படைத்தவனை மறுப்பது பகுத்தறிவு ஆகுமா?

in 2021 பிப்ரவரி

படைத்தவனை மறுப்பது பகுத்தறிவு ஆகுமா?

  1. அப்துர் ரஹ்மான்

அன்புச் சகோதரர்களே உங்கள் மீது படைத்த இறைவனின் சாந்தியும் சமாதானமும் ஏற்படட்டும். அவனே மனிதனைப் படைத்தான். (இறைநூல்: 55:3)

இறைவனே உங்களை படைத்தான். அல்லாஹ் (ஏகன் இறைவன்) தான் உங்களைப் படைத்தான், பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான், அவனே பின்னர் உங்களை மரணிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான். இறைநூல் : 30:40

மனிதர்களில் பலருக்கு இதில் சந்தேகம் :

  1. இறைவன் உண்டா? கண்ணால் பார்க்காமல் அவனை ஏற்பதா?
  2. மறு உலக வாழ்க்கை உண்டா? பகுத்தறிவு அதை ஏற்கிறதா?
  3. இந்த உலகிற்கு படைப்பாளன் உண்டா? அவன் நாம் இறந்தபின் நம்மை விசாரிப்பானா?

இறைவனை காட்டினால் நம்புகிறோம் என்பது பகுத்தறிவா?

ஒரு மனிதர் உங்களிடம் வந்து வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று தனது வீட்டில் விருந்து நடத்த இருப்பதாகவும் அதில் நீங்கள் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறார். பகுத்தறிவு ரீதியாக இதை எப்படி ஏற்பீர்கள். அவர் வீட்டிற்கு போய் அந்த விருந்துக்குரிய ஏற்பாடுகள் அனைத்தையும் கண்ணால் பார்த்த பின் தான் ஏற்பீர்களா?

அப்படி இன்று போய் நீங்கள் பார்ப்பதால் ஞாயிறு நடைபெற இருக்கும் விருந்திற்குரிய அறிகுறிகள் எதுவும் அங்கு தென்படுமா? இல்லையே!

அந்த  மனிதரின் நடத்தையில் நம்பிக்கை வைத்து பகுத்தறிவு ரீதியாக சிந்தித்து விருந்தை ஏற்றுக்கொள்கிறீர்கள். அவர் குறிப்பிட்ட தேரியில் அவர் வீடு சென்று பார்க்கும்போது, விருந்துக்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் கண்ணால் பார்த்து மகிழ்ச்சியுடன் உண்டு அனுபவிக்கிறீர்கள். இது யாருக்கு பொருந்தும் என்றால் பகுத்தறிவு உள்ள மனிதருக்கு மட்டும்தானே? ஐந்தறிவு மிருகத்திற்கு பொருந்துமா? இல்லையே!

கண்ணில் பார்த்த பின் நம்புவது தான் மிருக அறிவு :

ஒரு மாட்டையோ, ஆட்டையோ அழைத்து ஏய்! மாடே அல்லது ஆடே உனக்காக ஞாயிற்றுக்கிழமை அன்று பெரியதொரு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீ அவசியம் வந்து கலந்து கொள்ளவேண்டும் என்று சொன்னால் அந்த மிருகத்திற்கு அது பகுத்தறியும் திறன் பெற்றுள்ளதா? இல்லையே! அதற்கு முன்னால் இலை தழைகளை அசைத்துக் காட்டி அழைத்தால் அது வேகமாக ஓடிவரும். அதாவது கண்ணால் கண்ட பின் வேகமாக ஓடி வரும். இது பகுத்தறிவு செயலா? பார்த்தறிவு – மிருக அறிவு செயலா? சிந்தியுங்கள்.

பார்த்த பின்தான் ஏள்பேன் என்பது பகுத்தறிவு வாதமா? பார்த்தறிவு வாதமா?

இறைவனை பார்த்துத்தான் ஏற்றுக்கொள்வேன் என்று அடம் பிடிப்பது பகுத்தறிவுவாதமேயல்ல. பார்த்தறிவு வாதம் அதாவது மிருக வாதம்! இதைப் போய் பகுத்தறிவுடன் முடிச்சுப் போடுவது அதை விட அறிவீனமாகும்.

இறைவனையும், மறுமையையும் கண்ணால் பார்த்த பின்னரே ஏற்பேன் என்பது பகுத்தறிவு வாதமே அல்ல.

விருந்துக்கு அழைத்த மனிதரைப் போல் இறைவனை ஏற்க அழைக்கும் இறைத்தூதர்களை ஏற்று அவர்களின் உபதேசங்களை பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து ஏற்பதே பகுத்தறிவாகும். விருந்துடைய குறிப்பிட்ட தேதிக்கு முன்னால் விருந்து கொடுப்பவரின் வீட்டுக்குப் போயே விருந்துடைய ஏற்பாட்டைக் கண்ணால் பார்க்க முடியவில்லையே.

இந்த நிலையில் மரணத்திற்குப் பின்னுள்ள மறு உலக வாழ்க்கையை இவ்வுலகிலிருந்து கொண்டே கண்ணால் பார்க்க முற்படுவது எவ்வளவு பெரிய மதியீனம் என்பதைச் சிந்தியுங்கள்.

எதையும் கண்ணால் கண்ட பின் ஏற்பதற்கு மனிதனுக்கு பகுத்தறிவு அவசியமில்லை. மிருகங்களுக்கு இருக்கும் ஐந்தறிவே தாராளமாகப் போதும். கண்ணால் பார்க்க முடியாததால் இறைவனை மறுப்பவர்கள் பகுத்தறிவாளர்களா? அல்லது பார்த்தறிவாளர்களா? அதாவது ஐயறிவாளர்களா? என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

படைப்பாளன் உண்டா?

கண்ணால் பார்க்க முடியாத காற்று உயிர், மின்சாரம், படைப்பாளன் இவற்றை நம்பிதான் ஆகவேண்டும். படைப்பாளன் இல்லாமல் படைப்பினங்கள் உண்டாக முடியுமா?

ஆற்றில் மிதந்து வந்த பெரிய மரக்கட்டை நாளடைவில் உருமாற்றம் அடைந்து பெரிய கப்பலாக தானாகவே ஆகியது என்று நான் சொன்னால் என்னை பைத்தியம் என்று நினைக்கும் பகுத்தறிவாளர் சொல்கிறார் அதில் தானாகவே பெரும் வெடிப்பு நடந்தது. பிரபஞ்சம் தானாகவே உண்டாகியது. அதில் பூமியும் பிற கோள்களும் தானாக உண்டாகியது. காலப்போக்கில் பூமியில் தானாக உயிரினம் உண்டாகியத அது தானாகவே பரிணாம வளர்ச்சியடைந்து மனிதனாக ஆனது என்று கூறுகிறார்.

மரக்கட்டை தானாக கப்பல் ஆனது என்று ஒரே ஒருமுறை தானாக ஆனது என்று சொன்னதற்கு என்னை பைத்தியம் போல் பார்த்த அவர் இத்தனையும் படைப்பாளன் இல்லாமல் தானாக உருவானதாக கூறுவது பகுத்தறிவு வாதமா? பைத்தியக்கார வாதமா?

படைப்பாளன் இல்லாமல் படைப்பினங்கள் தானாக உண்டானது என்பது சாதாரண அறிவுடையவரும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அப்படி ஏற்றுக் கொள்பவர்கள் அறிவுடையவர்களாக இருக்க முடியாது.

படைப்பாளன் இருந்தால் கண்டிப்பாக மனிதனின் செயல்களை விசாரிப்பான் :

படைத்த இறைவனை நம்பக்கூடியவர்கள் இந்த உலக வாழ்க்கை பரீட்சை வாழ்க்கை, அதற்கு பின் மறு உலக வாழ்வு உண்டு என்கின்றனர்.

படைத்தவனை மறுப்பவர்கள் இவ்வுலக வாழ்வு மட்டும்தான் இதற்கு பின் வாழ்வு இல்லை என்கின்றனர்.

இருவரும் தங்கள் கருத்தில் உறுதியாக உள்ளனர். இதில் யார் அறிவாளழி என்று பார்ப்போம். பொதுவாக இரண்டிற்கு வாய்ப்பு உள்ளது என்று வைத்து கொள்வோம்.

இதில் படைத்தவனை மறுப்பவர்களின் கூற்று உண்மையானால் பாதிப்பு இரு சாராருக்கும் இல்லை. இறை மறுப்பாளர்களும் தப்பி விடுவார்கள். இறைவனை ஏற்றவர்களும் தப்பி விடுவார்கள் என்பதை இறை மறுப்பாளர்களும் மறுக்கமாட்டார்கள்.

அதே சமயம் இறை மறுப்பாளர்கள் கூற்று பொய்யாக்கி இறைவனை ஏற்றவர்கள் கூற்று உண்மையானால் இறைவனை ஏற்றவர்கள் கூற்று உண்மையானால் இறைவனை ஏற்றவர்கள் தப்பிக் கொண்டார்கள். இறை மறுப்பாளர்கள் வகையாக மாட்டிக் கொண்டார்கள் என்பதையும் இறை மறுப்பாளர்கள் மறுக்க முடியாது.

இதில் யார் அறிவாளழி இரண்டு நிலையிலும் தப்பித்து கொள்பவரா? அல்லது ஒன்றில் மட்டும் தப்பித்து கொண்டு மற்ற நிலையில் மாட்டி கொள்பவரா? சிந்தியுங்கள்.

(படைத்த) அவன் மனிதனை ஒரு துளி விந்திலிருந்து படைத்தான். இப்போது அந்த மனிதன் இறைவனுக்கு எதிராக வெளிப்படையாகத் தர்க்கம் புரிபவனாகிவிட்டான். (இறைநூல் : 16:4)

அவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். அவனுடைய சிம்மாசனம் நீரின் மேல் இருந்தது. உங்களில் யார் (நற்) செயல்களில் மேலானவர் என்பதைச் சோதிக்கும் பொருட்டு (இவற்றைப் படைத்தான், இன்னும்  தூதரே! அவர்களிடம்) நிச்சயமாக நீங்கள் மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவீர்கள்” என்று நீர் கூறினார், (அதற்கு அவர்களிலுள்ள படைத்தவனை) நிராகரிப்பவர்கள், (ஏற்காமல்) இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறில்லை என்று நிச்சயமாகக் கூறுவார்கள். (இறைநூல் : 11:7)

Previous post:

Next post: