இதோ ஓர் ஜிஹாத்!

in 2020 டிசம்பர்

இதோ ஓர் ஜிஹாத்!

அப்துல்லாஹ் இப்னு அருணாச்சலம், திருச்சி

ஜிஹாத் … இக்கட்டுரை விளக்கமல்ல… வேறு கோணப் பார்வை…

இது ஒரு பெண்ணின் வாழ்வில் நடந்த உண்மையான சம்பவம்…

அல்லாஹ் ஒரு பெண்ணை ஜிஹாத் செய்ய நாடியிருந்தான். அவளும் அல்லாஹ் வின் பாதையில் அவனது பொருத்தத்தை நாடி அறப்போரில் (ஜிஹாத்) பயணமானாள்.

மணித்துளிகள் சேர்ந்து நாளானது, நாட்கள் கைகோர்த்து வாரங்களாயின, வாரங்கள் சில சேர்ந்து மாதங்கள் என காலம் உருண்டோடியது.

அவள் மேற்கொண்ட ஜிஹாதில் பலர் அவளோடு சேர்ந்து அவளுக்காகவும், அல்லாஹ்வின் பொருத்தத்திற்காகவும் உதவி செய்து வந்தனர்.

ஏறக்குறைய முப்பத்தேழு வாரங்களுக்குப் பிறகு அந்த அறப்போரின் இறுதிக் கட்டத்தில் அதன் வெற்றியோ தோல்வியோ தீர்மானிக்கும் தருணத்தில், அல்லாஹ் அவளுக்கு ஒரு சோதனையை வைத்தான்.

அவளைச் சூழ்ந்திருந்த மனிதர்கள் விலகினர். அவள் சேர்த்த பொருளும் கரைந்தது. மேலும் அல்லாஹ் அவளை களத்தில் நிராயுதபாணிக்கி நிறுத்தினான்.

எவ்வித உதவியும், உதவி வருவதற்கான வழிகளும் தென்படாமல், அந்த ஏக இறைவனான அல்லாஹ்வின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து “ஜிஹாதை நிறைவேற்றி விடுவோம்… வெற்றியோ, தோல்வியோ அல்லாஹ்வே கூலி கொடுப்பான்” என்றெண்ணித் துணிந்தாள்.

ஓரிரு நாள் மிகக் கடுமையான போராட்டம், பசி ஒருபக்கம் வறுமை மறுபக்கம் மனவேதனையைக் கூட்ட, உடலில் காயங்கள் என மன உடல் வலிகளோடு அவள் போராட, அல்லாஹ் இறுதியில் அவளுக்கு வெற்றியைப் பரிசளித்தான்.

இந்த பூமியில் அல்லாஹ்விற்காக ஜிஹாத் செய்த அவளுக்கு கனிமத்தாக ஒரு குழந்தையைக் கொடுத்தான். அல்ஹம்துலில்லாஹ்!

என்ன? ஒரு பெண் பல சோதனைகளுக்குப் பிறகு ஒரு குழந்தையைப் பெறுகிறாளா? அட, இது “பிரசவம்’ போல் தெரிகிறதே… ஆம், பிரசவமேதான் … சில வார்த்தைகளைச் சேர்த்துப் போர்த்தி வைத்ததனால் அப்படித் தெரிகிறது. ஆனால் இஸ்லாத்தின் பார்வையில் பிரசவமும் ஒருவகை ஜிஹாத் (அறப்போர்).

ஒரு வேளை அந்தப் பெண் பிரசவத்தின் போது மரணமடைந்திருந்தால், அவள் அறப்போரில் உயிர்த்தியாகம் செய்தவரின் (ஷஹீத்) கூலியைப் பெற்றிருப்பாள்.

நிச்சயமாக… ஒரு பெண் பிரசவிக்கும் போது, அவள் எலும்புகள் விரிவடையும் வேதனையில் பாதியை, ஒரு சாதாரண மனிதனுக்குக் கொடுத்தால், அவன் எலும்புகள் நொறுங்கி மரணித்துவிடுவான் என்று இன்றைய விஞ்ஞானம் நமக்குச் சொல்கிறது.

“இஸ்லாம் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்ட முஸ்லிம்களை ஜிஹாத் செய்யச் சொல்கிறது. பிற உயிர்களைக் காட்டுமிராண்டியைப் போல கொலை செய்யச் சொல்கிறது. அதனால் தற்கொலைப் படைத்தாக்குதல் உள்ளிட்ட பயங்கரவாத செயல்களை செய்கிறார்கள்” என்று கூறுவோரும் பரப்புவோரும் சற்றேனும் சிந்தித்துப் பாருங்கள், அந்தப் பெண், அவள் மேற்கொண்ட ஜிஹாதில் எத்தனை உயிர்களைக் கொன்றாள்? என்று, இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராட வேண்டிய முறைப்படி போராடுங்கள்.  (இறை வேதம்: 22:78)

Previous post:

Next post: