ஐயமும்! தெளிவும்!!

in 2020 நவம்பர்

ஐயமும்! தெளிவும்!!

ஐயம் : 1. நான் ஒரு புத்தகத்தில் படித்தேன். தஜ்ஜால் ரஷ்யாவில் ஒரு மலையில் இருப்பதாகவும் அந்த பகுதி, உயர செல்லும் வான ஊர்திகள் காணாமல் போவதாக சொல்கிறார்கள். உண்மையா?

  1. யஃஜுஜ் மஃஜுஜ் கூட்டத்தை ஒடுக்கத்தான் நபி துல்கர்னைன் சைனா நாட்டில் மிக உயர்ந்த சுவர் எழுப்பினார்கள் என்ற செய்தியும் உண்மையா? சித்திக், அடியக்கமங்கலம், திருவாரூர்.

தெளிவு : தஜ்ஜால் ரஷ்யாவில் இருப்பதாக தாங்கள் படித்த புத்தகத்தின் பெயரைக் குறிப்பிட்டிருந்தால் கூட அதைப் பற்றி கருத்து தெரிவிக்க முயற்சிக்கலாம். ஆனாலும் அதுவும் கூட தேவையற்றது என்பதைத் தெளிவாக உணர முடிகிறது. ஏனெனில் தஜ்ஜாலின் இருப்பிடம் எங்கு இருக்கிறது என்பதை குர்ஆனும், ஹதீஃதும் தெரிவிக்கவில்லை. கீழேயுள்ள ஹதீஃதை பாருங்கள்.

ஹதீஃதின் சுருக்கம்: “நீங்கள் பத்து அடையாளங்களை காணாதவரை யுக முடிவு நாள் ஏற்படவே செய்யாது என்று நபி(ஸல்) அவர்கள் எச்சரித்து உள்ளார்கள். அவற்றுள், தஜ்ஜால் மற்றும் யஃஜுஜ் மஃஜுஜ் கூட்டத்தார் பற்றியும் அடங்கி இருக்கிறது. (நூல்: முஸ்லிம், அறிவிப்பாளர்: அபூ சரிஹா ஹுதைஃபா பின் அசீத் அல்ஃ கிஃபாரீ(ரழி), ஹதீஃத் எண்: 5558, 5559) முழு ஹதீஃத்: காண்க. அந்நஜாத், அக்டோபர் 2020, பக்கம் 27,28)

தஜ்ஜால் மற்றும், யஃஜுஜ் மஃஜுஜ் கூட்டத்தார் அடங்கலாக ஹதீஃதில் கூறப்பட்ட 10அடையாளங்கள் வரும் வரை யுக முடிவு ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள் அறிவித்துத் தந்த பின், இப்போது இந்த பத்தும் எங்கே இருக்கிறது. எப்போது நடக்கும் என்பதை எப்படி மற்றவர்களால் சொல்ல முடியும்? குர்ஆன். ஹதீஃத் அது பற்றி கூறாதிருக்கும்போது, அது பற்றி யாரேனும் சொல்ல முடிந்தால் அது அவரவரின் யூகமாகும். ரஷ்யாவில் இருப்பதாகக் கூறுவதும் அப்படித்தான். தஜ்ஜால் இப்போது எங்கே இருக்கிறான் என்று சொல்லப்படாவிட்டாலும், அவன் வரும்பொழுது எங்கிருந்து வருவான் என்று ஹதீஃதில் சொல்லப்பட்டிருக் கிறது, அது பற்றி சுருக்கமாகக் காண்போம்.

“தஜ்ஜால் சுருள் முடி கொண்ட ஓர் இளைஞன் ஆவான். அவனது கண் ஒரே குலையில் துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்றிருக்கும். உருவத்தில் அவன் அப்துல் உஸ்ஸா பின் கத்தன் என்பவனை ஒத்திருப்பான். உங்களில் யார் அவனை அடைகிறாரோ, அவர் அவனுக்கெதிராக “அல்கஹ்ஃப்” அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களை ஓதிக் கொள்ளட்டும். அவன் சிரியாவுக்கும், இராக்குக்கும் இடையே உள்ள ஒரு பகுதியிலிருந்து புறப்பட்டு வந்து, வலப்பக்கத்திலும், இடப்பக்கத்திலும் அக்கிரமங்களைக் கட்டவிழ்த்து விடுவான். அல்லாஹ்வின் அடியார்களே! அப்போது நீங்கள் உறுதியோடு இருங்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம், அறிவிப்பாளர்: நவ்வாஸ் பின் சம்ஆன்(ரழி), ஹதீஃத் எண்: 5829) (முழு ஹதீஃத்: காண்க. அந்நஜாத், அக்டோபர், 2020, பக்கம் 28லிருந்து)

இரண்டாவதாக தாங்கள் தெரிவித்துள்ள செய்தி அதாவது, யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தை ஒடுக்கத்தான். நபி துல்கர்னைன் சைனா நாட்டில் மிக உயர்ந்த சுவர் எழுப்பினார்கள் என்று கூறப்படும் செய்தி தவறானது.

இதைப் பற்றி அல்குர்ஆன்: 18:93 முதல் 101 முடிய உள்ள இறைவசனங்களை அக்டோபர் இதழில் பக்கம் 26,27ல் தெரிவித்துள்ளோம்.

சீனப் பெருஞ் சுவர் (GREAT WALL OF CHINA) எழுப்ப காரணம் யாதெனில், இந்த சுவர் அந்நியர்களின் படை எடுப்புகளிலிருந்து சீனாவை காப்பதற்காக அதன் வடக்கு எல்லையில் ஆறாம் நூற்றாண்டிலிருந்து மலைகளுக்கு இடையே கட்டப்பட்ட அரண் ஆகும். இது வரை எந்த நாடும் இவ்வளவு பிரமாண்டமான சுவரை கட்டியதில்லை. இந்த பெருஞ்சுவரின் நீளம் 2500 முதல் 5000 கிலோ மீட்டர் வரை மலைகளுக்கு இடையே உள்ளதாகும்.

Previous post:

Next post: