தலையங்கம்!

in 2020 அக்டோபர்

தலையங்கம்!

பிட்காயின் (BITCOIN)

வலைதளங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிட்காயின் (BITCOIN) மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா? முஸ்லிம்கள் இதில் பங்கேற்கலாமா? என்பது போன்ற வினாக்கள் நம்மில் பலரிடம் தோன்றி, அதன் தொடராக சர்ச்சைகள் ஏற்பட்டு, “கூடும் – கூடாது’ என்ற (ஹலால், ஹராம்) ஃபத்வாக்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையை இன்று காணமுடிகிறது. இது சம்பந்தமாக மார்க்கம் என்ன சொல்கிறது என்பதை கவனிப்போம். அதற்கு முன், பிட்காயின் (BITCOIN) பற்றியும் அதன் நடப்புகள் பற்றியும் சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம். அவற்றை தெரிந்து கொண்டிருக்கையிலேயே இதில் பங்கேற்கத் தேவை இல்லை என்பதை முஸ்லிம்கள் உணர்ந்து கொள்ளமுடியும்.

நமக்குத் தேவையான அனைத்தையும் பிட்காயின் வழியாக கொள்முதல், விற்பனை செய்து கொள்ள முடிவதால், இதை வணிகம் என்கிறார்கள். பொதுவாக காகித ரூபாய் நோட்டுக்கள், மற்றும் நாணயங்களைக் கொண்டு கொள்முதல், விற்பனை சேமிப்பு, முதலீடு போன்றவைகளில் நாம் ஈடுபட்டு வருகிறோம். காகித ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்களை அரசாங்கமோ, மத்திய ரிசர்வ் வங்கியோ வெளியிடும். பிட்காயின் நாணயங்கள் அப்படி அல்ல.

பிட்காயின் (BITCOIN) கணினியில் இயங் கக்கூடிய ஒரு மென்பொருள் (SOFT WARE) ஆகும். நாடுகளின் பண ஈடுபாடே இல்லாத பரிவர்த்தனை இது! பிட்காயினின் விலை/ மதிப்பு ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறது. ஏறுவது அடிக்கடி நிகழ்வதால் மதிப்பு அதிகரித்து சிறந்த முதலீடாக இது பார்க்கப்பட்டு வருகிறது. இது “குறியாக்க நாணயம்’ (CRYPTO CURRENCY) ஆகும். பிட்காயின் என்பது ஒரு கற்பனை நாணயம். எந்த அரசாங்கமோ அல்லது மத்திய வங்கியோ பிட்காயினை வெளியிடுவதில்லை. பிட்காயின் செயல்பாடுகள் ஒரு நடுவண் வங்கியால் (CENTRAL BANK) பயன்படுத்துபவர்களால் நிர்வகிக்கப் படுவதாக கூறப்படுகிறது. பரிவர்த்தனைகள் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத டிஜிட்டல் லெட்ஜரில் பதிவாகி வருகின்றன. இந்த நுட்பத்தை நிதி உலகும் வங்கிகளும் அறிய முயற்சிக்கின்றன.

மக்கள் சிலரிடம் நடைமுறை வணிகத்தில் இருந்த கருத்துக்களை அடிப்படையாக வைத்து பிட்காயினை 2008ல் அறிமுகப்படுத்தியவர் சட்டோசி நக்கமோட்டோ என்று கூறப்படுகிறது. இணையதளத்தில் 2009ல் பிட்காயின் ஆரம்பிக்கப்பட்டது. பிறகு 2010ல் கேவின் ஆண்டர்சன் என்பவரிடம் இதன் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு விலகிவிட்டாராம். இவர் யார் என்பது இன்றுவரை யாருக்கும் தெரியாதாம். பொறுப்பாளர் இல்லாத, எளிதில் கண்டுபிடிக்க முடியாத அனாமதேயமாக இருப்பது இதனுடைய ஆரம்பக் கோளாறாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இது தடை செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் என்ற அச்சத்தையும் இது தருகிறது. இடையூறுகள் ஏற்பட்டால் பிட்காயினுக்கு மதிப்பில்லாமலே கூட போகலாம். இருப்பினும், எதுவாக இருந்தாலும்  சந்திப்போம், சாதிப்போம்  என்ற  தைரியம்  இது  வளர  காரணமாக  இருக்கிறது.

இதில் ஏற்பட்ட பலவகைக் களவுகளால், 2013லேயே, 45% பணமாற்ற கூடங்கள் (MONEY EXCHANGES) மூடப்பட்டதாம் தொடர்ந்து ஏற்பட்ட பாதிப்புகள் யாதெனில், தமிழகத்தில் பிட்காயின மோசடிகள் அம்பலமாகி பலர் கைதாகி உள்ளனர். ஈரோடில் 300 கோடி மோசடி நடந்துள்ளது. கோபிசெட்டிபாளையத்தில் 2000 கோடி மோசடி நடந்துள்ளது. திருச்சியில் ரூ.526 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்டதாக 5 நபர்களை திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ள செய்தியை “இந்த தமிழ்’ தருகிறது. வருமான வரித்துறை டிசம்பர் 2017ல், பிட்காயின் எக்சேஞ்சில் இருக்கும் 9 நிறுவனங்களில் ரெய்டு நடத்தியது. வரி ஏய்ப்பு செய்த கறுப்பு பணத்தை 5 லட்சம் பேர் வரை மிட்காயினில் முதலீடு செய்திருப்பதை கண்டுபிடித்தனர். அதில் 22 ஆயிரம் பேருக்கு மேல் தமிழர்கள்.

2017ல் பிட்காயினுக்கு மவுசு அதிகரித்தது. ரான்சம்வேர் வைரஸ் 2017ல் உலகை உலுக்கியது எப்படி? யாரென்றே தெரியாத ஹேக்கர்கள், பயனாளிகளின் கம்ப்யூட்டருக்கு டிஜிட்டல் பூட்டு போட்டு, அதை விடுவிக்க பணம் கேட்டு மிரட்டினர். தொகையை பிட்காயினாக கேட்டனர். ஏன் பிட்காயினாக கேட்டனர்? இது புது வகையான அனாமதேய பணம், இதை எந்த மத்திய வங்கிகளும் வெளியிடுவதில்லை, பரிவர்த்தனை பிளாக் செயின் மூலம் நிகழ்கிறது, கொடுக்கல் வாங்கலை காவல்துறையால் கண்டுபிடிக்க முடியாது. எனவே டிஜிட்டல் நாணயமான பிட்காயினை இணைய நிழல் உலகிற்கானதாகவும் தீயவைகள் தயக்கமின்றி புகுவதற்கான வழியாகவும் இது அமைந்து விட்டது. குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகில் பங்கேற்று, முன்னுக்கு வர நினைப்பவர்களும் உண்டு. அறுவடை ஆகிக் கொண்டிருக்கும் வரை இப்படிப்பட்டவர்களுக்கு ஆனந்தம்தான்.

மவுன்ட்காக்சில் பணிபுரிந்த தணிக்கையாளரின் கணினியிலிருந்து, 2012 ஜூன் 19ல், ஒருவர் அவரது கணக்கிற்கு அத்துமீறி பிட்காயின்களை மாற்றிக் கொண்டாராம். இதனால் 8,750,000 அமெரிக்க டாலர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பணமாற்றக் கூடம் ஒன்றின் ஆபரேட்டர் ஒருவர் வலைதளத்திலுள்ள தனது பணப்பையை (வாலெட் அல்லது டிஜிட்டல் பர்ஸ்) திறக்க முடியாததால், அவருக்கு US$ 220,000 பணத்தை திருப்பிக் கொடுக்க தனது நிறுவன சேவையை 2011 ஜூலையில் விற்கவேண்டி வந்ததாம்.

மை பிட்காயின் என்ற மணி எக்சேஞ்சில், 2011 ஆகஸ்டில் கணினியில் ஊடுருவல் (HACK) நடந்ததால், 78,000 பிட்காயின்கள் (US $ 800,00) மறைந்த இடம் தெரியாததால், நிறுவனம் மூடப்பட்டது. பிட்காய்னிக்கா என்ற நிறுவனம் இரு முறை ஊடுருவப்பட்டது. 2012 ஆகஸ்டில் இழப்பீடு தொகை US $ 460,000

BITFINEX என்ற HONGKONG  நிறுவனத்தில் 2016 ஆகஸ்டில், US $ 72 மில்லியன் திருடிச் சென்றுள்ளனர்.

NICEHASH என்ற நிறுவனம், 2017 டிசம்பரில் US $ 80 மில்லியன் திருட்டு போயிற்று.

தென் கொரியாவில் யாபியன் (YAPIAN) என்ற நிறுவனம், 2017ல் எட்டு மாதங்களில் இரண்டு முறை களவாடப்பட்டது. தன்னை பணமற்ற கடனாளியாக (BANK RUPT) விண்ணப்பித்துக் கொண்டது.

அடுத்து ஏற்பட்ட அபாயம் : ஒரு சிலர் கட்டச் சங்கிலியை (BLOCK CHAIN  அல்லது தொடரேடு) ஊடுருவித் தாக்கி அதிலுள்ள கட்டங்களில் தாறுமாறான தரவுகளை இட்டுச் செல்கின்றனர். 2018ல் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் 1600 கோப்புகள்  (FILES) கட்ட சங்கிலியில் இணைக்கப்பட்டதைக் கண்டறிந்தனர். அதில் 59 கோப்புகளில் குழந்தைகளைப் பற்றி தவறாகவும், பாலியல் தொடர்பான பல தரவுகள் இருந்தனவாம்.

கட்டச் சங்கிலியின் கட்டமைப்பில் தீய நிரல்களைப் (MALWARE) புகுத்தி அதில் நிலைத்து நிற்கவைக்க முடியுமாம். அதைத் தடுத்து நிறுத்தும் வழிமுறை தற்போது இல்லை என்ற எச்சரிக்கையை இன்டர்போல் ICPO-INTERPOL (INTERNATIONAL CRIMINAL POLICE ORGANIZTION) வெளியிட்டுள்ளது.

ஆதரி என்ற நிறுவனம் சிய்ய் EFF (ELECTRONIC FRONTIER FOUNDATION) ஒரு கட்டத்தில் பிட்காயினை ஏற்க மறுத்ததற்காக கூறப்பட்ட காரணம்: பிட்காயினுக்கு சட்ட முறையில் ஆதரவு இல்லை என்றது. பிட்காயின் பரிமாற்றங்கள் சீனாவில் செல்லாது என்று PEOPLE’S BANK OF CHINA அறிவித்தது.

பிட்காயினை ஏற்றுக்கொள்ள முடியாது என்று “மென்பொருள் சந்தை”  (ஸ்ட்ரீம்)  தெரிவித்தது.

இந்த ஆண்டு 2020 துவக்கத்தில் தென்கொரியா, எல்லா பிட்காயின் வணிகர்களும் தங்கள் பெயர், முகவரி, அடையாளங்களை வெளியிடுமாறு சட்டம் கொண்டு வந்தது. இதனால் ஏற்கனவே பிட்காயின் வணிகம் செய்தவர்கள் இயங்காமல் போயினர்.

பிட்காயின் பயன்பாட்டை STRIPE என்ற மென்பொருள் நிறுவனம் நிறுத்தி விட்டது. பிட்காயின் தேவை குறைந்து விட்டதாகவும், பரிமாற்ற கட்டணமும், நேரமும் அதிகமாகி விட்டதாகவும் அந்நிறுவனம் குற்றம் சாட்டுகிறது.

பிட்காயினை யார் வெளியிடுகிறார்கள் என்பது பயன்படுத்துபவர்களுக்கே தெரியாததால், போதைப் பொருட்கள், ஆயுதங்கள், சட்டவிரோத கடத்தல் உள்ளிட்டவைகளின் கொள்முதல் மற்றும் விற்பனைகளில் பிட்காயின் சேவை சரளமாகவும், சுலபமாகவும் நடைபெறுகிறது. இதனால் பிட்காயின் மதிப்பு ஏறிக்கொண்டே போகிறது. தங்களின் கொள்முதல் விற்பனைகளை இந்த வழிகளில் பயன்படுத்தாதவர்கள் கூட ஏறிக்கொண்டிருக்கும் மதிப்பை அனுபவித்தேயாக வேண்டியிருப்பதால், மார்க்க ரீதியாக இது ஹராம் ஆகிறது என்பது இதன் மூலம் புலப்படுகிறது. எனவே பிட்காயின் வணிகத்தில் முஸ்லிம்கள் ஈடுபடக்கூடாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Previous post:

Next post: