விமர்சனம்! விளக்கம்!!

in 2020 ஜுலை,விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

விமர்சனம்! விளக்கம்!!

விமர்சனம் : நிர்பந்தத்தின் காரணமாக வீடுகளில் ஜும்ஆ தொழுவதற்கு குர்ஆனிலோ, ஹதீஃதிலோ தடை ஏதும் இல்லை என எழுதியுள்ளீர்கள். ஜும்ஆ தொழுவதாக இருந்தால், குத்பா ஓதித்தான் தொழ வேண்டும். மேலும், ஒரு நபர் மட்டும் ஜும்ஆ தொழுவதாக இருந்தால் (வீட்டில்) குத்பா இல்லாமல் தொழலாமா? இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படுமா?  முகம்மது பாரூக், பேட்டை, திருவெல்வேலி.

விளக்கம் : நடைமுறை உண்மை ஒன்றைக் கூறி, தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஜும்ஆ தொழுவதாக இருந்தால், குத்பா ஓதித்தான் தொழ வேண்டும் என்று எழுதி இருக்கிறீர்கள். மிகவும் சரிதான். ஏனெனில், இது இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கட்டளை. இதேபோல, ஃபர்ளு தொழுகையை ஜமாத்தாகத்தான் தொழ வேண்டும். ஏனெனில் இது கண்ணியம் வாய்ந்த அல்லாஹ் (ஜல்)வின் கட்டளை.

மஹல்லா பள்ளியில் ஃபர்ளு தொழுகை ஜமாத் கிடைக்கத் தவறிவிட்டால், அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்ற எண்ணத்திலுள்ள குர்ஆன், ஹதீஃதை மட்டும் பின்பற்றும் அல்லாஹ்வுக்கு பயந்த அடியார் என்ன செய்கிறார்? அவர் எடுக்கக் கூடிய முதல் நடவடிக்கை என்னவாக இருக்கும்?

மஹல்லாவுக்கு பக்கத்தில் உள்ள பள்ளிகளில் ஏதேனும் ஒரு பள்ளிக்கு சென்றால் ஜமாஅத் கிடைத்து விடும் என்றிருந்தால், அங்கு சென்று தொழுகையை ஜமாஅத்தில் தொழுது விடுகிறார்.

பக்கத்து பள்ளிகளிலும் ஜமாஅத் கிடைக்காது என்றால், குர்ஆன் ஹதீஃதை பின்பற்றி அல்லாஹ்வுக்கு பயந்த அந்த அடியார் எடுக்கக் கூடிய இரண்டாவது நட வடிக்கை என்னவாக இருக்கும்? “தொழு கைக்காக காத்திருக்கும் காலமெல்லாம், தொழுகையில் இருப்பதாக கணக்கில் எடுக்கப்படும்’ என்ற ஹதீஃதை பின்பற்றி, தவ்ஹீது பள்ளிவாசலில் காத்திருந்து, தாமதமாக வருபவர்களுடன் சேர்ந்து தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுது விடுகிறார் தனி ஜமாஅத் தொழுகை நடத்த வேறு பள்ளி வாசல்களில் அனுமதி இல்லை என்பதால், வேறு பள்ளிகளுக்குச் சென்று அதற்காகக் காத்திருக்க முடியாதல்லவா?

காத்திருக்கும் நேரத்தில் எவரும் வரவில்லை என்றால், ஜமாஅத் கிடைக்காததல்லவா? அப்பொழுது அந்த அடியாரின் மூன்றாவது நடவடிக்கை என்னவாக இருக்கும்?

“…குறிப்பிட்ட நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது” என்ற அல்லாஹ்வின் குர்ஆன் வசனத்திற்கு (4:103) பயந்து வேறு வழியில்லாமல் ஃபர்ளுத் தொழுகையை வக்திற்குள் தனியாகத் தொழுது விடுகிறார்.

ஜமாத்தாகத் தொழ எவ்வித முயற்சியும் எடுக்காத, குர்ஆன், ஹதீஃதை பின்பற்றாத சுன்னத் வல் ஜமாஅத் மற்றும் தப்லீக் ஜமாத்தினரும் கூட, வக்த் நேரத்திற்குள் ஃபர்ளுத் தொழுகையை தனியாகத் தொழுது விடுகிறார்கள். இதனை நடைமுறை வழக்கத்தில் ஏறக்குறைய ஏதாவது ஒரு தொழுகையிலாவது அன்றாடம் பள்ளி வாயில்களில் பார்த்து வருகிறோம்.

ஆக ஜமாஅத் கிடைக்காவிட்டாலும் ஃபர்ளுத் தொழுகையை வக்த் முடிவதற்குள் தனியாகத் தொழுது விடுவது போல, நிர்பந்த நேரங்களில் வீட்டில் ஜும்ஆ தொழ ஒரு நபர்தான் இருக்கிறார் என்றாலும், அவர் மட்டுமாவது வக்திற்குள் ஜும்ஆ தொழுகையைத் தொழுதே ஆக வேண்டும், அதற்கும் முன்பாக, அவர் ஜமாத்தில் தொழுவதற்கு முயற்சி எடுத்திருக்க வேண்டும். உதாரணமாக, அவர் அந்த மஹல்லாவில் ஜும்ஆ நடைபெறும் வீடுகளில் ஏதேனும் ஒரு வீட்டிலாவது கலந்து கொண்டு தொழுது விட முடியுமா? என்று உண்மையாக முயற்சி செய்திருக்க வேண்டும். அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காவிட்டால், தன் நிலையைக் கூறி குறைந்தபட்சம் ஒரு நபரையாவது தனது வீட்டில் தொழ அழைத்து வர முயற்சி செய்து இருக்க வேண்டும். இரண்டிலுமே முடியாது போயிருந்தால், வக்திற்குள் ஜும்ஆ தொழுகையை தனியாகத் தொழுதே ஆக வேண்டிய நிலைக்குத் தாங்கள் தள்ளப்பட்டு விட்டீர்கள், இப்போது உங்கள் நிலைமை என்ன?

ஃபர்ளு தொழுகை ஜமாஅத்தை விட்டவர், பல முயற்சிகளுக்குப் பிறகு எப்படி வக்திற்குள் தனியாகவாவது தொழுது விட வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகி தொழுதாரோ, அதேபோல, அல்லாஹ்வால் கடமையாக்கப்பட்ட ஜும்ஆத் தொழுகை பல முயற்சிகளுக்குப் பிறகும் ஜமாத்தாக தொழ முடியாவிட்டால் ஒரு நபராக இருந்தாலும், தனியாகவாவது தொழுது தான் ஆகவேண்டும். ஏனென்றால், நன்றாக நினைவிற் கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழ வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை. அல்லாஹ்வின் கட்டளை என்றால், அதை நிறைவேற்றியே ஆகவேண்டும். அதற்கு மாற்ற மாக மற்றொன்றை அல்லாஹ் அறிவித்திருந்தால் தவிர, ஜும்ஆ நாளில் ஜும்ஆவுக்கு மாற்றாக சிலர் செய்வது போல லுஹர் தொழுகை தொழுமாறு அல்லாஹ்வோ, அல்லாஹ்வின் தூதரோ கட்டளையிடவில்லை. வேறெந்த விதிவிலக்கும் தரப்பட வில்லை.

தனியாகத் தொழலாம் என்ற எமது பதில் ஆச்சரியத்தைத் தருகிறதா? அப்படியானால், தங்களுக்கு இதற்கான ஆதாரத்தைத் தருகிறேன். தயவு செய்து கீழே உள்ள ஹதீஃதைப் படியுங்கள். தங்கள் ஐயத்திற்கான தெளிவு கிடைக்கும் என்று எண்ணுகிறேன்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “மலை உச்சியின் மீது இருந்து கொண்டு தொழுகைக்கான அழைப்பை (பாங்கு) சொல்லி, தொழுது கொண்டிருந்த ஆட்டிடையர் மீது அல்லாஹ் மகிழ்ச்சி அடைந்தான். அல்லாஹ் கூறினான். “எனது இந்த அடியாரைப் பாருங்கள், அவர் தொழுகைக்கு அழைப்பு (பாங்கு) விடுத்தார், தொழ இகாமத் சொன்னார், (தொழுதார்), அவர் என்னை பயந்து கொண்டார், என் அடியாரை (அவரின் பாவங்களுக்காக) மன்னித்து அவரை சுவர்க்கத்திற்கு நான் அனுமதித்தேன்”. (அறிவிப்பாளர் : உக்பா பின் ஆமிர்(ரழி), ஹதீஃத்:குத்லி-ஆங்கிலம், எண்:7, அறிவிப்பாளர்: உக்பா பின் ஆமிர் (ரழி), நஸஈ ஆங்கிலம், பாடம் : 7, எண். 667)
இப்போது தங்களுக்கு தெளிவு கிடைத்ததா? கடமையாக்கப்பட்ட ஃபர்ளு தொழுகையை தொழ முடியாத இடத்தில், பாங்கு, இகாமத் என செய்ய வேண்டியதை செய்து தொழுது விடுகிறார். அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ்வும் அவரது அமல்களை ஏற்றுக் கொண்டான்.

ஜும்ஆ தொழுவதாக இருந்தால், குத்பா ஓதித்தான் தொழ வேண்டும் என்று தெரிவித்துள்ள தாங்கள், ஒரு நபர் மட்டும் ஜும்ஆ தொழுவதாக இருந்தால் (வீட்டில்) குத்பா இல்லாமல் தொழலாமா என்ற ஐயத்தை அடுத்து எழுப்புகிறீர்கள். இந்த ஐயம் தங்களுக்கு எப்படி ஏற்பட்டிருக்கிறது தெரியுமா? குத்பா அதாவது பிரசங்கம் (பயான்) செய்தால் கேட்பதற்கு ஒரு நபராவது இருக்க வேண்டுமே என்ற ஐயம் தங்களுக்குள் ஏற்பட்டிருக்கிறது, அதன் விளைவு தான் ஐயத்திற்கு மேல் ஐயம் ஏற்படுகிறது. செய்யக்கூடிய குத்பா (பிரசங்கம்) செய்பவருக்கும் பொருந்தும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அப்படி இருந்தும் குத்பா வைக் கேட்க இன்னொருவர் தேவை என்று கவலைப்படுகிறீர்களா? அல்லாஹ் நாடினால், கீழே உள்ள ஹஹீத் தங்களின் ஐயத் திற்கு தெளிவு தரும்! படித்து பயன் பெறுங்கள்.

இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார் கள்: “ஜும்ஆ நாளில் கடமையான குளிப்புப் போல் குளித்து விட்டு பள்ளிக்கு வந்தால், ஓர் ஒட்டகத்தை இறைவழியில் குர்பானி கொடுத்தவர் போலாவார். மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடைய ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானிக் கொடுத்தவர் போலாவார். ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். இமாம் பள்ளிக்குள் வந்துவிட்டால், வானவர்கள் ஆஜராகி பிரசங்கத்தைக் கேட்கிறார்கள்” (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரழி), புகாரி, ஹதீஃத் எண்கள் : 881,929)

தங்களின் பயானை வானவர் கேட்கிறார். நிர்பந்தத்தால் தனி நபராக இருப்ப வரும் தொழுதாக வேண்டும் என்பதற்காகத்தான். இவ்வளவு வசதிகளை அல்லாஹ் ஏற்படுத்தித் தந்துள்ளான். மலை உச்சியில் பாங்கு சொல்லி, இகாமத் சொல்லி தொழுதாரே அவருக்கு உங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் ஏதாவது வந்ததா? இல்லையே! ஜமாத்தாக தொழக் கட்டளையிட்ட அல்லாஹ், வக்திற்குள் தொழும்படியும் கட்டளை இட்டான். அல்லாஹ்வின் கட்ட ளையை மட்டும் நினைவிற் கொண்ட அந்த அடியார், அந்த மேலான கட்டளையை நிறைவேற்றவில்லையா?

பாங்கு சொல்வது சுன்னத். அல்லாஹ் வின் தூதர் காட்டிய வழிமுறை அதுதானே! வீட்டில் பாங்கு சொல்லக்கூடாது என்று நினைக்கிறீர்களா? வீட்டிலும் பாங்கு சொல் லலாம், காட்டிலும் பாங்கு சொல்லலாம். ஹதீஃதைப் பாருங்கள்.

அப்துல்லாஹ் இப்னு அப்துர் ரஹ்மான் (ரழி) அறிவித்தார்: அபூ ஸயீதுல் குத்ரீ (ரழி), என்னிடம், நீர் ஆடுகளை மேய்ப்பதிலும் காட்டுப் புறங்களுக்கு செல்வதிலும் ஆசைப் படுவதைக் காண்கிறேன். நீர் ஆடுகளுடன் சென்றால் அல்லது காட்டுப் புறம் சென்றால் தொழுகைக்காக பாங்கு சொல்லும்போது குரல் உயர்த்தி சொல்வீராக! காரணம், முஅத்தினுடைய பாங்கு சப்தத்தைக் கேட்கிற ஜின்னாக இருந்தாலும், மனிதனாக இருந்தாலும், வேறு யாராக இருந்தாலும் அவருக்காக மறுமை நாளில் பரிந்துரை செய்வார்கள்” எனக் கூறிவிட்டு, இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் சொல்ல, கேட்டேன் என்றும் கூறினார்கள். நூல் : புகாரி எண். 609

ஒரு நபர் மட்டும் ஜும்ஆ தொழுவதை இறைவன் ஏற்றுக் கொள்வானா? என்ற அடுத்த ஐயம் தங்களுக்குள் இருக்கிறது. தொழுவதற்கு அனுமதி உண்டு என்பதை ஆதாரங்களுடன் தெரிவித்து விட்டேன். மலை உச்சியிலிருந்த அடியார் தூதர் காட்டிய வழிமுறைப்படி, பாங்கு சொல்லி, இகாமத் சொல்லி தொழுததை அல்லாஹ் ஏற்று அவரை சுவர்க்கத்திற்கு அனுமதிக்கவில்லையா? இறைவன் ஏற்றுக் கொள்வானா? இல்லையா? என்பது இறையச்சத்துடன் குர்ஆன் சுன்னாவின் பிரகாரம் தொழும் விதத்தில் இது அமைந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

தங்களுக்கு ஏற்பட்ட ஐயங்களை ஆர்வத்துடன் கேட்டு இருக்கிறீர்கள். எனவே, இது சம்பந்தமாக ஒரு இலவச இணைப்பையும் பெற்றுக் கொள்ளுங்கள்.

இலவச இணைப்பு :

ஃபர்ளு தொழுகை ஜமாஅத்தைத் தவற விடும் குர்ஆன், ஹதீஃதைப் பின்பற்றுபவர், ஜமாஅத்தில் தொழ எடுக்கும் முயற்சி களைப் போல், சுன்னத் வல் ஜமாஅத்தினர் அப்படி செய்ய முன்வரமாட்டார்கள். அல் லாஹ்வின் கட்டளைக்கு அவர்கள் அடி பணிய மாட்டார்கள். “…ருகூஃ செய்பவர்களுடன் சேர்ந்து, நீங்களும் ருகூஃ செய்யுங்கள்” என்ற அல்லாஹ்வின் ஆயத்தை(2:43) பின்பற்றமாட்டார்கள். பள்ளி இமாம் நடத்தும் ஜமாஅத் தொழுகை முடிந்து விட்டால், வேறெவரும் தனியாக ஜமாஅத் தொழுகை நடத்திவிடக்கூடாது என்று இமாமத்தை தங்களுக்கு மட்டும் உரியதாக எண்ணி கர்வம் கொள்பவர்கள் அவர்கள். எனவே ஜமாஅத் தொழுகை தனியாக நடத்த அனுமதி இல்லை என்று மறுக்கிறார்கள். சில பள்ளிகளில் ஜமாஅத் தொழுகை தனியாக நடத்த அனுமதி இல்லை என்று போர்டு எழுதி வைத்துவிட்டவர்கள் இவர்கள் ஜமாஅத் தொழுகையை விட்டு விடக்கூடாது என்று உபதேசிக்கும் தப்லீக் ஜமாஅத்தினரில் பெரும்பாலோர், ஜமாஅத் தொழுகை கிடைக்காத பட்சத்தில் ஜமாஅத்தில் தொழ வாய்ப்பிருந்தும் கூட அதைப் பெறுவதற்கு குர்ஆன் ஹதீஃதை பின்பற்றும் ஜமாஅத்தினரின் பள்ளிகளுக்கு சென்று தொழ மாட்டார்கள். ஜமாஅத் தொழ எந்த முயற்சியும் எடுக்காமல், தனியாகத் தொழுது விடுகிறார்கள்.

எனவே, குர்ஆன், ஹதீஃதை மட்டும் பின்பற்றுபவராக தங்களை மாற்றிக் கொள்ள முயற்சி செய்யுங்கள். அப்போது தான் அதனை தெரிந்து கொள்ள முற்படுவீர்கள். அப்போதுதான் சந்தேகங்களுக்கு இடம் கொடுக்காமல் இறைக்கட்டளைக்கு அடிபணிவீர்கள். அல்லாஹ் அனைவருக்கும் அருள் புரிய வேண்டும்.

விமர்சனம் : அந்நஜாத் மே 2020 இதழில், “ஜும்ஆ தொழுகை பள்ளியிலா? வீட்டிலா? என்ற கட்டுரையில், கீழே காண்பித்தபடி ஹதீஃத் தந்திருக்கிறீர்கள்.

“அல்லாஹ்வின் தூதரே! எந்த பள்ளிவாசல் முதலில் கட்டப்பட்டது?” என்று நான் வினவினேன். “அல்மஸ்ஜித் அல் ஹரம் (மக்கா)” என்று கூறினார்கள். “பிறகு எது என்று நான் வினவினேன், “பிறகு அல் மஸ்ஜித் அல் அக்ஸா (ஜெருசலம்)” என்று கூறி னார்கள். “அவற்றுக்கு இடையே எத் தனை ஆண்டுகள் (இருந்தன)?” என்று நான் வின வினேன், “நாற்பது ஆண்டுகள்,ஆனால், பூமி முழுவதும் உமக்கு தொழுமிடமாகும். ஆகையால் தொழுகை நேரம் வந்துவிட்டால், நீ எங்கு இருக்கிறாயோ, அங்கு தொழுதுகொள்” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அருளினார்கள். (நூல்: சுனன் இப்னுமாஜா (ஆங்கிலம்), ஹதீஃத் எண். 753, புத்தகம் 4, வரிசை எண். 19)

இதுவரை ஜும்ஆ தொழுகைக்கு பதிலாக நான்கு ரகஅத் லுஹர் தொழுகை தொழுது கொண்டிருந்த பல சகோதரர்கள், இந்த கட்டுரையை படித்த பிறகு, ஜும்ஆ தொழுகையை வீட்டில் தொழ ஆரம்பித்து விட்டனர். அவர்களிடம் பிரிவு ஜமாஅத்தினரில் ஒருவர் சென்று, “நாற்பது ஆண்டுகள் என்பது தவறு” என்று குழப்புகிறார். அவர் கூறுவது சரியா?”. அஸ்ரப் கரீம், ஐயம்பேட்டை.

விளக்கம் : அவரின் கூற்று சரிதான்! சரியாக இருக்கும்போது, எதற்காக தவறானதை வெளியிட்டீர்கள் என்ற அடுத்த வினாவை தொடுப்பதற்கு தயாராக இருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. ஆங்கிலத்தில் இருந்த ஹதீஃத் நூல் இப்னுமாஜாவில் நாற்பது ஆண்டுகள் என்றுதான் இருக்கிறது. அதை மாற்றுவதற்கு எமக்கு அதிகாரம் கிடையாது. எனவே, நாம் அதை அப்படியே பிரசுரித்திருந்தோம்.

அந்த ஹதீஃதில், “பூமி முழுவதும் உமக்கு தொழுமிடமாகும். ஆகையால், தொழுகை நேரம் வந்துவிட்டால், நீ எங்கு இருக்கிறாயோ, அங்கு தொழுதுகொள்” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அருளினார்கள். இந்த உண்மையை தெரிவிக்க மட்டுமே, “ஜும்ஆ தொழுகை பள்ளியிலா? வீட்டிலா?” எனும் கட்டுரையில் இந்த ஹதீஃத் தரப்பட்டிருந்தது.

தவிர்க்க முடியாத காரணங்களால் ஜும்ஆ தொழுகையை விட்டில் தொழுவதற்கு ஆதாரமாக நாம் காட்டி இருக்கும் அந்த ஹதீஃதை எமது கருத்துக்கு மட்டும் ஆதாரமாக கீழ்கண்டவாறு நாம் பிரசுரித்திருந்தால், அந்த சகோதரர் அவரது விமர் சனத்தை கூறி குழப்பம் ஏற்படுத்த முடிந்தி ருக்காது என்பதை அவர் அறிவாராக!

உதாரணமாக : “….பூமி முழுதும் உமக்கு தொழுமிடமாகும். ஆகையால், தொழுகை நேரம் வந்துவிட்டால், நீ எங்கு இருக்கிறாயோ, அங்கு தொழுது கொள்” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அருளினார்கள்” (ஹதீஃதின் சுருக்கம்: நூல்: சுனன் இப்னுமாஜா (ஆங்கிலம்), ஹதீஃத் எண்: 753, புத்தகம் :4, வரிசை எண். 19)

மேலே காட்டியவாறு ஹதீஃதைத் தெரி யப்படுத்தி இருந்தால் நாற்பது ஆண்டுகள் என்ற கேள்வியை அந்த சகோதரர் எழுப்பி இருக்கும் வாய்ப்பு இருந்திருக்காது.

ஹதீஃதை முழுமையாகத் தரவேண்டும், மற்றும் முதலில் கட்டப்பட்ட பள்ளி எது என்பதை அறியாதவர்கள் அறிந்து கொள்ள முடியும் என்ற நன்னோக்குடன் ஹதீஃதை முழுமையாக வெளியிட்டிருந்தோம். மற்ற படி ஆங்கில நூலில் உள்ளதை அப்படியே தந்துவிட்டோம் என்பதும் உண்மை.

பிரிவு ஜமாஅத் சகோதரரால் தவறான எண்ணத்துடன் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தரப்பட்டிருக்கு மேயானால், அவர் தந்த அந்த தகவல் ஜும்ஆ தொழுகையை வீட்டில் தொழக் கூடாது என்பதற்கு ஆதாரமாக இல்லை என்பதை அவருக்குத் தெரியப்படுத்துங்கள். அதுவே போதுமானது.

Previous post:

Next post: