சுவர்க்கம் என்பதும் மறைவான இறை நம்பிக்கையில் உள்ளதாகும்…

in 2020 ஜுலை

சுவர்க்கம் என்பதும் மறைவான இறை நம்பிக்கையில் உள்ளதாகும்…

எஸ்.எம். அமீர்,  நிந்தாவூர், இலங்கை.

ஜூன் மாத தொடர்ச்சி….

சுவர்க்கவாசிகள் என்றைக்கும் நோயுற மாட்டார்கள் :

சுவர்க்கத்தில் நுழைகின்ற முதலாவது அணியினர் பெளர்ணமி இரவில் ஒளிரும் பூரண சந்திரனைப் போன்று தோற்றமளிப் பார்கள், அவர்களுக்குப் பின்னே வருபவர்கள் விண்ணில் பேரொளி வீசும் நட்சத்திரத்தைப் போன்று இருப்பார்கள். அவர்கள் என்றைக்கும் நோயுறமாட்டார்கள் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரி : 3246 முஸ்லிம் : 2837)

மற்றுமொரு ஹதீஃதில் வந்துள்ளதாவது சுவர்க்கவாசிகள் சுவர்க்த்தினுள் நுழைந்ததும் பொது அறிவிப்பாளர் ஒருவர் “இனி நீங்கள்.. நோய்வாய்ப்படவே மாட்டீர்கள்…” என்று அறிவிப்புச் செய்வார் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி) அபூ சயீத் அல்குத்ரீ(ரழி) முஸ்லிம்: 5457, 2837, முஸ்னத் அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர்: 4:334, 697)

சுவர்க்கவாசிகள் உடல்நலத்துடன்தான் இருப்பார்கள் :

“சுவர்க்கவாசிகள்’ சுவர்க்கத்தினுள் நுழைந்ததும், பொது அறிவிப்பாளர் ஒருவர் “இனி நீங்கள் உடல்நலத்துடன்தான் இருப்பீர்கள்…” என்று அறிவிப்புச் செய்வார் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி), அபூசயீத் அல் குத்ரீ(ரழி) முஸ்லிம்: 5457, 2837, முஸ்னத் அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர் : 4:334,697)

சுவர்க்கவாசிகள் ஒருபோதும் முதுமையாகி விடமாட்டார்கள் :

“சுவர்க்கவாசிகள்” சுவர்க்கத்தினுள் நுழைந்ததும் பொது அறிவிப்பாளர் ஒருவர் “இனி நீங்கள் ஒருபோதும் முதுமையடையவே மாட்டீர்கள்…” என்று அறிவிப்புச் செய்வார் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா (ரழி), அபூசயீத் அல்குத்ரீ (ரழி), முஸ்லிம்: 5457, 2837, முஸ்னத் அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர்: 4:334, 697)

சுவர்க்கவாசிகள் இளமையோடுதான் இருப்பார்கள் :

“சுவர்க்கவாசிகள்” சுவர்க்கத்தினுள் நுழைந்ததும் பொது அறிவிப்பாளர் ஒருவர் இனி… நீங்கள் என்றும் இளமையோடுதான் இருப்பீர்கள்.. என்று அறிவிப்புச் செய்வார் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி), அபூசயீத் அல்குத்ரீ(ரழி), முஸ்லிம்: 5457, 2837, திர்மிதி: 2646, 2662, முஸ்னத் அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர் : 4:334, 697)

சுவர்க்கவாசிகளின் கட்டில்கள், மஞ்சங்கள் :

சுவர்க்கவாசிகளும், அவர்களுடைய துணைவிகளும் அணி அணியாகப் போடப்பட்ட (பொன்னால்) பின்னப்பட்ட சொகுசுக் கட்டில்களில் பசுமையான இரத்தினக் கம்பளங்களின் மீதும் அழகுமிக்க விரிப்புக்களின் மீதும் ஒருவரை ஒருவர் முன்னோக்கி யவர்களாக அவற்றின் மீது (மகிழ்ச்சியுடன்) சாய்ந்தவர்களாக இருப்பார்கள். (36:56, 37:44, 56:15,16, 52:20, 55:76, 83:23 88:13, 15:47, 18:31) அவர்களும் அவர்களுடைய துணைகளும் கட்டில்களில் சாய்ந்தவர்களாக இருப்பார்கள் என்பதற்கு கட்டில்கள், மஞ்சங்கள் என்பதைக் குறிக்க “அல் அராயிக்” எனும் சொல் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது. இது “அரீகத்” என்பதன் பன்மை ஆகும். இது விதானங்களுக்கு அடியிலுள்ள கட்டில்களைக் குறிக்கும் என்று இப்னு அப்பாஸ் (ரழி) முஜாஹித்(ரஹ்) இக்ரிமா(ரஹ்) ஆகியோரும், மணவறைக்குள்ளிருக்கும் மஞ்சத்தை (படுக்கையோடு) கூடிய கட்டிலை)க் குறிக்கும் என்று இப்னு கஸீர்(ரஹ்) அவர்களும் “மணவறைகளிலுள்ள கட்டில்கள்” என்று கத்தாதா(ரஹ்) ஆகியோரும் கூறியுள்ளனர். அதாவது மணமக்களுக்காக அலங்கரிக்கப்படும் மேற்கவிகையுடன் கூடிய கட்டிலை, மஞ்சத்தை இது குறிக்கும்.
(தஃப்சீர் இப்னு கஸீர்: 7:666,667, 5:430)

அங்குள்ள கட்டில்களின் மெத்தைகள்:

அவர்கள் (கட்டில்களின்) விரிப்புகளின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள் அவற்றின் (அவ்விரிப்புகளின்) உட்புறங்கள் “இஸ்தப்ரக்” என்னும் தடித்த பட்டுத்துணியால் ஆனவையாகும் (55:54) என்று அல்லாஹ் கூறுகின்றான் அவற்றின் உட்புறங்களே பட்டாக இருந்தால் வெளிப் புறங்களின், மேல்புறங்களின், தரங்களின் உயர்நிலை பற்றிச் சொல்லவே தேவையில்லை.  (தஃப்சீர் இப்னு கஸீர் : 2:226)

நிச்சயமாக ஒரு மனிதன் கட்டில் மெத்தையில் நாற்பது ஆண்டுகள் சாய்ந்து அமர்ந்திருப்பான், அதிலிருந்து வெளியேற மாட்டான். அங்கிருப்பது அவனுக்குச் சடைவை ஏற்படுத்தாது. அவனது மனம் விரும்பும் அனைத்தும் அவனிடம் வரும், அவன் காணும் காட்சிகள் அவனை இன்புறச் செய்யும். (இதனை ஹைஸம் பின் மாலிக் தாயி (ரஹ்) என்பவரிடமிருந்து தஃப்சீர் இப்னு அபீ ஹாத்திம், இப்னு கஸீர்: 8:713)

சுவர்க்கத்தில் ஒரு மனிதன் எழுபது ஆண்டுகள் மெத்தையில் சாய்ந்து அமர்ந்தி ருப்பான் அவனிடம் அவனுடைய மனைவியரும், பணியாட்களும் இருப்பார்கள். மேலும் அல்லாஹ் வழங்கியிருக்கும் கணணியமும் அருட்பேறுகளும் அனைத்தும் அவனுக்கு வழங்கப்படும், அவற்றை ஒருமுறை பார்த்து முடிந்ததும் வேறு புதிய இணைகள் அவனுக்குக் கிடைக்கும் அதற்கு முன்பு அவர்களை அவன் பார்த்திருக்க மாட்டான். அவர்கள் அவனிடம் கூறுவார்கள். உன்னிடம் இருந்து எங்களுக்கு (ஓர் இன்பப்) பங்களிப்பை நீ அமைத்துத் தரும் நேரம் நெருங்கிவிட்டது என்று. (இதனை ஸாயித் அல் பன்னானீ(ரஹ்) என்பவரிடமி ருந்து நபித்தோழர்கள் கருத்தாக இப்னு அபீஹாத்தம்(ரஹ்) அவர்கள் அறிவிக்கின் றார்கள். (தஃப்சீர் இப்னு கஸீர் : 8:713,714)

சுவர்க்கத்தில் உயர்ந்த அரியாசனங்கள் இருக்கைகள் :

அதில் அவர்கள் உயர்ந்த இருக்கைகள் மீது (சாய்ந்தவாறு) பார்த்துக் கொண்டிருப் பார்கள். (83:23, 76:13) மேலும் (அவர்கள்) உயரமான விரிப்புகளில் (அமர்ந்திருப்பார் கள் 56:34) என்பதை விளக்கும்போது “அதன் உயரம் வானம் பூமிக்கு இடைப்பட்ட ஐந்நூறு ஆண்டுகள் பயணத் தொலைவுடையது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். “மேலும் விரிப்புக்கள் பல தரங்களில் அமைந்திருக்கும் ஒரு தரத்துக்கும் அடுத்த தரத்துக்கும் உள்ள (தர) இடைவெளி வானம் பூமிக்கிடையே உள்ள இடை வெளி போன்றதாகும்” என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி : 2663, அஹ்மத், நஸயீ)

சுவர்க்கத்தில் அவர்கள் முகம் பார்க்கும் கண்ணாடி :

சுவர்க்கத்தில் ஒரு மனிதன் எழுபது ஆண்டு தலையணிகளில் சாய்ந்திருப்பான். பிறகு ஒரு பெண்மணி அவனிடத்தில் வந்து அவனுடைய இரண்டு தோள் புஜங்களிலும் தட்டுவாள். அப்போது அம்மனிதன் அப்பெண்ணின் கன்னத்தில் தன்னுடைய முகத்தைக் கண்ணாடியில் பார்ப்பதைவிடத் தெளிவாகப் பார்ப்பான். அந்தப் பெண் மணியிடத்திலிருக்கும் முத்துக்களில் குறைந்த மதிப்புள்ள முத்துக்கள் கிழக்கு மற்றும் மேற்குத் திசைகளுக்கு இடைப்பட்ட இடத்தைப் பிரகாசிக்கச் செய்யும் அப் பெண்மணி அவனுக்குச் சலாம் கூறி அதற்குப் பதிலளித்து விட்டு நீ யார்? என்று கேட்பான். அதற்கு அப்பெண்மணி நான் உனது மேலதிகமான அருட்கொடை என்று கூறுவார். அப்பெண்மணி எழுபது ஆடைகள் அணிந்திருப்பாள் (இருப்பினும்) அவனுடைய பார்வை எதுவரை ஊடுருவிச் செல்லும் என்றால் அவளுடைய தொடையின் உட்பகுதியில் உள்ள மஜ்ஜைப் பார்ப்பான். மேலும் அவளுடைய தலையில் கிரீடம் இருக்கும் அதில் (பதிக்கப்பட்டுள்ளதில்) குறைந்த மதிப்பிலுள்ள முத்துக்கள் கிழக்கிற்கும், மேற்கிற்கும் இடைப்பட்ட இடங்களைப் பிரகாசிக்கச் செய்யும் என்று அல் லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறி னார்கள். (அபூஸயீத்(ரழி) முஸ்னத் அஹ்மத்)

சுவர்க்கத்தின் உன்னதமான விரிப்புகள் கம்பளங்கள் :

விரிக்கப்பட்ட பச்சை நிறத்து இரத்தினக் கம்பளத்தின் மீதும் அழகிய சாய்மானத்தின் மீதும் சாய்ந்து கொண்டிருப்பார்கள்.  (55:76, 88:16)

மேலும் (அவர்கள்) உன்னதமான விரிப்புகளில் (அமர்ந்திருப்பார்கள் 56:34) என்பதை விளக்கும்போது, அதன் உயரம் வானம் பூமிக்கு இடைப்பட்ட ஐந்நூறு ஆண்டுகள் பயணத் தொலைவுடையது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும் விரிப்புக்கள் பல தரங்களில் அமைந்திருக்கும் ஒரு தரத்துக்கும் அடுத்த தரத்துக்கும் உள்ள (தரத்துக்கும் அடுத்த தரத்துக்கும் உள்ள(தர) இடைவெளி வானம் பூமிக்கிடையே உள்ள இடைவெளி போன்றதாகும் என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி, 2663, அஹ்மத், நஸயீ)

அங்குள்ள விதம் விதமான ரகம் ரகமான பூம்பட்டாடைகள் :

அவர்கள் “அத்ன்” எனும் (நிலையான சுவர்க்கச்) சோலையில் நுழைவார்கள். அங்கு அவர்களின் ஆடை பட்டாகும். (35:33) அங்கு அவர்களுக்கான ஆடைகள் பட்டாகும். (22:23) என்று அல்லாஹ் கூறுகின்றான். அந்த ஆடைகள் எத்தகையவை என்பதை “ஸுன்துஸ், “இஸ்த் தப்ரக், என்னும் இரு வகையான “மெல்லிய மற்றும் தடித்த பச்சைப் பட்டாடைகளை அவர்கள் அணிவார்கள். (18:31, 76:21,12, 44:53) என்று இறைவன் விவரிக்கின்றான். இங்கு “மெல்லிய பட்டு’ என்பதைக் குறிக்க “சுன்துஸ்” எனும் சொல்லும் “தடித்த பட்டு’ என்பதைக் குறிக்க “இஸ்த் தப்ரக்’ எனும் சொல்லும் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது “சுன்துஸ்’ என்பது மேலங்கி உள்ளிட்ட மெல்லிய ஆடை வகைகளைக் குறிக்கும். “இஸ்த் தப்ரக்’ என்பது பளபளப்பான தடித்த பட்டைக் குறிக்கும். ஆக இம்மையில் அவர்களுக்குப் பட்டாடை தடை செய்யப்பட்டிருந்தது. எனவே அல்லாஹ் மறுமையில் அவர்களுக்கு அதைத் தாராளமாக அனுமதிக்கின்றன.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். யார் இம்மையில் பட்டாடை அணிகின்றாரோ அவர் மறுமையில் அதை அணியமாட்டார். (அனஸ் பின் மாலிக்(ரழி) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர்(ரழி) உமர் (ரழி) புகாரி: 5830, 5832, 5833, முஸ்லிம்:4202, 4212, திர்மிதி: 2742) மற்றுமொரு ஹதீஃதில் “அது (பட்டு என்பது) இம்மையில் (இறை மறுப்பாளர்களான) அவர்களுக்கும், மறுமையில்(இறை நம்பிக்கையாளர்களான) நமக்கும் உரியதாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஹுதைஃபா(ரழி), புகாரி: 5426, 5632, 5831, முஸ்லிம்: 4195,4196, திர்மிதி: 1799)

எந்த முஃமின் ஆடையில்லாத முஃமினுக்கு ஆடை அளிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவர்க்கத்தில் பச்சை நிற(ப் பட்டு) ஆடையை அணிவிப்பான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூ ஸயீத்(ரழி), அஹ்மத்)

நபி(ஸல்) அவர்களுக்கு மெல்லிய பட்டாலான அங்கி ஒன்று அன்பளிப்பாகத் தரப்பட்டது. அவர்கள் பட்டுத் துணியை (அணிவதைத்) தடை செய்து வந்தார்கள். மக்களோ அந்த அங்கி(யின் தரம் மற்றும் மென்மை)யைக் கண்டு வியந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், “முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! சொர்க்கத்தில் ஸஅத் இப்னு முஆத்துக்கு கிடைக்கவிருக்கும் கைக்குட்டைகள் (தரத்திலும் மென்மையிலும்) இதை விடத் தரமானவையாயிருக்கும்’ என்று கூறினார்கள். (அனஸ்(ரழி) புகாரி: 261,3248,3249) நபித்தோழர் ஸஅத் பின் முஆத் (ரழி) அவர்கள் அந்தப் பட்டாடையின் நிறத்திலுள்ள கைக்குட்டைகளைப் பயன்படுத்தி வந்தார்கள். அன்னாருக்குச் சுவர்க்கத்தில் கிடைக்கவிருக்கும் கைக் குட் டைகளோ இந்தப் பட்டு அங்கியை விடத் தரத்திலும், மென்மையிலும் உயர்ந்தவையாக இருக்கும் என்றுதான் நபி(ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள். (உம்தத்துல் காரி)

அங்கு அவர்களுக்குப் பொற்காப்புகள் அணிவிக்கப்படும் :

அங்கு அவர்களுக்குப் பொற்காப்புகளும், முத்துக்களும் அணிவிக்கப்படும். (22:3, 35:33, 18:31) என்று அல்லாஹ் தெரிவிக்கின்றான். இதில் “யுஹல்லவ்ன” எனும் சொல்லானது “ஹில்யத்” எனும் சொல்லில் இருந்து வந்ததாகும். இதற்கு “ஆபரணம்” என்பது பொருள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இறை நம்பிக்கையாளர்களின் உறுப்புகளில் எங்கெல்லாம் அங்கத் தூய்மையின் (உளூ) நீர்படுகிறதோ அங்கெல்லாம் அணிகலன்கள் பூட்டப்படும். (அபூஹுரைரா(ரழி), முஸ்லிம்: 420, தப்சீர் இப்னு கஸீர் : 7:585, 586)

(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுவர்க்கவாசிகளின் அணி கலன்கள் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். அவர்களுக்கு முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட பொற்காப்புகளும், வெள்ளிக்காப்புகளும் அணிவிக்கப்படும்… என்று கூறினார்கள். (அபூ உமாமா(ரழி) ஸிஃபத்துல் ஜன்னா, (அபூநுஜம்) தஃப்சீர் இப்னு அபீ ஹாத்திம், திர்மிதி, 2462, முஸ்னத் அஹ்மத், தாரிமி, தஃப்சீர் இப்னு கஸீர் : 7:586, 587)

தலைப்பாகையும் கிரீடமும் மகுடம் சூட்டப்பட்டிருக்கும் :

ஒருமுறை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சுவர்க்கவாசிகளின் அணிகலன்கள் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள் அப்போது அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்… முத்தும், இரத்தினக் கல்லும் அருகருகே பதித்து அலங்கரிக்கப்பட்ட தலைப்பாகையை அவர்கள் அணிந்திருப்பார்கள். அரசர்களின் கிரீடத்தைப் போன்று அவர்களின் தலைகளில் மகுடம் சூட்டப்பட்டிருக்கும் என்று கூறினார்கள். (அபூ உமாமா(ரழி) ஸிஃபத்துல் ஜன்னா, (அபூநுஜம்) தஃப்சீர் இப்னு அபீஹாத்திம், திர்மிதி: 2462, முஸ்னத் அஹ்மத், தாரிமி, தஃப்சீர் இப்னு கஸீர் : 7:586, 587)

சுவர்க்கவாசிகள் பரட்டைத் தலையினராக மாட்டார்கள் :

சுவர்க்கவாசிகள் சுவர்க்கத்திற்கும் அழைத்துச் செல்லப்படுவார்கள், இறுதியில் அவர்கள் சுவர்க்கத்தின் வாசல்களில் ஒரு வாசலுக்குப் போய்ச் சேர்வார்கள், அந்த வாசலுக்கு அருகில் ஒரு மரத்தைக் காண்பார்கள், அதன் அடிப்பகுதிக்குக் கீழிருந்து இரண்டு நீரூற்றுக்கள் வெளிவரும், அவ்விரு ஊற்றுக்களில் ஒன்றை நோக்கிச் சென்று அதில் (நீராடித்) தூய்மை அடைவார்கள். அப்போது அவர்கள் மீது சுகவாழ்வின் செழிப்பு மலரும், அதன்பின் ஒருபோதும் அவர்களின் சருமங்கள் மாற்றமடையாது, அதன்பின் அவர்களின் உரோமங்கள் ஒருபோதும் பரட்டையாகாது. அவர்கள் முடிக்கு எண்ணை தேய்க்கப்பட்டவர்களைப் போன்று இருப்பார்கள். அதன் பிறகு அவர்கள் ஒருபோதும் பரட்டைத் தலையினராகமாட்டார்கள். (39:73, அலி (ரழி), சுத்தீ(ரஹ்) தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு அபீஹாத்திம், முஸன்னஃப் இப்னு அபீஷைபா, தஃப்சீர் இப்னுகஸீர் : 3:760, 7:973, 974) அவர்களது,

முடி வாரும் சீப்புகள் தங்கத்தாலானவை :

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். சுவர்க்கத்தில் முதலாவதாக நுழையும் அணியினரின் முகங்கள் பெளர்ணமி இரவில் ஒளிரும் பூரண சந்திரனைப் போன்று (பிரகாசமாகவும், அழகாகவும்) தோற்றமளிப்பார்கள். பிறகு அவர்களுக்கு அடுத்து வருபவர்கள் விண்ணில் நன்கு பிரகாசிக்கும் நட்சத்திரங்களைப் போன்ற தோற்றமளிப்பார்கள்… அவர்களுடைய (முடி வாரும்) சீப்புகள் தங்கத்தாலானவை களாகும்… என்று (அபூஹுரைரா(ரழி) புகாரி: 3245,3246,3254,3327,முஸ்லிம்:5450, 5451, 5452, திர்மிதி : 2460, தஃப்சீர் இப்னு கஸீர்: 7:968,969) அதுபோக,

சுவர்க்கவாசிகளின் முகத்தில் தாடியோ, மேனி யிலோ, மறைவிடங்களிலோ முடிகள் ஏதுமற்ற வர்களாக இருப்பார்கள் :

சுவர்க்கவாசிகள் மேனியிலோ, முகத்திலோ, முடிகள் ஏதுமற்றவர்களாக… சுவர்க் கத்தில் நுழைவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஆத் பின் ஜபல்(ரழி) திர்மிதி : 2669, 2661, 2662, 2678) அவர்களுக்கு உடலில் எங்கும் உரோமமில்லாமல் அஞ்சனம் தீட்டப்பட்ட இளவல்களாக அவர்கள் இருப்பார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூ உமாமா(ரழி), ஸிஃபத்துல் ஜன்னா, (அபூநுஜம்) தஃப்சீர் இப்னு அபீ ஹாத்திம், திர்மிதி, 2462, முஸ்னத் அஹ்மத், தாரிமி, தஃப்சீர் இப்னு கஸீர் : 7 : 586, 587)

சுவர்க்கத்தில் எச்சில் துப்பவும் மாட்டார்கள் :

சுவர்க்கத்தில் முதலாவதாக நுழை கின்ற அணியினரின் தோற்றம் பெளர்ணமி இரவில் சந்திரனின் தோற்றத்தைப் போன்ற (பிரகாசமாக) இருக்கும். சுவர்க்கத்தில் அவர் கள் “எச்சில்” துப்பவும் மாட்டார்கள் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி), ஜாபிர்(ரழி) புகாரி: 3245, 3246, 3254, 3327, முஸ்லிம்:4551, 4552, 5453, 4550, 5453, திர்மிதி: 2660) அதனால் சுவர்க்கவாசிகள் எச்சில் போன்றவை சுத்தம் செய்யத் தேவை ஏற்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அபூஹுரைரா (ரழி), புகாரி, முஸ்லிம்)

சுவர்க்கத்தில் மூக்குச் சளியோ, சளியோ, சிந்தமாட்டார்கள் :

சுவர்க்கத்தில் முதலாவதாக நுழைகின்ற அணியினரின் தோற்றம் பெளர்ணமி இரவில் சந்திரனின் தோற்றத்தைப் போன்று (பிரகாசமாக) இருக்கும், அவர்களுக்குப் பின்னே வருபவர்கள் பேரொளி வீசும் நட்சத்திரத்தைப் போன்றிருப்பார்கள், சுவர்க்கத்தில் அவர்கள் மூக்குச் சிந்தவுமாட்டார்கள், சளி உமிழவுமாட்டார்கள் என்று அல் லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி), ஜாபிர்(ரழி) புகாரி : 3245,3246,3254,3327, முஸ்லிம்: 5450, 5451, 5452, முஸ்னத் அஹ்மத், தாரமீ,தஃப்சீர் இப்னு கஸீர்: 4:909,910)

சுவர்க்கவாசியின் இரத்தமானது கஸ்தூரி மணம் கமழும் :

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! இறைவழியில் காயப்படுத்தப்படுவர், உண்மையில் தனது பாதையில் காயப்படுத்தப்படுபவர் யார் என்பதை (அவரின் எண்ணத்தைப் பொருத்து) அல்லாஹ்வே அறிந்தவன். மறுமை நாளில் இரத்த நிறம் கொண்டவராகவும், கஸ்தூரி மணம் கமழ்கிறவராகவுமே வருவார் என்று (அபூஹுரைரா(ரழி), புகாரி: 2803, 237)

சுவர்க்கவாசியின் ஏப்பமானது கஸ்தூரியின் வாடையாகும் :

சுவர்க்கவாசிகள் சுவர்க்கத்தில் சாப்பி டுவார்கள், ஆனால் மலம் கழிக்கமாட்டார்கள், எனினும் அவர்களின் உணவு அது ஒரு ஏப்பமாக வெளியேறிவிடும். அதன் வாடை கஸ்தூரியின் வாடையைப் போல் இருக்கும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஜாபிர்(ரழி) முஸ்லிம் : 2835,5453,4550, ரி.ஸா. 1880) சுவர்க்கவாசிகள் மலம் கழிக்க மாட்டார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூ ஹுரைரா (ரழி), புகாரி : 3245, திர்மிதி : 2660)

என்றென்றும் இளமை மாறாத நிரந்தர பணியாளர்கள் :

என்றென்றும் நிலையான இளமை மாறாத அழகிய இளைஞர்கள், தெளிந்த பானங்களால் நிரம்பிய கிண்ணங்களையும், கெண்டிகளையும், குவளைகளையும் கொண்டு இன்னும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் கனிவகைகளையும், விரும்பும் பட்சிகளின் மாமிசத்தையும், (கொண்டு இவர்களின் பணிக்காக இவர்களைச்) சுற்றிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் மூடி வைக்கப்பட்ட முத்துக்களைப் போன்று இருப்பார்கள். (56:17-21, 76:19, 52:24) (இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Previous post:

Next post: