புதிய கல்விக் கொள்கை தொடர்பான நிகழ்வுகள்!

in 2020 செப்டம்பர்

தலையங்கம்!

புதிய கல்விக் கொள்கை தொடர்பான நிகழ்வுகள்!

புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கல்வி பிரதானமாகப் பார்க்கப்படுகிறது. 1. தாய்மொழி அல்லது மாநில மொழி, 2. ஆங்கிலம் அல்லது வேறொரு அயல்மொழி, 3.இன்னும் ஒரு இந்திய மொழி ஆகியவை மும்மொழிகள் ஆகும்.

மும்மொழிக் கொள்கையின் அடிப்படை மாணவர்கள் ஜனநாயக அரசில் பங்காற்ற வேண்டும். பொருளாதார வாய்ப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும். மாநிலங்களின் ஆட்சி மொழியையும் மத்திய அரசின் இரண்டு ஆட்சி மொழிகளையும் பயில வேண்டும். நாட்டின் பன்மொழிப் பாரம்பரியத்தைத் தொடரரேண்டும். நாட்டில் ஒருமைப்பாட்டைக் காக்க இன்னொரு மொழி படிக்கவேண்டும் என்று சொல்லப்படுகிறது. மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்தும் மத்திய அரசு, இவைகளை கடைபிடித்துள்ளதா என்பதையும், மும்மொழிக் கொள்கை அவசியமா என்பதையும் அது சம்பந்தமாக, நாட்டு நடப்பிலிருந்து அறிந்து கொள்வோம்.

மும்மொழிக் கொள்கை 1961ல் வகுக்கப்பட்டது. இது நாடு முழுமைக்கும் பொருந்தும். அப்போது கல்விக் கொள்கையை வகுக்கும் பொறுப்பு மாநிலங்களிடம் இருந்தது. மாநிலங்கள் இந்தக் கொள்கையில் மாற்றம் செய்தது. திமுக அரசு சட்டமன்ற தீர்மானத்தின் மூலம் 1968ல் மும்மொழிக் கொள்கையை இரு மொழிக் கொள்கையாக மாற்றியது. மாநில ஒருமைப்பாட்டுக்கு தமிழ்மொழி அடையாளமாக இருக்கும்போது, இந்தியாவிலுள்ள இன்னொரு மொழி இந்தி தேவை இல்லை என்ற நோக்கத்தைக் கொண்டு இந்த கொள்கை அமைந்தது. மாணவர்களின் வேலை வாய்ப்புகள் இந்தியாவிலும் உலகெங்கிலும் பரவிக் கிடந்தாலும், ஆங்கிலம் போதும் என்பதும் இருமொழிக் கொள்கையின் முக்கிய அம்சமாக கருதப்பட்டது.

இன்று வரை தமிழ்நாட்டு கல்வி வாரியம் தமது பள்ளிகளில் தமிழும், ஆங்கிலமும் கற்பித்தது போல, மத்திய கல்வி வாரியம் கேந்திர வித்யாலயங்களில் இந்தியும், ஆங்கிலமும் கற்பித்தது. இந்திய அரசில் பணி புரியவும், இந்திய பொருளாதாரத்தில் பங்கு கொள்ளவும், அயல் நாடுகளில் பணி புரியவும் இந்த இருமொழிக் கொள்கை போதுமானதாக இருந்து வருகிறது.

கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக இந்தி மொழியைக் கட்டாயமாக்கும் மும்மொழிக் கொள்கை திணிக்கப்படும் என்பதற்கான அறிகுறிகள் வரைவுக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன என்றும், தமிழ்நாட்டு மாணவர்கள் மீது இந்தி மொழியை திட்டமிட்டு திணிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் டாக்டர் எஸ்.ராமதாஸ் அவர்கள் தமது நிலையை முகநூலில் 1.6.2019 அன்று பதி விட்டுள்ளார்.

மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது என்று மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதி இருப்பதை திமுக தலைவர் ஸ்டாலின், டாக்டர் எஸ்.ராமதாஸ் மற்றும் பலர் பாராட்டியுள்ளனர். இருமொழிக் கொள்கை தமிழகத்தில் தொடரும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கூறியிருப்பதைப் பாராட்டியும், தமிழக அரசு அதில் மிகவும் உறுதியாக இருக்க வேண்டும். எந்த நிலையிலும் பின் வாங்கக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கல்வியாளர்களுடனான கருத்தரங்கை ஏற்பாடு செய்த திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் வலைதளத்தில் “ஜி நியூஸ் தமிழில்’ வெளியாகிய செய்திகளைப் பார்வையிடுங்கள்.

புதிய கல்விக் கொள்கை மறைமுகமாக குலக்கல்வியைக் கொண்டு வரும் திட்டம்! இதை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும். இது பொதுமக்கள் பிரச்சினை! பொதுவாக மாணவர்களின் பிரச்சனை! மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட பிரச்சினை! மத்தியில் பா.ஜ.க. அரசு 2014ல் வந்தவுடனேயே கல்வியில் கை வைக்க ஆரம்பித்தார்கள். கல்வியில் கை வைத்தால்தான் மொத்தத்தையும் மாற்ற முடியும் என்று நினைத்து, கல்வியாளரை நியமிக்காமல் கேபினேட் செயலாளர் தலைமையில் குழு அமைத்து 200 பக்க அறிக்கையைக் கொடுத்து கல்வியில் மாற்றம் செய்யத் தொடங்கினார்கள் என்று திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் 2016ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்த கீழ்க்கண்ட சாராம்சத்தையும் நினைவுபடுத்தி பேசினார்.

பொதுத் தேர்வுகளை வரிசையாக நடத் துவதால், பள்ளியை விட்டு வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகும். இதனால் அனைவருக்கும் கல்வி என்பது செயலற்றதாகி விடும். இதனால், கிராமப்புற மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

ஒரு மாணவன் தொடர்ந்து தேர்ச்சி பெறாவிட்டால், அவனை தொழிற் பயிற்சிக்கு அனுப்புவது நயவஞ்சகம். இது குலக்கல்வி திட்டத்தை மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிடுகிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

பிளஸ் 2 முடித்துவிட்டு தேசிய அளவிலான தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்பது இந்தியாவின் பன்முகத் தன்மையை சிதைக்கும். உயர் கல்வி, செல்வந்தர் வீட்டு பிள்ளைகளுக்கென தனி உடைமை ஆகிவிடும்.

பாடத்திட்டம் வகுப்பது, மொழிகளை முடிவு செய்வதிலும் மாநிலங்களின் விருப்பத்திற்கு மாறாக மத்திய அரசு திணிப்பு நடவடிக்கையில் இறங்கி வருகிறது. இந்தி, சமஸ்கிருத மொழிகளையும், அவற்றின் கலாச்சாரத்தையும் திணிப்பதை எளிதாக்கிடவே, உள்நோக்கத்துடன் இக்கொள்கை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

புதிய கல்விக் கொள்கை என்ற மத யானை தமிழகத்திற்குள் புகுந்து, கல்வியில் சிறந்த தமிழ்நாட்டை நாசப்படுத்திடவோ, காலம் காலமாக உள்ள சமூக நீதிக்கு கேடு ஏற்படுத்திடவோ அனுமதிக்கக் கூடாது. வருமுன் காப்பதே அறிவுடைமை. நான்கு ஆண்டுகளுக்கு முன்னால், கருணாநிதி அவர்கள் இவ்வாறாக எதையயல்லாம் சொல்லி பயந்தாரோ அதுதான் இன்று புதிய கல்விக் கொள்கையாக வந்துள்ளது என்கிறார் ஸ்டாலின்.

மேலும், 400க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட புதிய கல்விக் கொள்கையின் அறிக்கை குறித்து ஆராய 10 கல்வியாளர்கள் இடம் பெற்றிருந்த ஆய்வுக்குழு ஒன்று திமுக சார்பில் அமைக்கப்பட்டது. அந்த ஆய்வுக் குழுவின் கீழ்க்கண்ட அறிக்கையை ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 1. இக்கல்விக்  கொள்கை  காவி  மயமாக்கலாக உள்ளது.
  2. வேதக் கலாச்சாரத்தை திணிப்பதாக உள்ளது.
  3. சமூக நீதி புறக்கணிக்கப்பட்டுள்ளது.
  4. பெண் கல்வி குறித்து கவலைப்படவில்லை.
  5. தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
  6. இருமொழிக் கொள்கைக்கு விரோதமாக மும்மொழிக் கொள்கை திணிக்கப்படுகிறது.
  7. மூன்று வயது குழந்தையை முறை சார்ந்த பள்ளியில் சேர்ப்பது, குழந்தைகளின் உரிமைக்கு எதிரானது.
  8. மதிய உணவுத் திட்டத்தைக் கைவிடுகிறார்கள்.
  9. தொழிற்கல்வி என்ற பெயரால், குலக் கல்வி முறையை அமல்படுத்த நினைக்கிறார்கள்.
  10. மாநில அளவில் 3,5,8ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
  11. கலைக் கல்லூரிகளில் சேர்வதற்கு அகில இந்திய நுழைவுத் தேர்வை ஏற்க முடியாது.

மேலும், ஸ்டாலின் அவர்கள் கூறுகையில், இது அரசியல் பிரச்சினை அல்ல! மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட பிரச்சனை! இதுபோன்ற பல்வேறு பரிந்து ரைகளைக் கொண்ட அறிக்கை ஒன்று 28.7.2019 அன்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சருக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக நேரில் தரப்பட்டது.

இந்த புதிய கல்விக் கொள்கையை மொத்தமாகத் திரும்பப் பெறவேண்டும் என்ற கோரிக்கையை, திமுகவும், பல்வேறு அமைப்புகளும், கல்வியாளர்களும் முன் வைத்தனர். மத்திய அரசு எதையும் ஏற்காமல் அந்தக் கொள்கையை அமல்படுத்தி விட்டது.

மத்திய அரசுப் பள்ளிகளில் தாய்மொழிக் கல்வியைச் செயல்படுத்த இயலாது என்று அதிகாரிகள் சொன்னதால், மத்திய கல்வி நிறுவனங்களில் ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி கட்டாயமில்லை, மாநில அரசுகள் விருப்பத்துக்கு ஏற்ப முடிவு செய்யலாம் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் கூறியுள்ளார்.

“ஜி நியூஸ்’ செய்தியில ஸ்டாலின் மேலும் கூறி இருப்பதாவது: இக்கல்வி கொள்கை பற்றி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை பிரதமர் மோடி பேசி இருப்பதாக ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறார். “மாணவர்களின் ஒளிமயமான எதிர்காலத்தை மனதில் கொண்டு இத்திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம்” என்று பிரதமர் சொல்லி இருக்கிறார். “இப்போது நீங்கள் அறிமுகம் செய்திருக்கும் திட்டத்தால் மாணவர்கள் பலரும் பாதியிலே பள்ளிகளை விட்டு விரட்டப்படுவார்கள்” என்று பிரதமர் அவர்களுக்கு தாழ்மையுடன் சொல்ல விரும்புகிறேன்.

“அனைவருக்கும் கல்வி கிடைக்கும்” என்று பிரதமர் அவர்கள் சொல்லி இருக்கிறார். “இல்லை பிரதமர் அவர்களே, உயர் கல்விக்கு மாணவர்கள் செல்வது தடுக்கப்படும்” என்று நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

“கல்வித்தரம் மேம்பாடு அடையும்” என்று பிரதமர் கூறி இருக்கிறார். “கல்வி உரிமையை மறுத்து, அனைவரையும் தொழிற் சாலைகளை நோக்கி துரத்துகிறீர்கள்” என்று நான் குற்றம் சாட்டுகிறேன்.

“வெளிச்சம் பாய்ச்சி இருக்கிறோம்” என்கிறீர்கள். “இல்லை! இருந்த வெளிச் சத்தை இருட்டாக்கி இருக்கிறீர்கள்” என்று சொல்கிறேன்.

“வேலை வாய்ப்பைத் தேடாமல், வேலை வாய்ப்பை மாணவர்களே உருவாக்கிக் கொள்ள பாதை அமைந்துள்ளோம்” என்று பிரதமர் சொல்லி இருக்கிறார். “இல்லை! மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும் கடமையில் இருந்து இந்த அரசு நழுவி விட்டது” என்று நான் சொல்கிறேன்.

பிரதமர் சொல்வது போல அனைவருக்கும் கல்வி கிடைக்காது. நாட்டு மக்களை ஏமாற்றுவதாக நினைத்து தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறார். இந்த கல்வி கொள்கை அமலானால், இன்னும் பத்து ஆண்டுகளில் கல்வி என்பது சிலருக்கு மட்டுமே சொந்தமானதாக ஆகிவிடும்.

கிராமங்கள் சிதைந்து விடும், ஏழைகள் மேலும் ஏழைகளாவார்கள்:

இந்தியாவின் பலமே இளைஞர் சக்தி என்பார்கள். அந்த இளைஞர் சக்தியை பெரும்பாலும் இழந்து விடுவோம். இளைஞர் சக்தி இல்லாத இந்தியா வைத்தான் இந்த புதிய கல்விக் கொள்கை உருவாக்கும் என பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறேன்.

ஜனநாயகத்தை மதிக்காமல், அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காமல், நாடாளுமன்றத்தை மதிக்காமல், எதிர்க்கட்சிகளை மதிக்காமல், யார் பேச்சையும் கேட்காமல், ஊரடங்கு காலத்தில் மறைமுகமாகப் புகுத்தப்படும் இக்கல்விக் கொள்கையை இறுதி வரை எதிர்ப்போம் என்று ஸ்டாலின் சொல்லி முடித்தார்.

வாசகர்களே! எவரும் எந்த மொழியையும் விரும்பி கற்கலாம் என்ற சுதந்திரம் இந்தியாவில் இருந்து வருகிறது என்ற அடிப்படையில்தான், இந்தி படிக்க விருப்பம் உள்ளவர்கள் இந்திமொழி இருக்கும் பள்ளிகளில் இந்தி மொழியை விரும்பிக் கற்று வருகின்றனர். அப்பள்ளிகளின் நிர்வாகம் எவரின் மீதும் இந்தி மொழியைத் திணித்திடவில்லை. எனவே, நாட்டு நடப்பின்படி, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மும்மொழிக் கொள்கை நடைமுறையில் இல்லாததாலும் 52 ஆண்டுகள் ஆகியும் இரு மொழிக்கல்வி அந்தந்த மாநிலத்திற்கு உகந்ததாக எவ்வித பிரச்சினையும் இல்லாமல் இருந்து வருவதாலும், இருமொழிக் கொள்கையின் மூலம் உலகளவில் தமிழ்நாட்டின் கல்வித்தரம் வெற்றிகரமாகப் பயணித்துக் கொண்டிருப்பதாலும், மத்திய அரசு தமது கல்விக் கொள்கைகளை மாநில அரசுகள் மீது கட்டாயப் படுத்தி திணிக்கக் கூடாது என்பதை நாட்டு நடப்பிலிருந்து தெரிந்து கொள்கிறோம்.

Previous post:

Next post: