு காலத்திலும் வாழ்ந்த மக்களுக்கு நேர்வழி காட்ட இறைத் தூதர்களையும், இறைநெறி நூல்களையும் இறக்கி மனிதர் வாழ நல்வழி காட்டியுள்ளான். அவ்வாறு இன்று வாழும் மக்களுக்கு இம்மையிலும், மறுமையிலும் நேர்வழி காட்ட இறைவனினால் அனுப்பப்பட்ட இறுதி இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களாவர். இறுதி இறைநெறி நூல் அல்குர்ஆன் ஆகும். இதனை மறுப்பின் ஷைத்தானின் வழியையே நீங்கள் வழிப்பட வேண்டி இருக்கும். இது நரகை அடையவே வழிகாட்டும். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளர் ஆவார். அவர் தமது குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண் தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளர் ஆவான், அவன் தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டாருக்கும், அவனது குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அது குறித்து விசாரிக்கப்படுவாள், ஒருவருடைய பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள். (புகாரி : 7138)
உலகில் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் பொறுப்பாளிகள் ஆவர் அவர்களுடைய பொறுப்பு பற்றி அல்லாஹ்வினால் மறுமையில் விசாரிக்கப்படுவார்கள். இன்று பல ஆட்சித் தலைவர்கள் தமக்கு ஆட்சி கிடைத்தவுடன் அல்லாஹ்வை மறந்து ஆடம்பரமான வாழ்க்கை வாழ்கிறார்கள். தமது மக்களுக்கு சீரான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு மறந்துவிடுகிறார்கள். நாட்டின் சொத்துக்களை தமது சொத்து போல் வீண் விரயம் செய்வர். அவர்கள் கெட்ட ஆட்சித் தலைவர்களாக இருப்பர். அவ்வாறான தலைவர்களுக்கு அல்லாஹ்வின் தண்டனை காத்திருக்கிறது. கீழ்வரும் ஹதீஃதை கவனியுங்கள்.
(நபித்தோழர்) மஅகில் பின் யஸார் (ரழி)அவர்கள் இறப்பதற்கு முன் நோய் வாய்ப்பட்டிருந்த போது அன்னாரை(ச் சந்தித்து) நலம் விசாரிப்பதற்காக (அன்றைய பஸ்ரா நகர ஆட்சியர்) உபைதுல்லாஹ் பின் ஸியாத் சென்றார். அவரிடம் மஅகில்(ரழி) அவர்கள் “நான் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கிறேன். நபி(ஸல்) அவர்கள், “ஓர் அடியானுக்குக் குடிமக்களின் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவன் அவர்களது நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக் கூட அவன் பெறமாட்டான்” என்று சொல்ல நான் கேட்டேன்” எனக் கூறினார்கள். (புகாரி: 7150)
ஆகவே ஆட்சித் தலைவர்கள் அரச சொத்துக்களை வீண் விரயம் செய்யக் கூடாது. அவ்வாறு செய்வது பெரும் பாவமாகும். நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையில் அழகிய முன்மாதிரி இருக்கிறது. அவர்கள் ஆட்சித் தலைவராக இருந்தாலும் மிக எளிமையான வாழ்க்கையே வாழ்ந்தார்கள்.
நபி(ஸல்) அவர்களின் எளிமை வாழ்வு:
அல்லாஹ்வின் இறுதி இறைத் தூதரான முஹம்மது(ஸல்) அவர்கள் சிறந்த நற்பண்புகள் உடையவராக வாழ்ந்தார்கள். அவர் அல்லாஹ்வின் இறைத் தூதராகவும், ஆட்சித் தலைவராகவும் வாழ்ந்தார்கள். அவர் அனாதைகளை அரவணைப்பவராகவும், தமது மனைவிகளுக்கு சிறந்த கணவராகவும். ஏழைகளுக்கு உதவுபவராகவும், தோழர்களுக்கு சிறந்த தோழராகவும் வாழ்ந்தார்கள். நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை மனித குலத்திற்கு சிறந்த நேர்வழியாக இருந்தது.
அவர் ஆட்சித் தலைவராக இருந்தார். அவர் ஏழைகளுக்கு உதவுபவராக இருந்தார். அவருடைய வாழ்க்கை அநேகமான ஆட்சித் தலைவர்களைப் போல ஆடம்பரமாக இருக்கவில்லை. மிகவும் எளிமையாக இருந்தது. எளிமையான நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை பற்றிய ஹதீஃத்களை கவனியுங்கள்.
ஆயிஷா(ரழி) அவர்கள் கூறியதாவது:
முஹம்மது(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்ததிலிருந்து அவர்கள் இறக்கும் வரை அவர்களின் குடும்பத்தார் கோதுமை உணவைத் தொடர்ந்து மூன்று நாட்கள் வயிறு நிரம்ப உண்டதில்லை. (புகாரி: 6454)
*********************************************************
ஸலவாத் ஏன் கூறவேண்டும்?
Dr. முஹம்மது அலி M.A.,
நபி(ஸல்) அவர்கள் மூலமாக மிகச் சிறந்த வழிகாட்டுதலை நமக்கு அல்லாஹ் வழங்கியுள்ளான். தனக்கு, வல்ல அல்லாஹ்வால் தரப்பட்ட அந்தப் பொறுப்பை சரியான முறையில் அவர்கள் நிறைவேற்றினார்கள். அல்லாஹ்வின் செய்தியில் கடுகளவு கூட்டவும், குறைக்கவுமின்றி அப்படியே நம்மிடம் ஒப்படைத்தார்கள். நரக நெருப்பிலிருந்து நம்மை விடுதலை செய்யும் சரியான வழியை நமக்குக் காட்டினார்கள். மக்கள் நேர்வழி அடையவேண்டும் என்பதற்காக ஈடுபட்ட போராட்டத்தில் எண்ணற்ற துன்பங்களுக்கும், கொடுமைகளுக்கும் ஆளாக்கப்பட்டும், தன் சமுதாயம் நேர்வழி அடையவேண்டுமென்பதற்காக அத்தனையையும் தாங்கிக் கொண்டார்கள். நமது தாய், தந்தை மற்றும் உலக மக்கள் அனைவரையும் விட அவர்கள் மீது அன்பு வைப்பது நம்மீது கடமையாகும். அதில் ஒரு பகுதியாகவே நாம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்காக அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம். அதாவது ஸலவாத் சொல்கிறோம். ஆம்! ஸலவாத் என்றாலே துஆ என்றுதான் பொருள்.
ஸலவாத் பொருள் :
நம்மில் சிலர் ஸலவாத் என்றால், நபி (ஸல்) அவர்களிடம் நாம் எத்தனையோ கேட்கிறோம் என்று கருதிக் கொண்டுள்ளனர். உண்மை அதுவல்ல, மாறாக நபி(ஸல்) அவர்களுக்காக ஸலவாத்தில் நாம் தான் துஆ செய்கிறோம். உதாரணத்துக்கு நாம் மேலே எழுதியுள்ள ஸலவாத்தின் பொருளை மீண்டும் பார்ப்போம்.
யா அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் நீ பேரருள் புரிந்தது போல் முகம்மது(ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் நீ பேரருள் புரிவாயாக! நிச்சயமாக நீயே மகத்துவம் உள்ளவனும் புகழுக்குரியவனுமாவாய்.
இதுதான் அந்த ஸலவாத்தின் உண்மைப் பொருள். இதில் நாம்தான் அல்லாஹ்வின் திருத்தூதருக்காக துஆ செய்கிறோம். நாம் அவர்களிடம் எந்த ஒன்றையும் கேட்கவில்லை. இதுபோல் நாம் சொல்கின்ற எந்த ஸலவாத்துக்கும் நபிகளுக்காக துஆ செய்வது என்பதே பொருள்.
நமக்கென்ன தகுதி உண்டு?
அல்லாஹ்வின் படைப்பினங்களில் தலைசிறந்து விளங்குகின்ற நபி(ஸல்) அவர்களுக்கு நாம் துஆ செய்து என்ன ஏற்பட்டு விடும் என்ற ஐயம் பலருக்கு ஏற்படலாம். துஆ என்பது உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்களுக்காக செய்யவேண்டியது என்ற தவறான எண்ணமே இந்த ஐயத்தின் அடிப்படை.
உண்மையில் எவ்வளவு தாழ்ந்த நிலையில் உள்ளவரும் உயர்ந்தவருக்காக துஆ செய்யலாம். உயர்ந்தவரும் தாழ்ந்தவருக்கு துஆ செய்யலாம். அதற்குரிய ஆதாரங்களை பார்ப்போம்.
சுவனத்தில் வஸீலா என்ற பதவி ஒன்று உண்டு. அதை ஒரே ஒரு அடியாருக்கு அல்லாஹ் வழங்க இருக்கின்றான். அந்தப் பதவியை அடையும் ஒரு நபராக நான் இருக்க விரும்புகின்றேன். எனவே எனக்காக வஸீலா என்ற பதவியை அல்லாஹ்விடம் கேளுங்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரழி) ஆதாரம், முஸ்லிம் என்று நபி (ஸல்) அவர்கள் மிகவும் சாதாரண நிலையில் உள்ள நம்மிடம் தனக்காக துஆ செய்யும்படி கேட்கின்றார்கள்.
இன்னொரு முறை உமர்(ரழி) அவர்கள் உம்ரா செய்ய மக்கா சென்ற போது உமது துஆவில் நம்மை மறந்துவிடாதீர்! என்று நபி (ஸல்) அவர்கள் உமர்(ரழி) அவர்களிடம் தனக்காக துஆ செய்யும்படி கேட்கின்றனர்.
அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்) என்று உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வேறுபாடு இன்றி ஒருவருக்கொருவர் ஸலாம் கூறிக் கொள்வதை நபி(ஸல்) அவர்கள் வெகுவாக வலியுறுத்தினர். அதற்கு பதிலாக “வஅலைக்கு மஸ்ஸலாம் என்று பிரதி துஆ சொல்வதைக் கடமையாகவும் ஆக்கினர்.
நம்முடைய பெற்றோருக்கு அருளை கோரும்படி வல்ல அல்லாஹ் நம்மைப் பணிக்கிறான். எத்தனையோ வணக்கசாலிகளின் துஆக்கள் ஏற்கப்படாமல் இருந்ததுண்டு. சாதாரண மக்களின் துஆ ஏற்கப்பட்டதுமுண்டு.
அதுபோல் ஸலவாத் கூறுவதன் மூலம் நபி(ஸல்) அவர்களுக்காக நாம் துஆ செய்கிறோம். எனினும், நமது இந்த துஆவினால் தான் நபிகள் நாயகத்தின் அந்தஸ்து உயரப் போகின்றது? என்று எவரும் தவறாக எண்ணலாகாது. எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களை மிக உயர்வான நிலையிலேயே வைத்துள்ளான். மாறாக, அல்லாஹ்வின் தூதரை நன்றியோடு நினைத்துப் பார்ப்பதற்காக நமக்கே அல்லாஹ் பேரருள் புரிகின்றான். அது பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ள பொன்மொழிகளைப் பார்ப்போம்.
நபி(ஸல்) அவர்கள் இந்த சமுதாயத்திற்காகப் பாடுபட்டதற்காகவும், அவர்களின் மூலமாகவே அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டினான் என்பதற்காகவும், நாம் அவர்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம். அதன் அடிப்படையில் அவர்களுக்காக நாம் துஆ செய்கிறோம். அதுவே ஸலவாத் எனப்படும் என்று கண்டோம். ஸலவாத் சொல்வதால் ஏற்படும் பயன்களையும், அதன் சிறப்பையும் நாம் காண்போம்.
யார் என்மீது ஸலவாத் சொல்கிறானோ, அதன் காரணமாக அல்லாஹ் அவனுக்குப் பத்து மடங்கு அருள் புரிகிறான் என்று நபி(ஸல்) கூறியுள்ளனர்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரழி) நூல்: முஸ்லிம்.
என்மீது அதிகம் ஸலவாத் கூறியவர்கள் தான், மறுமையில் எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பதும் நபிமொழியாகும்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது(ரழி), நூல்: திர்மிதீ.
என்னுடைய கப்ரை திருவிழாக்கள் நடக்கும் இடமாக ஆக்காதீர்கள். என்மீது ஸலவாத் கூறுங்கள்! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் ஸலவாத் என்னை வந்து சேரும் என்றும் நபி(ஸல்) கூறியுள்ளார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரழி), நூல்: அபூதாவூத்.
இந்த நபிமொழி நமக்கு ஒரு உண்மையைத் தெளிவாக்குகின்றது. நபி(ஸல்) அவர்களைப் புகழ்கிறேன் என்று திருவிழாக்கள் கொண்டாடுவதோ, பிறந்த நாள் கொண்டாடுவதோ, பாடல்கள் பாடிக் கொண்டிருப்பதோ நபி(ஸல்) அவர்களின் மீது நாம் கொண்ட அன்புக்கு சரியான அடையாளமாகாது. மாறாக அவர்களுக்காக அல்லாஹ்விடம் ஸலவாத் எனும் துஆவை மட்டும் செய்வது தான் உண்மையான அன்பாகும் என்பதை இந்த ஹதீஃத் மூலம் நாம் உணரலாம்.
“உங்கள் ஸலவாத் என்னை வந்தடையும்” என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுக் கூறுவதிலிருந்து, ஸலவாத்தைத் தவிர மற்ற பாடல்கள், கொண்டாட்டங்கள் அவர்களை அடையாது என்றும் விளங்க முடியும். “என்னைப் பற்றிக் கூறப்படும்போது எவன் என்மீது ஸலவாத் சொல்லவில்லையோ, அவன் நாசமாகட்டும்” என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரழி) நூல் : திர்மிதீ
“என்னைப் பற்றி கூறப்படும்போது எவன் என்மீது ஸலவாத் கூறவில்லையோ அவன்தான் கஞ்சனாவான்” என்பதும் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளாகும். அறிவிப்பவர் : அலி(ரழி), நூல்: திர்மிதீ.
யாரேனும் என்மீது ஸலவாத் கூறினால் (அதாவது துஆ செய்தால்) அவன் அவ்வாறு செய்யும்போதெல்லாம் மலக்குகள் (வானவர்கள்) அவனுக்காகத் துஆ செய்கிறார்கள் என்று நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் அமீர் இப்னு ரபிஆ(ரழி), நூல்கள்: அஹ்மத், இப்னு மாஜா.
அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். “நபியே! யார் உமக்காக ஸலவாத் சொல்கின்றாரோ, அவருக்கு நான் அருள்புரிகிறேன். யார் உம்மீது ஸலாம் கூறுகிறாரோ, அவருக்கு நான் பாதுகாப்பு அளிக்கிறேன்.” அறிவிப்பவர்:அப்துர் ரஹ்மான் இப்னு அவபு(ரழி), நூல்: அஹ்மத்.
“உங்கள் நாட்களில் வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அந்த நாளில் என்மீது அதிகம் ஸலவாத் கூறுங்கள். ஏனெனில் உங்களின் ஸலவாத் எனக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, சில நபித் தோழர்கள், “நீங்கள் (மண்ணோடு மண்ணாக) மக்கிவிடும்போது எங்கள் ஸலவாத் எப்படி எடுத்துக் காட்டப்படும்?” என்று கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “நபிமார்களின் உடல்களை அல்லாஹ் மண்ணுக்கு ஹராமாக்கி விட்டான்.” (அதாவது நபிமார்களின் உடல்கள் மக்கிவிடாது) என்றனர். அறிவிப்பவர்: அவ்ல் இப்னு அவ்ஸ்(ரழி), நூல்கள்: அபூதாவூது, நஸயீ, இப்னுமாஜா.
இந்த ஹதீஃதிற்குச் சிலர் தம் மனம்போன போக்கில் விளக்கம் கொடுக்க முற்பட்டுவிட்டதால் இங்கே சில விளக்கங்களைச் சொல்வது மிகவும் அவசியமாகி விட்டது.
நபிமார்களின் உடல்கள் மக்கிவிடாது என்ற சொற்றொடரிலிருந்து சிலர் அவ்லியாக்களின் உடல்களையும் மண் மக்கிவிடச் செய்யாது என்று தவறான விளக்கங்கள் கூறத் துவங்கிவிட்டனர். அது எவ்வளவு தவறான விளக்கம் என்பது அறிவுடையோருக்கு நன்றாகவே தெரியும். ஸஹாபாக்களில் சிலர், “நீங்கள் மக்கிவிடும்போது எப்படி எங்கள் ஸலவாத் உங்களுக்கு எத்தி வைக்கப்படும்?” என்று கேட்டதற்குப் பதிலாகவே இதனை நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்த இடத்தில் ஒன்றை நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள்.
அல்லாஹ்வின் நேசர்களிலேயே நபிமார்களுக்கு அடுத்த இடம் ஸஹாபாக்களுக்குத்தான் உண்டு. அவ்லியாக்களின் உடல்கள் மக்கிவிடாது என்றால், ஸஹாபாக்களின் உடல்கள்தான் அதில் முதலிடம் பெறும். ஆனால் நபி(ஸல்) அவர்கள் அந்த ஸஹாபாக்களை நோக்கி “நபிமார்களையும், ஸஹாபாக்களாகிய உங்களையும் மண் திண்ணாது” என்று கூறாமல், “நபிமார்கள்” என்று மட்டும் சொல்கிறார்கள். இதிலிருந்து ஸஹாபாக்களுக்கே இந்த உத்திரவாதம் இல்லை என்பது தெளிவு.
ஸஹாபாக்களுக்கு இல்லாத சிறப்பு அவர்களுக்குப் பின்னர் தோன்றியவர்களுக்கு இருக்க முடியாது என்று தெரிய முடிகின்றது.
எனவே நபிமார்களின் உடல்கள் மட்டும்தான் மக்கிப் போகாமலிருக்கும். மற்றவர்களின் உடல்களை அல்லாஹ் நாடினால் அவன் பாதுகாக்கலாம். பாதுகாக்காமலுமிருக்கலாம். திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. அல்லாஹ் நாடினால் பிர்அவ்ன் போன்ற கொடியவனின் உடலையும் கூடப் பாதுகாப்பான். மிகச்சிறந்த நல்லடியார் ஒருவரின் உடலையும் பாதுகாக்காமல் அழித்து விடவும் செய்யலாம். இதுதான் உண்மை.
நீங்கள் கூறும் ஸலவாத் எனக்கு எத்திவைக்கப்படுகின்றது என்ற கூற்றிலிருந்து மற்ற விஷயங்கள் அவர்களை எட்டாது என்பதையும், “எத்திவைக்கப்படுகின்றது” என்ற சொல்லிலிருந்து, தானாக நபி(ஸல்) அவர்கள் இதனைச் செவியுறுவதில்லை. மலக்குகள் மூலம்தான் அது எடுத்துச் சொல்லப்படுகின்றது என்பதையும் நாம் தெரியமுடிகின்றது.
ஸலவாத் சொல்வதன் சிறப்புப் பற்றி இன்னும் ஏராளமான ஹதீஃத்கள் உள்ளன. நம்பிக்கையாளர்களுக்கு இவ்வளவு போதும் என்பதால் ஒருசில ஹதீஃத்களை மட்டும் எடுத்துத் தந்துள்ளோம்.
இனி அடுத்த இதழில் ஸலவாத்திலிருந்து நாம் பெறவேண்டிய பாடமும் படிப்பினையும் என்ன என்று பார்ப்போம்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்.
*********************************************************
சுவர்க்கம் என்பது மறைவான இறை நம்பிக்கையில் உள்ளதாகும்!
எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.
(பயபக்தியுடைய) அவர்கள் (புலன்களுக்கு எட்டாத) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள் அவர்கள்தான் வெற்றியாளர்கள். (2:5) என்பதற்கு, மனிதர்களின் புலன்களுக்கு அப்பாற்பட்ட சுவர்க்கம் உள்ளிட்ட குர்ஆன் கூறும் உண்மைகளே! மறைவானவை ஆகும். என இப்னு அப்பாஸ்(ரழி) இப்னு மஸ்ஊத்(ரழி) ஆகியோர் கூறினார்கள். (சுத்தீ(ரஹ்) தஃப்சீர் இப்னு கஸீர். 1:75
மேலும், யாரைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன்மீது சத்தியமாக! “மறைவான ஒன்றை நம்புவதை விட மேலானதொரு நம்பிக்கையை எவரும் கொள்ள முடியாது” என்று கூறிய அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரழி) அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள் என்று தொடங்கி “அவர்களே வெற்றியாளர்கள்” என்பது வரையுள்ள (2:3-5, ஆகிய வசனங்களை) ஓதினார்கள். (ஹாக்கிம், தஃப்சீர் இப்னு அபீஹாத்திம், தஃப்சீர் இப்னு மர்தவைஹி, இப்னு கஸீர், 1:76)
மேலும், அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்குக் கூலியாக அவர்களுக்கென மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண் குளிர்ச்சி(தரும் பரிசு)களை யாரும் அறியமாட்டார்கள். (32:17)
என்பதற்கு, (அவை) உயர்தரமான (அத்ன் எனும் சுவர்க்கச்) சோலைகள் ஆகும் மறைவாக உள்ள அவற்றை அருளாளன் தனது (நல்ல) அடியார்களுக்கு வாக்களித்துள்ளான். நிச்சயமாக அவனது வாக்கு நடைமுறைப்படுத்தப்பட்டே தீரும். (19:61,78) அவர்களுக்காக அல்லாஹ் சுவர்க்கச் சோலைகளில் நிலையான அருள்வளங்களை மறைத்து வைத்திருக்கின்றான்.
மேலும், “ஜன்னத்துல் ஃபிர்தெவ்ஸ்” 18:107, “ஜன்னத்துல் அத்னு” 19:61, 38:50, 98:08, 16:31, “ஜன்னத்துல் மஃவா” 53:15, “ஜன்னத்துல் நயீம் 70:38, 83:22, “ஜன்னத்துல் ரய்யான்” புகாரி:3257, 1896 என பல சிறப்புப் பெயர்களைக் கொண்டு அழைக்கப்படுவதும், இருப்பிடங்களிலேயே மிகச் சிறந்ததும் ஒதுங்கும் இடங்களிலேயே அழகிய தங்குமிடமாகவும் ஓய்விடமாகவும், நிலையாகத் தங்குமிடத்தாலும் சிறிது நேரம் தங்குமிடத்தாலும் அது அழகானதாக (26:76, 38:50, 25:76, 19:76)வும் பரிசுத்தமானதாகவும் அமையும்.
சுவர்க்கம் என்பது நூறு படித்தரங்களைக் கொண்டதாகும் :
உங்கள் இறைவனிடமிருந்து கிடைக்கும் பாவமன்னிப்பிற்கும், சுவர்க்கத்திற்கும் நீங்கள் விரைந்து செல்லுங்கள். அதன் அகலம் வானங்கள் மற்றும் பூமியின் அகலம் ஆகும். (3:133), உங்கள் இறைவனிடமிருந்து கிடைக்கும் பாவமன்னிப்பிற்கும், சுவர்க்கத்திற்கும் நீங்கள் விரைந்து செல்லுங்கள் அதன் அகலமானது வானம் மற்றும் பூமியின் அகலத்தைப் போன்றதாகும். (57:21)
சுவர்க்கத்தின் அகலமே இந்த அளவு என்றால் அதன் நீளமும் அதைவிட விசாலமானதாகவே இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். அதாவது அதன் அகலமே வானங்கள் மற்றும் பூமியின் அளவு இருக்கும் என்றால் அதன் நீளம் என்ன என்பது சொல்லாமலேயே விளங்கும் இதற்குச் சுவர்க்கத்தின் மெத்தைகளைப் பற்றிக் கூறும் பின்வரும் இறைவசனம் சான்றாகும். அவர்கள் (கட்டில்களின்) விரிப்புகளின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள் அவற்றின் (அவ்விரிப்புகளின்) உட்புறங்கள் இஸ்தப்ரக் என்னும் தடித்த பட்டுத் துணியால் ஆனவையாகும் (55:54) என்று அல்லாஹ் கூறுகின்றான் அவற்றின் உட்புறங்களே பட்டாக இருந்தால் வெளிப்புறங்களின், மேல்புறங்களின், நிலை பற்றிச் சொல்லவே தேவையில்லை என்பது இதன் கருத்தாகும். (தஃப்சீர் இப்னு கஸீர் 2:226)
மேலும், சுவர்க்கத்தில் நூறு படித்தரங்கள் உள்ளன. அவை ஒவ்வொரு படித்தரத்திற்கும் மத்தியிலும் வானம் பூமிக்கு இடைப்பட்ட அளவு அந்தஸ்தில் வித்தியாசம் இருக்கும் என்றும் நூறு வருடத்தூர வித்தியாசம் இருக்கும் என்றும் உலகத்திலுள்ள அனைவரும் ஒன்று சேர்ந்தாலும் விசாலமானதாகவே இருக்கும் என்றெல்லாம் கூறிவிட்டு அவற்றில் மிக உயர்வானது “பிஃர்தொவ்ஸ்” என்ற சுவர்க்கமே ஆகும். நிச்சயமாக அல்லாஹ்வின் “அர்ஷ்’ ஃபிர்தெளவ்ஸ் என்ற சுவர்க்கத்தின் மேலேதான் இருக்கிறது. அதிலிருந்துதான் சுவர்க்கத்தில் ஆறுகள் ஓடுகின்றன நீங்கள் அல்லாஹ்விடம் சுவர்க்கத்தைக் கேட்பதாக இருந்தால் ஃபிர்தொளவ்ஸைக் கேளுங்கள். ஏனெனில் அதுவே சுவர்க்கத்தின் மிகச் சிறந்த படித்தரமும் மிக உயர்ந்த படித்தரமும் ஆகும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூ ஹுரைரா(ரழி) அபூ ஸயீத்(ரழி), புகாரி: 2790, 2791, 1386, 7423, திர்மிதி, இப்னு மாஜா, முஸ்னத் அஹ்மத், தஃப்சீர் இப்னுகஸீர் 2:226,227)
மேலும், சுவர்க்கவாசிகள் தங்களுக்கு மேலேயுள்ள சிறப்பு அறைகளில் வசிப்பவர்களை, அடிவானில் கிழக்கிலிருந்தோ மேற்கிலிருந்தோ பயணிக்கிற ஒளியுமிழும் நட்சத்திரத்தைப் பார்ப்பதைப் போன்று (ஆர்வத்துடன்) பார்ப்பார்கள். (அந்தஸ்தில்) தமக்கும் அவர்களுக்குமிடையேயுள்ள ஏற்றத்தாழ்வைக் கண்டு(ஏக்கம் கொண்டே) அப்படிப் பார்ப்பார்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதைக் கேட்ட) நபித் தோழர்கள், இறைத்தூதர் அவர்களே அவை நபிமார்கள் தங்குமிடங்கள் தாமே? அவற்றை மற்றவர்கள் அடைய முடியாதல்லவா? என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், இல்லை, என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! அ(ங்கே தங்குப)வர்கள். அல்லாஹ்வுக்காக ஒருவரை ஒருவர் நேசித்தவர்களும், அல்லாஹ்வின் மீது (உறுதியான) நம்பிக்கை கொண்டு இறைத்தூதர்களை உண்மையாளர்கள் என ஏற்றுக்கொண்டவர்களுமேயாவர் என பதிலளித்தார்கள். (அபூ ஸயீத் அல்குத்ரீ(ரழி) புகாரி: 3256, 6556, முஸ்லிம்: 2831, 5445, திர்மிதி, 2499, ரி/ஸா, 1887)
ஆக சுவர்க்கத்தின் சிறப்புப் படித்தரங்கள் நூறு என்றாலும் அவற்றின் வாயில்கள் பற்றியும் குர்ஆனும், ஹதீஃதும் பேசுகின்றன.
அதன் வாயில்கள் அவர்களுக்காகத் திறக்கப்பட்டிருக்கும் :
அதன் வாயில்கள் அவர்களுக்காகத் திறக்கப்பட்ட நிலையில் இருக்கும் (38:50) என்று அல்லாஹ் கூறுகின்றான். இங்கு “வாயில்கள்’ என்பதைக் குறிக்க “அல்+அப் வாப்’ எனும் சொல் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது. இதற்கு “வாயில்கள்’ என்பது மட்டுமே பொருளாகும் எனினும் இதில் இடம் பெற்றுள்ள அலிஃப், லாம், எனும் தழுவியற் சொல்லானது “உடைமை’ எனும் பொருளைத் தாங்கியிருக்கிறது. இதன்படி “அவற்றுக்கான வாயில்கள்’ அவர்களுக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கும் என்று இவ் வசனத்திற்குப் பொருள் அமையும். அதாவது அவர்கள் அந்தச் சொர்க்கங்களுக்கு வரும்போது அவற்றின் வாயில்கள் என்பது மட்டுமே பொருளாகும். அதாவது அவர்கள் அந்தச் சொர்க்கங்களுக்கு வரும்போது அவற்றின் வயில்கள் அவர்களுக்காகத் திறக்கப்பட்டிருக்கும். (தஃப்சீர் இப்னு கஸீர்: 7:858) என்பதாகும்.
மேலும், சுவர்க்கத்தின் வாயில்களைக் குறித்தும் அவை எத்தனை என்பதைக் குறித்தும் பல்வேறு வழிகளில் ஏராளமான ஹதீஃத்கள் பதிவாகியுள்ளன. உதாரணமாக “எவர் அல்லாஹ்வின் பாதையில் ஏதேனும் ஒரு பொருளின் இரண்டு ஜோடிகளைச் செலவிட்டாரோ அவரைச் சுவர்க்கத்தின் வாசல்களில் உள்ள வானவ காவலர்கள் ஒவ்வொருவரும் இன்னாரே! இங்கே வாரும் “இன்னாரே இங்கே வாரும் என்று கூவி அழைப்பார்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி) புகாரி: 2841,1897,3216,3666, முஸ்லிம்: 1863,1864, திர்மிதி, 3607, முஸ்னத் அஹ்மத்) மேலும், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ரமழான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன… என்று (அபூஹுரைரா(ரழி), முஸ்லிம்: 1956, 1957)
மேலும், சுவர்க்கத்தின் வாசல்களில் இரு வாசல்களுக்கிடையே நாற்பது ஆண்டுகள் நடந்து செல்லும் தூரம் இருக்கும். ஆனாலும் அன்றைய நாளில் அதில் நுழைபவர்களின் கூட்டம் நிரம்பியிருக்கும். எனினும் சுவர்க்கத்தின் உள்ளே இடம் மிகுதி இருந்து கொண்டே இருக்கும் இறுதியில் அல்லாஹ் புதியவர்களைப் படைத்துச் சுவர்க்கத்தில் மிகுதியுள்ள இடத்தில் அவர்களைக் குடியமர்த்துவான் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அனஸ்(ரழி), உத்பா இப்னு அஸ்வான்(ரழி), புகாரி: 7484, 4850, முஸ்லிம்: 2967, ரி/ஸா, 498)
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். சுவர்க்கத்தில் எட்டு வாசல்கள் உள்ளன. அதில் “ரய்யான்’ என்று அழைக்கப்படும் வாசல் ஒன்று உள்ளது. அதில் நோன்பாளிகளைத் தவிர வேறு எவரும் நுழையமாட்டார்கள் என்று (சஹ்ல் பின் சஅத்(ரழி) புகாரி: 3257,1896, ஜாமிஉத் திர்மிதி: 50) ஆக உலகத்தில் மனிதர்கள் செய்கின்ற நற்செயல்களைப் பொறுத்து அவ்வாயில்களின் பெயர்கள் அமைகின்றன. அந்தந்த நற்செயல்களில் முனைப்பாக இருந்தவர்கள் மறுமையில் அதற்கான சிறப்பு வாயில்கள் வழியாக சுவர்க்கத்தினுள் நுழைவார்கள் என அறிய முடிகிறது.
- தொழுகை வாயில், 2.அர்ரய்யான் எனும் நோன்பு வாயில், 3.அறப்போர் வாயில், 4. ஜக்காத் மற்றும் தானதர்மங்களின் வாயில், 5.ஹஜ், உம்ரா, வாயில், 6.அருள் எனும் பாவமன்னிப்பு வாயில், 7.திக்ர் வாயில், 8.வலப்புறம் எனும் விசாரணையின்றிச் சுவர்க்கம் செல்வோர் நுழையும் வாயில், என்றும் மேலும் இவையன்றி வேறுசில சுவர்க்க வாயில்கள் பற்றிய குறிப்பும் சில நூல்களில் காணப்படுகிறது. (இர்ஷாதுஸ்ஸாரீ, தஃப்சீர் இப்னுகஸீர்: 7:859)
நிரந்தரமாகக் கண் குளிர்ச்சியைத் தரும் அங்குள்ள வினோதமான பரிசுகளை யாரும் அறியமாட்டார்.
மேலும், அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்குக் கூலியாக அவர்களுக்கு என இறைவனால் மறைத்து வைக்கப்படிருக்கும் கண் குளிர்ச்சி தரும் பரிசுகளை யாரும் அறியமாட்டார்கள். (32:17, 19:61)
அருள் வளமும் மகத்தான உயர்வும் உடைய அல்லாஹ் எனது நல்ல அடியார்களுக்காக எந்தக் கண்ணும் கண்டிராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றிராத, கண்களும் இதயங்களும் நிரந்தரக் குளிர்ச்சியை அடையும் அழியாத, நிரந்தர இன்பங்களைச் சுவர்க்கத்தில், தயார்படுத்தி வைக்கின்றேன் என்று கூறுகின்றான் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதனை அறிவித்த அபூஹுரைரா(ரழி) அவர்கள், தாங்கள் விரும்பினால், அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்குக் கூலியாக அவர்களுக்கு என இறைவனால் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண் குளிர்ச்சி தரும் பரிசுகளை யாரும் அறியமாட்டார்கள். (32:17) எனும் இந்த வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள். (புகாரி : 4779,4780,3244, முஸ்லிம் : 5437, 5439,5456, திர்மிதி : 3121, முஸ்னத் அஹ்மத்)
மூசா(அலை) அவர்கள் இறைவனிடம், சுவர்க்கத்தில் மிக உயர்ந்த தரமுடையவர் யார்? என்று கேட்டார்கள். அதற்கு இறைவன், அவர்களை நானே தேர்ந்தெடுத்தேன். அவர்களுக்குரிய தரங்களையும் நானே நேரடியாகத் தீர்மானித்தேன். அவற்றின் மீது நான் முத்திரையும் வைத்துவிட்டேன். எனவே, (அவர்களின் தரத்தை) எந்தக் கண்ணும் பார்த்திராது. எந்தக் காதும் கேட்டிராது. எந்த மனிதனின் உள்ளத்திலும் தோன்றியிராது என்றான் என்பதாக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஃகீராபின் ஷிஅபா(ரழி) முஸ்லிம் : 312, திர்மிதி : 3122)
சுவர்க்கத்தில் நுழைபவர் இன்பத்தையே அனுபவிப்பார். அங்கு துன்பம் என்பதையே காணமாட்டார். அவரது ஆடைகள் இற்றுப் போகாது அவரது இளமை வற்றிப் போகாது சுவர்க்கத்தில் அவருக்காக எந்தக் கண்ணும் கண்டிராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் மனத்திலும் தோன்றியிராத இன்பங்கள் உள்ளன என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி) முஸ்லிம்: 5456, முஸ்னத் அஹ்மத்)
அதாவது சுவர்க்கவாசிகளுக்கு அல்லாஹ் மறைத்து வைத்திருக்கும் நிலையான அருள் வளங்களான இனிமையான உணவுகள், பானங்கள், மதுபானங்கள், பழ வகைகள், ஆடைகள், வீடுகள், மாளிகைகள், மங்கையர்கள், மலர்ச்சிகள், ஆறுகள், அணிகலன்கள், இசைகள், இன்பங்கள், குரலோசைகள், வாகனங்கள் என கண்களுக்கும் இதயங்களுக்கும் நிரந்தரக் குளிச்சியையும், அமைதியையும் தரும் விதவிதமான இன்ப நுகர்வுச் சாதனங்களாகிய பரிசுகளை எவரும் அறியமாட்டார்.
சுவர்க்கத்தின் நிரந்தர சொந்தக்காரர்கள் :
இறை நம்பிக்கையாளர்களுக்கு நிச்சயமாகச் சுவர்க்கச் சோலைகள் கிடைக்கும் என்பதற்குப் பதிலாக அவர்களின் உயிர்களையும் அவர்களின் உடமைகளையும் அல்லாஹ் விலைக்கு வாங்கிக் கொண்டான் எனவே இறை நம்பிக்கையாளர்களே நீங்கள் அல்லாஹ்விடம் செய்துகொண்ட இந்த வியாபாரம் குறித்து மகிழ்ச்சி அடையுங்கள் இதுவே மிக மகத்தான வெற்றியாகும். (9:111)
“அல்அகபா’ உடன்படிக்கை கைஎழுத்தான இரவில் அப்துல்லாஹ் பின் ரவாஹா(ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்காகவும் உங்களுடைய இறைவனுக்காகவும் நீங்கள் விரும்பிய நிபந்தனைகளை எங்கள் மீது விதித்துக் கொள்ளலாம் என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், உங்களின் உயிர்களையும் உடமைகளையும் நீங்கள் எதிலிருந்தெல்லாம் காப்பீர்களோ அதிலிருந்தெல்லாம் என்னையும் நீங்கள் காக்கவேண்டும் என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகள் இதை நாங்கள் செய்தால் எங்களுக்கு என்ன கிடைக்கும்? என்று கேட்டார்கள்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள், “சுவர்க்கம் கிடைக்கும்” என்றார்கள். உடனே அன்சாரிகள் “இது ஒரு இலாபகரமான வியாபாரமாயிற்றே இந்த வியாபார ஒப்பந்தத்தை நாங்கள் ஒரு போதும் முறிக்கமாட்டோம். முறிக்குமாறு கோரவும் மாட்டோம் என்று கூறினார்கள். அப்போதுதான் இந்த (9:111) வசனம் அருளப் பெற்றது. (முஹம்மத் பின் அல்குறழீ(ரஹ்) தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு இதீர் 4:408,409) என்றும்,
மேலும், இந்த வசனத்திற்கு இறை நம்பிக்கையாளர்களிடம் அல்லாஹ் (மிகச் சிறந்த) வியாபார ஒப்பந்தம் (ஒன்றைச்) செய்துகொண்டான். அவர்களுக்கு அவன் மிக உயர்ந்த விலையைக் கொடுத்துள்ளான் என்று ஹஸன் அல்பஸ்ரி (ரஹ்) கத்தாதா(ரஹ்) ஆகியோர் விளக்கமளித்துள்ளார்கள். (தஃப்சீர் தபரீ, இப்னு கஸீர் : 4:408) இறை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வுடன் செய்துகொண்ட அந்த வியாபார ஒப்பந்தத்தை நிறைவேற்றிடும்போது அவர்களை சுவர்க்கத்திற்கு சொந்தரக்காரர்களாக, உண் மையான வாரிசுகளாக, நிரந்தரமான உரிமை யாளர்களாக, குடியிருப்பாளர்களாக அல்லாஹ் ஆக்கிவிடுகின்றான். (23:10,11, 19:63, 7:43, 26:85, 43:72)
அவை உயர்தரமான “அத்ன்’ எனும் சுவர்க்கச் சோலைகள் ஆகும். மறைவாக உள்ள அவற்றை அளவற்ற அருளாளன் தனது நல்ல அடியார்களுக்கு வாக்களித்துள்ளான் நிச்சயமாக அவனது வாக்கு நடை முறைப்படுத்தப்பட்டே தீரும். அங்கு “சாந்தி’எனும் சொல்லைத் தவிர வீண் பேச்சு எதையும் அவர்கள் கேட்கமாட்டார்கள். அங்கு அவர்களுக்குக் காலையிலும் மாலையிலும் உணவு வழங்கப்படும். அந்தச் சுவர்க்கத்தை நமது அடியார்களில் யார் இறை அச்சமுடையோராக உள்ளனரோ அவர்களை நாம் வாரிசுகளாக்கி விடுவோம். (19:61-63)
இறை நம்பிக்கையாளர்கள் வெற்றியடைந்துவிட்டார்கள். அவர்கள்தாம் தமது தொழுகையில் உள் அச்சத்தோடும் பணிவோடும் இருப்பவர்கள். வீணானதிலிருந்தும் அவர்கள் விலகியிருப்பார்கள். அவர்கள் ஸகாத் எனும் கட்டாய தர்மத்தை வழங்குவார்கள். தமது கற்பை அவர்கள் பேணிக் கொள்வார்கள். தமது மனைவியர் அல்லது தமது வலக்கரங்கள் உடமையாக்கிக் கொண்ட அடிமைப் பெண்களிடம் தவிர, (இதனால்) அவர்கள் நிச்சயமாக பழிக்கப்படமாட்டார்கள். மேலும் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதப் பொருட்களையும், தாம் செய்து கொண்ட ஒப்பந்தங்களையும் பேணிக் காப்பார்கள். அவர்கள் தமது தொழுகைகளைப் பேணித் தொழுது வருவார்கள். இவர்களே அந்த உண்மையான வாரிசுகள். அனந்தரக்காரர்கள் ஆவர். இவர்களே. ஃபிர்தெளவ்ஸ்” எனும் சொர்க்கத்தை உரிமையாக்கிக் கொள்வார்கள். அதில் அவர்கள் நிரந்தரமாகத் தங்கி இருப்பார்கள். (23:1-11)
மேலும், அவர்களின் நெஞ்சங்களில் இருந்து காழ்ப்புணர்ச்சியை நாம் அகற்றி விடுவோம் அவர்களுக்கிடையே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் அவர்கள் நமக்கு இதன்பால் வழிகாட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் அல்லாஹ் மாத்திரம் நமக்கு நல்வழி காட்டியிராவிட்டால் நாம் நல்வழி அடைந்திருக்கவே மாட்டோம். நமது இறைவனின் தூதர்கள் நம்மிடம் உண்மையையே கொண்டு வந்தனர் என்று கூறுவார்கள். அப்போது இதுதான் சுவர்க்கம், நீங்கள் உலகில் நற்செயல் புரிந்து கொண்டி ருந்ததற்காக இது உங்களுக்கு நிரந்தர உடமையாக்கப்பட்டுள்ளது என்று அவர்களிடம் எடுத்துச் சொல்லப்படும் 7:43 என்றும் மேலும் நீங்கள் செய்து கொண்டிருந்த நன் மையானதன் காரணமாக இந்த சுவர்க்கத்தை நீங்கள் அனந்தரமாகப் பெற்றுக் கொண்டீர்கள் 43:72 என்று கூறப்படும்.
அத்தகைய, அருள்வளம் மிகுந்த சுவர்க்கத்தின் நிரந்தர வாரிசுகளில் ஒருவனாக என்னை நீ ஆக்குவாயாக 26:85 என்று இறைத்தூதர் இப்ராஹீம்(அலை) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். நாமும் ஒவ்வொருவரும் அவ்வாறே பிரார்த்திப்போமாக.
உங்களில் எவருக்கும் சுவர்க்கத்தில் ஒரு வசிப்பிடமும் நரகத்தில் ஒரு வசிப்பிடமும் என இரு வசிப்பிடங்கள் இல்லாமல் இருப்பதில்லை ஒருவர் மரணித்து அவர் நரகம் சென்றுவிட்டால் அவரது சுவர்க்கத்தின் வசிப்பிடத்தை சுவர்க்கவாசிகள் உடமையாக்கிக் கொள்வார்கள். அதுவே அவர்கள்தான் உரிமையாளர்களாவர் என்ற 23:10 ஆவது வசனத்தின் கருத்தாகும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி) இப்னு மாஜா, இப்னு கஸீர்: 6:154)
அல்லாஹ் உங்களை நிரந்தரமான அமைதி இல்லத்திற்கு அழைக்கின்றான் :
சுவர்க்கத்திற்கு “அமைதி இல்லம்’ தாருஸ் ஸலாம் என்பதாகவும் அல்லாஹ் பெயர் சூட்டுகின்றான். அங்கே சோதனைகள், குறைகள், குற்றங்கள், துன்பங்கள், துயரங்கள், இழப்புகள் ஆகியவற்றில் இருந்து முற்றிலும் பாதுகாக்கப்பட்ட நிரந்தர அமைதி இல்லமாகும். அதனையே, அல்லாஹ் உங்களை அமைதி இல்லத்திற்கு அழைக்கின்றான். (10:25) என்பதாகவும்,
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களும் அழைக்கின்றார்கள் :
ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் உறக்கத்தில் இருந்தபோது அவர்களின் தலைமாட்டில் ஜிப்ரீல்(அலை) அவர்களும் கால்மாட்டில் மீகாயீல்(அலை) அவர்களும் இருப்பதைப் போன்று கனவு கண்டார்கள். அவர்களில் ஒருவர், இவர் உறங்கிக் கொண்டிருக்கின்றார் என்றார். அதற்கு மற்றவர் கண்தான் உறங்குகிறது உள்ளம் விழித்திருக்கிறது என்று கூறினார். பின்னர் அவர்களில் ஒருவர் தமது தோழரிடம் இந்த நண்பருக்கு ஓர் உவமை உண்டு. இவருக்கு அந்த உவமையை எடுத்துரையுங்கள் என்று கூறினார். இவரது நிலை ஒரு மன்னனின் நிலைக்கு ஒத்திருக்கிறது அவன் ஒரு மாளிகையைக் கட்டி அதில் ஒரு குடிலையும் அமைத்தான். பின்னர் அதில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்து மக்களை அந்த விருந்துக்கு அழைப்பதற்காக ஒரு தூதரையும் அனுப்பினான். மக்களில் சிலர் அத்தூதரின் அழைப்பை ஏற்றனர். வேறு சிலர் அவரைப் புறக்கணித்தனர்.
இதில் அல்லாஹ்தான் அந்த மன்னன் இஸ்லாம்தான் அந்த மாளிகை சுவர்க்கம் தான் அந்தக் குடில் முஹம்மதே நீர்தான் அந்தத் தூதுவர். யார் உமது அழைப்பை ஏற் றாரோ அவர் இஸ்லாத்தில் நுழைந்துவிட்டார். இஸ்லாத்தில் நுழைந்தவர் சுவர்க்கத்தில் நுழைந்துவிட்டார். சுவர்க்கத்தில் நுழைந்தவர் அதில் உள்ளவற்றை உண்பார் என்று விளக்கமளித்தார் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஜாபிர்பின் அப்தில்லாஹ்(ரழி), புகாரி : 7281, திர்மிதி, தஃப்சீர் இப்னு கஸீர்:4: 492,493)
சுவர்க்கத்தின் மண் கஸ்தூரியிலானது :
மிஃராஜ் எனும் விண்ணேற்றப் பயணம் தொடர்பான நபிமொழியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் சுவர்க்கத்தினுள் அனுமதிக்கப்பட்டேன். அங்கே சுவர்க்கத்தின் மண் நறுமணம் கமழும் கஸ்தூரியாக இருந்தது என்று (அனஸ் (ரழி), புகாரி : 349, 3342, முஸ்லிம் : 263)
இப்னு ஸய்யாத் என்பவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து சுவர்க்கத்தின் மண்ணைப் பற்றிக் கேட்டான் அதற்கு நபி(ஸல்) அவர்கள் வெண்மையானதாகவும் சுத்தமான கஸ்தூரியுமாகும் என்று பதிலளித்தார்கள். (அபூசயீத் அல்குத்ரீ(ரழி), முஸ்லிம் : 5612)
சுவர்க்கத்தின் அதி அற்புதமான அழகிய கட்டட அமைப்பு:
அல்லாஹ்வின் தூதரே! சுவர்க்கத்துடைய கட்டட அமைப்புகள் எப்படி இருக்கும் என்பது பற்றி எங்களுக்குத் தெரிவியுங்கள் என்று கேட்டோம் அதற்கு நபி(ஸல்) அவர்கள், சுவர்க்கத்தின் செங்கற்களில் ஒரு செங்கள் வெள்ளியாலும் மறு செங்கற்கள் பொன்னாலும் ஆனவை. அந்தச் செங்கற்களுக்கு இடையே இடப்படும் கலவையானது நறுமணம் கமழும் கஸ்தூரியாகும் சுவர்க்கத்தி(ன் நதிகளி)லுள்ள அதன் சிறு கற்கள் முத்து மற்றும் மாணிக்கத்தால் ஆனது சுவர்க்கத்தின் மண் (பட்டுப் போன்ற) குங்குமப் பூவாலானது எவர் அம்மாளிகையில் நுழைவார்களோ அவர்கள் இன்பத்திலேயே இருப்பார்கள், துன்பத்தைக் காணமாட்டார்கள், நிரந்தரமாக உயிருடன் இருப்பார்கள், மரணிக்கமாட்டார்கள், அவர்களின் ஆடைகள் இற்றுப்போகாது அவர்களின் இளமையும் மாறாது என்று கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி), திர்மிதீ 2646, முஸ்னத் அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர்: 4:334)
ஒருநாள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தமது தோழர்களிடம் உங்களில் சுவர்க்கத்தை அடைவதற்கு முயற்சிப்போர் யாரேனும் உண்டா? ஏனெனில் சுவர்க்கமானது நிகரில்லாத ஒன்றாகும் கஃபாவின் இறைவன்மீது சத்தியமாக சுவர்க்கம் என்பது பளபளக்கும் ஒளி வெள்ளமும், அசைந்தாடும் வாசனைச் செடிகளும், உயரமான மாளிகையும், ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளும், நன்கு கனிந்த ஏராளமான கனி வகைகளும், அழகும் எழிலும் நிறைந்த துணைவியும், எண்ணிலடங்கா அணிகலன்களும் உள்ள இடமாகும். அது அமைதி இல்லத்தின் நிலையான தங்குமிடமாகும் வாழ்க்கையின் அனைத்து வளங்களும் செழிப்பும் அங்கு நிறைந்திருக்கும். உயர்ந்த தூய்மை யான அழகிய இல்லங்கள் நிறைந்த இடமாகும் அது என்று கூறினார்கள். (உசாமா பின் ஸைத்(ரழி) இப்னுமாஜா, முஸ்னத் அல்பஸ்ஸார், தஃப்சீர் இப்னுகஸீர்: 4:334, 335)
சுவர்க்கத்தின் அழகான கண்ணாடி மாளிகைகள்:
சுவர்க்கத்தில் சில கண்ணாடி அறைகள் உள்ளன. அவற்றின் உட்பகுதியிலிருந்து வெளியேயும் வெளிப்பகுதியிலிருந்து உள்ளேயும் பார்க்கம முடியும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அலி (ரழி), திர்மிதி, 2646, முஸ்னத் அஹ்மத்)
சுவர்க்கத்தில் கூரைகள் உள்ளன. அதன் உட்புறம் வெளிப்புறத்திலிருந்தும் அதன் வெளிப்புறம் உட்புறத்திலிருந்தும் காணப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி : 2647) (இன்ஷா அல்லாஹ் தொடரும்…)
*********************************************************
அறிந்து கொள்வோம்…
மர்யம்பீ, குண்டூர்,
- நபியே! அந்த படைகளைப் பற்றி செய்தி உமக்கு வந்ததா? என்று எவர்களைப் பற்றி அல்லாஹ் கேட்கின்றான்?
பிர்அவ்ன், சமூது இவர்களைப் பற்றி. 85 : 17,18 - நிச்சயமாக நீ அவகாசம் கொடுக்கப்பட்டவர்களில் ஒருவனாவாய் என்று யாரை கூறுகிறான்?
இப்லீஸை. 7:11,14,15 - நபிக்கு எவருடைய வரலாற்றை ஓதிக் காண்பிக்க அல்லாஹ் கட்டளையிட்டான்?
துல்கர்னைன் பற்றி. 18:83 - எந்த எண்ணத்தோடு பிறருக்கு உதவி செய்யாதீர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்?
அதிகமாக திரும்பப் பெரும் எண்ணத்தில். 74:6 - யாகூப்(அலை) அவர்களின் சந்ததிகளை அல்லாஹ் எவ்வாறு அழைக்கின்றான்?
இஸ்ராயிலின் மக்களே. 2:122 - அடியானுக்கு சொர்க்கத்தில் அந்தஸ்தை அல்லாஹ் உயர்த்துவது எதனால் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
அவனது குழந்தை பாவமன்னிப்புக் கேட்டதால். அஹமது : 10202 - அல்லாஹ் யாருக்கு நன்மையை நாடுகின்றானோ அவர்களை என்ன செய்வதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
சோதனைக்கு உள்ளாக்குகிறான். புகாரி : 5645 - அனைத்து துன்பங்களின் போதும் ஓத வேண்டிய துஆ எது என்று நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்தார்கள்?
லாஇலாஹ இல்லல்லாஹுல் அளீமுல் ஹலீம், லாஇலாஹ இல்லல்லாஹு ரப்புல் சமாவாத்தி வல்அர்ளி, வரப்புல் அர்ஷில் அளீம். புகாரி: 6345 - ஈமான் கொண்டவர்களையும் என்ன செய் வதாக அல்லாஹ் கூறுகிறான்?
“சோதனை” 29:2 - மனிதர்களில் அல்லாஹ்விடம் மிகவும் வெறுப்புக்குரியவர் யார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
“எதற்கெடுத்தாலும் கடுமையாக சச்சரவு செய்பவனே”. புகாரி: 7188 - துன்பங்களை சகித்துக்கொள்ளும் பொருமையாளர்களை என்ன செய்வதாக அல்லாஹ் கூறுகிறான்?
“நேசிப்பதாக” 3:146 - அல்குர்ஆனில் உள்ள பெரிய வசனம் எது?
அல்பகரா. அத். 2:28213. அல்குர்ஆன் எந்த இரவில் அருளப்பட்டது என அல்லாஹ் கூறுகிறான்?
ரமலான் மாதம்-லைலத்துல் கத்ர். 97:1 - விதவைக்கும், ஏழைக்காகவும் பாடுபடுபவர்களை எவர்களுக்கு ஒப்பானவர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
இரவில் நின்று வணங்கி பகலில் நோன்பு நோற்றவர்களுக்கு ஒப்பானவர். புகாரி: 5353, முஸ்லிம் : 7659 - தவறவிட்ட பொருட்களை எடுக்க யாருக்கு நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்?
ஹாஜிகளுக்கு. அப்துர்ரஹ்மான் பின் உஸ்மான், அத்தைமி(ரழி) முஸ்லிம்: 3555 - சொர்க்கத்தின் வாடையை கூட நுகர மாட்டார்கள் என யாரைப் பற்றி கூறினார்கள்?
கருப்பு நிற சாயமிடுபவர்கள். இப்னு அப்பாஸ்(ரழி). நஸயீ: 4988 - காலணி அணிவதைப் பற்றி நபி(ஸல்) அவர் கள் எவ்வாறு கூறினார்கள்?
அணியும் போது வலது காலும், கழற்றும் போது இடது காலும். புகாரி: 5855 - ஹுதமா என்றால் என்ன என்று அல்லாஹ் கூறுகிறான்?
மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு. 104:6 - எதுவரை செல்வத்தை தேடுவது உங்கள் கவனத்தை திருப்பிவிட்டது என்று அல்லாஹ் கூறுகிறான்.
மண்ணறைகளை சந்திக்கும் வரை. அல்குர்ஆன்: 102:1,2 - அல்குர்ஆனில் உள்ள ஒரு சூராவில் உள்ள அனைத்து வசனங்களிலும் அல்லாஹ் என்ற வார்த்தை உபயோகிக்கப்பட்ட சூரா எது?
அத். 58, அல்முஜாதலா, 22 வசனங்கள். - உமர்(ரழி) அவர்களின் மனமாற்றத்திற்கு காரணமான வசனம் எந்த சூராவில் உள்ளது?
அத் : 20 . தாஹா
*********************************************************
இஸ்லாமியக் கொள்கை விளக்கம்!
P.S. அலாவுத்தீன்
* தீமைக்கு எதிராக அறப்போர் புரிதல்
* ஒருவருக்கொருவர் உதவி செய்தல்
* மறைவழி, நபிவழியில் தீர்ப்பளித்தல்
கேள்வி : அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவதைப் பற்றி இஸ்லாத்தின் முடிவு என்ன?
பதில்: முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தமது உயிர், உடமை, நாவு ஆகியவற்றால் தீமையை எதிர்த்து அறப்போர் புரிதல் கட்டாயக் கடமையாகும்.
ஏனெனில், நீங்கள் சொற்ப(மான போர்த் தளவாடங்களை)க் கொண்டிருந்தாலும் சரி, நிறைய(ப் போர்த் தளவாடங்களை)க் கொண்டிருந்தாலும் சரி) புறப்பட்டு உங்கள் உயிர்களையும், உடைமைகளையும் அர்ப்பணித்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியுங்கள்) (அல்குர்ஆன்: 9:41) என்று “அத்தவ்பா’ என்ற அத்தியாயத்தில் அல்லாஹ்வும், அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர்களுடன் உங்கள் உயிர்கள், உடைமைகள், நாவுகள் ஆகியவற்றால் அறப்போர் புரியுங்கள்! (நூல்ச அபூதாவூது) என அண்ணலாரும் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறார்கள்.
கேள்வி : ஒருவருக்கொருவர் நேசம் கொள்ளுதல், உதவிக் கொள்ளுதல் பற்றி இஸ்லாத்தின் கருத்து என்ன?
பதில்: ஏகத்துவ நம்பிக்கையாளர்களான ஆண்களும், ஏகத்துவ நம்பிக்கையாளர்களான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாயிருக்கிறார்கள். (அல்குர்ஆன்: 9:71) என்ற இறைவசனத்தில், அல்லாஹ்வும்,ஏகத்துவ நம்பிக்கையாளர்கள் அனைவரும் ஒன்றையயான்று தாங்கி நிற்கும் கட்டிடம் போன்றவர்கள் (நூல்: முஸ்லிம்) என்ற நபிமொழியில் அண்ணலாரும் முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் நேசத்துடன், உறவுடனும், ஒத்துழைப்புடனும் இருப்பதைப் பற்றியே வலியுறுத்துகிறார்கள்.
கேள்வி : இறை மறுப்பாளர்கள், இறைவனுக்கு இணை கற்பிப்பவர்கள் ஆகியோருக்கு உதவி புரிதல் ஆகுமா?
பதில் : அவர்களுக்கு உதவி செய்வது ஆகுமானதுதான் எனினும், அதற்கு சில விதிகளும் உண்டு.
மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீங்கள் நீதி செய்பவர்களை நேசிக்கின்றான்.
உங்களுடன் போர் செய்து உங்களை உங்கள் இல்லங்களை விட்டும் வெளியேற்றி நீங்கள் வெளியேற்றப்படுவதற்கு உதவியும் செய்தார்களே அத்தகையவர்களை நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்வதைத்தான் அல்லாஹ் தடுக்கிறான். எனவே எவர்கள் அவர்களை நேசர்களாக ஆக்கிக் கொள்கிறார்களோ அவர்கள் அநியாயம் செய்பவர்கள். (அல்குர்ஆன்: 60:8,9) அல்லாஹ் “அல்மும்தஹினா’ பரிசோதித்தல் என்ற அத்தியாயத்தில் குறிப்பிடுகிறான்.
கேள்வி : அல்லாஹ்வின் நேசர் என்பவர் யார்?
பதில் : அல்லாஹ்வை மட்டும் நம்பி அவன் மீது அச்சம் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் அவனது நேசர்தான்.
அறிந்து கொள்ளுங்கள்!
அல்லாஹ்வின் நேசர்களுக்கு எவ்வித அச்சமுமில்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அவர்கள் (அல்லாஹ்வின் மீது) நம்பிக்கை கொண்டு (அவனையே) அஞ்சுபவர்களாகவும் இருப்பார்கள். (அல்குர்ஆன் : 10:62, 63) என்று யூனுஸ் என்ற அத்தியாயத்தில் அல்லாஹ்வும்,
நிச்சயமாக எனது நேசர்கள் அல்லாஹ்வும், ஏகத்துவ நம்பிக்கையாளர்களில் நல்லவர்களும் தான் (நூல்: அஹ்மது) என்ற நபி மொழியில் அண்ணலாரும் இறை நேசர்களைப் பற்றி அப்படித்தான் விளக்கமளித்துள்ளார்கள்.
கேள்வி : முஸ்லிம்கள் தமக்கிடையில் எழும் பிரச்சினைகளுக்கு எதன் மூலம் தீர்வு காண வேண்டும்.
பதில் : இறை மறை வழியிலும், நம்பத் தகுந்த ஆதாரங்களையுடைய நபிமொழிகள் வழியிலும்தான் தீர்வு காணவேண்டும்.
ஏனெனில், (நபியே!) அவர்களுக்கிடையில் (ஏற்படும் பிரச்சனைகளுக்கு) அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு நீர் தீர்ப்புச் செய்வீராக! என்று (அல்குர்ஆன் 5:49) “அல்மாயிதா’ அத்தியாயத்தில் அல்லாஹ் அண்ணலாருக்கு அப்படித்தான் கட்டளையிடுகிறான்.
“இறைவா! நீயே மறைவானவற்றையும், பகிரங்கமானவற்றையும் அறிபவன் உனது அடியார்களுக்கிடையில் (எழும் பிரச்சனைகளுக்கு) நீயே தீர்ப்புச் செய்பவனாகவும் இருக்கிறாய்!” (நூல்: முஸ்லிம்) என அண்ணலாரும் இதைத்தான் வலியுறுத்துகிறார்கள்.
*********************************************************
அழைப்புப் பணி! படிப்பினை…
K.M.H. அபூ அப்துல்லாஹ்
நபி ஆதம்(அலை) தொடுத்து இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்கள் வரை தொடர்ந்து சுமார் 1லேட்சம் நபிமார்கள் செய்த பணியினைக் கோடிக்கணக்கான தனது உம்மத்தவர்கள் செய்யும் நிலையில் அவர்களைத் தயார் செய்துவிட்டு நபி(ஸல்) அவர்கள் சென்றிருக்கிறார்கள்.
“நம்பிக்கை கொண்டு, சாலிஹான அமல்கள் செய்து சத்தியத்தை ஒருவருக்கொருவர் எடுத்துச் சொல்லி (அதனால் ஏற்படும் கஷ்டங்களைச் சகித்துக் கொள்ளும்படி) ஒருவருக்கொருவர் பொறுமையையும் எடுத்துச் சொல்பவர்களைத் தவிர எஞ்சியுள்ள மனிதர்கள் அனைவரும் நஷ்டத்தில் இருக்கிறார்கள்” என்று அல்லாஹ்(ஸல்) வலியுறுத்திச் சொல்கிறான்.
இதல்லாமல் அல்குர்ஆன் : 3:110, 9:71, 51:55 வசனங்கள் இந்த அழைப்புப் பணியை முஸ்லிம்கள் செய்ய ஏவப்பட்டிருக்கிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. இது விஷயத்தில் உண்மையான முஸ்லிம்களுக்குக் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.
ஆனால், இந்த அழைப்புப் பணி எப்படி இருக்க வேண்டும் என்ற விஷயத்தில் பலரும் பல அபிப்பிராயங்களில் இருந்து வருவதைப் பார்க்கிறோம். இது விஷயத்தில் (மனித அபிப்பிராயங்களை விட்டு நீங்கி அல்லாஹ்வும், அவனது தூதரும் ஏவியுள்ள முறைப்படி, நாம் எல்லாம் இந்த அழைப்பு பணியைச் செய்ய முன்வந்தால், இன்ஷா அல்லாஹ். நிச்சயமாக நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
அழைப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஒருசிலர் மக்களிடையே நன்மையைக் கொண்டு ஏவிக் கொண்டிருந்தால் மட்டும் போதும், தீமையைத் தடுக்க வேண்டியதில்லை. தீமையைத் தடுப்பதால் மக்கள் ஆத்திரமுற்று, நாம் சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளாமல் நம்மை விட்டு நழுவி விடுகிறார்கள். ஆகவே, தீமையைத் தடுக்காமல் நன்மையை மட்டும் ஏவிக் கொண்டிருந்தால் அவர்கள் அந்த நல்ல காரியங்களைச் செய்ய ஆரம்பித்த உடனே தீமைகள் தன்னைத்தானே நாம் விலக்காமலேயே விலகி விடுகின்றன என்று சொல்லி, லைட்டை போட்டால் வெளிச்சம் வந்தவுடன் இருள் தானாகவே போய் விடுகின்றது என்று உதாரணமும் காட்டுகிறார்கள்.
இவர்கள் காட்டக்கூடிய இந்த உதாரணம் குர்ஆனுக்கு பொருத்தமாகத் தெரியவில்லை. நாம் நினைப்பது போல் நன்மையைக் கொண்டு மட்டும் ஏவ கட்டளையிடும் வசனத்திற்குப் பிறகு பெரும்பாலும் தீமையை விட்டும் தடுக்கக் கட்டளையிடும் வசனமும் இணைந்தே வருகின்றன. 103ம் அத்தியாயத்தில் சத்தியம் என்று குறிப்பிடப் படும் நிலை நன்மைகள் செய்யப்பட்டும், தீமைகள் தடுக்கப்பட்டும் உருவாகும். நிலையையே குறிக்கின்றது. மேலும் நன்மையைக் கொண்டு ஏவுவதற்கு ஸப்ரு அவ்வள வாகத் தேவைப்படுவதில்லை. காரணம், அதற்கு எதிர்ப்பு அதிகமாக வருவதிலலை. தீமையைத் தடுக்கப் போகும்போது தான் எதிர்ப்பும் பலமாக இருக்கும் சோதனைகள் வரும். அப்போதுதான் ஸப்ரு(சகிப்புத்தன்மை) செய்யும் நிலை உருவாககும். அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ள நபிமார்களின் சரித்திரங்களை உற்றுநோக்கும்போது, அவர்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் மக்களிடையே நன்மைகளை ஏவி, தீமைகளைத் தடுக்க முற்படும் போது ஏற்பட்டனவே அல்லாமல், நன்மையைக் கொண்டு ஏவும் போது மட்டும் ஏற்பட்டவை அல்ல.
ஆக, குர்ஆனைக் கொண்டும், நபிமார்களின் நடைமுறைகளைக் கொண்டும், குறிப்பாக இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்களின் நடைமுறையைக் கொண்டும் நாம் தெளிவாகப் புரிந்து கொள்வது நன்மையைக் கொண்டு ஏவுவதற்கு அளிக்கும் அதே முக்கியத்துவத்தைத் தீமையை விட்டும் தடுப்பதற்கும் கொடுக்க கடமைப்பட்டுள் ளோம். அதனால் எவ்வளவு பெரிய துன்பங்கள் ஏற்பட்டாலும் அவற்றைச் சகித்துக் கொண்டு கடமையாற்றக் கடமைப்பட்டுள்ளோம். அதைக் கொண்டு தான் நமது வாழ்வின் வெற்றி நிறைவு பெறமுடியும். “ஒரு தீமை நடக்கக் கண்டால் கைகளால் அதனைத் தடுக்கவும், முடியாவிட்டால் நாவினால் தடுக்கவும், அதற்கும் முடியாவிட்டால் மனதிலாவது அது தீயது என்று எண்ணி ஒதுங்கி விடவும், இது ஈமானின் இறுதி நிலையாகும்” என்று ஹதீஃதும் தீமையைத் தடுப்பதையே வலியுறுத்துகிறது. (ஆதாரம்: முஸ்லிம், அபூதாவூது, நஸயீ, இப்னு மாஜா)
அழைப்புப் பணி ஈடுபட்டிருக்கும் இன்னும் சிலர் நன்மையைக் கொண்டு ஏவுவதையும், தீமையை விட்டுத் தடுப்பதையும் வரவேற்கின்றார்கள். ஆனால், மக்களுக்கு மத்தியில் ஏற்படும் எதிர்ப்புக்களை அனு சரித்து தீமையை தடுப்பதில், மனித அபிப்பிராயங்களால் பெறப்படும் சில நல்லது கெட்டதுகளை மனதில் கொண்டு செயல்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஒரு காரியம் உண்மையில் தவறு என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தாலும், அதை இப்போதைக்கு எடுத்துச் சொல்வதால், மக்களில் பெரும்பான்மையினர், அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நம்மை எதிர்க்க ஆரம்பித்து விடுவார்கள்.
ஆகவே சில காலம் பொறுத்து அதைச் சொல்லிக் கொள்ளலாம என்று அவர்களாக முடிவு எடுத்துச் சொல்லிக் கொள்ளலாம் என்று அவர்களாக முடிவு எடுத்துச் செயல்படுகிறார்கள். இப்படிச் செயல்படுவது தான் நளினமாகச் செயல்படும் அழகிய முறை என்று அவர்களாகவே முடிவு செய்து கொள்கிறார்கள். ஆனால், குர்ஆனின் வெளிச்சத்தில் பார்க்கும்போது அதற்கு நம்மால் ஆதாரத்தைப் பார்க்க முடியவில்லை.
விளைவைப் பற்றிச் சிந்திக்காமல் ஹிதாயத் நம்முடைய திறமையிலும், சமயோசிதத்திலும் இருக்கின்றது என்று எண்ணாமல் இறை கட்டளைகளை மக்கள் முன் வைப்பதே நமது கடமை என்பதையே குர்ஆனின் பல வசனங்கள் வலியுறுத்துகின்றன. உதாரணமாக தெளிவாக எடுத்துச் சொல்வதையன்றி, எங்கள் மீது (வேறெதுவும்) கடமையல்ல (என்று தூதர்கள் சொன்னார்கள்) அல்குர்ஆன்: 36:17
மேலும், அல்குர்ஆன் 5:67ல் தூதரே! உம் இறைவனிடமிருந்து உமக்கு அருளப் பெறறதை (யாதொரு குறைவுமின்றி அவர்களுக்கு) அறிவித்து விடும். நீர் (அவ்வாறு) செய்யாவிடில் அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராகமாட்டீர். (இதில் எவருக்கும் அஞ்சாதீர்) மனிதர்(களின் தீங்குகளில் இருந்து, அல்லாஹ் உம்மை (இரட்சித்து)க் காப்பாற்றிக் கொள்வான். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் மக்களை நேரான வழியில் செலுத்தமாட்டான்” என்று தெளிவாக அல்லாஹ்வின் அறிவிப்புக்களை (விளைவுகளை எண்ணிப் பார்க்காமல்) மக்களை முன் எடுத்து வைப்பதே கடமை என் பதை சந்தேகத்திற்கு இடமின்றி வலியுறுத்துகின்றது.
மேலும், அதிகமான மக்கள் ஏற்றுக் கொள்ளும் காலத்தை எதிர்பார்த்து சத்தியத்தை மக்கள் முன் வைப்பதை மறைப்பது அல்லது காலதாமதம் செய்வது கடும் குற்றம் என்பதையும் இந்த வசனம் தெளிவுபடுத்துகின்றது.
இன்னும் அல்குர்ஆனின் 17:73-75, 33:2, 43:43, 45:18, 69:44-46 வசனங்கள் அனைத்தும் அல்லாஹ்வால் அறிவிக்கப்பட்டவற்றை கூடுதல் குறைவின்றி, விளைவுகளைப் பற்றியும், நாம் ஆராயாமல் மக்கள் முன் வைப்பதே நமது கடமை என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. அல்லாஹ்(ஜல்) நம்மனைவருக்கும் விளங்கிக் கொள்ள அருள் புரிவானாக.
இறைவனிடமிருந்து வஹி மூலம் செய்திகளைப் பெற்று அவற்றை மறைக்காமல் மக்கள் முன் வைத்த எண்ணற்ற நபிமார்களுக்கு ஆதரவாளர்களை விட எதிர்ப்பாளர்களே அதிகமாக இருந்து வந்திருக்கின்றனர் என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். ஒருசில நபிமார்கள் மறுமையில் தன்னைப் பின்பற்றியவர்கள் இல்லாத நிலையில் தனியாக வருவார்கள் என்றும், ஒரு சில நபிமார்கள் விரல் விட்டு எண்ணும் அளவு வெகு சொற்பமானவர்களையே உம் மத்தினர்களாகக் கொண்டிருப்பார்கள் என்றும் ஹதீஃதிலிருந்து விளங்குகிறோம். ஆதாரம்: திர்மிதீ, நஸயீ.
இவற்றை எல்லாம் அலசி ஆராயும்போது, மக்கள் ஏற்றுக் கொள்வதையும் ஏற்றுக் கொள்ளாததையும் நமது அழைப்புப் பணிக்கு அளவுகோலாக நாம் கொள்ளக் கூடாது. அப்படியானால் எதை நாம் அளவு கோலாக கொள்வது?
உபதேசம் செய்யுங்கள், உபதேசம் விசுவாசிகளுக்குப் பலன்தரும்” குர்ஆன்:51:55
இந்த இறைவசனமே அழைப்புப் பணிக்குச் சரியான அளவுகோல் ஆகும்.
யார் விசுவாசி, யார் விசுவாசி இல்லை என்பதை நாம் அறியமாட்டோம். ஆனால் நிச்சயமாக நமது பிரச்சாரம் விசுவாசிகளுக்குப் பலன் கொடுக்கும். விசுவாசி அல்லாதாருக்கு நிச்சயமாக பலன் கொடுக்காது. இது இறைவாக்கு. உதாரணத்திற்காக ஆயிரம் பேர் உள்ள ஒரு கூட்டத்தில் பத்து பேர் மட்டும் விசுவாசியாக இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். எவ்வளவு திறமையாகவும், சமயோசிதமாகவும், நளினமாகவும் நாம் பிரச்சாரம் செய்தாலும் அது பத்து பேருக்கு தான் பலன் கொடுக்கும். மீதமுள் ளோருக்குப் பலன் தரவே தராது.
இந்த நிலையில் அந்த ஆயிரம் பேரில் அதிகமா னோர் ஏற்றுக்கொள்ளும் ஒரு காலத்தை எதிர்பார்த்து, நாம் நமது பிரச்சாரத்தை சிறிது மறைக்கிறோம் அல்லது காலதாமதம் செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். இது சரிதானா? நியாயம்தானா? என்று பார்த்தால், இது எவ்வளவு பெரிய தவறு என்பது புரியும். நமது அபிப்பிராயம் காரணமாக பலன்பெறும் அந்த பத்து விசுவாசிகளும் பலன் பெற முடியாத ஒரு சூழ்நிலையே உருவாகின்றது. இந்த பெரும் குற்றத்திற்கு நாமே காரணமாகின்றோம். இதற்கு நாம் ஆளாகலாமா? நாம் என்ன செய்யவேண்டும்?
குர்ஆனிலும், ஹதீஃதிலும் உள்ளதை உள்ளபடி மறைக்காமல் காலதாமதம் செய்யாமல் மக்கள் முன் எடுத்து வைக்க வேண்டும். நிச்சயமாக விசுவாசிகளுக்கு அது பலன்தரும். நிச்சயமாக அவர்கள் சத்தியத்தை எடுத்துக் கொள்வார்கள். அவர்கள் திருந்தி விடுவார்கள். இதில் அசைக்க முடியாத நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும். காரணம் இது இறைவன் கூறும் உறுதி மொழியாகும்.
நாம் நமது மனித அபிப்பிராயத்தில் வந்த முடிவுப்படி, இதை இப்போது சொன்னால், அதிகமான மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். பின் ஒரு சந்தர்ப்பத்தில் அதற்குரிய காலம் கனிந்த பின் சொல்வோம் என்று சத்தியத்தைச் சொல்வதையே தள்ளிப்போடுவது கொண்டு மேற்சொன்ன குற்றத்திற்கும் ஆளாகிறோம். பலன் அடைய வேண்டிய விசுவாசி பலனடையாமல் செய்து விடுகிறோம். அவர்கள் வரை சத்தியம் போய் சேராததற்கு நமது மனித அபிப்பிராயத்தைக் காரணமாக்கி விடுகிறோம் அதல்லாமல் இன்னொரு பெரும் குற்றத்திற்கும் ஆளாகிறோம்.
அதாவது இப்படிச் செயல்படுவது மக்களுக்கு ஹிதாயத் கொடுக்கும் திறன் நமது அறிவு, ஆராய்ச்சியில் இருப்பதாக எண்ணி செயல்படுவதாக இருக்கிறது. இது உண்மையில் அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுவதாகும்.
அகந்தை இல்லாத தங்கள் அறிவிலும், ஆற்றலிலும் வைக்கும் நம்பிக்கையை விட அல்லாஹ்(ஜல்) மீது அதிக நம்பிக்கை வைத்து செயல்படும் மக்களையே அல்லாஹ் விரும்புகிறான். விளைவைப் பற்றி சிந்திக்காமல், அல்லாஹ்வின் கட்டளைகளை மக்கள் முன் வைப்பவர்கள் மீது அல்லாஹ் பிரியம் கொள்வதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
அழைப்புப் பணியில் ஏற்படும் விளைவு நம் கையில் இல்லை நபிமார்களுக்கும் அல்லாஹ் அந்த அதிகாரத்தைத் தரவில்லை என்பதை அல்குர்ஆன் 28:56 வசனம் கூறுகிறது. இந்த நிலையில் விளைவைப் பற்றிச் சிந்திப்பது அறிவுடைமை யாகாது.
நம் அதிகாரத்திலில்லாத ஹிதாயத் (நேர்வழியில் செலுத்துதலைப்) பற்றி சிந்திப்பதை விட்டு, நம்மீது சுமத்தப்பட்ட அழைப்புப் பணியை செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.
சத்தியத்தை எடுத்துச் சொல்லும்போது ஏற்படும் இன்னல்களை சகித்துக் கொள்ளும் ஆற்றல் நம்மிடம் இல்லாமல் இருந்தாலும் விளைவுக்கு அஞ்சி சத்தியத்தை மறைக்கலாம் அல்லது காலதாமதம் செய்யலாம். இந்த நிலையும் மறுமையில் நமக்கு நிரந்தர நஷ்டத்தையே தரும் என்பதை அல்குர்ஆன் 103ம் அத்தியாயம் விளக்குகின்றது.
ஆகவே, இறுதியாக, உறுதியாக நாம் இந்த முடிவுக்கே வரவேண்டியுள்ளது. அதாவது “மார்க்கப் பிரச்சாரத்தை மனித அபிப்பிராயப்படி செய்யாமல், இறைவன் எப்படிச் செய்யும்படிக் கட்டளையிட்டிருக்கின்றானோ, அவ்வாறே நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். இதற்கு நாமெல்லாம் தயாராகிவிட்டால் அல்லாஹ்வின் அருள் கிடைக்கும். ஹிதாயத் கிடைக்கும், சமுதாயத்தின் மறுமலர்ச்சியைப் பார்க்கலாம். இன்ஷா அல்லாஹ்.
*********************************************************