இஸ்லாத்தில் பிரிவுகள் இல்லை!

in 2021 ஜுலை

இஸ்லாத்தில் பிரிவுகள் இல்லை!

அபூ ஃபாத்திமா

மறு பதிப்பு :

“(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத் தினராகவே இருந்தனர். அல்லாஹ் (நல்லோ ருக்கு) நன்மாராயம் கூறுவோராகவும், (தீயோ ருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும், நபிமார்களை அனுப்பி வைத்தான், அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் முரண்பட்ட கருத்துக்களை தீர்த்து வைப்பதற்காக, அவர்களுடன் உண்மையுடைய இறைநெறிநூலை இறக்கி வைத்தான், எனினும் அந்நெறிநூல் கொடுக்கப்பட்டவர்கள், தெளிவான ஆதாரங்களும், அத்தாட்சிகளும் வந்தபின்னரும், தம்மி டையே உண்டான பொறாமை, பகை, காரணமாக மாறுபட்டார்கள். ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டு, புறக்கணித்து விட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர்வழி காட்டினான், இவ்வாறே அல்லாஹ். தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான்”.   (அல்குர்ஆன் 2:213)

எல்லாம் வல்ல அல்லாஹ், ஆதிபிதா ஆதம் (அலை) அவர்களை மண்ணிலிருந்து படைத்து அவர்களிலிருந்து கோடான கோடி மனிதர்களைத் தோன்றச் செய்தான். எனவே ஆரம்பத்தில், மனிதர்கள் ஒரே கூட்டத்தினராக இருந்தனர் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. அவர்களிடையே ஏற்பட்ட பிரிவுகளுக்கும், பிளவுகளுக்கும் அவர்களுக்கிடையே ஏற்பட்ட பொறாமையும், பகையுமே காரணமாகும். அடையாளம் தெரிந்துகொள்ள இந்தப் பிரிவுக ளும் பிளவுகளும் ஏற்படவில்லை என்பதை குர்ஆனின் மேற்கண்ட வசனமே உறுதியாகத் தெளிவுபடுத்துகிறது. இப்படி போட்டி, பொறாமை, பகை காரணமாகத் தோன்றிய ஒவ்வொரு பிரிவாரும், தாங்கள் தான் நேர்வழியில் இருப்பதாகவும், தங்களுக்கே இறைவனின் பொருத்தமும் சுவர்க்கமும் கிடைக்கும் என்று வாதாடி வருகின்றனர். கல்லை வணங்கு கிறவர்கள், கபுரை வணங்குகிறவர்கள், தங்களைப் போன்ற மனித இனத்தைச் சார்ந்த நபிமார்களுக்கும், வலிமார்களுக்கும் தெய்வாம் சங்களைக் கற்பித்து வணங்குகிறவர்கள். மலக்கு களையும், ஜின்களையும் வணங்குகிறவர்கள், தங்கள் மனோ இச்சையை தெய்வமாக்கிக் கொண்டவர்கள், இப்படி ஒவ்வொரு பிரிவாரும் தாங்கள் செய்து வருவதுதான் மிகச் சரியானதாகவும், தாங்களே நேர்வழி நடக்கிறவர்கள், தங்களுக்கே இறைவனின் பொருத்தமும், சுவர்க்கமும் கிடைக்கும் என்று துணிந்து கூறி வருவதையே பார்க்கிறோம். எந்தப் பிரிவாரும் தங்களை வழிகெட்ட கூட்டமென்றோ, நரகத் திற்குச் செல்லும் கூட்டம் என்றோ சொல்லுவதே இல்லை. இதையே அல்லாஹ் இவ்வாறு தெளிவுபடுத்துகிறான்.

“எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவுகளை உண்டாக்கிப் (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ (அவர்களிலாகி விட வேண்டாம், அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள்”. அல்குர்ஆன்: 30:31

இன்னும் 23:53 வசனமும் இதை மேலும் உறுதிப்படுத்துகின்றது.

“ஈமான் கொண்டவர்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள், ஸாபியீன்கள் இன்னும் அனைத்துப் பிரிவாரும் இவ்வாறு தாங்கள் செய்து கொண் டிருப்பதைக் கொண்டு, சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு பிரிவினரின் இந்த வீண் வாதம் தவறு. அவர்களின் இறை வனைப் பற்றிய நம்பிக்கை, இறுதி நாளைப் பற்றிய நம்பிக்கை, நல்ல செயல்கள் இவையே அவர்களுக்கு வெற்றியைக் கொடுக்கும், மற்றவர்கள் நஷ்டம் அடைவார்கள்” என்பதை அல் குர்ஆன் 2:62, 5:69 வசனங்கள் தெளிவு படுத்துகின்றன.

சிலர் வாதம் செய்வது போல், இப்படிப்பட்ட பிரிவுப் பெயர்களை அல்லாஹ் அனு மதித்துள்ளான் என்ற எண்ணம் மிகவும் தவ றானதாகும். அவர்கள் சொல்லுவது உண்மை யானால், நபி(ஸல்) அவர்கள் காலத்தில் யூதர் கள், கிறிஸ்தவர்கள், ஸாபியீன்கள் எவருமே தங்கள் பிரிவுக் கொள்கைகளை விட்டு முஸ்லிம்களாகி இருக்க வேண்டிய அவசியமே இல்லை. தங்கள் தங்கள் பிரிவுகளில் இருந்து கொண்டு வெற்றி பெற்றிருக்க முடியும். நபி(ஸல்) அவர்களும் அதை மறுத்திருக்க முடியாது. ஆனால் அவர்கள் அனைவரும் கலிமா சொல்லி, முஸ்லிம்களாகி நல்ல அமல்கள் செய்வது கொண்டே வெற்றியடைய முடிந்தது. இது ஒன்றே பிரிவுகளை ஆதரிப்பவர்களின் வாதம் தவறு என்பதை நிரூபிக்கப் போதுமானது. மேலும்,

“அவனே உங்களுக்கு “முஸ்லிம்’ என்று பெயரிட்டான்”. அல்குர்ஆன் 22:78

“உங்களுக்காக இஸ்லாம் மார்க்கத்தையே பொருந்திக் கொண்டேன்” . அல்குர்ஆன் 5:3

“நிச்சயமாக, அல்லாஹ்விடத்தில் (அங் கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம்தான்”.  அல்குர்ஆன் 3:19

“இஸ்லாத்தையன்றி (வேறொரு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால், நிச்சயமாக அவனிடமிருந்து (அது) அங்கீகரிக்கப்பட மாட்டாது, மறுமையில் அவன் நஷ்டம் அடைந்தோரில் இருப்பான்”. அல்குர்ஆன் 3:85

“நீங்கள் முஸ்லிம் அல்லாத நிலையில் மரணிக்க வேண்டாம்”. அல்குர்ஆன் 3:102

“அல்லாஹ் அளவில் (மக்களை) அழைத்து (தானும்) நல்ல அமல்கள் செய்து, நிச்சயமாக, நான் முஸ்லிம்களில் உள்ளவன், என்று சொல்பவனை விட சொல்லால் அழகியவன் யார்?”  அல்குர்ஆன் 41:33

இன்னும் இவை போன்ற வசனங்கள் இவர்களின் வாதத்தைப் பொய்ப்பிக்கின்றன.

உண்மையில், முகல்லிதுகள் (மத்ஹப் பிரிவினர்) மத்ஹபுகளைத் தெளிவாக மறுக்கும் 4:115 வசனத்தையே, மத்ஹபுகளுக்கு ஆதாரமாக எடுத்துக்காட்டுவது போல், இவர்களும் பிரிவுகளை மறுக்கும் இந்த 2:62, 5:69 வசனங்க ளைப் பிரிவுகளுக்கு ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர். ஆக இரு கூட்டத்தாரின் வாதங்களும் தவறான வாதங்களே ஆகும்.

யூத, கிறிஸ்தவப் பெயர்கள் கோத்திரத்தின் அடிப்படையில் ஏற்பட்ட பெயர்கள் என்று சொல்லுவது தவறாகும். அது உண்மையானால்,

“யூதர்கள், கிறிஸ்தவர்கள் தவிர வேறு யாரும் சுவனபதியில் நுழையமாட்டார்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள், இது அவர்களின் வீண் ஆசையே ஆகும்”. அல்குர்ஆன் 2:111

என்று குர்ஆன் குறிப்பிடுவது போல், அவர்கள் சொல்லி இருக்க முடியாது. வெற்றி பெறும் கூட்டம் என்ற எண்ணத்தில், அவர்கள் இப்படிப் பெயர் வைத்துக் கொண்ட காரணத்தினால் தான் இவ்வாறு அவர்கள் கூறியுள்ளார்கள் என்பதை சாதாரண அறிவு படைத்தவர்களும் விளங்கிக் கொள்ளலாம். இதை அடுத்து வரும் வசனம் இன்னும் உறுதிப்படுத்துகிறது.

“அப்படியல்ல! எவனொருவன் தன்னை அல்லாஹ்வுக்கு முழுமையாக அர்ப்பணம் செய்து, இன்னும் நற்கருமங்களைச் செய்கிறானோ, அவனுடைய நற்கூலி இறைவனிடம் உண்டு, இத்தகையவர்களுக்கு அச்சமில்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்”. அல்குர்ஆன் 2:112

தன்னை அல்லாஹ்வுக்கு முழுமையாக அர்ப்பணம் செய்து கொண்ட எவனாவது, அல்லாஹ் பெயரிட்ட “முஸ்லிம்’ என்ற பெயரை விட்டு, சுயமாக ஒரு பெயரை தேர்ந் தெடுத்துக் கொள்வானா? என்பது அறிவாளிகளின் சிந்தனைக்கு உரியதாகும். அடுத்து,

“மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரையயாருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு, பின்னர் உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆகவே) உங்களில் எவர் பயபக்தியுடையவராக இருக்கிறாரோ அவர் தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன். (யாவற்றையும் சூழ்ந்து) தெரிந்தவன்”. அல்குர்ஆன் 49:13

என்ற இந்த வசனத்தை ஆதாரமாகக் காட்டி தங்கள் பிரிவுப் பெயர்களை நியாயப்படுத்த முனைகின்றனர். இங்கும் அவர்கள் தவறே செய்கின்றனர். அல்லாஹ் தெளிவாக “நீங்கள் ஒருவரையயாருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு கிளைகள், கோத்திரங் களாக ஆக்கியிருக்கிறோம்” என்று உறுதியாகச் சொல்லுகிறான்.

“அப்துல்லாஹ்’ என்ற மாத்திரத்தில், இன்னார் என்று அறிகிறோம், அப்துல்லாஹ் என்ற பெயர்களுடையவர்கள் அனைவரும் நேர்வழி நடப்பவர்கள், சுவர்க்கவாதிகள் என்று, யாரும் சொல்லுவதில்லை, இன்ன கிளையைச் சார்ந்தவர்கள் வழிதவறியவர்கள் என்று யாரும் சொல்ல முடியாது, இன்ன கோத்திரத்தார் நேர்வழி நடப்பவர்கள், சுவர்க்கவாதிகள் என்று யாருக்கும் சொல்ல அதிகாரமில்லை.

“அப்துல்லாஹ்”க்களில், கிளைகளில், கோத்திரங்களில் நேர்வழி நடந்து சுவர்க்கம் செல் வோரும் உண்டு, தவறான வழி சென்று நரகம் செல்வோரும் உண்டு என்பதே அறிவாளிகள் சொல்லும் உண்மையாகும். ஆக அல்லாஹ் அனுமதித்துள்ள அடையாளம் தெரிந்து கொள்ள வைக்கும் பெயர்களின் நிலை இதுவேயாகும். ஆனால் இவர்களாக உண்டாக்கிக் கொண்டிருக்கும் பிரிவுப் பெயர்களின் நிலை இதுவல்ல. ஒவ்வொரு பிரிவாரும் தாங்கள் தான் நேர்வழி நடப்பவர்கள், சுவர்க்கம் அடைபவர்கள் என்று மார்தட்டிக் கொள்கிறார்கள்.

“கபுரு வணங்கிகள் மற்றும் வழிகெட்டவர்களிடமிருந்து தனித்துக் காட்டிக் கொள்ள மட்டும்தான் அந்தப் பெயர் பயன்படுத்தப்பட வேண்டும்”.

என்று அவர்கள் குறிப்பிட்டிருப்பதே, அவர்கள் தங்களை நேர்வழி நடக்கும் கூட்டமென்று, பிரித்துக் காட்டவே, இப்பெயர்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கின்றது. அதாவது இஸ்லாத்தில் அவர்கள் அல்லாத வேறு பிரிவினரும் இருக்கிறார்கள் என்று அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள். இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால், இஸ்லாத்தில் பிரிவுகள் உண்டு என்று அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள். இந்த அடிப்படையில் 2:213, 6:159, 21:92, 93, 30:32, 42:14, 45:17 இந்த இறைவசனங்கள் அனைத்திற்கும் அவர்கள் முரண்படுகிறார்கள். இந்த வசனங்கள் இஸ்லாத்தில் பிரிவுகள் இல்லையயன்று திட்டவட்டமாக அறிவிக்கின்றன.

“ஆனால் இன்று தம்மை ஹனஃபி என்றும், ஷாஃபி என்றும் கூறுவோர் குர்ஆன், ஹதீஃத் இரண்டும்தான் அடிப்படை என்று ஒப்புக் கொள்வதில்லை. மாறாக குர்ஆன், ஹதீஃத்களை நம்மால் விளங்க இயலாது என்று விலகிச் செல்வதைத்தான் காண்கிறோம், பெரியார்கள், முன்னோர்கள் சொன்னது மட்டும் போதும் என்பதே அவர்களின் கொள்கை. ஆனால் ஸலஃபி, முஜாஹித், அஹ்லே ஹதீஃத் போன்ற பிரிவுகளில் உள்ள எவரும் குர்ஆன், ஹதீஃத் இரண்டும்தான் அடிப்படை என்பதை மறுக்கவில்லை. மறுக்காதது மட்டுமல்ல, குர்ஆன், ஹதீஃத் இரண்டையும் அடிப்படையாகக் கொள்ள மறுப்பவர்களைக் கண்டிக்கவும் செய்கின்றனர்”.

அவர்களின் இந்தக் கூற்றை நாமும் மறுக்க வில்லை, அதே சமயம் அவர்களே, அவை பிரிவுப் பெயர்களே என்று ஒப்புக் கொண்டுள்ளதையும் இங்கு சுட்டிக் காட்டுகிறோம்.

செயல்பாடுகளில் அவர்கள் குர்ஆன், ஹதீஃத்படி நடந்தாலும், அல்லாஹ்வோ, அவனது தூதரோ கற்றுத்தராத பெயர்களைக் கொண்டு தங்களை அழைத்துக் கொள்கிறார்கள். இப்பெயர்கள் இவர்களோ, இவர்கள் நம்பிக்கை வைத்திருக்கும் இவர்களது முன்னோர் களோ இடப்பட்டு, அழைத்து வரப்படும் பெயர்களாகும், முன்னோர்களை நம்பி இப் பெயர்களையே அவர்களும் வைத்துக் கொள்வதால், தங்களை அழைத்துக் கொள்ளும் விஷயத்தில், குர்ஆனுக்கும், ஹதீஃத்களுக்கும் மாறு செய்கிறார்கள். எனவே தங்களை அழைத்துக் கொள்ளும் விஷயத்தில், இவர்கள், பெரியார்கள், முன்னோர்கள் சொன்னது மட்டுமே போதும் என்பதே இவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது என்பதை உணர வேண்டும்.

ஸசாதாரண சிறிய சிறிய மார்க்க காரியங் களையே வெள்ளை வெளேறென்று, இரவையும், பகலைப் போன்ற நிலையில் தெள்ளத் தெளிவாக, சந்தேகத்திற்கு இடமில்லாமல் விளக்கிச் சென்றுள்ள, நபி(ஸல்) அவர்கள் மக்களிடையே வெற்றி பெறும் கூட்டம் தங்களை இப்படித்தான் அழைத்துக் கொள்ள வேண்டுமென்பதை தெளிவுபடுத்தாமல் சென்றுவிட்டார்களா? அல்லாஹ்வும் அவனது தூதரும், இது விஷயத்தில், அக்கறை இல்லாமல் இருந்து விட்டார்கள் என்று இவர்கள் எண்ணுகிறார்களா? அதிலும் குறிப்பாக, “எனது உம்மத் 73 பிரிவுகளாகப் பிரிவார்கள், அவர்களின் 72 பிரிவினர் நரகம் செல்வர், ஒரே ஒரு பிரிவினர் மட்டுமே (ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவினர்கள் இல்லை) சுவர்க்கம் செல்வர்’ என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னவுடன், நபி தோழர்கள் வெகு ஆவலுடன் அது எந்தப் பிரிவு என்று கேட்ட அந்தச் சந்தர்ப்பத்திலும் அவர்களுக்கென்று ஒரு பெயர் சூட்டாமல், “”நானும் எனது தோழர்களும் எவ்வாறு இருக்கிறோமோ, அவ்வாறே இருப்பவர்கள்” என்று கோடிட்டுக் காட்டுவதோடு, நிறுத்திக் கொண்டார்கள். இதிலிருந்து நபி(ஸல்) அவர்களுக்கே வெற்றி பெறும் கூட்டத்திற்கு அப்படியயாரு தனிப்பெயர் சூட்டிட அனுமதி இல்லை என்பது தெளிவாகிறது. பிரிவுகள் சம்பந்தப்பட்ட ஆயத்துக்களை தெளிந்த சிந்தனையோடு பார்ப்பவர்கள் இதனை ஒப்புக்கொள்ளவே செய்வார்கள். அதாவது அப்படியயாரு தனிப் பெயரை சூட்டிக் கொண்டால், இஸ்லாத்தில் பிரிவினையை உண்டாக்கிய குற்றத்திற்கு ஆளாக வேண்டிவரும். அதற்கு நபிமார்களுக்கும் அனுமதியில்லை என்பதே உண்மையாகும். குர்ஆன் 42:13 வசனம் இதைத் தெளிவாக உறுதிப்படுத்துகின்றது. நபி(ஸல்) அவர்களே செய்யத் துணியாத ஒரு காரியத்தை நாம் செய்யலாமா? என்பதை ஆழ்ந்து சிந்தித்து விளங்கவும்.

வெற்றி பெறும் கூட்டத்திற்கு இஸ்லாம் அல்லாத பெயரை சூட்ட விரும்புகிறவர்கள், இஸ்லாத்தில் பிரிவினைகள் இருக்கின்றன என்று அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள். எனவே, இஸ்லாத்தில் பிரிவுகள் இல்லை என்ற இறை வசனத்திற்கு விரோதமாக, இஸ்லாத்தில் பிரிவினையைக் கற்பித்து, இவர்களும் பிரிவினைவாதிகளாக ஆகிவிட்டார்கள். இஸ் லாத்தில் பிரிவுகள் இல்லை என்ற அல்லாஹ் வின் தெளிவான அறிவிப்புகளில் இவர்களுக்கு உறுதியான நம்பிக்கை இருக்குமானால், “அல்லாஹ்வின் அங்கீகாரம் இல்லாத பெயர்களை சூட்டிக் கொள்கிறவர்கள் அவர்களாகவே இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுகிறார்கள், நாம் முஸ்லிம்கள் என்று மட்டும் சொல்லிக் கொண்டு, இஸ்லாத்தில் நிலைத்து இருப்போம்” என்ற முடிவுக்கே வரமுடியும்.

மேலும் மனிதர்கள் சரிகண்டு, தேர்ந்தெடுத்திருக்கும் எந்தப் பெயரின் கீழும், மனித சமுதாயத்தை, ஒருபோதும் ஒன்று சேர்க்க முடியாது. மனித அபிப்பிராயங்கள் என்று வரும்போது பல அபிப்பிராயங்கள் வருவதைத் தடுக்க முடியாது. அப்படிப்பட்ட மனித அபிப்பிராயத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெயரின் கீழ் செயல்படும் ஒரு பிரிவு வழிகெட்ட 72 பிரிவுகளில் ஆகாது என்பதற்கு என்ன உத்தர வாதம் இருக்கிறது? யார் அந்த உத்திரவாதத்தைத் தரமுடியும்? எனவே மனித அபிப்பிராயங்கள் அனைத்தையும் விட்டு, அல்லாஹ் பெயரிட்ட “முஸ்லிம்’ என்ற பெயரின் கீழ் மக்களை ஒன்று சேர்க்கும் முயற்சியிலேயே நாம் அனைவரும் அவசியம் ஈடுபட வேண்டும். மனித சமு தாயத்தின் ஐக்கியத்தையும், உலக சமாதான சகோதரத்துவ வாழ்க்கையையும் விரும்பும் எந்த நல்ல உள்ளமும் இதை ஏற்காமல் இருக்க முடியாது. இதற்கு மேலும் இது விஷயத்தில் தங்கள் கெளரவம், போட்டி, பொறாமை எண் ணங்கள் காரணமாக மாறுபடும் சகோதரர்களுக்கு இறுதியாக அல்லாஹ்வின் இந்த எச்சரிக்கையைக் கூறி முடிக்கிறோம்.

“எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாக)ப் பிரித்து, பல பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே) உமக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை, அவர்களுடைய வி­யமெல்லாம் அல்லாஹ் விடம் உள்ளது, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்.” அல்குர்ஆன் 6:159

“மார்க்கத்தில் நிர்பந்தமில்லை, வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளி வாகிவிட்டது. ஆகையால் எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து, அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார்”. அல்குர்ஆன் 2:256

Previous post:

Next post: