விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

in 1990 பிப்ரவரி

விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

இமாம்களை தொழுகைக்கு நியமித்து சம்பளம் வழங்குவதை விமர்சிக்கும் நீங்கள்- உங்கள் கூட்டு இயக்கமான JAQH நாகூரில் தம் முஹல்லாவிற்கு ஒரு இமாமை (மன்பஈ) விலைக்கு வாங்கி, நாளுக்கு ஒரு ஆள் வீட்டில் சாப்பாடு கொடுத்து வருவது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையோ? உம்முடைய எழுத்து சீர்திருத்தம், நடைமுறை வாழ்வில் சொல்லாக்காசாக மாறி வருவதை உம்முடைய ஆதாரவாளர்களே கண்ணாரக் கண்டு வருகிறார்கள். (JAQH -க்கும் நஜாத்திற்கும் சம்பந்தம் இல்லையயன்று நீங்கள் எழுதினாலும் – தவ்ஹீத் கொள்கை – என்ற லேபளில் நீங்களும்-பி.ஜேயும் ஒன்றுபடுகிறீர்கள் என்பதை மறுக்க வேண்டாம்.)
மவ்லவி, அல்ஹாஜ், நூரு முஹம்மத் (பாஜில்)   பாகவி, ஜும்ஆ மஸ்ஜித், மலேசியா.

ஆலிம் என்று சொல்லக் கொள்ளும் நீங்கள் இவ்வாறு கேட்பது நமக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. நாம் அந்நஜாத்தில் எழுதி வருவது குர்ஆன், ஹதீஸுக்கு முரணாக இருந்தால் அதனைச் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ள நீங்கள் “உம்முடைய எழுத்து சீர்திருத்தம் நடைமுறை வாழ்வில் செல்லாக்காசாக மாறி வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அதாவது பொதுமக்களும் புரிந்து கொள்ளும் முறையில் சொல்லுவதாக இருந்தால் குர்ஆன், ஹதீஸ், நடைமுறை வாழ்வில் செல்லாக்காசாக மாறி வருகிறது என்றுதானே சொல்ல வருகிறீர்கள். அதனால் தான் மவ்லவிகளாகிய நீங்கள் குர்ஆன், ஹதீஸை விடுத்து உங்கள் கற்பனைகளில் தோன்றும் கட்டுக்கதைகளை மார்க்கமாக மக்களுக்கு போதித்து வருகிறீர்கள் போலும்.

நாமோ, “உபதேசம் செய்யும் நிச்சயமாக உபதேசம் விசுவாசிகளுக்குப் பலனளிக்கும்” (51:55) என்ற அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று குர்ஆன், ஹதீஸை மக்களுக்குச் சளைக்காமல் சொல்லி வருகிறோம். எமது போதனை விசுவாசிகளுக்கு நிச்சயமாகப் பலனளிக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உறுதியாக உண்டு. காரணம் இது அல்லாஹ்வின் வாக்குறுதியாகும். சத்தியத்தைப் போதித்த நபிமார்களில் சிலருக்கு விரல்விட்டு எண்ணும் அளவிலேயே ஆதரவாளர்களாக   இருந்தார்கள்.

இன்னும் சிலருக்கு ஒரு ஆதரவாளரும் இல்லாத நிலையில் தன்னந்தனியாகச் சுவர்க்கம் செல்வார்கள் என்று ஹதீஸ் அறிவிப்புகள் இருப்பதை ஆலிமாகிய நீங்கள் அறியாதிருப்பது வேதனைக்குரியதே. அந்த நபி மார்களின் சத்திய போதனை செல்லாக்காசாக ஆகி இருந்தால் அவர்களை அல்லாஹ் சுவர்க்கத்திற்கு அனுப்புவானா? நிதானமாகச் சித்தித்துப் பாருங்கள். நாம் சத்தியத்தைப் போதித்து வருவது அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெறுவதற்கே அல்லாமல் உங்களைப் போன்ற மவ்லவி வர்க்கத்தின் அன்பைப் பெறுவதற்காக அல்ல.

JAQH இயக்கத்தார் தங்கள் மவ்லவி வர்க்கத்தைக் காப்பாற்றிக் கொள்ளவே நம்மைவிட்டு வெளியேறினர் என்பது ஊரறிந்த உண்மை எனவே தங்கள் இனத்தைக் காப்பாற்றிக் கொள்ள உங்கள் “மவ்லவி” நடைமுறைகளைப் பின்பற்றுகிறார்கள். “முஸ்லிம்” என்ற நிலையில் நீங்களும் நாங்களும் ஒன்றுபடத்தான் செய்கிறோம். “முஸ்லிம்” என்ற லேபளில் முகல்லிதுகளாகிய கபுரு வணங்கிகளும், பீர் வணங்கிகளும் இமாம் வணங்கிகளும் நம்மோடு ஒன்றுபடத்தான் செய்கிறார்கள். இதை நாம் மறுக்கவில்லையே. “முஸ்லிம்” என்று மட்டும் சொல்லிக் கொள்வதோடு யாரையும் தக்லீது செய்யாமல் குர்ஆன், ஹதீஸை மட்டும் செயல்படுத்துகிறவர் களே அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற்று சுவர்க்கம் செல்ல முடியும் என்றே நாம் சொல்லி வருகிறோம்.

கடந்த 4 வருடங்களாக இஸ்லாத்தை உள்ளது உள்ளபடி சொல்வதாக மார்தட்டும் உங்கள் பத்திரிகையினால் என்ன லாபம்? குழப்பமும், குதர்க்கமும், அடிதடியும்தான் மிச்சம். உம்முடைய அடி வருடிகள் உலமாப் பெருமக்களை “அவன் இவன்” என்று ஏகவசனத்தில் பேசியதும் தான் மிச்சம். குறைச்தபட்சம் உம் கூட்டத்திற்காவது தக்வா இருக்க வேண்டும். ஐங்கால தொழுகையைக் கூட பேணாதவர்கள் – முஹம்மத் ரசூலுல்லாஹ்வின் சுன்னத்தை உதாசீனப்படுத்தி தாடியை சிரைத்துக் கொள்பவர்கள், இவர்களைத் தவிர வேறு யாரை நீர் சீர்திருத்தம் செய்துள்ளீர். மதரஸாக்களிலிருந்து வெளியாகும் 100க்கும் 100 உலமாக்களில் யாருக்காவது தாடி இல்லாமல் இருப்பதை உம்மால் காட்ட முடியுமா? (நபி(ஸல்) அவர்களின் 23 வருடகாலப் பணியை உம்முடைய தஜ்ஜாலிய்யத் பணியோடு ஈடுபடுத்தி பேச வேண்டாம்).
மவ்லவி, அல்ஹாஜ், நூரு முஹம்மத் (பாஜில்) பாகவி, ஜும்ஆமஸ்ஜித், மலேசியா.

கடந்த 4 வருடங்களாக அல்ல, 6 வருடங்களாக இஸ்லாத்தை உள்ளது உள்ளபடி சொல்லி வருகிறோம். அது விசுவாசிகளுக்கு நல்ல பலனை அளித்து வருகிறது என்பதையும் நேர்மையாளர்கள் உணரத்தான் செய்கிறார்கள். 1949ல் குர்ஆன் தமிழ் உரை முதன் முதலில் வெளி வந்தது. 1983ல் ஜான் டிரஸ்டின் குர்ஆன் தமிழ் உரை வெளிவந்தது. அப்போதெல்லாம் விரல்விட்டு எண்ணும் அளவில் வெகுசிலரே அவற்றை வாங்கினர். அதிலும் சிலரே அவற்றைப் பார்த்து விளங்கி முற்பட்டனர்.

ஆனால் 1989ல் ஜான் டிரஸ்ட்டார் 10,000 காப்பிகள் அச்சடித்து ஓரிரு மாதங்களிலேயே அவை தீர்ந்து மேலும் 10,000 காப்பிகள் அச்சடித்து அவையும் மிக வேகமாகத் தீர்த்து வருகின்றன. I.F.T. நிறுவனத்தார் வெளியிட்டுள்ள குர்ஆன் தமிழுரையும் மிக வேகமாக விற்பனையாகி வருகிறது. மக்கள் விழித்துக் கொண்டார்கள். சத்தியத்தை உணர்ந்து வருகிறார்கள். இன்ஷா அல்லாஹ். இன்றும் 10 அல்லது 15 வருடங்களில் தாருந்நத்வாவினர் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டதுபோல் உங்கள் ஜ.உ. சபை அழிக்கப்படுகிறதா, இல்லையா? என்று பாருங்கள்.

சத்திய வழியில் புரட்சி ஏற்படும்போது குழப்பம், குதர்க்கம், அடிதடி இவை அனைத்தும் ஏற்படவே செய்யும். அல்லாஹ்வின் இறுதி நபி(ஸல்) அவர்களுக்கு இவை இல்லாமல் இஸ்லாத்தின் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியவில்லை. சரித்திரம் முறையாக நீங்கள் கற்றிருந்தால் இவற்றை அறிந்திருப்பீர்கள். இந்தக் குழப்பம், சச்சரவு, அடிதடி இவை அனைத்தும் அன்று தாருந் நத்வாவினர் பொதுமக்களை தூண்டி விட்டதால் ஏற்பட்டன. அதே போல் இன்று நவீன தாருந்நத்வாவினரான ஜ.உ.ச.வினர் பொதுமக்களை தூண்டி விடுவதாலேயே குழப்பம் சச்சரவு, அடிதடிகள் ஏற்படுகின்றன. என்பதே உண்மையாகும். 1984ல் நமது இந்த சத்திய பிரச்சாரத்தை ஆரம்பித்தோம். அது மக்களிடையே நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி வந்தது. 1986ல் ஆரம்பிக்கப்பட்டட அந்நஜாத்தையும் மக்கள் விரும்பிப் படிக்க ஆரம்பித்தனர்.

1987 மார்ச் 14, 15 தேதிகளில் நவீன தாருந்நத்வாவினரான ஜ.உ.சபையினர் திருச்சியில் மாநாடு போட்டு பொய்ப்பிரச்சாரங்கள் செய்து மக்களைத் தூண்டிவிட்ட பின்ரே நீங்கள் குறிப்பிட்டுள்ள குழப்பம், குதர்க்கம், அடிதடி அனைத்தும் ஆரம்பமாயின. “உலமாப் பெருமக்கள்” என்ற போர்வையில் மவ்லவிகள் தாருந் நத்வாவினரைப் போல் தஜ்ஜாலியத்தை முடுக்கி விட்டதால் “அவன், இவன்” என்று ஏகவசனம் பெற நேரிட்டது. மரியாதை கொடுத்து மரியாதை வாங்குவதே மரபாகும். சத்திய மார்க்கத்தை-குர்ஆன் ஹதீஸ் போதனையை மக்கள் முன் வைக்கும் உண்மையாளர்களை மவ்லவிகளாகிய நீங்கள் அவன்- இவன் எனற் ஏக வசனத்தில் பேசும்போது சத்தியத்தை உணர்ந்தவர்கள் கொதிப்படைவார்களா இல்லையா? நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள்.

குர்ஆன், ஹதீஃதை முறையாக விளங்கி வருகிறவர்கள் நிச்சயமாக தக்வா உடையவர்களாவும், ஐங்காலத் தொழுகையை முறைப்படி தொழுது வருகிறவர்களாகவும், சுன்னத்துகளைப் பேணி நடப்பவர்களாகவும் இருப்பார்கள். அதே சமயம் மவ்லவிகளாகிய உங்கள் இனத்தாரின் அட்டூழியங்களைக் கண்ணாரக் கண்டு பொருமிக் கொண்டிருந்தவர்கள். இப்போது தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினால் அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?

நபி(ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் முறையாக தாடி வைத்திருக்க அதில் பல சலுகைகளைக் காட்டி பிக்ஹு என்ற பெயரால் தவறான சட்டங்கள் இயற்றி வைத்திருப்பது உங்கள் மவ்லவி வர்க்கம் தானே உங்கள் தவறான போதனைகளில் ஊறிப்போன மக்கள் அவற்றிலிருந்து சிறிது சிறிதாகத்தான் விடுபட்டு வருகின்றனர். அதே சமயம் வெளிரங்கமான தோற்றத்தை மட்டும் வைத்து மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் வகையில் உங்கள் மதரஸாக்களின் போதனைகள் அமைந்திருப்பதால், நீங்கள் குறிப்பிடுவது போல் 100க்கு100 வெளியாவதில் ஆச்சரியம் எதுவுமில்லை மார்க்கத்தின் பெயரால் மக்களிடம் கையேந்திப் பிழைப்பவர்களின் “டிரேட் மார்க்கதான்” தாடி, ஜுப்பா தலைப்பாகை என்ற தவறான எண்ணத்தை மக்களிடையே மவ்லவிகளாகிய நீங்கள் வளர்த்துவிட்டதால் தான் பொதுமக்கள் அவற்றை கைக்கொள்ள கூச்சப்படுகின்றனர்.

எங்களது சொந்த அபிப்பிராயங்களையும், யூகங்களையும் கலக்காமல் குர்ஆன், ஹதீஃதை மட்டும் போதிக்கிறோம் என்பதை உங்கள் ஜ.உ. சபையினரே ஒப்புக்கொண்டுள்ளனர். உலகில் தோன்றிய நபிமார்கள் அனைவரும் அதனையே மக்களுக்குப் போதித்தனர். நபி(ஸல்) அவர்கள் போதித்த குர்ஆன் போதனையையே நாங்களும் போதிக்கிறோம். எனவே தாராளமாக நபி(ஸல்) அவர்களின் 23 வருட பணியோடு எங்களது பணியை ஈடுபடுத்தி பேசுவதில் எந்தத் தவறுமில்லை. அன்று நபி(ஸல்) அவர்களின் குர்ஆன் போதனையை தஜ்ஜாலியத் போதனை என்று அபூஜஹிலும், தாருந் நத்வாவினரும் சொன்னதுபோல் இன்று ஜ.உ. சபையினராகிய நீங்கள் எமது குர்ஆன், ஹதீஃத் போதனையை “தஜ்ஜாலியத் பணி” என்று தவறாகச் சொல்லுகிறீர்கள் என்றே சொல்லுவோம்.

எங்களது சொந்த அபிப் பிராயங்களையும், யூகங்களையும் கலக்காமல் குர்ஆன், ஹதீஃதை மட்டும் அபூ ஜஹீலும், தாருந் நத்வாவினரும் தர்காவில் நல்லடியார்கள் பொருட்டால் நம் கஷ்டங்களை நீக்க கோருவதும், நல்லடியார்களிடம் சிபாரிசு தேடுவதையும் “சிர்க்”- என்று நெஞ்சழுத்தத்தோடு சாதிக்கும் நீர் இதற்குத் துணையாக 18:102 வசனத்தை எழுதுகிறீர். ரப்புல் ஆலமீனான அல்லாஹ் இதனை “சிர்க்”- என்று நினைத்தானானால், முஹம்மத்(ஸல்) உம்மத்தவர்களிடம் இதனைப் புக வைத்திருப்பானா? இறுதி நபியின் உம்மத் கடந்த 1,100 ஆண்டுகளாக “சிர்க்”- செய்து முஷ்ரிகீன்களாக போய் விட்டனரா? எத்தனையோ அடையாளங்களை முன் கூட்டியே அறிவித்த அண்ணல் நபி(ஸல்) தர்காவிற்கு போவது “சிர்க்”- இந்த பாதகத்தை தம் உம்மத்தவர் செய்து “முஷ்ரிக்”காக போய் விடுவார்கள் என்று எச்சரிக்கை விடுக்காமல் போனது ஏன்?
மவ்லவி அல்ராஜ், நூரு முஹம்மத் (பாஜில்) பாகவி, ஜும்ஆமஸ்ஜித், மலேசியா

அல்லாஹ்வுக்கு இணை வைக்காதீர்கள் என்று தெளிவாகப் போதித்துச் சென்ற இப்றாஹீம் (அலை) அவர்களின் நேரடி வாரிசுகளில் மிகப் பெரும்பாலோர் “சிர்க்கில்” சுமார் 3,000 ஆண்டுகளாக மூழ்கி இருந்தனர் என்றால் முஹம்மது(ஸல்) அவர்களின் உம்மத்தினரில் பலர் அதே “சிர்க்”-கில் 1,100 வருடங்கள் முழ்குவதில் ஆச்சிரியம் என்ன இருக்கிறது? இப்றாஹீம்(அலை) அவர்களின் நேரடி வாரிசுகளுக்கே, கஃபாவைச் சுற்றி இருந்தோருக்கே, தங்களை இப்றாஹீம்(அலை) அவர்களின் மார்க்கமான இஸ்லாத்தைப் பின்பற்றி நடக்கும் முஸ்லிம்கள் என்று நம்பிக் கொண்டிருந்தோருக்கே இந்த 18:102 வசனத்தின் எச்சரிக்கை இறங்கி இருக்கிறதென்றால், அதே தவறான கபுரு சடங்குகளைச் செய்து கொண்டிருக்கும் உம்மத்தே முஹம்மதியாவில் இருப்பவர்களுக்கு ஏன் பொருந்தாது?

தங்களை மவ்லவி பாஜில் பாக்கவி என்று சொல்லிக் கொண்டு நபி(ஸல்) அவர்கள் கபுரு சம்பந்தமாக எச்சரித்துச் சென்ற எச்சரிக்கைகளை நீங்கள் அறியாதிருப்பது உண்மையிலேயே மிகவும் வருந்தத்தக்கது.

இதோ சில ஹதீஃத்களைத் தருகிறோம் :

ரசூல்(ஸல்) அவர்கள் கப்ருகள் பூசப்படுவதையும், அவற்றின் மீது எதனையும் எழுதப்படுவதையும், அதன்மீது கட்டடம் எழுப்பப்படுவதையும் தடுத்துள்ளார்கள் என அவர்களின் அன்புத் தோழர் ஜாபிர்(ரழி) அவர்களின் அறிவிக்கிறார்கள். (திர்மிதீ )

கப்ருகள் பூசப்படுவதையும், அதன் மீது உட்காருவதையும் ரசூல்(ஸல்) அவர்கள் தடுத்தார்கள். (ஜாபிர்(ரழி), முஸ்லிம்)

யூதர்களையும் கிறித்தவர்களையும் தங்கள் நபிமார்களின் கப்ருகளை வணங்கும் இடமாக ஆக்கிய காரணத்தால் அல்லாஹ் சபித்து விட்டான் என தன்னுடைய மரண தருவாயில் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அவர்களின் அன்பு மனைவி அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவித்துவிட்டு, “”இல்லாவிட்டால் ரசூல்(ஸல்) அவர்கள் சொல்லியிருக்காவிட்டால் அவர்களின் கப்ரும் (தரைமாட்டத்தை விட) உயர்த்தப்பட்டிருக்கும்” என்றும் கூறினார்கள். ( புகாரீ )

யூத, கிறித்தவர்களில் ஒரு நல்ல மனிதன் இறந்து விடும்போது அவனது கப்ரின் மீது ஒரு வணங்கும் இடத்தை கட்டிக் கொள்வார்கள் நாளடைவில் அதில் சில வடிவங்களையும் அமைத்துக் கொள்வார்கள். அல்லாஹ்விடம் இவர்களே மிகக் கெட்டவர்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (அன்னை ஆயிஷா (ரழி ), புகாரீ )

நீ எனது கப்ருக்கு அருகில் நடந்து சென்றால் அதற்கு சஜ்தா செய்வாயா? என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள் “அவ்வாறு நான் செய்யமாட்டேன்” என பதில் கூறினேன். அதற்கு அவர்கள் ஆம்! கப்ருக்கு சஜ்தா செய்யாதீர் என்றார்கள். (அபூதாவூத், கைஸிம்னு சயீத்(ரழி) )

கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை ரசூல் (ஸல்) அவர்கள் சபித்தார்கள் என அவர்களின் நெருங்கிய தோழர் அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (இப்னு மாஜ்ஜா)

நீங்கள் எனது கப்ரை விழாக்கள் நடக்கும் இடமாக ஆக்கிவிடாதீர்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளை இட்டதாக அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அபூதாவூத்)

“தரைமட்டத்திற்கு மேல் உயரமாக கட்டப்பட்ட எந்த கப்ரையும் தரைமட்டமாக்காது விட்டு விடாதே” என்று நபி(ஸல்) அவர்கள் என்னை நியமித்தார்கள். அதே பணியை செய்துவர உன்னை நான் அனுப்பி வைக்கிறேன் என்று அபுல்ஹய்யாஜ் என்பவரை நோக்கி அலி(ரழி) அன்ஹு அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

மேலதிக விபரங்களுக்கு அந்நஜாத் 1986 ஏப்ரல் பக்கம் 23 (முதல் வெளியீடு) ஐ பார்க்கவும்.

இந்த ஹதீஸ்களைப் பார்த்த பின்பாவது உணர்வு பெறுங்கள் உள்ளத்தில் ஈமான் இருப்பவர்களுக்கு நிச்சயமாக குர்ஆன், ஹதீஸ் போதனைகள் நல்ல பலன் தரும் இது அல்லாஹ்வின் வாக்குறுதியாகும்.

JAQH  நாகூர் மாநாட்டு மலரில் தங்கள் பெயரில் கட்டுரை ஒன்று வெளிவந்துள்ளதே?    நாஸர், நாகர்கோவில்.

நீங்கள் மட்டுமல்ல நேரில் பலர் இப்படி நம்மிடம் கேட்கின்றனர். அபூ அப்துல்லாஹ் நாம் மட்டும்தானா? அபூ அப்துல்லாஹ் என்று பலரும் அழைக்கப்படலாம். அப்துல்லாஹ் என்ற பெயரில் மகனை உடையவர்கள் அனைவரும் அபூ அப்துல்லாஹ் தான்.

JAQH   நாகூர் மாநாட்டில் ஒரு பிரபல்யமான மதனி, மவ்லவிகளின் சிறப்புப் பற்றியும், அவர்கள் சமுதாயத்திற்கு ஆற்றி வரும் சேவைகள் பற்றியும் வானளாவப் புகழ்ந்து பேசினாரே? இவர்களின் இந்த வழமைக்கு விரோதமான போக்கிற்குக் காரணம் என்ன?    ஷேக் அலாவுதீன், நல்லம்பல்

அவர்கள் தங்கள் நிலையை இப்போது தெளிவாக வெளிப்படுத்த ஆரம்பித்து விட்டனர். நமது சத்திய முயற்சியின் காரணமாக தங்கள் இனமான மவ்லவி வர்க்கம் அட்ரஸ் இல்லாமல் அழித்து போகும் என்ற அச்சமே அவர்களை நம்மை விட்டு வெளியேறச் செய்தது இப்போது தங்கள் மவ்லவி இனத்தைத் தக்க வைத்துக் கொள்ள தேவையான எல்லா முயற்சிகளையும் செய்து வருகின்றனர். அந்த அடிப்படையில் பேசப்பட்ட பேச்சுத்தான் அது.

ஆதம் (அலை) அவர்களின் காலத்திலிருந்து இன்றுவரை மக்களை மதத்தின் பெயரால் கூறு போட்டுச் சுரண்டும் வர்க்கம் இந்த புரோகித வர்க்கம்தான் . இந்த இடைத்தரகர்கள் எல்லா நபிமார்களின் உம்மத்திலும் தோன்றினார்கள். இறுதி நபி(ஸல்) அவர்களின் உம்மத்திலும் தோன்றி இருக்கிறார்கள். இந்த புரோகிதர்களுக்கென்று ஒரு மந்திரம் இருக்கிறது. அதனை ரிக் வேதத்தில் புருட சூத்திரம் என்ற பகுதியில் காணலாம்.

“தெய்வாதீனந் ஜத்ஸர்வம். மந்த்ராதீனந்து தைவதும் தன்மந்த்ரம் ப்ராஹமணாதீனம், ப்ராஹமணா மமதைவதம்”.

பொருள் : உலகம் தெய்வத்துக்குள் அடக்கம், தெய்வம் மந்திரத்திற்கு அடக்கம் மந்திரம் பிராமணருக்கு அடக்கம் அதலால் பிராமணரே நம் தெய்வம். ஆதாரம் : ஆர். எஸ். எஸ்ஸின் கேள்விகளும், அதிரடி பதில்களும். வெளியீடு : பெரியார் மையம், திருச்சி-14.

அந்த புரோகிதர்களைப் பின்பற்றி இந்தப் புரோகிதர்கள் ஒரு மந்திரம் தயார் செய்து வைத்திருக்கிறார்கள் போலும். அதுவருமாறு;

உலகம் அல்லலாஹ்வுக்குள் அடக்கம்

அல்லாஹ் அரபிக்குள் அடக்கம்

அரபி மவ்லவிகளுக்கு அடக்கம்

ஆதலால் மவ்லவிகளே நமக்கு அல்லாஹ்

இப்படிப்பட்ட தவறான நம்பிக்கை உடையவர்கள் மட்டுமே அரபி மொழி கொண்டு பெருமை பேசி, மவ்லவி வர்க்கத்தை வானளாவ உயர்த்திப் பேச முடியும்.

***********************************************************************

Previous post:

Next post: