இயக்கம்!

in 2021 மே

இயக்கம்!

– கு. நிஜாமுதீன்

மறு பதிப்பு :

இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் உலகிலிருந்து ஒழித்துவிட பல வருடங்களுக்கு முன்பிருந்தே சர்வதேச அளவில் முயற்சிகள் அதிவேகமாக செய்யப்பட்டு வருவதை அறியாதவர்கள் இருக்க முடியாது. பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சி போன்ற புரட்சிக்கு தலைமை தாங்கும் சாதனங்கள் அனைத்தும் இஸ்லாத்திற்கு எதிர்த்திசையில் செயல்படுகின்றன. இம்முயற்சிகளை முறியடிக்க அவ்வப்போது பல இயக்கங்கள் உலக அளவில் தோன்றின.

இந்திய சுதந்திரம் அடைந்தது முதல் இங்கு முஸ்லிம்களின் வாழ்க்கை கேள்விக் குறியாக ஆக்கப்பட்டதை தொடர்ந்து முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காக இங்கும் பல இயக்கங்கள் தோன்றின. இன்றும் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த இயக்கங்களின் நோக்கங்கள் நல்லவிதமாக இருந்தாலும் இயக்கம் தவறானதாக இருப்பதால் முழு அளவு இஸ்லாமிய புரட்சி என்பது கேள்விக்குறியாகிவிட்டது.

ஒவ்வொரு இயக்கம் தோற்றுவிக்கப்படும்போதும், அது இயக்க வளர்ச்சியாகவும், இயக்க உறுப்பினர்களின் பாதுகாப்பாகவும் இருந்ததே தவிர இஸ்லாமிய வளர்ச்சியாகவும், முஸ்லிம்களின் பாதுகாப்பாகவும் அவை என்றுமே இருந்ததில்லை.

நடத்தப்படும் ஒருசிலப் போராட்டங்களாலும், அதனால் கிடைக்கும் பலன்களாலும், செய்யப்படும் ஒரு சில செயல்களாலும், அது ஏற்படுத்தும் தாக்கத்தினாலும் இயக்கச் சகோதரர்கள் கட்டுண்டு கிடக்கிறார்களே தவிர, முஸ்லிம்களில் எதிர்காலம் அவர்களின் தலைமை, ஒன்றுபட்ட சமுதாயம் இவை குறித்து அவர்கள் சிந்திக்கத் தவறிவிட்டார்கள்.

முஸ்லிம்களின் மார்க்கப் பற்று, உலகியல் இரண்டும் படுவீழ்ச்சி அடைந்து வரும் காலக்கட்டத்தில் அதை சரி செய்வதற்காக முன்னுக்கு வந்து இரவும் பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கும் பலர் கூட இயக்க ஷைத்தானிடம் சிக்கி இயக்கப்படும் பரிதாப சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு இயக்க அல்லது அமைப்புக்காரர்களும் தங்கள் இயக்கக் கோட்பாடு அல்லது அமைப்புக் கோட்பாடு பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

முஸ்லிம் சமுதாயம் என்பது ஒருசில நூறு அல்லது ஆயிரம் பேர்களை கொண்டதோ, அல்லது இயக்க உறுப்பினர்களை மட்டும் உள்ளடக்கியதோ அல்ல. இது பூமியின் இறுதி எல்லை வரை வியாப்பித் திருக்கக் கூடியதாகும்.

இந்நிலையில் அரசாங்கம் அதனால் ஏற்படும் விளைவுகளை காரணம் காட்டி தனித்தனி இயக்கங்கள் தோற்றுவிப்பது இந்த பரந்த சமுதாயத்தின் அங்கங்களை ஊனப்படுத்துவதற்கு ஒப்பாகும்.

ஒற்றுமை, ஒற்றுமை என்று மேடைகளில் முழங்கிக் கொண்டே ஒற்றுமை நாசத்திற்கு பாதை போட்டுக் கொண்டிருக்கின்றன இந்த இயக்கங்கள்.

இயக்கங்கள் ஒற்றுமையை குலைக்கவில்லை என்று எவரும் வாதித்தால் அதனு டைய போலித்தனங்களை நாம் வரிசையாக இனங்காட்டுவோம்.

உதாரணத்திற்கு ஒன்று.

1956 ஏப்ரல் 13ம் தேதி செயல்முறைக்குக் கொண்டுவரப்பட்டது. “ஜமாஅத்தே இஸ்லாமி” என்று இயக்கம் (அதாவது சுதந்திரத்திற்குப் பின் இஸ்லாமிய வளர்ச்சிக்கா கவும், முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காகவும் துவங்கப்பட்ட இயக்கம்)

40 வருடங்களுக்கு முன்பு இந்த இயக்கம் பற்றி இதனுடைய ஸ்தாபகர் பேரறிஞர் அபுல் அஃலா மவ்தூதி(ரஹ்) பேசும்போது இது தனி இயக்கமல்ல, இது நிர்வாகம்தான் என்று பேசியதை யாரும் மறுக்கமுடியாது, 40 ஆண்டுகளில் அந்த நிர்வாகம் தனி இயக் கமாக வளர்ச்சிப் பெற்று நிற்கின்றது.

அல்லாஹ் விதித்த சட்டத்திட்டங்கள்படி பிரச்சாரம், போராட்டம் இன்னும் பிற காரியங்களை செய்யவேண்டிய முஸ்லிம்களை, மனிதர்கள் வகுத்த தனிச் சட்டக் கோட்பாடுகளின் கீழ் செயல்படத் தூண்டுகிறது இயக்கம். (ஆதாரம்: ஜமாஅத்தே இஸ் லாமி அமைப்பு சட்டம் பாகம் 2, பிரிவு 6, எண் 5)

எந்த ஒரு இயக்கத்தைப் பதிவு செய்யும் போதும் அதற்கென்று தனி சட்ட திட்டம் வகுக்கப்பட்டு உறுப்பினர்கள் சேர்க்கப்பட வேண்டும். இந்த உறுப்பினர் சேர்க்கையே முஸ்லிம் சமுதாயத்தை பலவீனப்படுத்தி விடுகிறது.

இஸ்லாத்திற்காக துவங்கப்படுவதாக கூறப்படும் இயக்கங்களில் ஒரு இயக்கத்தில் உறுப்பினராக இருப்பவர் அடுத்த இயக்கத் தில் உறுப்பினராக ஆக முடியாத சூழ்நிலையும் தப்பித் தவறி இரண்டு இயக்கங்களில் உறுப்பினராக இருக்கக் கூடியவர்கள் எதிர் எதிரான இரண்டு இயக்க சட்டவிதிகளுக்கு மத்தியில் மாட்டிக்கொண்டு விழிப்பதும் நடக்காமல் இல்லை.

குர்ஆன், ஹதீத் படியே வாழவேண்டும் என்று சூளுரைத்துப் புறப்பட்டவர்கள் கூட தனித் தனி இயக்கமாக இயங்கலாம் என்றும், அதற்கு ஆதாரம் இருக்கிறது என்று வாதிப்பதும் விந்தை.

ஒரே இறைவன், ஒரே தூதர், ஒரே நெறி நூல் இதுவே தாரக மந்திரம், என்று முழங்கி வருபவர்கள் ஒரே தலைமை, ஒரே ஜமாஅத் என்ற கொள்கையை மட்டும் கிடப்பில் போட்டுவிட்டு பல குழுக்களாக உதிர்ந்து போனது ஏன்?

இறைவனுக்குக் கட்டுப்பட்டவர்களை ஒன்றிணைப்பதற்காக, ஒரே இயக்கமாக இறைவன் இஸ்லாத்தையும் அந்த இயக்கத்து உறுப்பினர்களுக்கு ஒரே பெயராக முஸ்லிம்கள் என்ற பெயரையும் சூட்டியுள்ளபோது, அதையே செயல்படுத்துமாறு நபி(ஸல்) கட்டளையிட்டிருக்கும்போது, முஸ்லிம்கள் என்ற பெயரில் இஸ்லாமிய இயக்கத்தை வளர்க்காமல், அஹ்லே ஹதீஃத், முஜாஹித், JAQH, TNTJ, YMJ,NTF, etc., ஜம்யித்து அன்சாரி, சுன்னத்தே முஹம்மதிய்யா, S.I.M. ஜமாஅத்தே இஸ்லாமி போன்ற தனித் தனிப் பெயர்களில் இயங்குவதின் காரணம் என்ன?

இப்படித் தனித்தனியாக செயல்படுவது சரியா? “கூடாது’ என்கிறார் அல்ஜன்னத் ஆசிரியர் P.J.

மொத்த உலகுக்கும் ஒரே தலைமையும், அமைப்பும் ஏற்பட வேண்டும் என்பதை நாம் மறுக்கவில்லை. ஏகத்துவ பிரச்சாரம் செய்யும் எல்லா அமைப்புகளும் ஒரே அணியில் திகழவேண்டும் என்பதை நாம் பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறோம். (மே 1993 அல்ஜன்னத் இதழ், பக்.26)

நபி(ஸல்) அமைத்துக் காட்டிய முஸ்லிம் சமுதாய அமைப்பில் ஒரே ஒரு தலைமையும், அந்த தலைமைக்கு கீழ் செயல்படும் துணை அமீர்கள் மட்டுமே இருந்தார்கள். அதே சமுதாய அமைப்பிற்காகப் பாடுபடு கிறோம் என்று சொல்பவர்களுக்குள், இன்று நூற்றுக்கணக்கான தலைமைகள்.

சரி, தனி, தனிப் பெயரில் செயல்பட என்ன ஆதாரம்?

இறைவன் முஹாஜிர்கள், அன்சாரிகள் என்றெல்லாம் கூறுகிறான். இது ஒரு ஆதாரம்.

முஹாஜிர், அன்சார் என்பதெல்லாம் பண்புப் பெயர்களாகும். மக்காவிலிருந்து சென்றவர்கள் அன்சாரி என்றப் பெயருக்குள் வரமாட்டார்கள். மதினாவிலிருந்தவர்கள் முஹாஜிர் என்ற பெயருக்குள் வரமாட்டார்கள் ஏனெனில் அவை காரணங் களை சொல்லக்கூடிய பெயர்களாகும்.

முஹம்மத் என்ற பெயருள்ள ஒருவர் அதிகமாக வாரி, வாரி வழங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அவருக்கு “கொடை வள்ளல்’ என்ற பெயர் கிடைக்கலாம். இப்படி பெயர் கிடைப்பதால் அவரது இடுகுறிப் பெயரே “கொடை வள்ளல்’ என்ற நிலையைப் பெறாது. ஏனெனில் அவருக்கு சூட்டப்பட்ட பெயர் முஹம்மத்.

அதேபோன்று, முஹாஜிர்களும், அன்சாரிகளும் முஸ்லிம்கள், அவர்களின் பண்பு மட்டுமே அங்கு வெளிப்பட்டன. அந்தப் பண்பைக் கூட இறைவன்தான் வெளிப்படுத்தினானே தவிர அவர்களாக வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.

முஹாஜிர், அன்சார் என்று பண்புப் பெயர் வந்த பிறகு கூட அவர்கள் அந்தப் பெயர்களில் பிரச்சாரமோ, நல உதவிகளோ செய்யவில்லை. மாறாக முஸ்லிம்கள் என்ற பெயரிலேயே செயல்பட்டார்கள். ஏனெனில் இறைவன் முஸ்லிம் என்றே செயல்பட சொல்கிறான்.

“அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்து தாமும் நற்செயல்கள் செய்து முஸ்லிம்களில் நானும் உள்ளவன் என்று எவன் கூறுகிறானோ அவனை விட அழகான சொல் சொல்பவன் யார்? (அல்குர்ஆன் 41:33)

நடுநிலையாக வசனங்களை அணுகுபவர்களுக்கு இந்த ஒரு வசனமே போதுமானதாகும். தனித் தனிப் பெயர்களுக்கு எதிரான தாகவும், முஸ்லிம் என்ற பெயரில் தான் செயல்பட வேண்டும் என்பதற்கும்.

வேடிக்கையான விஷயம் என்னவென்றால், தனித் தனிப் பெயரில் செயல்படுபவர்கள் கூட 41:33 வசனத்தை நாங்கள் செயல்படுத்துகிறோம் என்று கூறுவதுதான்.

“நாங்கள் தனி, தனிப் பெயரில் செயல்பட்டாலும் நாங்கள் முஸ்லிம்கள் தானே, முஸ்லிம் என்றுதானே கூறுகிறோம் என சமாளிக்கிறார்கள்.

அவர்கள் சொல்வதை அந்த வசனம் ஏற்கிறதா? நிச்சயமாக இல்லை. “முஸ்லிம்’ என்பதை “பேனர்’ படுத்தவேண்டும் என்றே அந்த வசனம் கூறுகிறது. கவனியுங்கள்.

“மன் அஹ்ஸன கவ்லன்’ அழகான வார்த்தை கூறுபவன் யார்? “மிம்மன் தஆ இலல்லாஹி’ அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்து,

“வ அமில ஸாலிஹன்’ மேலும் தாமும் நற்செயல்கள் (தொழுகை, நோன்பு முதல் தெருக்களில் கிடக்கும் கற்களை நகர்த்துவது, எந்த சகோதரனிடமும் முகமலர்ச்சியோடு பழகுவது, மனைவியோடு அன்பாக பழகுவது போன்ற தர்மங்கள், மக்கள் சேவை ஆகியவை) செய்து “வகால இன்னனி மினல் முஸ்லிமீன்’ முஸ்லிம்களில் நானும் உள்ளவன் என்று கூறுகிறானோ (அவனை விட) அல்லாஹ்வின் பக்கம் ஒருவன் மக்களை அழைக்கிறான். தஃவா செய்யும்போதே அவன் முஸ்லிம் என்று தெரிந்து விடும்.

மக்கள் சேவை உட்பட அனைத்து நற்கருமங்களையும் செய்கிறான். இந்த செயல்களிலிருந்தே அவன் முஸ்லிம் என்று தெரிந்துவிடும். இவ்வளவுத் தெளிவாக அவன் முஸ்லிம் தான் எனத் தெரிந்த பிறகு “நான் முஸ்லிம்களில் உள்ளவன்’ என்று எதற்காக அவன் கூறவேண்டும்? இறைவன் எதற்காக கூறச் சொல்கிறான். இந்த இடத்தை ஆழமாக நன்றாக சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஒருவன் தன் செயல்கள் மூலம் நான் முஸ்லிம்தான் என்று நிரூபித்து விட்ட பிறகும் நான் முஸ்லிம் என்று கூறுவதன் காரணம் முஸ்லிம் என்பதைத் தவிர வேறு பேனர் இருக்கக்கூடாது என்பதற்குத்தான்.

“இஸ்லாமிய மாநாடு’ இவண் J.A.Q.H. “இஸ்லாமிய கருத்தரங்கு’ இவண் அஹலே ஹதீஃத், இஸ்லாமிய பிரச்சார வாரம், இவண் ஜமாஅத்தே இஸ்லாமி.

இப்படி தனித் தனி பேனர் படுத்துவதற்கு எதிராக தான் அந்த வசனம் இருக்கிறது. முஸ்லிம்கள் என்று பேனர் படுத்துங்கள் என்று கூறுகிறது.

தனித் தனி இயக்கமாக இயங்குபவர்கள் அடுத்து ஒரு சிறுபிள்ளைத்தனமான வாதத்தை வைக்கிறார்கள்.

முஸ்லிம் என்ற பெயரை தவிர வேறு பெயரில் செயல்படக்கூடாது என்று “தடை இருக்கிறதா? தடை இல்லாதபோது எதற்கு விமர்சிக்க வேண்டும்? என்பதே அவர்களின் வாதமாகும்.

பெயர் எதற்காக வைக்கப்படுகிறது என்பதைக் கூட புரிந்துக் கொள்ளாதவர்கள், இயக்கப் பெயரை கெட்டியாக பிடித்துக் கொண்டிருப்பதுதான் வேதனை.

ஒருவருக்கு “முஹம்மத்’ என்று பெயர் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். “முஹம்மத்’ என்று அவரை இனங்காட்டுவதற்குதான் அந்தப் பெயரே தவிர, முஹம்மத் என்ற பெயரை ஏட்டில் வைத்துவிட்டு யூனுஸ், தாவூத், பாரூக் என்று அந்த நபரை அழைக்கலாம் என்றால் முஹம்மத் என்ற பெயர் வைத்ததன் காரணம் தான் என்ன? சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

“ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வரைப் பற்றி நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம்’. (அல்குர் ஆன் 19:7)

ஜகரிய்யா(அலை) அவர்களின் பிரார்த் தனையை ஏற்று இறைவன் ஒரு மகனை கொடுக்கும்போது “யஹ்யா’ என்ற பெயரை சூட்டியே கொடுக்கிறான். எதற்காக இறை வன் பெயர் சூட்டி அனுப்புகிறான்? “யஹ்யா’ என்ற பெயரில்தான் அவர் இனங் காட்டப்படவேண்டும் என்பதற்காகத்தான்.

யஹ்யா என்று பெயர் இருக்கும்போது அந்தப் பெயரை விட்டுவிட்டு வேறு பெயரால் அவர் தம்மை இனங்காட்டினால் இறைவன் சூட்டிய யஹ்யா என்ற பெயருக்கு அர்த்தமில்லாமல் போய்விடும்.

பெயர் எதற்கு என்பதற்குத்தான் இந்த விளக்கம் :

தனி மனிதர்களுக்குப் பெயர் சூட்டுவது போன்றுதான் முஹம்மத்(ஸல்) அவர்களின் வருகைக்குப் பின் இஸ்லாத்தில் இணைந்தவர்களுக்கு இறைவன் “முஸ்லிம்கள்’ என்று பெயர் சூட்டியுள்ளான்.

ஒட்டுமொத்தமாக ஒரு மிகப் பெரிய சமுதாயத்திற்கு இடப்பட்ட பெயர் இது. பெயர் என்பதே இனங்காட்டுவதற்காகத் தான் என்பதால் முஸ்லிம் என்ற பெயர் மட்டும்தான் இனங்காட்டப்பட வேண்டும்.

துலுக்கர்கள் என்று நமக்கு மற்றவர்கள் பெயர் சூட்டியதை நாம் அறிவோம்.

இதை மேடையில் எதிர்க்கிறார் சகோதரர் P. ஜெய்னுல் ஆப்தீன்.

“இறைவன் எங்களுக்கு முஸ்லிம் என்று பெயர் வைத்திருக்கும்போது நீ எப்படி எங்களை துலுக்கன் என்று அழைக்கலாம்? என்று கர்ஜிக்கிறார் P.J.
(ஆதாரம்: தமுமுக,கூட்டம், நாகூர் பேச்சு)

இறைவன் சூட்டிய பெயருக்கு மாற்றமாக வேறு பெயரை எதிர்க்கக் கூடியவர்கள் தாமாக வேறு வேறு பெயரை சூட்டிக் கொண்டு செயலாற்றுவது எந்த வகையில் நியாயம்?

துலுக்கர்கள், முஹம்மதியர்கள் என்று நமக்கு மாற்றுப் பெயர் சூட்டும்போது கண்டனக்கனைகள் தொடுக்கக்கூடிய நாம், இறைவன் நமக்கு முஸ்லிம்கள் என்று பெயர் சூட்டியுள்ளான் என்று தெளிவு படுத்தக்கூடிய நாம் அதே பெயரிலேயே செயல்பட முன்னுக்கு வரவேண்டாமா?

குர்ஆன், ஹதீஃத் பார்வையில் இயக்கம் என்பதே இஸ்லாம்தான். மற்றவைகளை இயக்கம் என்று குர்ஆன், ஹதீஃத் அங்கீகரிக்கவில்லை.

அருமை சகோதர, சகோதரிகளே! இஸ்லாத்தில் ஒற்றுமை என்பது கடமையாக்கப்பட்ட ஒன்று.

கூட்டுத் தொழுகை, நோன்பு, ஜகாத்தை ஒன்றாக சேகரித்து விநியோகிப்பது, மாபெரும் இஸ்லாமிய மாநாடாகிய ஹஜ், போர்க்களங்கள், இஸ்லாத்தின் இந்தக் கடமைகள் எல்லாம் ஒற்றுமையை மையமாக வைத்தே செயல்பட வேண்டும் என்பதற்காகவே விதிக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று பிரச்சாரங்கள், மக்கள் சேவைகள் எல்லாவற்றிருக்கும் ஒற்றுமை வேண்டும். தனி, தனிப்பெயர்கள், தனி, தனி சட்டதிட்டங்கள், உறுப்பினர் சேர்க்கை நிச்சயமாக ஒற்றுமையை ஏற்படுத்தப் போவதில்லை.

தனி. தனியாக ஒவ்வொரு பெயரை நாம் தேர்ந்தெடுக்கும் போதும், அங்கீகரிக் கும்போதும், அது ஒன்றுபடக்கூடிய முஸ்லிம் சமுதாயத்தின் மீது விழும் அடி என்பதை நினைவில் வையுங்கள்.

உலகளாவிய நமது இயக்கத்திற்குப் பெயர் இஸ்லாம். இஸ்லாமிய இயக்கத்தில் சேர்ந்தவர்களுக்குப் பெயர் முஸ்லிம்கள். இந்த இயக்கத்தின் (பைலா) சட்டதிட்டம், குர்ஆனும், நபிமொழிகளும் தான். எனவே எல்லா பிரிவினை இயக்கங்களையும் விட்டு ஒதுங்கி முஸ்லிம்களாக மட்டுமே வாழ சபதமேற்போம்.

Previous post:

Next post: