நபி வழியில் நம் தொழுகை!

in 1990 பிப்ரவரி

நபி வழியில் நம் தொழுகை!

தொடர் : 38

அபூ அப்திர் ரஹ்மான்

“என்னைத்  தொழக்  கண்டவாறே  நீங்களும்  தொழுங்கள்”  (மாலிக்குப்னுல் ஹுவைரிஸ் (ரழி),   புகாரீ, முஸ்லிம்)

சென்ற  இதழில் “ஜமாஅத்து தொழுகை”  பற்றிய  விபரங்களைப் பார்த்தோம்.  இன்ஷா அல்லாஹ்   இவ்விதழில் அதன் தொடரில் எஞ்சியுள்ளவற்றைப் பார்ப்போம்.

ஜமாஅத்து தவறிவிட்டால் பிறகு ஜமாஅத்து நடத்துவதன் நிலை!

ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்கு தொழு வைத்தார்கள். அதன் பிறகு நபித்தோழர் களில் ஒருவர் அங்கு வந்தார் அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி, “ஏன் (ஜமாஅத்துக்கு வராது) சுணங்கி விட்டீர் ” என்றார்கள். அதற்கு அவர் அதற்கான காரணத்தைக் கூறிவிட்டு, தொழுவதற்கு சென்று விட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் இவருடன் சேர்ந்து தொழுது இவருக்கு (நன்மை கூடுதலாகக் கிடைப்பதற்கு) உதவி செய்வோர் உங்களில் எவருமில்லையா? என்று கேட்டார்கள். உடனே ஒருவர் எழுந்து அவருடன் சேர்ந்து தொழுதார்.   (அபூஸயீதில் குத்ரீ(ரழி), திர்மிதீ, அபூதாவூத், அஹ்மத்)

ஆனால் மீண்டும் ஜமாஅத்து நடத்துவோர் முதல் ஜமாஅத்து நடத்தப்பட்ட மிஹ்ராபில் நின்று நடத்துவதற்கு ஆதாரம் இல்லை. காரணம் இவ்வாறு நபி(ஸல்) அவர்களின் காலத்திலும் நடத்தப்பட்ட வில்லை. ஆகவே மிஹ்ராபு அல்லாத வேறு இடத்தில் நடத்திக் கொள்வது முறையாகும்.

பெண்கள் பள்ளிக்குச் சென்று தொழுவது ஆகுமானதாயிருப்பினும் வீட்டில் தொழுவதே மேலானதாகும் :

உங்கள் பெண்கள் உங்களிடம் இரவு நேரத்தில் பள்ளிக்கு (ச் சென்று தொழ) அனுமதி கோரினால் அனுமதி அளியுங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு உமர் (ரழி), புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், நஸயீ, அஹ்மத்)

பெண்கள் பள்ளிவாசல்களுக்கு (தொழுவதற்காக)ச் செல்வதைத் தடை செய்யாதீர்கள்! அவர்கள் வீடுகளே அவர்களுக்கு மேலானவையாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு உமர் (ரழி), அபூதாவூத், அஹ்மத்)

அல்லாஹ்வின் பள்ளிகளுக்கு அல்லாஹ்வின் அடியாள் (களாகிய பெண்)களை நீங்கள் தடை செய்யாதீர்கள். அவர்கள் வாசனைப் பொருள் எதனையும் தம்மீது பூசிக்கொள்ளாது வருவார்களாக! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா (ரழி), அபூதாவூத், அஹ்மத்)

ஜமாஅத்தை எதிர்பார்த்து தொழுவதற்காக அமர்ந்திருப்போருக்கும் தொழுத பிறகு உடனே எழுந்து வந்து விடாமல் அதே இடத்தில் அமர்ந்திருப்போருக்கும் மலக்குகளின் துஆ :

ஜமாஅத்துத்) தொழுகையை எதிர்பார்த்து தமது தொழுமிடத்தில் இருந்து கொண்டிருப்பவர் தொழுகையிலே இருந்து கொண்டிருக்கிறார் அவர் (வீடு) திரும்பும்வரை அல்லது அவருக்கு ஒளூ முறியும் வரை. மேலும், யா அல்லாஹ்! இவரை மன்னித்தருள்! இவருக்கு கிருபை செய்தருள்!! என்பதாக மலக்குகள் பிரார்த்தனை செய்து கொண்டுமிருக்கிறார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா (ரழி), முஸ்லிம்)

உங்களில் ஒருவர் தமது ஒளூ முறியாத நிலையில் தாம் தொழுத இடத்தில் அமர்ந்திருக்கும் வரை

யா அல்லாஹ்! இவரை மன்னித்தருள்! இவருக்கு கிருபை செய்தருள்!! என்று மலக்குகள் பிரார்த்தித்துக் கொண்டேயிருப்பார்கள். நீங்கள் வீடு திரும்புவதை, தொழுகை தடுத்துக் கொண்டிருக்கும் வரையில் நீங்கள் தொழுகையிலே தான் இருந்து கொண்டிருக்கிறீர்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரீ)

(ஜமாஅத்துக்காக ) பள்ளிக்குச் செல்வோருக்கு அல்லாஹ்வின் உபசரிப்பு :

காலை மாலை பள்ளிக்குச் செல்வோருக்காக அல்லாஹ் சுவர்க்கத்தில் (மேலான) உபசரிப்பை சித்தப்படுத்தி வைத்துள்ளான். அவர் காலையிலும் மாலையிலும் பள்ளிக்குச் செல்லும் காலம் வரை (அதை அவர் அடைந்து கொள்வார் ) என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி), முஸ்லிம்)

இமாமத்து – இமாமாகயிருந்து தொழ வைப்போரின் நிலை இமாமத்துச் செய்வதற்கு மிகவும் ஏற்றமானவர்!

மக்களிடையே அல்லாஹ்வின் வேதத்தை அதிகமாக ஓதியவர் இமாமத்துச் செய்வாராக! ஓதலில் அவர்கள் (அனைவரும்) சமமானவராயிருப்பின் நபி(ஸல்) அவர்களின் சுன்னத்தை – நடைமுறையை அதிகம் அறிந்தவராவர். சுன்னத்தை அறிந்திருப்பதிலும் அவர்கள் சமமானவராயிருப்பின் “ஹிஜ்ரத்” இஸ்லாத்திற்காக நாடும் துறந்தவர்களில் முந்தியவராவர். ஹிஜ்ரத்திலும் அவர்கள் சமமானவராயிருப்பின் இஸ்லாத்தை தழுவிய வகையில் முந்தியவராவர் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு மஸ்ஊத்(ரழி), முஸ்லிம்)

ஒரு முறை நானும் எனது சிறிய தந்தையின் மகனும் நபி(ஸல்) அவர்களிடம் வந்தோம். அப்போது அவர்கள் எங்களை நோக்கி நீங்கள் பிரயாணம் செய்வீர்களானால், நீங்கள் பாங்கு சொல்லி, இகாமத்தும் சொல்லிக் கொள்வீர்களாக! உங்களில் பெரியவர் உங்களுக்கு இமாமத்துச் செய்வாராக! என்று கூறினார்கள். (மாலிக்குப்னுல் ஹுவைரிஸ் (ரழி), புகாரீ)\

பெண்கள் இமாமாயிருந்து தொழ வைப்பதன் நிலை !

(பெண்களாகிய) எங்களுக்கு ஆயிஷா (ரழி) அவர்கள் இமாமாயிருந்து தொழ வைத்தார்கள். அப்போது பர்ளு தொழுகையில் பெண்களுக்கு மத்தியில் அவர்கள் நின்று கொண்டார்கள் (முன்னால் நிற்கவில்லை). (ரிப்தத்துல் ஹனபிய்யா(ரழி), தாருகுத்னீ, பைஹகீ)

எங்களுக்கு ஒருமுறை உம்மு ஸலமா(ரழி) அஸ்ரு தொழுகையில் இமாமத்துச் செய்தார்கள். அப்போது அவர்கள் எங்களுக்கு மத்தியில் நின்று கொண்டார்கள். (ஹஜீரா (ரழி),தாருகுத்னீ, பைஹகீ)

மேற்காணும் இரு அறிவிப்புகளின் படி பெண்கள் இமாமாயிருந்து பெண்களுக்கு தொழ வைப்பது ஆகும் என்பதை அறிகிறோம். ஆனால் பெண் தாம் தொழ வைக்கும்போது ஆண்களைப்போல் ஸஃப்புகளுக்கு முன்னால் நிற்காமல் முதல் வரிசையில் நடுவில் மற்ற பெண்களுடன் சேர்ந்து நின்று கொண்டு தொழ வைக்க வேண்டும்.\

முக்ததீ- பின்பற்றித் தொழுபவர் ஒருவரானால் இமாமுக்கு வலப்புறத்திலும், இருவரோ அல்லது அதற்கு அதிக மானவராயிருந்தால் இமாமுக்குப் பின்புறமாக நிற்க வேண்டும் :

நபி(ஸல்) அவர்கள் தொழுவதற்காக நின்று கொண்டிருந்தபோது நான் வந்து அவர்களின் இடப்புறத்தில் நின்றேன். அப்போது அவர்கள் என் கையைப்பிடித்து இழுத்து என்னைத் தமது வலப்புறத்தில் நிற்கும் படி செய்தார்கள். பிறகு “ஜப்பாருபின் ஸக்ரு” என்பவர் வந்து நபி(ஸல்) அவர்களின் இடப்புறத்தில் நின்றார். அப்போது அவர்கள் எங்கள் இருவருடைய கைகளையும் பிடித்து எங்களைத் தமது பின்புறமாக நிற்கும் படி செய்து விட்டார்கள். (ஜாபிருபின் அப்தில்லாஹ் (ரழி), முஸ்லிம் , அபூதாவூத்)

முக்ததீ-பின்பற்றித் தொழுபவர் ஒருவர் ஆணாகவும் மற்றொருவர் பெண்ணாகவுமிருந்தால் ஆண் இமாமுக்கு வலப்புறத்திலும் பெண் இமாமுக்கு பின்புறத்திலும் நிற்க வேண்டும் :

ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் அனஸ்(ரழி) அவர்களுக்கும் அவர்களின் தாயாருக்கோ அல்லது அவர்களின் சிறிய தாயாருக்கோ (இருவரில் ஒருவருக்கு) தொழு வைத்தார்கள் அனஸ்(ரழி) கூறுகிறார்கள்: அப்போது அவர்கள் என்னைத் தமது வலப்புறத்திலும் நிறுத்திவிட்டு பெண்ணாகயிருந்தவர்களை எங்களுக்குப் பின்புறத்திலும் நிற்கும்படி செய்தார்கள். (அனஸ் (ரழி), முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத்)

பின்பற்றித் தொழுவோரில் இருவர் ஆணாகவும், ஒருவர் பெண்ணாகவுமிருந்தால், இமாமுக்கு பின்னால் இரு ஆண்களும் அந்த ஆண்களுக்குப் பின்னால் அப்பெண்ணும் நிற்க வேண்டும்:

ஒருமுறை நானும், எனது சகோதரர் எத்தீம் என்பவரும் எங்கள் வீட்டில் நபி(ஸல்) அவர்களின் பின்புறத்தில் நின்று தொழுது கொண்டிருந்தோம். அப்போது (எங்கள் தாயார்) உம்முஸுலைம் எங்களுக்குப் பின்புறமாக நின்று தொழுதார்கள். (அனஸ்(ரழி), முஸ்லிம்)

மூவரிருந்தால் ஒருவரை இமாமாக்கி அவரது வலப்புறத்தில் ஒருவரும் இடப்புறத்தில் ஒருவருமாக மூவரும் ஒரே வரிசையில் நின்று தொழ வேண்டும் என்ற அறிவிப்பின் நிலை!\

ஒருமுறை நானும் எனது தந்தை “அல்கமா” அவர்களும் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்களிடத்தில் மதிய வேளையில் சென்றிருந்தோம். அப்போது ளுஹ்ரு தொழுவதற்காக இகாமத்து கூறினார்கள். நாங்கள் இருவரும் அவர்களுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தோம் அப்போது அவர்கள் என் கையையும், என் சிறிய தந்தையின் கையையும் பிடித்து ஒருவரைத் தமது வலப்புறத்திலும் மற்றொருவரைத் தமது இடப்புறத்திலும் நிற்கும்படி செய்து அனைவரையும் ஒரே சஃப்பாக -வரிசையாக்கிவிட்டு, “”மூவரிருக்கும்போது இவ்வாறுதான் நபி(ஸல்) அவர்கள் செய்து கொண்டிருந்தார்கள்” என்று கூறினார்கள். (அஸ்வதுபின் யஜீத்(ரழி), அபூதாவூத், நஸயீ, அஹ்மத்)\

இவ்வறிப்பின் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ள  “தொரூனுபின் அன்தார” என்பவர் பற்றி சிலர் நம்பகமானவர் என்று கூறியிருப்பினும் பலர் இவர் நம்பகமற்றவர் என்று கூறியுள்ளார்கள். இமாம் தாருகுத்னீயிடம் இவர் பற்றி கேட்கப்பட்டபோது “இவர் ஒதுக்கப்பட்டவர் மட்டுமின்றி பொய்யரும் கூட” என்று கூறியுள்ளார்கள். “”இவருடைய அறிவிப்பு அறவே ஏற்புக்குரியதல்ல” என்று ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். (தஹ்தீபுத் தஹ்தீபு பாகம் 11, பக்கம் 10) ஆகவே இது ஏற்புக்குரியதல்ல என்பதை அறிகிறோம்.

தொழும்போது முறையாக சஃப்பு நிற்பதும் தொழுகையின் அம்சங்களில் ஒன்றாகும் :

“(தொழும்போது) உங்கள் வரிசைகளைச் சரி செய்து கொள்ளுங்கள்! ஏனெனில் வரிசையைச் சரி செய்து கொள்வதானது தொழுகையின் பரிபூரணத் தன்மையின் ஓர் அம்சமாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அனஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்) (புகாரீயின் மற்றொரு அறிவிப்பில் ” தொழுகையை நிலைநாட்டும் அம்சங்களில் ஒன்றாகும் ” என்பதாக உள்ளது)

பரஸ்பரம் சேர்ந்து வரிசையாக நிற்க வேண்டும் :

நபி(ஸல்) அவர்கள் (தொழுகைக்காக) தக்பீர் கூறுவதற்கு சற்றுமுன் எங்கள் பக்கம் தமது முகத்தைத் திருப்பியவர்களாக எங்களை நோக்கி (இடைவெளியின்றி) “”சேர்ந்து நில்லுங்கள்! மேலும் வரிசையில் நேராகவும் நில்லுங்கள்” என்று கூறுவார்கள். (அனஸ் (ரழி), புகாரீ, முஸ்லிம்)

மலக்குகளைப் போல் முறையாக அணி வகுத்து நிற்க வேண்டும் :

ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து மலக்குகள் தமது ரட்சகனிடத்தில் அணி வகுத்து நிற்பது போல் நீங்கள் அணி வகுத்து நிற்க மாட்டீர்களா? என்றார்கள். அதற்கு நாங்கள் அல்லாஹ்வின் தூதரே! மலக்குகள் தங்கள் ரட்சகனிடத்தில் எவ்வாறு அணி வகுத்து நிற்கிறார்கள்? என்று கேட்டோம். அப்போது அவர்கள் மலக்குகள் முதல் வரிசைகளை நிறைவு செய்து கொண்டு, பரஸ்பரம் வரிசையில் சேர்ந்து- ஒட்டி நின்று கொள்வார்கள் என்று கூறினார்கள். (ஜாபிருபின் ஸமுரா (ரழி), முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜ்ஜா, அஹ்மத்)

தொழுகையில் வரிசை முன்னும் பின்னுமாகியிருந்தால் தொழுவோரின் உள்ளங்கள் மாறுபட்டுவிடும் :

நபி(ஸல்) அவர்கள் (தொழுகைக்காக அணிவகுக்கும்போது) வரிசையின் இடையில் வந்து ஒருபுறத்திலிருந்து மறுபுறம்வரை எங்கள் நெஞ்சையும் தோள் புஜங்களையும் தடவிக் கொண்டு (அணிவகுப்பை சரிசெய்தவர்களாக) நீங்கள் முன்னும் பின்னுமாக மாறுபட்டு நிற்க வேண்டாம். அவ்வாறாயின் உங்கள் உள்ளங்கள் மாறுபட்டுவிடும் என்று எச்சிரிக்கை செய்வார்கள். மேலும் நிச்சயமாக முதல் வரிசையில் உள்ளவர்மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகள் நற்பிரார்த்தனை செய்கிறார்கள் என்றும் கூறுவார்கள். (பர்ராஉபின் ஆஜிப் (ரழி), அபூதாவூத்)

தோளோடு தோள், காலோடு கால் சேர்த்து ஸஃப்பு நிற்க வேண்டும் :

நபி(ஸல்) அவர்கள் தமது முகத்தை மக்கள் பக்கம் திருப்பியவர்களாக அவர்களை நோக்கி “உங்கள் வரிசைகளை ஒழுங்கு படுத்திக் கொள்ளுங்கள்!” என்று மும்முறை கூறிவிட்டு “அல்லாஹ்வின் மீது ஆçணாக நீங்கள் உங்கள் வரிசைகளை ஒழுங்கு படுத்திக் கொள்ளுங்கள்! இல்லை என்றால் அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் மாறுபாட்டை உண்டாக்கி விடுவான்” என்றார்கள். இவ்வாறு அவர்கள் எச்சரிக்கை செய்த பின்னர் (ஸஹாபாக்களில்) ஒருவர் தன் தோள் புஜத்தை பிற நண்பருடைய தோள் புஜத்துடனும் தன் முட்டுக்காலை பிறருடைய முட்டுக்காலுடனும் தன் கரண்டை மொளியை பிறருடைய கரண்டை மொளியுடனும் சேர்த்து வைத்துக் கொண்டதை நான் பார்த்திருக்கிறேன் என்று நுஃமானுபின் பUர்(ரழி) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன். (அபுல் காஸிமில் ஜத்லீ(ரழி), அபூதாவூத்)

ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் சஹாபாக்களை நோக்கி “நீங்கள் உங்கள் ஸஃப்பு -வரிசைகளை ஒழுங்கு படுத்திக் கொள்ளுங்கள். நிச்சயமாக நான் உங்களை எனது முதுகுக்குப் பின்னாலும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றார்கள். (இவ்வாறு அவர்கள் வற்புறுத்தி கூறியதன் பின்னர்) எங்களில் ஒவ்வொருவரும் தமது புஜத்தைத் தமது நண்பருடைய புஜத்தோடும் தமது பாதத்தைத் தமது நண்பருடைய பாதத்தோடும் சேர்த்து வைத்துக் கொண்டோம். (அனஸ்(ரழி), புகாரீ, பாடம் : வரிசையை ஒழுங்குபடுத்தல்)
நுஃமானுபின் பUர் (ரழி) அவர்களின் வாயிலாக அபுல்காஸிமில் ஜத்லீ அவர்கள் மூலம் அபூதாவூதில் பதிவாகியுள்ள அறிவிப்பில் புஜத்தோடு புஜம், முட்டுக் காலோடு முட்டுக்கால், கரண்டை மொளியோடு கரண்டை மொளியைச் சேர்த்து சஹாபாக்கள் வைத்துக் கொண்டதாகக் கூறப்படும் அறிவிப்புக்கு, அனஸ்(ரழி) வாயிலாக புகாரீயில் இடம் பெற்றுள்ள தமது புஜத்தைத் தமது நண்பருடைய புஜத்தோடும், தமது பாதத்தைத் தமது நண்பருடைய பாதத்தோடும் சேர்த்துக் கொண்டார்கள் என்ற அறிவிப்பு விளக்கமாகவே அமைந்துள்ளது.

Previous post:

Next post: