திருமண அவலங்கள்… (பகுதி-2)

in 2021 மே

திருமண அவலங்கள்…

(பகுதி-2)

Y. முகமது ஹனீப், திருச்சி

வரதட்சணை வி­யத்தில் சொல்ல வேண்டுமானால், அதைக் கண்டித்து பேசக் கூடியவர்கள் பேசிப்பேசியே வாய்கள் புளித்துப் போய் சலித்துப் போய்விட்டது என்றே சொல்லவேண்டும். அந்த அளவுக்கு தெளிவாகவும், கடுமையாகவும் ரோஷம் வரும்படியும் பேசியும் நம் முஸ்லிம் சமூகத்துக்கு புத்தி வரவில்லை. நமது அரசியலமைப்பு சட்டத்திலும் வரதட்சணை கொடுமைகளுக்கான தண்டனை சட்டங்களையும் இயற்றிவிட்டார்கள். ஆனாலும் நம்மவர்கள் திருந்தவில்லை. பெண் பேசச் செல்லும்போதே நன்கு விசாரித்துக் கொண்டு நல்ல பசையுள்ள ஆட்கள் தானா? நல்லா செய்வார்களா? என்றுதான் போய் பெண் பார்க்கிறார்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சாதவர்கள் பெண் வீட்டாரிடம் இல்லாததும் பொல்லாததுமான கோரிக்கைகள் (டிமான்ட்ஸ்) வைக்கிறார்கள். அல் லாஹ்வுக்கு கொஞ்சம் அஞ்சக்ககூடியவர்கள் “நாங்கள் ஒன்றும் கேட்கமாட்டோம். நீங்கள் உங்கள் பெண்ணுக்கு போடுவதைப் போடுங்கள்”, என்று சொல்லிவிடுகிறார்கள். அல்லாஹ் குர்ஆனிலே நீங்கள் மணமுடிக்கும் பெண்களுக்கு மஹரை மணமுவந்து கொடுத்துவிடுங்கள் என்று கூறுகிறான். நபி (ஸல்) அவர்களும் மஹர் கொடுத்து மண முடிப்பதை தன் சொல் செயல் அங்கீகாரங்களில் செய்துகாட்டி இருக்கிறார்கள். இவற்றை எல்லாம் இவர்கள் வசதியாக மறந்து விட்டு குறுக்கு வழிகளைக் கையாண்டு கொண்டு இருக்கிறார்கள். 4 விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள். 1.அவளது கோத்திரம், 2.அவளது செல்வம், 3. அவளது அழகு, 4.மார்க்கக் கல்வி இதில் நீங்கள் மார்க்க அறிவுள்ள பெண்ணையே தேர்ந்தெடுங்கள் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்)

நிக்காஹ்வின் போது மணமகனுக்கு ஏகப்பட்ட அலங்காரங்களைச் செய்திருப்பார்கள். அவன் எப்போதுமே உடுத்தியிராத உயர்தர ஆடைகளை தயார் செய்து அணிய வைப்பதுடன் பூமாலை, சேரா, கைச்செண்டு என்று அசத்தியிருப்பார்கள். இவைகளெல்லாம் முற்றிலும் நபிவழிக்கு மாற்றமான செயல்கள் என்று யாரும் கூறமாட்டார்கள். மாப்பிள்ளையின் முகமே இன்னார் என்று தெரியாத அளவுக்கு சேரா போட்டிருப்பார்கள். ஒரு குருட்டு முகலாய இளவரசரின் திருமணத்தில் செய்த அலங்கோலங்களைக் காப்பியடித்து இன்றும் இதுபோல் செய்துகொண்டு இருக்கிறார்கள். இதுபோன்று கோலத்தில் மாப்பிள்ளை இருக்கும் நிலையில் இமாமானவர் குத்பா பிரசங்கம் செய்வார்.

நபிகளாரின் காலத்தில் திருமண குத்பா, ஜும்மா குத்பாக்களில் மக்களுக்கு மார்க்கத்தை கொண்டுபோய் சேர்த்தார்கள். ஆனால் இந்த இமாம்களோ மக்களுக்கு தெரியாத அரபி மொழியில் வெறும் சடங்காகவே இதை ராகம் போட்டு குத்பா பிரசங்கம் செய்வார்கள். பாங்கு இகாமத் தொழுகை போன்றவைகள் கட்டாயம் அரபி மொழியில் இருக்க வேண்டுமேயன்றி இதுபோன்ற பிரசங்கங்கள் அவரவர் புரிந்து கொள்ளும் தாய் மொழியிலேயே இருக்கவேண்டும். நபிகளார் காட்டித் தந்த வழியல்லாமல் வேறு வழிகளில் நடப்பதால் மார்க்கப் பிரசங்கங்கள் (குத்பா) மக்களிடம் போய்ச் சேராமல் மார்க்கப் பின்னடைவு ஏற்பட இதுவே காரணமாகிறது. இதற்கு முக்கிய காரணகர்த்தாவாக இருப்பவர்கள் மக்தப் மதரஸாக்களும் அதில் கற்று வரும் ஆலிம்களும்தான் என்றால் மிகை யாகாது.

இன்னும் இவர்கள் செய்யும் கூத்தைப் பாருங்கள்: குத்பா முடிந்தபின் இவர்கள் மாப்பிள்ளைக்கு கலிமாவைச் சொல்லிக் கொடுப்பார்கள் புதிதாக இஸ்லாத்தில் சேர்ப்பது போல, இந்த பித்அத்தெல்லாம் இஸ்லாத்தின் முக்கிய அங்கம் போலவும் இல்லையயன்றால் நிக்காஹ் கூடாது, செல்லாது என்பது போலவும் பாவனையை இவர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். அது மட்டுமா? மாற்று மதத்தில் பெண்களை தாரை வார்ப்பது போல் அந்த கடவுளுக்கு இவளை தாரை வார்த்தேன். இந்த கடவுளுக்கு இவளைத் தாரை வார்த்தேன் முடிவில் எனக்கே தாரை வார்த்தேன் பிறகு உனக்கு தாரை வார்த்துக் கொடுக்கிறேன் என்று அந்தப் புரோகிதர்களும் மக்களுக்கு விளங்காத ஒரு மொழியில் சொல்வார்கள்.

அதுபோல் இந்தப் புரோகிதர்களும் மாப்பிள்ளைக்கு இப்படி சொல்லிக் கொடுப்பார்கள். இன்னாரின் மகள் இன்னாரை இவ்வளவு மஹர் கொடுத்து இந்த சாட்சிகள் முன்னிலையில் நான் எனது வாழ்க்கைத் துணையாக மனைவியை ஏற்றுக் கொள்கிறேன் என்று ஹஜ்ரத் முதலில் சொல்வார். பிறகு மாப்பிள்ளை அதை கிளிப்பிள்ளையாக மொழிவார். இந்த கூத்தையயல்லாம் எங்கு போய் சொல்வது? பேசத் தெரியாத அரசியல் தலைவர்களுக்கு எழுதிக் கொடுத்து பேசச்சொல்வது போல் எழுதிக் கொடுத்தாவது உறுதிமொழியை படிக்கச் செய்யலாம் என்ற அறிவு கூட இவர்களுக்கு இருக்காது. முதலில் வக்கீலாக இருப்பவர் தான் மாப்பிள்ளையிடம் கேட்கவேண்டும். எனது மகளை இவ்வளவு மஹர் கொடுத்து மனைவியாக ஏற்றுக் கொள்கிறீர்களா? என்று அதற்கவர் தங்களின் மகளை தாங்கள் நிச்சயித்த மஹர் கொடுத்து எனது வாழ்க்கைத் துணைவியாக ஏற்கிறேன் என்று கூறினாலே போதுமானது. கலிமாவெல்லாம் சொல்லவேண்டும் என்ற அவசியமில்லை.

அதற்கடுத்த பித்அத்தைப் பாருங்கள். எல்லாம் இந்த உண்மையை மறைக்கும் ஹஜ்ரத்மார்களின் (இமாம்களின்) வேலைகள் தான். இறைத்தூதர் அவர்கள் ஓதியிராத ஒரு நீண்ட துஆவை இவர்கள் ஓதுவார்கள். அதாவது “அல்லாஹும்ம அல்லிஃப் பய்ன கமா அல்லஃத்த பய்ன ஆதம வ ஹவ்வா அலா நபிய்யினாஅஸஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் என்று துவங்கி ஓதும் அந்த துவா தான். இதில் யூசுஃப் நபியையும் ஜுலைஹாவையும் இணைத்து “அவர்கள் வாழ்ந்தது போல் இந்த மணமக்களும் வாழ்க!” என்று ஹஜரத் கூற எல்லோரும் ஒருமித்து “ஆமீன்’ என்று கூறுவார்கள். யூசுஃபும் ஜூலைஹாவும் இணைந்து வாழ்ந்ததாக குர்ஆன், ஹதீஃதில் ஆதாரங்கள் இல்லை. சரித்திரச் சான்றுகளும் இல்லை. தோரா, பைபிள் போன்ற முற்கால வேதங்களிலும் இல்லை. பல லட்சங்களை பரிசாக அறிவிப்பு செய்தாலும் இவர்களால் ஆதாரம் காட்ட முடியாது என்று தான் கூறவேண்டும். இப்படியிருக்க இதை பக்திப் பரவசத்துடன் ஓதுவதும் ஆமீன் கூறுவதும் சிந்தனையற்ற செயல் என்பதோடு அறிவுப்பூர்வமானவர் களின் கேலிக்கும் இறைவனிடம் கோபத் தையும் உண்டுபண்ணும் அவலச் செயல்கள் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.

திருமணத்தின்போது நபி(ஸல்) அவர்கள் ஓதிய ஒரு துஆவையே நாமும் ஓதி மணமக்களை வாழ்த்த வேண்டும். அதாவது “பாரகல்லாஹு லக வபாரக்க அலைக்க வஜமஅ பய்னகுமா ஃபீஹைர்’ இவர்களுக்கு அல்லாஹ் அபிவிருத்தியை ஏற்படுத்துவானாக. இவர்களை (அகத்திலும், புறத்திலும் நன்மையை நல்கி) நற்காரியங்களில் ஒன்றிணைப்பானாக! என்று துவாவை கட்டாயம் ஓதவேண்டும். இதுவே நபிவழி. இறைவனின் பொருத்தம் கிடைக்கும் வழி.

இதெல்லாமல் மணமகளுக்கு மாலை போடுவதும், தாலி கட்டுகிறேன் என்ற பெயரில் கருகமணி கொண்டு தாலி கட்டுவதும், தாலி கட்டி முடிந்தபின் அல்லது அதற்கு முன் நலுங்கு என்ற பெயரில் நலுங்கு சுற்றுவதும், திருமணத்துக்கு பின் திருஷ்டி கழிப்பதற்காக மஞ்சத் தண்ணீரில் தலையைச் சுற்றி திருஷ்டி கழிப்பதும், மணமக்களுக்கு வாயில் சர்க்கரை போடும் நிகழ்ச்சி நடத்துவதும், அதற்காக போட்டோவுக்கு முக்காடின்றி போஸ்கள் தருவதும், மடி நிரப்புகிறேன் என்ற பெயரில் நடக்கும் சடங்குகளும் சம்பிரதாயங்களும், திருமணத்தன்று கேக்குகள் வெட்டி கொண்டாடுதல் போன்றவைகளும் முற்றிலும் மார்க்கத்துக்கு முரணானவை. பின்வரும் சமூகத்தை வழிதவறச் செய்ததற்கு தாங்கள் காரணிகளாய் இருப்பதோடு அல்லாஹ்விடம் பெரும் பாவிகளாய் நாளை மஃஷரில் கேள்வி கணக்கு கேட்கும் நாளில் கைசேதம் அடைந்தவர்களாக ஆவதுதான் அவலத்திலும் அவலமாகும்.

Previous post:

Next post: