மனிதனின் மறுபக்கம்!

in 2021 மே

குர்ஆனின் நற்போதனைகள்…

மனிதனின் மறுபக்கம்!

Dr. A. முஹம்மது அலி,

மறுபதிப்பு :

1. நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான். (அல்குர்ஆன் 96:6)

2. மனிதன் அதிகமாகத் தர்க்கம் செய்பவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 18:54)

3. நான் இறந்தால் மீண்டும் உயிருள்ளவனாக எழுப்பப்படுவேனா? எனக் கேட்கிறான். (அல்குர்ஆன் 19:66)

4. யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நாம் நிச்சயமாக முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்கவேண்டாமா? (அல்குர்ஆன் 19:67)

5. நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கிறான். (அல்குர்ஆன் 21:37,70:19)

6. மனிதன் நன்மைக்காக பிரார்த்தனை செய்வது போலவே (சில சமயம்) தீமைக்காகவும் பிரார்த்திக்கிறான், ஏனெனில் மனிதன் மிகவும் அவசரக்காரனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 17:11,21:37)

7. மனிதன் பலவீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான். (அல்குர்ஆன் 4:28)

8. நிச்சயமாக நாம் மனிதனைக் கஷ்டத்தில் (உழல்பவனாகப்) படைத்துள்ளோம். (அல்குர்ஆன் 90:4)

9. மனிதனே! நிச்சயமாக நீ உன் இறைவனிடம் சேரும் வரை முனைந்து உழைப்ப வனாக இருக்கிறாய். (அல்குர்ஆன் 84:6)

10. மனிதனுக்கு அவன் விரும்பியதெல்லாம் கிடைத்துவிடுமா? (அல்குர்ஆன் 53:24)

11. மனிதனுக்கு அவன் முயல்வதல்லாமல் வேறில்லை. (அல்குர்ஆன் 53:39,79:35)

12. மனிதன் உலோபி(கஞ்சனாக)யாக இருக்கிறான். (அல்குர்ஆன் 17:100)

13. நிச்சயமாக மனிதன் நஷ்டத்திலிருக்கிறான். (அல்குர்ஆன் 103:2)

14. ஒவ்வொரு மனிதனுடைய செயற்குறிப் பையும் அவனது கழுத்தில் நாம் மாட்டி யிருக்கிறோம். (அல்குர்ஆன் 17:13)

குறிப்பு : மனிதன் நன்றி கொன்றவன், நிராகரிப்பவன், நிராசைப்படுபவன், அநீதம் செய்பவன், அறிவிலி, கர்வம் கொண்டவன், பெருமையடிப்பவன், வரம்பு மீறுபவன், தர்க்கம் செய்பவன், அவசரக்காரன், பலவீனன், கஷ்டப்படுபவன், உலோபி, கஞ்சன் என்றெல்லாம் அல்லாஹ் தனது திருமறையில் மனிதனின் மறுபக்கத்தைப் படம் பிடித்துக் காட்டியுள்ளான். இக்குணங்களைக் கொண்டவன் நஷ்டவாளியாகத்தானே இருக்க முடியும். இக்குணங்களுக்குக் காரணகர்த்தா அல்லாஹ் எனக் கூறமுடியாது. ஏனெனில் இத்தீயக் குணங்களுடையவனைத் தனது பிரதிநிதியாக (கலீஃபாவாக) அவன் அனுப்பமாட்டான்.

அல்லாஹ்வின் படைப்பினங்களில் இப்பண்புகளை ஆரம்பித்து வைத்தவன் நமது பகிரங்க பகைவன் ஷைத்தான் ஆவான். அல்லாஹ்வின் பிரதிநிதியாக மனிதன் படைக்கப்பட்டதால் பொறாமை கொண்டு, அல்லாஹ்வின் ஆணையை மறுத்து, வரம்பு மீறி நிராகரித்து, அல்லாஹ்வின் சாபத்திற்குட்பட்ட ஷைத்தான், இம்மனித இனத்தையே வழிகெடுப்பேன் என சபதமேற்றான். அவனது சபதத்தையும் ஏற்று, அவனுக்கென ஒருசில சலுகைகளையும் அல்லாஹ் வழங்கினான். அச்சலுகை களைப் பயன்படுத்தி மனிதனிடம் தனது குணநலன்களை ஷைத்தான் பிறப்பு முதல் உருவாக்குகிறான். நற்பண்புகள் அல்லாஹ்வால் தனது பிரதிநிதிக்கு அருளப்பட்ட அருட்கொடைகளாகும். ஷைத்தானால் உருவாக்கப்படும் நச்சுப் பண்புகள் “மனிதன் அல்லாஹ்வின் பிரதிநிதியாக இருக்க லாயக்கற்றவன்” என நிரூபிக்க ஷைத்தான் எடுக்கும் முயற்சிகளாகும். இப்புவியில் பிறவி எடுக்கும் ஒவ்வொரு மனிதனும் இவ்விரு பெரும் சக்திகளுக்கிடையில் வாழ வேண்டிய நிலையுள்ளது என்பதை யாவரும் அறிதல் வேண்டும்.

அல்லாஹ்வின் அருள் பெற்ற நல்லடி யார்களாக வாழ ஷைத்தானிய பண்புகளை அடையாளம் கண்டு விலக்கி வாழ்வோமாக! அதற்கான சக்தியையும், வாய்ப்பையும், வல்லமையையும் எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு தந்தருள்வானாக! ஆமீன்.

Previous post:

Next post: