காயிப் ஜனாஸா…

in 2020 ஜுலை

காயிப் ஜனாஸா…

S.H. அப்துர் ரஹ்மான்

அன்புள்ள சகோதரர்களே,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இன்றைய லாக்டவுன் சூழலில் ஏற்படும் மரணங்களில் ஜனாஸா தொழுகைக்கு கூட்டம் கூட அனுமதி இல்லை. ஜனாஸாவில் கலந்து கொள்ள நெருங்கிய உறவினர் 20-25 நபர்களுக்குத்தான் அனுமதியுள்ளது. வெளியூர் பயணங்களுக்கும் பல கட்டுப்பாடுகள் உள்ளன. அதனால் பலரும் ஜனாஸா தொழுகையில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைப்பது இல்லை.

இதற்கு தீர்வு ஃகாயிப் ஜனாஸாத் தொழுகை ஆகும். இதை அவரவர் இருப்பிடங்களிலேயே செய்யலாம் அதுபற்றி போதிய விழிப்புணர்வு இஸ்லாமியரான பலருக்கு தெரியவில்லை. சில உலமாக்களின் தவறான தடைகளால் மக்களிடம் இது குறித்த விளக்கம் சென்று அடையவில்லை. இது குறித்து நபி(ஸல்) கால நிகழ்வுகளையும் பார்ப்போம். அல்லாஹ் நம் அனைவருக்கும் வழிகாட்டுவானாக.

ஜனாஸா தொழுகை :

இணை கற்பிக்காதவர்களுக்கே ஜனாஸா தொழுகை :

ஜனாஸா தொழுகை என்பதில் தொழுகை என்ற சொல் உள்ளடங்கி இருந்தாலும் இதில் ருகூவு, ஸஜ்தா மற்றும் இருப்புக்கள் கிடையாது. நின்ற நிலையில் இறைவனைப் போற்றிப் புகழ்வதும் இறந்தவர்களின் மறுமை நன்மைக்காகப் பிரார்த்தனை செய்வதும் தான் ஜனாஸா தொழுகையாகும்.

இவ்வுலகில் நன்மைகளை வேண்டி முஸ்லிம்களுக்காகவும், முஸ்லிம் அல்லாதவர்களுக்காகவும் நாம் பிரார்த்தனை செய்யலாம். ஆனால் மறுமை நன்மைகள் இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு மட்டுமே உரியது என்று இஸ்லாம் பிரகடனம் செய்வதால் இறைவனை நிராகரிக்காதவர்களுக்கும், இணை கற்பிக்காதவர்களுக்கும் மட்டுமே ஜனாஸா தொழுகை நடத்த வேண்டும்.

கீழ்க்காணும் குர்ஆன் மற்றும் ஹதீஃத் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

அவர்களில் யாராவது ஒருவர் இறந்து விட்டால் அவருக்காக நீர் ஒருக்காலும் (ஜனாஸா) தொழுகை தொழவேண்டாம். இன்னும் அவர் கப்ரில் (பிரார்த்தனைக்காக) நிற்க வேண்டாம். ஏனென்றால் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரை யும் நிராகரித்துப் பாவிகளாகவே இறந்தார் கள். (அல்குர்ஆன்: 9:84)

இப்னு உமர்(ரழி) அறிவித்தார் :

அப்துல்லாஹ் இப்னு உபை இறந்து விட்டபோது அவரின் புதல்வர் அப்துல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரழி), இறைத் தூதர்(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தங்களின் சட்டையை அவரிடம் கொடுத்து அப்துல்லாஹ் இப்னு உபையை அதில் கஃபனிடும்படி உத்தரவிட்டார்கள். பிறகு அவருக்கு (ஜனாஸாத் தொழுகை நடத்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் எழுந்தார்கள். அப்போது உமர் இப்னு கத்தாப்(ரழி), நபி(ஸல்) அவர்களின் ஆடையைப் பிடித்துக் கொண்டு, நயவஞ்சகராயி ருந்த இவருக்கு நீங்கள் தொழுகை நடத்துவீர்களா? அல்லாஹ்வோ, இவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோர வேண்டாம் என்று உங்களைத் தடுத்துள்ளானே! என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், (அவர்களுக்காக நான் பாவமன்னிப்புக் கோரலாம். அல்லது கோராமலும் இருக்கலாம் என்று) “எனக்கு அல்லாஹ் நான் விரும்பியதைச் செய்துகொள்ள அனுமதியளித்துள்ளான் அல்லது “அல்லாஹ் எனக்கு இவ்வாறு அறிவித்துள்ளான்’ என்று கூறி, (நபியே!) நீங்கள் அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருங்கள்; அல்லது கோராமல் இருங்கள். (இரண்டும் ஒன்றுதான். ஏனெனில்) அவர்களுக்காக நீங்கள் எழுபது முறை பாவமன்னிப்புக் கோரினாலும் அவர்களை ஒரு போதும் அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். எனும் (திருக்குர்ஆன்:9:80வது) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள். பிறகு, “நான் எழுபது முறையை விட அதிகமாக (இவருக்காக அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோருவேன்’ என்று கூறினார்கள். பின்னர், இறைத்தூதர்(ஸல்) அவர்கள், அவருக்கு (ஜனாஸா)த் தொழுகை நடத்தினார்கள். நாங்களும் அவர்களுடன் தொழுதோம். பிறகு அல்லாஹ் “அவர்களில் இறந்துவிட்ட எவருக்காகவும் (நபியே!) நீங்கள் (ஜனாஸாத்)தொழுகை நடத்த வேண்டாம். அவரின் மண்ணறை அருகேயும் (அவருக்காகப் பாவமன்னிப்புக் கோரி) நீங்கள் நிற்க வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுத்துவிட்டார்கள். மேலும், பாவிகளாகவே அவர்கள் இறந்தார்கள்’ எனும் (திருக்குர்ஆன் : 9:84வது) வசனத்தை நபிகளாருக்கு அருளினான். புகாரி: 4672

அத்தியாயம் : 65, திருக்குர்ஆன் விளக்கவரை :

ஜனாஸா தொழுகை முஸ்லிம்கள் மீது கட்டாயக் கடமையாகும் :

ஒருவர் இறந்துவிட்டால் அவருக்காக ஜனாஸா தொழுகை நடத்துவது ஒவ்வொரு தனி நபர்கள் மீதும் கடமையில்லை. மாறாக சமுதாயக் கடமையாகும்.

ஒரு ஊரில் உள்ளவர்களில் நெருக்க மானவர்களில் சிலர் இத்தொழுகையை நடத்திவிட்டால் கடமை நிறைவேறிவிடும்.

ஜனாஸாத் தொழுகையில் பெண்கள் :

ஆண்களைப் போன்று பெண்களும் ஜனாஸாத் தொழுகையில் பங்கெடுக்கலாம் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் ஜனாஸாத் தொழுகையில் பங்கெடுத் துள்ளார்கள்.

தனது மகன் உமைர்(ரழி) இறந்தபோது அவரைக் காண வருமாறு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களை அபூதல்ஹா(ரழி) அழைத்தார். நபி(ஸல்) அவர்கள் அவரைக் காண வந்தபோது அவர்களுடைய வீட்டிலேயே அவருக்குத் தொழுவித்தார்கள். தொழுவிப்பதற்கு நபி(ஸல்) அவர்கள் முன்னால் சென்றார்கள். அவர்களுக்குப் பின்னால் அபூதல்ஹா(ரழி) அவர்கள் நின்றார்கள். அவர்களுக்குப் பின்னால் உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் நின்றார்கள். இவர்களைத் தவிர வேறு எவரும் அங்கு இருக்கவில்லை. அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அபீதல்ஹா, நூல்கள் : ஹாகிம்:1350, பைஹகீ : 6699

ஜனாஸா தொழுகை :

தொழும் முறை :

சக முஸ்லிமான சகோதரர்களுக்காக இறுதியாக செய்யும் இத்தொழுகை பற்றி ஒவ்வொரு முஸ்லிமும் முறையாக அறிந் திருத்தல் அவசியமாகும்.

ஜனாஸா தொழுகை நான்கு தக்பீர்களைக் கொண்டது :

  1. முதலாம் தக்பீருக்குப் பின்னர் :

முதல் தக்பீருக்குப் பின்னர் அஊது பிஸ்மியுடன் சூறதுல் பாத்திஹாவை ஓதவேண்டும். (ஸனா ஓதக்கூடாது)

  1. இரண்டாம் தக்பீருக்குப் பின்னர் :

இரண்டாம் தக்பீருக்குப் பின்னர் நபியவர்கள் மீது ஸலவாத்துக் கூற வேண்டும். தொழுகையின் இறுதி அத்தஹிய்யாத்தில் வழமையாக ஓதும் பின்வரும் ஸலவாத்தை ஓதிக்கொள்ள வேண்டும்.

இறைவா! இப்ராஹீம் அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் நீ கருணை புரிந்ததைப் போல் முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தார் மீதும் கருணை புரிந்திடு. நீயே புகழுக்குரியவனும், கண்ணியம் மிக்கவனும் ஆவாய். இறைவா! இப்ராஹீம் அவர்களின் மீதும் இப்ராஹீம் அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ உன் அருள் வளத்தைப் பொழிந்ததைப் போல் முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத் தார் மீதும் உன் அருள் வளத்தைப் பொழிந் திடு. நீயே புகழுக்குரியவனும், கண்ணியம் மிக்கவனும் ஆவாய்’ என பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : அப்துர் ரஹ்மான் இப்னு அபீ லைலா(ரஹ்) நூல்: புகாரி: 3370

  1. மூன்றாம் தக்பீருக்குப் பின்னர் :

மூன்றாம் தக்பீரில் ஜனாஸாவுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும். நபி(ஸல்) அவர்கள் இதற்காகப் பல துஆக்களைக் கற்றுத் தந்துள்ளார்கள். கற்றுத்தந்த துவாக் களை கேட்க வேண்டும். “யா அல்லாஹ்! இவருக்கு மன்னிப்பளிப்பாயாக! அவருக்கு அருள் புரிவாயாக! நிவாரணம் அளிப்பா யாக! குற்றங்களை மன்னிப்பாயாக! அவரது தங்குமிடத்தை கண்ணியப்படுத்து வாயாக! அவரின் நுழைவிடத்தை விரிவு படுத்துவாயாக! அவரை தண்ணீராலும், பனிக்கட்டியினாலும், குளிர் நீரினாலும் கழுவுவாயாக! வெள்ளை ஆடையைக் கழுவுவது போல் அவரது பாவங்களை விட் டும் அவரை பரிசுத்தப்படுத்துவாயாக! அவ ரது வீட்டை விட சிறந்த வீட்டையும், அவ ரது குடும்பத்தை விட சிறந்த குடும்பத்தை யும் அவரது துணையை விட சிறந்த துணை யையும் வழங்குவாயாக! அவரை சுவனத் தில் நுழைவிப்பாயாக! கப்ருடைய வேத னையை விட்டும் அல்லது நரகத்தையும் விட்டும் அவரைப் பாதுகாப்பாயாக! முஸ்லிம் : 1756, 1757.

  1. நான்காம் தக்பீருக்குப் பின்னர் :

நான்காம் தக்பீருக்குப் பின்னர் துவா செய்யலாம் அடுத்து ஸலாம் கொடுக்கப்படும்.

எளிதான இந்த தொழுகையை இறந்த வரின் குடும்பத்தார் தான் பொறுமையாக தொழுவிப்பது சிறந்ததாகும்.

தற்போது ஜனாஸா தொழுகை அவசர அவசரமாக துவா ஓத கூட நேரம் தராமல் விரைவாக நடத்தப்படுகிறது.

இது இறந்தவருக்குச் செய்யும் மாபெரும் அநியாயமாகும்.

எனவே, தொழுவிப்பவர் முழுமையாக துஆ ஓத இடமளிக்க வேண்டும். ஜனாஸா தொழுகையில் ஜனாஸாவுக்காகப் பிரார்த் தனை செய்வதுதான் முக்கிய அம்சம் என் பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஜனாஸா தொழுகையே ஒரு துவா தான் என்பதால், நபி(ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை முடிந்த பின்னர் மீண்டும் ஜனாஸாவுக்காக கூட்டு துஆ செய்ததில்லை.

ஜனாஸாவை அடக்கம் செய்த பின்னர் இறந்தவருக்காக பாவமன்னிப்புக் கேட்கும் படியும், கப்ரின் கேள்விகளின் போது உறுதியை வழங்கும்படியும் அல்லாஹ் விடம் துஆ செய்யுமாறு வலியுறுத்தியுள் ளார்கள். இந்த அடிப்படையில் பாவமன் னிப்புக் கேட்பதுடன் கப்ரின் உறுதிப்பாட் டுக்காகவும் அவர் அவர் தனித்தனியாகப் பிரார்த்திக்க வேண்டும்.

ஜனாஸாத் தொழுகையில் கலந்து கொள்பவருக்கு ஒரு கிராத் நன்மையுண்டு அடக்கம் செய்யப்படும்வரை கலந்து கொள் பவருக்கு இரண்டு கிராத் நன்மையுண்டு என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இரண்டு கிராத்கள் என்றால் என்ன? என கேட்கப்பட்டது அதற்கவர்கள் இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மைகள்) என்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி), நூல்: புகாரி:1325, முஸ்லிம்: 1723, அபூதாவூத், திர்மிதி.

மற்றத் தொழுகைகளுக்கு உளு அவசியம் போல இதற்கும் அவசியமாகும்.

தொழுகையின் திறவு கோல் தூய்மை (உளூ) ஆகும். அதன் துவக்கம் தஹ்ரீமா (அல்லாஹீ அக்பர் கூறுவது) அதனை முடிப் பது தஸ்லீம் (ஸலாம் கொடுப்பது) என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார் கள். அறிவிப்பவர் : அலீ(ரழி) நூல்கள்: அபூதாவூத், திர்மிதி: இப்னு மாஜா, அஹ்மத்.

இத்தொழுகை ஜமாஅத்தாக நிறைவேற்றப்பட வேண்டும்.

ஜனாஸா இமாமுக்கு முன்னால் வைக்கப்பட வேண்டும். இது பொதுவான சட்டம் ஆகும். ஜனாஸா இல்லாத நிலையில் மறைவான ஜனாஸாவிற்கு தொழுகை நடத்துவது காயிப் ஜனாஸா ஆகும்.

நபி(ஸல்) தொழுகை நடத்திய காயிப் ஜனாஸா :

அபூ ஹுரைரா(ரழி) அறிவித்தார் :

நபி(ஸல்) அவர்கள் நஜ்ஜா´யின் மரணச் செய்தியைத் தம் தோழர்களுக்கு அறிவித்துவிட்டு, பிறகு சற்று முன்னால் நகர்ந்தார்கள். மக்கள் அவர்களுக்குப் பின் னால் அணி வகுத்து நின்றதும் நபி(ஸல்) அவர்கள் நான்கு தக்பீர்கள் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள்) புகாரி: 1318, 1320 அத். 23, ஜனாஸாவின் சட்டங்கள் :

ஜாபிர் (ரழி) அறிவித்தார் :

(மன்னர்) நஜ்ஜாU இறந்தபோது நபி (ஸல்) அவர்கள், “இன்று (ஒரு) நல்ல மனிதர் இறந்துவிட்டார். எனவே, எழுந்து நின்று உங்கள் சகோதரர் “அஸ்ஹமா’வுக்காக (ஃகாயிப் ஜனாஸாத் தொழுகை) தொழுங் கள்’ என்று கூறினார்கள். புகாரி: 3877, அத். 63, அன்சாரிகளின் சிறப்புகள்:

அபூ ஹுரைரா(ரழி) அறிவித்தார் :

அவர்கள் நஜ்ஜா´(மன்னர்) இறந்த அன்று அவரின் மரணச் செய்தியை மக்க ளுக்கு அறிவித்தார்கள். பிறகு தொழுமிடத் திற்கு வந்து மக்களை வரிசைப்படுத்தி நிற்க வைத்து, நான்கு தக்பீர்கள் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தி) னார்கள். புகாரி: 1245, அத். 23, ஜனாஸாவின் சட்டங்கள்.

ஏற்கனவே தொழுகை நடத்தப்பட்ட வருக்கு நபி(ஸல்) மீண்டும் ஜனாஸா தொழுததற்கு ஆதாரம் :

அபூஹுரைரா(ரழி) அறிவித்தார் :

பள்ளிவாசலை சுத்தம் செய்பவராக இருந்த ஒரு கறுத்த ஆண் அல்லது கறுத்த பெண்மணி இறந்துவிட்டார். அவரைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் விசாரித்தபோது அவர் இறந்துவிட்டதாகக் கூறினார்கள். “இதை (முன்பே) என்னிடம் நீங்கள் சொல் லியிருக்க வேண்டாமா? அவரின் அடக்கத் தலத்தை எனக்குக் காட்டுங்கள்! என்று நபி (ஸல்) கூறிவிட்டு அவரின் அடக்கத்தலத் துக்கு வந்து அவருக்கு (ஜனாஸா) தொழுகை நடத்தினார்கள். புகாரி: 458, அத். 8. தொழுகை.

இச்செய்தி 460,469,1247,1321,1337 ஆகிய ஹதீஃத்களாக உள்ளது. இதில் நபி(ஸல்) தொழுகை நடத்தப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட ஒருவருக்கு மீண் டும் தொழுகை நடத்தியது தெளிவுபடுத்தப் படுகிறது.

8 வருடம் கடந்து பின் இறந்தவர்களுக்கு தொழுகை :

உக்பா இப்னு ஆமிர்(ரழி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (உஹு துப் போர் நடந்து) எட்டு ஆண்டுகளுக்குப் பின் உஹுதில் கொல்லப்பட்டவர்களுக் காக (ஜனாஸாத் தொழுகை) தொழுகை நடத்தினார்கள். (அது) உயிரோடுள்ளவர் களிடம் இறந்தவர்களிடமும் (மறுமைப் பயணத்திற்கு) விடை பெறுவது போலிருந் தது. பிறகு அவர்கள் மேடை மீது ஏறி, “நிச்ச யமாக நான் உங்களுக்காகக் காத்திருப்பேன் உங்களுக்கு நான் சாட்சியும் ஆவேன். (என் னைச் சந்திக்க) உங்களுக்கு வாக்களிக்கப் பட்டுள்ள இடம் (கவ்ஸர் எனும்) தடாகம் ஆகும். நான் இங்கிருந்தே (மறுமையில் எனக்குப் பரிசளிக்கப்படவுள்ள) அந்தத் தடாகத்தைக் காண்கிறேன்.

நிச்சயமாக! (என்னுடைய மரணத்துக்குப் பின்னால்) நீங்கள் இணை வைப்பவர்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. ஆனால், உலகத்திற்காக நீங்கள் ஒருவரோடொருவர் (போட்டியிட்டு) மோதிக் கொள்வீர்களோ என்றே அஞ்சுகிறேன்’ என்று கூறினார்கள். நான் இறைத் தூதர்(ஸல்) அவர்களைப் பார்த்த இறுதிப் பார்வையாக அது அமைந்தது. புகாரி: 4042, அத். 64, (நபிகளார் காலத்துப்) போர்கள்.

இந்த ஹதீஃதில் தொழுகை நடத்தாமல் இருந்தால் வருடம் கழித்து பின்பு கூட ஒருவருக்கு ஜனாஸா தொழுகை தொழலாம் என்று புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் மக்களிடம்,

ஒருமுறை ஜனாஸாவிற்கு தொழுகை நடத்தப்பட்டால் மீண்டும் நடத்த கூடாது என்றும் தனியாக துவா செய்தால் போது மானது என்ற கருத்தையும், இறந்தவரை அறிந்தவர் எல்லோர் மீதும் ஜனாஸா தொழுகை கடமையில்லை என்றும் சிலர் கூறுகின்றனர். இது அவர்களின் அறியா மையை காட்டுகிறது. ஜனாஸா தொழுகை என்பதே ஒரு பிரார்த்தனை தான். அதில் துவா செய்வதை தவிர ருகூ ஸஜ்தா எதுவும் இல்லை. அது வணக்க வழிபாடும் இல்லை. ஒரு ஜனாஸாவிற்கு பலரும் துவா செய்யலாம். இது புரியாத சிலரால் தான் இந்த வாதம் வைக்கப்படுகிறது. ஜனாஸா தொழ வைத்தவர்களுக்கு மீண்டும் ஜனாஸா தொழுகை இல்லை என்ற வாதம் பள்ளிவாசலை தூய்மை பணியில் ஈடுபட்ட கருப்பு நிற அந்த மனிதருக்கு நபி(ஸல்) அவர்கள் இரண்டாவதாக ஜனாஸா தொழுததன் மூலம் அடிபட்டு போகிறது. அதனை அடுத்து பல குழுக் களாக நபி(ஸல்) அவர்களின் ஜனாஸா தொழுகை பலமுறை நடைபெற்றதற்கான ஹதீஃத் ஆதாரங்கள் கீழே.

நபி(ஸல்) அவர்களுக்கு நடந்த பல ஜனாஸா தொழுகை :

அபு அஸீம்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் (ஜனாஸா) தொழுகையில் கலந்து கொண்டார்கள். நபியவர்களுக்கு எப்படி நாம் தொழுகை நடத்துவது என்று (ஸஹாபாக்கள் ஒருவருக்கொருவர்) கேட்டுக் கொண்டார்கள். பிறகு ஒவ்வொரு குழுவினராக உள்ளே நுழையுங்கள் என்று கூறினார்கள். அவர்கள் (நபியவர்களின் வீட்டின்) ஒரு வாசல் வழியாக உள்ளே நுழைந்து அவர்களுக்காக (ஜனாஸா) தொழுது விட்டு பிறகு மற்றொரு வாசல் வழியாக வெளியேறுபவர்களாக இருந்தார்கள். அறிவிப்பவர் : அபூ அஸீம்(ரழி), நூல்: அஹ்மத். 19837

இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் அறி விக்கிறார்கள்: நபியவர்கள் தம்முடைய வீட்டிலுள்ள கட்டிலின் மேல் வைக்கப்பட்டார்கள். பிறகு மக்கள் தனித்தனி குழுவினராக நபியவர்களிடத்தில் நுழைந்து அவர் களுக்காக தொழுதார்கள். அவர்கள் தொழுது முடித்த பிறகு பெண்களை (தொழுவதற்காக நபியவர்களின் வீட்டிற்குள்) அனுமதித்தார்கள். அவர்கள் தொழுது முடித்த பிறகு சிறுவர்களை அனுமதித்தார்கள். நபியவர்களின் (ஜனாஸாவிற்கு) எந்த ஒருவரும் மக்களுக்கு இமாமாக நின்று தொழுகை நடத்தவில்லை. நூல்: இப்னு மாஜா : 1617.

நபி(ஸல்) அவர்களுக்கு நடந்த பல ஜனாஸா தொழுகையின் மூலம், கருப்பு நிற பள்ளியை பெருக்குபவருக்கு நபி(ஸல்) நடத்திய இரண்டாவது தொழுகை. நபி(ஸல்) அவர்களின் தனி சிறப்பு என்ற கருத்தும் உடைக்கப்படுகிறது. நபி(ஸல்) அவர்களின் ஜனாஸா பலமுறை நடந்தது என்பதற்கு சான்றாக இந்த ஹதீஃத் விளங்குகிறது.

அந்நிய ஊரில் மரணமாகிய ஒருவருக்கு அவ்வூரில் ஜனாஸா தொழுகை நடத்தப்படவில்லை என்று தெரிந்தால் மட்டுமே பிறர், மறைவான ஜனாஸா தொழுகை நடத்த வேண்டும் என்று கூறுவது முறையல்ல. காரணம் மேற்கண்டவாறு நபித்தோழர்களால் தொழ வைத்து அடக்கம் செய்யப்பட கப்ரின் அருகில் நின்று பிறரால் தொழ வைக்கப்பட்ட மய்யித்துக்கே மீண்டும் நபி (ஸல்) அவர்கள் தொழவைத்துள்ளார்கள். இதன்படி தொழ வைத்த மய்யித்துக்கு தொழ வைப்பது ஆகும் என்பது தெளிவாகிறது.

ஆகவே உள்ளூரில் தொழ வைத்து அடக்கம் செய்யப்பட்ட மய்யித்துக்கு பிறர் தொழவைத்து விட்டதால் மீண்டும் மற்றவர் தொழ வைப்பது கடமையில்லாவிடினும் மீண்டும் தொழ வைப்பது ஆகுமாயிருப்பது போல், பிற ஊரில் மரணமாகிய ஒருவருக்கு அவ்வூரார் தொழுகை நடத்தியிருப்பதால் மற்ற ஊரார், அவருக்கு தொழுகை நடத்துவது கடமையில்லை என்றாலும் அவருக்காக அவர்களின் நெருங்கிய உறவுகள் மறைவான ஜனாஸா தொழுகை நடத்தக் கூடாது என்பதற்கு போதிய சான்றுகள் இல்லை. எனவே நபி (ஸல்) நஜ்ஜா´ மன்னர் மரணத்தில் செய்து காட்டிய ஒன்றை தவறாக சித்தரித்து ஊரடங்கு காலத்தில் பல முஸ்லிம் ஜனாஸாக்களுக்கு மக்கள் துவா செய்வதை தடுக்க வேண்டாம் என்பதை எனது புரிதலாக உங்களிடம் சமர்ப்பிக்கின் றேன். அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக.

Previous post:

Next post: