தாருந் நத்வா பாரீர்!

in 1990 நவம்பர்

தாருந் நத்வா பாரீர்!

இப்னு ஹத்தாது.

 M.k முஹம்மது சுலைமான் பாகவி தனது மாத இதழ் மக்காச் சுடர் செப்படம்பர் இதழில்  ‘இமாம்களை தக்லீது செய்வது அவசியம்் என்ற தலைப்பில் தம் மனம் போனப் போக்கில் 4:115, 21:7 குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் கொடுத்துள்ளார், என்ன தான் எழுதினாலும் விளக்கங்கள் கொடுத்தாலும் மவ்லவிகள் சத்தியத்தை உணரத் தயராக இல்லை. காரணம் தங்கள் மவ்லவி வர்க்கத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் பேராசை அவர்களை இப்படி எல்லாம் உளற வைக்கிறது.

‘தக்லீதின் பெயரால்” என்ற தலைப்பில், இந்த குர்ஆன் வசனங்களை முல்லாக்கள் எவ்வாறு திரித்து எழுதுகின்றனர், அவற்றின் உண்மையான விளக்கங்கள் என்ன என்பதை முன்பே விபரித்துள்ளோம். (பார்க்க அந்நஜாத் பிப் 88, பக் 26, ஜுலை ’88 பக் 31)

4:115 வசனத்தில் இத்தூதரை விட்டுப் பிரிந்து, விசுவாசிகளின் வழியல்லாததைப் பின்பற்றுகிறானோ’ என்று நரகை அடைகின்றவனைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கும் நிலையில், விசுவாசிகள் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ள நபித்தோழர்கள் நபி(ஸல்) அவர்களையே பின்பற்றியதுப் போல் நாமும் நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றாமல் அவர்களை விட்டுப் பிரிந்து இமாம்களை தக்லீது செய்வதற்கும் இந்த 4:115 வசனம் ஆதாரம் என்று பாகவி குறிப்பிடுகிறாரே! இவருக்கு எந்த அளவு நெஞ்சழுத்தம் இருக்க வேண்டும்? தெள்ளத் தெளிவான இப்படிப்பட்ட வசனங்களையே திரித்து மக்களை வழிக்கெடுக்கும் இந்த முல்லாக்கள் எந்த அளவு சுய நலக்காரர்கள் என்பதை மக்கள் உணர வேண்டும்.

“தக்லீது” பதம் இடம் பெற்றுள்ளதா? அல்லது அவர் குறிப்பிட்ட இன்னொரு வசனமான 21:7 லிலாவது தக்லீது என்ற பதம் இடம் பெற்றுள்ளதா? ‘பஸ் அலூ அஹ்லதிக்ரி இன்குன்தும்லாதஃலமூன்’ – நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் திக்ரை-வேத அறிவிப்புகளை உடையவர்களிடம் கேட்டு அறிந்துக் கொள்ளுங்கள் என்று தான் இருக்கிறது. அஹ்லதிக்ரி-வேத அறிவிப்பு உடையவர்கள் என்பதை அஹ்லல் இல்மி – அறிவை உடையவர்கள் என்று திரித்திருக்கிறார். பேஸ் அலூ- கேட்டு விளங்குங்கள் என்பதை கல்லிதூ கண்மூடிப் பின்பற்றுங்கள் – தக்லீது செய்யுங்கள் என்று திரித்திருக்கிறார். “கல்லிதூ அஹ்லல் இல்மி’ என்று அரபிபதம் இருந்தால் மட்டுமே ஆலிம்களை – இமாம்களை தக்லீது செய்யுங்கள் என்று மொழிப் பெயர்க்க முடியும்.

‘ தக்லீது இன்று நேற்று ஏற்ப்பட்டதல்ல. சஹாபாப் பெருமக்கள், தாபியீன்கள் தபவு தாபியீன்கள் காலந்தொட்டே தொடர்ந்து பின்பற்றப்படும் ஒரு இஸ்லாமிய மரபாகும்’ என பாகவி மனந்துணிந்து பொய்யை இட்டுக்கட்டியுள்ளார். தபவு தாபியீன்களான மரியாதைக்குரிய அந்த நான்கு இமாம்களும் தக்லீது செய்பவர்களாக இருக்கவில்லை. குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களை விளங்கியே செயல்பட்டனர் என்பதை விரிவாசச் சென்ற இதழில் விளக்கியிருந்தோம்.

இந்த முல்லாக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துக் கொண்டு தக்லீது என்ற அரபிப் பதத்திற்கு-பின்பற்றல் என்று அழுத்தமாக சொல்லியும், எழுதியும் வருகின்றனரே, பின்பற்றுதலுக்கு அவர்கள் குறிப்பிடும் தக்லீது பதம் பயண்படுத்தப்பட்டுள்ள ஒரே ஒரு குர்ஆன் வசனத்தையோ, அல்லது ஒரே ஒரு ஹதீஸையோ அவர்களால் காட்ட முடியுமா? குர்ஆன், ஹதீஸில் இல்லாத ஒன்றை மார்க்கத்தில் புகுத்தும் இவர்கள் அல்லாஹ்வின் விரோதிகள் அன்றோ? அல்குர்ஆன் 5:2,97 வசனங்களில் கால்நடைகளுடன் சம்பந்தப்படுத்தி வந்துள்ள ‘கலாயித’ என்ற பதத்தைச் சார்ந்த ‘தக்லீதை’ மனித வர்க்கத்துடன் இணைத்து மனிதர்களையும் மிருகங்களாக்கும் இந்த முல்லாக்கள் பின்னால் செல்லும் முஸ்லிம்களுக்கு சுய சிந்தணை உண்டா?

இந்த அடிப்படையில்தானே ‘அல் அவாம்கல் அன்ஆம் -அவாம்களான சாதாரண மக்கள் ஆடு மாடுகளான மிருகங்களைப் போன்றவர்கள் என்று இந்த முல்லாக்கள் துணிந்துக் கூறி வருகின்றனர். இந்த முல்லாக்கள் தங்களைப் பற்றி இந்த அளவு இழிவாகப் பேசியும், எழுதியும் அவர்களால் அவாப்கள் என குறிப்பிடப்படும் முஸ்லிம்கள் வெட்கமில்லாமல் இந்த முல்லாக்கள் பின்னால் செல்லுவதால் தானே இந்த முல்லாக்கள் மிருகங்கள் என கூறத் துணிகின்றனர். இந்த முல்லாக்கள் முஸ்லிம்களாகிய தங்களை நரகத்தின் பால் இட்டுச் செல்லுகிறார்கள் என்பதை உணர்ந்து திருத்தி குர்ஆன், ஹதீஸைப் பின்பற்ற முன்வர வேண்டும். அப்படி உணர்ந்து திருத்தத் தவறினால் நாளை மறுமையில் நரகை அடைந்து கீழ்கண்டவாறு சுலைமான் பாகவி போன்ற முல்லாக்கள் மீது ஆத்திரத்துடன் வசைமாரி பொழிய நேரிடும்.

அவர்களுடைய முகங்களைப் புரட்டி புரட்டி நெருப்பில் பொசுக்கும் நாளில், எங்களுடைய கேடே; நாங்கள் அல்லாஹ்வுக்கு வழிபட்டிருக்க வேண்டாமா? (அவனுடைய) தூதருக்கும் வழிப்பட்டிருக்க வேண்டாமா?

 அன்றி, ‘எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும் (ஸாதாத்துக்கள்) எங்கள் பெரியேர்களுக்குமே (அகா பிரீன்கள்) வழிபட்டோம். அவர்கள் எங்களைத் தப்பான வழியில் செலுத்தி விட்டார்கள்.’

(ஆகவே) எங்கள் இறைவனே! நீ அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைக் கொடுத்து, அவர்கள் மீது மகத்தான சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக’  என்று கூறுவார்கள். (33:66, 68) மேலும் பார்க்க 38:56-64)

இந்த அளவு தெள்ளத் தெளிவான குர்ஆன் வசனங்களைப் பார்த்தப் பின்பும் உணர்வுப் பெறாதவர்கள், இதன் பின்பும் சுலைமான் பாகவி போன்ற வழிக் கெடுக்கும் முல்லாக்கள் பின்னால் செல்லுகிறவர்கள். உண்மையிலேயே பரிதாபத்திற்க்குரியவர்கள். அவர்களுக்காகவும் அவர்களை வழிக் கெடுப்பவர்களுக்காகவும் வருந்தி அல்லாஹ்விடம் துஆ செய்வதைத் தவிர வேறு நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.   

 அல்குர்ஆன் 2:170, 9:31, 21:53, 26:74, 31:21, 36:66, 67,68, 38:60, 61 ஆக பத்து வசனங்களில் முன் சென்றவர்கள் மீது பக்திக் கொண்டு அவர்களை பின்பற்றியவர்களின் பரிதாப முடிவுப் பற்றி தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளான். 2:134, 141 ஆகிய இரு இடங்களில் சென்று போனவர்கள் சென்று போனவர்களே, அவர்கள் செய்த நல்வினை அவர்களுக்கே நீங்கள் செய்த நல்வினை தான் உங்களுக்கு(ப் பலனளிக்கும்). ‘அவர்கள் என்ன செய்துக் கொண்டிருந்தார்கள் என நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள்’ எனத் தெள்ளத் தெளிவாக அல்லாஹ் குறிப்பிட்டிருக்கிறான்.

இப்படி முன்னோர்களைப் பின்பற்றுவதற்கும் தெளிவான தடை விதித்து ஒன்று பதிலாக பத்து இடங்களில் எச்சரித்துள்ளான். அதல்லாமல் இரண்டு இடங்களில் அவர்களது உழைப்பும் முயற்சியும் அவர்களுக்குரியதே. உங்களது உழைப்பும் முயற்சியும் அவர்களுக்கு பலன் தரும். அவர்களுக்கும் உங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அவர்களின் முதுகுக்குப் பின்னால் ஒளியக் கூடாது எனத் தெள்ளத் தெளிவாக அறிவித்துள்ளான். அவர்களது செயல்கள் பற்றி நம்மிடம் விசாரிக்கப்பட மாட்டாது எனவும் உறுதி அளித்துள்ளான். இந்த நிலையில்.

உள்ளங்கை நெல்லிக்கனிப் போல் தெள்ளத்தெளிவான இத்தணை அறிவிப்புகள் இருந்தும் இந்த முல்லாக்கள் ஏன் முன்னோர்களின் முதுகுக்குப் பின்னால் போய் ஒளிகிறார்கள்? இதையாவது முஸ்லிம்கள் சிந்தித்ததுண்டா? சிறிது ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள் உண்மை சட்டெனப் புரியும்.

குர்ஆன், ஹதீஸில் எந்தக் கோணலும் இல்லை. பித்தலாட்டங்கள் இல்லை. தெள்ளத்தெளிவானது, எளிதானது, இரவும் பகலைப் போல் பிரகாசமானது. கைப் புண்ணாணுக்கக் கண்ணாடி தேவையில்லாததுப் போல், குர்ஆனை விளங்க இந்த சுயநலமுல்லாக்களின் விளக்கம் தேவையற்றது. ஆயினும் அவற்றை மக்களுக்கு நேரடியாக எடுத்துச் சொல்லுவதால் இந்த முல்லாக்கள் இவ்வுலகில் எவ்வித ஆதாயமும் அடைய முடியாது. அற்ப உலக ஆசையில் மூழ்கியவர்கள் தானே இந்த முல்லாக்கள். எனவே அற்ப உலக ஆதாயங்களை அடைய  குர்ஆனையும், ஹதீஸையும் திரித்துச் சொல்ல வேண்டும். அப்படி இவர்களாக செய்தால் மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அதற்க்கென்ன வழி?

எனவே குர்ஆன், ஹதீஸ் எச்சரிக்கைகளுக்கு மாற்றமாக முன்னோர்களைத் தங்களுக்குக் கேடயமாக்கித் துணைக்கு இழுக்கிறார்கள். அந்த நாதாக்கள் எல்லாம் சாமான்யப்பட்டவர்களா, கல்லைத் தங்கம் என நிரூபித்தார்கள், 40 ஆண்டுகள் இஷாவுக்கு செய்த ஒளுவைக் கொண்டு சுபுஹுத் தொழுதார்கள். ஒரு நாளில் 6 குர்ஆன் ஓதினார்கள். இரவு முழுவதும் ஒற்றைக் காலில் நின்று வணங்கினார்கள். இறந்து அடக்கம் செய்யப்பட்டப் பின்பும் கபுரில் தொழுதார்கள் என்றெல்லாம் கற்பனைக் கட்டுக் கதைகளை கதை கதையாக சொல்லி மக்களை மூளை சலவை செய்து முன்னோர்கள் பற்றிய ஒரு தெய்வீக இமேஜை உண்டாக்கி வைத்துள்ளனர். இந்த முல்லாக்கள். அந்த முன்னோர்கள் போல் முஸ்லிம்கள் ஒருபோதும் ஆக முடியாது என்ற தாழ்வு மனப்பான்மையை தோற்றுவித்தனர்.

முன்னோர்கள் பற்றிய இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகளை மக்களின் உள்ளங்களில் விதைத்தப் பின்பு குர்ஆன், ஹதீஸை சாதாரணமாக விளங்க முடியாது. அவற்றை விளங்க அரபி மொழியும், 18 விதமான கலைகளும் கற்றிருக்க வேண்டும் என கதையளந்து முஸ்லிம்களிடையே மேலும் தாழ்வு மனப்பான்மையை வளர்த்து வைத்துக் கொண்டார்கள்.

இப்படி மக்களிடையே தங்களுக்குச் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கி வைத்துக் கொண்டு குர்ஆனுக்கும். ஹதீஸுக்கும் முரணானவற்றை மார்க்கமாக, அந்த முன்னோர்களின் பெயரால் அரங்கேற்றம் செய்துள்ளனர். முன்னோர்கள் மீது தாங்கள் கொண்டுள்ள குருட்டு நம்பிக்கையினால் முஸ்லிம்களுக்கும் குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் நேர் முரணானவற்றை எல்லாம் மார்க்கமாக நம்பி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அதன் காரணமாக இந்த முல்லாக்கள் மட்டில்லா மரியாதையையும், உலக ஆதாயங்களையும் அபரிமிதமாக அடைந்து வருகின்றனர். ஆக முல்லாக்கள் மாய வலையில் மக்கள் சிக்கியதால் ஆதாயம் பெற்று வருகிறார்கள்.

இப்போது புரிகிறதா? இந்த முல்லாக்களின் முன்னோர்களின் ஸ்தோத்திரம் எதற்காக என்று உண்மையில் முன்னோர்கள் மீதுள்ள பக்தியால் அல்ல. தங்கள் சுயநலத்திற்காக, உலக ஆதாயம் அடைவதற்காக முன்னோர்களை பகடைக்காய்களாகப் பயண்படுத்தி வருகின்றனர் இந்த முல்லாக்கள். அற்ப உலக ஆதாயம் அடைந்து வருகின்றனர்.

 இதற்கு ஆதாரமாக மக்காச்சுடர் நவம்பர் இதழில் சுலைமான் பாக்கவி ஒரு மதரஸாவின் முதல்வரிடம் கேட்டுள்ள சில ஐயங்களை மக்கள் முன் வைக்கிறோம்.

 1) மெளலூது ஷரீப் போன்ற நபிகள் நாயக காவியங்களைப் பற்றி தங்களது நிலை என்ன? அவை பயன் கருதி ஓதப்படுவதைத் தாங்கள் ஆதாரிக்கிறீர்களா? இல்லையா?

 2) மரணம் அடைந்தவர்களுக்கும் மகான்களுக்கும் ஈசால் ஸவாப் கருதி குறித்த காலத்தில் பாத்திஹா துஆ ஓதப்படுவதைப் பற்றியும் வஸீலா பற்றியும் தங்களது கருத்து என்ன?

 3) தராவீஹ் தொழுவது பற்றி, இமாம் ஜமாத் முடிந்தவுடன் ஓதப்படும் துஆ பற்றி, பாங்கு சொல்லப்பட்டவுடன் ஓதப்படும் துஆ பற்றி தங்களது வழிகாட்டுதல் என்ன?

ஏனெனில் தங்கள் மதரஸாவில்  சேவையாற்றும் உஸ்தாதுமார்களும், மாணவர்களும் மெளலூது, ஈஸாலஸவாப் போன்றவற்றில் முற்றாக கலந்துக் கொள்வதில்லை என்பதோடு சமுதாய மக்களிடம் அதைப் பற்றி விமர்சம் செய்து வருவதாக பரவலாகச் சொல்லப்படுகிறது.

சுலைமான் பாக்கவி ‘மெளலூது ஷரீப்’ என்று வர்ணித்து எழுப்பயிருக்கும் இந்தக் கேள்விகள் இமாம் அபூ ஹனீபா(ரஹ்) அவர்களைப் பின்பற்றிக் கேட்கக்ப்பட்டதா? அல்லது இமாம் மாலிக் மற்றும் ஹம்பலி(ரஹ்) அவர்களைப் பின்பற்றி கேட்கப்பட்டதா? சுலைமான் பாக்கவியரால் பதிலளிக்க முடியுமா? மரியாதைக்குரிய அந்த நான்கு இமாம்களின் காலத்தில் இந்த மூடச் சடங்கு சம்பிரதாயங்கள் நடைமுறையில் இருந்தன. என்பதற்குதிய ஆதாரங்களை சுலைமான் பாக்கவியரால் தரமுடியுமா? சுமார் 300 வருடங்களுக்கு முன்னால் இந்த முல்லாக்களின் வயிற்றை வளர்ப்பதற்க்கென்றே இந்த முல்லாக்களாலேயே ஆரம்பிக்கப்பட்ட இந்த மூடச் சடங்குகளை சுமார் 1200 வருடங்களுக்கு  முன் வாழ்ந்த அந்த மரியாதைக்குரிய இமாம்களின் பெயரால் அரங்கேற்றம் செய்கின்றனர் என்பதற்கு இதை விட ஆதாரம் வேண்டுமா?

இந்த அடிப்படையில் தான் சுலைமான் பாக்கவி தனது அந்தக் கட்டுரையில் முன்னோர்களான பல பெரியார்களின் பெயர்களை இழுத்து தனது குருட்டுத் தனமாகப் பின்பற்றும் தக்லீதை நியாயப்படுத்த முனைந்துள்ளனர். பாக்கவிக்கும் குர்ஆன் ஹதீஸின் தெள்ளத் தெளிவான ஆதாரங்களை விட முன்னோர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்டுள்ள செய்திகள் மிக பெரும் ஆதாரங்களாக ஆகி விட்டன. இது ஒன்றே சுலைமான் பாக்கவியின் சுயநலத்தை வெளிச்சம் போட்டுக் காட்டப் போதுமானதாக இருக்கிறது.

அன்பார்ந்த முஸ்லிம் சகோதர சகோதரிகளே! உண்மையான பரிபூரணமான முஸ்லிம்களாக வாழ்ந்து அல்லாஹ்வின் முழுத்திருப்தியையும் பெற்றுக் கொள்ள குர்ஆன் தாராளமாகப் போதும். அவற்றிற்கு மேல்  ஒரு மூன்றாவது வழிகாட்டல் அவசியமே இல்லை.

Previous post:

Next post: