படைத்தவனும், படைப்பினங்களும்….

in 2020 நவம்பர்

இஸ்லாமிய இறையியல்

படைத்தவனும், படைப்பினங்களும்….

படைத்தவனை மட்டும் ஒரே இறைவனாகக் காட்டும் இஸ்லாம்!

முஹிப்புல் இஸ்லாம்

மறு பதிப்பு :

நபிமார்கள் அனைவரும் இறையடியார்களே!

நபிமார்கள் அனைவரும் அல்லாஹ்வின் அடிமைகளே! வல்ல அல்லாஹ் இதிலிருந்து எந்த நபிக்கும் விலக்களிக்கவில்லை. இதை வல்ல அல்லாஹ் இறுதி, இறைவேதத்தில் இடம்பெறும் நபிமார்கள் பெயர்களைக் குறிப்பிட்டே கோடிட்டுக்காட்டி உள்ளான். அந்த ஏகன் அல்லாஹ்வின் நல்லருளால், முந்தய ஆய்வில் இதை இந்திய முஸ்லிம்கள் சிந்தனைக்கு கொண்டு வந்துள்ளோம்.

இறைவனால் இறுதி இறைத்தூதராக தெரிவு செய்யப்பட்ட நபி(ஸல்) அவர்களும் அல்லாஹ்வின் அடிமையே! இதையும் முன்பே விரிவாய் எடுத்துக் காட்டியுள் ளோம்.

இஸ்லாமிய   நேர்வழி  அனைவருக்கும்  பொதுவானது :

இஸ்லாம் மனித சமுதாயம் முழுமைக்கும் பொதுவானது. மனித சமுதாயத்தில் மிகப் பெரும்பாலோர் அசத்தியத்தை அள்ளி அரவணைத்துக் கொண்டு சத்தியத்தை வெறுத்தாலும் சரி வெகுண்டெழுந்தாலும் சரி. அவர்கள் அனைவருக்கும் இஸ்லாம் காட்டும் நேர்வழியைச் சென்றடையச் செய்வது முஸ்லிம்களின் நீங்காக் கடமையாகும். இந்த கடமையிலிருந்து 14 நூற்றாண்டுகளாய் இந்திய முஸ்லிம்கள் நீக்கம் பெற்றிருந்தனர். காரணம் அல்லாஹ் அருளிய இஸ்லாத்தின் அசல் வடிவம் இந்திய முஸ்லிம்களை வந்தடையவில்லை. அதனால் உண்மையை உணர்ந்த ஒரு சிலர் உரிய முயற்சிகள் மேற்கொள்ள முடியவில்லை என்றாலும், தங்களால் இயன்றதைச் செய்து விட்டு சென்றுள்ளனர் என்பது சற்று ஆறுதல் அளிக்கிறது.

புரோகிதக்  கைவரிசையால்  உருவான  கலப்படங்கள் :

இந்திய முஸ்லிம்களிடம் மார்க்கம் என்ற பெயரில் உலாவரும் பல்வேறு மூடச் சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தும் புரோகித கைவரிசையில் உருவான கலப் படங்களே! உண்மையில், அவற்றிற்கும் இஸ்லாத்திற்கும் எந்தத் தொடர்புமில்லை. இஸ்லாம் வன்மையாகக் கண்டித்துத் தடுத்துள்ள இறைக் கிணையாக்குதலும், அனாச்சாரங்களும், வணக்க வழிபாடுகளாய் முஸ்லிம்களை விடாப்பிடியாய் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. உண்மை உணராத பெரும்பான்மையோர் நன்மை, புண்ணியம் என்று அவைகளைத் தங்கள் வாழ்வோடு இரண்டறக் கலக்கச் செய்து, தங்களையும் அறியாமல் தூய இஸ்லாத்தை மாசு படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்திய முஸ்லிம்களின் இஸ்லாத்திற்கெதிரான இந்தக் கொடூரத்தால், குற்றுயிரும், குலை உயிருமாக்கப்பட்டிருப்பது ஏகத்துவம்.

ஏக இறைக் கொள்கை என்ற இஸ்லாமிய இறையியல் எந்த அளவு குதறிக் கிழிக்கப்பட வேண்டுமோ, அதற்கு மேலாகவே ரணமாக்கப்பட்டு விட்டது. இதைவிட வேறு எவரும் இஸ்லாமிய இறையியலைக் கேவலப்படுத்தி விட முடியாது. இந்தப் புண்ணியத்தை இந்திய முஸ்லிம்கள் அள்ளிக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

பிரமிக்கத்  தக்க  விழிப்புணர்வு :

வல்ல அல்லாஹ்வின் பேரருள், 1980களில் அரபு நாடுகள் சென்ற சில தமிழ் முஸ்லிம்களின் நன்முயற்சி உலகம் முழுவதும் வாழும் தமிழ் முஸ்லிம்களிடையே பிரமிக்கத்தக்க மார்க்க விழிப்புணர்வு ஏற்பட காரணமாகியது. அல்ஹம்துலில்லாஹ். அதே நேரத்தில், பிரச்சாரர்களுக்கிடையே எழுந்த போட்டி, பொறாமை உணர்வு, கசப்புணர்ச்சி காழ்ப்புணர்ச்சி, உலக ஆதாயம், பணம், பட்டம், பதவி, இத்யாதி-இத்தியா திகளுக்காக போட்டா போட்டி போட்டுக் கொண்டு பிரிந்து கொண்டிருக்கிறார்கள். பிரிந்தவர்கள் எதில் ஒன்றுபட்டார்கள்?

தவ்ஹீதின்  பெயரால்  தொடரும்  கூறு  போடுதல் :

பிரிந்தவர்கள் அனைவரும் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் ஒன்றுபட்டார்கள். அதுதான் தனித்தனி இயக்கங்கள், அமைப்புகள், கழகங்கள் காண்பதில் ஒருமித்தனர், தங்கள், தங்களுக்கென்று ரசிகர் மன்றங்களை தோற்றுவித்தனர். முன்னரே பிரிவினை, பிளவுகளிலிருந்து விடுபட முடியாமல் சிக்கித் தவிக்கும் தமிழ் முஸ்லிம்களைத் தவ்ஹீதின் பெயரால் தங்கள் பங்கிற்கு இவர்களும் கூறுபோட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பிரிந்தவர்கள் தங்களுக்குரிய தனி அடையாளங்களாக, தங்கள் ஆதரவாளர்களைத் தக்க வைத்துக்கொள்ளத் தனித்தனியே இதழ்கள், பதிப்பகங்கள் துவங்கி யுள்ளனர். தனித்தனி மேடைகளில் பிரச்சாரமும் செய்து வருகிறார்கள். இந்த மேடைகளில் உண்மை இஸ்லாம் உணர்த்தப்படுவதைக் காட்டிலும் பிரிவினை வாதங்களை ஒற்றுமை முலாமில் மின்னவைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதிலும் அப்பாவித் தவ்ஹீத்வாதிகள் விட்டில்களாய் விழுந்து கொண்டிருப்பது வேதனையளிக்கிறது.

அல்குர்ஆன்கூறும், 25 நபிமார்களும், ஏகத்துவத்தின் பெயரால் இணை வைப்ப வர்களாய், இறை நிராகரிப்பாளர்களாய், இறை மறுப்பாளர்களாய், ஒழுக்கக் கேட் டில் மூழ்கிக் கிடந்தவர்களையயல்லாம் – ஒன்றுபட்ட சமுதாயத்தின் அங்கங்களாய் மாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

விளம்பரத்  தவ்ஹீத்வாதிகள் :

இன்றைய விளம்பரத் தவ்ஹீத்வாதிகள் தவ்ஹீதின் பெயரால் முஸ்லிம்களை ஒன்றுபடுத்த முடியாவிட்டாலும் பாதகமில்லை. மாறாகத் தங்களைத் தாங்களே கூறு போட்டுக் கொண்டு, முஸ்லிம்களையும் கூறு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம்களை மட்டுமின்றி, மனித சமுதாயத்தை ஒன்றிணைக்கும் ஒரே நெறி இறையருளிய ஓரிறைக் கொள்கையின் பெயரால், முஸ்லிம்களை, தங்களைத் தாங்களே பிளவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்-என்றால் – தவ்ஹீத்வாதிகளே இன்னும் ஓரிறைக் கொள்கையை முறையாக புரிந்து கொள்ளவில்லை என்பது புலனாகிறது. தமிழகத்தில் மட்டுமின்றி, உலக அரங்கில் எங்கெல்லாம் -தவ்ஹீதின் பெயரால் முஸ்லிம்கள் பிளவு படுத்தப்பட்டாலும் அவர்களின் நிலையும் இதுவே!

இன்று பிரிந்து நிற்பவர்கள், துவக்கத்தில் ஒருங்கிணைந்து தவ்ஹீதை மக்கள் சிந்தனைகக்குக் கொண்டு சென்றபோது ஏற்பட்ட விழிப்புணர்வு – பிளவுபட, பிளவுபட அருகி வந்து, மீண்டும் சூஃபியிஸ ஆதரவாளர்கள் தலைதூக்க ஆரம்பித்துள்ளனர்.

சூஃபி கடவுள் கொள்கை!

சூஃபிகள் உருவாக்கியது ஏகத்துவமல்ல. சூஃபியர்களும் – மனிதர்களே! மனிதர்கள் எத்தனை உயர்ந்தாலும் மனிதர்களே! எத்தனை முயன்றாலும் மனிதத் தன்மையிலிருந்து மாற முடியாதவர்கள்! எந்த நிலையிலும் தங்களை மனிதத் தன்மையிலிருந்து மாற்றிக் கொள்ளவும் முடியாதவர்கள்!

சூஃபியர்களானாலும் சரி அதைவிட கூடுதலாய்க் கரை கண்டவர்களானாலும் சரி, மனிதர்கள் கற்பனை செய்வதும், மனித அனுபவத்தால் உணரப்படுவதும் நிச்சயம் இறைக் கொள்கையல்ல! மாறாக அவைகள் வழிகேடுகளே! இறைக்கிணையாக்கும் மாபாதகங்களே!

  1. மனிதர்கள் உருவாக்கும் கற்பனை ஆக் கங்களிலும் சிற்சில உண்மைகள் ஆங் காங்கே ஒளிந்து கொண்டிருக்கும், சித்தர்களும், ஞானிகளும் கண்ட கடவுள் தத்துவம் – இதற்கோர் சிறந்த – எடுத்துக்காட்டு.
  2. கிரேக்க தத்துவ ஞானிகள் கண்ட கடவுள் தத்துவத்தின் இறுதி முடிவும் எல்லாம் ஒன்று (இறைவனும், இறைவனால் படைக்கப்பட்டவைகள் அனைத்தும் ஒன்றே!)
  3. கிரேக்க கடவுள் தத்துவம் அரபு மொழிக்கு முஸ்லிம் அறிஞர்களால் மாற்றம் செய்யப்பட்டபோது – அதற்குப் பூசப்பட்ட இஸ்லாமிய அரிதாரமே சூஃபியிஸமாய் உருவெடுத்தது. இதில், இஸ்லாத்தின் இறைக் கொள்கையும், ஆங்காங்கே அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கும், இதைக் கண்டு இஸ்லாமிய இறையியலைச் சரியாகப் புரியாத – முஸ்லிம் பிரபல்யங்கள் குறிப்பாக முஸ்லிம் இலக்கியவாதிகள், இஸ் லாமிய இறைக் கொள்கையை – சூஃபிகள் கண்ட கடவுள் கொள்கையுடன் இணைத்துப் பார்ப்பதில் இன்பம் காண்கின்றனர். பொதுவாக, மனிதர்கள் கண்ட கடவுள் தத்துவங்களில் – சில நேரங்களில் உண்மை ஓரிறைக் கொள் கையின் சாயல் எங்காவது இழை யோடுவதும் கண்கூடு.

மனிதக்  கற்பனைகள்  இரண்டறக்  கலக்கும் போது…

“ஒன்றே குலம்; ஒருவனே தேவன்”! என்ற திருமூலர் கண்ட தமிழ் கடவுள் கொள்கையில் ஓரிறைக் கொள்கையின் சாயல் வெளிப்படுகிறது. திருமந்திரத்தில் இடம் பெறும் 3000 பாடல்களும் திருமூலரின் அனுபவ வெளிப்பாடே! மனித அனுபவத்தால் உணரக்கூடியதன்று – கடவுள் கொள்கை! அதனால்தான் மேற்கண்ட வரிக்குப் பின்வரும் மற்ற பாடல் வரிகள் -“ஒருவனே தேவன்”! என்பதைத் தகர்த்தெரிகின்றன.

இன்றளவும், தமிழ் மண்ணில் ஆத்திகர்கள் மட்டுமின்றி, நாத்திகர்களும் முழங்கும் ஒரு ஸ்லோகமாய் “ஒன்றே குலமும்; ஒரு வனே தேவனும்”! மாற்றப்பட்டு விட்டது. மற்றபடி, நாளும் பெருகிக் கொண்டிருக்கும் கோடான கோடி கடவுள்களும், அந்த கடவுள்கள் பெயரால் துணிந்து நடத்தப்படும் பஞ்சமா பாதகங்களும், ஒழுக்கக் கேடுகளும், அந்த கடவுள்கள் பெயரால் மனிதர்கள் பிளவுபடுத்தப்படுவதும், குறிப்பிட்ட வகுப்பார் உயர்ந்தவர்களாகவும், குறிப்பிட்ட சில வகுப்பார்கள் தாழ்த்தப்பட்டவர்களாய் ஒதுக்கப்படுவதும், கடவுள்கள் பெயரால் ஒரு சாரார், மற்றொரு சாரரோடு மோதிக் கொள்வதும், பெண்ணடிமை வளரவும் ஆணாதிக்கம் மேலோங்கவும், கடவுள்களே “ஒன்றே குலம்; ஒருவனே தேவன்”!-இங்கு-ஓரிறைக் கொள்கை சிதைக்கப்பட்டு விட்டதைத் துல்லியமாய் உணர்த்துகின்றன.

இந்திய தேசத்தில் கடவுள் கொள்கை என்பதே கேலிக் கூத்தாக்கப்பட்டு விட்டது. இந்தியர்களின் நடைமுறையில் ஓரிறைக் கொள்கையின் எதிர்ப்பதங்கள் அனைத்தும் – கடவுள் கொள்கைகளாய் வலம் வந்து கொண்டிருக்கின்றன. கால்குலேட்டரின் எண்ணிக்கைக்குள் அடங்காத கடவுளர்கள் பெருக்கத்தால் – கடவுளர்கள் பெயரால் மலிவோ மலிவென்று மலிந்து கொண்டிருக்கும் குழப்பங்கள் அனைத்தும், கொள்கையாய் பாவனை செய்யப்படுகின்றன. சர்வதேச அளவில், தெய்வங்கள் பெயரால் நடக்கும் குளறுபடிகள் அனைத்திற்கும் இந்தியா கேந்திரமாய்த் திகழ்கிறது.

ஓரிறைக் கொள்கை – மனிதர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரே சமுதாயமாக்கும் ஒப்பற்றக் கொள்கை. இதை,

“ஒன்றே குலமும்; ஒருவனே தேவனும்”! திருமந்திரம் : 2104

திருமூலரின் இந்த தாரக மந்திரம் -இஸ்லாமிய ஓரிறைக் கொள்கையை அப்படியே பிரதிபலிக்கிறது. இது இந்த மண்ணிலும் ஏகத்துவத்தை, ஏகவல்ல அல்லாஹ், ஒலிக் கச் செய்துள்ளான் என்பதை உணர்த்துகிறது. அதே நேரத்தில் மற்ற மிகப் பெரும்பாலான பாடல்களில் – திருமூலர் தன் கை வரிசையைக் காட்டியுள்ளார். அந்தப் பாடல்களில் ஓரிறைக் கொள்கைக்கு அவரே சமாதியும் கட்டி விடுகிறார்.

“ஒழிந்தேன் பிறவி உறவென்னும் பாசம் கழிந்தேன் கடவுளும் நானும் ஒன்றானேன் அழிந்தாங்கு இனிவரும் ஆக்கமும் இவண் டேன் செழிஞ்சோர்புடைய சிவனைக் கண்டனே”. திருமந்திரம் : 2958

“கடவுளும் நானும் ஒன்றாகி விட்டோம்” என்ற திருமூலர் கூற்று – ஓரிறைக் கொள்கையை – இணை வைத்தலாக்கும் இறை மன்னிப்பில்லா மாபாதகம்!

தலை விரித்தாடும் இணை வைத்தல் :

உண்மை ஓரிறைக் கொள்கையில் மனிதக் கற்பனைகள் இரண்டறக் கலக்கும்போது அங்கே இணை வைத்தல் தலை விரித்தாடுவதை எவராலும் தடுக்க முடியாது. அறிஞர்கள், புரோகிதப் பண்டிதர்கள், புலவர்கள், கவிஞர்கள், ஞானிகள், சூஃபிகள் என்று கடவுள் தத்துவத்தைக் காட்ட வந்தவர்கள் – குடம் விஷத்துள் சில சொட்டு பாலைச் சொட்டியுள்ளனர். குடம் பாலில் சொட்டப்படும் துளி விஷமும் – என்னவாகும் என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

தமிழ் சித்தர்களில் தலையாயவராய் போற்றப்படும் தவராசயோகி திருமூலரின் அடியொற்றி எல்லா சித்தர்களும், ஞானிகளும் தங்கள் பாடல்கள் சிலவற்றில் ஓரிறைக் கொள்கையைச் சிறப்பாக எடுத்துக் காட்டியுள்ளனர். அதே நேரத்தில் மற்ற பாடல்கள் அனைத்திலும் அல்லது பெரும்பாலனவற்றில் இணை வைத்தலைச் சைவ சித்தாந்தமாய் போதித்துள்ளனர்.

“படைத்தவனும், படைப்பினங்களும் ஒன்று” என்ற இறைவனோடு மனிதர்களும் இரண்டறக் கலக்கும் மாபாதகத்தை – இணை வைத்தலைத் தமிழ் சித்தர்கள், “சைவ சித்தாந்தம்” என்ற கடவுள் கொள்கையாக அரங்கேற்றி வந்துள்ளனர். இதிலிருந்து முஸ்லிம் சித்தர்களும் விடுபட முடியவில்லை. மற்ற சித்தர்களைக் காட்டிலும் முஸ்லிம் சித்தர்களிடம் ஓரிறைக் கொள்கையின் சாயல் சற்றே கூடுதலாய் பிரதிபலிக்கப்பட்டிருக்கும். அவ்வளவே! மற்ற சித்தர்கள் போல் முஸ்லிம் சித்தர்களும் சைவ சித்தாந்தத்தை இறைக் கொள்கையாக ஏற்றிப் போற்றி போதித்து வந்துள்ளனர்.

கடுங் கண்டனம் ஏன்?

பீரப்பாவும், குணங்குடி மஸ்தானும் தமிழ்நாட்டு சித்தர்கள்! முஸ்லிம்களாய் இருப்பதால் – சூஃபியர்கள் என்று முஸ்லிம்கள் பெருமைபட்டுக் கொள்ளலாம். அதே வேளை – இறையருளிய ஏகத்துவத்தைத் தகர்த்து விட்டனர் – என்ற பேருண்மை இது காறும் மறைக்கப்பட்டே வந்துள்ளது. இவர்கள் முஸ்லிம்களாய் இருப்பதால்- இஸ்லாமிய இறையியலின் சாயலோடு – தமிழ் கடவுள் கொள்கையை நிலைநாட்ட இவர்கள் கற்பனையும் சேர்ந்து கொள்கிறது. அப்போது வெளிப்படுத்தப்படும் பாடல்கள் எப்படி கடவுள் கொள்கையாக முடியும்? படிப்பவர்கள் மனதை அந்த பாடல்கள் மயக்கலாம்.

பாடல்கள் கவிச்சுவையில் மனதைப் பறிகொடுக்கலாம். அவைகளை இறைக் கொள்கையாய் ஒருக்காலும் ஏற்க முடியாது. இறை குறித்த வழிகேடுகள் அந்த பாடல்கள் மூலம் மிக சாமர்த்தியமாய் விதைக்கப்படுகிறது. அதனால் அந்தப் பாடல்களைக் கடும் விமர்சனத்திற்குள்ளாக்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

சித்தர்களாயிருந்தாலும், சூஃபிகளாயிருந்தாலும் – அவர்களும் மனிதர்களே! மனிதக் கருத்துக்களில் கொள்ளத்தக்கதும் உண்டு. தள்ளத்தக்கதும் உண்டு. நபி(ஸல்) அவர்களின் சுய அபிப்பிராயங்கள் சில நேரங்களில் தள்ளப்பட்டுள்ளன. இது அல்குர்ஆனில் பல்வேறு இடங்களில் பதிவாகியுள்ளது என்றால் மற்றவர்கள் அபிப்பிராயங்கள் எம்மாத்திரம்?

பீரப்பா, மஸ்தான் சாஹிபு போன்றவர்களின் கருத்துக்கள் அல்குர்ஆனுக்கும், அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மை ஊர்ஜிதம் செய்யப்பட்ட – நபி(ஸல்) அவர்களின் வாழ்வியல் வழிகாட்டுதலுக்கும் ஸஹீஹான ஹதீஃதுகளுக்கும் உட்பட்டிருந்தால் நிச்சயம் அவைகள் விமர்சனத்திற்குட்படுத்தப்பட வேண்டியவை அல்ல, இதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது, இருக்கவும் முடியாது.

ஏனிந்த அவலம்?

நம்முடைய முன்னோர்களுக்கு அல்குர் ஆன், நபி வழிகாட்டுதல் ஸஹீஹான அல்ஹதீது தமிழாக்கங்கள் கிடைக்கவில்லை. வல்ல அல்லாஹ்வின் பிரத்தியேக அருள் அல்குர்ஆனின் 15 மொழியாக்கங்கள் இன்று நம்மை வந்தடைந்துள்ளன. அல்ஹம்துலில்லாஹ்.

அல்குர்ஆன் மொழியாக்கங்களைப் பார்க்கும் வாய்ப்பு மஸ்தான் சாஹிபு, பீரப்பா போன்றவர்களுக்கு கிடைத்திருந்தால், இறையருளிய ஏகத்துவத்தை இன்றைய சிந்தனையாளர்களைக் காட்டிலும் இன்னும் சிறப்பாக எடுத்துக் காட்டியிருப்பார்கள். அத்துடன் அத்வைதவாதிகளுக்கும் சரியான சாட்டையடி கொடுத்திருப்பர்.

அறிவிப்பாளர்கள் நம்பகத்தன்மை ஊர்ஜிதம் செய்யப்பட்ட ஆதாரப்பூர்வ அல்ஹதீதுகள் நமக்கே இப்போதுதான் தமிழில் கிடைக்கத் துவங்கியுள்ளன. அல்குர்ஆன், ஆதாரப்பூர்வ அல்ஹதீது எடுத்துக்காட்டும் இறையருளிய ஏகத்துவம் அவர்கள் சிந்தனைக்கு கொண்டு வரப்படவில்லை. அதனால் அன்றைய முஸ்லிம்களின் தவறான கடவுள் கொள்கையையும், அவர்கள் தமிழ்ப் புலமையையும், ஓரிறைக் கொள்கையின் சவால்களையும் ஆங்காங்கே வெளிப்படுத்தும் சித்தர்கள் பாடல்களில் தங்கள் மனதைப் பறிக்கொடுத்தனர்.

அதன் விளைவு :

சைவ  சித்தாந்தத்திற்கு அடிக்கப்பட்ட  இஸ்லாமிய  சாயம் :

முஸ்லிம் பெயர்களில் பலர்தமிழ் சித்தர்களின் சைவ சித்தாந்தத்திற்கு – இஸ்லாமிய சாயம் அடித்தனர். சாயம் வெளுக்காதிருக்க சூஃபியிஸ(ம்) போர்வை மிகத் தந்திரமாய்ப் போர்த்தப்பட்டுள்ளது. சூஃபியிஸம் என்ற பெயரில் அத்வைதத்தை இஸ்லாத்தின் இறை கோட்பாடாகச் சித்தரிக்க முற்பட்டனர்.

முஸ்லிம்களில் தமிழார்வம் மிக்கவர்களும், மற்றவர்களும் அத்வைதத்தின் புகைப்பட நகலான சூஃபியிஸத்தையே உண்மை இஸ்லாமிய இறைக் கொள்கை என்று நம்புகின்றனர். இதைவிட, இறையருளிய ஓரிறைக் கொள்கைக்கு இழைக்கப்படும் அநீதி வேறெதுவும் இருக்க முடியுமா?

பெரிய வேறுபாடு ஏதும் இல்லை :

தமிழில் ஈடுபாடுடைய முஸ்லிம் அல்லாதவர்கள் முஸ்லிம் புலவர்களின் இறைக் கொள்கைக்கும், தங்கள் கடவுள் கொள்கைக்கும் அவ்வளவாக பெரிய வேறுபாடுகள் எதுவும் இல்லை என்பதிலிருந்து அந்த முஸ்லிம் புலவர்களையெல்லாம் கோயில் கட்டிக் கும்பிடாத குறையாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இது ஒருபுறமிருக்க, அந்த முஸ்லிம் புலவர்களின் சமாதிகளை – முஸ்லிம்களோடு – முஸ்லிம் அல்லாதோரும் வணங்கி வருகின்றனர். தமிழ் முஸ்லிம் புலவர்களின் தமிழ்த் திறனையும் மெச்சிக் கொள்கிறார்கள். இறைக் கொள்கைப் பற்றி எதுவும் அறியாத அப்பாவி முஸ்லிம்களும் இப்புலவர்களைத் தூக்கோ தூக்கென்று தூக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அல்லாஹ் எப்படி மன்னிப்பான்?

தமிழ்த் திறனுக்காகப் பாராட்டப்படும் – அந்த முஸ்லிம் புலவர்கள் – இறையருளிய ஏகத்துவத்தை இறைக்கிணையாக்கும் மாபாதகமாய் மாற்றி சென்றுள்ளதை அந்த ஏகவல்ல அல்லாஹ் எப்படி மன்னிப்பான்? அன்றைய புலவர்கள் செய்த அதே தவறை இன்றைய இலக்கியவாதிகளும் தொடர்வது மிகுந்த வேதனையளிக்கிறது.

இந்த நிலை மாறவேண்டாமா? இன்ஷா அல்லாஹ் மாற்றியமைப்போம் எப்படி?   (இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Previous post:

Next post: