இறைவனிடம் உதவி தேடுவோம்!

in 2021 மார்ச்

பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும்

இறைவனிடம் உதவி தேடுவோம்!

S.H. அப்துல் ரஹ்மான்

அன்பு சகோதரர்களே, அஸ்ஸலாமு அலைக்கும்,

முஸ்லிம்கள் அனைவர் மீதும் இறைவன் நிதானத்தையும், பொறுமையையும், தொழுகையையும் ஏற்படுத்துவானாக.

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் (படைத்தவனிடம்) உதவி தேடுங்கள், எனினும், நிச்சய மாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (இறைநூல் : 2:45)

நம் சகோதரர்களிடம் இல்லாத ஒன்று இறைவன் தொழுகையுடன் இணைத்து வலியுறுத்திய ஒன்று தான் பொறுமை. ஆனால் நம்மிடம் அது இல்லை. அதற்கு இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்.

நம்மை கோபம் கொள்ள செய்யவேண்டும் என்ற எண்ணத்துடன் நம்மிடம் ஒரு மனிதர் வந்து தகாத வார்த்தைகள் பல கூறி நம்மை ஆத்திரம் கொள்ள செய்து ஆத்திரத்தில் அந்த மனிதரை நன்றாக அடித்துவிட்டோம் என்றால் இதில் வென்றவர் நீங்களா? அல்லது அந்த மனிதரா? இதில் அடி வாங்கியபோதும் அவர் வந்த நோக்கம் வெற்றியடைந்த அந்த மனிதர் தான் வெற்றியாளர். அவரை அடித்த நாம் அவர் வெற்றி பெற உதவிதான் செய்தோம்.

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்ற தமிழ் மொழிக்கு ஏற்ப நம்முடைய ஆத்தி ரம் நம் புத்தியை மந்தமாக ஆக்கி அவனது நோக்கம் பற்றி சிந்திக்க விடாமல் செய்து விட்டது.

(எந்நிலையிலும்) பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! நிச்சயமாக படைத்த ஏகன் அழகிய செயல்கள் செய்வோரின் கூலியை வீணாக்கி விடமாட்டான்.
இறைநூல் : 11:115

முஸ்லிம்களே குர்ஆன் பொறுமையாக இருப்பது அழகிய செயல் என்றும் அதற்கு கூலி நிச்சயம் என்றும் கூறுவதை பார்க்கவில்லையா?

எவர் (அவனிடம் பயபக்தியுடன் இருக் கிறார்களோ, இன்னும் பொறுமையையும் மேற்கொண்டிருக்கிறாரோ (அத்தகைய) நன்மை செய்வோர் கூலியை நிச்சயமாக அல்லாஹ் வீணாக்கிவிடமாட்டான் என்று கூறினார். (இறைநூல்: 12:90)

ஒருவர் நமக்கு தீமை செய்தால் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று குர்ஆன் உங்களுக்கு கற்றுதரவில்லையா? இறைதூதர் வழிகாட்டவில்லையா?

இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால் தங்கள் இறைவனின் பொருத்தத்தைத் தேடி, பொறுமையைக் கடைப்பிடிப்பார்கள், தொழுகையையும் நிலைநிறுத்துவரர்கள், நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் (நன் முறையில்) செலவு செய்வார்கள், நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக் கொள்வார்கள். இத்தகையோருக்கே மறுமையில் (சுவனபதியயன்னும் நல்ல வீடு இருக்கிறது. (இறைநூல்: 13:22)

இவர்கள் பொறுமையை மேற்கொண்டமைக்காக இருமுறை நற்கூலி அளிக்கப்படுவார்கள், மேலும், இவர்கள் நன்மையைக் கொண்டு தீமையைத் தடுத்துக் கொள்வார்கள், நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து (தானதருமங்களில்) செலவும் செய்வார்கள். (இறைநூல் : 28:54)

நன்மையும், தீமையும் சமமாகமாட்டா, நீங்கள்(தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரை போல் ஆகி விடுவார். (இறைநூல்: 41:34)

குர்ஆன் இவ்வளவு சொல்லியிருந்தும் தீமைகளை எப்படி தடுக்க வேண்டும் என்று முஸ்லிம்கள் புரிந்து கொள்ளவில்லையே!

நம்பிக்கை கொண்டவர்களே! தீயவன் எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள். (இல்லையேல்) அறியாமையினால் (குற்றமற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம். பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப்படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். (இறைநூல்: 49:6)

குர்ஆன் தீயவனின் செய்திகளை விசாரித்து வைத்துக்கொள்ள சொல்கிறது. பரப்ப சொல்லவில்லை ஆனால் முஸ்லிம்கள் தீயவனின் செய்தியை பரப்புவதில்தான் முதலில் ஈடுபடுகின்றனர் 4 பேர் முன்னால் தீயவன் சொன்னதை 4 இலட்சம் பேருக்கு பரப்புகின்றனர். இது சரியா?

பிற சமுதாயத்தின் தீயவர்களின் நிந்தனைகளை எப்படி கையாளவேண்டும் என்று இறைநூல் கூறவில்லையா? இறைமறுப்பாளர்கள் நிந்தனைகளை இறைநூல் உத்தரவுபடியும் இறைதூதர் வழிபடியும் அணுகுவோம். அதுவே சரியானது.

(இறை நம்பிக்கையாளர்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள், உங்களுக்கு முன் நெறிநூல் கொடுக்கப்பட்டோரிடமிருந்தும் இணைவைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள். ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும். (இறைநூல் : 3:186)

இறைநூல் பொறுமையாக இருக்க சொல்கிறது :

நபி(ஸல்) எவ்வாறு தன் மீது வந்த சோதனைகளை பொறுத்து கொண்டு இறைவனிடம் ஒப்படைத்தார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கஅபாவுக்கு அருகில் தொழுது கொண்டிருந்தார்கள். அபூஜஹ்லும் அவனது கூட்டாளிகளும் அங்கு குழுமியிருந்தனர். அவர்கள் தங்களுக்குள் “நம்மில் ஒருவர் இன்ன குடும்பத்தாரின் ஒட்டகங்கள் அறுக்குமிடத்திற்குச் சென்று அங்குள்ள குடலை எடுத்து வந்து முஹம் மது ஸுஜூதிற்கு சென்ற பின் அவரது முதுகில் வைக்கவேண்டும் யார் அதனை செய்வது? என்று கேட்டனர். அக்கூட்டத்திலே மிகவும் திமிர் கொண்டவனான உக்பா எழுந்து சென்று குடலை எடுத்து வந்து நபி (ஸல்) அவர்கள் ஸுஜூதிற்குச் சென்றவுடன் அவர்களது இரு புஜங்களுக்கு இடையில் முதுகின் மீது வைத்துவிட்டான். இதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னால் எதுவும் செய்யமுடியவில்லை. எனக்கு தடுக்கும் சக்தி இருந்திருக்க வேண்டுமே! அவர்கள் தங்களுக்குள் மமதையாகவும், ஏளனமாகவும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து விழுந்து சிரித்தனர். நபி(ஸல்) அவர்கள் தலையை உயர்த்த முடியாமல் ஸுஜூதிலேயே இருந்தார்கள். அங்கு வந்த ஃபாத்திமா(ரழி) அதை அகற்றியபோது தான் நபி(ஸல்) அவர்கள் தலையைத் தூக்கி னார்கள்.

பிறகு, “அல்லாஹ்வே! நீ குறைஷிகளைத் தண்டிப்பாயாக!” என்று மூன்று முறை கூறினார்கள். இது குறைஷிகளுக்கு மிகவும் பாரமாகத் தெரிந்தது. மக்காவில் செய்யப்படும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படும் என்று அவர்கள் நம்பியிருந்தார்கள். பிறகு பெயர் கூறி குறிப்பிட்டு “அல்லாஹ்வே! அபூ ஜஹ்லை தண்டிப்பாயாக! உக்பா இப்னு ரபீஆவையும், ஷைபா இப்னு ரபீ ஆவையும், வலீத் இப்னு உக்பாவையும், உமைய்யா இப்னு கலஃபையும், உக்பா இப்னு அபூ முயீதையும் நீ தண்டிப்பாயாக!” ஏழாவது ஒருவன் பெயரையும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால் எனக்கு அது நினைவில் இல்லை என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! ரசூல்(ஸல்) அவர்கள் பெயர் குறிப்பிட்ட நபர்கள் அனைவரும் கொல்லப்பட்டு பத்ரு கிணற்றில் தூக்கி எறியப்பட்டதை நான் பார்த்தேன். – புகாரி

முஸ்லிம்களே! நிந்தனை செய்யும்போது (நபி வழியில்) பொறுமையுடன் அத்தகைய இறை மறுப்பாளர்களை இறைவனிடம் ஒப்படைத்து நபிவழி பேணுங்கள். அது உங்களுக்கு மிக சிறப்பானதாக இருக்கும்.

நிச்சயமாக உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம், ஆனால் பொறுமையுடையோருக்கு (தூதரே!) நீர் நன்மாராயம் கூறுவீராக!   (இறைநூல்: 2:155)

நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும் இறைவனிடம்) உதவி தேடுங்கள், நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான். (இறைநூல் : 2:153)

Previous post:

Next post: