இஸ்லாம் நிறைவு பெற்ற பின்னரும் இடைத்தரகர்களா?

in 2021 மே

இஸ்லாம் நிறைவு பெற்ற பின்னரும் இடைத்தரகர்களா?

தொடர் -9

அபூ அப்தில்லாஹ்

மறு பதிப்பு

“ஜாஹிலிய்யா” என்ற மடமையின் அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடந்த அன்றைய அரபு மக்களை அறிவின் உச்சிக்கே அழைத்துச் சென்றார்கள் இறைவனது இறுதித்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள். அதற்காக அவர்கள் கையாண்ட முறை, முன்னோர்களையும், முன்சென்ற அறிஞர்களையும் மூடத்தனமாக நம்பி அவர்களின் அடிச்சுவற்றில் நடைபோட்ட அந்த மக்களை அதிலிருந்து திசை திருப்பி இறைவனது இறுதி நெறிநூல் அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதனது போதனைகள்படி நடைபோட வைத்ததேயாகும்.

ஆனால் கை சேதம்! அந்த அழகிய நடைமுறைகளை அதாவது அல்குர்ஆனின் அழகிய நேரடிப் போதனைகளைப் புறக்கணித்துவிட்டு, அந்த அல்குர்ஆனின் பெயரைச் சொல்லியே, தாங்கள் நம்பிக்கை வைத்துள்ள இமாம்கள், பெரியார்கள், நாதாக்கள் பெயரால் கட்டிவிடப்பட்ட கட்டுக்கதைகளைக் கண்மூடிப் பின்பற்றும் பரிதாப நிலைக்கு இன்றைய முஸ்லிம்கள் ஆளாகி இருக்கிறார்கள். அதன் காரணமாக முஸ்லிம்கள் மீண்டும் அந்த (ஜாஹிலிய்யா) மடமையின் அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறார்கள்.

இதற்கு அடிப்படைக் காரணம் இன்றைய முஸ்லிம்கள் இறைவனின் இறுதி நெறிநூலான அல்குர்ஆனின் தெள்ளத் தெளிவான, யாருடைய விளக்கமும் தேவைப்படாத அளவில் நேரடியாகக் கூறப்பட்டுள்ள 7:3 மற்றும் 33:66,67,68 இறைவாக்குகளைப் புறக்கணித்து விட்டு, முதுகுக்குப் பின்னால் போட்டுவிட்டு, அந்த இறைக்கட்டளைகளுக்கு முரணாக தங்களை ஆலிம்கள், அறிஞர்கள் என்றும் தங்களுக்கே மார்க்கத்தை எடுத்துச் சொல் லும் அதிகாரம் உண்டென்றும், தங்களைத் தாங்களே பீற்றிக் கொண்டு அபூஜஹீலைப் போல், அகம்பாவத்துடன் செயல்படும் மவ்லவிகளை தங்களின் நேர்வழி காட்டி களாக கண்மூடி ஏற்று அவர்களது கற்பனை களையும், கப்சாக்களையும் சொந்தச் சரக்கு களையும் மார்க்கமாக எடுத்து நடப்பதே யாகும்.

அந்த வரிசையில் ஆகக் கடைநிலை மவ்லவிகள், இறந்தவர்களின் சமாதிகளில் மூடச் சடங்குகள், கந்தூரி, மவ்லூது, கத்தம், ஃபாத்திஹா என்றெல்லாம் மக்களை மார்க்கத்தின் பெயரால் ஏமாற்றி வயிறு வளர்ப்பதுடன், தங்களின் வழிகேட்டுக் கொள்கைகளுக்கு-நரகிற்கு இட்டுச் செல்லும் வழிகேடுகளுக்கு எப்படி எல்லாம் இறைவனின் இறுதி நெறிநூல் அல்குர்ஆனின் நேரடி விளக்கமான வசனங்களை திரித்து வளைத்து சொந்த விளக்கம் கொடுக்கிறார்கள் என்பதை கடந்த தொடர்களில் பார்த்தோம். அடுத்த நிலையிலுள்ள மத்ஹபு மவ்லவிகள் எப்படி எல்லாம் அல்குர்ஆனின் நேரடி-தெளிவான வசனங்களைத் திரித்து வளைத்து சொந்த விளக்கம் கொடுத்து மக்களை வழிகெடுத்து நரகில் தள்ளுகிறார்கள் என்று பார்ப்போம்.

இறைவனின் இறுதி நெறிநூல் அல்குர்ஆனை தங்களின் தாய்மொழியில் படித்து சிந்தித்து விளங்குகிறவர்கள், மார்க்க விஷயத்தில் இறைவனையும், அவனது இறுதித் தூதரையும் தவிர வேறு யாரையும் சார்ந்து, இருக்கக்கூடாது. முன்சென்ற இமாம்கள், அவுலியாக்கள், பெரியார்கள், நாதாக்கள், அறிஞர்கள் என்று யாரையும் சார்ந்து இருப்பதோ, அவர்கள் குர்ஆன், ஹதீஃதை ஆராய்ந்து கூறி இருப்பது சரியாகத்தான் இருக்கும் என்ற குருட்டு நம்பிக்கையில், அவர்களின் கூற்றுக்களை அப்படியே வேதவாக்காக ஏற்று நடப்பதோ கூடாது, அது தெளிவான வழிகேடு – நரகில் கொண்டு சேர்க்கும் என்பதை விளங்க முடியும்.

முன் சென்றவர்களை மூதாதையர்களை அவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் கெட்டவர்களாக இருந்தாலும் அவர்கள் கூறி இருப்பதை அவற்றிற்குரிய குர்ஆன், ஹதீஃத் ஆதாரம் பார்க்காமல் எடுத்து நடக்கக் கூடாது என்பதை தெள்ளத் தெளிவாக நேரடியாக அல்குர்ஆனில் 2:170, 5:104, 7:28,70,71, 10:78, 11:62,87, 109, 14:10, 21:53,54, 26:74,76, 31:21, 34:47, 37:69, 43:22,23, 53:23 ஆகிய 20 இடங்களில் வலியுறுத்திக் கூறியுள்ளான் அல்லாஹ்.

இந்த இடங்களிலெல்லாம் இறைவன் பொதுவாக முன்னோர்கள் மூதாதையர்கள் என்று சொல்லி இருக்க, வழிகேட்டில் சென்று நரகில் விழுந்த முன்னோர்கள், மூதாதையர்களைத்தான் பின்பற்றக் கூடாது, நல்லடியார்களான இமாம்கள், அவுலியாக்கள், அறிஞர்கள் போன்றோரைப் பின்பற்றலாம் என்று சொந்த விளக்கம் கொடுக்கிறார்கள் இந்த மத்ஹபுகளை ஆதரிக்கும் மவ்லவிகள், இவர்கள் நம்பிக்கை வைக்கும் முன்னோர்கள் எல்லாம் சுவர்க்கத்தை அடைந்துவிட்டது போலும், இவர்களுக்குக் கனவில் காட்டப்பட்டது போலும் கதையளக்கிறார்கள்.

ஆனால் அல்குர்ஆனின் அல்பகரா 2:130 முதல் 134 மற்றும் 140,141 இறை எச்சரிக்கைகளைப் படித்து விளங்குகிறவர்கள் நல்லடியார்கள், நபிமார்கள் பற்றிக் கூறும்போதே அல்லாஹ்,

“அந்த உம்மத்(சமூகம்) சென்றுவிட்டது, அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே, நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே! அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி நீங்கள் கேட்கப்படமாட்டீர்கள்” அல்குர்ஆன் 2:134,141

என்று தெள்ளத்தெளிவாக நேரடியாகவே எச்சரித்துள்ளான். இந்த நிலையில் முன் சென்ற இமாம்கள், நாதாக்கள், அவுலி யாக்கள் எல்லாம் மத்ஹபுகளைப் பின்பற் றித்தான் நடந்தார்கள். எனவே மத்ஹபு வழியே நேர்வழியாகும் என்று போதித்து நரகிற்கு இட்டுச்செல்லும் மத்ஹபுகளை ஆதரிக்கும் மவ்லவிகள் மக்களுக்குச் சத்தி யத்தைப் போதிப்பவர்களாக இருக்க முடியுமா? எண்ணிப் பாருங்கள்! இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு நபிமார்களாக அனுப்பப்பட்ட நல்லடியார்களான மேன் மக்களே எப்படி நடந்தார்கள் என்று நம்மிடம் கேட்கப்படாது. அதாவது அல்குர்ஆனின் போதனைப்படி நபி(ஸல்) அவர்களின் நடைமுறைப்படி நடந்தாயா என்று தான் கேட்கப்படும். முன் சென்ற இமாம்கள், அவுலியாக்கள் நடந்தபடி நடந்தாயா? என்று கேட்கப்படாது என்பதை விளங்க முடியாத இவர்களா மார்க்க அறிஞர்கள்? அதுவும்,

“உங்கள் இறைவனிடமிருந்து உங்க ளுக்கு இறக்கப்பட்டதையே பின்பற்றுங்கள், அவனையன்றி (இமாம்கள், அவுலி யாக்கள், அறிஞர்கள், மவ்லவிகள், ஆலிம்கள் போன்ற வேறெவரையும்) பாதுகாவலர் (களாக்கி அவர்)களைப் பின்பற்றாதீர்கள், நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள்” அல்குர்ஆன் 7:3
இவ்வாறு தெள்ளத் தெளிவாக ஏகன் இறைவன் எச்சரித்திருந்தும், இறைவனது இந்தக் கடுமையான எச்சரிக்கையைப் புறக் கணித்து, முதுகுக்குப் பின்னால் போட்டு விட்டு, இறைக்கட்டளைக்கு முரணாக இமாம்களின் பெயரால் மத்ஹபுகளைக் கற்பனை செய்து அவற்றை மார்க்கமாகப் போதிக்கும் இந்த மவ்லவிகள் நேர்வழி நடப்பவர்களா? அல்லது மக்களை வழி கெடுத்து நரகில் தள்ளும் ஷைத்தானின் ஏஜண்டுகளா? நீங்களே சிந்தித்து முடிவெடுங்கள்.

அல்குர்ஆனின் 7:3 இறைக்கட்டளையி லிருந்து மக்களை திசை திருப்ப, அல்குர்ஆன் அரபி மொழியில் இருக்கிறது. உங்களுக்கு அரபி மொழி தெரியாது. அரபி மொழியிலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்துள்ள ஒரு மவ்லவியை நம்பித்தான், அவரைப் பாது காவலாக்கித்தான் நீங்கள் குர்ஆனை விளங்குகிறீர்கள். இது தக்லீது தானே? கண்மூடிப் பின்பற்றுவதுதானே? எனவே தக்லீது செய்யாமல் நீங்கள் மார்க்கத்தைப் பின்பற்ற முடியாது என்று ரீல் விடுவார்கள். கேட்பவர்களின் பகுத்தறிவுக்கும் இது நியாயமான வாதமாகவே புலப்படும். ஷைத்தான் இப்படி இந்த வாதத்தை நியாயமாகக் காட்டுவான். மற்றபடி நியாமில்லாத சாத்தியமில்லாத ஒரு கட்டளையைப் படைத்த இறைவன் தனது இறுதி நெறிநூலில் கூறி இருப்பானா? என்று சிந்தித்து விளங்கவிட மாட்டான். படைத்த இறைவனை விட இந்தப் புரோகித முல்லாக்கள் அறிவாளிகள் (நவூது பில்லாஹ்) என்று நம்ப வைப்பான்.

நமது நாட்டின் பிரதம மந்திரி வேறொரு நாட்டிற்குச் சென்றுள்ளார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு அந்த நாட்டு மொழி தெரியாது. எனவே அந்த நாட்டு மொழியும், ஆங்கிலமும் தெரிந்த ஒருவர் அந்த நாட்டின் பிரதம மந்திரி தனது தாய்மொழியில் கூறுவதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூறுவதைக் கேட்டு விளங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். உடனே நமது நாட்டுப் பிரதமமந்திரி அந்த மொழிபெயர்ப்பாளரை தக்லீது செய்கிறார். கண்மூடிப் பின்பற்றுகிறார் என்பார்களா? இந்த மவ்லவிகள். ஆக கூறப்படும் மொழி தெரியாமல் கூறப்படும் கருத்தை மொழி பெயர்ப்பு மூலம் அறிந்து விளங்கி, இன்று உலகளாவிய அளவில் பெரும் பெரும் காரியங்கள் நடக்கத்தான் செய்கின்றன. மொழிபெயர்பாளரைவிட மொழி பெயர்ப்பைக் கேட்டு விளங்குகிறவர் மிக நுட்பமாக விளங்கிச் செயல்படவும் முடியும். இதை நாம் சொல்லவில்லை. இறைவனின் இறுதித் தூதர் தமது விடைபெறும் ஹஜ்ஜில் மிகத் தெளிவாகக் கூறிய ஒரு மாபெரும் உண்மையாகும். இதோ அந்த அறிவுரையின் இந்த முக்கிய இறுதிப் பகுதி வருமாறு :

மனிதர்களே! அறிந்துகொள்ளுங்கள்! உங்கள் இரட்சகன் ஒருவனே! உங்கள் தந்தையும் ஒருவரே! இறையச்சத்தைத் தவிர வேறெந்த வகையிலும் ஒரு அரபியருக்கு அரபி அல்லாதவரை விடவோ, ஒரு அரபி அல்லாதவருக்கு அரபியரை விடவோ, ஒரு வெள்ளையருக்குக் கருப்பரை விடவோ, ஒரு கருப்பருக்கு வெள்ளையரை விடவோ எவ்விதச் சிறப்பும் மேன்மையும் இல்லை.

என்னைப் பற்றி நீங்கள் மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள். அப்போது நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள்? கூடியிருந்தோர் “நிச்சயமாக நீங்கள் (மக்களிடம்) எட்டச் செய்து வீட்டீர்கள். ஒப்படைத்து விட்டீர்கள், நன்மையையே நாடி வீட்டீர்கள் என்று நாங்கள் சாட்சி கூறுவோம்” என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் தங்களது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி, பின்பு மக்களை நோக்கித் திரும்பி “யா அல்லாஹ்! இதற்கு நீயே சாட்சியாய் இருப்பாயாக!” என்று மூன்று முறை கூறினார்கள். நான் கூறுபவற்றைக் கேட்டுக்கொண்டு இருப்பவர்கள் அனைவரும் என்னுடைய வார்த்தைகளை இங்கு வராத மற்றவர்களுக்கும் எட்டச் செய்யுங்கள், ஏனெனில் செய்தி எட்டச் செய்யப்படுபவர்களில் பலர் நேரடியாகக் கேட்பவர்களை விட நன்கு விளக்கம் உடையவர்களாக இருப்பார்கள்”. ஆதாரம்: முஸ்லிம், அஹ்மது இப்னு ஜரீர், இப்னு ஹிஷாம்

பொன் எழுத்துக்களால் பதிய வேண் டிய முத்தான இந்த உபதேசம், அரபியாக இருப்பதாலோ அரபி மொழி தெரிவ தாலோ எவ்விதச் சிறப்போ, உயர்வோ, விளங்கும் ஆற்றலோ இல்லவே இல்லை என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாக உணர்த்தவில்லையா? அப்படி ஆணவம் கொள்வோர் அபூ ஜஹீலின் வாரிசுகள், நபி மார்களின் வாரிசுகள் இல்லை என்பதை உணர்த்தவில்லையா? அரபி தெரிந்தவர்களை விட அரபி மொழி தெரியாதவர் தூய எண்ணத்துடன் மறுமையில் மட்டுமே கூலியை எதிர்பார்த்துச் செயல்படுகிறவர்கள், இவ்வுலகில் அற்பமான கூலியை எதிர்பார்த்துச் செயல்படும் அரபி மொழி கற்று புரோகித மவ்லவிகளை விட அதிகமாக விளங்க முடியும் என்றும் விளங்கவில்லையா?

இவை அனைத்தையும் முறையாகப் படித்துச் சிந்தித்து விளங்குகிறவர்களுக்கு, அல்குர்ஆன் அரபியிலிருந்தாலும், அதன் மொழிபெயர்ப்பைத் தனது தாய்மொழியில் படித்துச் சிந்தித்து விளங்க முற்படுகிறவன் அரபி மொழி தெரிந்த மவ்லவி புரோகிதர்களை விட மிகச் சரியாக மார்க்கத்தை விளங்க முடியும் என்பது புரிகிறதா? இல்லையா?

அது மட்டுமல்ல, இந்த மவ்லவிகளால் அவாம்கள் என்று அவமரியாதையாகக் கூறப்படும் மவ்லவி அல்லாதவர்களிடம் காணப்படும் மனத்தூய்மை-நேர்மைச் சிந்தனை இந்தப் புரோகித மவ்லவிகளிடம் ஒருபோதும் காணப்படாது. காரணம் அவாம் என்போர் உண்மையை-சத்தியத்தை அறிந்து நடக்கவேண்டும். இறைவனின் பொருத்தம் கிடைக்க வேண்டும் என்ற தணியாத ஆர்வத்துடன் முயற்சி செய்வார்கள். மார்க்கத்தை மதமாக்கி அதைக் கொண்டு பிழைப்பு நடத்தும் புரோகித மவ்லவிகள் உண்மையை-சத்தியத்தை மறைத்து மக்களை மயக்கி ஆதாயம் அடைய வேண்டும் என்ற கெட்ட நோக்கத்துடன் அல்குர்ஆனை அணுகுவார்கள். அவரவர்கள் எதற்காக முயன்றார்களோ, அதுதானே கிடைக்கும். இதை மிக அழகாக அல்குர்ஆனின் 2:159,162 இறைவாக்குகள் படம் பிடித்துக் காட்டுகின்றன. இந்த மவ்லவி புரோகிதர்களுக்கு ஈடேற்றமே இல்லை. நரக விடுதலையே இல்லை. என் றென்றும் நரகில் கிடந்து வெந்து கொண்டிருப்பார்கள் என்பதையும் இந்த புரோகிதர்கள் உணர்வு பெறமாட்டார்கள். காரணம் அவர்களின் உள்ளங்கள் அவர்களின் புரோகிதத் தொழில் காரணமாக இருண்டு கருத்துச் சுருங்கி விட்டன என்பதையும் அல்குர்ஆன் 5:13 இறைவாக்கு உணர்த்துகிறது.

எனவே மார்க்கத்தை அரபி மொழி தெரிந்தவர்கள் மட்டுமே சரியாக விளங்க முடியும். அரபி மொழி தெரியாதவர்கள் மவ்லவிகளை தக்லீது செய்தும்-கண்மூடிப் பின்பற்றும் நிலையில்தான் இருக்கமுடியும் என்ற இந்த மவ்லவி புரோகிதர்களின் வாய்ச்சவடால் வெறும் பித்தலாட்டமே அல்லாமல் வேறில்லை.

இவ்வளவு தெள்ளத் தெளிவான இறை வனது எச்சரிக்கைகளுக்குப் பிறகும், இந்தப் புரோகித மவ்லவிகள் பின்னால் செல்பவர்கள் நாளை கொடும் நரகை அடைவார்கள். அங்கு வேதனை தாங்க இயலாது. அழுது பிரலாபிப்பார்கள். கதறுவார்கள் என்பதை 33:66,67,68 இறைவாக்குகள் படம் பிடித்துக் காட்டுகின்றன. இந்த இறைவாக்குகள் இறைவனின் கட்டளைப்படி நடக்க வேண்டும். இறுதித் தூதரின் நடைமுறைப்படி நடக்கவேண்டும் என்று கூறுகின்றனவே அல்லாமல் மூன்றாவதாக எவரையும், எந்த முன்னோரையும், எந்த அவுலியாவையும், எந்த நாதாவையும், எந்த முகல்லிது, தவ்ஹீது மவ்லவியையும், எந்த அறிஞரையும் குறிப்பிடவில்லை என்பதையும் படித்துச் சிந்தித்து விளங்க வேண்டும். இந்தப் பெரியார்கள், முன்னோர்கள், மேதைகள், அறிஞர்கள், முகல்லிது, தவ்ஹீது மவ்லவிகள் யாராக இருந்தாலும் அவர்களைக் கண்மூடிப் பின்பற்றியதால் தான் நரகை அடைய வேண்டியதாயிற்று என்று கதறுவதை இந்த வசனங்கள் உணர்த்துகின்றன.

இந்த 33:66,67,68 இறைவாக்குகளை முறையாக, சரியாக படித்து விளங்குகிறவர்கள் இமாம்களையோ, அவுலியாக்களையோ, நாதாக்களையோ, பெரியார்களையோ, முகல்லிது, தவ்ஹீது மவ்லவிகளையோ தங்களின் வழிகாட்டிகளாகக் கொண்டு செயல்படுவதைக் கனவிலும் சரி காணமாட்டார்கள். சுயமாக குர்ஆன், ஹதீஃத் மொழி பெயர்ப்புகளைப் பார்த்துப் படித்துச் சிந்தித்து விளங்கி நடக்க முற்பட்டு விடுவார்கள். அவர்களே நேர்வழி நடந்து இறைவ னின் பொருத்தத்தைப் பெற்று சுவர்க்கம் நுழையும் கூட்டத்தினர், ஆயினும் அவர்கள் மிகமிகச் சொற்பமானவர்களாகவே இருப்பார்கள் என்பதை 7:3 இறைவாக்கின் பிற்பகுதியும், பெரும்பான்மைக்கு எவ்வித மதிப்பும் சிறப்பும் இல்லை, அவர்கள் நரகத்திற்குரியவர்களே என்பதை இறைவனின் இறுதி நெறிநூல் அல்குர்ஆன் 2:100, 5:59, 103,6:37,111,116, 7:16,17,18,102,131,187, 8:34, 9:8, 10:36,55,60, 11:7, 12:21,38,40,68, 103,106, 13:1, 16:75,83,101, 17:89, 21:24, 23:70, 25:44,50, 26:8,67,103,121,139,174, 190,223, 27:61,73, 28:13,57, 29:63, 30:6, 30:42, 31:25, 34:28,34,36,41, 39:29,49, 40:57,59,61,82, 41:4, 43:78, 44:39, 45:26, 49:4, 52:47 ஆகிய 66 இடங்களில் பார்க்கலாம். இவை நமது பார்வையில் பட்டவை, நமது பார்வையில் படாமல் இன்னும் எத்தனை இடங்களில் பெரும்பான்மை மக்கள் நரகில் புகுவார்கள் என்று இருக்கிறதோ? இந்த நிலையில் தங்கள் பின்னால் அவாம்கள் என்று இந்த மவ்லவி புரோகிதர்களால் இழிவாகக் கருதப்படும் ஒரு பெருங் கூட்டம் இருக்கிறது என்ற மகிழ்ச்சியில் ஒவ்வொரு பிரிவினது தலைவர்களாக இருக்கும் மவ்லவி புரோகிதர்கள் மகிழ்ச்சிக் கடலில் திளைக்கிறார்கள். அக்கூட்டத்தைக் கொண்டு இவ்வுலகில் கிடைக்கும் அழிந்துபடும் அற்ப பதவி சுகம், செல்வம், செல்வாக்கு இவற்றைப் பெரும் பேறுகளாக மூடத்தனமாக எண்ணி மகிழ்கிறார்கள்.

“பூமியில் உள்ளவர்கள் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள். இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள்”. அல்குர்ஆன் 6:116

(அதற்கு இப்லீஸ்) “நீ என்னை வழிகெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால், (ஆதமுடைய சந்ததியரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன்” என்று கூறினான்.

“பின் நிச்சயமாக நான் அவர்கள் முன்னும், அவர்கள் பின்னும், அவர்கள் வலப் பக்கத்திலும், அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (அவர்களை வழிகெடுத்துக்) கொண் டிருப்பேன், ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர்களாகக் காணமாட்டாய்” (என்றும் கூறினான்).

அதற்கு இறைவன், “நீ நிந்திக்கப்பட்டவனாகவும், விரட்டப்பட்டவனாகவும் இங்கிருந்து வெளியேறிவிடு. அவர்களில் உன்னைப் பின்பற்றுவோரையும், உங்கள் யாவரையும் கொண்டு நிச்சயமாக நரகத்தை நிரப்புவேன்” என்று கூறினான். அல்குர்ஆன் 7:16,17,18

அப்பால், அவர்கள் தம் உடன்படிக்கையை முறித்து விட்டதால் நாம் அவர்களைச் சபித்தோம், அவர்களுடைய இருதயங்களை இறுகச் செய்தோம், (இறை) வசனங்களை அதற்குரிய (சரியான) இடங்களிலிருந்து அவர்கள் மாற்றுகிறார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதனையின் (பெரும்) பகுதியை மறந்து விட்டார்கள், ஆகவே அவர்களில் சிலரைத் தவிர அவர்களில் பெரும்பாலோரின் மோசடியைப் பற்றி (நபியே!) நீர் தவறாமல் கண்டு கொண்டே இருப்பீர். எனவே நீர் அவர்களை மன்னித்துப் புறக்கணித்து விடுவீராக. மெய்யாகவே நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான். அல்குர்ஆன் 5:13

Previous post:

Next post: