தப்லீக் ஜமாஅத்தினரின் தஃலீம் தொகுப்பு நூல்

in 2020 செப்டம்பர்

தப்லீக் ஜமாஅத்தினரின் தஃலீம் தொகுப்பு நூல்

அமல்களின் சிறப்புகள்….

ஒரு திறனாய்வு!

  1. அப்துல் ஹமீத்

ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் :

புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம்  (1154 பக்கங்கள்)

தலைப்பு : திக்ரின் சிறப்புகள்

குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள்.

தமிழாக்கமும், வெளியிட்டோரும் :  பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல்.

பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையி லிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த ஒரு பக்கத்திலும் இப்புத்தகம் எத்தனையாவது பதிப்பு என்பது குறிப்பிடப்படவில்லை.

சென்ற இதழில் ….!

திக்ரே கஃபீ, திக்ரே காமில், திக்ரே மக்பீ என்று இஸ்லாத்தில் இல்லாதவைகளை திக்ருகள் எனக் கூறி, அந்த திக்ருகளில் என்ன கூறவேண்டும் என்று கூட சொல்லாமல் விட்டுவிட்ட அமல்களின் சிறப்புகள் (அசி) ஆசிரியர், திடீரென்று திக்ரே மக்பீ தான் திக்ரே காமில் என்று கூறி பல்டி அடித்து குழப்பியதை சென்ற இதழில் பார்த்தோம். மட்டுமின்றி, தப்லீக் ஜமாஅத் பெரியார்களுக்கு மட்டும் ஷைத்தான் அம்மணமாக ஸ்பெஷல் தரிசனம் காட்டிய தாக எழுதி இருந்ததையும் சுட்டிக்காட்டி னோம். இந்த இதழில், அமல்களின் சிறப்பு கள்(அசி) புத்தகத்தில் ஆய்வு செய்ய இருப்பதை இப்போது கவனிப்போம்.

அசி புத்தகம் பக்கம் 398ல் 18ம் எண்ணில் உள்ளவை!

அப்துர் ரஹ்மான் இப்னு ஸஹ்ல்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ரசூலே அக்ரம் (ஸல்) அவர்கள் தங்கள் இல்லத்தில் இருக்கும்போது, “காலையிலும் மாலையிலும் தங்களின் இரட்சகனை அழைத்து (திக்ரு செய்து) கொண்டிருப்பவர்களிடம், உம்மை நீர் கட்டுப்படுத்திக் கொள்வீராக!” என்ற ஆயத்து அருளப்பட்டது.

எமது ஆய்வு :

ஆயத்து இடம் பெற்ற அத்தியாயம், ஆயத்து எண் வழக்கம் போல இப்போதும் தரப்படவில்லை. இறை நெறிநூல் குர்ஆனில் 18வது அத்தியாயத்தில் 28வது வசனத்தில் இடம் பெற்றுள்ள ஒரு ஆயத்தின் ஒரு பகுதியை மட்டும் அசி புத்தகம் தெரிவித்திருக்கிறது. அந்த ஒரு பகுதியிலுள்ள ஒரே ஒரு வார்த்தையில் ஆசிரியர் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். அந்த குழப்பத்தை தெரிந்து கொள்ளும் முன்பாக, குர்ஆனிலுள்ள அந்த ஆயத்து முழுமையாக என்ன சொல்கிறது என்பதை கவனியுங்கள். இதோ இறை வசனம்!

(நபியே!) எவர் தம் இறைவனுடைய திருப்பொருத்தத்தை நாடியவர்களாக, காலையிலும், மாலையிலும் அவனிடம் துஆ செய்து கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடன் நீரும் பொறுமையுடன் இருப்பீராக! இன்னும் உலக வாழ்க்கையின் அலங்காரத்தை நாடி அவர்களை விட்டும் உம் கண்களை (வேறு பக்கம்) திருப்பி விடாதீர். இன்னும் எவனுடைய இதயத்தை நம்மை நினைவு கூறுவதிலிருந்து நாம் திருப்பிவிட்டோமோ, அவனுக்கு நீர் வழிபடாதீர். ஏனெனில் அவன் தன்மன விருப்பத்தைப் பின்பற்றியதனால், அவனுடைய காரியம் எல்லை மீறியதாகி விட்டது. (அல்குர்ஆன்:18:28)

இந்த ஆயத்தில், காலையிலும், மாலையிலும் துஆ செய்யவேண்டும் என்ற கட்டளையை அல்லாஹ் வலியுறுத்தி இருப்பதை அறிய முடிகிறது. மேலும், அவர்களுடன், பொறுமையாக இருக்கும்படி நபி(ஸல்) அவர்களுக்கு குர்ஆன் கட்டளை இடுகிறது. கண்ணியமிக்க அல்லாஹ்வின் கட்டளை இவ்வாறு இருக்கும்போது, அசி புத்தகமோ காலையிலும் மாலையிலும் திக்ர் செய்பவர்களுடன் உம்மை நீர் கட்டுப்படுத்திக் கொள்வீராக என்று கூறுகிறது. பொறுமையுடன் இருக்கும்படி குர்ஆன் கூறியதற்கு பதிலாக, உம்மை நீர் கட்டுப்படுத்திக் கொள்வீராக என்று அசி புத்தகம் கூறுகிறது.

சரி! இப்போது குர்ஆனிலுள்ள எந்த அரபி வார்த்தைக்கு, கட்டுப்படுத்திக் கொள்வீராக என்று, அசி புத்தகம் மொழி பெயர்த்து இருக்கிறது என்பதை கவனியுங்கள். குர்ஆனிலுள்ள “ஸப்ர்’ என்ற வார்த்தையை கட்டுப்படுத்திக் கொள்வீராக என்று அசி புத்தகம் மொழி பெயர்த்து இருக்கிறது. ஸப்ர் என்பதற்கு பொறுமை என்பதுதான் அர்த்தம் என்பதை மார்க்கம் தெரியாத முஸ்லிம்கள் கூட சொல்லி விடுவார்கள். பிறகு எதற்கு அரபி மொழி நன்கு தெரிந்த அசி ஆசிரியர் கட்டுப்படுத்திக் கொள்வீராக என்ற வார்த்தையை தைரியமாகப் பிரயோகித்து இருக்கிறார்? ஆயத்து எண். அத்தியாய எண்களைத் தரவில்லை என்றால், இறை வசனங்களைக் கண்டுபிடிப்பது மிகமிகக் கடினமாக இருந்த கால கட்டத்தில், குருட்டு தைரியத்தில் குர்ஆனுக்கு எதிராக மனம்போன போக்கில் அசி ஆசிரியர் எழுதி இருக்கிறார் என்பது தெளிவாகிறது.

ஆயத்திலுள்ள ஒரே ஒரு வார்த்தையில் தவறு செய்து குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார். ஏன் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார்? அங்கே தான் உள்குத்து இருக்கிறது. என்ன அந்த உள்குத்து? அதைத் தெரிந்து கொள்வதற்கு முன்பாக, அவர் ஏற்படுத்திய குழப்பத்தை இப்போதே தெரிவித்துத் தெளிவுபடுத்தியும் விடுவோம்.

“காலையிலும், மாலையிலும் திக்ரு செய்து கொண்டிருப்பவர்களிடம், உம்மை நீர் கட்டுப்படுத்திக் கொள்வீராக” என்றால் என்ன அர்த்தம்?

கட்டுப்படுத்திக் கொள்ள பொறுமை “ஸப்ர்’ தேவை. “ஸப்ர்’ என்ற வார்த்தையை அல்லாஹ் நேரடியாகக் குர்ஆனில் கூறி இருக்கும்போது, எல்லோரும் புரிந்து கொள்ளக் கூடிய அந்த வார்த்தையை நேரிடையாகத் தெரிவிக்காமல் தவிர்த்து விட்டு, கட்டுப்படுத்திக் கொள்வீராக என்ற வேறொரு வார்த்தையை பயன்படுத்தி இறைவசனத்தின் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில் படிப்பவர்களை குழப்பத்தில் விட்டுவிட முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. எப்படி? அசி புத்தகம் தரும் மொழி பெயர்ப்பை மீண்டும் இங்கே தருகிறோம். படித்துப் பாருங்கள்.

“காலையிலும் மாலையிலும் தங்களின் இரட்சகனை அழைத்து (திக்ரு செய்து) கொண்டிருப்பவர்களிடம், உம்மை நீர் கட்டுப்படுத்திக் கொள்வீராக!” இதன் அர்த்தத்தை வாசகர்களாகிய உங்களில் யாராவது புரிந்து கொள்ள முடிந்ததா? புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், உங்களைக் குழப்பத்தில் விட்டு விட்டது தெளிவாகத் தெரிகிறதல்லவா?

அசி ஆசிரியர் தெரிவித்ததன் பிரகாரம், கட்டுப்படுத்திக் கொள்வீராக என்ற அந்த குறிப்பிட்ட வாசகத்திற்கு அரபியில் “சை(த்)தர(த்தன்)” என்ற வார்த்தை அந்த ஆயத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. எனவே, ஒரு மனிதரிடம் எப்போதெல்லாம் உம்மை நீர் கட்டுப்படுத்திக் கொள்வீராக என்ற வாசகத்தைப் பயன்படுத்த முடியும் என்பதை இப்போது சிந்தியுங்கள்.

அந்த மனிதர், அவர்கள் செய்த திக்ரில் அதீதமாக லயித்தவிட்டதன் காரணமாக, அளவு கடந்த உற்சாகத்தில் குரலை மிக உயர்த்திய வண்ணம் திக்ர் செய்ய ஆரம்பித் திருந்தால் உம்மை நீர் கட்டுப்படுத்திக் கொள்வீராக! என்ற வாசகம் பயன்படுத்த நேரிடும் என்று நினைக்கத் தோன்றுகிறது.

கட்டுப்படுத்திக் கொள்வீராக என்று வேறு சந்தர்ப்பங்களில் சொல்ல முடியுமா என்பதை இன்னும் ஆழமாக சிந்தித்துப் பார்ப்போம். அவர்கள் செய்து கொண்டிருந்த திக்ர் அந்த மனிதருக்கு இடையூறாக இருந்து பிடிக்காமல் போயிருந்தால் அதன் காரணமாக அந்த மனிதர் கோபம் அடைந்திருக்கவோ அல்லது அவர்கள் மீது வெறுப்பு ஏற்பட்டிருக்கவோ வாய்ப்பு ஏற்பட்டிருந்திருக்கும். கோபமோ வெறுப்போ அடைந்த நிலையில், அந்த மனிதர் திக்ர் செய்து கொண்டிருப்பவர்களுக்குத் தமது எதிர்ப்பை கோபமாகத் தெரிவித்திருந்தாலோ அல்லது கோபத்தில் அவர்களை தாக்க முற்பட்டிருந்தாலோ, அவரைத் தடுக்கும் முகமாக உம்மை நீர் கட்டுப்படுத்திக் கொள்வீராக என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்க நேரிடும் என்று நினைக்கத் தோன்றுகிறது.

அசி ஆசிரியர் பயன்படுத்திய வாசகத்தின் பிரகாரம் மேற்கண்ட இரண்டில் ஒன்றைத்தான் ஒரு நடுநிலையாளன் சிந்தித்திருக்க முடியும்.

அடுத்ததாக அசி ஆசிரியர் ஏன் பொருத்தமில்லாத வார்த்தையை பயன்படுத்தியுள்ளார் என்று சிந்தித்தால்தான். அதன் உள்குத்து தெரியவரும். குர்ஆனிலுள்ள வசனத் தைக் காட்டிவிட்டு, அந்த வசனத்திலுள்ள சிறிய வார்த்தைக்கு நேரடியாக அர்த்தத்தைத் தராமல், வேறு மாதிரியான அர்த்தத்தைக் கொடுத்து குழப்பம் செய்வதன் மர்மம் யாதெனில், இந்த குழப்பத்தில் உங்களை மூழ்கடித்து விட்டு, ஹதீஃதாக இல்லாத ஒன்றை ஹதீஃதாக தரப்போகிறார் என்பதே இதில் ஒளிந்திருக்கும் உள்குத்து. ஜக்கரியா அவர்களின் டெக்னிக் இது என்பதை அசி புத்தகத்தைப் படித்துப் படித்து பழக்கப்பட்ட மூளைச் சலவை செய்யப் படாதவர்கள் மட்டும் எளிதில் உணர முடியும்.

அசி புத்தகம் அதே பக்கம் 398ல் தொடர்ந்து எழுதி இருப்பது!

அப்துர் ரஹ்மான் இப்னு ஸஹ்ல்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ரசூலே அக்ரம் (ஸல்) அவர்கள் தங்கள் இல்லத்தில் இருக்கும்போது, காலையிலும் மாலையிலும் தங்களின் இரட்சகனை அழைத்து (திக்ரு செய்து) கொண்டிருப்பவர்களிடம், உம்மை நீர் கட்டுப்படுத்திக் கொள்வீராக” என்ற ஆயத்து அருளப்பட்டது என்று எழுதிவிட்டு தொடர்ந்து எழுதுவதைப் பாருங்கள்.

அப்போது திருநபி(ஸல்) அவர்கள், அத்தகையோரைத் தேடிக்கொண்டு புறப்பட்டார்கள். ஓரிடத்தில் அல்லாஹ்வைத் திக்ரு செய்து கொண்டிருந்த கூட்டத்தினரைக் கண்டார்கள். அவர்களில் சிலர்களின் தலைமுடி பரட்டையாகவும், மேனியின் தோல் காய்ந்தும், ஒரே ஓர் ஆடை (அதாவது கீழ் ஆடை) மட்டும் உடுத்தியவர்களாகவும் அமர்ந்திருந்தனர். அவர்களுடன் நபி(ஸல்) அவர்கள் அமர்ந்து கொண்டு “எவர்களுடன் நான் அமர்ந்திருக்க வேண்டுமென அல்லாஹ் எனக்கு கட்டளையிட்டானோ அப்படிப்பட்டவர்களை என் உம்மத்தில் ஆக்கித் தந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியன!” என்று கூறினார்கள். (நூல்: இப்னு ஜரீர், தப்ரானீ)

இந்த ஹதீஃதின் அறிவிப்பாளர்களில் ஒருவரான அஹ்மத் பின் ஸாலிஹ் பொய்யர் என்றும், உசாமா பின் ஸைத் பலமற்றவர் என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளதாக, இப்னு கஸீர் அவர்களின் தஃப்ஸீரில் 18வது அத்தியாயத்திற்கான விரிவுரையில் 46வது அடிக்குறிப்பில் தெரிவித்துள்ளார். ஆக போலியான ஹதீஃத் ஒன்று தரப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டோம்.

பொய்யான ஹதீஃதைத் தெரிவிக்க குர்ஆன் வசனத்தில் இல்லாத வார்த்தையை சொருகி, அதன் மூலம் குழப்பத்தை ஏற்படுத்தி, அந்த குழப்பத்தில் வாசகர்களை விட்டுவிட்டு, நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அடுத்த பொய் ஒன்றை மிக சுலபமாக அரங் கேற்ற, அந்த பொய்யை ஹதீஃது என்று துணிந்து சொல்ல இருப்பதுதான் ஜக்கரிய் யாவின் உள்குத்து!

ஒரு பொய்யை உண்மை என்று நம்ப வைக்கும்வரை அதைப் பற்றி திரும்பத் திரும்ப உரத்த குரலில் பேசவேண்டும் என்பதுதான் கோயபல்ஸின் தத்துவம். ஜெர்மனியில் ஹிட்லரின் நாசி கட்சியில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த கோயபல்ஸ்,, ஹிட்லருக்காக இதைத்தான் செய்து வந்தார். இந்த மோசமான தத்து வத்தை ஜக்கரியா அவர்கள் குர்ஆனிலும் ஹதீஃதுகளிலும் கையாண்டு இஸ்லாத்தைக் களங்கப்படுத்த முயற்சித்து வருகிறார். அதற்காக தம் வாழ்நாளின் பெரும் பகுதியை கழித்து வந்தார். யாருக்காக இதை செய்தார்? இஸ்லாத்தின் எந்த எதிரியைத் திருப்திப்படுத்த இப்படி செய்தார் என்றெல்லாம் சந்தேகம் இவர் மீது தோன்றுகிறது. இப்படி ஐயுறுவதேன்? இந்த வினாவுக்கான விடை இதுவரை எமக்குக் கிட்டவில்லை. அல்லாஹ்வே அறிந்தவன்.

ஹதீஃதாக இல்லாத விஷயத்தை ஹதீஃதாக காண்பித்த ஆசிரியர், அதை ஹதீஃது என்று நிலைநாட்ட அடுத்தடுத்த பொய்களைக் கூறி அந்த பொய்களையும் ஹதீஃதுகள் என்று சொல்லி முதலில் கூறியதை உண்மை என நிலைநாட்ட பாடுபடுவதைப் பாருங்கள்.

பக்கம் 398ல் தொடர்ந்து எழுதி இருப்பவை:

விளக்கம் : மற்றொரு ஹதீஃதில் அறிவிக்கப்பட்டுள்ளதாவது : அருமை நாயகம்(ஸல்) அவர்கள் அத்தகைய மனிதர்களைத் தேடிக் கொண்டு சென்றபோது, மஸ்ஜிதினுடைய கடைசிப் பகுதியில் சிலர் உட்கார்ந்து திக்ரில் ஈடுபட்டிருப்பதைக் கண்டு, “எவர்களுடன் நான் அமர்ந்திருக்க வேண்டுமென எனக்கு கட்டளையிட்டானோ அத்தகைய மனிதர்களை என் வாழ்நாளிலேயே உண்டாக்கித் தந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரியது என்று கூறியபின் உங்களுடனேயே நான் வாழவேண்டும். உங்களுடனேயே நான் மரணமடைய வேண்டும் (அதாவது வாழ்க்கையிலும், மரணத்திலும் நீங்கள் தான் நண்பர்கள்) என்று அருளி னார்கள்.

எமது ஆய்வு :

மற்றொரு ஹதீஃத் என்று கூறுகிறார். ஹதீஃத் நூலின் பெயர் தரவில்லை. ஹதீஃத் எண் தரவில்லை, அறிவிப்பாளர் பெயர் தரவில்லை, இது ஹதீஃதாம். மேலே உள்ள இவரது செய்தியில், மஸ்ஜிதினுடைய கடைசிப் பகுதியில் சிலர் உட்கார்ந்து திக்ரில் ஈடுபட்டிருந்தார்களாம். முந்தைய பொய் ஹதீஃதுக்கு ஆதரவாக வந்த இந்த பொய் ஹதீஃத் அந்த ஹதீஃதை ஆதரிக்க மட்டும் செய்யவில்லை. மஸ்ஜிதில் அமர்ந்து கூட்டமாக திக்ர் செய்யலாம் என்ற அடுத்த பொய்யை ஹதீஃதாகக் காட்டும் கேவலமும் நடத்தப்பட்டிருக்கிறது.

பக்கம் 399ல் தொடர்ந்து எழுதி இருப்பவை:

மற்றொரு ஹதீஃதில் அருளப்பட்டிருப்பதாவது: ஹஜ்ரத் ஸல்மான் பார்ஸி(ரழி) அவர்களும் மற்றும் சில சஹாபாக்களும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வை திக்ர் செய்வதில் ஈடுபட்டிருந்தனர். ரசூல்(ஸல்) அவர்கள் அவர்களின் அருகில் சென்றதும், திக்ர் செய்வதை நிறுத்திவிட்டு மவுனமாகி விட்டனர். நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று நபி(ஸல்) அவர்கள் வினவிய போது, நாங்கள் அல்லாஹ்வை திக்ர் செய்வதில் ஈடுபட்டிருந்தோம் என்று கூறினார்கள். அல்லாஹு தஆலாவுடைய ரஹ்மத் உங்களின் மீது இறங்கிக் கொண்டிருப்பதை நான் பார்த்தேன். எனவே நானும் உங்களுடன் சேர்ந்து உட்கார வேண்டுமென என் மனம் விரும்பியது என்று கூறி நபி(ஸல்) அவர்கள் “எவர்களுடன் சேர்ந்து உட்கார வேண்டுமென்று நான் கட்டளையிடப்பட்டேனோ அத்தகையோரை என் உம்மத்தில் உருவாக்கித் தந்த அல்லாஹு த ஆலாவுக்கே எல்லாப் புகழும்” என்று அருளினார்கள்.

எமது ஆய்வு!

மற்றொரு ஹதீஃத் என்று கூறுகிறார். ஹதீஃத் நூலின் பெயர் தரவில்லை. ஹதீஃத் எண் தரவில்லை, அறிவிப்பாளர் பெயர் தரவில்லை. இது ஹதீஃதாம் அடுத்து “எவர்களுடன் சேர்ந்து உட்கார வேண்டுமென்று நான் கட்டளையிடப்பட்டேனோ… அல்லாஹு த ஆலாவுக்கே எல்லாப் புகழும் என்று அருளினார்கள். இந்த வசனம் ஏற்கனவே இப்னு ஜரீர் தப்ரானியில் இருப்பதாக பக்கம் 398ல் எழுதி இருந்ததையும், அந்த ஹதீஃதின் அறிவிப்பாளர்களில் ஒருவர் பொய்யர் என்றும் இன்னும் ஒருவர் பலவீனமானவர் என்றும் இப்னு கஸீர் அவர்க ளின் தஃப்ஸீரில் கூறப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டியிருக்கிறோம். திணிக்க முடிந்த இடங்களில் எல்லாம் தமது பொய்யை திணித்திருக்கிறது அசி புத்தகம்.

பக்கம் 399ல் தொடர்ந்து எழுதி இருப்பவை :

ஹஜ்ரத் இப்ராஹீம் நஃகஈ(ரஹ்) அவர்கள் “காலையிலும், மாலையிலும் தங்கள் இரட்சகனை அழைப்பவர்கள்” என்ற ஆயத்திற்கு “திக்ர் செய்பவர்கள்” என்பதாக விளக்கம் கூறியுள்ளார்கள். (தொடர்ந்து ஷைகுமார்கள், முரீதுகள், சூபியாக்கள் என்றெல்லாம் ஜக்கரிய்யாவின் வழக்கமான கதை அவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அவற்றை விமர்சித்திருப்பதால், அவற்றை இங்கு தவிர்த்துள்ளோம்.

எமது ஆய்வு !

திக்ர் என்றால் (அல்லாஹ்வை) நினைவு கூர்தல் என்று பொருள். தொழுகை, துஆ போன்ற எல்லா நல்ல அமல்களிலும் அல்லாஹ்வை நினைவு கூறப்படுகிறது. ஆகவே எல்லா நல்ல அமல்களையும் திக்ர் என்று சொல்லலாம். தொழுகை, துஆ என்று தனித் தனியாகக் குறிப்பிடப்பட்டால் அது குறிப்பிடப்பட்ட அந்த அமலை மட்டுமே குறிக்கும் என்பதை சாதாரணமாக யாரும் சொல்லி விடுவார்கள். 18:28வது வசனத்தில் அல்லாஹ் குறிப்பிட்டு துஆ என்று சொல்லி இருக்கும்போது அதை திக்ர் என்று சொன்னால், குர்ஆனுக்கு முரண்படுவது என்பது ஜக்கரியாவின் அதிமுக்கிய தலையாய கடமை என அவர் கருதியிருப்பது தெரிகிறது. இதுபோன்ற நபரைப் பின்பற்றும் தப்லீக் ஜமாஅத்தினருக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட பிரார்த்திப்போமாக. கீழுள்ள இறை வசனங்கள் தப்லீக் ஜமாஅத்திலுள்ள சகோதரர்கள் அதிலிருந்து வெளியேற போதுமானவையாக இருக்கும் என்று கருதுகிறோம்.

“அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனையை சொல்பவனை விட பெரும் அக்கிரமக்காரன் யார்? அத்தகையோர் மறுமையில் இறைவன் முன் நிறுத்தப்படுவார்கள். “இவர்கள்தாம் தங்கள் இறைவன் மீது பொய் கூறியவர்கள்” என்று சாட்சி சொல்வோர் கூறுவார்கள். இத்தகைய அநியாயக்காரர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்”  (அல்குர்ஆன் 11:18)

“நிச்சயமாக நிராகரித்து, அக்கிரமம் செய்பவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பு அளிக்கமாட்டான், அன்றி அவர்களை நேர்வழியிலும் செலுத்தமாட்டான்” “நரகத்தின் வழியைத் தவிர, அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள், இது அல்லாஹ்வுக்கு சுலபமாக இருக்கிறது”  (அல்குர்ஆன்: 4:168, 169)

“அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர்வழியில் நடத்தமாட்டான்” (9:109)    (இன்ஷா அல்லாஹ் தொடரும்…..)

Previous post:

Next post: