நீதி தென்படுகிறது!

in 2020 டிசம்பர்

தலையங்கம்!

நீதி தென்படுகிறது!

நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில், அந்த விசாரணையின் போக்கில் நீதி தென்பட்டுக் கொண்டிருப்பதில் திருப்தி அடைந்ததால் உருவான தலையங்கம் இது!

எமது மே 2020 இதழில் “அமல்களின் சிறப்புகள்” ஆய்வுத் தொடரில் தப்லீக் ஜமாஅத்தினரின் மாநாட்டில் பங்கேற்றவர்களால் தான் கொரோனா வைரஸ் நோய் அதிகமாகப் பரவியதாக சில ஊடகங்கள் வெளியிட்டிருந்த செய்தி, பொய் என்பதை எழுதி இருந்தோம்.

ஊடகங்களின் பொய் செய்திகளை முன் வைத்து, “ஜாமியத் உலமாயே ஹிந்த்” அமைப்பினர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர். இந்த நோய் பரவியதற்கு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் குற்றம் சுமத்தி பயமுறுத்துகிறார்கள். இதுபோன்ற செய்திகளை வெளியிட ஊடகங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், அதற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரியிருந்தனர்.

ஆட்சேபத்திற்குரிய செய்திகள் சேனல்களிலும், பத்திரிக்கைகளிலும் வந்ததாக உறுதியான தகவல்கள் இல்லாத நிலையில், கேபிள் டிவி சட்டத்தின் கீழ் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று மத்திய அரசு பதில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது.

இந்த மனு சென்ற மாதம் விசாரணைக்கு வந்தது. தேவையில்லாத கருத்துக்களையும் முட்டாள்தனமான வாதங்களையும் பிரமாணப் பத்திரத்தில் கூறியிருப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அவர்கள் குறிப்பிட்டு, தமது கண்டனத்தை மத்திய ஒளிபரப்புத் துறையின் கூடுதல் செயலாளருக்கு தெரிவித்தார்.

எனவே, மத்திய அரசு புதிதாக பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தது. இதுவும் 17.11.20 அன்று விசாரணைக்கு வந்தது. அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜரானார். அவரிடம், நீங்கள் இப்போது தாக்கல் செய்திருக்கும் பத்திரமும் எங்களுக்கு திருப்தியைத் தரவில்லை என்றும் கேபிள் டிவி நெட்ஒர்க் சட்டத்தின் கீழ் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை விளக்குமாறும், செய்திகளைப் பரிசீலித்து பொய் செய்திகளைத் தடுக்க ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.

மேலும், சமர்ப்பிக்கப்பட்ட பிரமாணப் பத்திரம் முறைப்படி தாக்கல் செய்யப்படவில்லை; நீதிமன்றம் கேட்டிருந்த இரு முக்கிய கேள்விகளுக்கு பதில் இல்லாத பத்திரத்தை தாக்கல் செய்யக்கூடாது, கேபிள் டிவி நெட் ஒர்க் சட்டத்தின் கீழ் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற நீதிமன்றத்தின் கேள்விக்கு பதில் தரவில்லை. பொய்யான செய்திகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டால் அவற்றைக் கையாளும் வழிமுறைகள் என்னவென்று நீதிமன்றத்திற்கு தெரிவியுங்கள், வழிமுறைகள் ஏற்படுத்தவில்லை என்றால், புதிதாக உருவாக்குங்கள் என்றும் தெரிவித்தார்.

சொலிசிட்டர் ஜெனரல் இதற்கான தனது பதிலில், கேபிள் டிவி சட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகத் தெரிவித்தார். அதற்கு தலைமை நீதிபதி அவர்கள் எத்தனை தடவை, எத்தனை ஊடகங்கள் மீது கேபிள் டிவி சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுத்துள்ளீர்கள்? எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி எங்களிடம் சொல்லுங்கள். அரசு ஏன் இதில் ஒழுங்குமுறையை ஏற்படுத்தவில்லை? சட்டத்தின் மூலம் தொலைக்காட்சி செய்திகளை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும் என்பதையும் தெரிவிக்குமாறும் கேட்டுவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது, இந்த வழக்கு சம்பந்தமாக உச்சநீதிமன்றத்தில் இதுவரை நடைபெற்றது இவைதாம்.

வழக்கின் தீர்ப்பு முடிவு செய்யப்படாத போது, விசாரணை நடந்து கொண்டிருக்கும் இந்த நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதி பாப்டே அவர்கள் இந்த வழக்கை நியாயமாக அணுகும் முறை, வழக்குத் தொடுத்த ஜாமியத் உலமாயே ஹிந்த் அமைப்பினருக்கும், தப்லீக் ஜமாஅத்தினருக்கும், முஸ்லிம் சமுதாயத்திற்கும், ஏனைய ஆர்வலர்களுக்கும் நீதித்துறை மீது நம்பிக்கை ஏற்பட வாய்ப்புண்டு என்று கருதுகிறோம்.

இந்த விசாரணையின் போக்கின் மூலம், நம் நாட்டு நீதித்துறையில் இன்றைய காலகட்டத்தில் கூட நல்லது நடக்கிறது என்ற ஆச்சரியம் அதாவது நீதி தென்படுகிறது என்ற எண்ணம் மக்கள் மனதில் விதைக்கப்பட்டிருக்கிறது என்ற மனநிறைவுடனும், உண்மையின் பக்கம் தீர்ப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்புடனும் இப்போதைக்கு நிறைவு செய்கிறோம்.

Previous post:

Next post: