இஸ்லாம் நிறைவு பெற்ற பின்னரும் இடைத்தரகர்களா?

in 2021 ஜனவரி

இஸ்லாம் நிறைவு பெற்ற பின்னரும் இடைத்தரகர்களா?

தொடர் -5

அபூ அப்தில்லாஹ்

மறு பதிப்பு :

மக்களை ஏமாற்றி, வஞ்சித்து வழிகெடுத்து வயிறு வளர்க்கும் புரோகிதர்களின் திறமை பற்றி ஓர் அறிஞரின் அமுத மொழியை மே 2004 இதழில் பார்த்தோம். அதையே மீண்டும் இங்கு இடம் பெறச் செய்துள்ளோம்.

திறமை என்பது எள்ளளவும் தேவைப்படாத தொழில் புரோகிதத் தொழில் ஒன்றுதான். புரோகிதன் மூடனாக இருக்கலாம். ஒழுக்கத்தில் சீரழிந்தவனாக இருக்கலாம். பால்வினை நோய் உள்ளவனாக இருக்கலாம்” ஆயினும் புரோகிதத் தொழில் செய்ய முடியும்.

இறுதி நெறிநூல் அல்குர்ஆனின், அப்பட்டமான, தெள்ளத்தெளிவான நேரடியான இறைவாக்குகளைப் புறக்கணித்துவிட்டு மக்களை அவர்களால் வழிகெடுக்க முடிகிறது என்றால், மக்களின் அலட்சியப்போக்கும், இப்புரோகிதர்கள் மீது அவர்கள் கொண்டிருக்கும் குருட்டு பக்தியும், அபார நம்பிக்கையுமேயாகும். இந்தக் குருட்டு பக்தியையும், அபார நம்பிக்கையையும் “இளமையில் கல்வி பசுமரத்தானி” என்ற முதுமொழிக்கொப்ப மழலைகளின் பிஞ்சு உள்ளங்களிலேயே இந்தப் புரோகிதர்கள் பதித்து விடுகிறார்கள்.

நமது குழந்தைகள் மழலைகளாக இருக்கும்போது இந்தப் புரோகிதர்கள் மார்க்கத்தை முறையாகக் கற்றுக் கொடுப்பார்கள் என்ற குருட்டு நம்பிக்கையில், இந்தப்புரோகிதர்கள் நடத்தும் மக்தப் என்ற பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி வைக்கிறோம். அவர்களும் பெரும் தடல்புடல்களுடன் பெருத்த சடங்குகள் செய்து, குரு தட்சணை எல்லாம் முழுமையாக வாங்கிக் கொண்டு அரபு மொழியின் அரிச்சுவடியான அலிஃப் பே, த்தே இவற்றை அரைகுறை உச்சரிப்புகளுடன் கற்றுக் கொடுக்கிறார்கள். இவற்றைக் கற்றுக் கொடுத்தவுடன் அதற்கொரு பெரிய ஃபாத்திஹா சடங்குகள் குருதட்சணை என அமர்க்களப்படும்.

அதன் பின்னர் அடுத்த பெரியதொரு பாத்திஹா சடங்கு சம்பிரதாயங்களுடன் குருதட்சணையுடன் குர்ஆன் ஓதக் கற்றுக் கொடுக்கும் சடங்கு ஆரம்பமாகும். ஆம்! பொருள் அறியாமல் கிளிப்பிள்ளை பாடமாக குர்ஆன் வசனங்களை உச்சரிக்க அதாவது ஓதக்கற்றுக் கொடுக்கப்படுமேயல்லாமல் அவற்றின் பொருள் அறிந்து படித்து விளங்கும் வகையில் கற்றுக்கொடுக்கப்படாது. இப்படி அல்குர்ஆனின் அனைத்து வசனங்களும் வெறுமனே உச்சரிக்கக் கற்றுக் கொடுக்கப்படும். இதற்காக இடையிடையே பல சடங்கு சம்பிரதாயங்கள், ஃபாத்திஹாக்கள், குருதட்சணைகள், கைலி, சட்டை என தூள் கிளப்பப்படும். தங்களின் குழந்தைகள் இறைவனின் இறுதி வேதமான அல்குர்ஆனை கற்றுக் கொண்டதாகப் பெற்றோர்கள் பெருமைப்பட்டுக் கொள்வார்கள்.

குர்ஆனை பொருள் அறியாமல் ஓதிமுடித்தாகிவிட்டது. சுபுஹான மவ்லிது முஹ்யித்தீன் மவ்லிது, மீரான் மவ்லிது என அக்குழந்தைகளுக்கு அவையும் பொருள் அறியாத நிலையில் ஓதக் கற்றுக் கொடுக்கப்படும். காரணம் நமது தமிழகத்தில் இந்த மூன்று மவ்லிதுகளும் பிரபலம், வீடு, குடிபுக, வியாபாரம் ஆரம்பிக்க, இன்ன பிற நல்ல காரியங்களை இந்த மவ்லிதுகளை ஓதி ஆரம்பிக்கும் வழக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. நல்ல – மங்கள காரியங்கள் ஆரம்பிக்க மவ்லவிதுகள், இறப்பு போன்ற தீய – அமங்களங்களுக்கு குர்ஆன் ஓதுவது என்பது நமது தமிழக முஸ்லிம்களின் வழக்கத்தில் உள்ளது.

புரோகிதர்கள் இந்த மவ்லவிகளை ஓதக் கற்றுக்கொண்ட ஒரு பாவமும் அறியாத பச்சிளம் சிரார்களையும் அழைத்துக் கொண்டு போய், வீடுகளில், வியாபார நிலையங்சகளில் இந்த மவ்லிதுகளை ஓதச்செய்து கொழுத்த வருமானம் பெற்றுக் கொள்வார்கள். அக்குழந்தைகளுக்காகக் கொடுக்கப்படும் ஹதியாவிலும்(?) ஒரு சிறிய பங்கை மட்டும் அந்தச் சிறார்களுக்குக் கொடுத்துவிட்டும் பெருந்தொகையை தங்கள் பாக்கெட்டில் போட்டுக் கொள்வார்கள்.

ஆக இப்போது அந்த இளஞ்சிறார்கள் குர்ஆனை பொருள் அறியாமல் உச்சரிக்கக் கற்றுக் கொண்டார்கள் அடுத்து மூன்று மவ்லிதுகளையும் பொருள் அறியாமல் உச்சரிக்கக் கற்றுக் கொண்டார்கள். இந்தக் காலக்கட்டங்களில் இந்தப் புரோகிதர்கள் தங்களை ஆசிரியப் பெருந்தகைகள், பெரும் மதிப்புக்கும்  மரியாதைக்கும் அந்தஸ்திற்குரியவர்கள், தங்களை மரியாதை பண்ணவேண்டும். தங்கள் வார்த்தைகளை மதித்து அவற்றைக் கண்மூடிப் பின்பற்ற வேண்டும். தங்கள் வார்த்தைகளை மதித்து அவற்றைக் கண்மூடிப் பின்பற்ற வேண்டும் என்றெல்லாம் ்அவர்களை மூளை சலவை செய்து அந்தப் பிஞ்சு உள்ளங்களில் நஞ்சைக் கலந்து விடுவார்கள். எந்தப் பாவமும் அறியாத அந்தப் பச்சிளம் குழந்தைகளும் புரோகிதர்களான தங்களின் ஆசிரியப் பெருந்தகைகள்(?) மீது அளவு கடந்த பக்தியும், மரியாதையும் கொண்டு, அவர்களின் வார்த்தைகளை வேதவாக்காக எடுத்து நடக்க ஆரம்பித்து விடுவார்கள். தங்கள் உஸ்தாது ஆசிரியப் பெருந்தகை(?) பின் உபதேசம் நூறு நூல்களைப் பார்ப்பதை விட மேலானது என்ற குருட்டு நம்பிக்கையும் ஏற்பட்டுவிடுகிறது. அதனால் அதற்கு மேல் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள எவ்வித முயற்சியிலும் ஈடுபடமாட்டார்கள். இது மறுக்க முடியாத உண்மை என்பதற்கு இதோ ஆதாரம்.

தமிழகத்தில் தற்போது தலைசிறந்த பேச்சாளராகவும், ஒரு அரபி கல்லூரியின் தலைமை ஆசிரியராகவும், மவ்லவிகளிலேயே மிகமிக சிறப்புக்கும், கண்ணியத்திற்கும் உரியவராகப் போற்றிப் புகழப்படும் மவ்லவி அ.கலீல் அஹமது கீரனூர் 29.11.1988ல் பொறியாளர் H.அப்துல் ஸமது அவர்களுக்கு எழுதி அந்நஜாத் பிப்ரவரி 1989, பக்கம் 33ல் இடம் பெற்ற கடிதத்தில்,

இந்நிகழ்ச்சியை என்னுடைய கண்ணியமிகு உஸ்தாது சொல்லக் கேட்டுள்ளேன். நான் நூறு கிதாபை பார்ப்பதை விட அது மிகப்பெரிய ஆதாரமாகும்” என்று எழுதி இருந்தது எமது இந்தக் கருத்து நூற்றுக்கு நூறு உண்மைதான் என நிரூபிக்கப் போதுமானதாகும்.

பல அரபி கல்லூரிகளில் பல்லாண்டுகள் ஓதி பட்டங்கள் பல பெற்று ஒரு அரபி கல்லூரியின் தலைமை ஆசிரியராக பணிபுரியும், மக்களால் தலைசிறந்த மார்க்க அறிஞராக மதித்துப் போற்றப்படும் ஒரு மவ்லவிக்கே இந்த அளவு குருட்டு குரு உஸ்தாது பக்தி இருக்கிறதென்றால், சாதாரண மக்களைப் பற்றிச்  சொல்லியா தெரிய வேண்டும். ஆக சின்னஞ்சிறிய குழந்தைகளாக இருக்கும்போதே இந்த நச்சுக் கருத்து அந்த பிஞ்சு உள்ளங்களில் பசுமரத்தாணி போல் பதிந்து விடுவதால், அதன் பின்னர் அதை மாற்றுவது கல்லில் நார் உரிப்பது போல் மிகமிக கடினமான ஒரு செயலாக இருக்கிறது. இந்தப் புரோகிதர்கள் இப்படியொரு குருட்டு குரு – உஸ்தாது பக்தியை குழந்தைகளின் உள்ளங்களில் தந்திரமாகப் பதித்த பின்னர், தங்களின் நச்சுக் கருத்துக்களை வழிகேட்டு உபதேசங்களை மிகத் தந்திரமாக அந்தப் பிஞ்சு உள்ளங்களில் பதியவைக்க அடுத்தக்கட்ட சதித்திட்டத்தில் இறங்க விடுகின்றனர்.

இறைவனின் இறுதி நெறிநூல் அல்குர்ஆனை பொருள் அறியாமல், அதன் ஒலியை உச்சரிக்க வைத்தவர்கள். மூன்று மவ்லிதுகளையும் பொருள் அறியாமல் ஓத வைத்தவர்கள், அடுத்து அந்தப் பாலகர்களுக்கும் கற்றுக் கொடுக்கும் நூல் என்ன தெரியுமா? ஹனஃபி மத்ஹபில் “ஸிம்துஸிப்யான்” ஷாஃபி மத்ஹபில் “அஸ்க்காமுஷ்ஷாபிய்யா” அவை பொருள் அறியாத நிலையில் அரபி மொழியிலா? அதுதான் இல்லை! பச்சிளம் பாலகர்கள் தெளிவாக விளங்கி அவற்றைப் பசுமரத்தாணி போல் தங்களின் உள்ளங்களில் புதிய வைத்துக் கொள்ளும் வகையில் அரபி தமிழில் படித்துக் கொடுக்கப்படுகிறது. அதாவது எழுத்து அரபி உச்சரிப்பு தமிழ். எனவே படிக்கும்போதே அச்சிறுவர் சிறுமியருக்கு தாங்கள் படிப்பவற்றில் பொருள் தெள்ளத் தெளிவாக விளங்கும். அது மட்டுமல்ல, அவை அனைத்தும் அவர்களின் உள்ளங்களில் பசுமரத்தாணி போல் பதிந்து விடும். ஆனால் அவை எதுவும் குர்ஆன், ஹதீஃத் நேரடி போதனைகளும் அல்ல: அவற்றிற்கு இணக்கமானவையும், நேரானவையுமல்ல. முழுக்க முழுக்க முற்றிலும் முரணானவை. ஷிர்க் பித்அத்களின் ஒட்டுமொத்த உருவம் அந்த நூல்கள் என்று சொல்லிவிடலாம்.

இன்று முஸ்லிம் சமுதாயத்தில் நீக்கமற நிறைந்து காணப்படும் தர்ஹா சடங்குகள், கந்தூரிகள், மீலாது, மெளலூது, கத்தம், ஃபாத்திஹா, ஸலாத்து நாரியா, 3ம், 7ம், 10ம், 40ம் மற்றும் வருட ஃபாத்திஹாக்கள், ஷபே பராஅத், ஷபே பிஃராஜ் சடங்குகள், ஒடுக்கத்துப் புதன் சடங்குகள், சம்பிதாயங்கள், ஷிர்க்குகள், பித்அத்கள், மூட நம்பிக்கைகள் ஃபால் கிதாப் என்ற பெயரால் ஜோதிடம் பார்த்தல் இவை அனைத்தும் இந்த கிதாபுகள் வழியாகத்தான் ஒரு பாவமும் அறியாத பச்சிளம் பலகர்களின் உள்ளங்களில் பசுமரத்தாணியாகப் பதிவு வைக்கப்படுகிறது. இந்தப் புரோகிதர்கள் எந்த அளவு கல் நெஞ்சம் உடையவர்களாக இருந்தால், முஸ்லிம் சமுதாயத்தையே ஒட்டுமொத்தமாக வழிகெடுக்கும் இந்தத் துரோகச் செயலை செய்யத் துணிவார்கள்.

மக்தப் எனும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் உள்ளங்களட் உஸ்தாது பக்தி என்ற பெயரால் மழுங்கடிக்கப்பட்டு, அவர்களின் மூளை, சலவை செய்யப்பட்டு இப்படிப்பட்ட குர்ஆனுக்கு, ஹதீஃதுக்கு நேர்முரணான ஷிர்க், பித்அத்கள், மூட நம்பிக்கைகள், அனாச்சாரங்கள் வழிபாடு என்ற பெயரால் பசுமரத்தாணி போல் பதியப்பட்டால், அவர்கள் வளர்ந்து வாலிபமாகி சமுதாயத்தை வழிநடத்திச் செல்லும் தலைவர்களே ஆனாலும், படித்துப் பட்டங்கள் பல பெற்று பண்டிதர்கள் ஆனாலும் தொழில், விபச்சாரம் செய்து கோடி கோடியாகப் பெற்று பெரும் பெரும் செல்வந்தர்கள் ஆனாலும்  அவர்கள் வழிகேட்டில்தான் இருப்பார்கள் என்பதில் சந்தேகமுண்டா?

சின்னஞ்சிறு வயதில் பால் மணம் மாறாத பிஞ்சு உள்ளத்திலேயே இப்படிப்பட்ட நஞ்சைக் கலந்து விட்டால், இறைவனுக்கு இணை வைக்கும் மாபாதகங்களை வழிபாடுகள் என்ற பெயரால் திணித்து விட்டால், அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகி சமுதாயத் தலைவர்களாக, அரசியல் தலைவர்களாக, என்ஜினியர்களாக, வக்கீல்களாக பெரும் பெரும் தனவந்தர்களாக, விஞ்ஞானிகளாக, கண்டு பிடிப்பர்களாக ஆனாலும், உலகில் பெரும் பெரும் புகழுடன் ஜொலித்தாலும் ஓரிறை பக்தியில் சோடை போனவர்களாக இருக்கின்றனர். கபுரு சடங்குகள், கந்தூரிகள், கத்தம், ஃபாத்தியாக்கள் மற்றும் மூட நம்பிக்கைகள், அனாச்சாரங்கள் இவற்றில் மூழ்கித் திளைக்கின்றனர். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை.

இந்த மூட முல்லாக்களால் மூளை சலவை செய்யப்பட்டு, மூட நம்பிக்கைளிலும், அனாச்சாரங்களிலும், ஷிர்க், பித்அத்களிலும் மூழ்கித் திளைக்கும் பெற்றோருக்குப் பிள்ளையாகப் பிறந்து, அதே சிந்தனையுடைய தாயிடம் பால் குடித்து, அவளது மடியிலேயே வளர்ந்து, அந்தச் சீரழிந்த சமுதாயச் சூழ்நிலையிலேயே சிசு பருவத்தைக் கழித்து, அப்போதுதான் அறிவு வருகிறது. எனும்போது, இந்த மவ்லவழி புரோகிதர்களும் அதே மூட நம்பிக்கை, அனாச்சாரங்கள் ஷிர்க், பித்அத் இவற்றையே வழிபாடாக மார்க்கமாகப் போதித்து, அறிவு குருத்து விடும் அந்த நிலையிலேயே அவர்கள் சுய சிந்தனையை பக்தியின் பெயரால் உஸ்தாதுகளுக்கு (குருட்டு) மரியாதை என்ற பெயரால் மழுங்கடித்து விட்டால் அவர்கள் வளர்ந்து வாலிபமாகி என்னதான் உலகியல் அறிவுகளைப் பெற்றாலும் பக்தி என்று வந்துவிட்டால் அவர்களது அறிவுக்கு திரை விழுந்து விடத்தான் செய்யும்.

இதையே உலகிலுள்ள அனைத்து மதங்களிலும் பார்க்கிறோம். எப்படி ஹிந்து மதத்தைச் சேர்ந்த படித்தவர்கள் பட்டதாரிகள் டாக்டார்கள், என்ஜினிர்கள், வக்கீல்கள், விஞ்ஞானிகள், கண்டுபிடிப்பாளர்கள், பெரும் பெரும் செல்வந்தர்கள் அனைவருமே சிலைகளை தெய்வமாக நம்பி வழிபட்டு படைத்த ஒரே இறைவனுக்கு இணை வைக்கிறார்களோ எப்படி கிறித்தவ மதத்தைச் சேர்ந்த படித்தவர்கள், பட்டதாரிகள், டாக்டர்கள், என்ஜினியர்கள். வக்கீல்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பாளர்கள், பெரும் பெரும் செல்வந்தர்கள் அனைவருமே இறைத்தூதரும், இறை அடிமையான “யேசு” என்ற ஈஸா(அலை) அவர்களை இறைவனது குமாரர் என்று நம்பி – வழிபட்டு படைத்த ஒரே இறைவனுக்கு இணை வைக்கிறார்களோ அதே போல், அதில் அணுவளவும் குறையாமல் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த படித்தவர்கள், பட்டதாரிகள், டாக்டர்கள், என்ஜினியர்கள், வக்கீல்கள். விஞ்ஞானிகள், கண்டுபிடிப்பாளர்கள், பெரும் பெரும் செல்வந்தர்கள் அனைவருமே இறுதி இறைத்தூதரை இறைவனது அடிமையும், தூதருமாவார்கள் என்ற நிலையிலிருந்து உயர்த்தி, இறைவனது தனித்தன்மைகளில் சில இறைத்தூதருக்கும் உண்டு. என்றும், இறந்துபோன இறையடியார்களுக்கும் விஷேச அதிகாரங்கள் உண்டு என்று நம்பிச் செயல்பட்டு – வழிபட்டு படைத்த ஒரே இறைவனுக்கு இணை வைக்கிறார்கள்.

இதற்கு அடிப்படைக் காரணம் இந்தப் புரோகிதப் பண்டாரங்கள், ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்த மழலைகளின் பிஞ:சு உள்ளங்களில் நஞ்சைக் கலப்பது போல் இறைவனுக்கு இணை வைக்கும் கொடிய செயலை வழிபாடாக விதைத்து விடுவதேயாகும். முஸ்லிம் மதப் புரோகிதர்களான மவ்லவிகள் இளஞ்சிரார்களுக்கென்றே போதிப்பதற்கு கற்பனை செய்து உருவாக்கி வைத்துள்ள ஸிம்து ஸிப்பான். அஹ்க்கா முஷ்ஷாபியிய்யா நூல்களை சுயசிந்தனையுடன் படித்துப் பார்ப்பவர்கள் இந்த எமது கூற்றை ஒருபோதும் மறுக்கமாட்டார்கள். யூத, கிறித்தவ மதப்புரோகிதர்கள் சத்தியத்தைத் தங்கள் பெற்ற பிள்ளைகளை அறிவது போல் அறிந்த நிலையில்தான் அதற்கு மாறாக தங்களை கண்மூடி நம்பி தங்கள் பின்னால் வரும் மக்களை வழிகெடுத்தார்கள். வழிகெடுத்துக் கொண்டிருக்கிறவர்கள் என்பதை ஏகன் இறைவன் தனது இறுதி வேதத்தில் அப்பட்டமாக நெற்றிப் பொட்டில் அடித்தால் போல் சொல்லிக் காட்டுகிறான்.

“எவர்களுக்கு நாம் வேதங்களைக் கொடுத்தோமோ அவர்கள் தம் (சொந்த) மக்களை அறிவதைப் போல் (உண்மையை) அறிவார்கள். ஆனால் அவர்களின் ஒரு பிரிவினர், நிச்சயமாக அறிந்துகொண்டே உண்மையை மறைக்கின்றனர்”. அல்குர்ஆன்: 2:21, மேலும் பார்க்க: 2:75,79,129, 6:20

யூத, கிறித்தவ மதப் புரோகிதர்களின் அடிச்சுவட்டை ஜானுக்கு ஜான் முழத்துக்கு முழம் அப்படியே அணுவளவும் பிசகாமல் அப்படியே பின்பற்றி உலக ஆதாயம் அடைபவர்களாகத்தான் முஸ்லிம் மத புரோகித மவ்லவிகளும் இருக்கிறார்கள். இறைவனின் இறுதி வேதம் அல்குர்ஆனில் மார்க்கத்தைப் பிழைப்பாக்கிக் கொண்ட தொண்டைத் தொழிலாக்கிக் கொண்ட யூத கிறித்தவ மதப்புரோகிதர்கள் நன்கு அறிந்த நிலையில் மார்க்கத்தைத் திரித்து மதமாக்கி மக்களை ஏமாற்றினார்களோ, தில்லுமுல்லுகள் செய்தார்களோ, அப்பாவழி மக்களை வழிகெடுத்து நரகிற்கு உரியவர்கள் ஆக்கினார்களோ அதேபோல் முஸ்லிம் மதப் புரோகிதர்களும் தூய இஸ்லாமிய மார்க்கத்தை முஸ்லிம் மதமாகத் திரித்து மக்களை ஏமாற்றுகிறார்கள். தில்லுமுல்லுகள் செய்கிறார்கள். அப்பாவி முஸ்லிழம்களை வழிகெடுத்து நரகில் கொண்டு தள்ளுகிறார்கள். தங்களும் வழிகெட்டு நரகிற்குரியவர்களாக ஆகிறார்கள்.

இந்த முஸ்லிம் மதப்புரோகிதர்களும், அல்குர்ஆன் : 2:159,160,161,162 இறைவாக்குகளில் இறைவன் எச்சரிப்பது போல் இறைவனது, மலக்குகளது மனிதர்களது கடும் சாபத்திற்குரியவர்களாக ஆகிறார்கள். அவர்கள் மறைத்த உண்மைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி தங்களின் தவறுகளுக்காக மக்களிடம் மன்னிப்புப் பெறாத நிலையில் மரணித்தால், இறைவன் அவர்களை மன்னிக்கப்போவதும் இல்லை. இந்த மதப் புரோகிதர்களுக்கு நரகிலிருந்து விடுதலையே இல்லை என்பதையே இந்த இறைவாக்குகள் நெத்தி அடியாகக் கூறுகின்றன. அல்குர்ஆன் : 2:160 இறைவாக்கு கூறுவது போல் பாவமன்னிப்புக் கேட்டு தாங்கள் மறைத்த உண்மைகளை மக்களுக்கு எடுத்துக் கூறுவதாக இருந்தால், முதல் முதலாக அவர்கள் செய்யவேண்டிய வேலை ஸிம்து ஸிப்பான். அஹ்காஷ்ஷாபியிய்யா போன்ற ஷிர்க், பித்அத் மற்றும் மூட நம்பிக்கை, அனாச்சாரங்களைப் போதிக்கும் நூல்களை நெருப்பிலிட்டுப் பொசுக்க வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே நாளை மறுமையில் அவர்களது முகங்கள் நெருப்பிலிட்டுப் பொசுக்கப்படுவதை விட்டும் தப்பமுடியும். அடுத்து மக்தப் என்ற பள்ளிக் கூடங்களில் படிக்க வரும் பாலகர்களுக்கு அலிஃப், பே, த்தே – கற்றுக் கொடுக்க ஆரம்பிக்கும்போதே அவற்றின் பொருள் விளங்கி கற்றுக்கொள்ளும் வகையில் கற்றுக் கொடுக்க வேண்டும்.

அன்று ஸிம்து ஷிப்பான், அஹ்காமுஷ்ஷாபியிய்யா போன்ற ஷிர்க், பித்அத் நூல்களை அரபு தமிழில் வடித்து பிழைப்பு நடத்திய புரோகிதர்களுக்கு அல்குர்ஆன் விளக்கத்தையும் அரபு தமிழில் தந்திருக்க முடியும். ஆனால் சுயநல எண்ணத்துடன் அவ்வாறு பொருள் அறிந்து பிள்ளைகள் கற்றுக் கொள்வதைத் தடுத்து வெறும். அரபு உச்சரிப்பை மட்டும் உச்சரிக்கக் கற்றுக் கொடுத்தீர்கள். உங்களின் சதிகள் அம்பலமாகிவிட்ட இப்போதாவது பச்சிளம், பாலகர்களின் உள்ளங்களில் அல்குர்ஆனின் அற்புத கருத்துக்களை பசுமரத்தாணி போல் பதிய வையுங்கள்.

அது சாத்தியமில்லை எல்லா மக்தப் பள்ளிகளிலும் அரபி கற்ற மவ்லவிகள் குர்ஆன் கற்றுக் கொடுப்பதில்லை. அரபு மொழி கல்லாத லெப்பைமார்களும் குர்ஆன் ஓதக் கற்றுக் கொடுக்கின்றனர் என்று கூறி மக்களை ஏமாற்றத் துணியாதீர்கள். அரபு மொழி கற்றவர்களே புரோகிதர்களாகிய உங்கள் போன்றோரின் கடும் எதிர்ப்பையும் சமாளித்து அல்குர்ஆன் மொழி பெயர்ப்பை இன்று தாய்மொழி தமிழில் தந்துள்ளனர். இன்று ஏழு எட்டு தமிழ் மொழி பெயர்ப்புகள் வெளிவந்து விட்டன. அரபு மொழி கல்லாத லெப்பைமார்களும் அந்த தமிழ் மொழி பெயர்ப்பைக் கொண்டே சிறார்களுக்கு அல்குர்ஆனை பொருள் அறிந்து படிக்கக் கற்றுக் கொடுக்க முடியும்.

2:160 இறைக் கட்டளைப்படி அல்குர்ஆனை மக்களிடம் இருந்து மறைத்ததற்கு மன்னிப்புக் கேட்டு அல்குர்ஆனில், உள்ளதை உள்ளபடி சிறுவர், சிறுமியருக்கு நீங்கள் கற்றுக்கொடுக்க முற்பட்டால் மட்டுமே புரோகிதர்களாகிய உங்களது முகங்கள் நாளை மறுமையில் நெருப்பிலிட்டு பொசுக்கப்படுவதை விட்டும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

அப்படி நீங்கள் செயல்பட ஆரம்பித்து விட்டால் இன்ஷா அல்லாஹ் இன்னும் பத்து ஆண்டுகளில் இறைவனது இறுதி வேதம் அல்குர்ஆனை முழுமையாக விளங்கி தங்களின் நெஞ்சங்களில் பசுமரத்தாணிபோல் பதித்துக் கொண்ட ஒரு சீரிய சமுதாயம் உருவாகிவிடும். சமுதாயத்தைப் பீடை போல் பற்றிக் கொண்டிருக்கும் ஷிர்க், பித்அத், மூட நம்பிக்கைகள், அனாச்சாரங்கள் இவை அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் பஞ்சாய்ப் பறந்து விடும் முஸ்லிம் சமுதாயம் மீண்டும் அதன் உன்னத நிலைக்கு உயர்ந்து விடும், உலகத்தையே கட்டி ஆளும் ஆட்சி அதிகாரம் பெற்ற சமுதாயமாக மலர்ந்து விடும்.

உங்களின் அற்ப இவ்வுலக ஆதாயத்தை விட மறுமையில் உங்கள் ஆதாயத்தையும் சமுதாய நலனையும் குறிக்கோளாகக் கொண்டு நீங்கள் செயல்படுவதாக இருந்தால், எமது இந்தக் கோரிக்கையை நீங்கள் புறக்கணிக்க முடியாது. மறுமை வாழ்க்கையில் உங்களுக்கு உறுதியான நம்டபிக்கை இல்லாமல், இவ்வுலக வாழ்க்கையையே பெரிதாக மதித்து நீங்கள் செயல்பட்டால் மட்டுமே, எஜமானன் அல்லாஹ் 2:159ல் கூறுவதுபோல், அவனே தெளிவாக விளக்கியுள்ள அல்குர்ஆன் வசனங்களை மறைத்து உங்களது மூதாதையர்களின் கற்பனைக் கட்டுக்கதைகளையும் மூட நம்பிக்கைகளையும் அனாச்சாரங்களையும் கொண்டு நிரப்பப்பட்டுள்ள ஸிம்துஸிப்பான். அஹ்காமுஷ்ஷாபியிய்யா போன்ற வழிகேட்டு குப்பைக் கிதாபுகளை இளஞ்சிரார்களுக்கும் போதித்து இளமையிலேயே வழிகேட்டில் ஆக்குவீர்கள். புரோகிதர்களாகிய நீங்கள் எதைச் செய்யப் போகிறீர்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Previous post:

Next post: