ஐயமும்!  தெளிவும்!!

in 2020 டிசம்பர்

ஐயமும்!  தெளிவும்!!

ஐயம் : பெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுவதை ஆயிஷா(ரழி) அவர்கள் தடுத்துள்ளதாக சில மவ்லவிகள் கூறுகின்றனர். மேலும் பள்ளிவாசலுக்கு வந்து ஃபர்ளு தொழ வேண்டிய கட்டாயம் பெண்களுக்கு இல்லை என்றும் கூறுகின்றனரே, இது சரியான சட்டமா?  ஜஃபருல்லாஹ், சென்னை.

தெளிவு : இந்தக் கூற்று தவறானது. “பெண்களின் செயல்களை நபி(ஸல்) அவர்கள் பார்த்தால், பனீ இஸ்ரவேலர்களின் பெண்கள் தடுக்கப்பட்டது போல, (நமது) பெண்களையும் பள்ளிக்கு வருவதை தடுப்பார்கள்” என அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவித்துள்ளதாக அப்துர் ரஹ்மான்(ரழி) அவர்களின் மகள் உம்ரா(ரழி) அவர்கள் தெரிவிக்கின்றார்கள். நூல்: புகாரி, முஸ்லிம், அபூதாவூது, முஅத்தா.

இக்கருத்து அன்னை ஆயிஷா(ரழி) அவர்களின் கருத்தாகும். இக்கருத்தைத் தெரிவிக்கும் அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள், அவர்களது காலத்திலிருந்த பெண்களை பள்ளிக்குச் செல்ல வேண்டாம் என்று தடுத்திருந்ததாக இந்த ஹதீஃதில் அறியமுடியவில்லை. மாறாக பெண்கள் செயல்பாடுகள் குறித்து அன்னை அவர்கள் கொண்டிருந்த அதிருப்தியையே ஹதீஃதின் வாசகங்கள் தெரிவிக்கின்றன. அன்னை ஆயிஷா (ரழி) அவர்களின் கருத்திற்கு மாற்றமாக, உமர்(ரழி) அவர்களின் செயல்கள் அமைந்திருந்ததையும் கீழ்க்கண்ட ஹதீஃத் தெரிவிப்பதையும் கவனியுங்கள்.

“ஜைது இப்னு அம்ரு இப்னு நுஃபைல் அவர்களின் மகள் ஆதிகா(ரழி) அவர்கள் தமது கணவரான உமர்(ரழி) அவர்களிடம், “நீங்கள் தடுத்தாலே தவிர நான் (பள்ளிக்குச்) செல்வேன்” என்று கூறி பள்ளிக்குச் செல்ல அனுமதி கேட்டார்கள். உமர்(ரழி) அவர்கள் (பள்ளிக்குச் செல்வதை) தடுக்கவில்லை” அறிவிப்பவர்: யஹ்மா இப்னு ஸயீத்(ரழி), நூல்: அல்முஅத்தா.

“அல்லாஹ்வின் தூதரிடமே அழகிய முன்மாதிரி இருக்கிறது” என்று (அல்குர்ஆன்: 33:21) அல்லாஹ் கட்டளையிட்டிருப்பதால், இது விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் முன்மாதிரியை கவனிப்போமாக.

“அல்லாஹ்வின் பள்ளிகளில் அல்லாஹ்வின் அடிமைகளான பெண்களைத் தடுக்காதீர்கள்” என நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள். அறிவிப்பாளர்கள்: அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி), அபூஹுரைரா(ரழி), நூல்கள்: அஹ்மத், அபூதாவூத், இப்னு குஸைமா.

மேலும் ஆயிஷா(ரழி) அவர்கள் பெண்கள் பள்ளிக்குச் செல்வதைத் தடுக்கும் நோக்கத்தில் தான் அவ்வாறு கூறியுள்ளார்கள் என்று நினைப்பவர்கள் ஆயிஷா(ரழி) மீது பெரும் பழியைச் சுமத்துகிறார்கள். பின்னால் என்ன என்ன நடக்கும் என்பதை நபி(ஸல்) அவர்கள் அறியாதிருக்கலாம். ஆனால் அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்த (பார்க்க: 52:48) அல்லாஹ்வுக்கும் அது தெரியாது என்று ஆயிஷா(ரழி) நினைத்துச் சொன்னதாக அவர்கள் மீது வீண் பழி சுமத்துவது ஆகும். ஏனென்றால், பெண்கள் பள்ளிக்கு வருவதைத் தடுக்கக்கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டபோது, அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்த அல்லாஹ்வும் எதிர்கால பெண்களின் நிலை தெரியாமல் அதை மறுக்காமல் அங்கீகரித்துவிட்டான் என்றே அல்லாஹ்மீது குற்றம் சுமத்துவது ஆகும். இது எவ்வளவு பெரிய ஹிமாலயத் தவறான வாதம் என்பதை முகல்லிது மவ்லவிகள் உணர்வார்களா?

ஐயம் : இறந்துவிட்ட பிறகுதான் “ஷஹீத்கள்’ எனும் நிலையை மனிதன் அடையமுடியும் என்பதுதான் உண்மை. தல்ஹா(ரழி) என்ற நபித்தோழர் உயிரோடு இருந்தபோதே நபி(ஸல்) அவர்கள் தல்ஹா(ரழி) அவர்களை “ஷஹீத்’ என்று குறிப்பிட்டதாக எங்கள் ஊரிலுள்ள மவ்லவி ஒருவர் சொல்கிறாரே உண்மையா?
முஹம்மது இல்யாஸ், வானியம்பாடி

தெளிவு : தல்ஹா(ரழி) அவர்களைக் குறித்து கைஸ்(ரழி) எனும் நபிதோழர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அதை இங்கே காண்போம்.

“உஹத் போரில் தல்ஹா(ரழி) அவர்களின் ஒரு கை செயலிழந்து போயிருந்த நிலையில் கூட, அந்த கையின் துணையால் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களை தல்ஹா (ரழி) அவர்கள் காத்துக் கொண்டிருந்ததை நான் பார்த்திருக்கிறேன்” என்று கைஸ்(ரழி) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: கைஸ்(ரழி), நூல்கள்: புகாரி, இப்னு மாஜ்ஜா

நபி(ஸல்) அவர்கள் கூறியதை இப்போது கவனிப்போம். “நீங்கள் பணியை முழுமையாக நிறைவேற்றியவர்களில் இவரும் ஒருவர்” என்று நபி(ஸல்) அவர்கள் தல்ஹா (ரழி) அவர்களைப் பார்த்துக் கூறினார்கள். அறிவிப்பாளர்: முஆவியா(ரழி), நூல்: இப்னு மாஜ்ஜா

இந்த ஹதீஃதைப் பதிவு செய்து திருகுர் ஆனின் 33:23வது வசனமும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வசனமாவது :

“முஃஃமின்களிலுள்ள மனிதர்கள் அல்லாஹ்விடம் செய்துள்ள வாக்குறுதியில் உண்மையாக நடந்து கொண்டார்கள். அவர்களில் சிலர் (ஷஹீதாக வேண்டும் என்ற) தமது இலட்சியத்தையும் அடைந்தார்கள். வேறு சிலர் (ஷஹீதாக ஆவதற்கு ஆர்வத்துடன் சந்தர்ப்பத்தை) எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். (எந்த நிலைமையிலும்) அவர்கள் தங்கள் வாக்குறுதியிலிருந்து சிறிதும் மாறவில்லை”.  குர்ஆன் : 32:21

அடுத்துள்ள ஹதீஃதையும் கவனிப்போம். “நபி(ஸல்) அவர்கள் தல்ஹா(ரழி) அவர்களை கடந்து சென்றபோது, “இவர் பூமியில் நடமாடும் ஷஹீத் ஆவார்’ எனக்கூறினார்கள்.  அறிவிப்பவர் : ஜாபிர்(ரழி), நூல்: இப்னுமாஜ்ஜா.

மேற்கண்ட ஆயத்தையும், ஹதீஃத்களையும் அறியும்போது, ஷஹீதின் அந்தஸ்தை தல்ஹா(ரழி) அவர்கள் பூமியில் உயிருடன் இருந்தபோதே பெற்றுள்ளார் என்பதை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அறிந்திருப்பதை நாம் காணமுடிகிறது. இது நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அருளிய சிறப்பாகும். இந்த ஹதீஃதை ஆதாரமாக வைத்துக் கொண்டு, உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் எவருக்கும் “ஷஹீத்’ என்ற நற்சாட்சி பத்திரம் வழங்கும் உரிமை மனிதர்களில் எவருக்கும் இல்லை என்பதை நாம் அறிந்து கொள்ளவேண்டும்.

Previous post:

Next post: