இஸ்லாம் நிறைவு பெற்ற பின்னரும் இடைத்தரகர்களா?

in 2021 ஜுன்

இஸ்லாம் நிறைவு பெற்ற பின்னரும் இடைத்தரகர்களா?

தொடர் – 10

அபூ அப்தில்லாஹ்

மறு பதிப்பு

இந்த தலைப்பில் சென்ற தொடர்களில் மார்க்கத்தை மதமாக்கி தொண்டைத் தொழிலாக்கி அது கொண்டு பிழைப்பு நடத்தும் வயிறு வளர்க்கும் புரோகிதர்கள் எத்தனை வகையினர்? இப்படி அவர்களிலும் பல பிரிவினர் ஏற்படக் காரணம் என்ன? என்பதையெல்லாம் விரிவாகப் பார்த்தோம்.

அவர்களில் ஆக அடிமட்டப் புரோகிதர்களான இறந்தவர்களுக்கு சமாதி கட்டி அவை கொண்டு மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் தர்கா முகல்லிது புரோகிதர்கள் எப்படியெல்லாம் சில குர்ஆன் வசனங்களை, ஹதீஃத்களை திரித்துக் கூறி சத்தியத்தை – நேர்வழியை மறைத்து மக்களை மயக்கி வழிகெடுத்து நரகில் தள்ளுகின்றனர் என்று விரிவாகப் பார்த்தோம்.

அடுத்த நிலையிலுள்ள மத்ஹபு முகல்லிது புரோகிதர்கள் தங்களின் மத்ஹபு வழிகேடுகளையும், மற்றும் வழிகேட்டுச் செயல்பாடுகளையும் நியாயப்படுத்த எப்படியெல்லாம் குர்ஆன் வசனங்களையும், ஆதாரப்பூர்வமான ஹதீஃத்களையும் திரித்து வளைத்து மறைத்து தங்களின் ஆதரவாளர்களை மயக்கி, அவர்களை வழிகேட்டிலாக்கி நரகத்தில் கொண்டு தள்ளுகின்றனர் என்று தொடர் 9-ல் பார்த்தோம். அவர்கள் இன்னும் பல குர்ஆன் வசனங்களை எப்படியெல்லாம் திரித்து வளைத்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை இத்தொடரில் காண்போம்.

அல்குர்ஆன் பனீ இஸ்ராயீல் 17:71 வசனம்

(நபியே!) நாம் எல்லா மக்களையும் அவரவர்களுடைய தலைவர்களுடன் (இமாம்) அழைக்கும் நாளை (நீர் நினைவூட்டுவீராக, அந்நாளில்) எவருடைய செயல் குறிப்பு ஏடு அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுகிறோ, அத்தகை நற்பேறுடையவர்கள், தம் ஏடுகளை (நிம்மதியுடன்) படிப்பார்கள். இன்னும், அவர்கள் அணுவளவும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள் என்று கூறுகிறது.

இந்த வசனத்தில் இமாம் என்ற அரபி பதம் இடம் பெற்றுள்ளது. இவர்கள் 4 மத்ஹபுகளை நான்கு இமாம்களின் பெயரால் கற்பனை செய்துள்ளதால், அந்த மத்ஹபு இமாம்களைத்தான் இந்த வசனம் குறிக்கிறது என்று விளக்கம் கூறி மக்களை மயக்கி வழிகெடுப்பார்கள். அந்த இமாம்களின் காலம் ஹிஜ்ரி 80லிருந்து 241 வரை. அதாவது குர்ஆன் வசனங்கள் இறங்கிக் கொண்டிருந்த கி.பி. 610லிருந்து 632 காலகட்டத்திலிருந்து சுமார் 75 ஆண்டுகளுக்குப் பின்னர் வாழ்ந்து மறைந்த அந்த மரியாதைக்குரிய இமாம்களை இந்த 17:71 வசனம் குறிப்பிடுகிறது என்று கதையளப்பார்கள். அப்படியயன்றால் அந்த இமாம்கள் பிறப்பதற்கு முன்னர் ஆதம்(அலை) அவர்கள் காலத்திலிருந்து இந்த இமாம்கள் காலம் வரை உலகில் வாழ்ந்து மடிந்த மக்கள் யார் பின்னால் அணிவகுப்பார்கள்? கொஞ்சமாவது சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

எந்தெந்த சமூகத்திற்கு யார் யாரை அல்லாஹ் – நபியாக – இமாமாக அனுப்பினானோ அந்தந்த நபிமார்களுடன் அழைப்பதையே இந்த வசனம் கூறுகிறது. மத்ஹபு ஆதரவாளர்கள் தங்களின் மத்ஹபுகளை தூக்கி நிறுத்த இந்த 17:71 வசனம் அந்த மத்ஹபு இமாம்களையே குறிக்கிறது என்று கதையளப்பார்கள்.

அடுத்த அல்குர்ஆன் அந்நிஸா 4:115 வசனம்

எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு, நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம், அதுவோ சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும் என்று கூறுகிறது.

மத்ஹபுகளை ஆதரிக்கும் முகல்லிது மவ்லவிகள் இந்த வசனத்தை எப்படி திரித்து வளைத்துப் பொருள் கொண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று பாருங்கள்.

கடந்த ஆயிரம் ஆண்டுகளாக நிலைத்திருக்கும் மத்ஹபு அடிப்படையிலான அஹ்லசுன்னத் வல்ஜமாஅத்தினர்தான் நேர்வழி நடப்பவர்கள் உண்மையான முஃமின்கள். அவர்கள் செல்லும் வழியே சரியானது. அவர்கள் செல்லாத வழியில் எவன் செல்கிறானோ அவனை அல்லாஹ் அவன் செல்லும் தவறான வழியிலேயே செல்லவிட்டு நரகத்தில் நுழையச் செய்வான் என்று விளக்கமளித்து மத்ஹபுகளை விட்டு வெளியேறுகிறவர்கள் எல்லாம் வழிகேடர்கள், நரகத்திற்குரியவர்கள் என்று கூறி அப்பாவி முஸ்லிம்களை பயமுறுத்து வார்கள். சுயமாக சிந்திக்க ஆற்றலில்லாத முஸ்லிம்கள் இவர்களின் இந்த அச்சுறுத்தலுக்கு பயந்து மத்ஹபை கெட்டியாகப் பிடித்துக் கொள்வார்கள்.

ஆனால் இந்த வசனம் நேரடியாகக் கூறும் கருத்தை ஒருவன் எவ்வித சுயவிளக்கமும் இல்லாமல், நடுநிலையோடு சிந்தித்தால் மத்ஹபுகளே வழிகேடு -நரகில் கொண்டு சேர்ப்பவை என்பதை விளங்கிக் கொள்ள முடியும். இந்த 4:115 வசனத்திலுள்ள முக்கியமான பகுதியைப் பாருங்கள்.

“எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும் (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கிறானோ”.

இந்தப் பகுதி எதை உணர்த்துகிறது? நபி (ஸல்) அவர்களை விட்டு பிரிந்து முஃமின்கள் செல்லாத வழி எனும்போது அது யாரைக் குறிக்கிறது? இங்கு முஃமின்கள் என்று அல்லாஹ் கூறியிருப்பது நபி(ஸல்) அவர்களுடன் இருந்த நபிதோழர்களையே. இந்த நபிதோழர்கள் மத்ஹபுகளில் இருக்கவுமில்லை, தங்களை “அஹ்லசுன்னத் வல் ஜமாஅத்” என்று கூறிக் கொள்ளவுமில்லை. தங்களை “முஸ்லிம்கள்” என்று மட்டுமே சொல்லிக் கொண்டார்கள். அவர்கள், குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் நடைமுறையையும் மட்டுமே பின்பற்றினார்கள். ஹிஜ்ரி 400க்கு பின்னர் கற்பனை செய்யப்பட்ட எந்த “பிக்ஹு” நூலும் அன்று இருக்கவுமில்லை. இஜ்மா, கியாஸ் என்ற அடிப்படையில் அப்படிப்பட்ட பிக்ஹு நூல்களை அவர்கள் பின்பற்றி இருக்க வாய்ப்பே இல்லை.

அப்படியானால் இந்த 4:115 வசனத்தில் முஃமின்கள் செல்லாத வழி என்பது எவ்வழியைக் குறிக்கிறது? ஹிஜ்ரி 400க்குப் பிறகு கற்பனை செய்யப்பட்ட மத்ஹபுகள், தரீக்காக்கள், இஜ்மா, கியாஸ், பிக்ஹு நூல்கள் இவற்றின் போதனைகளை மார்க்கமாகக் கொண்டு செயல்படுகிறவர்கள் செல்லும் வழியையே குறிக்கிறது?

நபி(ஸல்) அவர்கள் காலத்திலேயே இஸ்லாம் மார்க்கம் நிறைவு பெற்றுவிட்டது என்று அல்குர்ஆன் 5:3 இறைவாக்கு உறுதிப்படுத்துகிறது.

அல்லாஹ்விடத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கம், நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நிறைவு செய்யப்பட்ட இஸ்லாம் மார்க்கம்தான் என்று 3:19 இறைவாக்கு உறுதி செய்கிறது. நபி(ஸல்) அவர்களது காலத்தில் நிறைவு செய்யப்பட்ட “இஸ்லாம்’ அல்லாத மார்க்கத்தை “இஸ்லாம்’ என்று கூறினாலும் விரும்பினாலும் அது அவர்களிடமிருந்து ஒப்புக்கொள்ளப்படமாட்டாது என்று 3:85 இறைவாக்கு உறுதிப்படுத்துகிறது. அப்படிப்பட்டவர்கள் நாளை மறுமையில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பர் என்றும் அதே 3:85 உறுதியாகச் சொல்லுகிறது.

இந்த நிலையில் நபி(ஸல்) அவர்கள் காலத்திலிருந்து சுமார் 400 வருடங்களுக்குப் பிறகு கற்பனை செய்யப்பட்ட மத்ஹபுகளும், இஜ்மா, கியாஸும், பிக்ஹு சட்டங்களும் இறைவனால் அங்கீகரிக்கப்படும் இஸ்லாமாக இருக்க முடியுமா? என்பதை சுய சிந்தனையுடைய ஒவ்வொரு ஆணும், பெண்ணும் சிந்தித்து விளங்கி, நபி(ஸல்) அவர்கள் விட்டுச் சென்ற நேர்வழியை அறிந்து அதைப் பற்றிப் பிடிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். ஆக இந்த 4:115 வசனத்தை தங்கள் இஷ்டப்படி திரித்து வளைத்து மறைத்து ஒரே நேர்வழியை பல கோணல் வழிகளாக – மத்ஹபுகளாக ஆக்கி மக்களை வழிகெடுத்து நரகில் தள்ள கடும் முயற்சி எடுக்கிறார்கள்.

Previous post:

Next post: