தூய இஸ்லாத்தில் பித்அத் ஊடுருவல்

in 1990 பிப்ரவரி

தூய இஸ்லாத்தில் பித்அத் ஊடுருவல்

அபூ அஸ்பியா ஜித்தா

தமிழகத்தில் முஸ்லிம்கள் நிறைந்த குறிப்பாக ஆலிம்கள் நிறைந்த காயல்பட்டினம், அதிராம்பட்டினம், லால்பேட்டை போன்ற ஊர்களில் புகாரி ­ரீப் மஜ்லிஸ் என்ற பெயரில் பெரும் பித்அத் நடக்கிறது. மற்ற ஊர்களில் எப்படி நடக்கிறது என்பதை நான் நேரில் பார்த்தது இல்லை ஆனால் லால்பேட்டையில் நடப்பதை நான் அறிவேன்.

இது வருடம்தோறும் ரபிய்யுல் ஆகிர் மாதம் பிறை ஒன்றில் ஆரம்பித்து நாற்பது நாள் தொடர்ந்து நடத்து கிறார்கள். ஜாமிஆ மஸ்ஜித் முன் தாழ்வாரத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இஷா தொழுகைக்குப் பின் ஆரம்பித்து பத்து அல்லது பதினொரு மணிக்கு முடிகிறது. மஜ்லிஸ் முடிவில் சீரனீ (இனிப்புப் பிரசாதம்) வழங்குகிறார்கள். இதன் வகைகளில் ஏற்படும் செலவுகளுக்காக பணம் வசூல் செய்கிறார்கள். அலங்கரிக்கப்பட்ட மஸ்ஜித் முன்பகுதியை போட்டோ பிளாக் எடுத்துப்போட்டு நோட்டீசு அடித்து நகரவாசிகள் இருக்கும் எல்லா வெளிநாடுகளுக்கும் அனுப்பப்பட்டு பெரும்பணம் வசூல் செய்கிறார்கள். இதை ஜமாஅத்துல் உலமாகவே முன் நின்று செய்கிறது.

இதனால் ஏற்படும் பயன் என்னவென்று பார்த்தால், புகாரீயில் வரும் ஹதீதை கடகடவென்று வாசித்துக் கொண்டே போவார்கள் ஏதோ வாசிக்கிறார்கள் என்று ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் கேட்டுவிட்டு, சீரனீ கிடைக்கிறது வாங்கிக் கொண்டு செல்கிறார்கள். ஊர் அறிஞர்கள் கூட இப்படி ஹதீஸை வாசித்துக் கொண்டே போகிறீர்களே, இதில் எங்களுக்கு ஏதாவது பயனுண்டா? ஹதீஸின் பொருளைச் சொன்னால் அதன்படி நடக்க எங்களுக்கு வாய்ப்புண்டு ஏன் அவ்விதம் செய்யக்கூடாது என்று கேட்பதும் இல்லை, அபிப்பிராயம் கூட தெரிவிப்பதும் இல்லை.

ஏனென்றால், ஏற்கனவே இவர்களுக்கு இப்படி ஓதுவதால் ஊருக்கு பரக்கத் இறங்கும், அதனால் ஊர் செழிக்கும், பயிர் பச்சைகள் செழிக்கும், நோய் நொடிகள் வராது, பலாய், முஸீபத்துகள் நீங்கும் என்றெல்லாம் கூறப்பட்டு விட்டது. புகாரீயில் உள்ள ஹதீஸை அர்த்தமின்றி வாசிப்பதால் இவ்வளவு பெரிய நன்மைகள் கிடைக்கும்போது மக்களுக்கு இதைவிட வேறென்ன வேண்டும். இன்னும் வேடிக்கை என்னவென்றால் வீட்டுக்கு வீடு குடம், வாளி, செம்பு போன்றவற்றில் தண்ணீர் கொண்டுவந்து மஜ்லிஸில் வைக்கிறார்கள். ஓதுபவர் அதில் ஊதுகிறார். அவர் ஊதியவுடன் பரக்கத் தண்ணீரில் இறங்கி விடுகிறதாம்? மஜ்லிஸ் முடிந்தபிறகு தண்ணீரை எடுத்துக் கொண்டு போய் குடிப்பார்கள், வீட்டில் தெளிப்பார்கள், பயிர் நிலங்களில் தெளிப்பார்கள். ஆகவே அல்லாஹ்வின் மீது அச்சமும் நம்பிக்கையும் போய் புகாரீ ­ரீபில் ஓதும் தண்ணீரில் நம்பிக்கை வந்து விட்டது.

இதனால் எத்தனை தீமைகள்? பெண்களுக்கும் ஆண்களே சீரனீ வழங்குகிறார்கள். குழந்தைகள் சீரனீக்காக இரவில் நீண்ட நேரம் கண்விழிக்க வேண்டியிருப்பதால் மறுநாள் அதிகாலையில் மதரஸாவுக்கும், பள்ளிக்கூடத்திற் கும் செல்வதில் தடையும் தாமதமும் ஏற்படுகிறது. பள்ளிக்கூடத்திற்கும் செல்வதில் தடையும், தாமதமும் ஏற்படுகிறது. அடுத்து நகர ஜமாஅத்தே உலமாவில் வரவு, செலவு கணக்குகள் பராமரிப்பு வி­யத்தில் சர்ச்கைகள், முரண்பாடுகள் இதன் காரணமாக தகராறுகள் இப்படி தீமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

நிறுத்தி விடுங்கள் என யோசனை கூறினால் இவர்கள் சொல்லி எப்படி நிறுத்துவது என்று கர்வம், நாமே ஆரம்பித்துவிட்டு நாமே மக்களுக்கு நன்மை இருப்பதாகச் சொல்லிவிட்டு, இப்பொழுது எப்படி நிறுத்துவது என்ற தயக்கம் ஒருபுறம்; மக்கள் திருப்பிக்கேட்டால் என்ன பதில் சொல்வது, அவர்களை எப்படி சமாளிப்பது என்ற அச்சம் மறுபுறம் ஒன்றை விளங்காமல் செய்துவிட்டு பிறகு தவறு என்று புரிந்ததன் பின் அதை உடன் நிறுத்தி விடுவதுதான் உண்மையான முஸ்லிமுக்கு இலக்கணம் செய்த தவறுக்கு அல்லாஹ்விடம் தெளபாச் செய்ய வேண்டும்.

இன்று ஆலிம்கள் சாதாரண வி­யத்தை ஹராமைப் போன்று கடுமையாக விமர்சித்து கண்டிப்பதும், ஹராமான வி­யத்தை சாதாரண வி­யம் போன்று அலட்சியப்படுத்தி கண்டிக்கத் தவறி விடுவதுடன் முகஸ்து திக்கும், உலக லாபத்துக்கும் விளம்பரத்துக்கும் ஆளாகி விடுகிறார்கள்.

நாம்தான் பெரிய அறிஞர் என்ற கர்வமும் முகஸ்துதியும் அறிஞர்களை அழிவுப்பாதையை நோக்கிச் செலுத்தக் கூடியது என்பதை புரியாதவர்களாகவோ அல்லது புரிந்தும் அதை அலட்சியம் செய்பவர்களாகவோ இருந்து வருகிறார்கள். சொல்வது யார் என்று பார்க்கிறார்களே தவிர சொல்லப்படும் வி­யம் என்ன என்பதில் அக்கறை செலுத்துவதில்லை. உலமாக்களால் தான் இன்று பித்அத்துகள் வளர்ந்து வருகிறது என்பது நூற்றுக்கு நூறு மறுக்க முடியாத உண்மை. மக்கள் முன்பு மாதிரி இல்லை. இன்று மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்பட்டுவிட்டது. இனியும் மக்களை ஏமாற்ற முடியாது என்பதை உலமாக்கள் புரிந்து செயல்பட வேண்டும்.

நல்லவைகளை ஏவி, தீயவைகளை மக்களிடமிருந்து தடுத்து, எவர்கள் உண்மையாக அல்லாஹ்வின் மீது நம்பிக்கை( ஈமான்) கொண்டார்களோ அவர்கள் தான் சிறந்தவர்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. ஆனால் இன்று நல்லதை ஏவக் கடமைப்பட்டவர்கள் தீயதை ஏவும் அவல நிலை உண்டாகிவிட்டது. நல்லதை ஏவாத இவர்கள், தீயதை எங்கே தடுக்கப்போகிறார்கள்

நான் அல்லாஹுத் தஆலாவுக்காக கேட்டுக் கொள்வதெல்லலாம் ஒரு வி­யம் தவறு என்று எப்பொழுது தெரிகிறதோ அப்பொழுதே திருந்தி விடுங்கள். அதனால் எவ்வளவு பெரிய கஷ்ட நஷ்டங்கள் வந்தாலும் சரியே என்பது தான்.

அல்குர்ஆன், அல்ஹதீஸ் வழியில் மக்களை நடத்திச் செல்லுங்கள் மக்களிடமுள்ள பித்அத்துகளை களைந்து எறியுங்கள். தூய எண்ணத்துடனும், இறைவன் மீது அச்சப்பாட்டுடனும் செய்யும் காரியங்கள் தான் இம்மையிலும் , மறுமையிலும் வெற்றி தரக்கூடியது.

எல்லா பித்அத்துகளும் வழிகேடென்று ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் கூறியுள்ளார் களே தவிர பித்அத் ஹஸனா பித்அத் சையிஆ என்று எதையும் இனம் காட்டவில்லை. நம் மனம் போனபோக்கில் நம் யோசகைக்கேற்றவாறு நாமே பித்அத் ஹஸனா என்றும், பித்அத் சையிஆ என்றும் பிரித்துச் செயல்பட ஆரம்பித்து விட்டோம். பித்அத்தில் இருவகை என்றிருந்தால் ரசூல் (ஸல்) அவர்கள் நமக்கு இனம்காட்டி விளக்கியிருப்பார்கள். கீழ்வரும் ஹதீதுகளை கவனியுங்கள்.

1. “”நபி(ஸல்) அவர்கள் மூலமாக நமக்குக் கொடுக்கப்பட்ட இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை எவன் உண்டாக்கி, இதுவும் இஸ்லாத்தில் உள்ளது தான் (பித்அத் ஹஸனா) என்று கூறுகிறானோ அது எடுத்தெறியப்பட வேண்டிய ஒன்றாகும்.” (ஆயிஷா (ரழி), புகாரீ, முஸ்லிம்)

2. “”பித் அத்துகள் அனைத்தும் வழிகேடுகளாகும்” (ஜாபிர்(ரழி), இப்னு மஸ்ஊத் (ரழி), புகாரீ, முஸ்லிம், நஸயீ)

மிக இலகுவான இஸ்லாமியச் சன்மார்க்கத்தை சடங்குகளாலும், சம்பிரதாயங்களாலும், பித்அத்தான (நூதன) வழிபாட்டாலும் கடின மாக்கிவிட்டார்கள்.

மார்க்கத்தில் வழி சருகுதலின்றி தூய்மையான நேரிய வழியில் சென்று வெற்றிபெற வல்ல அல்லாஹ் நம் அனைவர்களுக்கும் தெளபீக் செய்வானாக.

Previous post:

Next post: