தப்லீக் ஜமாஅத்தினரின் தஃலீம் தொகுப்பு நூல்

in 2021 ஜுலை

தப்லீக் ஜமாஅத்தினரின் தஃலீம் தொகுப்பு நூல்

அமல்களின் சிறப்புகள்….

ஒரு திறனாய்வு!

  1. அப்துல் ஹமீத்

தொடர் : 71

ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் :

புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் (1154 பக்கங்கள்)

தலைப்பு : திக்ரின் சிறப்புகள்

குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள்.

தமிழாக்கமும், வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட்,  திண்டுக்கல்.

பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த ஒரு பக்கத்திலும் இப்புத்தகம் எத்தனையாவது பதிப்பு என்பது குறிப்பிடப்படவில்லை.

சென்ற இதழில் ….!

ஒருவர் செய்கின்ற திக்ர் அவருடைய உணவை அவருக்கு இழுத்துக் கொண்டு வருகிறது என்று அமல்களின் சிறப்புகள் (அசி) புத்தகத்தில் எழுதியிருப்பதை நிரூபிக்குமாறு, தப்லீக் மர்கஸின் தலைமையைக் கேட்டிருந்ததைப் பற்றி தெரிவித்திருந் தோம்.

இந்த இதழில் ….!

அவர்களிடமிருந்து எந்தவிதமான தகவலும் இல்லை என்பதை இந்த இதழில் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், இதில் அடுத்த நகர்வு ஏற்படும்போது அதனைத் தெரியப்படுத்துகிறோம் என்பதை இங்கே கூறிக் கொண்டு, எமது அடுத்த ஆய்வை இன்ஷா அல்லாஹ் இந்த இதழில் தொடர்கிறோம்.

தப்லீக் ஜமாத்தினர் செய்து கொண்டி ருக்கின்ற திக்ரால் 79 பலன்கள் கிடைப்பதாக அசி புத்தகம் தெரிவித்திருப்பதில் பக்கம் 407ல் 8ஆம் எண்ணில் குறிப்பிடப் பட்டிருக்கும் செய்தியை இப்போது ஆய்வு செய்வோம்.

அசி புத்தகம் தெரிவித்திருப்பதாவது :

8: திக்ர் செய்பவரைப் பற்றி ஒருவித அச்சத்தையும் இன்பத்தையும் ஏற்படுத்துகிறது. அதாவது அவர் பார்வையில் பயம் பிரதிபலிக்கும். அவரைப் பார்ப்பதில் ஒருவித இன்பமும் உண்டாகும்.

எமது ஆய்வு :

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கற்றுத் தந்த திக்ருகளை செய்வதால் கடல் நுரை போன்ற அளவுள்ள பாவங்கள் மன் னிக்கப்படுவதாகவும் (முஸ்லிம் 5221), அவர்கள் யாசிக்கும் சுவர்க்கத்தைத் தருவ தாகவும், நரகத்திலிருந்து அவர்களுக்கு பாதுகாப்பு தருவதாகவும், (முஸ்லிம் : 5218) அல்லாஹ் வாக்களித்து இருக்கிறான். ஆனால், அசி புத்தகம், “திக்ர் செய்வதால், திக்ர் செய்பவரைப் பற்றி ஒருவித அச்சத்தையும் இன்பத்தையும் ஏற்படுத்துகிறது’ என்று கூறுகிறது. திக்ர் செய்வதால் இவ்வாறு ஏற்படும் என்று இறை வசனங்களோ ஹதீதுகளோ தெரிவிக்கவில்லை என்பதை இங்கே கூறிக் கொள்கிறோம்.

திக்ர் செய்பவரைப் பார்த்தால் பார்ப்பவர்களுக்கு பயமும், இன்பமும் ஏற்படுகிறது என்று தெரிவிக்கிறது. ஒருவரைப் பார்த்து பயப்படுபவரால் எப்படி இன்பம் பெற முடியும்? சாத்தியம் இல்லையே!

பார்க்கப்படுபவர் பைத்தியக்காரராக இருந்தால் மட்டுமே. இந்த பைத்தியம் நம்மீது விழுந்து நம்மைப் பிராண்டிப் பிடுங்கி விடுமோ என்ற பயம் பார்ப்பவருக்கு ஏற்படும் அப்படி பயப்படுகின்ற நபர் மீது விழுந்து பிராண்டிப் பிடுங்கவில்லை என்றால், இது நல்ல பைத்தியமாக இருக்கிறது என்றெண்ணி, பார்ப்பவர் மகிழ்ச்சி அடைந்து அந்த மகிழ்ச்சியால் இன்பம் பெற வாய்ப்புண்டு. ஆக, திக்ர் செய்பவர் களை பார்ப்பவர்களுக்கு ஒரே நேரத்தில் அச்சமும் இன்பமும் ஏற்படும் அளவுக்கு திக்ர் செய்பவர்கள் பைத்தியக்காரர்களாக இருக்கிறார்கள் என்று அசி புத்தகத்தின் திக்ருகளை அசி புத்தகமே இழிவாகக் கூறிக் கொள்கிறதா? அப்படி இருக்க வாய்ப்பு இல் லையே! அப்படியானால், அசி புத்தகம் வேறு எதையும் தெரிவிக்க முயற்சி செய்கி றதா என்று சிந்திப்போம்!

“அதாவது அவர் பார்வையில் பயம் பிரதிபலிக்கும்” என்று அசி புத்தகம் மேலும் விளக்கி இருக்கும் வாசக அமைப்பு, ஒரு வேளை திக்ர் செய்பவரின் பார்வையில் பயம் வெளிப்படுகிறது என்று எடுத்துக் கொள்ளவும் இடமளிக்கிறது. ஏனென்றால் நடைமுறையில் திக்ர் செய்பவர்களில் பெரும்பாலோர் பயப்படுபவர்களாக இருப்பவர்களாகத்தான் தெரிகிறது. எவ்வாறென்றால், இவர்கள் குர்ஆன் ஹதீதுகளை பின்பற்றுபவர்களைப் பார்த்தவுடன், பார்த்ததாகக் காட்டிக் கொள்ளாமல் சலாம் கூட சொல்லாமல் தவிர்த்து விடுகிறார்கள். அதாவது ஒரு முஸ்லிமைப் பார்க்கும்போது சலாம் சொல்ல வேண்டும் என்ற “இஸ்லாத்தின் அடிப்படையைக் கூட இவர்கள் வேண்டுமென்றே செயல்படுத்துவதில்லை.” தயவு செய்து வாசகர்கள், இதை தனிமனித விமர்சனம் என்று கருதிவிட வேண்டாம். ஏனென்றால் ஜமாத்தில் சென்று, முஸ்லிம்களை தனித்தனியாக அவரவர்களின் வீடுகளுக்குச் சென்று சந்திக்கும் இவர்களது கஸ்த்துக்களில் கூட, குர்ஆன் மற்றும் ஹதீதுகளை மட்டும் பின்பற்றுபவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களை சந்திப்பதும் இல்லை. அவர்களை சந்திப்பதை வேண்டு மென்றே தவிர்த்து விட்டு, மற்ற முஸ்லிம்களின் வீடுகளுக்குச் சந்திக்கச் சென்று விடுகிறார்கள். ஆக திக்ர் செய்பவரின் பார்வையில் பயம் அவருக்கே இருக்கும் என்பதும் நடைமுறையில் உண்மையாகத்தான் தோன்றுகிறது.

எது எப்படி இருந்தாலும் திக்ர் செய்ப வர்களாக இருந்தாலும் சரி, திக்ர் செய்பவர் களைப் பார்ப்பவர்களாக இருந்தாலும் சரி எவருமே பயப்படவும் இன்பமாகவும் ஒரே நேரத்தில் இருக்க முடியாது என்றே தோன்றுகிறது. இருக்க முடியும் என்றால், அது மார்க்கம் அனுமதிக்காத ஹராமான வழி களாகத்தான் இருக்கும் என்று கூறிக் கொள்கிறோம். இதைப் பற்றி விளக்க வேண்டாம் எனக் கருதி விட்டுவிடுகிறோம்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் காட்டித்தராத திக்ருகளை அறிமுகமாக்கி செயல்படுத்திக் கொண்டிருக்கும் இவர்கள் கூறும் 79 பலன்களில் ஒன்றைக்கூட இவர்கள் அடைய முடியாது என்பதை 10வது பலனில் தெரிவிக்கிறார்கள். அதை கவனமாகப் படித்துப் பாருங்கள்.

அசி புத்தகம் அடுத்து தெரிவித்திருப்பதாவது:

  1. “முராக்கபா’ என்னும் தியான நிலை உண்டாகிறது. இது இஹ்ஸான் என்ற பதவி வரை மனிதனை உயர்த்தி விடுகிறது. அதன் மூலமாகத்தான் அல்லாஹு தஆலாவைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்று வணக்கங்கள் செய்யக்கூடிய அந்தஸ்தை மனிதன் அடைந்துவிடுகிறான். (இந்தப் பதவிதான் சூஃபியாக்களின் இறுதி நோக்கமாக இருந்து கொண்டிருக்கிறது)

எமது ஆய்வு :

“முராக்கபா’ என்னும் தியான நிலை பற்றி ஏற்கனவே நாம் நிறைய எழுதி இருக்கிறோம். தியான நிலை என்பதெல்லாம் இஸ்லாத்தில் இல்லவே இல்லை. முனிவர் கள், அவர்களின் தியானம், தவயோகிகள், அவர்களின் தவம் என்ற இஸ்லாத்தில் இல் லாத சிந்தனைகளை இஸ்லாத்தில் நுழைக் கும் கூட்டம்தான் இந்த சூஃபியாக்களின் கூட்டம். அவர்களின் தியானங்களுக்கு ஒப்ப புதிது புதிதாக திக்ருகளை அறிமுகமாக்கி செயல்படுத்திக் கொண்டிருக்கும் இவர்கள் மனிதர்களை இஹ்ஸான் என்ற பதவிக்குக் கொண்டு செல்கிறார்களாம்.

இஹ்ஸான் என்று ஒரு பதவி இருக்கிறதா? முதலில், இஹ்ஸான் என்றால் என்னவென்று அறிவோம். இஹ்ஸான் என்பது ஒரு பதவி அல்ல, அது ஒரு நல்ல நிலை. நல்ல படித்தரம் (தரஜா) ஆகும். 55:60வது இறை வசனத்திலிருந்து நல்லது/நன்மை என்று நேரடியாக அதற்குப் பொருள் கொள்ள முடிகிறது. (55:60 நன்மைக்கு நன்மையைத் தவிர கூலி உண்டா?) எனவே, இஹ்ஸான் என்பது நல்ல அழகிய முறையில் செயலாற் றுவது ஆகும் என்பதை நினைவிற் கொள்வோமாக!

அடுத்து இஹ்ஸான் என்பதற்கான அர்த்தத்தை ஒரு ஹதீஃதிலிருந்தும் அறிவோம்.

நபி(ஸல்) அவர்கள் ஒருநாள் மக்களுக் கிடையில் இருந்தபோது அவர்களிடம் ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்து மார்க்கத்தை மக்களுக்குக் கற்றுத் தருவதற்காக, ஈமான் என்றால் என்ன? இஸ்லாம் என்றால் என்ன? என்ற கேள்விகளைக் கேட்டு பதில்களைப் பெற்ற பிறகு இஹ்ஸான் என்றால் என்ன என்று வினவுகிறார்கள். “அல்லாஹ்வை நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வுடன் வழிபடுவது (அதாவது, நல்ல, அழகிய முறையில் செயலாற்றுவது) ஆகும். அல்லாஹ்வை நீங்கள் பார்க்கவில்லை என் றாலும், அவன் உங்களைப் பார்க்கின்றான் என்று பதிலளித்தார்கள். அடுத்து, மறுமை நாள் பற்றியும், மறுமை நாளின் அடையா ளங்களைப் பற்றியும் வினவி பதில்களைப் பெற்றுக் கொள்கிறார்கள். (ஹதீதின் சுருக்கம்) (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரழி), நூல்: முஸ்லிம், ஹதீஃத் எண்கள்: 10, 5,7, அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரழி), நூல்: புகாரீ, ஹதீத் எண். 50)

அடுத்ததாக, அசி புத்தக ஆசிரியர், “இஹ்ஸான் என்ற பதவியின் மூலமாகத் தான், அல்லாஹு தஆலாவைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்று வணக்கங் கள் செய்யக்கூடிய அந்தஸ்தை மனிதன் அடைந்துவிடுகிறான். (இந்தப் பதவிதான் சூஃபியாக்களின் இறுதி நோக்கமாக இருந்து கொண்டிருக்கிறது) என்றெல்லாம் கதைக்கிறார்.

அல்லாஹு தஆலாவைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்று வணக்கங் கள் செய்யக்கூடிய நல்ல செயல்தான் இஹ்ஸான் என்று குர்ஆனும், ஹதீஃது களும் சொல்லிக் கொண்டிருக்கையில், இஹ்ஸான் என்ற பதவியின் மூலமாகத்தான் நல்ல செயல்களை செய்ய முடியும் என்று தனது உல்ட்டா வேலையை செய்கிறார் அசி ஆசிரியர். அதாவது இது சம்பந்தமாக குர்ஆன் மற்றும் ஹதீதுகளைப் படித்து விட்டு, அவைகளுக்கு மாற்றமான கருத்தை இஸ்லாத்திற்குள் நுழைத்து விடுகிறார்.  (இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Previous post:

Next post: