முஸ்லிமை காஃபிராக்கும் மடமையைக் கொளுத்துவோம்!

in 2021 ஜுன்

முஸ்லிமை காஃபிராக்கும் மடமையைக் கொளுத்துவோம்!

இப்னு ஆதம்,   சென்னை.

மறு பதிப்பு :

இன்றைய காலச் சூழ்நிலையில், ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமைப் பார்த்து “காஃபிர்’ என்று சொல்லி, தான்தான் “ஒரிஜினல் முஸ்லிம்’ என்று பீற்றிக்கொண்டு நடப்பதைப் பார்க்கிறோம். இந்தச் சூழ்நிலை “தவ்ஹீத் மவ்லவிகள்’ என்று தங்களை தம்பட்டம் அடிக்கும் “மார்க்கப் பிரிவினை வாதிகள்’ வந்த பிறகு தலைவிரித்தாடுகிறது. “மத்ஹபுகள் கூடாது’ என்று சொன்ன இவர்கள் “தங்களுக்குள் குறுகிய காலத்தில் பல மத்ஹபுகளாகப் பிரிந்து, பிரித்து சாதனைப்பட்டியலில் முதலிடம் வகிப்பவர்களும் இந்த வகையினர் தான். இப்படி இந்த சமுதாயத்தை அவர்கள் பிரித்ததால், இவர்களுக்கு தனிப்பட்ட முறையில் ஏகப்பட்ட இலாபங்கள் ஏற்பட்டிருக்கின்றது என்பதை நன்கு ஆராய்ந்து பார்த்தால் நன்றாக விளங்கும். ஆரம்ப காலத்தில் இவர்கள் பிரச்சாரம் செய்தபோது, தமிழகத்தின் பள்ளிவாசல் நிர்வாகங்கள் மத்ஹபு சார்ந்தவர்களிடம் இருந்தது. நிர்வாகத்தை ஒன்றும் செய்ய இவர்களால் முடியவில்லை. “விரலாட்டுதல்’ என்ற மார்க்கத்தின் ஆதாரம் குறைந்த பிரச்சனையை பூதமாக்கி, அடி தடி, குத்து, வெட்டு, ரகளை, கோஷ்டிப் பூசல் என்று பெரும் பரபரப்பை, தமிழக, கேரள பள்ளிவாசல்களில் ஏற்படுத்தி தனக்கென ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தார்கள்.

ஆலிம்கள் சொன்னதை அப்படியே பின்பற்றும் ஒன்றும் அறியா பொதுமக்களாகிய மத்ஹபு வாதிகள் பக்கத்தில் “இந்த விரலாட்டிகள்’ தொழும்போது “என்னடா பக்கத்துல உட்கார்ந்து விரலை ஆட்டிக்கிட்டே இருக்கான். அமைதியாய் தொழ முடியல்ல’ என்று அடிக்கப் போனார்கள். விரலாட்டுபவர்கள் உள்ளே வரக்கூடாது என்றார்கள். இதுதான் சாக்கு என்று இந்த பிரிவினைவாதிகள், தங்களுடைய பக்தர்களை அழைத்துக் கொண்டு, “தனிக்குடித்தனம்’ போனார்கள். போய் என்ன சாதித்தார்கள்? ஒன்றை, இரண்டாகவும், இரண்டை நான்காகவும், ஆக்கி, மத்ஹபுவாதிகளை எல்லாம் இஸ்லாத்துக்கு எதிரிபோல் சித்தரித்துக் காட்டி, அவர்கள் எல்லாம் “காஃபிர்’. அவர்கள் பின்னால் தொழக்கூடாது என்று “ஃபத்வா’ கொடுத்தார்கள். இதன் காரணத்தால் தவ்ஹீத் மவ்லவிகளின் ரசிகர்களும், மத்ஹபுவாதிகளும் நேரிடையாக மோதிக் கொண்டார்கள். “ஷைத்தான் வெற்றி பெற்று’ சமுதாயத்தை கூறுபோட்டு விட்டு, இன்று இவர்கள் பார்க்காத புறத்தில் அமர்ந்து கொண்டு சிரித்துக் கொண்டும்’ இருக்கிறான்.

“நீ என்னை வழிகெட்டவனாக (வெளியேற்றி) காட்டியதன் காரணத்தினால் (ஆதமுடைய சந்ததியரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக) உட்கார்ந்து கொள்வேன்” என்று (ஷைத்தான்) கூறினான். அல்குர்ஆன்:7:16)

முஸ்லிமை “காஃபிராக்கும்’ இந்த வகையினர், அதற்கு ஆதாரமாக குர்ஆன் வசனங்களையும், மக்கத்து முஷ்ரிக்குகளையும் பற்றிச் சொல்லி, மக்கத்துக்கு முஷ்ரிக்குகளை விட இந்த தமிழக முஸ்லிம்கள் தரம் தாழ்ந்தவர்கள் என்றும் பேசியும், எழுதியும், விமர்சித்து வருகிறார்கள். இது எந்த அளவுக்குத் தவறு என்று அவர்கள் கூறும், குர்ஆன் வசனத்தையும், மக்கத்து முஷ்ரிக்குகள் என்ன செய்தார்கள் என்றும், என்ன சொன்னார்கள் என்றும் தெளிவாகப் பார்ப்போம்.

மக்கத்து முஷ்ரிக்குகள் பற்றி அல்லாஹ் குறிப்பிடுகிறான் பாருங்கள் :

மேலும் (நபியே!) “நீர் இவர்களிடத்தில் வானங்களையும், பூமியையும் படைத்துச் சூரியனையும், சந்திரனையும் (தன் அதிகாரத்தில்) வசப்படுத்தியிருப்பவன் யார்? என்று கேட்டால், “அல்லாஹ்’ என்றே இவர்கள் திட்டமாகக் கூறுவார்கள். அவ்வாறாயின் அவர்கள் (உண்மையை விட்டு) எங்கே திரும்பப்படுகிறார்கள்.”  (அல்குர் ஆன் : 29:61)

இன்னும், அவர்களிடத்தில், “வானத்தில் இருந்து நீரை இறக்கி, பிறகு அதனைக் கொண்டு இப்பூமியை அது (காய்ந்து) மரித்த பின் உயிர்ப்பிப்பவன் யார்?” என நீர் கேட்பீராக. “அல்லாஹ்’ என்றே இவர்கள் திட்டமாகக் கூறுவார்கள், (அதற்கு நீர்) “அல்ஹம்துலில்லாஹ் புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது’ என்று கூறுவீராக. எனினும் இவர்களில் பெரும்பாலோர் அறிந்துணரமாட்டார்கள்.  (அல்குர்ஆன்:29:63)

“வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்பீராயின் அவர்கள் “அல்லாஹ்’ என்றே நிச்சயமாகச் சொல்லுவார்கள், அல்ஹம்துலில்லாஹ் – எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே” என்று நீர் கூறுவீராக, எனினும், அவர்களில் பெரும்பாலோர் அறியமாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 31:25)

வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று நீர் அவர்களைக் கேட்பீராயின், “அல்லாஹ்தான்!” என்று அவர்கள் நிச்சயமாகக் கூறுவார்கள், (நபியே!) நீர் சொல்வீராக, “அல்லாஹ் எனக்கு ஏதேனும் ஒரு கெடுதி செய்ய நாடினால் நீங்கள் (பிரார்த்தித்து) அழைக்கும் அல்லாஹ் அல்லாதவை அக்கெடுதியை நீக்கிவிட முடியுமா? அல்லது அவன் எனக்கு ரஹ்மத் செய்ய நாடினால், அவனுடைய (அந்த) ரஹ்மத்தை அவை தடுத்துவிட முடியுமா? என்பதை நீங்கள் கவனித்தீர்களா?” (நபியே!) மேலும் நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன், உறுதியாக நம்பிக்கை வைப்போரெல்லாம், அவன் மீதே உறுதியாக நம்பிக்கை கொள்ளல் வேண்டும்”. (அல்குர்ஆன்: 39:33)

மேலும் அவர்களிடம், யார் அவர்களைப் படைத்தது என்று நீர் கேட்டால், “அல்லாஹ்’ என்றே அவர்கள் நிச்சயமாகக் கூறுவார்கள்”. அல்குர்ஆன்: 43:87

தங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை (ஷிர்க்) வணங்குகிறார்கள், இன்னும் அவர்கள், இவை எங்களுக்கு அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்பவை. என்றும் கூறுகிறார்கள். அதற்கு நீர், “வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ் அறியாததை (இருக்கின்றன என்று நினைத்துக் கொண்டு) நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா?” (அல்குர்ஆன் : 10:18)

இந்த குர்ஆன் அல்லாஹ் அல்லாத வேறு யாராலும் கற்பனை செய்யப்பட்டதன்று. (அல்லாஹ்வே அதை அருளினான்) அன்றியும், அது முன்னால் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பித்து அவற்றிலுள்ளவற்றை விவரிப்பதாகவும் இருக்கிறது. (ஆகவே) இது அகிலங்களுக்கெல்லாம் (இறைவனாகிய) ரப்பிடமிருந்து வந்தது என்பதில் சந்தேகமில்லை. (அல்குர்ஆன் : 10:37)

“நீங்கள் அறிந்திருந்தால், இப்பூமியும் இதிலுள்ளவைகளும் யாருக்கு(ச் சொந்தம்?) என்று (நபியே!) நீர் கேட்பீராக.

“அல்லாஹ்வுக்கே” என்று அவர்கள் கூறுவார்கள், “(அவ்வாறாயின் இதை நினைவிற்கொண்டு) நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா?” என்று கூறுவீராக.

“ஏழு வானங்களுக்கு இறைவனும் மகத்தான அர்ஷிக்கு இறைவனும் யார்?” என்றும் கேட்பீராக.

“அல்லாஹ்வே” என்று அவர்கள் சொல்வார்கள், “(அவ்வாறாயின்) நீங்கள் அவனுக்கு அஞ்சி இருக்கமாட்டீர்களா?” என்று கூறுவீராக!

“எல்லாப் பொருட்களின் ஆட்சியும் யார் கையில் இருக்கிறது? யார் எல்லாவற்றையும் பாதுகாப்பவனாக ஆனால் அவனுக்கு எதிராக எவரும் பாதுகாக்கப்பட முடியாதோ அவன் யார்? நீங்கள் அறிவீர்களாயின் (சொல்லுங்கள்)” என்று கேட்பீராக.

அதற்கவர்கள் “(இது) அல்லாஹ்வுக்கே (உரியது)” என்று கூறுவார்கள். “(உண்மை தெரிந்தும்) நீங்கள் ஏன் மதிமயங்குகிறீர்கள்?” என்று கேட்பீராக.
(அல்குர்ஆன்: 23:84-89)

மேலே குறிப்பிட்ட ஆயத்துக்களில் எதைக் கேட்டாலும் “அல்லாஹ்’ என்று தான் சொல்கிறார்கள். ஆகவே மக்கத்து முஷ்ரிக்குகள் அல்லாஹ்வை நம்பி இருந் தார்கள். அல்லாஹ்வை நம்பிவிட்டு, அவர்களது இணை தெய்வங்கள் தங்களை அல்லாஹ்விடத்தில் நெருக்கத்தை ஏற்படுத்தும், சிபாரிசு செய்யும் என்று மக்கத்து முஷ்ரிக்குகள் கூறினார்கள். இப்படி அல்லாஹ்வை நம்பிவிட்டு, அடுத்தவரையும் சிபாரிசு செய்யும் என்று நம்பிவிட்டு, அடுத்தவரையும் சிபாரிசு செய்யும் என்று நம்பிய மக்கத்துக்கு காஃபிர்களை அல்லாஹ் “காஃபிரூன்’ என்று சொல்கிறான். ஆனால், தமிழகத்தில் உள்ள முஸ்லிம்கள் மக்கத்து முஷ்ரிக் போல் ஈமான் கொள்ளவில்லை. அதைவிடவும் தாழ்வாக இருக்கிறார்கள். எனவே, மக்கத்துக் காஃபிர்களை விட தமிழகத்து முஸ்லிம்கள் தரம் தாழ்ந்தவர்கள் என்று தொண்டைத் தொழிலாக்கிய பிரபலங்கள் பேசியதையும், எழுதி வருவதையும் பார்க்கிறோம். இப்படி பேசுபவர்கள், உண்மையிலேயே இந்த குர்ஆன் வசனங்களை விளங்கவில்லை, விளங்காமல்தான் இந்த ஆயத்துகளைச் சுட்டிக் காட்டி பேசுகிறார்கள் எழுதுகிறார்கள் என்பதை அவர்களுக்கு விளக்க நாம் கடமைப்பட்டு இருக்கின்றோம்.

இந்த தொண்டைத் தொழிலாக்கியவர்கள், தாங்கள் படித்த கல்லூரிகளில் ஏகத்துவத்தைப் பற்றி படிக்கும்போது “தவ்ஹீதை 3 வகையாகப் பிரிப்பார்கள்’ எப்படி என்றால், (அ) தவ்ஹீதுல் உலூஹிய்யத், (ஆ) தவ்ஹீதுல் ருபூபிய்யத், (இ) தவ்ஹீதுல் அஸ்மா இ வ ஸிஃபாத்.

தவ்ஹீதுல் உலூஹிய்யத் :

இந்த வகையைப் பொறுத்தவரை, வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமே இல்லை என்ற கருத்தை உள்ளடக்கி இருக்கும்.

தவ்ஹீதுல் ருபூபிய்யத் :

இந்த வகையையைப் பொறுத்தவரை அல்லாஹ் தான் நம் அனைவரையும் படைத்தான். அவன் தான் நமக்கு “ரீஜ(கு)க்’-உணவு தருபவன். அவனே நம்மை கண்காணிப்பவன் படைத்து, வளர்த்து, பரிபாலிப்பவன் என்ற கருத்தை உள்ளடக்கி இருக்கும்.

தவ்ஹீதுல் அஸ்மா இ வஸிஃபாத் :

இந்த வகையை பொறுத்தவரை, அல் லாஹ்வுக்கு என்று குறிப்பிட்ட பெயர்கள் இருக்கின்றன. அதை நம்ப வேண்டும். மேலும், அவனுக்கென்று தனிப் பண்புகள் இருக்கின்றன. அந்த தனிப்பண்புகளையும் நம்பவேண்டும் என்ற கருத்தை உள்ளடக்கி இருக்கும். மேலே குறிப்பிட்ட பிரிவுகளை விரிவாக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் இதைப் பற்றித்தான் கல்லூரிகளில் படிப்பார்கள். ஒவ்வொரு பிரிவிலும் விரிவாகப் படித்து, அல்லாஹ்வைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டி விளக்கமாகவும் சொல்லிக் கொடுப்பார்கள். இது ஏகத்துவக் குழுவினர் என்று சொல்லிக் கொள்பவர்கள் கல்லூரிகளில் அதிகம் இருக்கும். மற்ற மதரஸாக்களில் குறைவாக இருக்கும். ஆனால், அல்லாஹ்வை நம்பும்போது, இந்த மூன்று வகையான விஷயங்களையும் ஒன்றுதிரட்டி நம்பவேண்டும். அப்படி நம்பும்போதுதான் “அல்லாஹ்வை அவன் கூறிய அளவுக்கு தெரிந்து வைத்து இருக்கின்றான் என்று அர்த்தம்”. இந்த மூன்று பிரிவுகளில் இரண்டாவது பிரிவை மட்டும் நம்புபவனோ அல்லது மூன்றாவது பிரிவை மட்டும் நம்புபவனோ “அல்லாஹ்வை நம்புகிறவன்” என்று சொன்னால், அவன் பொய் சொல்கிறான் என்று அர்த்தம்.

மக்கத்து காஃபிர்கள் வி­யத்துக்கு இப்போது வருவோம். மக்கத்து காஃபிர்கள் சொன்னதாக அல்லாஹ் சொல்லிக்காட்டுகிற வசனங்கள் அனைத்திலுமே மக்கத்து காஃபிர்கள் “தவ்ஹீதுல் ருபூபிய்யத்” என்ற ஒரு தன்மை மட்டும் அல்லாஹ்வுக்கு இருப்பதாக நம்பினார்கள் என்பது தெள்ளத் தெளிவாக விளங்கும். (மீண்டும் அந்த வசனங்களை படித்துப் பாருங்கள்) ஆனால் “தவ்ஹீதுல் உலூஹிய்யத்’ என்ற முக்கியமான அம்சத்தை அவர்கள் நிராகரித்தார்கள். “தவ்ஹீதுல் உலூஹிய்யத்’தை மட்டும் முழுமையாக நம்பும்போது மற்ற இரண்டு பிரிவுகளும் ஏறக்குறைய இந்தப் பிரிவில் அடங்கிவிடும். ஆனால், மக்கத்துக் காஃபிர்கள் “தவ்ஹீதுல் உலூஹிய்யத்’ என்ற “லா இலாஹா இல்லல்லாஹ்’ என்பதை மறுத்தார்கள். மேலே படித்த வசனத்திலோ அல்லது குர்ஆனில் ஏதாவது ஒரு இடத்திலோ “வணக்கத்திற்குத் தகுதியானவன் யார் என்று அவர்களிடம் கேட்டால், “அல்லாஹ்’ என்று சொல்வார்கள்’ என்று அல்லாஹ் கூறிக்காட்டுகிறானா? அப்படி மக்கத்து காஃபிர்கள் எங்கேயும் கூறியதாக அல்லாஹ் கூறிக்காட்டவில்லை. மாறாக, நிர்பந்த சூழ்நிலையில்தான் அல்லாஹ்வை உதவிக்கு அழைப்பார்கள் என்று ஆயத்துகள் சுட்டிக்காட்டுகிறது.

இதோ ஆயத்துகள்:

எவர் அல்லாஹ்வைச் சந்திப்போம் என்று நம்புகிறார்களோ அவர்கள் (அதற்காக நல்ல அமல்களைச் செய்து கொள்ளட்டும்), ஏனெனில் அல்லாஹ் (அதற்காகக்) குறித்துள்ள தவணை நிச்சயமாக வருவதாக இருக்கிறது, அவன் (யாவற்றையும்) செவியேற்பவனாகவும், நன்கு அறிபவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன்: 29:5)

எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ, (அவர்களில் ஆகிவிடவேண்டாம். அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள்.  (அல்குர்ஆன் : 30:32)

(நபியே!) நீர் கூறும்: நீங்கள் கரையிலும் கடலிலும் உள்ள இருள்களில் (சிக்கித் தவிக்கும் சமயத்தில்) “எங்களை இதை விட்டுக் காப்பாற்றிவிட்டால், நிச்சயமாக நாங்கள் நன்றி செலுத்துவோரில் ஆகிவிடுவோம் என்று பணிவாகவும், மறைவாகவும் நீங்கள் அவனிடம் பிரார்த்திக்கின்றீர்களே அப்போது உங்களை காப்பாற்றுகிறவன் யார்?”

“இதிலிருந்தும், இன்னும் மற்றெல்லாத் துன்பங்களிலிருந்தும் உங்களைக் காப்பாற்றுபவன் அல்லாஹ்வே, பின்னர் நீங்கள் (அவனுக்கு) இணை வைக்கின்றீர்களே” என்று கூறுவீராக.  (அல்குர்ஆன்: 6:63,64)

(நபியே! அவர்களிடம்) நீர் கூறும் : “அல்லாஹ்வுடைய வேதனை உங்களிடம் வந்துவிட்டால், அல்லது (நீங்கள் அஞ்சும்) அந்த (விசாரணைக்) காலம் வந்துவிட்டால் (அதிலிருந்து உங்களைக் காப்பாற்ற) அல்லாஹ்வையன்றி (வேறு யாரையாவது) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், அழைப்பீர்களா?” என்பதை (நீங்கள் சிந்தித்துப்) பார்த்தீர்களா?

“அப்படியல்ல! அவனையே நீங்கள் அழைப்பீர்கள், அப்போது அவன் எதற்காக அவனை அழைத்தீர்களோ அ(த்துன்பத்)தை தான் நாடினால் நீக்கிவிடு வான், இன்னும் (அவனுடன்) இணை வைத் திருந்தவற்றை நீங்கள் மறந்து விடுவீர்கள்.  (அல்குர்ஆன் : 6:40,41)

இன்னும், கடலில் உங்களை ஏதேனும் சங்கடம் (துன்பம்) தீண்டினால், அவனையன்றி நீங்கள்(தெய்வங்கள் என) எவற்றை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ, அவை யாவும் மறைந்து விடும். எனினும் (அல்லாஹ்) உங்களை ஈடேற்றிக் கரையளவில் கொண்டு வந்து சேர்க்கும் பொழுது நீங்கள் (அவனைப்) புறக்கணித்து விடுகிறீர்கள். இன்னும், மனிதன் மகா நன்றி மறப்பவனா கவே இருக்கின்றான். (அல்குர்ஆன்:17:67)

மேலே, படித்துப் பார்த்த ஆயத்துகளில் நிர்ப்பந்தமான சூழ்நிலையில்தான் அல்லாஹ்வை வணங்குவார்கள் என்றும், அந்த நிர்பந்தம் நீங்கிவிட்டால் இணை வைப்பார்கள் என்று அல்லாஹ் சொல்லிக்காட்டுகிறான். படைத்துப் பரிபாலித்து, உணவளிப்பவன், மழை பொழிய வைப்பவன், சூரியனை, சந்திரனை, வானத்தை படைத்தவன் என்று மட்டும்தான் அல்லாஹ்வை மக்கத்து காஃபிர்கள் நம்பி இருந்தார்களே தவிர, “வணக்கத்திற்குரியவன், தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எதுவும், யாரும் இல்லை” என்ற ஓரிறைக் கொள்கையை மக்கத்து முஷ்ரிக்குகள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது இதன் மூலம் தெரியவருகிறது. மேலும் அவர்கள் “தவ்ஹீ துல் அஸ்மா இ வஸிஃபாத்’ என்ற அல்லாஹ்வுடைய பெயர்களையும், அல்லாஹ்வுடைய தனித்தன்மைகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது ஹுதைபிய்யா ஒப்பந்தத்தின் போது மக்கத்து முஷ்ரிக்குகள் நடந்து கொண்டவிதம் தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறது. மேலும், மக்கத்து முஷ்ரிக்குகள் நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் தூதராகவும் ஏற்று கொள்ளவில்லை என்பதும் தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.

ஸுஹைல் இப்னு அம்ரு வந்து சேர்ந் தார். எனவே, நபி(ஸல்) அவர்கள், உங்களின் அலுவல் உங்களுக்கு இலகுவாகிவிட்டது என்று கூறினார்கள். அப்பொழுது அவர் நபி(ஸல்) அவர்களிடம், நமக்கும் உங் களுக்கும் இடையில் ஓர் உடன்படிக்கை எழுதுங்கள் என்று கூறினார். எனவே நபி (ஸல்) அவர்கள் எழுதுபவரை அழைத்து, பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்று எழுதும் என்று கூறினர். அதற்கு ஸுஹைல், அல்லாஹ்வின்மீது ஆணையாக, ரஹ்மான் யார் என்பதை நான் அறியமாட்டேன். எனவே நீர் முன்னர் எழுதி வந்தபடி, பி இஸ்மி கல்லா ஹும்ம என்று எழுதும் என்று கூறினார். அப்பொழுது முஸ்லிம்கள், இறைவன் மீது ஆணையாக, பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் என்று எழுதுவோமே ஒழிய அவ்விதம் நாங்கள் எழுதமாட்டோம் என்று கூறினார்.

எனினும் நபி(ஸல்) அவர்கள் பி இஸ்மி கல்லாஹும்ம என்று எழுதும் என்றார். பின்னர் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுடைய சமாதான உடன் படிக்கையாகும் இது என்று (எழுதுமாறு) கூறினார். அதற்கு ஸுஹைல், அல்லாஹ் மீது ஆணையாக, நிச்சயமாக நீர் அல்லாஹ்வுடைய தூதர் என்று நாங்கள் அறிந்திருந்தோமானால் கஃபாவை விட்டும் உம்மை நாங்கள் தடை செய்யமாட்டோம். உம் மோடு போரும் செய்திருக்க மாட்டோம். எனவே முஹம்மது இப்னு அப்துல்லாஹ் என்று எழுதும் என்றனர். அப்பொழுது நபி(ஸல்) அவர்கள், இறைவன் மீது ஆணையாக நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதனாவேன். நீங்கள் என்னைப் பொய்யாக்கிய போதிலும் சரியே என்று கூறி, முஹம்மதுப்னு அப்துல்லாஹ் என்று எழுதும் என்றனர். நூல்: புகாரி.

ஹுதைபிய்யா உடன்படிக்கையை எழுதுவதற்காக, நபியவர்கள் அலீ(ரழி) அவர்களை அழைத்து வாசகங்களைக் கூற அலீ(ரழி) எழுத ஆரம்பித்தார்கள். முதலாவ தாக, “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்’ அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்’ என்று கூறினார்கள். அதைக் கேட்ட சுஹைல், “அல்லாஹ்வின் மீது சத்தி யமாக! ரஹ்மான் என்றால் யார்? என்று எங்களுக்குத் தெரியாது. எனவே பிஸ்மக்கல்லாஹும்ம, அல்லாஹ்வே உனது பெயரால் என்று எழுதும்படி கூறினர். அதை ஏற்று நபியவர்கள் அலீ(ரழி) அவர்களிடம் அவ்வாறே எழுதச் சொன்னார்கள். பின்பு, “இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மது செய்யும் சமாதான உடன்படிக்கையாகும்’ என்று எழுதும்படி அலீ(ரழி) அவர்களிடம் கூற அவர்களும் அவ்வாறே எழுதினார்கள்.

ஆனால், சுஹைல் அந்த வாசகத்தை எற்றுக் கொள்ளவில்லை. “நீர் அல்லாஹ்வின் தூதர் என்று எங்களுக்கு தெரிந்திருந்தால் நாம் உம்மை அவனது வீட்டிலிருந்து தடுத்திருக்க மாட்டோம். உம்மிடம் போர் செய்திருக்க மாட்டோம். எனவே முஹம்மதிப்னு அப்துல்லாஹ் என்று எழுதுங்கள்’ என்று கூறினார். அதற்கு நபியவர்கள், “நீங்கள் என்னை பொய்யன் என்று கூறினாலும் சரியே! நான் உண்மையில் அல்லாஹ்வின் தூதர்தான் என்று கூறிவிட்டு அலீயிடம், ரசூலுல்லாஹ்’ என்ற சொல்லை அழித்து விட்டு முஹம்மது இப்னு அப்துல்லாஹ் என்று எழுதும்படி கூறினார்கள். ஆனால், அலீ(ரழி) அவர்கள் இந்தச் சொல்லை அழிப்பதற்கு மறுத்து விடவே நபி(ஸல்) அவர்களே தங்களது கையால் அதை அழித்தார்கள்.

இந்த உடன்படிக்கையில் மக்கத்து காஃபிர்களின் உள்ளத்தின் பிரதிபலிப்பு “உள்ளங்கை நெல்லிக்கனியாய்”  தெரிய வருகிறது.

ஆக மக்கத்து குரைஷிகள்,

(1)  வணக்கத்திற்குச் சொந்தமான, அவன் தன்மைகளில் உள்ள அல்லாஹ்வின் பெயர்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும்,

(2) அல்லாஹ்விற்குச் சொந்தமான, அவன் தன்மைகளில் உள்ள அல்லாஹ்வின் பெயர்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையும்,

(3) நபி(ஸல்) அவர்களை தூதராக, அல்லாஹ்வின் தூதராக, எற்றுக் கொள்ளவில்லை என்பதையம் அவற்றை அவர்கள் வெளிப்படையாகவே, தங்கள் செயல்கள் மூலமாக வெளிப்படுத்தினார்கள் என்பதையும்

(4) அல்லாஹ்வின் ருபூபிய்யத் என்ற ஒரு தன்மையை மட்டும் ஏற்றுக்கொண்டு, அதையும் இக்கட்டான சூழ்நிலைகளில் மட்டுமே பயன்படுத்தினார்கள் என்பதையும், மற்ற நேரங்களில் அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்து பிரார்த்திப்பவர்கள் என்பதையும், தெளிவாக மேற்கண்ட குர்ஆன் வசனங்கள், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்கள் மூலமாக தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொண்டோம். இனி, தமிழக முஸ்லிம்கள் இப்படி சொல்கிறார்களா? தமிழக முஸ்லிம்கள் தரிகெட்டுப் போனதற்கு இந்த புரோகித முல்லாக்கள் தானே காரணம்? நபி(ஸல்) அவர்களை இவர்களைவிட அதிகமாக உலகத்தில் எங்குமே விரும்பமாட்டார்கள் என்ற அளவுக்கு மெளலூது ஓதுகிறார்கள்.

இது யார் கற்றுக் கொடுத்தது? இந்த புரோகித முல்லாக்கள் இல்லையா? மார்க்கத்தை ஒழுங்காக போதிக்காமல், இருந்துவிட்டு, தர்ஹா செல்பவன் காஃபிர், மெளலூது ஓது பவன் காஃபிர் என்று இன்று ஃபத்வா கொடுக்க என்ன தைரியம் இருக்கும் இந்த புரோகித முல்லாக்களுக்கு? தமிழ் நாட்டில் உள்ள ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த ஒருவனை அழைத்து “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை” என்று சொன்னால் “இல்லை’ என்று மறுக்கிறானா? அல்லாஹ்வை “ரஹ்மான்” “ரஹீம்” என்று சொன்னால் மறுக்கிறானா? அல்லது நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் தூதர் என்பதை மறுக்கிறானா? அல்லது இஸ்லாத்திற்கு எதிராக சதித்திட்டம் தீட்டுகிறானா? அல்லது முஸ்லிம் குடும்பத்தார்களை ஊரை விட்டு ஓட விட்டானா?

எந்த அடிப்படையில் மக்கத்து குறைஷிகளை விட தரம் தாழ்ந்தவர்கள் இவர்கள் என்று பிரபல பேச்சாளர் பேசினார்! பதில் சொல்வாரா? ஆகவே இன்று தமிழக முஸ்லிம்கள் அல்லாஹ்வை நம்பியிருக்கிறார்கள். வணக்கத்திற்குரியவன் அவனைத் தவிர யாருமில்லை என்று நம்புகிறார்கள். ரசூல்(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் தூதராக ஏற்று இருக்கிறார்கள். இவர்கள் தர்கா செல்வதற்கும் மெளலூது ஓதுவதற்கும் ஃபாத்திஹா ஓதுவதற்கும் இன்னும் பல அனாச்சாரங்கள் செய்வதற்கும், இந்த மார்க்கத்தை குர்ஆனை கொண்டும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைக் கொண்டும் போதிக்காத மார்க்க(அறிவிலிகள்) அறிஞர்கள்தான் காரணம். தமிழக முஸ்லிம்கள் காஃபிர்கள் இல்லை! இல்லை!! இல்லை!!

இந்த உண்மையை ஏற்று முஸ்லிம் பெயரில் உள்ள அனைவரையும் நம் சகோதரர்களாக ஏற்று அவர்களை தவறான வழியில் இருந்து நேரான வழிக்கு எப்படி வழிகாட்டுவது என்பதை அனைவரும் சேர்ந்து சிந்திப்போம். முஸ்லிமை காஃபிராக்கும் மடமையை கொளுத்துவோம்.

Previous post:

Next post: