உடனடித் தேவை ஒரு இஸ்லாமிய பல்கலைக் கழகம்

in 2021 ஜனவரி

புரோகித அரபி மதரஸாக்களுக்கு மாற்றாக….

உடனடித் தேவை

ஒரு இஸ்லாமிய பல்கலைக் கழகம்

முஹிப்புல்  இஸ்லாம்

மதரஸா கல்வியின் அவலட்சணம்!

இஸ்லாம் முறையாக போதிக்கப்படவில்லை. அரபு மொழியும் சரியாகப் போதிக்கப்படவில்லை. அதுதான் போகட்டும். இந்த அரபு மதரஸாக்களில் ஓதியவர்கள் புரோகித தொழில் நீங்கலாய் எந்த வேலையும், தொழிலும் செய்ய தகுதியற்றவர்களாய் மதரஸாக்களிலிருந்து வெளி வருகிறிார்கள். இப்படி எந்த கோணத்தில் அலசினாலும் சரி, ஆராய்ந்தாலும் சரி, மதரஸா கல்வியின் அவலட்சணம் அம்பலமாகிக் கொண்டேயிருக்கும்.

மாபாதகத்திற்கு மேல் மாபாதகம் :

முஸ்லிம் பொதுமக்களுக்கும் ஏன் பயின்றவருக்கே பலன்ட தராத இந்த மதரஸா கல்வி இனியும் தேவையா? மதரஸா கல்வியால் விளைந்துள்ள நன்மைகளைக் காட்டிலும் மாபாதகம் – மாபாதகத்திற்கு மேல் மாபாதகம் மிகைத்து அதிர்ச்சியின் விளிம்பிற்கே நம்மை இட்டுச் செல்லும்.

மிகக் குறைந்த பலன் : கூடுதல் தீங்குகளை விளைவிக்கும் மதுவையும், சூதாட்டத்தையும் அல்லாஹ் ஹராமாக்கியுள்ளான்.   அல்குர்ஆன் : :219

மதரஸா கல்வியால் ஏற்பட்டுள்ள மிக மிக குறைந்த நன்மைகளைக் காட்டிலும் மாபாதகங்களே விஞ்சி நிற்பதால் இம்மதரஸா கல்வி இனியும் நீடிக்கக்கூடாது. உடன் தடை செய்யப்பட வேண்டும்.

அதிரடி முடிவு :

மதரஸா கல்வியில் மாற்றம் தேவை. சீர்திருத்தம் தேவை என்று பேசட்டட்டும், எழுதப்பட்டும் வருகிறது. அதுவும் கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. இந்நிலையில், மதரஸாக்கள் முற்றாக தடை செய்யப்பட வேண்டும் என்பது அதிரடி முடிவாயிருக்கிறதே! நடைமுறைக்குச் சாத்தியம்தானா? என்று சில அறிவு ஜீவிகள் முணு முணுக்கிறார்கள். இன்னும் பல அறிவு ஜீவிகளும், மவ்லவிகளும், ஜால்ராக்களுக்கும் கடும் கண்டனக் கணைகளைத் தொடுப்பார்கள். நேரடியான தீமைகளைக் கண்டிக்கும் போதே – கடும் எதிர்ப்பு – பலத்த உத்வேகத்துடன் கிளம்புகிறது. நன்மை போல் தோற்றமளிக்கும் இந்த மதரஸா கல்வியின் மறைமுகமான தீமைகள், மாபாதகங்கள் சிந்திப்போரையும் தடுமாற வைக்கிறது. எதிர்ப்பும் கடுமையாக இருக்கும் என்பதையறிந்தே அல்லாஹ்வின் நல்லருளை ஆதரவு வைத்து இதை மக்கள் மன்றத்தில் முன் வைத்துள்ளோம்.

நடுநிலைக் கண்ணோட்டத்துடன் சிந்திப்பவர்கள், அவசரப்படாமல், நிதானித்த நிலையில், காய்தல் உவத்தலின்றி, இந்த ஆய்வில் எடுத்துக் காட்டியுள்ளவைகளை ஒரு முறைக்குப் பன்முறை ஆழ்ந்து சிந்திக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம். வல்ல அல்லாஹ். நம் அனைவருக்கும் சத்தியத்தையும் பகுத்துப் பார்க்கும் பகுப்பாய்வுத் திறனையும், சத்தியத்தை ஏற்று அசத்தியத்தை விட்டொழிக்கும் மனோ பக்குவத்தையும் தந்தருள்வானாக. ஆமின்.

தரம் தாழ்ந்த மதரஸா கல்வி :

புரோகித மதரஸா கல்வியைத் தடை செய்துவிட்டால் நடைபெற்று வரும் மதரஸாக்கள் கதியென்ன? என்ற நியாயமான கேள்வி நடுநிலையாளர்களுக்கு எழுவது இயல்பே!

அரபு கல்லூரிகள் என்ற பெத்தப் பெயர் இருந்தாலும் உலகியல் நடைமுறையில் ஆரம்ப நடுநிலைப் பள்ளிகளின் நிலையில் கூட அரபி கல்லூரிகள் இயங்கவில்லை. ஒரு நடுநிலைப் பள்ளியில் அல்லது உயர்நிலைப் பள்ளியில் ஏழாவது வரைப் படித்த உலகியல் கல்வி படித்த மாணவனோடு – ஏழாண்டுகள் ஓதி ஸனது – சான்றிதழ் (Certificate) வாங்கிய ஒரு மவ்லவியை ஒப்பிடுகையில், அரபு கல்லூரியில் ஓதியவரின் தரம் மிக மிக தாழ்ந்திருப்பதை எளிதாய் உணரலாம். இதை நம்மிலுள்ள கல்வியாளர்கள் – மதரஸாக்களுக்கு  நேரிடையாக சென்று பரீட்சித்து பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

உலகியல் கல்வி, மதரஸா கல்வி ஓர் ஒப்பீடு!

உலகியல் பள்ளி (SCHOOL) கல்லூரி (COLLEGE) கல்வியின் ஒழுங்கு நியதிகள் மதரஸா கல்வியில் இல்லை. தினசரி பள்ளியில் படித்துச் செல்லும் மாணவன் HOMEWORK மனப்பாடம் செய்தல் போன்றவைகளை வீட்டிற்கு வந்து செவ்வனே செய்து செல்கிறான். மறுநாள் பள்ளி செல்லும்போது சோதிக்கப்படுகிறான். தவறிழைத்தால் தண்டிக்கப்படுகிறான். ஒருநாள் விடுமுறையெடுப்பதற்கும் கடும் நிபந்தனை, பள்ளிக்கு தெரிவிக்காமல் எடுக்கும் விடுமுறைக்கு தண்டணை, மாதாந்திர, கால் ஆண்டு, அரையாண்டுத் தேர்வுகள் – முறையாக நடத்தப்படுகின்றன. தேர்வுகளில் மாணவன் பெற்ற மதிப்பெண் பெற்றோர் பார்வைக்கு PROGRESS REPORT வழி தெரிவிக்கப்படுகிறது.

மாணவனின் நடத்தை கண்காணிக்கப்படுகிறது. நடத்தையில் தவறிழைத்தாலும் தண்டனை, தேர்வுகளில் வென்றவரே அடுத்த வகுப்பிற்குச் செல்லமுடியும். T.C. இல்லாமல்  ஒரு பள்ளியிலிருந்து இன்னொரு பள்ளியில் சேரவே முடியாது. இது போன்ற இன்ன பிற திட்டவட்டமான வரையறைகள் உலகியல் கல்வியில் கடைபிடிக்கப்படுவது போல் மதரஸா கல்வியில் இல்லை. ஒரு மதரஸா மாணவரை எந்த நிலையில்” எந்த பாடத்தில்” எந்த அளவு தேர்ச்சி பெற்றுள்ளார்? என்பதைக் கண்டறியும் அளவுகோல் எதுவும் மதரஸா கல்வியில் இல்லை. ஏழாண்டை முடித்தவருக்கு ஸனது சான்றிதழ் வழங்குதல் என்ற நிலை.

கடும் சட்டத்திட்டத்துடன் செயல்படும் உலகியல் பள்ளி, கல்லூரி, பல்கலை படிப்புகள் அதன் பாடதிட்டங்கள் கடும் விமர்சனத்திற்குள்ளாகி நிற்கும் இந்த வேளையில் – முறையான பாடத்திட்டம், முறையான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாத – மதரஸா கல்வியின் தரம் அதல பாதாளத்திற்குச் சென்று கொண்டிருப்பதை மதரஸா நிறுவனர்கள், நிர்வாகிகள், பொருளுதவி செய்வோர்கள், ஆதரவாளர்கள், பயில்வோர், பயிற்றுவிப்போர் யாரும் இதுவரை முழுமையாக உணராதது – வேதனைக்குரியதே! ஆகவே, இம்மதரஸாக்கள் அனைத்தும் இப்போதைக்கு முதல் கட்டமாக இஸ்லாமிய பல்கலைக்கழகம் ஒன்றின் மூலம் இணைக்கப்படவேண்டும்.

இஸ்லாமிய கல்வியுடன், மனித வாழ்விற்குத் தேவையான உலகியல் கல்வி, தொழில் கல்வி, தொழில்நுட்பக் கல்வி என்று அனைத்துப் பாடப் பிரிவுகளும் இந்த கல்வித் தட்டத்திற்குட்பட்டிருக்க வேண்டும்.

நவீனமயமாக்கப்படல் :

ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைத்து தரப்பினரும் விரும்பி வந்து கற்கும் வண்ணம் இந்தக் கல்விக் கூடங்கள், அதன் பாடதிட்டங்கள், கற்பிக்கும் முறைகள் நவீன மயமாக்கப்பட வேண்டும்.

ஏழைகளுக்கு இலவசக் கல்வி :

பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு ஏழைகளுக்கு இந்த கல்வி இலவசமாய் அல்லது குறைந்த கட்டணத்தில் கிடை(படி)க்க வழிவகைகள் செய்யவேண்டும்.

மொழி பெயர்ப்புத்திறன் :

அரபு நாட்டவர்க்கிணையாக அரபு மொழியைப் பேச, எழுத, படிக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும். அரபு மொழியில் உள்ள மார்க்க நூல்களைக் கருத்துப் பிறழாமல் தமிழில் மொழியாக்கம் செய்யவும், அரபு மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யவும், ஆங்கிலத்திலிருந்து அரபு மொழிக்கு மாற்றம் செய்யவும் பயிற்றுவிக்கப்பட வேண்டும். இங்கிருந்து அரபு றாடுகளுக்கு  வேலை தேடிச் செல்வோர்க்கு இது பெரிதும் கைகொடுக்கும்.

தரமிக்க கல்வியாய் இருத்தல் :

அரபு நாடுகளிலுள்ள பல்கலைக் கழகங்களில் காணப்படும் நல்ல அம்சங்களை ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டும். அரபு நாடுகளிலுள்ள பல்கலைக் கழகங்கள் அங்கீகரிக்கும் வண்ணம் – இங்கு அளிக்கப்படும் கல்வியின் தரமும் அரபு மொழி பயிற்சியும் இருக்க வேண்டும். தொழில் செய்யவோ அல்லது வேலை தேடியோ அரபு நாடுகளுக்கு செல்வோருக்கு இது மிகவும் உபயோகமாய் இருக்கும்.

உலகிலுள்ள புகழ் வாய்ந்த பல்கலைக் கழகங்களில் உள்ள நல்ல அம்சங்களை நம் இஸ்லாமிய பல்கலைக்கழகம் தனதாக்கிக் கொண்டு உலக பல்கலைக் கழகங்கள் அனைத்தின் அங்கீகாரமும் பெற்றிருக்க வேண்டும். இதில் படித்தவர்கள் உலகின் எந்த பகுதிக்குச் சென்றாலும் வேலை வாய்ப்பு பெறவும், தொழில் செய்யவும் உகந்ததாய் இதன் கல்வி அமைப்பும், தரமும் இருக்கவேண்டும்.

தொழில் கல்வி :

ஏட்டுக் கல்வியோடு இணைந்த தொழிற்கல்வி 6ம் வகுப்பிலிருந்து மாணவரின் திறன் அறிந்து அவரின் எதிர்கால நலனைகட் கருத்தில் கொண்டு ஒரு தொழில் கல்வி கட்டாயப் பாடமாக்கப்படவேண்டும். +2 முடிக்கும்போது ஒரு மாணவர் சுயமே ஹலாலான (ஆகுமான) வழியில் பொருளீட்ட வழிவகுக்கும் வகையில் அந்த தொழிற் கல்வித் திட்டம் அமைந்திருக்கவேண்டும். கம்ப்யூட்டர், இன்டர்நெட் என்று கம்ப்யூட்டரோடு தொடர்புடைய அனைத்து பாடப் பிரிவுகள் போன்ற கட்டிடக் கலையோடு தொடர்புடைய பாடங்கள் வெல்டிங், பிட்டர், எலக்ட்ரானிக்ஸ், பிளம்பர்ஸ், தையற்சலை, அச்சுக்கூட தொழிற்சாலை ஆட்டோ மொபைலோடு தொடர்புடைய அனைத்துப் பாடப் பிரிவுகள் என்று இந்த தொழிற் கல்வியின் பரப்பு விரிந்து செல்கிறது.

மூன்று மொழியும் விருப்ப மொழி ஒன்றும் :

அரபு, ஆங்கிலம், தமிழ் – இம்மூன்று  மொழிகளுடன் உருது போன்ற இந்திய மொழிகள் அல்லது பிரஞ்சு, ஜெர்மன் போன்ற மொழிகளை விருப்பப் பாடங்களாக்க வேண்டும்.

அல்குர்ஆன் மூலம் அரபு மொழி கற்றல் :

புரோகிதத்தைப் பூண்டோடு ஒழிக்கும் – இஸ்லாமிய கல்வி மலர வேண்டும். அல்குர்ஆனைக் கொண்டே அரபு மொழியைக் கற்கும், கற்பிக்க ஏதுவான ஒரு பாடதிட்டம் தயாரிக்கப்பட வேண்டும். அல்குர்ஆனின் பொருள் புரிந்திடவும் அரபு மொழியில் தேர்ச்சி பெறவும் இத்திட்டம் பெரிதும் உதவும்.

அல்குர்ஆனுக்கு விரிவுரை :

அல்குர்ஆனுக்கு அல்குர்ஆனிலிருந்தே அதிசய உரை காணுதல், அல்குர்ஆனுக்கு ஸஹீஹான வழி விரிவுரை செய்தல், நவீன கால சவால்களுக்கு அல்குர்ஆன், ஸஹீஹான ஹதீதுகள் வழி தீர்வைத் தருதல்.

ஸஹீஹான ஹதீஃதுகளை அறிவிப்பாளர் வரிசையுடன் அறிந்து கொள்ளுதல் :

நபி(ஸல்) அவர்கள் வாழ்வியல் வழிகாட்டல் – அதன் தொகுப்பு அல்ஹதீது – நம்பத்தகுந்த ஆதாரத்திற்கு ஏற்கத்தக்க ஸஹீஹான ஹதீதுகளை – அவற்றின் அறிவிப்பாளர் வரிசையுடன் அறிந்து கொள்ளுதல்.

லயீஃபான (பலவீனமான) மவ்ழூவானா (இட்டுக்கட்டப்பட்ட) ஹதீதுகளை விட்டொழிதல் :

பலவீன (லயீஃப்)மான, இட்டுக்கட்டப்பட்ட (மவ்ழூல்) புனைந்துரைக்கப்பட்ட ஹதீதுகள் இனம் பிரித்தறிதல் இதில் இடம்பெறும் ஹதீதுகள் அனைத்தும் ஆதாரத்திற்கு ஏற்கத்தக்கதல்ல என்று தள்ளுபடி செய்து விடுதல் அல்ஹதீதுடன் தொடர்புடைய அறிவிப்பாளர் விமர்சனக் கலை, ஒரு தலைப்பில் வரும் ஸஹிஹான ஹதீதுகளை இணைத்து முரண்பாடின்றி பொருளறியும் கலை என்று இது விரிந்து செல்லும்.

இஸ்ரவேலர்களின் கட்டுக் கதைகளை இனங்கண்டு ஒதுக்கி விடுதல் :

அல்குர்ஆன் விரிவுரையில் ஊடுருவழியுள்ள இஸ்ரவேலர்களின் (இஸ்ராயிலியத்) கட்டுக் கதைகளை இனம் கண்டு – அவைகளை முற்றாக நீக்கி விடுதல்.

ஒழுக்கக் கேடுதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தல் :

இன்றைய உலகியல் கல்வியின் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்ட ஒழுக்கக் கேடுகளை ஹோமோ செக்ஸ், லெஸ்பியன் – திருமணமாகாத ஆண்கள், பெண்கள் – திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்ளும் பொல்லாத கலாச்சாரம் முதல் மணமானவர்கள் – மற்றவர்களை விரும்பி வேலி தாண்டி செல்லும் அனைத்து பாலியல் ஒழுக்கக் கேடுகளுக்கும் இஸ்லாமிய தெறிக்கு உட்பட்டு முற்றுப்புள்ளி  வைத்தல்.

ஒன்றுபட்ட சமுதாயமயமாக்குதல் :

முஸ்லிம்களிடம் காணப்படும் அணி, குழு, பிரிவினை மனப்பான்மைகள் அடியோடு துடைத்தெறியப்படவேண்டும். அல்குர்ஆனோடு (3:103) முஸ்லிம்கள் அனைவரும் ஐக்கியமாகி முஸ்லிம்கள் ஒன்றுபட்ட சமுதாயமாவதற்கு இந்தக் கல்வித் திட்டம் வழி வகுக்க வேண்டும்.

முக்கிற குறிக்கோள் :

“மார்க்கத்தைப் பின்னுக்குத் தள்ளிய மதரஸா கல்வி” என்ற குறுந்தலைப்பில் இடம் பெற்றுள்ளவை முற்றாக ஒழிப்பது இந்த கல்வியில் முக்கிய குறிக்கோளாக இருக்கவேண்டும். மொத்தத்தில் இம்மைக்கும், மறுமைக்கும் பயனுள்ளதால் இந்த கல்வி பரிணமிக்க வேண்டும். இம்மைஈ மறுமையில் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெற்றுத் தரத்தக்கதாய் இந்த கல்வி அமையவேண்டும். அல்லாஹ் அருள் செய்வானாக. இன்ஷா அல்லாஹ். இந்தக் கல்வித் திட்டம் செயலாக்கம் பெற செய்யப்படும். எல்லா முயற்சிகளுக்கும், அந்நஜாத் தன் முழு ஒத்துழைப்பையும் தரக் காத்திருக்கிறது.  (இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Previous post:

Next post: