திருமண அவலங்கள்…

in 2021 ஜுன்

திருமண அவலங்கள்…

(பகுதி-3)
Y. முகமது ஹனீப், திருச்சி

அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான் :

படாடோபமான ஆடம்பரத் திருமணங்களை நடத்தி நம் சமூகம் எவ்வாறெல்லாம் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பது பற்றி சென்ற ஆக்கங்களில் பார்த்தோம். இப்போது இன்னும் சில திருமண அவலங்கள் பற்றியதான நடைமுறைகளை பார்ப்போம்.

பெண் பார்த்து முடிவு செய்தல் என்பது நபிகளாரின் காலத்தில் சாதாரணமான ஒரு விஷயமாகவே இருந்து வந்தது. ஒரு சஹாபி “நான் ஒரு அன்சாரிப் பெண்ணை மணக்கப் போகிறேன்”, என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறியபோது நபி(ஸல்) நீ அந்தப் பெண்ணை நேரில் பார்த்துக்கொள். ஏனெனில் சில பெண்களுக்கு கண்களில் குறையுள்ளது”, என்று கூறினார்கள். (நூல்:புகாரி)

இந்த நிகழ்வு நமக்கு எத்தனையோ பாடங்களை கற்றுத் தருகிறது. 1. மணப்பதற்கு முன்பு மணமக்கள் நேரில் சந்தித்துக் கொள்வது, 2. எந்த தரகரும் இல்லாமல் பெண் பார்த்து முடிப்பது, 3. செலவுகள் இல்லாத கால விரயமற்ற எளிமையானது.

ஆனால் இக்காலத்தில் பாருங்கள். மணமக்களை நேரில் சந்திக்க அனுமதிப்ப தில்லை. பெற்றோர்களோ உறவினர்களோ பார்த்து வந்தால் போதுமானது என்று இவர்கள் ஒரு பட்டாளத்தையே கூட்டிக் கொண்டு பெண் பார்க்கச் செல்வார்கள். மாப்பிள்ளையை கூட்டிச் செல்ல மாட்டார்கள். அங்கு சென்று அவர்கள் தரும் சிற்றுண்டிகளை சுவைத்து சாப்பிட்டுவிட்டு பெண் பிடித்திருக்கிறதா? இல்லையா? என்பதை நாங்கள் போய் சொல்கிறோம் என்று சென்றுவிடுவார்கள். அல்லது காசு பணங்கள் நகைகள் சீர்செனத்திகள் அதிகம் தருகிறார்கள் என்றால் பெண் எப்படி இருந்தாலும் சரி நல்ல பெண்ணா, மார்க்க அறிவு உள்ள பெண்ணா, இறையச்சம் உள்ளவளா? என்றெல்லாம் பார்க்கமாட்டார்கள். உடனே சம்மதம் தெரிவித்து விடுவார்கள்.

அக்காலத்தில் அல்லாமல் இப்போதெல்லாம் புரோக்கர்கள் மூலம் மாப்பிள்ளை, பெண்களை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். நெட்டிலும் பார்க்கிறார்கள். இதையாவது ஓரளவு சரிகண்டாலும் புரோக்கர்கள் இதை ஒரு தொழிலாகவே கொண்டு நிறைய காசு பார்த்து வருகிறார்கள். இவர்கள் வரன் பார்ப்பதற்கு முன்பே வீட்டாரிடம் அட்வான்ஸாக பணத்தை கறந்துவிடுகின்றனர். பிறகு வரன் அமைந்த பிறகு வாங்கும் வரதட்சணையிலோ, போடும் நகையிலோ இத்தனை பர்சன்டேஜ் (சதவீதம்) எங்களுக்கு வந்துவிடவேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்து காசு பார்க்கிறார்கள்.

ஓரளவு பெண்ணை உறுதி செய்தாகி விட்டால் இந்த பெண்ணை மணமுடிக்கலாம் என்று கூடி பேசி “நிச்சயதாம்பூலம்” செய்தல் என்று நிகழ்ச்சிக்கு முன் வருவார்கள். இந்த நிச்சயதாம்பூல நிகழ்ச்சி என்பது இஸ்லாத்தில் இல்லாத அல்லது கட்டாயம் இல்லாத நிகழ்வாகும். இதை சாதாரணமாக இரு வீட்டாரும் பேசி முடிவு செய்து கொள்ளலாம் என்பதை இவர்கள் மண்டபம் பிடித்து ஊர் கூட்டி மாமன் மச்சான்கள் உறவினர் குடும்ப சகிதங்கள் மற்றும் நண்பர்கள், ஊரார், முக்கியஸ்தர்கள், ஜமாஅத் நிர்வாகிகள் என்று அழைத்து தூள் கிளப்புவார்கள். ஒரு திருமணத்தையே நடத்தி முடித்துவிடலாம் என்ற அளவுக்கு இந்த நிகழ்ச்சி ஆரவாரமாகவே இருக்கும். இதில் வந்து ஆஜராகும் ஜமாத்தார்கள் நிச்சயத்துக்கு என்று ஒரு தஃப்தரை அடித்து வைத்திருப்பார்கள். அதில் பெண் யார்? மாப்பிள்ளை யார், வரதட்சணையாக தொகை எவ்வளவு? பெண்ணுக்கு போடும் நகையின் சவரன்கள் எத்தனை? சீர் செனத்திகள், பண்டம் பாத்திரங்கள், கட்டில், பீரோ, வாகனம் போன்ற பெண் வீட்டார் மீது ஆண் வீட்டார் தொடுத்த தாக்குதல் விபரங்களை விடாமல் பதிவு செய்து இரு வீட்டாரிடமும் சாட்சியுடன் கையயாப்பம் வாங்குவார்கள்.

அதுமட்டுமா இரண்டு தட்டுகளில் ஜீனி(சர்க்கரை) வெற்றிலை பாக்கு (சுண்ணாம்பு இல்லை) வைத்து ஒரு தட்டை மாப்பிள்ளையின் தந்தையிடம் கொடுத்து இன்றிலிருந்து “உங்கள் பெண் எங்கள் மகள்” என்று கூறச் செய்து பெண் வீட்டாரிடம் கொடுப்பார்கள். பிறகு பெண்ணின் தந்தையிடம் ஒரு தட்டைக் கொடுத்து அதில் வரதட்சணை கட்டுகளையும் வைக்கச் செய்து “இன்றிலிருந்து உங்கள் மகன் எங்கள் வீட்டுப்பிள்ளை”, என்று கூறச் செய்து அந்த தட்டை மாப்பிள்ளை வீட்டாரிடம் கொடுப்பார்கள். இந்த நிகழ்வு நடந்ததும் தலைவர் கண்ணைக் காட்டுவார். உடனே அஜரத் அவர்கள் (இமாம்) அல் ஃபாத்திஹா என்று உரக்கக் கூறி ஒரு நீண்ட நெடிய துவாவை உருக்கமாக ஓதுவார் எல்லோரும் பயபக்தியோடு ஆமீன் என்று கூறுவார்கள். அதுமட்டுமில்லை கிறித்தவர்கள் போல் மோதிரம் மாற்றிக் கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இந்த நிச்சய தார்த்தத்திலும் மாலைகள் போடுவது, ஆடை ஆபரணங்கள் என்ற அசத்தல்களும் உண்டு. இறுதியில் குறைந்தது 200 முதல் 2000 பேர் வரை பிரியாணி உணவருந்தும் நிகழ்வும் நடைபெறும்.

இவ்வாறு ஒருவழியாக நிச்சயதார்த்தம் நடத்தி முடித்த பிறகு அடுத்த கட்டத்துக்கு வருவார்கள். (தெருவுக்கு வருவதற்கு அதிக நேரம் இன்னும் இருக்கிறது) பத்திரிக்கை அடிப்பது என்பது அடுத்தக் கட்டம். விருந் தில் ஒருவருக்கு சாப்பாட்டுக்கு ஆகும் செலவில் ஒரே ஒரு பத்திரிக்கைக்கு ஆகும் செலவு அமைந்திருக்கும்படியும் பத்திரிக்கைகள் பிரம்மாண்டமாக ஒன்றுக்குள் ஒன்று நுழைந்த மூன்றடுக்குப் பாதுகாப்புடன் கூடிய வகையில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட கவருடன் அமைந்திருக்கும் வண்ணம் பத்திரிகைகள் அச்சடிப்பார்கள். இந்த பத்திரிக்கையை பார்ப்பவர்கள் வியந்து அவர்களின் அருமை பெருமைகள், ஆஸ்திபாஸ்திகள், அந்தஸ்துகள், புஜபல பராக்கிரமங்கள், குலப் பெருமைகள் எல்லாவற்றையும் நொடியில் தெரிந்து புரிந்து கொள்ளும்படி அது அமைந்திருக்கும். அதில் ஷிர்க், பித்அத்துகள் அனைத்தும் அரங்கேறியிருக்கும்.

இதில் எடுத்த எடுப்பிலேயே ஒரு நிலாப்பிறை அதனுள் ஒரு நட்சத்திரம் போட்டு 786 என்று அச்சடித்திருப்பார்கள். நிலாப் பிறைக்குள் நட்சத்திரம் இருக்கவே முடியாது என்பது ஒருபுறமிருக்க பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம் என்பதை சுருக்கி 786 என்ற நியூமராலஜி நம்பர் கொடுக்க இவர்களுக்கு யார் அதிகாரம் வழங்கியது. இவர்கள் பெயரில் அப்துல்காதர் என்பதை 7 என்றும் ஒன்பது என்றும் கூப்பிட்டால் எப்படி இருக்கும். சிந்தித்துப் பாருங்கள். இறைவனை அவனது திருநாமம் கொண்டே அழையுங்கள். இது போல் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

பத்திரிக்கை என்பது இடம் பொருள் ஏவல் அதாவது யார் யாருக்கு, எப்போது, எந்த இடத்தில் திருமணம் என்பதை அறிவிக்கும் முகமாகவே இருக்க வேண்டுமேயன்றி வீண் செலவுகள் செய்து நாளை மஹ்ஷரில் நீ சம்பாதித்ததை எவ்வாறு செலவு செய்தாய்? என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாதவனாக நிற்கக் கூடாது. அடுத்து கீழே வருவோம்.

நபிகள் நாயகம் துவா பரக்கத் என்று போடுவதும் அவ்வளவாக சரியான வாசகம் இல்லை என்பதையும் மக்கள் உணரவேண் டும். அல்லாஹ்வின் நாட்டம் என்று போட் டுக் கொள்ளலாம். அடுத்து 10.30 முதல் 11.30 வரையிலான நல்ல நேரத்தில் என்று போடுவது மிகவும் தவறானது. ஏனெனில் அது காலத்தை திட்டுவது போன்றதாகும். நல்ல நேரம் என்று நாம் ஒன்றை குறிப்பிட்டு விட்டால் கெட்ட நேரம் என்ற ஒன்று இருக்கிறது என்றுதானே அர்த்தம். அல்லாஹ் கூறுகின்றான். “நானே காலமாக இருக்கிறேன். ஆகவே என்னைத் திட்டாதீர்கள்” என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அதற்கடுத்து கீழே வந்தால் உங்கள் நல்வரவை விரும்பும் குட்டீஸ், மாமன்கள், மச்சான்கள், சிச்சாக்கள், சிச்சானிகள், சகோதரன், சகோதரிகள் என்று பட்டியலிட்ட ஒரு பட்டாளத்தையே தருவார்கள். இதெல்லாம் மார்க்கத்தில் தேவைதானா? என்பதை நாம் கொஞ்சம் சிந்திக்க கடமைப் பட்டிருக்கிறோம். இதனால் மச்சானான என் பெயரை போடவில்லை, மாமாவாகிய என்னை கடைசியில் போட்டிருக்கிறான் என்றெல்லாம் சண்டைகள் சச்சரவுகள், பிளவுகள் தோன்ற ஷைத்தானின் ஊசலாட்டத்திற்கு ஆளாக வேண்டிய நிலைகள் ஏற்படக் காரணமாகிறது. இது மட்டுமின்றி பத்திரிகைகளை விநியோகிக்கும் முன் தர்ஹாவில் கொண்டு போய் வைத்து எடுத்து வருவது, மஞ்சளை அதன் முனைகளில் தடவிக் கொடுப்பது, தாம்பாளத்தில் வைத்து வெற்றிலை பாக்கு என்று வைத்து சாங்கியத்துடன் கொடுப்பது பத்திரிக்கை யோடு பணமும் வைத்து ஆடை அணிகலன் களை வைத்து கொடுப்பது போன்றவை எல்லாம் ஷிர்க்கும் பித்அத்துமாகும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

Previous post:

Next post: