அந்நஜாத் – ஜூன் 2020

in 2020 ஜுன்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம்

அந்நஜாத்

இஸ்லாமிய இலட்சிய மாத இதழ்

ஜூன் 2020

ஷவ்வால் – துல்கஃதா 1441

 1. தலையங்கம் !
 2. மனித யூகம் மார்க்கம் ஆகாது…
 3.  மறுமையில் புதைகுழி வெடித்து வெளியேறும்!  வெட்டுக்கிளி மனிதர்கள் !
 4. ஹலாலான  சொந்த  செல்வத்திற்கே ஜகாத் !
 5. அமல்களின் சிறப்புகள்…
 6. பொதுவான வேதனை வரும்போது நல்லவர்களையும் சேர்த்தே அது பாதிக்கும்…
 7. ஸலவாத்…
 8. அறிந்து கொள்வோம்…
 9. சுவர்க்கம்  என்பதும்  மறைவான   இறை  நம்பிக்கையில்  உள்ளதாகும் !

***********************************

தலையங்கம்!

தேவை மதுவிலக்கு!

கொரோனா நோயின் அபாயத்தைத் தொடர்ந்து, நான்காவது கட்டமாக ஊரடங்கு உத்தரவு இந்தியாவில் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. உலகமே மயான அமைதியில் ஆழ்ந்து கிடக்கிறது. தொழிற்சாலைகள் இல்லை, அலுவலகங்கள் இல்லை, தேநீர் விடுதிகள் இல்லை, உணவு விடுதிகள் இல்லை, சிறு தொழில்கள் இல்லை, தெருஓர கடைகள் பகலிலும் இல்லை, இரவிலும் இல்லை, எல்லோருக்கும் வேலை இல்லை, மக்கள் கூடுவதில்லை, அவசர சிகிச்சை பெறக் கூட மருத்துவமனைகளில் அனுமதி இல்லை.

எல்லாமே இல்லை என்று ஆகிவிட்ட பின், டாஸ்மாக் கடைகளை தமிழ்நாட்டில் மே 7ல் திறக்குமாறு வந்த தமிழக அரசின் அறிவிப்பில் மக்களுக்கு மகிழ்ச்சி இல்லை. அன்றாட தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் வருமானத்தை இழந்து உண்ண உணவில்லாமல் தற்கொலை வரை சென்று விட்டனர். இந்த நிலையில் மக்களுக்கு மது தேவையா? அவர்களை இன்னும் அது சாகடித்து விடாதா? அரசே! மக்களுக்காக வாழ்க்கைத் திட்டங்களை அறிவியுங்கள்! மாறாக மரண திட்டத்தை அறிவிக்காதீர்கள்.

வெளிப்படையாக குடித்த டீயை திருட்டுத்தனமாக குடிக்க வைத்தது கொரோனா! அரசே! திருட்டுத்தனமாகக் குடித்த மதுவை வெளிப்படையாக குடிக்க வைத்து விடாதே!

தமிழக அரசு கொடுத்த நிதி, இலவச ரே­ன் பொருட்கள் அனைத்தும் சராசரி குடும்பத்திற்கு ஒரு வாரத்தைக் கூட கடத்த முடியாதே? வருமானம் இன்றி மூன்று மாதங்களைக் கடப்பது சாத்தியமா? அரசே! பொருளாதாரத்தை மேம்படுத்த டாஸ்மாக்கை திறப்பது தீர்வாகாது. அது இறை கோபத்தைத்தான் கொண்டுவரும். அதனால் ஏழைகளின் வாழ்வு சீரழியும், இறைவனின் கட்டளைக்கு செவிமடுங்கள்! செயல்படுங்கள்.

நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும், உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டுபண்ணி இறைவனின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களை தடுத்து விடத்தான். எனவே அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்குர்ஆன்:5:91)

மதுபானம், சூதாட்டம் இரண்டிலும் பெரும்பாவம் இருக்கிறது. மனிதர்களுக்கு பலன்களும் உண்டு, ஆனால், அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனை விடப் பெரிது. (அல்குர்ஆன்:2:219)

இறை நம்பிக்கையாளர்களே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுவதும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் உள்ளவையாகும். (அல்குர்ஆன்:5:90)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “கல்வி மக்களிடமிருந்து மறைந்து விடுவதும், அறியாமை நிலைத்து விடுவதும், மது அருந்தப்படுவதும், வெளிப்படையாய் விபச்சாரம் நடப்பதும் மறுமை நாளின் அடையாளங்களில் சிலவாகும்” (புகாரி: அனஸ்(ரழி), எண். 80)

எனவே, இறை கோபத்திற்கு ஆளாகாமல், மக்களின் எதிர்ப்பை மதித்து டாஸ்மாக் கடைகளை திறந்து விடாமல், பூரண மதுவிலக்கை அமுல்படுத்துமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறோம்.

***********************************

மனித  யூகம் மார்க்கம் ஆகாது…

K.M.H. அபூ அப்தில்லாஹ்

மறு பதிப்பு :

தங்களை மார்க்க அறிஞர்கள் வல்லுனர்கள் என்று அகம்பாவத்துடன் மார் தட்டிக் கொள்ளக்கூடியவர்கள், மார்க்க விவகாரங்களில் தங்களாலும் யூகம் செய்து முடிவு செய்ய முடியும். நாங்கள் நம்பிப் பின்பற்றும் முன் சென்ற அறிஞர்கள் இப்படித்தான் யூகம் செய்து, மார்க்க விவகாரங்களை முடிவு செய்தார்கள் என்று கூறி அதற்கு ஆதாரமாக.

“மேலும் பீதியோ, பாதுகாப்பைப் பற் றிய செய்தியோ அவர்களுக்கு எட்டுமானால், உடனே அவர்கள் அதைப் பரப்பி விடுகிறார்கள். அவர்கள் அதை அல்லாஹ்வின் தூதரிடமோ, அல்லது அவர்களில் நின்றுமுள்ள அதிகாரிகளிடமோ தெரிவித்தால், அவர்களிலிருந்து அதை ஊகித்து அறியக் கூடியவர்கள், அதை நன்கு விசாரித்தறிந்து (தக்க ஏற்பாடுகளைச் செய்து) கொள்வார்கள். அல்லாஹ்வுடைய கிருபையும், அருளும் உங்கள் மீதில்லாதிருந்தால், உங்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் ஷைத்தானையே பின்பற்றியிருப்பீர்கள்.”  (அல்குர்ஆன்: 4:83)

இந்த ஆயத்தை ஆதாரமாக எடுத்துச் சொல்கிறார்கள். இந்த வசனத்தில் வரக்கூடிய “இஸ்தின்பாத்” என்ற சொல்லை ஆதாரமாகக் கொண்டு மார்க்க விவகாரங்களில் யூகம் செய்து முடிவு செய்ய மார்க்க அறிஞர்களுக்கு அல்லாஹ் அனுமதி வழங்கியுள்ளதாக அப்பாவி மக்களை வழிகெடுக்கிறார்கள்.

இந்த 4:83 வசனத்தைத் தெளிவாகவும், நிதானமாகவும் ஓதி விளங்கக்கூடிய ஒரு நடுநிலையான சிந்தனையாளன், இந்த இறை வசனம் சிக்கலான உலகப் பிரச்சனை பற்றியது என்பதை தீர்க்கமாக விளங்கிக் கொள்ள முடியும்.

உலகில் நெருக்கடியான கட்டங்களில் பீதி ஏற்பட்டு விட்டது, அல்லது தங்கள் உயிர், உடல், பொருள் பாதுகாப்பைப் பற்றி பயம் ஏற்பட்டு விட்டது. இந்த சூழ்நிலையில் வதந்திகளைப் பரப்பாமல், அதற்குரிய சம்பந்தப்பட்டவர்களிடம் விஷயத்தை எடுத்துச் சொல்வது கொண்டு, அவர்களிலுள்ள அறிஞர்கள், அது விஷயமாக நன்கு விசாரித்து, யூகித்து அறிந்து பயத்தைப் போக்க ஆவன செய்வார்கள் என்ற கருத்தை 4:83 வசனம் தருகின்றது.

உலக காரியங்களில் இவ்வாறு நடப்பதற்கு அல்லாஹ் அனுமதி அளிக்கிறான், அவ்வாறு அறிஞர்களின் யூகப்படி செயல்பட்டோம் என்று வைத்துக் கொள்வோம். அதன் பின்விளைவு நல்லதா? அல்லது கெட்டதா? என்பதையும் காலப்போக்கில் நடைமுறையிலேயே நம்மால் கண்டுகொள்ள முடியும். அந்த அறிஞரின் யூகப்படி நாம் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், அந்த யூகம் தவறான விளைவை உண்டாக்குகின்றது என்பதை நிதர்சனமாகத் தெரிந்து கொண்டபின் குருட்டுத்தனமாக அதைப் பின்பற்ற மாட்டோம். அதை விட்டுவிடு வோம், உலக காரியங்களில் இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு நமக்கு இருக்கின்றது.

இதற்கு நபி(ஸல்) அவர்களின் நபித்துவ காலத்திலேயே இடம்பெற்ற ஒரு சம்பவம் நமக்கு நல்லதொரு படிப்பிணையாக இருக்கின்றது. மதீனாவாசிகளான அன்சார்கள் தங்களது விவசாய முறையில் ஆண் பேரீத்த மரத்தின் பாளையை எடுத்துப் பெண் பேரீத்த மரத்தில் கட்டும் வழக்கம் உடையவர்களாக இருந்தார்கள். இதைக் கண்ணுற்ற நபி(ஸல்) அவர்கள் இச்செயலைத் தடுத்து விட்டார்கள், நபி(ஸல்) அவர்களின் யூகத்தை ஏற்று அன்சார்கள் தங்கள் பயிர் செய்முறையை விட்டு விட்டார்கள். ஆனால் அந்த மகசூலிலேயே நிதர்சனமாகப் பலன் குறைந்துவிட்டதையும் கண்டார்கள். நபி(ஸல்) அவர்களிடம் முறையிடும்போது, “மார்க்க விஷயத்தில் நான் ஒன்றை உத்திரவிடும்போது, அதை ஏற்று நடங்கள், என் அபிப்பிராயத்தில் நான் ஒன்றைச் சொல்வேனேயானால் நானும் ஒரு மனிதனே!” (முஸ்லிம்) என்று தெளிவாக அறிவித்துவிட்டார்கள். இதிலிருந்து மார்க்க வி­யங்கள், உலக விஷயங்கள் ஆகியவற்றிலுள்ள வேறுபாடுகளையும் அவற்றால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தி விட்டார்கள்.

ஆக, உலக காரியங்களில் அறிஞர்களின் யூகம் சரியா? தவறா என்பதை உலக நடைமுறையிலேயே கண்டுகொண்டு ஆவண செய்து கொள்ளவும், தவறைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது. ஆகவே அறிஞர்கள் இது விஷயத்தில் யூகம் செய்யவும், மற்றவர்கள் அதை எடுத்து நடக்கவும் அல்லாஹ் அனுமதி அளித்துள்ளான்.

ஆனால் மார்க்க விஷயங்களில் அறிஞர்கள் இவ்வாறு யூகம் செய்யவும், மற்றவர்கள் அதை எடுத்து நடக்கவும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்களா? என்று பார்த்தால், அதற்கு அனுமதி இல்லை என்பதே தெளிவான பேச்சாகும். காரணம் அறிஞர்களின் அந்த யூகத்தின் பலனை மரணத்திற்குப் பின்னால் தான் நாம் காணவேண்டியவர்களாக இருக்கிறோம். யூகம் செய்த அறிஞர்களும் மறுமையில் தான் அதன் பலனைக் கண்டு கொள்வார்கள். ஆகவே தவறாக இருந்தால், அதைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பே இல்லாமல் போய்விடுகின்றது. அதன் காரணமாகத்தான் பல அறிஞர்களின் தவறான யூகங்களைக் காலங்காலமாக, அந்த அறிஞர்கள் மீது நம்பிக்கை வைத்தவர்கள் செயல்படுத்தி வருவதன் காரணமாக வழிகேட்டில் சென்று கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். அடுத்து யூகம் செய்யும்போது, எத்தனை பெரிய அறிஞராக இருந்தாலும் அதில் தவறு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதற்கு நபி(ஸல்) அவர்களின் வாழ்வி லேயே ஒரு சம்பவத்தை இடம்பெற வைத்து அல்லாஹ்(ஜல்) நமக்குப் பாடம் புகட்டுகிறான்.

ஆக நாம் பெறும் படிப்பினை, ஒன்று நமக்கு நாளை மறுமையில் நன்மையைத் தரும், அல்லது தீமையைத் தரும் என்ற விஷயம் மறுமையைப் பற்றிய ஞானம் நிறைவாக உள்ள அல்லாஹ்(ஜல்) அறிவித்துத் தரவேண்டும் அல்லது அல்லாஹ்வின் அறிவிப்பின்படி நபி(ஸல்) நமக்கு அறிவித்துத்தர வேண்டும். அதாவது குர்ஆனிலோ, சஹீஹ் ஹதீதுகளிலோ காணப்பட வேண்டும். குர்ஆனிலோ, ஹதீஃதிலோ காணப்படாத மனித யூகங்களால் பெறப்பட்ட, மறுமை சம்பந்தப்பட்ட ஒரு நன்மையோ, தீமையோ ஒருபோதும் இருக்க முடியாது.

குர்ஆன் 4:83 வசனம் உலகியல் சம்பந்தப்பட்டதே அல்லாமல் மார்க்க விஷயங்கள் சம்பந்தப்பட்டதல்ல. இந்த வசனத்தை மார்க்க விஷயங்களில் இணைத்துப் பேசுபவர்கள் வழிகேடர்களாக இருக்க முடியுமே அல்லாமல் நேர்வழி நடப்பவர்களாக இருக்க முடியாது. அல்லாஹ்(ஜல்) அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக. ஆமீன்.

***********************************

மறுமையில் புதை குழி வெடித்து வெளியேறும்!   வெட்டுக்கிளி மனிதர்கள்!

எஸ். ஹலரத் அலி,   திருச்சி

அல்லாஹ்வின் படைப்பில் ஆரம்பமும் உண்டு, அதன் இறுதி அழிவுமுண்டு. இது அவனது சுன்னா இந்த மாபெரும் பிரபஞ்சத்தில் உள்ள சூரிய சந்திர நட்சத்திரம் பூமி மற்றும் அதில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் ஒரு நாள் அழிக்கப்படும். மனிதனும் அழிக்கப்படுவான். ஆயினும் அவன் இப்பூமியில் செய்த நன்மை தீமைகளுக்கான பலனை அடைவதற்கான தீர்ப்பு நாளுக்காக மீண்டும் இப்பூமியிலிருந்தே எழுப்பப்படுவான்.

இறந்து மண்ணோடு மண்ணாகப் போன மனிதன் மீண்டும் உயிருடன் எழுப்பப்படுவதென்பது இறை விசுவாசிகளுக்கான அடிப்படை நம்பிக்கையாக உள்ளது. ஆயினும் இறை மறுப்பாளர்களுக்கு இது ஒரு மூட நம்பிக்கையாகவே தெரியும். பல்லாயிரம் ஆண்டுகள் இம்மண்ணில் தொடர்ந்து வாழ்ந்து, மரித்த மனிதர்கள். மீண்டும் இம்மண்ணிலேயே உயிர்த்தெழும் சம்பவத்தை பல உதாரணங்கள் மூலம் அல்லாஹ், அறிவார்ந்த முறையில் விவரிக்கின்றான்.

அவன்தான் அவனுடைய அருள்மழைக்கு முன்னர் நற்செய்தியாக குளிர்ந்த காற்றை அனுப்பி வைக்கின்றான். அது கருக்கொண்டு கனத்த மேகங்களைச் சுமந்த பின்னர் அதனை நாம் வரண்டு இறந்த பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று அதிலிருந்து மழை பெய்யச் செய்கின்றோம். பின்னர் அதைக் கொண்டு எல்லா வகை கனிகளையும் வெளியாக்குகின்றோம். இவ்வாறே மரணித்தவர்களையும் அவர்களின் சமாதிகளிலிருந்து வெளியாக்குவோம். இதனை அறிந்து நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவீர்களாக. அல்குர்ஆன்: 7:57

அல்லாஹ்தான் காற்றை அனுப்புகின்றான். அது மேகங்களை ஓட்டுகிறது. பின்னர் அவைகளை இறந்து பட்டுப்போன பூமியளவில் செலுத்தி, இறந்து போன பூமியை உயிர்ப்பிக்கின்றான். (மரணித்தவர்கள் மறுமையில்) உயிர் பெற்றெழுவதும் இவ்வாறே. அல்குர்ஆன்: 35:9

நம் கண்முன்னே காயந்து வறண்டு பொட்டலாக இருக்கும் நிலத்தில் உயிர்கள் ஏதேனும் உள்ளதா என்று எவருக்கும் தெரியாத நிலையில் ஒரு சிறு மழை அங்கு பொழிந்த பின்பு அந்நிலத்திலிருந்து பல பசுமைத் தாவரங்கள் உயிர் பெற்று எழுவதைப் பார்க்கிறோம். இது போன்றே மண்ணில் அடங்கிய மனித உடல்களின் அணுக்கள் மண்ணோடு மண்ணாக மறைந்தே உள்ளன. மழை நீர் பொழிந்து தாவரங்கள் உயிர் பெற்றெழுவது போன்று, மனித உடல் அணுக்கள் ஒன்று சேர்ந்து உயிர் பெற்றெழும் என்று நபி(ஸல்) அவர்கள் விளக்குகிறார்கள்.

“(மறுமை நாளில், இறந்தவர்கள் உயிர் பெற்றெழுவதற்காக) அல்லாஹ் வானத்திலிருந்து ஒரு நீரை இறக்குவான். அப்போது (மண்ணறைக்குள் உக்கிப் போயிருக்கும் மனித சடலங்கள்) தாவரங்கள் முளைத்து எழுவது போல் எழுவார்கள். மனிதர்களிலுள்ள உறுப்புகள் அனைத்துமே (மண்ணுக்குள்) உக்கிப் போகாமல் இருப்பதில்லை. ஆனால் ஒரே ஒரு எலும்பைத் தவிர, அதுதான் முதுகு தண்டின் வேர்ப்பகுதியில் இருக்கும் உள்வால் எலும்பின் (COCCYX BONE) (அணுவளவு) நுனியாகும். அதை வைத்தே படைப்பினங்கள் மீண்டும் மறுமை நாளில் உருவாக்கப்படும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  புகாரி: 4935, முஸ்லிம்: 5660

மறுமை நாளில் மனிதர்கள் எவ்வாறு தாங்கள் அடக்கப்பட்ட புதைகுழியிலிருந்து வெளியேறுவதை, வெட்டுக்கிளி வெளியேறுவது போல் என்ற ஓர் உதாரணம் மூலம் அல்லாஹ் விளக்குகிறான்.

(தாழ்ந்து பணிந்து) கீழ் நோக்கிய பார்வையுடன், அவர்கள் புதை குழியிலிருந்து பரவிச் செல்லும் வெட்டுக் கிளிகளைப் போல் வெளியேறுவார்கள்.  அல்குர்ஆன் : 54:7

மறுமை நாளில் உயிர்த்தெழும் மனிதர்கள், தங்கள் உடல் அடங்கிய புதைகுழிகளிலிருந்து வெளியேறும் சம்பவத்தை வெட்டுக்கிளி எப்படி புதைகுழியிலிருந்து வெளியேறுவதோடு அல்லாஹ் ஒப்பிட்டுக் காட்டுகின்றான். இன்று உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் காரணிகளில் பிரதானமாக இருப்பது பாலைவன வெட்டுக்கிளிகளின் படை எடுப்புகளே! ஒரே நாளில் ஒட்டு மொத்த பயிர்களையும் தின்று தீர்க்கும் திறன் கொண்டவை இவ்வெட்டுக் கிளிகள்.

மனிதர்களின் வாழ்வில் இம்மை மறுமை என்ற இரு நிலைகள் உள்ளதைப் போல் வெட்டுக்கிளிகளின் வாழ்வில் இரு நிலைகள் உள்ளன. சாதாரணமான வெட்டுக்கிளி வாழ்க்கை (Solitary Phase Locust) இதற்கு அடுத்த நிலை உடலின் நிறம். உருவம் மாற்றமடைந்து கூட்டாக ஒன்று சேர்ந்து வெளியேறும் (Gregarious Phase Locust)  நிலை பொதுவாக மத்திய கிழக்கு நாடுகளின் பாலைவனப் பகுதிகளில் வாழும் வெட்டுக்கிளிகள், நிலத்தை துளைத்து நூற்றுக்கணக்கான முட்டைகளை அக்குழிகளில் இடும்.

இந்த முட்டைகள் குஞ்சுகளாக வளரும் பருவத்தில் அப்பகுதியில் மழை பொழிந்து தாவரங்கள் பசுமையாக இருக்கும். அவைகளை உண்டு வளர்ந்த பின்பு அவைகளின் உடலில் ஏற்படும் சில இரசாயன மாற்றத்தால் (The Gregarisation Pheromone of Locusts) என்ற நிலைக்கு மாறும். இப்படி நிறம் மற்றும் உருவம் மாறிய வெட்டுக்கிளிகள், கோடிக்கணக்கில் தம் புதைகுழியிலிருந்து கூட்டாக வெளியேறும். ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு அளித்துள்ள தகவல்படி ஒரு வெட்டுக்கிளிகளின் கூட்டம் சுமார் 60 கிலோ மீட்டர் நீளமும் சுமார் 40 கிலோ மீட்டர் அகலமும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதுபோன்றே இம்மை உலகில் இதுவரை வாழ்ந்து மடிந்த மனிதர்கள் அனைவரும் மறுமை வாழ்வுக்காக, புது உடல் எடுத்து புதைகுழியிலிருந்து கூட்டாக கோடிக்கணக்கில் வெட்டுக்கிளிகளின் கண்கள் சிறுத்திருப்பதைப் போன்றே புதைகுழியிலிருந்து வெளியேறும் மனிதர்களின் கண்களும் கீழ்நோக்கிய பார்வையுடனே இருக்கும் என்று குர்ஆன் 54:7 கூறுகிறது.

குறிப்பாக அமெரிக்கா நாடுகளில் காணப்படும் சில வகை வெட்டுக்கிளி இனங்கள், தொடர்ந்து 13 வருடங்கள் மண்ணில் புதையுண்டு மரண நிலையில் வாழ்ந்து வரும். இதில் வேறு ஒரு இன வெட்டுக் கிளிகள், 17 வருடங்கள் மண்ணுக்குள்ளேயே முட்டையுடன் அடங்கிக் கிடக்கும். சரியாக 13 வருடங்கள் முடிந்து பதினாலாம் வருடத்தில் அல்லது 17 வருடம் முடிந்து பதினெட்டாவது வருடத்தில்தான் மண்ணுக்கு மேல் வெளி வந்து பறந்து திரியும். இந்த வெட்டுக்கிளி இனத்திற்குப் பெயர். (Periodical Cicadas, Magiccicada is the Genus of the 13 years and 17year)

பதினேழு வருடங்கள் மண்ணுக்குள் மரண நிலையில் இருந்த இந்த வெட்டுக் கிளிகள் கடைசியாக 2007ஆம் ஆண்டு அமெரிக்காவில் தென்பட்டது. இனி அதன் மரண மயக்கம் தெளிந்து விழித்து எழுவது 2024ஆம் வருடமே. அல்லாஹ்வின் படைப்பில் பல ஆச்சரியங்கள் உண்டு. இறந்த மனிதன் இறுதி நாளில் மீண்டும் உயிர் பெற்றெழுவது இறை மறுப்பாளர்களுக்கு நம்ப முடியாத செய்தியாக உள்ளது. ஆனால் ஒரு சிறிய வெட்டுக்கிளி முட்டையானது பதினேழு வருடம் பூமியில் புதையுண்டு மரண நிலையில் இருந்து பதினெட்டாம் வருடம் சிறகுகள் முளைத்து மண்ணுக்கு மேல் உயிருடன் பறந்து வருவது இன்றும் நம் கண் முன்னே நடக்கும் காட்சியாக உள்ளது.

பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் போல் 17 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே மண்ணறையிலிருந்து மேல் வரும் வெட்டுக்கிளிகள் உள்ளன. இவைகளின் உலக வாழ்வு ஐந்து வாரங்கள் மட்டுமே. அதற்குள் இனப் பெருக்கம் செய்து முட்டையிட்டு அதை மண்ணறையில் வைத்து தன் வாழ்வை முடித்து விடும். இந்த முட்டைகள் மீண்டும் வெட்டுக்கிளிகளாக வெளியுலகம் வருவதற்கு அடுத்த 13 அல்லது 17 வருடங்கள் மண்ணறைகளிலேயே உறங்க வேண்டும். மரித்த மனிதர்கள் புதைகுழியிலிருந்து வருவதற்கு உதாரணமாக அல்லாஹ் வெட்டுக்கிளியை உதாரணம் காட்டியதன் காரணம் இதுவாகவும் இருக்கலாம். அல்லாஹ்வே அறிந்தவன்.

சிக்காடா (Cicada) என்று அழைக்கப்படும் இந்த வெட்டுக்கிளியும் லொகஸ்ட் (Locust) என்று அழைக்கப்படும் வெட்டுக்கிளியும் பார்வைக்கு ஒன்றுபோல் இருப்பினும் இருவகைகளும் வெவ்வேறு இனத்தை சேர்ந்தவை. ஆயினும் அவைகளின் செயல்களில் சில ஒற்றுமைகள் உள்ளன. பாலைவன வெட்டுக்கிளிகள் தகுந்த பருவம் வரும் போது தனது தங்கும் குழியிலிருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறி பயிர் நிலங்களை அழிக்கும். சிக்காடா வெட்டுக் கிளிகள் தாங்கள் புதைந்திருக்கும் குழிகளிலேயே 13லிருந்து 17 வருடம் வரை மரண அமைதியாக உறங்கிக் கிடக்கும். அந்த புதைகுழி வாழ்க்கை முடியும் காலம் வந்ததும் தங்கிய புதை குழியிலிருந்து பில்லியன் கணக்கில் ஒன்றாக வெளியேறி பறக்க ஆரம்பித்து விடும்.

பண்டைய எகிப்து மற்றும் சீனப் பேரரசர்களின் கல்லறைகளில் சிக்காடா வெட்டுக்கிளிகளின் உருவங்கள் பச்சை கற்களில் செதுக்கப்பட்டு இறந்தவர் உடலோடு வைக்கப்பட்டன. புதைகுழி வெட்டுக்கிளிகள் உயிர்த்தெழுவது போன்று, இறந்த பின் மனிதனும் உயிர்த்தெழுவான் என்று அன்றைய மக்களும் நம்பினார்கள்.

(இறைவன், ஆதம்(அலை) அவர்களை நோக்கி), “இதிலிருந்து நீங்கள் இறங்குங்கள், உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவராக இருப்பீர்கள், உங்களுக்கு பூமியில் தங்குமிடம் இருக்கிறது. அதில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை அதில் நீங்கள் சுகம் அனுபவித்தலும் உண்டு” என்று கூறினான்.

“அங்கேயே நீங்கள் வாழ்ந்திருப்பீர்கள், அங்கேயே நீங்கள் மரணமடைவீர்கள், இறுதியாக அங்கிருந்தே எழுப்பப்படுவீர்கள்” என்றும் கூறினான். குர்ஆன்: 7:24,25

பூமியில் வாழ்ந்து மரணமடைவதும், பின்பு இறுதியில் உலகம் அழிக்கப்பட்டு மீண்டும் மனிதர்களுக்கு உயிர் கொடுத்து எழுப்பப்படும் செய்தியையும் ஆரம்ப காலத்திலேயே அல்லாஹ் தெளிவுபடுத்தி விட்டான். இறந்த மனிதன் இறுதியில் எழுப்பப்படும் உண்மையை ஒவ்வொரு காலத்திலும் வாழ்ந்த மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். குறிப்பாக பண்டைய எகிப்து சீனா நாகரிகங்களில் வாழ்ந்த அரசர்களின் தோண்டி எடுக்கப்பட்ட கல்லறைகளில் சிக்காடா வெட்டுக்கிளி உருவங்கள் செதுக்கிய சிற்பங்களை கண்டெடுத்தனர். புதைகுழியிலிருந்து உயிருடன் வெளியேறும் வெட்டுக்கிளிகளைப் போல் இறந்த மனிதர்களும் உயிருடன் எழுப்பப்படுவார்கள் என்றே அன்றைய மக்களும் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.

Similarly, cicadas were used in china as imitative magic to help ensure life after death. In china, the cicada was a symbol of rebirth, It was thought that the nymph crawling out of the ground, shedding its nymphal, skil, and transforming into an adult was symbolic of resurrection. The nymph becomes very still prior to molting and thus appears to “die”. The adult cicada comes out of the “dead” shell, just as the spirit of a deceased person should emerge out of his dead body (Kritsky and Cherry 2000) Again, using the principle of “like produces like.” stylized cicadas called “tongue cicadas” were carved from jude and placed in the mouth of the deceased.- “American Endomologist” magazine. Vol.51, no. 1.2005, page. 11

இறந்த மனிதர்கள் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவார்கள் என்பதை மட்டும் குர்ஆன் கூறவில்லை. அவர்கள் வெட்டுக்கிளி போல ஒரே நேரத்தில் கோடிக்கணக்கில் புதை குழியிலிருந்து எழுவது போன்று எழுவார்கள் என்ற உண்மையை உதாரணத்துடன் கூறுகிறது. இஸ்லாம் ஓர் அறிவியல்பூர்வமான அல்லாஹ்வின் மார்க்கம் இறப்பிற்குப் பின் மறுமை வாழ்வு உள்ளது என்ற உண்மையை உணர்வதற்கு சிந்திக்கும் மனிதர்களுக்கு இந்த உதாரணத்தை கூறுகிறது. ஆயினும் பெரும்பாலோர் இதனை நம்பமாட்டார்கள் என்பதையும் குர்ஆன் கூறுகிறது.

இறந்தவர்கள் உயிர் கொடுத்து எழுப்பப்படுவார்கள் என்ற அவனின் வாக்கு முற்றிலும் உண்மையானதே எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்ளமாட்டார்கள். குர்ஆன்: 16:38

***********************************

ஹலாலான  சொந்த  செல்வத்திற்கே ஜகாத்…

நிஜாமுதீன்

ஜகாத்  கடமையாவதற்குரிய   நிபந்தனைகள்,  சட்டங்கள் :

வாசகர்கள் கவனத்திற்கு ஜகாத் என்பது ஒரு உயர்ந்த பொருளாதார திட்டம். எனினும் நாம் அதன் லட்சியத்தையோ, சிறப்பையோ இந்த தொடரில் எழுதப் போவ தில்லை மாறாக அந்த பொருளாதார திட்டத்தின் சட்டங்கள் பற்றி மட்டுமே எழுதப் போகிறோம். இதன் உள் சட்டங்களில் உலகம் முழுதும் சிற்சில கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. அந்த இடங்களில் இருதரப்பு கருத்துக்களையும் எடுத்துக் கூறி அதில் நம்முடைய நிலைப்பாடு எது என்பதையும் விளக்குவோம். ஒரு பொருளுக்கு அல்லது ஒரு தொகைக்கு ஒரு முறை மட்டும் ஜகாத் கொடுத்தால் போதுமா அல்லது ஆண்டுதோரும் கொடுக்க வேண்டுமா என்பது பற்றி இரு சாராரின் வாதங்கள். அது பற்றிய ஆதாரங்கள், அவற்றின் நம்பகத்தன்மைகள் எல்லாமும் விளக்கப்படும். இன்ஷா அல்லாஹ். இந்த தொடரில் ஏற்படும் இடற்பாடுகளை வாசகர்கள் தங்கள் கருத்துக்களாக பதிக்கலாம்.

விளக்கம் :

 1. ஜகாத் யார் மீது கடமை, கொடுக்க கடமைப்பட்டவர்கள் யார்?

ஒருவருக்கு ஜகாத் கடமையாக வேண்டுமானால் பல நிபந்தனைகள் உண்டு. அந்த நிபந்தனைக்கு உட்பட்டோர் மீது மட்டும் தான் ஜகாத் கொடுக்கும் பொறுப்பை இஸ்லாம் விதிக்கிறது.

நிபந்தனை ஒன்று :

ஜகாத் கொடுக்கக் கடமைப்பட்டவர் தனது செல்வம் முழுமைக்கும் சொந்தக்காரராக இருக்க வேண்டும்.

எந்த செல்வத்திற்கு இறைவன் உங்களை (கலீபாக்களாக) பிரதிநிதிகளாக ஆக்கி இருக்கிறானோ அந்த செல்வத்திலிருந்து செலவு செய்யுங்கள். (அல்குர்ஆன்: 57:7)

உங்களுக்கு இறைவன் வழங்கிய செல்வத்திலிருந்து நீங்கள் அவர்களுக்கு கொடுங்கள். (அல்குர்ஆன்: 24:33)

நாம் அவர்களுக்கு வழங்கிய செல்வத்திலிருந்து அவர்கள் செலவு செய்வார்கள். (அல்குர்ஆன்: 2:3)

இந்த மூன்று வசனங்களில் மனிதன் வாரிசுரிமை அடிப்படையிலோ அல்லது தனது சொந்த திறமையின் வழியாகவோ அல்லது பிறர் கொடுக்கும் அன்பளிப்புகளின் வழியாகவோ செல்வத்திலிருந்து சொந்தக்காரனாகிறான் என்பது தெரிகிறது. “உங்கள் செல்வம்’ என்று இறைவன் கூறியிருப்பதிலிருந்து இறைவனின் வழியில் செலவு செய்யும் எது ஒன்றிற்கும் செலவு செய்பவர் சொந்தக்காரராக இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. தனது அதிகாரத்திற்கு கீழ் இருக்கும் சொத்திற்கு சுய அதிகாரம் பெறாதவர்கள் மீது ஜகாத் கடமையில்லை. செல்வத்திற்கு முழு உரிமைப் பெற்றவர்கள் மீதே ஜகாத் கடமையாகும். ஜகாத் கடமையாவதற்குரிய நிபந்தனையில் “உங்கள் செல்வம்’ என்பது முக்கிய பங்கு வகிக் கிறது.

எவரும் தனிப்பட்ட முறையில் சொந்தம் கொண்டாட முடியாத எந்த சொத்திற்கும் அது எத்துனை கோடி மதிப்புள்ளதாக இருந்தாலும் சரி அதன் மீது ஜகாத் கடமை யில்லை.

அரசு கருவூலங்களுக்கு அரசாங்கம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. ஏனெனில் அது எவருடைய தனிப்பட்ட சொத்துமல்ல. அந்த செல்வத்திற்கு நான்தான் சொந்தக்காரன் என்று எவரும் சொந்தம் கொண்டாட முடியாது. மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் ஜகாத் நிதிகள் மற்றும் உள்நாட்டு வரிகள் இவைகள் அரசாங்கத்திடம் மலைப்போல் குவிந்திருந்தாலும் அவற்றிற்கு கணக்கு பார்த்து அரசாங்கம் ஜகாத் கொடுக்க முடியாது. ஏனெனில் “உங்கள் செல்வம்’ என்ற நிபந்தனை இங்கு பொருந்தவில்லை.

பள்ளி வாசல்களுக்காகவோ, இன்னபிற நற்காரியங்களுக்காகவோ வக்ஃப் செய்யப்பட்ட சொத்துகளும் ஜகாத் கடமையாவதி லிருந்து விலக்கு பெறுகின்றன. ஏனெனில் இவைகளும் வக்ஃப் செய்யப்பட்டு விட்ட பிறகு தனி மனிதர்களுக்கு சொந்தமானவை என்பதிலிருந்து மாறுபட்டு விடுகிறது. “உங்கள் செல்வம்’ என்பது இங்கும் பொருந்தாது என்பதால் அவற்றிற்கும் ஜகாத் கடமையில்லை.

முஸ்லிம் உம்மத்திற்காக பாடுபடும் இயக்கங்கள் மக்களிடமிருந்து நற்பணிகளுக்காக பணம் வசூலித்தால் அதன் மூலம் இயக்கத்திற்காக சொத்துக்கள் (நிலங்கள், கட்டிடங்கள். வாடகை வருமானங்கள், வாகனங்கள், பத்திரங்கள் எல்லாம் இதில் அடங்கிவிடும்) வாங்கப்பட்டால் அந்த சொத்துக்களுக்கோ சொத்துக்களிலிருந்து பெறப்படும் வருமானங்களுக்கோ ஜகாத் கடமையில்லை. ஏனெனில் “உங்கள் செல்வம்’ என்ற நிபந்தனையை இந்த சொத்துக் கள் எதுவொன்றின் மீதும் பொருத்திக் காட்ட முடியாது. இவைகள் எந்த தனி மனி தர்களுக்கும் சொந்தமானவையல்ல.

கூட்டுக் குடும்பங்களில் இருக்கும் பிரிக்கப்படாத சொத்துக்கள் ஜகாத்திலிருந்து விதிவிலக்கு பெறாது அவை பிரிக்கப்படாவிட்டாலும் “உங்கள் செல்வம்’ என்ற தகுதியைப் பெறும் பலருக்கு அது சொந்தமாக இருப்பதால் அவற்றிலிருந்து ஜகாத் பிரிக்கப்பட வேண்டும் (இது பற்றி பின்னர் விரிவாக பார்க்கலாம்)

“உங்கள் செல்வத்தில்’ சேராத இன்ன பிற சொத்துக்கள் :

லஞ்சம், வட்டி, திருட்டு, லாட்டரி, சூது இவற்றால் பெறப்பட்ட சொத்துக்கள், செல்வங்கள் எதுவொன்றும் ஜகாத் திட்டத்தில் இடம் பெறாது. ஏனெனில் பிறருடைய செல்வமாகும். முறையற்ற வழியில் அவை அபகரிக்கப்பட்டுள்ளதால் அவை இறைவன் வழங்கிய செல்வமாகவோ, வாரிசுரிமை வழியில் பெறப்பட்ட செல்வமாகவோ கருதப்படாது. எனவே இத்தகைய சொத்துக்களுக்கு ஜகாத் கொடுக்கும்படி இஸ்லாம் ஏவவில்லை. ஜகாத் கொடுத்து விட்டால் அத்தகைய சொத்துக்கள் தூய்மை யடைந்து விடும் என்பதையும் இஸ்லாம் ஒப்புக்கொள்ளவில்லை. இந்த செல்வங்களை உரியவர்களிடம் சேர்ப்பித்து விடுவதும், அதற்கு வழியில்லாத பட்சத்தில் அந்த சொத்துக்கள் அனைத்தையும் வறுமையில் உழன்றுக் கொண்டிருப்பவர்களிடம் (நன்மையை நாடாமல்) சேர்ப்பித்து விட்டு இறைவனிடம் பாவமன்னிப்பு தேடுவதும் தான் இதற்கான மாற்று வழியாகும்.

விபச்சாரம், போதைப் பொருட்கள் போன்ற இஸ்லாம் ஹராமாக்கியுள்ள காரியங்களில் வழியாக ஈட்டப்படும் தொகை எதுவாக இருந்தாலும் அவைகளிலிருந்து ஜகாத் தொகையை பிரித்தெடுக்க முடியாது இவைகளும் இறைவன் வழங்கிய செல்வம் அல்லது வாரிசுரிமையால் கிடைத்தது என்ற தகுதியை இழந்து விடுகிறது. அல்லாஹ் இறையச்சம் உடையவர்களிடமிருந்துதான் எதையும் அங்கீகரிக்கிறான்.  (அல்குர்ஆன் : 5:27)

இன்றைக்கு முஸ்லிம்களில் பலர் “சம்பா திக்கும் வழியைப் பற்றி கவலை இல்லை கிடைக்கும் செல்வத்தில் ஜகாத், தர்மம் என்று நல்வழியில் செலவிட்டு கணக்கை சரி பார்த்துக் கொள்ளலாம்’ என்ற எண்ணத்தில் இருப்பதை காண்கிறோம். இவர்கள் தங்கள் எண்ண ஓட்டங்களை நியாயப்படுத்தி ஜகாத் வழங்கினாலும் அவை எந்த மதிப்பையும் பெறாது என்பதை மேற்கண்ட வசனம் அறிவித்து விடுகிறது.

இறை வழியில் செலவு செய்பவற்றில் பரிசுத்தமானதை தவிர வேறெதையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்வதில்லை என்பது நபிமொழி (அபூஹுரைரா(ரழி), புகாரி: 1410)

எனவே ஜகாத்தை கடமையாக்கும் நிபந்தனைகளில் முதலாவது செல்வத்துக்கு சொந்தக்காரர்களாக இருக்கும் முஸ்லிம்கள் அதை ஹலாலான, இஸ்லாம் அனுமதித்த வழிகளில் பெற்றிருக்க வேண்டும் என்பதாகும்.

நிபந்தனை இரண்டு :

ஹலாலான செல்வத்திலிருந்து ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற முதல் நிபந்தனையை சற்று ஆழமாக புரிந்துக் கொள்ள வேண்டிய இடம் இது செல்வத்திலிருந்து ஜகாத் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையில் செல்வம் என்றால் என்ன? அதன் தன்மையும், மதிப்பும் ஒரே தரத்தை சார்ந்தவைதானா என்ற வினாக்கள் இங்கு பிறக்கின்றன.

மனிதர்களின் பயன்பாட்டிற்கும், விருப்பத்திற்கும் ஏற்ப உலகில் பலதரப்பட்ட செல்வங்கள் குவிந்துக் கிடக்கின்றன. இஸ்லாம் இதன் தன்மைகளையும், மதிப்பையும் ஒரே மாதிரியாக கருதவில்லை. தேவைகளையும், பயன்பாட்டையும், மதிப்பையும் பொருத்து அதன் மீதான சட்டங்களை இஸ்லாம் வகுத்துள்ளது.

இது பற்றி விரிவாக அணுகுவோம் :

முதல் நிபந்தனைகளில் நாம் எடுத்துக் காட்டியுள்ள வசனங்களில் “உங்களுக்கு இறைவன் வழங்கிய செல்வம்’ என்ற வார்த்தை பிரயோகத்தில் செல்வத்தின் அளவு எதுவும் கூறப்படவில்லை. அதாவது ஒருவருக்கு முறையான வழியில் 100 ரூபாய் கிடைத்தால் அதுவும் செல்வம்தான். 1000ஆகவோ, லட்சமாகவோ, கோடியாகவோ இருந்தாலும் அதுவும் செல்வம்தான். அப்படியா னால் 100 ரூபாய் வைத்திருப்பவரும் இது இறைவன் வழங்கிய செல்வம் என்ற அடிப்படையில் ஜகாத் கொடுக்க கடமைப்பட்டவரா அல்லது செல்வத்திற்கு ஏதாவது உச்ச வரம்பு உண்டா என்ற வினா அடுத்து எழுகிறது.

நிச்சயமாக செல்வத்திற்கு உச்சவரம்பு உண்டு. அந்த உச்சவரம்பு மனிதர்களின் தேவைக்கேற்ப மாறுபடும் என்பதை குர்ஆன் வசனங்களிலிருந்து புரிந்துக் கொள்ளலாம்.
ஒருவர் தினமும் 500 ரூபாய் சம்பாதிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரது மாத வருமானம் ரூ.15,000 வருடத்திற்கு 1,80,000. இது சராசரியான வருமானத்தை கடந்த அளவாகும். இது நல்ல வருமானமாக கருதப்பட்டாலும் மாதத்திற்கு 15 ஆயிரம் என்றவுடனோ, அல்லது வருடத்திற்கு 1,80,000 ஆயிரம் என்றவுடனோ அவர் ஜகாத் கொடுத்துதான் ஆகவேண்டும் என்று யாரும் வலியுறுத்திவிட முடியாது. ஏனெனில் வருமானத்தை மட்டும் அளவுகோலாக கொண்டு கடமையாக்கப்பட்ட சட்டமல்ல ஜகாத் வருமானத்தை போன்றே மனிதர்களின் தேவைகளையும், செலவீனங்களையும் ஜகாத் சட்டம் கணக்கில் எடுத்துக் கொள்கிறது.

(நபியே!) எதை (இறைவழியில்) செலவு செய்ய வேண்டும் என்று உம்மிடம் கேட்கிறார்கள். உங்கள் தேவைக்குப் போக மீதமுள்ளதைச் செலவு செய்யுங்கள் என்று கூறுவீராக. (2:219)

இவ்வளவு இருந்தால் ஜகாத் கொடுங்கள் என்று சொல்லாமல் “தேவைக்கு போக மீதமுள்ளதை செலவு செய்யுங்கள்’ என்கிறான் இறைவன்.

“மீதமுள்ளதை’ என்று இறைவன் கூறியதிலிருந்து ஒருவருடைய வருமானம் அவருடைய அவசியத் தேவைகளை முதலில் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை விளங்கலாம்.
தேவைக்கு போக மீதமுள்ளதை என்றால் தேவையின் அளவு என்ன?

வாழ்வாதார தேவைக்குரியவைகளில் வீடும், வீட்டுப் பொருட்களும், வீட்டார் பயன்படுத்திக் கொள்ளும் வாகனமும் அடங்கிவிடும். குடும்பத்திற்காகச் செலவிடப்படும் தொகை ஜகாத் தொகைக்குரிய தகுதியைப் பெறாது.

முஸ்லிம்களின் சொந்தத் தேவைக்குரியது என்ன என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மனிதன் தன் வாழ்வாதாரத் தேவைகளை மிக வேகமாகப் பெருக்கிக் கொண்டு வந்துவிட்டான். மேற்கண்ட 2:219வது வசனம் இறங்கும் போது அந்த மக்களின் தேவை வெகு சொற்பமே. வீடும், வாகனமும், உணவும், உடையும் போக மீதி இருப்பவை அனைத்தும் மேலதிகமானதே.

வளர்ச்சி பெற்ற நூற்றாண்டுகளில் குறிப்பாக இந்த நூற்றாண்டில் மனிதனின் அத்தியாவசியத் தேவை அதிகப்பட்டு விட்டது. குளிர்சாதனப் பெட்டிகள், தொலைகாட்சி, தொலைபேசி, இணையம் என்று ஒவ்வொன்றும் வசதிக்கேற்ப மனிதனுக்கு அவசியமாகி விடுகிறது. பேரறிவாளனான இறைவன் இதையயல்லாம் உள்ளடக்கியே தன்னுடைய வார்த்தையை பயன்படுத்தியுள்ளான். “தமது தேவைக்குப் போக மீதமுள்ளதை’ என்று, தேவைகள் அதிகரித்து அதற்கேற்ப வீட்டில் பொருட்கள் பயன்படுத்தப்பட்டால் அதற்கு ஜகாத் தேவையில்லை.

“தேவைக்குப் போக மீதமுள்ளதை தர்மம் செய்வதே சிறந்ததாகும்’ என்ற நபி மொழியும் இங்கு கவனிக்கத்தக்கது.  (அபு ஹுரைரா (ரழி) புகாரி: 1426)

வீடு இல்லாதவர்கள் சொந்த வீடு கட்டுவதற்காக நிலம் வாங்கி போட்டிருந்தால், அவை வீடு கட்டுவதற்குரிய அளவுள்ள இடமாக இருந்தால் அதற்கு ஜகாத் இல்லை.

ஜக்காத் கடமையாக்குவதற்குரிய  நிபந்தனைகள் :

 1. தேவைக்குப் போக மீதமுள்ளவற்றிற்கே ஜகாத் :

ஜகாத் கடமையாவதற்கான நிபந்தனைகளை முதல் தொடரில் கண்டோம்.

அனைத்து செல்வத்திற்கும் இறைவன் ஒருவனே சொந்தக்காரனாக இருந்தும் செல்வத்தை “உங்கள் செல்வம்’ என்று மனி தர்களுக்கு சொந்தமாக்கி இறைவன் கூறுவதால் எது சொந்த செல்வமாக இருக்கிறதோ (வாரிசுரிமை அடிப்படையில், உழைப்பால், அன்பளிப்பாக, புதையல் போன்ற ஹலாலான சொத்துக்கள்) அதன் மீது மட்டும் ஜகாத் கடமையாகும் என்பது அதன் நிபந்தனைகளில் ஒன்றாகும் என்பதை கண்டோம்.

உங்கள் செல்வம் என்று இறைவன் கூறினாலும் மனிதனின் தேவைக்கு போக மீத முள்ளவற்றின் மீதே ஜகாத் கடமையாகும் என்பதை 2:219வது வசனத்தின் மூலமும் புகாரி 1426வது நபிமொழியின் மூலமும் அறிந்தோம். தேவைக்கு போக மீதமுள்ளது என்றால் என்ன என்பதையும் ஓரளவு அறிந்தோம். அதை இன்னும் கூடுதலாக அறிவோம்.

மனிதர்களுக்கு மனிதர்கள் அவர்கள் வாழும் இடம் மற்றும் சூழ்நிலைக்கேற்ப தேவைகள் வித்தியாசப்படுவதை யாரும் மறுக்க முடியாது. இந்தியா போன்ற நாடுகளில் மக்கள் வெளியில் பிரயாணம் செய்யும் போது அரசு வாகனத்தையோ (பஸ், ரயில் போன்றவை) தனியார் வாகனத்தையோ பிடித்து சென்று விடுகிறார்கள். தனக்கென்று தன் குடும்பத்திற்கென்று ஒரு சொந்த வாகனம் வேண்டும் என்ற மனநிலையோ அதற்கான முயற்சியோ அவர்களிடம் இருப்பதில்லை. (விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர் விதிவிலக்காக இருக்கலாம்) வாகனம் வாங்குவதற்குரிய பொருளாதாரம் தன்னிடம் இருப்பினும் அவர்கள் அதில் கவனம் செலுத்துவதில்லை. ஆனால் மத்திய கிழக்கு நாடுகள் (அரபு பிரதேசங்கள்) மற்றும் மேலை நாடுகளில் இந்நிலையை உங்களால் பார்க்க முடியாது. அங்கெல்லாம் குறைந்தது வீட்டுக்கு ஒரு வாகனமாவது வேண்டும் என்பது சராசரியான தேவைக்குள் வந்து விட்டது. குறைந்த வருவாயைப் பெறுபவர்கள் கூட தவணை முறையில் பணத்தை செலுத்தும் ஒப்பந்த அடிப்படையில் வாகனத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள்.

பனி படர்ந்த, ஐஸ் உறைந்த நிலையில் உள்ள நாடுகளில் வாழும் மக்களுக்கு வாழ்க்கை வசதிக்கான தேவை என்பது மற்ற நாட்டு மக்களுடன் ஒப்பிடும்போது மிக குறைவு ஆடம்பரமான வீடுகள், ஆடம்பரமான வாகனங்கள் போன்றவற்றை யயல்லாம் அந்த மக்கள் நாடுவதில்லை. மனம் விரும்பினாலும் சூழ்நிலை அவற்றை எல்லாம் அனுபவிக்க தடையாக இருக்கின்றன.

அதேபோன்று கப்பல்களில் குடி இருக்கும் மக்களை எடுத்துக் கொள்வோம். (வாடகை கொடுத்து காலம் முழுவதும் கப்பலிலேயே தங்கி விடலாம் என்ற வசதிகள் இருக்கின்றன) இந்த மக்களின் தேவைகளும் குறைவு.

மக்களுக்கு மத்தியில் அவர்களுக்கான தேவைகளில் பெருத்த வேறுபாடு இருப்பதை இவற்றின் மூலம் விளங்கலாம்.

முஸ்லிமாக இருக்கும் நிலையில் நாகரீக வளர்ச்சியற்றுப் போன பகுதியில் வாழும் செல்வந்தர் கொடுக்க கடமைப்பட்ட ஜகாத் தொகையை விட அதே அளவு செல்வத்தைப் பெற்று நாகரீகம் வளர்ந்த இடங்களில் வாழும் முஸ்லிம்கள் அவரை விட குறைந்த அளவே ஜகாத் கொடுக்க வேண்டி வரும். காரணம் இவர்களுக்கு மத்தியில் உள்ள தேவைகளின் வித்தியாசங்களே.

எனவே முஸ்லிம்கள் தங்கள் தேவைகளுக்கு போக மீதமுள்ளதில் ஜகாத்தை கணக்கிட்டு கொடுத்தால் போதும். வாடகை வீட்டில் வசிக்கும் ஒருவர் சொந்த வீடு கட்டுவதற்காக நிலம் வாங்கி போடுகிறார் வீடு கட்டும் அளவு நிலமாக அது இருக்கும் பட்சத்தில் பல வருடங்களுக்கு அதில் வீடு கட்டப்படாவிட்டாலும் அந்த நிலத்திற்கு ஜகாத் கொடுக்கும் நிலை ஏற்படாது. ஏனெனில் அது அத்தியாவசிய தேவைக்குரியதாகும். வீடு கட்ட நிலத்தை தேர்ந்தெடுக்கலாம். ஆனால் அது அவரவரின் தேவைக்கேற்ற அளவில் இருத்தல் அவசியம் வீடு கட்டும் அளவுக்குள்ளதாக இருக்க வேண்டும். வியாபார நோக்கத்திற்காக வாங்கிய நிலத்தை வீட்டுக்காக என்று கூறுவது அவர் ஜகாத் கொடுப்பதில் மோசடி செய்கிறார் என்ற நிலைதான் அங்கு உருவாகும்.

நிபந்தனை மூன்று :

“தன் தேவைக்கு போக மீதமுள்ளதை என்பதில் தேவைகளை தீர்மானிப்பதை சம்பந்தப்பட்டவர்களிடம் இறைவன் வழங்கினாலும் எல்லா செல்வங்களுக்கும் இது பொருந்தாது. பல செல்வங்களுக்கு “தேவைக்குரிய’ உச்சவரம்பை இஸ்லாம் வரையறுத்துள்ளது. இந்த உச்சவரம்பு செல்வத்திலும், பொருளிலும் மாறுபட்டே நிற்கும். எனவே எந்த பொருளில், செல்வத்தில் இஸ்லாம் உச்சவரம்பை ஏற்படுத்தியுள்ளதோ அந்த உச்சவரம்பிற்கு உட்படாதவர்கள் மீது அந்த பொருளிலும், செல்வத்திலும் ஜகாத் கடமையாகாது.

இதை புரிந்து கொள்வதற்கு ஒரு நபி மொழியை குறிப்பிடலாம்.

5 ஒட்டகங்களை விட குறைவாக உள்ளதில் ஜகாத் இல்லை என்பது நபிமொழி,  (அபூ ஸயீத் அல் குத்ரீ(ரழி), புகாரி: 1484)

ஒட்டகத்திற்குரிய உச்சவரம்பு 5 ஆகும். ஒட்டகம் என்ற செல்வம் ஒருவரிடம் இருந்தாலும் 4 ஒட்டகங்கள் வரை அது ஜகாத்திற்குரிய செல்வமாக கருதப்படாது. 5 பூர்த்தியாகும் போதே அவற்றின் மீது ஜகாத் கடமையாகின்றது. 4 ஒட்டகங்களை வைத்திருக்கும் ஒருவர் “என் தேவைக்கு இரண்டு போதும்’ என்று கூறினாலும் கூட அவர் மீது ஜகாத்தை விதிக்க முடியாது விரும்பினால் அவர் மீதி ஒட்டகத்தை தர்மம் செய்து விட்டு போகலாம்.

ஜகாத் கடமையாவதற்குரிய நிபந்தனைகளில் மூன்றாவது அது உச்சவரம்பை அடைந்திருக்க வேண்டும் என்பதாகும். (எவற்றிற்கெல்லாம் உச்சவரம்பு உள்ளது எவ்வளவு ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற விபரங்கள் பின்னர் வரும் இன்ஷா அல்லாஹ்)     இன்ஷா அல்லாஹ் தொடரும்…

***********************************

அமல்களின் சிறப்புகள்…

தொடர் : 59

 1. அப்துல் ஹமீத்

ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் :

புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் (1154 பக்கங்கள்)

தலைப்பு :  திக்ரின் சிறப்புகள்

குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள்.

தமிழாக்கமும், வெளியிட்டோரும் :  பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல்.

பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த ஒரு பக்கத்திலும் இப்புத்தகம் எத்தனையாவது பதிப்பு என்பது குறிப்பிடப்படவில்லை.

இந்த இதழில் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டவை:

அமல்களின் சிறப்புகள் (அசி) புத்தகத்தின் பக்கம் 393ல்ஈமானின் பிரகாசம் சிந்திப்பதில் தான் இருக்கிறது என்ற கருத்தில் ஹதீஃத் என்ற பெயரில் தரப்பட்டிருந்த செய்திகளை சென்ற இதழில் ஆய்வு செய்து அவைகள் பொய் என்று நிரூபித்தோம். அதே கருத்தில் இன்னும் நிறைய எழுதப்பட்டிருக்கின்ற செய்திகளை இந்த ஜூன் இதழில் இப்போது ஆய்வு செய்வோம்.

அசி புத்தகத்தின் 394வது பக்கத்தில் எழுதப்பட்டுள்ளவை :

சிறிது நேரம் சிந்திப்பது இரவு முழுவதும் வணங்குவதை விடச் சிறந்தது என்பதாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள். அபூதர்தா, அனஸ்(ரழி) ஆகியோர் வாயிலாகவும், இக்கருத்து அறிவிக்கப்பட்டுள்ளது.

எமது ஆய்வு:

சிறிது நேரம் சிந்திப்பது இரவு முழுவதும் வணங்குவதை விடச் சிறந்தது என்பதாக இப்னு அப்பாஸ், அபூதர்தா, அனஸ் (ரழி) ஆகியோர் கூறுகிறார்களாம். இரவு முழுவதும் வணங்குவதை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தடை செய்திருக்கும்போது, இப்படிப்பட்ட மோசமான உதாரணத்தை இந்த மூன்று சஹாபாக்களும் சொல்லி இருக்க முடியாது என்பதுதான் சர்வ நிச்சயம். இது இந்த சஹாபாக்களின் மீது எமக்குள்ள நல்லெண்ணத்தின் அடிப்படையிலும், சதா பொய் பேசிக் கொண்டிருக்கும் அசி ஆசிரியர் மீது எமக்குள்ள அவநம்பிக்கையின் அடிப்படையிலும் எழப்பட்ட கருத்தாகும். எனவே, இப்படிப்பட்ட ஹதீஃதுகள் இருக்கின்றனவா என ஆய்வு செய்ய வேண்டியது எம் பொறுப்பாகும். எனவே எமது ஆய்வை மேற்கொண்டோம். வழக்கம் போல ஹதீஃத் நூலின் பெயர் குறிப்பிடப்படாததால், அவசியத்தை மனதில் கொண்டு அறிவிப்பாளர்களின் பெயர்களை வைத்து ஹதீஃதுகளைத் தேடி எடுத்தோம். வழக்கமான ரிசல்ட்தான் இந்த தடவையும் கிடைத்தது. “சிறிது நேரம் சிந்திப்பது இரவு முழுவதும் வணங்குவதை விடச் சிறந்தது” என்ற ஹதீஃத் மேற்கூறப்பட்ட மூன்று அறிவிப்பாளர்களாலும் அறிவிக்கப்படவே இல்லை.

அசி ஆசிரியர் இப்புத்தகத்தை எழுதிய காலகட்டத்தில், அறிவிப்பாளர் பெயரை வைத்து குறிப்பிட்ட பொருள் கொண்ட ஹதீஃதுகளைத் தேடி எடுப்பது என்பது நினைத்துப் பார்க்க முடியாத செயலாக இருந்தது. எனவே அசி ஆசிரியர் தாம் பிடிபட மாட்டோம் என்ற குருட்டு தைரியத்தில் மனதில் நினைத்ததை எல்லாம் மலை போல எழுதிக் குவித்து, அவற்றை ஹதீஃதுகள் என்று பொய் கூறி, அத்தனையையும் தலையணை சைஸ் புத்தகத்திற்குள் பகுதி பகுதியாகப் பிரித்து தஞ்சம் புகச் செய்து, மார்க்கத்தில் தாம் பெரிய அறிவாளி என்று பெயர் எடுத்து போற்றி புகழப்பட்டு வருகிறார். எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த உலகிலே?

அன்று அவர் எழுதிய அத்தனை பொய்களையும் ஆண்டிராய்டு மொபைல் போன் மூலமாக இன்று வார்த்தைக்கு வார்த்தை அக்குவேறு ஆணிவேறாக பிரித்தெடுத்து உண்மை எது? பொய் எது? என்பதை சில நிமிடங்களில் தெரிந்து கொள்ள முடியும் என்றாகி விட்ட இன்றைய கால கட்டத்தில் அந்த மனிதர் வசமாக மாட்டிக் கொண்டு, இன்று அவர் பொய்யர் ஆகிவிட்டார். எதில் பொய் சொல்வது? அல்லாஹ்வின் மார்க்கத்திலா? இறைவனின் கடுமையான எச்சரிக்கைகளையும், அதன் பின் விளைவுகளையும் நன்றாக அறிந்து கொண்டே இப்படிச் செய்ய முடிந்தது என்றால் நினைத்துப் பார்க்கவே உள்ளம் நடுங்குகிறதல்லவா? அவருக்கு நடுங்கவில்லை என்றால், அது எவ்வளவு பெரிய நெஞ்சழுத்தம்! எவ்வளவு பெரிய அகம்பாவம்! எவ்வளவு பெரிய ஆணவம்! எவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தை இஸ்லாம் காட்டித் தராத தவறான பாதையில் வழிநடத்தி விட்டார்.

அசி  புத்தகத்தின்  394வது  பக்கத்திலுள்ள   அடுத்த   2 செய்திகள் :

சிறிது நேரம் அல்லாஹ்வின் படைப்பினங்களைப் பற்றி சிந்திப்பது 80 ஆண்டுகளின் (நபிலான) வணக்கங்களை விடச் சிறந்தது என்பதாகவும், அனஸ்(ரழி) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிது நேரம் சிந்தனை செய்வது 60 ஆண்டுகளின் (நபிலான) வணக்கங்களை விடச் சிறந்தது என்று ரசூல்(ஸல்) அவர்கள் அருளியதாக, அபூஹுரைரா(ரழி), அவர்கள் அறிவிக்கிறார்கள்.

எமது ஆய்வு :

அபூஹுரைரா(ரழி) அறிவித்த ஹதீஃதில் 60 ஆண்டுகள் என்கிறார். அனஸ்(ரழி) அவர்கள் அறிவித்த ஹதீஃதில் 80 ஆண்டுகள் என்கிறார். இந்த இரண்டு ஹதீஃதுகளும், ஹதீஃதுகளாகப் பதியப்பட்டிருந்தால், ஏதே னும் ஒன்றுதான் ஸஹீஹானதாக அறியப்படும். இதன்மூலம் அசி ஆசிரியர், நபித்தோழர் ஒருவரைப் பொய்யராக்கி இன்பம் காண்கிறார். இரண்டு ஹதீஃதுகளும் அசி ஆசிரியரின் கப்ஸா ஹதீஃதுகளாக அதாவது அவரின் கற்பனை செய்தியாக இருக்குமேயானால், அறிவிப்பாளர்களாகக் காட்டப்பட்டிருக்கும் இரண்டு நபித்தோழர்களையும் அசி ஆசிரியர் பொய்யர்களாக்கிக் காட்டுகிறார். அது மட்டுமா? இறைத்தூதர்(ஸல்) அவர்களை இரண்டு விதமாக பேசுபவராக சித்தரித்து இருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. இதன் மூலம், தமது கற்பனையில் இந்த இரு ஸஹாபாக்களை நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக செயல்பட வைத்து இன்பம் காண்கிறார் அசி ஆசிரியர். இஸ்லாத்தைக் கெடுப்பதில் எவ்வளவு பெரிய பேரானந்தம் இவருக்கு!

இந்த 2 ஹதீஃதுகளின் மீது எமது ஆய்வை மேற்கொண்டோம். வழக்கம் போல ஹதீஃத் நூலின் பெயர் குறிப்பிடப்படவில்லை. எனவே அறிவிப்பாளர்களின் பெயர்களை வைத்து ஹதீஃதுகளைத் தேடியதில், வழக்கமான ரிசல்ட் தான் இந்த தடவையும் கிடைத்தது. “சிறிது நேரம் சிந்திப்பது 60/80 ஆண்டுகள் வணங்குவதை விடச் சிறந்தது’ என்ற ஹதீஃத் மேற்கூறப்பட்ட அறிவிப்பாளர்களால் அறிவிக்கப்படவில்லை. அதே நேரத்தில் அவர்கள் அறிவித்த ஹதீஃதுகள் அசி புத்தகம் கூறும் கருத்தைப் பற்றிக் கூறவே இல்லை. இறுதியில் காண்பித்துள்ளோம்.

அசி புத்தகத்தின் 394வது பக்கத்திலுள்ள அடுத்த செய்தி :

அபூதர்தா(ரழி) அவர்களுடைய வணக்கங்களில் சிறந்த வணக்கம் எது? என்பதாக அன்னாரின் மனைவி உம்மு தர்தா(ரழி) அவர்களிடம் கேட்கப்பட்டபோது “சிந்தனை செய்வது” என பதிலளித்தார்கள்.

எமது ஆய்வு :

சொல்லப்பட்டதை கவனித்தீர்களா? இதைப் படித்தவுடன் ஹதீஃதுகளுடன் ஓரளவேணும் தொடர்புடைய ஒருவர், தம் மனதில் உடனடியாக என்ன நினைத்திருக்க முடியும்? அல்லாஹ்வின் தூதரின் செயல்பாடுகளை அறிந்து கொள்ள விரும்பிய சஹாபாக்கள் என்ன செய்தார்கள்? நபி (ஸல்) அவர்களின் துணைவியாரும், முஃமின்களின் தாயுமான அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடம் அதிகம் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள் அல்லவா? அதுபோல ஒரு வியூகத்தை அமைத்து நபித்தோழர்களுக்கு முக்கியத்துவம் தர முயற்சிக்கிறார் அசி ஆசிரியர். இதனால் என்ன என்று வினா எழுப்புகிறீர்களா? அசி ஆசிரியரின் கொள்கையை இத்துடன் தொடர்புபடுத்திப் பாருங்கள். உண்மை தெரியவரும், ஸஹாபாக்களின் முன்மாதிரியை பின்பற்றும்படி அல்லாஹ் கட்டளையிட்டிருக்காதபோது, அபதர்தாவிடம் முன்மாதிரியை ஏன் அசி ஆசிரியர் தேட முனைகிறார்? அதுபோன்ற ஒரு முன்மாதிரியை நபிக்கு பதிலாக ஸஹா பிக்குக் கொடுத்து நபியின் முக்கியத்துவத்தை குறைத்து விட முனையும் ஈனச் செயல் அல்லவா இது? இதுதானே இவரது மாஸ்டர் ப்ளான்! பாவம்! அது யாராலும் முடியக்கூடிய காரியம் அல்ல. ஏனெனில், “நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்” என்று அல்லாஹ் குர்ஆன் 94:4 வசனத்தில் கூறியுள்ளான்.

இப்படிப்பட்ட பொய்களை அதாவது அல்லாஹ்வின் தூதரை விட ஸஹாபாக்களை உயர்த்துவதால், ஸஹாபாக்கள் குர்ஆனைப் பின்பற்றமாட்டார்கள் என்ற தவறான எண்ணத்தை மக்கள் மனதில் அசி ஆசிரியர் விதைக்க முயல்கிறார் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. அதாவது, அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது என்று அல்குர்ஆன் கூறும் 33:21வது வசனத்தை அசி ஆசிரியர் நிராகரிப்பதில் குறியாக இருக்கிறார் என்பதும் புலப்படுகிறது. எனவே, அசி ஆசிரியர் அறிமுகப்படுத்தும்  “சிறுது நேர சிந்தனை” குர்ஆனுக்கும், ஹதீஃதிற்கும் எதிரான சிந்தனைகள் ஆகும்.

சரி, சிந்திப்பதைப் பற்றி குர்ஆன் என்ன கூறுகிறது என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.

நெருப்புடன் கூடிய சூறாவளிக் காற்று ஒருவரின் தோட்டத்தை எரித்து விடுவதை யாராவது விரும்புவாரா? இதுபோன்ற அல்லாஹ்வின் அத்தாட்சியிலிருந்து படிப்பினைப் பெற சிந்தனை செய்யும்படி அல்லாஹ் கட்டளை இடுகிறான். (அல்குர்ஆன் 2:266) அல்லாஹ்வின் நேரான வழியான குர்ஆன் வசனங்களின் மீது சிந்தனை செய்ய சொல்கிறான் (6:126). இரவையும், பகலையும் அல்லாஹ் மாறி மாறி வரச் செய்வதில் சிந்திக்கும்போது படிப்பினை கிடைக்கும் என்பதை 24:44 இறை வசனம் தெரிவிக்கிறது.

சுருங்கக் கூறின், மனிதன் தன்னுடைய சிந்தனையை நேரிய வழியின் மீது செலுத்துமாறு அல்லாஹ் கட்டளை இட்டிருக்கிறான். ஆனால், அசி ஆசிரியரோ அல்லாஹ், மற்றும் அல்லாஹ்வின் அடியாராகிய தூதரின் கட்டளைகளுக்கு மாற்றமாக அவர்கள் சொல்லியே இருக்காத விஷயங்களை சொன்ன விஷயங்களாக ஹதீத் என்ற பெயரில் காண்பித்து அவைகளின் மீது சிந்தனை செய்யும்படி தூண்டுகிறார்.

அடுத்தபடியாக அசி ஆசிரியர் கூறிய ஹதீஃதுகளில், இப்னு அப்பாஸ், அபூதர்தா, அனஸ், அபூஹுரைரா(ரழி) ஆகிய நபித் தோழர்கள் அறிவித்தவை ஆதாரப்பூர்வ மானவையா என்பதை அந்தந்த ஹதீஃதுகளை ஆராய்ந்து தெரிந்து கொள்ள 14 ஹதீது நூல்களில் யாம் முயற்சி செய்ததில், வருந்தக்கூடிய விஷயம் யாதெனில், மேறபடி நபித்தோழர்கள் யாரும் அசி ஆசிரியர் கூறியவாறு, எந்த ஒரு ஹதீஃதிலும் தெரிவிக்கவே இல்லை. சிந்தனை சம்பந்தமாக அந்த சஹாபாக்கள் கூறிய ஹதீஃதுகளில் மாதிரிக்காக சிலதை வாசகர்களின் கவனத்திற்கு தருகிறோம்.  புஹாரி, அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரழி) எண். 4646

முஜாஹித் இப்னு ஜப்ர்(ரஹ்) அறிவித்தார்: “நிச்சயமாக சிந்தித்துணராத செவிடர்களும், ஊமையர்களும் தாம் அல்லாஹ்விடத்தில் மிகவும் இழிவான விலங்குங்கள் ஆவார்”.

இந்த இறை வசனம் குறித்து இப்னு அப்பாஸ்(ரழி) கூறுகையில் “பனூ அப்தித்தார் குலத்தை சார்ந்த சிலர் தாம் அவர்கள்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஃதில் இப்னு அப்பாஸ்(ரழி), அவர்கள் குர்ஆனுக்கு அழகான விளக்கத்தைத் தருகிறார். ஆனால் அசி ஆசிரியர், இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களின் பெயரை பொய்யான ஹதீஃதை அறிவிக்க பயன்படுத்துகிறார் எவ்வளவு பெரிய மோசடி இது.  புகாரி, அறிவிப்பாளர் : அனஸ்(ரழி), ஹதீஃத் எண். 5879

நபி(ஸல்) அவர்களின் மோதிரம் கரத்திலேயே இருந்தது. அவர்களுக்குப் பின் அபூபக்ர்(ரழி) அவர்களின் கரத்தில் இருந்தது. அபூ பக்ர்(ரழி) அவர்களுக்குப் பின் உமர் (ரழி) அவர்களின் கரத்தில் இருந்து, உஸ்மான்(ரழி) அவர்களின் ஆட்சிக் காலம் வந்தபோது, அவர்கள் அரீஸ் எனும் கிணற்றின் மீது அமர்ந்திருந்தபோது தம்மை அறியாமல் (ஏதோ சிந்தனையில்) மோதிரத்தைக் கழற்றுவதும் அணிவதுமாக இருந்தார்கள். அப்போது அது (கிணற்றுக்குள்) விழுந்து விட்டது. உஸ்மான் (ரழி) அவர்களுடன் நாங்கள் மூன்று நாட்கள் (கிணற்றுக்குள்) போய் வந்து கொண்டிருந்தோம். பிறகு கிணற்று நீரை இறைத்துப் பார்த்தார்கள். அப்போதும் அது எங்களுக்குக் கிடைக்கவில்லை.

இந்த ஹதீஃதில் அனஸ்(ரழி) அவர்கள், உஸ்மான்(ரழி) அவர்களின் சிந்தனையை விளக்குகிறார். ஆனால் அசி ஆசிரியர், அனஸ்(ரழி) அவர்களின் பெயரை பொய்யான ஹதீஃதை அறிவிக்க பயன்படுத்துகிறார். எவ்வளவு பெரிய மோசடி இது!

ஷமாயில் முஹம்மதிய்யா, அறிவிப்பாளர்: அனஸ்(ரழி), எண். 368

ரசூல்(ஸல்) அவர்கள், கடைசியாக நோய்வாய்ப்பட்டிருந்தபோது ஒரு திங்கட்கிழமை காலையில் அவர்களது வீட்டின் திரையை உயர்த்தி (தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் அவர்களது உம்மத்தினரை ஒரு பார்வை பார்த்த போது தான்) கடைசியாக நான் அவர்களைப் பார்த்தேன். அந்த நேரத்தில் அவர்களின் முபாராக்கான முகம் புனிதக் குர்ஆனின் பக்கத்தைப் போல தெளிவாகவும், பிரகாசமாக வும் இருந்தது. அந்த நேரத்தில் மக்கள் அபூபக்ர்(ரழி) அவர்களுக்குப் பின்னால் தொழுது கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்த மகிழ்ச்சியில் தங்களுடன் அவர்கள் தொழுகையில் சேர்ந்து கொள்வார்கள் என்று மக்கள் நினைத்து பின்னால் நகர ஆரம்பித்தார்கள். (இதற்கு முன்பு ஒரு முறை நோயுற்றபோது கூட அபூபக்ர்(ரழி) தொழுகை நடத்தி வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் குணமடைந்து கொண்டிருந்த தருணத்தில், ஜமாஅத் தொழுகையில் வந்து சேர்ந்து கொண்டார்கள்). இப்போதோ! ரசூல்(ஸல்) அவர்கள், அவரவர் இருப்பிடத்தில் இருக்குமாறு மக்களுக்கு சைகை செய்தார்கள். அதே நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள்.

இந்த ஹதீஃதில், நபி(ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு சற்று முன்பு, அபூபக்ர்(ரழி) பின்னால் ஜமாஅத்தாக தொழுது கொண்டிருந்த தமது உம்மத்தினரைக் கண்டு மகிழ்ந்ததை அனஸ்(ரழி) அவர்கள் தமது சிந்தையில் ஏற்றி இந்த ஹதீஃதில் அறிவிக்கிறார். ஆனால் அசி ஆசிரியர், அனஸ்(ரழி) அவர்களின் பெயரை பொய்யான ஹதீஃதை அறிவிக்க பயன்படுத்துகிறார். எவ்வளவு பெரிய மோசடி இது. முஸ்லிம்: அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரழி) எண். 214

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவரிடம் ஷைத்தான் வந்து, “இன்னின்னவற்றைப் படைத்தவர் யார்?” என்று கேட்டுக் கொண்டே வந்து இறுதியில் அவரிடம், “உன் இறைவனைப் படைத்தவர் யார்?” என்று கேட்பான். இந்தக் கட்டத்தை அவன் எட்டும்போது, அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோரட்டும். (இத்தகைய சிந்தனையிலிருந்து) அவர் விலகிக் கொள்ளட்டும்.

ஈமானை இழக்கச் செய்யும் ஷைத்தானிய சிந்தனையிலிருந்து விலகி இருக்கும்படி நபி(ஸல்) அவர்கள் போதித்ததை தமது சிந்தையில் ஏற்றி மக்களுக்கு அறிவிக்கிறார், அபூஹுரைரா(ரழி)! ஆனால் அசி ஆசிரியர், அபூஹுரைரா(ரழி) அவர்களின் பெயரை பொய்யான ஹதீஃதை அறிவிக்க பயன்படுத்துகிறார். எவ்வளவு பெரிய மோசடி இது!   புகாரி : அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரழி) எண். 6477

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடியார் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் (சிந்திக்காமல்) ஒன்றைப் பேசி விடுகிறார். அதன் காரணமாக அவர் (இரு) கீழ் திசைகளுக்கு இடையே உள்ள தொலைவை விட அதிகமான தூரத்தில் நரகத்தில் விழுகிறார்.

யோசித்து பேசுமாறு நபி(ஸல்) அவர்கள் போதித்ததை இந்த ஹதீஃதில் மக்களுக்கு அறிவிக்கிறார் அபூஹுரைரா(ரழி). ஆனால் அசி ஆசிரியர், அபூஹுரைரா(ரழி) அவர்களின் பெயரை பொய்யான ஹதீஃதை அறிவிக்க பயன்படுத்துகிறார். எவ்வளவு பெரிய மோசடி இது!

இப்னு மாஜா, அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரழி), எண். 791 (ஆங்கிலம்)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “தொழுகைக்கு பாங்கு சொல்ல கட்டளையிட்டு விட்டு, பிறகு ஒரு வரை தொழ வைக்க சொல்லிவிட்டு, பிறகு நான் சில மனிதர்களுடன் விறகு கட்டுகளை சுமந்துகொண்டு சென்று, தொழுகைக்கு வராதவர்களின் வீடுகளை எரித்து விட எண்ணினேன்.”

ஜமாஅத் தொழுகையின் முக்கியத்து வத்தை நபி(ஸல்) அவர்களிடமிருந்து தான் கற்றதை இந்த ஹதீஃதில் மக்களுக்கு அறிவிக்கிறார் அபூஹுரைரா(ரழி). ஆனால் அசி ஆசிரியர், அபூஹுரைரா(ரழி) அவர்களின் பெயரை பொய்யான ஹதீஃதை அறிவிக்க பயன்படுத்துகிறார். எவ்வளவு பெரிய மோசடி இது!

(சிந்தித்தல் பற்றி ஸஹீஹான ஹதீஃதுகள் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்களுக்காக, சில ஹதீஃதுகளைத் தருகிறோம். படித்து தெரிந்து கொள்ளுங்கள்).

புகாரி : 3221, இப்னு ´ஹாப்(ரஹ்) முடிந்த விசயத்தை ஞாபகப்படுத்துதல் பற்றி.

புகாரி : ஹுதைஃபா(ரழி), சுவர்க்கம் செல்ல நல்ல அமல்கள் பற்றி.

புகாரி: 3700, அம்ர் இப்னு மைமூன், நிலவரி & உஸ்மான் கலீபாவாக ஆனது பற்றி.

முஸ்லிம்: 4609, ஸவ்ஃபான்(ரழி) ஹவ்லுல் கவ்ஸர் பற்றி.

புகாரி:4807, இப்னு அப்பாஸ்(ரழி), 38:45, அல்லாஹ் வி­யத்தில் சிந்தனை செய்தது பற்றி.

புகாரி : 4948, 4949, அலீ(ரழி), நபி(ஸல்) அவர்கள் சிந்தனை செய்தது பற்றி.

மாலிக் முஅத்தா : அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரழி) எண். 6 (ஆங்கிலம்)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். தொழுகைக்கு அழைப்பு விடுக்கும்போது, ஷைத்தான் அதானை கேட்காமல் காற்று பிரிந்தவனாக பின் வாங்கி ஓடுகிறான். அதான் சொல்லி முடித்தவுடன், அவன் திரும்ப வந்து தொழுது கொண்டிருக்கும் மனிதரிடம், எதுவரை தொழுதோம் என்பதை அவர் அறியாமல் போகும் வரை, இதற்கு முன்பு அவர் நினைக்காதவற்றை எல்லாம், “இதை நினை. அதை நினை” என்று கூறியவாறு, அவரிடம் நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறான்.

இந்த ஹதீஃதில், ஷைத்தானின் ஏமாற்று வலையில் சிக்கிக் கொண்டு சிந்தனையை சிதறவிடாமல் தொழுகையில் கவனம் செலுத்த நபி(ஸல்) அவர்கள் உபதேசித்த போதனையை நினைவிற் கொண்டு மக்களுக்கு அறிவித்தார், அபூஹுரைரா(ரழி) அவர்கள். ஆனால் அசி ஆசிரியர், அபூ ஹுçரா(ரழி) அவர்களின் பெயரை பொய்யான ஹதீஃதை அறிவிக்க பயன்படுத்துகிறார் எவ்வளவு பெரிய மோசடி இது!

ஆக, அசி ஆசிரியர் தெரிவித்த அத்தனையும் அபத்தங்கள் என்று படிக்கும் போதே தெரிந்து விடுகிறது. ஆகவே, இப்புத்தகத்தை ஆய்வு செய்வதில் எமது நேரத்தை செலவழிக்க வேண்டுமா என்ற எண்ணம் எமக்கு ஏற்படுவது உண்டு. அவர்களின் பெரியார்கள் எதைச் சொன்னாலும் அமல் செய்து கொண்டிருக்கும் எமது தப்லீக் ஜமாஅத் சகோதரர்களைப் பற்றி நினைத்துப் பார்க்கிறோம். அல்ஹம்துலில்லாஹ். அவர்களுக்காக எழுதுகிறோம். ஏனென்றால், அந்த சகோதரர்கள் –

தஃலீம் புத்தகத்தின் போதனையால், இறைவனுக்கு சூஃபிச வர்ணனைக் கொடுத்து இஸ்லாம் அல்லாத சூஃபிகளைப் பின்பற்றுகிறார்கள். சூஃபிகள் ஞானிகளாம்!

இறைவனால் இறக்கி அருளப்பட்ட குர்ஆனின் போதனைகளைப் புறக்கணித்து, சொற்ப கிரயத்துக்காக எழுதப்பட்ட தஃலீம் புத்தகங்களின் போதனைகளைப் பின்பற்றுகிறார்கள்.

இறைத்தூதரைப் புறக்கணித்து, அவுலியாக்கள் என்ற பெயரில் மரித்துப் போனவர் களையும், பெரியார்கள் எனக் கூறி வாழ்ந்து கொண்டிருப்பவர்களையும் பின்பற்றுகிறார்கள்.

ஹதீஃதுகளைப் புறக்கணித்து சஹாபாக்களின் பெயராலும், கற்பனை பெரியார்களின் பெயராலும் கப்ஸாக் கதைகளை ஏற்படுத்தி அவைகளை ஹதீஃதுகள் என்று பொய் சொல்லி பின்பற்றுகிறார்கள்.

இவைகளை விடவும் ஆகப் பரிதாபம். இவற்றை எல்லாம் நேர்வழி என்று நம்பி இதன் மூலம் சுவர்க்கம் சென்று விடலாம் என்று அப்பாவித்தனமாக நினைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் எனதருமை தப்லீக் சகோதரர்களை நினைவிற் கொள்கிறோம்.

அவர்களில் எவருக்கேனும் ஒருவருக்காவது ஹிதாயத் எனும் நேர்வழி அல்லாஹ் விடமிருந்து கிடைக்கும் என்ற ஆசையில் அசி புத்தகக் குப்பையைக் கிளறி, ஆய்வு செய்து, அது இஸ்லாத்திற்கு எதிரானது என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறோம். அல்லாஹ் நாடினால் குறைந்தபட்ச எம் முயற்சிக்கு அதிகபட்ச கூலி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எம் முயற்சியை அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு தொடருகிறோம்.

“ஆகவே, நீர் நல்லுபதேசம் செய்வீராக. நிச்சயமாக நீர் நல்லுபதேசம் செய்பவர்தாம்” (88:21) அவர்கள் மீது பொறுப்புச் சாட்டப்பட்டவர் அல்ல (88:22) என்று அல்லாஹு சுப்ஹானஹு வத ஆலா தமது தூதருக்கு கட்டளை இட்டிருப்பது உம்மத்துக்கும் தானே. ஆதாரம் வேண்டுமா? “எவர் அல்லாஹ்வின் பக்கம் அழைத்து, சாலிஹான அமல்கள் செய்து, நிச்சயமாக நான் முஸ்லிம்களில் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரை விட சொல்லால் அழகியவர் யார்?”  (41:33)

எனவே, இந்த இறை வசனத்தின் அடிப்படையில் எமது பணியைத் தொடருகிறோம்.

குர்ஆனுக்கும், ஹதீஃதுகளுக்கும் எதிராக எழுத வேண்டிய பொய்களை எழுதி விட்டு அத்தனை பொய்களையும் உண்மை என்று மக்களை நம்ப வைக்க அதே 394வது பக்கத்தில் அசி ஆசிரியர் நல்ல பிள்ளை வேஷம் போடுவதை படித்து பாருங்கள்.

மேற் கூறப்பட்ட அறிவிப்புகளுக்கு வணக்கங்கள் தேவையில்லை என்பது கருத்தல்ல. பர்ளு, வாஜிப், சுன்னத், முஸ்தஹப்பு என்று ஒவ்வொரு வணக்கமும் அவற்றை செய்வதினால், எந்த அளவு நன்மைகள் கிடைக்குமோ அதே அளவு அவற்றை விட்டு விடுவதினால் ஒவ்வொன்றிற்குரிய தரஜாவின்படி தண்டனைகளும் உண்டு என்பதை உணர வேண்டும்.

வேட்டு வைத்துவிட்டார்! வணக்கங்கள் மூலம் பிராயச்சித்தம் தேடச் சொல்கிறார் பக்தகோடிகளிடம்! ஆஹா! உம்முடைய மார்க்கம் புல்லரிக்குதைய்யா!

இன்ஷா அல்லாஹ். இனியும் வரும்…

***********************************

பொதுவான வேதனை வரும்போது நல்லவர்களையும் சேர்த்தே அது பாதிக்கும்

எஸ்.எம்.அமீர், நிந்தாவூர்,  இலங்கை.

மே மாத தொடர்ச்சி

மற்றுமொரு உண்மைச் சம்பவம்.

வானத்திலிருந்து பாலை விட அதிக வெண்மையானதாகவும் தேனை விட அதிக இனிப்பாகவும் நீருடன் கலந்தால் தரமான குளிர் பானமாகவும் வேறு பொருளுடன் சேர்த்தால் புதிய வகையில் கண்ணுக்கு நிவா ரண உணவாகவுமுள்ள “மன்னு” எனும் சிறப்பு உணவும், சிவப்பு நிறச் சாயலுள்ள காடையைப் போன்ற, ஒரு வகைப் பறவை யின் இறைச்சியைப் போன்ற “ஸல்வா” எனும் அதி அற்புத உணவு அவரவர்களின் இருப்பிடங்களிலேயே பனிப் பொழிவைப் போன்று இறக்கி கொடுக்கப்பட்ட சந்தர்ப் பத்தில், அன்றைக்குத் தேவையான அளவுக்கு மாத்திரமே அந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்த நாளைக்கும் சேர்த்து எடுத்து வைக்கக் கூடாது என் பது இறைக் கட்டளையாகும். ஆனாலும் அதை அவர்கள் மீறி அடுத்த நாளுக்கும் சேர்த்தெடுத்து சேமித்து வைக்களானார்கள் அவ்வாறு மேலதிகமாகச் சேமித்த இறைச்சி கெட்டுப் போய்த் துர்நாற்றமடிக்கும். (2:57-61, 5:21-26, 10:93, 20:80, சயீத்பின் ஸைத் (ரழி), புகாரி: 4478, 4639, 5708, திர்மிதி, இப்னு அப்பாஸ்(ரழி), கத்தாதா(ரஹ்), சுத்தீ (ரஹ்), அப்துர் ரஹ்மான்பின் அஸ்லம்(ரஹ்), தஃப்ஸீர் இப்னு கஸீர் 1:216-219) “இதனையே, பனூ இஸ்ராயீல் குலத்தார்களான யூதர்கள் மட்டும் அவ்வாறு செய்யாமலிருந் திருப்பின் இறைச்சி இன்றளவும் துர்நாற்ற மடித்திருக்காது.” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூ ஹுரைரா (ரழி), புகாரி: 3330, 3399, உம்ததுல் காரி இர்ஷாதுஸ் ஸாரீ,) இஸ்ரவேலர்களான அவர்களில் ஒருசிலர் செய்த தவறின் விளைவை இன்றுவரைக்கும் நாமும் அனுபவித்து வருகின்றோமே.

வேதனைகள், சோதனைகள், குறித்த மேலதிக நபிமொழிகளின் சான்றுகள்:

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் தனிப்பட்ட சிலர் செய்யும் தீய செயலின் காரணமாகப் பொதுமக்கள் அனைவரையும் வேதனை செய்யமாடடான். அந்தப் பொதுமக்கள் தமக்கிடையே நடைபெறும் தீமையைப் பார்த்து அதற்கு மறுப்புத் தெரிவிக்கச் சக்தியிருந்தும் மறுப்புத் தெரிவிக்காமல் இருந்தால் தவிர. அவ்வாறு மறுப்புத் தெரிவிக்காமல் இருந்தால்தான் தீமை புரிந்த அந்தச் சிலரையும் அவர்களுடன் இருந்துகொண்டு அவற்றைத் தடுக்காமல் இருந்த அந்தப் பொதுமக்களையும் அல்லாஹ் வேதனை செய்வான்” என்றார்கள். (அதீபின் அமீரா(ரழி), முஸ்னது அஹ் மத், இப்னு கஸீர்: 4:65, 4ம்பாகத்தில் பக்கம் 65)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது உயிர் எவன் கையில் உள்ளதோ அந்த இறைவன் மீது சத்தியமாக! நீங்கள் அவசியமாக நன்மையை ஏவி, தீமையைத் தடுங்கள். அவ்வாறு இல்லை யாயின் உங்கள் மீது அல்லாஹ் தன்னிடமிருந்து தண்டனையை அனுப்பக்கூடும். அதற்குப் பிறகு நீங்கள் அவனிடம் பிரார்த்தனை செய்வீர்கள். ஆனால் உங்கள் பிரார்ததனைகளை அவன் ஏற்கமாட்டான் என் றார்கள். (ஹுதைபா பின் அல்யமான்(ரழி), திர்மிதி, முஸ்னது அஹ்மத், இப்னு கஸீர்:4:65, 4ம் பாகம், பக்கம் 65)

ஹுதைஃபா பின் அல்யமான்(ரழி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களது காலத்தில் ஒருவர் தவறான வார்த்தை ஒன்றைப் பேசினால் கூட அவர் நயவஞ்சகராக மாறும் நிலை இருந்தது. ஆனால் இப்போதோ நான் உங்களிடமிருந்து ஒரே அமர்வில் அதைப் போன்ற வார்த்தைகளை நான்கு முறை செவியுற்றுவிடுகிறேன். எனவே நீங்கள் அவசியமாக நன்மையை ஏவி தீமையைத் தடுங் கள், மக்களை நல்லறம் புரியுமாறு அவசியமாகத் தூண்டுங்கள். அவ்வாறு செய்ய வில்லையாயின், உங்கள் அனைவரையும் அல்லாஹ் வேதனை மூலம் அழித்துவிடுவான். அல்லது உங்களில் மிகவும் மோசமனவர்களை உங்களுக்கு ஆட்சியாளர்களாக ஆக்கிவிடுவான். பின்னர் உங்களில் நல்லவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிவார்கள். ஆனால் அவர்களின் பிரார்த்தனை ஏற்கப்படமாட்டாது என்றார்கள். (முஸ்னது அஹ்மத், இப்னு கஸீர்: 4:66)

கப்பல் பயணிகளில் சிறந்த உதாரணம் :

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள சட்ட வரையறைகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும் அவற்றை மீறி நடப்பவனுக்கும் அல்லது அவற்றை விட்டுக் கொடுப்போரின் உவமையானது கப்பலில் பிரயாணம் செய்த ஒரு சமுதாயத்தைப் போன்றதாகும். அவர்கள் கப்பலில் தங்களுக்கு இடம் பிடிப்பதற் காகச் சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அதன்படி அவர்களில் சிலருக்கு அக்கப்பலில் ஆபத்துக்கள் நிறைந்த மோசமான கீழ்த் தளமும் சிலருக்கு மேல்தளமும் கிடைத்தது. கீழ்த்தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டபோது அதைக் கொண்டுவர அவர்கள் மேல் தளத்தில் இருப்பவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது.

அதனால் மேலே இருந்தவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது. அப்போது, கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் (தமக்குள்) நாம் (தண்ணீருக்காக) நம்முடைய பங்கில் (கீழ்த் தளத்தில்) ஓட்டையிட்டுக் கொள்வோம். நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யமலிருப்போம் என்று பேசிக் கொண்டார்கள். அவர்கள் விரும்பியபடி செய்து கொள்ள அவர்களை மேல் தளத்தில் உள்ளவர்கள் விட்டுவிட்டால் (கப்பலில் இருப்பவர்கள்) அனைவரும் அழிந்து போவார்கள். (ஓட்டையிட விடாமல்) அவர்களின் கரத்தைப் பிடித்துக் கொள்வார்களாயின் அவர்களும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். (அவர்களுடன் மற்ற) அனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள்.” (நுஃமான் இப்னு புஸ்ர்(ரழி), புகாரி: 2493,2686, திர்மிதி, முஸ்னது அஹ்மத், இப்னு கஸீர் 4:66)

மிகத் திறமையான அம்பெய்வதில் நன்கு தேர்ச்சிபெற்ற ஐம்பது படைவீரர் களைத் தேர்ந்தெடுத்த நபி(ஸல்) அவர்கள் அப்படைக்கு, பத்ரில் கலந்து கொண்ட அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரழி) அவர்களை தலைவராக நியமித்து,

உஹத் மலையின் “கனாத்’ என்ற பள்ளத்தாக்கின் வடக்குப் பக்கம் அமைந்துள்ள மலையில் நிலையாகத் தங்கி முஸ்லிம்களின் படையணியைப் பாதுகாக்க வேண்டும். மேலும்,

v எதிரிகளின் குதிரைப் படை எங்களை நெருங்கவிடாமல் தொடராக அம்பெய்து அவர்களை நீங்கள் தடுக்க வேண்டும்.

v எதிரிகள் எங்களுக்குப் பின்புறத்திலிருந்து வந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

v போர் நமக்கு சாதகமாக அல்லது பாதகமாக அமைந்தாலும் நீர் உமது இடத்தில் நிலையாக இருக்க வேண்டும்.

v உமது வழியாக எதிரிகள் வந்து எங்களைத் தாக்கிவிடக்கூடாது.

v குறிப்பாக நீங்கள் எங்களின் முதுகுப் பக்கமாகவுள்ள பின்பகுதிப் பிரதேசத்தைப் பாதுகாக்க வேண்டும்.

v நாங்கள் போரில் வெற்றி பெற்று கனீமத் பொருட்களைச் சேகரிப்பதைப் பார்த்தாலும் அதிலும் நீங்கள் இறங்கி வந்து எங்களுடன் சேரக்கூடாது.

v நாங்கள் எதிரிகளைத் தோற்கடித்து அவர்களின் சடலங்கள் மிதித்துச் செல்வதைப் பார்த்தாலும் கூட நான் உங்களுக்குத் தகவல் கூறி அனுப்பும் வரை நீங்கள் அவ்விடத்திலிருந்து அகன்றுவிடக் கூடாது.

v நாங்கள் தோல்வியுற்றுப் போரில் கொல்லப்படுவதைப் பார்த்தாலும் நீங்கள் எங்களுக்கு உதவுவதற்காக இறங்கி வரக்கூடாது.

v எங்களைப் பறவைகள் கொத்தித் திண்பதை நீங்கள் பார்த்தாலும் கூட நான் உங்களுக்குக் கூறி அனுப்பும் வரை உங்களது இடத்தை விட்டு நீங்கள் இறங்கி விட வேண்டாம்.”

என்றெல்லாம் கடுமையான ராணுவச் சட்டங்களைக் கூறி நபி(ஸல்) அவர்கள் இந்தச் சிறிய குழுவை மலையில் நிறுத்தியிருந்தார்கள்.

மலைக்குக் கீழே இருந்த இரு படைகளும் சமீபமாயின. போர் மூண்டது இரு தரப்பிலும் கடுமையாகப் போர் மூண்டு பல பகுதிகளிலும் போர் வெடித்து கடுமையானது, முஸ்லிம்கள் எதிரிகளின் படையை இறை நம்பிக்கை எனும் பலத்துடன் மிகத் துணிச்சலாக எதிர்கொண்டு அவர்களைத் திக்குமுக்காடச் செய்தார்கள். இதனால் இணைவைப்பவர்கள் தோல்வியுற்று நாலா பக்கங்களிலும் சிதறி ஓடினார்கள்.

எதிரிகளின் பொருட்களை முஸ்லிம்கள் ஒன்று திரட்டுவதைக் கண்ட மலையில் இருந்த சிலருக்கும் உலக ஆசை ஏற்பட்டது அவர்கள் தங்களுக்குள் இதோ வெற்றிப் பொருள், இதோ வெற்றிப் பொருள்! உங்களது தோழர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள். இதற்குப் பின்பும் நாம் ஏன் இங்கே நிற்கவேண்டும் என்று கூறினார்கள். அவர்களின் தளபதி இப்னு ஸுபைர்(ரழி) நபி (ஸல்) அவர்கள் இட்ட கட்டளையை அவர்களுக்கு நினைவூட்டினார். மேலும், அல்லாஹ்வின் தூதர் உங்களுக்கு கூறியதை நீங்கள் மறந்துவிட்டீர்களா? என்றும் எச்சரித்தார். என்றாலும் அவர்களின் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் மலையிலிருந்து இறங்கி படையுடன் சேர்த்து பொருளை சேகரிக்க ஆரம்பித்தார்கள்.

இந்தச் சூழ்நிலையை நன்றாகப் பயன்படுத்திக்கொண்ட காலித் இப்னு வலீத், முஸ்லிம்களை பின்புறமாகத் தாக்குவதற்காக அம்பெறியும் வீரர்கள் இருந்த மலையை நோக்கி அதிவேகமாகச் சென்று அங்கிருந்தவர்களை கொலை செய்து விட்டு கீழே இருந்த முஸ்லிம்கள் மீது பாய்ந்தார்கள். முஸ்லிம்களின் முழுமையான வெற்றி தடைபட்டது. மிகக் கடுமையான சோதனை ஏற்பட்டது. இதனால்,

v நிலைகுலைந்த முஸ்லிம்கள் தடுமாறிய வர்களாக யாரையுமே திரும்பியும் பார்க் காமல் மதீனாவுக்குள்ளும், மலைகளுக்கு மேலேயும், நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.

v நபி(ஸல்) அவர்களுடைய முன் வாய்ப் பற்களில் கீழ் வரிசையில் வலப்புறப்பல் ஒன்றும் உடைக்கப்பட்டது. அவர்கள் அணிந்திருந்த இரும்பு கவசத்தின் இரண்டு ஆணிகள் முகத்தில் குத்தியதால் அவர்களது புருவம் பிளக்கப்பட்டது. முகத்தில் இரத்தம் வழிந்தோடி அப்படியே மயங்கி விழும் அளவிற்கு முகத்தில் காயம் ஏற்பட்டது மாத்திரமல்ல.

v நபி(ஸல்) அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி பரவியது. அத்துடன்,

v அல்லாஹ்வின் சிங்கம் என்று அழைக்கக் கூடிய ஹம்ஸா(ரழி) அவர்கள் உட்பட எழுபது உத்தம சஹாபாக்கள் கொல்லப்பட்டார்கள். (3:121,155,153, பராஉபின் ஆஸிப்(ரழி), புகாரி: 4041-4085, 2805, 3037, 3039, 3722, 3724, 5248, 5722, 5826, 243, 2903,2911, முஸ்லிம், திர்மிதி, இப்னு மாஜா, முஸ்னது அஹ்மத், அபூதாவூத், ஹாகிம், மிஷ்காத், முஸ்னதுஸ் தயாலிசி, முஸ்னது அல்பஸ்ஸார், தல்கீஸுல் ஹல் பிய்யா, ஹல்பிய்யா, இப்னு ஹிஷாம், பத்ஹுல் பாரீ, முஸ்னது அபீயஃலா, ஜாதுல் மஆது, அல்பிதாயா, முக்தஸர், ஸுரத்துர்ரஸூல், அல்அதபுல் முஃப்ரத்)

இத்தனைக்கும் இறை நம்பிக்கை கொண்டிருந்த நபித்தோழர்களில் ஒரு சிலர் செய்த தவறின் காரணமாக முஸ்லிம்களின் பூரண வெற்றியின் திசை மாறி சுமார் எழுநூறு படைவீரர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியதுடன், எழுபது முஸ்லிம்களும் கொல்லப்பட்டு, இறைத் தூதர்(ஸல்) அவர்களுக்குப் படுகாயம் ஏற்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டும் விட்டார்கள் என்ற செய்தி பரவக் காரணமாயிற்றே. எனவே,

பொல்லாங்கு வரும் வேதனை, வினை, சோதனை, நல்லவர்களுக்கும்தான் :

நபி(ஸல்) அவர்களின் துணைவியர் உம்மு சலமா(ரழி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “எனது சமுதாயத்தாரிடையே பாவங்கள் மலிந்துவிட்டால் அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் தன்னிடமிருந்து வேதனையை அனுப்புவான்” என்று கூறினார்கள். அப்போது நான் “அல்லாஹ்வின் தூதரே! அவர் களிடையே நல்லவர்கள் இருக்கமாட்டார்களா என்ன?” என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “ஆம் நல்லவர்கள் இருப்பார்கள்” என்று கூறினார்கள். உடனே நான் “அந்த நல்லவர்களின் நிலை என்னவாகும்?” என்று வினவினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “மற்றவர்களுக்கு ஏற்பட்டதே அவர்களுக்கும் ஏற்படும். பின்னர் அவர்கள் அல்லாஹ்வின் மன்னிப்புக்கும் உவப்புக்கும் ஆளானார்கள்” என்று கூறினார்கள். (முஸ்னது அஹ்மத், இப்னு கஸீர் 4:67)

“பாவங்களில் ஈடுபடும் ஒரு சமுதாயத் தாரிடையே அந்தப் பாவங்களைத் தடுக்கின்ற வலிமையுடைய மனிதர் ஒருவர் இருந்தும் அவர் அதனைத் தடுக்காததால் அவர்கள் தம்மை மாற்றிக் கொள்ளாவிடில் வல்லமையும், மாண்பும் மிக்க அல்லாஹ் அவர்கள் அனைவரையும் பொதுவான தண்டனை மூலம் தண்டிக்காமல் விடமாட்டான் அல்லது இறைத்தண்டனை அவர்களைத் தாக்காமல் விடாது” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஜரீர் பின் அப்தில்லாஹ்(ரழி) முஸ்னது அஹ்மத்)

“ஏதாவது ஒரு கூட்டத்தில் ஒரு மனிதர் பாவங்களைச் செய்து கொண்டு இருக்கையில் அக்கூட்டத்தினர் அதைத் தடுப்பதற்கு சக்தியிருந்தும் தடுக்காமலிருந்தால், அவர்களை அல்லாஹுத்தஆலா அவர்கள் மரணிப்பதற்கு முன்பதாக வேதனை செய்தே தீருவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத், 4339, இப்னு மாஜா, 4009) மேலும்,

“மக்கள் தமக்கிடையே ஒரு தீமையைக் கண்டு அதை மாற்ற முயலவில்லையாயின் நல்லவர்கள், தீயவர்கள் என்ற பாகுபாடின்றி அவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக அல்லாஹ் தண்டிக்கக் கூடும்” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூபக்கர்(ரழி), இப்னுமாஜா, இப்னு கஸீர் 4:708)

“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு சமுதாயத்தின் மீது அல்லாஹ் வேதனையை இறக்கும்போது அதிலுள்ளவர்கள் அனைவரையும் அந்த வேதனை தாக்கும் பிறகு அவர்கள் தமது செயல்களுக்கு ஏற்ப (மறுமையில்) எழுப்பப்படுவார்கள்” என்று (இப்னு உமர்(ரழி) அறிவித்தார் புகாரி: 7108)

“மக்களின் மத்தியில் தேவைகள் மிகைத்து விடும்போது இறைவன் வேதனையை இறக்கிவைப்பான். அப்போது நல்லவர்கள் கெட்டவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் அந்த வேதனை தாக்கும். மரணத்திற்குப் பின்னர் உயிர் கொடுத்து எழுப்பப்படும்போது, அவரவர் வினைகளுக்கு ஏற்ப நற்பலனோ தண்டனையோ கிடைக்கும்” (ஃபத்ஹுல் பாரீ)

‘புவியில் பாவங்கள் மலிந்துவிட்டால் புவிவாசிகள் மீது அல்லாஹ் தனது வேதனையை இறக்குவான்” என்று கூறினார்கள். அப்போது நான், “அவர்களிடையே வல்லமையும், மாண்பும் மிக்க அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிபவர்கள் இருப்பார்களே?” என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “ஆம் இருக்கவே செய்வார்கள் பின்னர் அவர்கள் அல்லாஹ்வின் அருளுக்கு ஆளானார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆயிஷா(ரழி) முஸ்னது அஹ்மத், இப்னு கஸீர் 4:67) எனவே,

“உங்களில் ஒருவர் தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கையால் தடுக்கட்டும். முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித்) தடுக்கட்டும். அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை ஒதுக்கட்டும்) இந்த (இறுதி) நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன கடைசி நிலையா)கும்” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி) முஸ்லிம்: 78, திர்மிதி, நஸயீ, அபூதாவூத், இப்னு மாஜா, முஸ்னது அஹ்மத், இப்னு கஸீர், 2:183)

“இந்த (இறுதி) நிலைக்கு அப்பால் இறை நம்பிக்கை என்பது கடுகளவு கூடக் கிடையாது” (அபூஹுரைரா(ரழி), முஸ்லிம்: 80)

ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரழி) அறிவித்தார். “நபி(ஸல்) அவர்கள் (ஒருமுறை) என்னிடம் நடுங்கியபடி வந்து, வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரமில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணத்தால் அரபுகளுக்குப் பேரழிவு நேர விருக்கிறது. இன்று யஜூஜ் மஃஜுஜ் கூட்டத்தாரின் தடுப்புச் சுவரிலிருந்து இந்த அளவிற்குத் திறக்கப்பட்டுள்ளது என்று கூறிவிட்டு, தம் பெருவிரலாலும் அதற்கு அடுத் துள்ள விரலாலும் வளையமிட்டுக் காட்டினார்கள்” உடனே நான், இறைத்தூதர் அவர்களே! எங்களிடையே நல்லவர்கள் (வாழ்ந்து கொண்டு) இருக்க (இறைவனின் தண்டனை இறங்கி) நாங்கள் அழிந்து போவோமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்! பாவங்கள் அதிகரித்துவிட்டால் (தீயவர்களுடன் நல்லவர்களும் சேர்ந்தே அழிக்கப்படுவார்கள்)” என்று பதில் கூறினார்கள். (புகாரி: 3598, 3599, 3346, 3347, 3598, 3599, 7059, 7135, முஸ்லிம்: 5520, 5521)

ஆயிஷா(ரழி) அறிவித்தார். “ஒரு படையினர் கஅபாவின் மீது படையயடுப்பார்கள். வெட்ட வெளியான ஒரு பூமியில் அவர்கள் இருக்கும்போது அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை உயிருடன் பூமிக்குள் புதையுண்டு போவார்கள்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “இறைத்தூதர் அவர்களே! அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள்? அங்கே அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள். கடைவீதிகளும் இருக்குமே!” என கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை புதையுண்டு போகத்தான் செய்வார்கள். எனினும் (அதற்குப்) பின்னர் அவரவரின் எண்ணத்திற்கேற்ப எழுப்பப்படுவார்கள்” என்றார்கள். (புகாரி: பாகம் 2, பக்கம்:338, பாடம்: 49, 2118)

“மிஸ்அர்” என்பவர் கூறுகின்றார். ஒரு கிராமத்தை (அப்படியே) பூமிக்கு உள்ளே இழுத்துக் கொள்ளுமாறு ஒரு வானவருக்கு (அல்லாஹ்விடமிருந்து) கட்டளை வந்தது. அப்போது அந்த வானவர், “யா அல்லாஹ் அந்தக் கிராமத்தில் ஒரு நல்ல வணக்கசாலி (யான ஆபித்) காணப்படுகின்றாரே (அவரை எவ்வாறு?)” என்று கேட்டார். அதற்கு, “அல்லாஹுத்த ஆலா அழிவை (முதலில்) அவரில் இருந்தே ஆரம்பியுங்கள். (என்று உத்தரவிட்டான்) ஏனெனில் பாவங்களைக் கண்டு (மனசலவிலேயாவது) அவரது முகம் ஒருபோதும் (மாறிச்) சிவந்ததில்லை” என்று சொன்னான்.

ஜாபிர்(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். “அல்லாஹ் வானவர்களின் தலைவரான ஜிப்ரீல்(அலை) அவர்களுக்கு இன்னின்ன இடங்களை அவைகளில் வாழும் எல்லா உயிரினங்களோடு கவிழ்த்து விடும்படி உத்தரவிட்டான்.” ஜிப்ரில்(அலை) அவர்கள் மிக்க பணிவோடு, “எனது ரப்பே! இந்த இன்ன கிராமத்தில் உள்ள (உனது ஆணைகளை) ஒரு வினாடி நேரம் கூட மீறி விடாமல் (நல்லமல் செய்து) வாழ்ந்து வரும் உனது அடியார் ஒருவர் வாழ்கின்றாரே! (அவரையுமா?)” என விண்ணப்பித்தார்கள் (அதற்கு) அல்லாஹ் “ஆம்! அவருடன் சேர்த்து அனைவரையுமே, (கவிழ்த்துவிடு), ஏனெனில் அவருடைய முகம் அறவே ஒரு வினாடி நேரம் கூட(த் தமது சமுதாய இழி நிலை கண்டு) எனக்காக மாறியதே இல்லை” என்று விளக்கினான். (பைஹகீ, ஷிஅபுல் ஈமான்) எனவே,

“தமது சமூகத்திலுள்ள தீமையைத் தடுக்காமல் தன்னளவில் மட்டும் நல்லவர்களாக வாழ்வோர் இறைவனின் திருப்தியைப் பெறமுடியாது.”  பார்க்க: 7:165

“நன்மைக்கும், இறையச்சத்திற்கும் ஒருவருக்கொருவர் ஒத்துழையுங்கள், பாவத்துக்கும் எல்லை மீறலுக்கும் துணை போய்விடாதீர்கள்.” (5:2) எனும் வசனத்திற்கு விளக்கமாக,

அனஸ் இப்னு மாலிக்(ரழி) அவர்கள் கூறியதாவது: “(ஒருமுறை) இறைத்தூதர் (ஸல்) அவர்கள், உனது சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும், அல்லது அக்கிரமத்துக்குள்ளானவனாக இருக்கும் நிலையிலும், அவனுக்கு நீ உதவி செய்” என்றார்கள். அப்போது ஒருவர், “இறைத்தூதர் அவர்களே! அக்கிரமத்திற்குள்ளான வனுக்கு நான் உதவி செய்வேன். (அது சரிதான்) ஆனால் அக்கிரமக்காரனாக இருக்கும்போது எப்படி நான் உதவி செய்யமுடியும்?” கூறுங்கள் என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவனை அக்கிரமம் செய்யவிடாமல் நீ தடுப்பாயாக இதுவே நீ அக்கிரமக்காரனுக்குச் செய்யும் உதவியாகும் என்றார்கள். (புகாரி: 6952, 2443, 2444, திர்மிதி, முஸ்னத் அஹ்மத்)

***********************************

ஸலவாத்!

 1. முகமது அலி, M.A.

ஏப்ரல் 2020 தொடர்ச்சி…

“ஸலவாத்துன்னாரிய்யா’ என்பது நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தது அல்ல. மிகவும் பிற்காலத்தில் சிலரால் உருவாக்கப்பட்டது என்பதைச் சென்ற இதழில் கண்டோம். அது எவ்வளவு நல்ல கருத்தை உள்ளடக்கி இருந்தாலும், “பித்அத்’ பிற்காலத்தில் உருவாக்கப்பட்டது என்ற காரணத்தினாலேயே அது ஸலவாத்தாக ஆக முடியாது என்பதையும் சென்ற இதழில் பார்த்தோம். அதன் பொருளை நாம் கவனித்தாலும் மார்க்கம் அனுமதிக்கின்ற அது ஸலவாத்தாக ஆக முடியாது என்பதையும் சென்ற இதழில் பார்த்தோம். அதன் பொருளை நாம் கவனித்தாலும் மார்க்கம் அனுமதிக்கின்ற விதத்தில் அது அமைந்திருக்கவில்லை என்பதை இந்த இதழில் காண்போம்.

கிறித்தவர்கள் ஈஸாவை வரம்பு மீறிப் புகழ்ந்தது போல் என்னை நீங்கள் வரம்பு மீறிப் புகழாதீர்கள். (நூல்கள்: புகாரி, தாரமீ, அஹ்மத், ஷமாயிலெ திர்மிதீ) என்ற நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைக்கு மாற்றமாகவே இதன் பொருள் அமைந்துள்ளது.

“யா அல்லாஹ்! எவர் மூலம் சிக்கல்கள் அவிழ்த்து விடுமோ, எவர் மூலம் தேவைகள் நிறைவு செய்யப்படுமோ, எவர் மூலம் ஆசைகள் பூர்த்தி செய்யப்படுமோ, எவருடைய திருமுகத்தின் மூலம் மேகத்திலிருந்து மழை பெறப்படுமோ, அந்த எங்கள் தலைவர் மீது முழுமையாக நீ அருள் புரிவாயாக.

இதுதான் ஸலவாத்துன்னாரிய்யாவின் பொருள். திருக்குர்ஆனையும், நபிமொழிகளையும் ஓரளவு அறிந்தவர்கள் கூட இந்தப் பொருளை ஏற்கமாட்டார்கள். இதில் சொல்லப்படுகின்ற தன்மைகள் யாவும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தானது என்று கூறிடுவார்கள்.

நபி(ஸல்) அவர்கள் மூலம் கஷ்டங்கள் அகன்று விடும் என்று அல்லாஹ்வோ அதன் திருத்தூதரோ நமக்குச் சொல்லித் தரவில்லை அல்லாஹ்வின் மூலமாகவே கஷ்டங்கள் விலக முடியும் என்று தான் நபி (ஸல்) அவர்கள் போதனை செய்தார்கள்.

“அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே, நான் நன்மை செய்து கொள்ளவோ தீங்கிழைத்துக் கொள்ளவோ சக்தி பெற்றிருக்கவில்லை” என்று சொல்வீராக!
(அல்குர்ஆன்10:49)

அல்லாஹ் இப்படித்தான் நபி(ஸல்) அவர்களை கூறச் சொல்கிறான். நபி(ஸல்) அவர்களும் அவ்வாறே கூறினார்கள். நபி(ஸல்) அவர்களின் 23 ஆண்டு கால பிரச்சார வாழ்க்கையில், அவர்கள் பட்ட கஷ்டங்களே இதற்குச் சரியான சான்றுகளாகும். எத்தனை முறை அடிக்கப்பட்டிருக்கிறார்கள்? பைத்தியம் என்று எள்ளி நகையாடப்பட்டிருக்கிறார்கள்! “தாயிப்’ நகரில் இரத்தம் சிந்தும் அளவுக்கு கல்லால் அடிக்கப்பட்டார்கள்! சொந்த ஊரிலேயே இருக்க முடியாத நிலைமைக்கு ஆளாக்கப்பட்டார்கள்! உஹதுப் போர்க்களத்தில் “பல்’ உடைக்கப்பட்டது! இதுபோன்ற இன்னும் பல கஷ்டங்களுக்கு அவர்களே ஆளானார்கள்.

அவர்களின் அன்புத் தோழர்களில் பலர் இரண்டாகக் கிழிக்கப்பட்டார்கள்! சுடு மணலில் கிடத்தப்பட்டார்கள்! மர்ம ஸ்தானத்தில் அம்பு எய்து கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள், தூக்கு மேடையிலும் ஏற்றப்பட்டார்கள், பல போர்க்களங்களில் ஷஹீதாக்கப்பட்டார்கள். நபி(ஸல்) அவர்களின் காலத்திலேயே இவ்வளவு கொடுமைகளும் தொடர்ந்தன. இது போன்ற சந்தர்ப்பங்களில் நபி(ஸல்) அவர்கள், “தன் மூலமாகக் கஷ்டங்கள் தீரும் என்று கூறிடவில்லை. நபித் தோழர்களின் எத்தனையோ தேவைகள் நிறைவேற்றப்பட்டதில்லை.

நபி(ஸல்) அவர்கள் மூலமாகத் தேவைகள் நிறைவேறும் என்பதும் சரியானதன்று. அல்லாஹ்வும், அவனது தூதரும் இப்படி சொல்லித் தரவில்லை. மாறாக நபி(ஸல்) அவர்களுக்கே பல தேவைகள் இருந்தன. ஆசைகள் இருந்தன. அவற்றில் எத்தனையோ தேவைகள் நிறைவேற்றப்பட்டதில்லை.

“தனது பெரிய தந்தை இஸ்லாத்தை ஏற்க வேண்டும்’ என்ற ஆசை, நபி(ஸல்) அவர்களுக்கு இருந்தது. ஆனால் கடைசி வரை அந்த ஆசை பூர்த்தி செய்யப்படவில்லை ஏன் அபூஜஹல் உட்பட எல்லாக் காபிர்களும் இஸ்லாத்தில் இணைய வேண்டும் என்ற பேராசையும் நபி(ஸல்) அவர்களுக்கு இருந்தது. அதை அல்லாஹ்வே சொல்லிக் காட்டுகிறான். “அவர்கள் இந்த (வேத) அறிவிப்பில் ஈமான் கொள்ளவில்லை என்பதற்காக கைசேதப்பட்டு உன்னையே நீர் அழித்துக் கொள்வீர் போலும்” (அல்குர்ஆன்:18:6) என்று அல்லாஹ் சொல்லிக்காட்டும் அள வுக்கு காபிர்கள் ஈமான் கொள்ள வேண்டும் என்ற பேராசை கொண்டிருந்தார்கள். அந்த ஆசையை அல்லாஹ் நிறைவேற்றித் தரவில்லை.

அவர்களின் 23 ஆண்டு கால வாழ்க்கையில் துன்பங்கள் தான் இன்பங்களை விட வும் அதிகமாக இருந்தன. தாங்களே கஷ்டத்திற்கு ஆளாகி நின்றபோது, அல்லாஹ்தான் நீக்கக் கூடியவன் என்றே போதித்தார்கள். திருக்குர்ஆனும் பல இடங்களில் இதை மிகத் தெளிவாகவே கூறுகின்றது.

(2:272, 3:128, 6:17, 6:50, 7:188, 10:106, 107, 11:63, 28:56, 42:52, 49:9, 72:21,22) ஆகிய வசனங்களை ஒருவர் சிந்தித்தால் இந்த ஸலவாத்துன்னாரிய்யாவின் கருத்தை தவறு என்று புரிந்து கொள்வார். கருத்தின் அடிப்படையிலும் இந்த ஸலவாத்துன் னாரிய்யா தவறாக உள்ளது என்பதால் இதை ஓதுவது கூடாது என்று உணரலாம்.

நபிஸல் அவர்கள் எதை ஸலவாத் என்று சொல்லித் தந்தார்களோ அதை ஓதி நன்மை அடைவோமாக! பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட தாரிய்யா, தாஜி, ஆயிஷா என்ற பெயரில் உலா வருகின்ற பித்அத்தான ஸலவாத்துகளை விட்டொழிப்போமாக. ஆமீன்.

ஸலவாத் சொல்வதனால் ஏற்படக் கூடிய சிறப்புகளையும், ஸலவாத்தின் பொருளையும், அதன் காரணத்தையும், நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸலவாத் எவை? பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட ஸலவாத் எவை? என் பதையும் இதுவரை நாம் பார்த்தோம்.

ஒரு முஸ்லிம் தனக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறலாம். அதற்கு நன்மையும் உண்டு. இதில் எந்தவித கருத்து வேறுபாடு மில்லை. ஆனால் “இப்படித்தான் செய்ய வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்திருக்கின்ற காரியங்களை நாம் அப்படியே செய்யவேண்டும். அதில் எந்தவித மாறுதலும் செய்வதற்கு நமக்கு அனுமதி இல்லை.

உதாரணமாக தொழுகையில் “ருகூவு’ செய்யும்போதும், “சுஜூத்’ செய்யும் போதும் “இதைத்தான் ஓதவேண்டும்’ என்று நபி(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். “ஸலவாத்’ ஓதுவது சிறந்ததுதானே என்று எண்ணிக் கொண்டு ருகூவில்-சுஜூதில் ஒருவன் ஸலவாத் ஓதினால் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த முறையில் அவன் மாறுதலைச் செய்கின்ற காரணத்தினால், அவன் குற்றவாளியாக ஆகின்றான்.

நபி(ஸல்) அவர்கள் இதைத்தான் இந்த நேரத்தில் ஓதவேண்டும் என்று காட்டித் தந்திருக்கும் காரியங்களில், மாறுதலோ கூடுதல் குறைவோ செய்ய எவருக்கும் அனுமதி இல்லை. இந்த அடிப்படையை நாம் மிகவும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்னொரு உதாரணம் பார்ப்போம்! தொழுகைக்கு மக்களை அழைப்பதற்காக, நபி(ஸல்) அவர்கள் பாங்கு சொல்வதை நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். அல்லாஹு அக்பர் என்று துவங்கி லாயிலால இல்லல்லாஹ் என்று முடிக்க வேண்டும். இதுதான் நபி(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்த பாங்கு. இன்று சிலர் நன்மை என்று கருதிக் கொண்டு, பாங்குக்கு முன்னால் ஸலவாத் சொல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பாங்கு என்று ஒரு முறையை நபி(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்திருக்கும் போது, அதில் எந்த ஒன்றையும் அதிகமாக்கு வது எவ்விதத்திலும் அனுமதிக்கப்படாததாகும். பாங்குக்கு முன்னால் ஸலவாத் சொல்வதும், ருகூவில் ஸலவாத் சொல்வதும் ஒன்றுதான்.

பாங்குக்கு முன்னால் ஸலவாத் கூற வேண்டும் என்று இருக்குமானால், நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்திருப் பார்கள். நன்மை செய்வதில் நம்மை விட அதிக ஆர்வம் கொண்டிருந்த நபித் தோழர்கள் அதனை செய்திருப்பார்கள். ஆனால் நபியவர்களும் நமக்கு அவ்வாறு சொல்லித் தரவில்லை. நபித்தோழர்களும் அவ்வாறு செய்யவில்லை.

இந்தச் செயலை அறிஞர்கள் ஆட்சேபனை செய்யும்போது, பாமர மக்கள் ஸலவாத்தையே மறுப்பதாக தவறாக எண்ணிக் கொள்கின்றனர். ஒருசில விஷமிகள் மக்கள் மத்தியில் இப்படிப்பட்ட பிரச்சாரத்தை முடுக்கிவிடுகின்றனர். ஸலவாத் அதிகமாக ஓதவேண்டும். அதை எவரும் மறுக்க முடியாது. ஆனால் நிர்ணயிக்கப்பட்ட எந்த அமலிலும், ஸலவாத் உட்பட எதனையும் அதிகப்படுத்தக் கூடாது என்பது தான் நமது நிலை. இதை இன்னும் தெளிவாகப் பார்ப்போம்.

ஸலவாத் ஓதுவதை விட குர்ஆன் ஓதுவது அதிக நன்மை தரக்கூடியது என்பதில் அறிஞர்களுக்கிடையே எவ்விதக் கருத்து வேறுபாடும் கிடையாது. ஒருவன் “பாங்கு’ சொல்வதற்கு முன்னால் “அலம்தர கைப’ என்ற சூராவை ஓதிவிட்டு பாங்கைத் துவக்குகிறான் என்று வைத்துக் கொள்வோம். மறுநாள் இன்னொருவன் பாங்கு சொல்வதற்கு முன்னால் “யாஸின்’ என்ற சூராவை ஓதுகிறான் என்று வைத்துக் கொள்வோம். நாம் நிச்சயமாக அதை ஆட்சேபனை செய்வோம். ஸலவாத்தை விட சிறந்த குர்ஆன் வசனங்களைத் தானே நான் ஓதுகிறேன் என்று அவன் கூறினால் நாம் ஏற்றுக் கொள்ள முடியுமா? பாங்குக்கு முன்னால் குர்ஆன் ஓதுவதை எந்த அடிப்படையில் தவறு என்று நாம் ஆட்சேபனை செய்வோம் ஸலவாத்தை விட சிறந்த குர்ஆன் வசனங்களைத் தானே நான் ஓதுகிறேன் என்று அவன் கூறினால் நாம் ஏற்றுக் கொள்ள முடியுமா? பாங்குக்கு முன்னால் குர்ஆன் ஓதுவதை எந்த அடிப்படையில் தவறு என்று நாம் ஆட்சேபனை செய்தோமோ, அது ஸலவாத் பிரச்சனைக்கு பொருந்தாதா? என்பதை நாம் எண்ணிப் பார்க்கவேண்டும்.

இன்னும் விரிவாக நாம் பார்ப்போம். பாங்கு லாயிலாஹ இல்லல்லாஹ் என்று முடிகின்றது. ஒருவன் இப்படி யோசிக்கிறான். லாயிலாஹ இல்லல்லாஹ் என்பது கலிமாவின் ஒரு பகுதிதான். இன்னொரு பகுதி முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் அதைக் காணோம் என்று கருதிக் கொண்டு பாங்கை முடிக்கும்போது முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்று முடித்தால் எவராவது ஏற்க முடியுமா? அவன் சொன்ன வார்த்தை உண்மையான நன்மையான வார்த்தை என்பதற்காக நாம் அங்கீகரிக்க மாட்டோம். பாங்கின் கடைசியில் நல்ல ஒரு வார்த்தையை அதிகப்படுத்துவது எப்படித் தவறு என்று நாம் புரிந்து கொள்கிறோமோ, அவ்வாறே பாங்கு சொல்வதற்கு முன்னாலும் எதையும் அதிகமாக்கக் கூடாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பாங்குக்கு முன்னால் ஸலவாத் சொல்வது ஆதாரமற்றது என்று நாம் சொல்லும் போதும், நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்தைத் தவிர நாமாக உருவாக்கிக் கொண்ட “பித்அத்’தான ஸலவாத்களை சொல்லக் கூடாது என்று நாம் கூறும்போதும், நாம் ஸலவாத்தையே மறுப்பதாக நம்மீது அவதூறு பரப்பப்படுகின்றது. நாம் அவர்கள் சொல்லித் தந்த முறைப்படி சொல்ல வேண்டும் என்பதைத் தெளிவாகவே சொல்கிறோம்.

அல்லாஹ் நம் அனைவரையும் உண் மையை உள்ளபடி புரிந்து கொண்டவர்களாக ஆக்குவானாக. ஆமீன்.

***********************************

அறிந்து கொள்வோம்!

 மர்யம்பீ, குண்டூர்,

 1. உறவுகளோடு ஒட்டி வாழ்பவனைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள்?
  இறைவனும் உறவாடுவான். முஸ்லிம்:4995
 2. தங்கள் பொருள்களை இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்கிறவர்களுக்கு என்ன கிடைக்கும் என அல்லாஹ் கூறுகின்றான்?
  நற்கூலி உண்டு. குர்ஆன் : 2:274
 3. ஒவ்வொருவருடைய தீமைக்கு எது சான்றாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
  கேவலப்படுத்துவது. முஸ்லிம் : 5010
 4. யாருக்கு கொழுந்து விட்டு எரியும் நெருப்பை தயார் செய்திருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்?
  அல்லாஹ்வின் மீதும், அவனது தூதரின் மீதும் நம்பிக்கை கொள்ளாதோருக்கு.   குர்ஆன் : 40:13
 5. காய்ச்சலை ஏசாதே என ஏன் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
  அது மக்களின் தவறுகளை அகற்றி விடுகிறது. முஸ்லிம் : 5031
 6. மற்றவர்களின் வீடுகளுக்கு எவ்வாறு செல்லவேண்டும் என அல்லாஹ் கூறுகிறான்?
  மற்ற வீட்டாரிடம் அனுமதி கிடைத்த பின்பு ஸலாம் கூறி நுழையவேண்டும்.  அல்குர்ஆன் : 24:27
 7. ரமழான் மாத நோன்பை எப்போது நோற்க வேண்டாம் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
  முன்கூட்டியே நோற்க வேண்டாம். நஸாயீ : 2143
 8. அல்குர்ஆன் எப்போது அருளப்பட்டது என அல்லாஹ் கூறுகிறான்?
  ரமழான் மாதத்தில் அருளப்பட்டது. குர்ஆன் : 2:185
 9. நோன்பு நோற்றவர் மறதியாக சாப்பிட்டு விட்டால் அவர் என்ன செய்யவேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
  நோன்பை நிறைவு செய்யட்டும்.  புகாரி : 1933
 10. நோன்பு யாருக்குரியது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
  அல்லாஹ்வுக்குரியது. புகாரி : 1894
 11. நோன்பு கால இரவுகளில் தனது மனைவியி டம் கூடுவது கூடுமா?
  அனுமதிக்கப்பட்டுள்ளதாக அல்லாஹ் கூறுகிறான். குர்ஆன் : 2:187
 12. நோன்பாளிகள் தவிர மற்றவர்கள் நுழைய முடியாத சொர்க்கத்தின் வாசல் எது?
  ரய்யான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி : 3257
 13. பயணிப்பவருக்கு எந்தவித சலுகைகளை அல்லாஹ் வழங்கியுள்ளதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
  நோன்பு நோற்பதிலிருந்தும், தொழுகையில் (ரக்அத்தின் எண்ணிக்கையில்) பாதியையும் தள்ளுபடி செய்துள்ளான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நஸாயீ: 2233
 14. யாருடைய முந்தைய பாவங்கள் மன்னிக் கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
  நம்பிக்கை கொண்டு, நன்மையை எதிர்பார்த்து, ரமழான் மாதம் நோன்பு நோற்பவரின். புகாரி : 38
 15. ஷைத்தானுக்கு எப்போது விலங்கிடப்படுகிறது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
  ரமழான் மாதத்தில். முஸ்லிம் : 1956
 16. யாருடைய நோன்பை அவரது பொறுப் பாளர் நோற்கலாம் என நபி(ஸல்) கூறினார்கள்?
  களாவான நோன்புள்ள நிலையில் இறந்தவரின் நோன்பை. புகாரி : 1952
 17. யாரை குறை கூறாதீர் என இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறினார்கள்?
  பயணத்தில் நோன்பு நோற்பவரையும், நோன்பை விட்டுவிட்டவரையும்.  முஸ்லிம் : 2044
 18. எந்த உணவில் பர்கத்(அருள்வளம) உள்ளது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
  ஸஹர் உணவில். முஸ்லிம் : 2000
 19. நமது நோன்பிற்கும், வேதக்காரர்களின் நோன்பிற்கும் உள்ள வேறுபாடு எது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
  நாம் ஸஹர் நேரத்தில் உண்பதுதான்.  முஸ்லிம் : 2001
 20. நோன்பு பெருநாள் தர்மத்தை எப்போது தரவேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
  பெருநாள் தொழுகைக்கு புறப்படுவதற்கு முன்பாக. புகாரி : 1509

***********************************

சுவர்க்கம் என்பதும் மறைவான இறை நம்பிக்கையில் உள்ளதாகும் 

எஸ். எம். அமீர்,  நிந்தாவூர், இலங்கை.

ஏப்ரல் மாத தொடர்ச்சி….

மேலும், நமக்கு இதன்பால் வழிகாட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் அல்லாஹ் மாத்திரம் நமக்கு நல்வழி காட்டியிராவிட்டால் தாம் நல்வழி அடைந்திருக்கவே மாட்டோம் (7:43) என்று கூறுவார்கள். இதையே,

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். சுவர்க்கவாசிகளில் ஒவ்வொருவரும் தமக்கு நரகத்தில் ஒதுக்கப்பட்டிருந்த இருப்பிடத்தைக் காண்பார்கள். அப்போது அவர்கள் அல்லாஹ் மட்டும் எனக்கு வழிகாட்டியிராவிட்டால் எனது நிலை மோசமாயிருக்கும் என்று கூறுவார்கள். இதுவே அவர் இறைவனுக்குச் செலுத்தும் நன்றியாக அமையும் என்று (அபூஹுரைரா (ரழி) முஸ்னத் அஹ்மத், ஹாகிம், தஃப்சீர் இப்னு கஸீர் : 3:760, 761)

அங்கே என்றும் மரணம் என்பது இல்லை நிரந்தரம் :

முந்திய மரணத்தைத் தவிர அங்கு மரணத்தை அவர்கள் அனுபவிக்கமாட்டார்கள். (44:56)

அவர்கள்தான் சுவர்க்கவாசிகள் ஆவர். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (10:26)

அவற்றுக்கிடையே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் அவற்றில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (20:76)

வானங்களும், பூமியும் நிலைத்திருக்கும் காலமெல்லாம் அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (11:108)

அவற்றில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (9:89)

மேலும் பார்க்க 13:23, 16:31, 35:33, 14:23, 9:72, 5:119, 18:31, 20:76, 4:13,57,122)

சுவர்க்கவாசிகளிடம் இது நிரந்தரம் இனி மரணம் இல்லை என்று சொல்லப்படும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அபூஹுரைரா (ரழி) புகாரி : 6545) என்றும்,

சுவர்க்கவாசிகள் சுவர்க்கத்தில் நுழைந்ததும் ஓர் அறிவிப்பாளர் அவர்களிடையே எழுந்து “சுவர்க்கவாசிகளே! இனி மரணம் என்பது இல்லை. இது நிரந்தரம் என்று அறிவிப்பான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு உமர்(ரழி), புகாரி : 6544)

“மறுமை நாளில் கறுப்பு, வெள்ளை நிற ஆடு ஒன்றின் தோற்றத்தில் மரணம் கொண்டு வரப்பட்டு அது சுவர்க்கத்திற்கும், நரகத்திற்கும் இடையே வைத்து அறுக்கப்படும். பின்னர் சுவர்க்கவாசிகளே! நிரந்தம் இனி உங்களுக்கு மரணம் என்பதே கிடையாது என்று கூறப்படும்” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூசயீத் அல்குத்ரீ(ரழி), புகாரி: 4730, 6548, 6544, 6545, முஸ்லிம்: 5475, திர்மிதி : 2646)

மற்றுமொரு ஹதீஃதில் வந்துள்ளதாவது “சுவர்க்கவாசிகள் சுவர்க்கத்தில் நுழைந்ததும் பொது அறிவிப்பாளர் ஒருவர் இனி நீங்கள் உயிருடன்தான் இருப்பீர்கள். ஒரு போதும் மரணிக்கவே மாட்டீர்கள். இளமை அழிந்துபோகாது இளமையோடு தான் இருப்பீர்கள். ஒருபோதும் முதுமையடையவே மாட்டீர்கள். உடல் நலத்துடன் தான் இருப்பீர்கள். நோய் வாய்ப்படவே மாட்டீர்கள். நீங்கள் இன்பத்தோடுதான் இருப்பீர்கள். ஒருபோதும் துன்பத்தைக் காணவே மாட்டீர்கள். ஆடைகள் இற்றுப் போகாது என்று அறிவிப்புச் செய்வார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி), அபூசயீத் அல்குத்ரீ(ரழி), முஸ்லிம்: 5457, 2837, முஸ்னத் அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர் : 4:334, 697)

சுவர்க்கத்தில் கிழவனோ கிழவியோ இல்லை :

நபி(ஸல்) அவர்கள் ஒரு கிழவியுடன் (தமாசாகப் பேசும்போது) “சுவர்க்கத்தில் கிழவிகள் நுழையமாட்டார்கள்” என்று கூறினார்கள். அதற்கு அந்தக் கிழவி “கிழவிகளுக்கு மட்டும் என்ன நேர்ந்தது’ என்று கேட்டார். அவரோ குர்ஆனை ஓதத் தெரியாதவராக இருந்தார். அவரிடம் “சுவர்க்கத்துப் பெண்களைக் கன்னியராக(வே) நாம் ஆக்கியுள்ளோம்’ என்னும் (56:36) வசனத்தை நீர் ஓதவில்லையா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். (அனஸ்(ரழி), ரஸீன்)

“பெண்ணொருவர் சுவர்க்கத்தில் நுழைந்தால் அல்லாஹ் அவளுடைய கன்னித்தன்மையை திருப்பிக் கொடுத்துவிடுகின்றான். அல்லாஹ் அவர்களைக் கன்னிகளாக மாற்றுவான்” (சுவர்க்கத்தில் கிழவிகள் நுழைய முடியாது, விபத்துல் ஜன்னாஹ் அபூ நயீம்: 391, அல் இர்வா அல்பானி: 375)

சுவர்க்கவாசிகள் “சுவர்க்கத்தினுள் நுழைந்ததும் பொது அறிவிப்பாளர் ஒருவர் “இனி நீங்கள் ஒருபோதும் முதுமையடையவே மாட்டீர்கள்” என்று அறிவிப்புச் செய்வார் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா (ரழி) அபூசயீத் அல்குத்ரீ(ரழி) முஸ்லிம்: 5457, 2837, முஸ்னத் அஹ்மத், தஃப்சீர் கஸீர் 4:334, 697)

சுவர்க்கவாசிகளான   ஆண்கள்,  பெண்கள்  ஆகிய   இருபாலாருக்கும்,  தூய்மையான   துணைகள்  உள்ளனர் :

“இதைவிடச்  சிறந்ததை நான்  உங்களுக்கு அறிவிக்கட்டுமா?”

“இறை நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு சுவர்க்கச் சோலைகள் உள்ளன” என்று நற்செய்தி கூறுவீராக! அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அங்கே அவர்களுக்குத் “தூய்மையான’ துணைகளும் உள்ளனர். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். 2:25, 3:15,4:57 இத்தொடரில் குறிப்பிடப்பட்டுள்ளன.

“தூய்மையான துணைகள்’ என்பதற்கு, “மாதவிலக்கு, மலம், எச்சில், சளி ஆகிய அசுத்தங்களில் இருந்து தூய்மையானவர்கள்’ என்பதாக நபி(ஸல்) அவர்கள் விளக்கமளித்தார்கள் என்பதாக, அபூசயீத்(ரழி) அவர்களும், (தஃப்சீர் இப்னு மர்தவைஹி, ஹாகிம்) உடல் ரீதியான அழுக்காறுகள், அசுத்தங்கள், உடல் உபாதை ஆகியவற்றிலிருந்து தூய்மை அடைந்திருப்பதைக் குறிக்கும் என்பதாக இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களும், “மாதவிலக்கு, மகப்பேறு, மலம், சிறுநீர், சளி, எச்சில், விந்து ஆகிய அசுத்தங்களில் இருந்து தூய்மையானவர்கள்’ என்பதாக முஜாஹித்(ரஹ்) அவர்களும் “உடல் உபாதைகள், பாவங்கள், குற்றமிழைத்தல், மாதவிடாய், பிரசவ இரத்தப் போக்கு ஆகிய குறைபாடுகளிலிருந்து தூய்மையானவர்கள்’ என்பதாக கத்தாதா(ரஹ்) அவர்களும் விளக்கம் அளித்துள்ளனர் (தஃப்சீர் இப்னு கஸீர்: 1:131,132, 2:585) ஆக அழுக்கு, அசுத்தம், இயற்கை உபாதை, மாதவிடாய், பிரசவ இரத்தப் போக்கு, மலம், சிறுநீர், விந்து, சளி, எச்சில் ஆகிய அனைத்தையும் விட்டும் பரிசுத்தமானவர்களாகும்.

சுவர்க்கவாசிக்கு  முழுமன   நிறைவுடன் அனுபவிப்பதற்கு ஏற்ற   கட்டான   உடல்வாகு கொடுக்கப்படும் :

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம்(அலை) அவர்களை, அவர்களுக்கே உரிய (அழகிய) தோற்றத்தில் படைத்தான். அப்போது அவர்களின் உயரம் “அறுபது’ முழங்களாக இருந்தது. ஆகவே (மறுமையில்) சுவர்க்கத்தில் நுழைபவர்களான அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய தந்தை ஆதம்(அலை) அவர்களின் (அழகிய) தோற்றத்தில் அறுபது முழம் உயரமுடையவர்களாகவும், “முப்பது அல்லது முப்பத்தி மூன்று வயதுடையவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் அனைவரும் ஒரே மனிதனின் அமைப்பில் படைக்கப்பட்டிருப்பார்கள் என்று (அபூஹுரைரா(ரழி) புகாரி: 3326,3327,6227, முஸ்லிம்: 5450,5451,5463, திர்மிதி : 2669,2661,2662,2678) மேலும்,

சுவர்க்கவாசிகளான   ஆண்களுக்கு  ஆண்மைக்  குறைவோ,  தளர்ச்சியோ,  முதுமையோ,  இயலாமையோ ஏற்படுவதில்லை :

வேதக்காரர்களில் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து “அபுல் காசிமே! சுவர்க்கவாசிகள் உண்பார்கள், பருகுவார்கள், (உடலுறவு கொள்வார்கள்) என நீங்கள் கருதுகின்றீர்களா? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் “ஆம் முஹம்மதின் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மேல் ஆணையாக சுவர்க்கவாசிகளில் ஒவ்வொருவரும் உண்பது, பருகுவது, உடலுறவு கொள்வது அதற்கான பாலுணர்வு ஆகியவற்றறில் நூறு மனிதர்களுக்குரிய வலிமையைப் பெறுவார்கள் என்று கூறினார்கள். (ஸைத்பின் அர்கம் (ரழி), முஸ்னத் அஹ்மத், தாரமீ, தஃப்சீர் இப்னு கஸீர்: 4:909,910)

சுவர்க்கவாசி குழந்தை வேண்டும் என்று விரும்பினால் அவன் விரும்பியது போன்று கர்ப்பமும் பிரசவமும் பருவமடைதலும் ஒரே நேரத்தில் நடந்துவிடும். ஆனால் குழந்தை வேண்டுமென்று சுவர்க்கவாசி விரும்பமாட்டார். சுவர்க்கத்தில் (அதிகளவு) உடலுறவு இருக்கும் (ஆனால்) குழந்தை உண்டாகாது (அவர்) “விரும்பினாலே தவிர’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (திர்மிதி: 2688)

சுவர்க்கவாசிகளின் கட்டுடலுக்கு ஏற்பவே அவர்களின் துணைவியரும் சொல்லொண்ணா அழகில் இருப்பார்கள்:

நிச்சயமாக இறையச்சமுடையோருக்கு வெற்றி பாக்கியம் உள்ளது. தோட்டங்களும், திராட்சைப் பழங்களும் “ஒரே சம வயதுடைய கன்னியரும்” உண்டு. (78:33) என்றும்,

“சுவர்க்கவாசிகளான ஆண்களைப் போன்றே அவர்களின் துணைவியர்களும் சம வயதுடையவர்களாகவும், உயரமானவர்களாகவும், கன்னியர்களாகவும் அழகிய தோற்றமுடையவர்களாகவும்  இருப்பார்கள்”  என்பதை,

“நிச்சயமாக (“ஹூருல் ஈன்’ என்னும் கண்ணழகுக் கன்னிப் பெண்களைப்) புதிய படைப்பாக நாம் உண்டாக்கி அப்பெண்களைக் கன்னியர்களாகவும், (தமது துணைவரை மாத்திரமே) காதலிப்பவர்களாகவும் சம வயதினராகவும் (சுவர்க்கவாசிகளான) வலப்புறத்தோருக்காக (ஆக்கிவைத்துள்ளோம்” 56:35-38)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். சுவர்க்கத்தில் முதலாவதாக நுழையும் அணியினரின் முகங்கள் பெளர்ணமி இரவில் ஒளிரும் பூரண சந்திரனைப் போன்று (பிரகாசமாகவும், அழகாகவும்) தோற்றமளிப்பார்கள். பிறகு அவர்களுக்கு அடுத்து வருபவர்கள் விண்ணில் நன்கு பிரகாசிக்கும் நட்சத்திரங்களைப் போன்று தோற்றமளிப்பார்கள்… அவர்களுடைய மனைவிமார்கள் அகன்ற விழிகளையுடைய (கண்ணழகுக்) கன்னியர்களாவர் (சுவர்க்கவாசிகளான) அவர்கள் (அனைவரும்) ஒரே மனிதனின் அமைப்பில் படைக்கப்பட்டிருப்பார்கள் என்று (அபூஹுரைரா(ரழி), புகாரி: 3245, 3246, 3254, 3327. முஸ்லிம்: 5450. 5451.5452.திர்மிதி: 2460, தஃப்சீர் இப்னு கஸீர் : 7:968,969)

“ஹூருல்  ஈன்”  எனும் நீண்ட   கண்களையுடைய   கண்ணழகுக் கன்னியர்களை  அவர்களுக்குத்  துணைவியாக்கப்படும் :

மேலும் நாம் அவர்களுக்கு நீண்ட கண்களையுடைய (ஹூருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம். (52:20,44:54) “ஹூருல் ஈன்’ (என்னும் கண்ணழகுக் கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர். (55:72) ஹூருல் ஈன் (என்னும் நெடிய கண்களையுடைய) கன்னியர் (அங்கு இவர்களுக்கு) இருப்பர். (56:22) அவர்களை (சுவர்க்கவாசிகளான) இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும் எந்த ஜின்னும் தொட்டுக் கூடத் தீண்டிப் பார்த்திருக்கமாட்டார்கள். (56:74) அவர்கள் மாணிக்கத்தையும் முத்தையும் போன்று (மிக அழகாக) இருப்பார்கள். (55:58)

அழகும் நற்குணமுள்ள (55:70), கீழ் நோக்கிய (28:52), அடக்கமான, பார்வையுடைய (37:48), நெடிய கண்களுடன், (37:48), பரிசுத்தமானவர்களாகிய (4:57), தூய துணைகளாகிய (3:15, 2:25), முத்துக்களைப் போன்ற (56:23, 37:49), வேறெவரும் தீண்டியிராத (55:56), ஒத்த வயதுடைய கன்னிகளும் (78:33, 38:52)

“ஹூர்” எனும் சொல்லுக்குக் “கன்னங்கரு விழியாள் என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் பொருள் கூறியுள்ளார்கள். (புகாரி : பாகம்: 5, பக்கம், 652, பாடம்:2)

“சுவர்க்கத்தில் ஒவ்வொரு மனிதருக்கும் “ஹூருல் ஈன்” எனப்படும் அகன்ற (மான்களின் கண்களைப் போன்ற அழகிய) விழிகளையுடைய மங்கையரிலிருந்து இரண்டு மனைவிமார்கள் இருப்பார்கள். அவர்களின் ஒவ்வொருவருடைய கால்களின் எலும்பு மஜ்ஜைகள் (காலின் அபரிவிதமான) பேரழகின் காரணத்தால் எலும்புக்கும் சதைக்கும் அப்பாலிருந்து வெளியே தெரியும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி) புகாரி : 3254,3245,3246)

சுவர்க்கத்தில் “ஹூருல் ஈன்கள்” ஒன்று கூடும் இடமிருக்கிறது (அங்கே அவர்கள் ஒன்றுகூடி) நாங்கள் நிரந்தரமானவர்கள், நாங்கள் அழியாதவர்கள், நாங்கள் இனிமையானவர்கள், எங்களுக்கு எதுவும் தேவையில்லை, நாங்கள் திருப்தியுடன் நடப்பவர்கள், அதிருப்தி கொள்ளாதவர்கள், நாங்கள் எவருக்கு உரியவர்களோ எவர் எங்களுக்கு உரியவர்களோ அவர்களுக்கு வாழ்த்துக்கள் என்று உரத்த குரலில் கூறுவார்கள். அதுபோன்ற (இனிமையிலும் மிக இனிமையான) குரலை (அதற்கு முன்னர் வேறு) எந்தப் படைப்பினமும் செவியுற்றதில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அலி(ரழி) அபூஹுரைரா(ரழி), அபூசயீத்(ரழி) அனஸ்(ரழி), திர்மிதி: 2689)

“சுவர்க்கவாசிகளில் (ஹூருல் ஈன்களில்) ஒரு பெண், உலகத்தாரை எட்டிப் பார்த்தால் வானத்திற்கும் பூமிக்குமிடையே உள்ள அனைத்தையும் பிரகாசமாக்கி விடுவாள், பூமியை நறுமணத்தால் நிரப்பி விடுவாள், அவளுடைய தலையிலுள்ள முக்காடோ உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்ததாகும்” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அனஸ்(ரழி), புகாரி: 2796) மேலும்,

“சுவர்க்கத்துப் பெண்களுடைய கால் களின் வெண்மை எழுபது ஆடைகளுக்கு அப்பாலிருந்தும் காணக்கூடியதாக இருக்கும். (அவர்களது கால் எலும்புக்குள் இருக்கும்) மஜ்ஜையும் (வெளியே) காணப்படும் அவர்கள் பவளமும், வெண் முத்துமாக இருப்பார்கள். பவளம் என்பது ஒரு வகைக் கல்லாகும். அதனுள் ஒரு நூலை நுழைத்தால் வெளிப்புறமிருந்து அந்த நூலை நீ காணலாம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்” (இப்னு மஸ்ஊத்(ரழி) திர்மிதி: 2654-2660) ஆனாலும்,

சுவர்க்கத்தில் உலகப் பெண்களே சிறப்புடையவர்கள் :

நான் ஒருநாள் நபி(ஸல்) அவர்களிடம் “சுவர்க்கவாசிகளான உலகப் பெண்கள் சிறப்புமிக்கவர்களா?” அல்லது “ஹூருல் ஈன்களும்” பட்டாடையின் வெளிப்புறத்திற்கும் உள்புறத்திற்கும் உள்ள வித்தியாசத்தைப் போன்று உள்ளது. உலகப் பெண்கள் (பட்டாடையின்) வெளிப்புறத்தைப் போன்றும். “ஹூருல் ஈன்கள்” உட்புறத்தைப் போன்றுமாகும். “ஹூருல் ஈன்களைப் பார்க்கிலும் உலகப் பெண்களே அந்தஸ்தில் சிறப்பு உடையவராக இருப்பார்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் அதற்கு (என்ன) காரணம் (என்று) கேட்டதற்கு உலகப் பெண்கள் தொழுதிருக்கின்றார்கள், நோன்பு பிடித்திருக்கின்றார்கள். மேலும் அநேக வகையான வணக்க வழிபாடுகளைச் செய்திருக்கின்றார்கள். அதன் காரணமாகவே (உலகப் பெண்கள்) சிறப்பாக விளங்குகிறார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (உம்மு ஸலமா(ரழி) தப்ராணி) அதை மேலும் உறுதிப்படுத்தும் முகமாக, சுவர்க்கவாசிகளில் பெண்களின் தலைவி பாத்திமா(ரழி) ஆவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆயிஷா (ரழி), புகாரி: பாகம், 4, பக்கம் 358, பாடம் 12, 3624)

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Previous post:

Next post: