மறைந்த திரை, இதயத்தில் உறை, காது செவிடு

in 2021 மே

படியுங்கள்! சிந்தியுங்கள்! வாழ்வியலாக்குங்கள் குர்ஆனை!

ஷரஹ் அலி, உடன்குடி

மறைந்த திரை, இதயத்தில் உறை, காது செவிடு :

நீர் குர்ஆனை ஓதும்போது உமக்கும் மறுமையை நம்பாதவர்களுக்கும் இடையில் நாம் ஒரு திரையைப் போட்டு விடுகிறோம்.

எதையும் அவர்கள் புரிந்து கொள்ளாதவாறு அவர்களின் இதயங்கள் மீது உறை போட்டு விடுவோம். மேலும், அவர்கள் காதுகளை செவிடாக்கி விடுகிறோம். நீர் குர்ஆனில் உம் அதிபதியின் கட்டளைகளை எடுத்துரைக்கும்போது அவர்கள் வெறுப்போடு முகத்தை திருப்பி சென்று விடுகின்றார்கள். (இறைநூல்: 17:45,46)

இறைவன் ஒரே இறைவன்தான். மறுமை நாள் மீது நம்பிக்கை கொள்ளாத வர்களின் உள்ளங்கள் இந்த உண்மையை மறுக்கின்றன. அவர்கள் கர்வம் கொண்டவர் ஆவர். (இறைநூல்: 16:22)

அதன் அடையாளங்கள் பல வந்துவிட்டன:

யுக முடிவு நாள் திடீரெனத் தம்மிடம் வருவதைத் தவிர வேறு எதையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? அதன் அடையாளங்கள் பல இப்போதே வந்துவிட்டன.
அ(ந்த நாளான)து அவர்களிடம் வந்துவிட்டால், அவர்களுக்கான அறிவு ரையயல்லாம் அவர்களுக்கு எங்ஙனம் பயனளிக்கப் போகின்றன? (இறைநூல்: 47:18)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொன்னார்கள் :

இன்றிரவு கஅபாவின் அருகே நான் கனவில் ஒரு நிகழ்ச்சியைக் கண்டேன்.

மனிதர்களின் மாநிறத்திலேயே மிக அழகான மாநிறமான மனிதர் ஒருவர் அங்கிருந்தார். அவரின் தலைமுடி அவரின் தோள்களுக்கிடையே தொங்கிக் கொண்டிருந்தது.

படிய வாரப்பட்ட தொங்கலான முடி யுடையவராக அவர் இருந்தார். அவரின் தலையிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது.

இரண்டு மனிதர்களின் தோள்களின் மீது தம் இரண்டு கைகளையும் அவர் வைத்துக்கொண்டு கஅபாவைச் சுற்றிக் கொண்டிருந்தார்.

நான், இவர் யார்? என்று கேட்டேன். மர்யமின் மகன் ஈஸா அவர்கள் என்று பதிலளித்தார்கள்.

பிறகு, அவருக்குப் பின்னால் நிறைய சுருள் முடி கொண்ட வலக்கண் குருடான ஒரு மனிதனைக் கண்டேன்.

அவன் நான் பார்த்தவர்களில் இப்னு கத்தனுக்கு அதிக ஒப்பானவனாக இருந்தான். அவன் இறையில்லம் கஅபாவை வலம் வந்து கொண்டிருந்த ஒரு மனிதரின் தோள்களின் மீது தன் இரண்டு கைகளையும் வைத்திருந்தான்.

நான், யார் இது? என்று கேட்டேன். இவன் தஜ்ஜால் என்னும் மஸீஹ் என்று பதிலளித்தார்கள். நபிமொழி ஆய்வாளர்: புகாரி: தமிழாக்கம், நபிமொழி எண்.3439

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர் கள் நபியாக அனுப்பப்பட்டதே யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றுதான். ஏனெனில், அவர்கள்தான் இறைதூதர்களில் இறுதியானவர். (நபிமொழி சுருக்கம்)

நபிமொழி ஆய்வாளர்: புகாரி தமிழாக்கம். நபிமொழி எண். 3532, 4896, முஸ்லிம் தமிழாக்கம், நபிமொழி எண். 4696, 4697, ஜாமிஉத் திர்மிதி, தமிழாக்கம், நபிமொழி எண். 2766.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தம்முடைய நடுவிரலையும் பெருவிரலுக்கு அடுத்த (சுட்டு) விரலையும் இணைத்துக் காட்டி, நானும் யுகமுடிவு நாளும் இவ்விரல்களைப் போன்று அனுப்பப்பட்டு உள்ளோம் என்று சொன்னார்கள்.

நபிமொழி ஆய்வாளர்: முஸ்லிம் தமிழாக்கம், நபிமொழி எண். 5263, புகாரி தமிழாக்கம், நபிமொழி எண். 6398, 6399.

அந்நாள் வந்துவிட்டால்?

அந்நாளில்தான் மனிதன் உணர்வான். ஆனால் அந்த அறிவுரை அவனுக்கு எங்ஙனம் பயனளிக்கும்? (அல்குர்ஆன் 89:23)

நிச்சயமாக அவர்களுடைய (வெளிக்) கண்கள் குருடாகி விடவில்லை. எனினும், நெஞ்சங்களில் இருக்கும் (அவர்களுடைய அகக்) கண்கள் தாம் குருடாகி விட்டன. (அல்குர்ஆன் 22:46)

Previous post:

Next post: