மனிதனே உனக்கு மறு உலக வாழ்வு உண்டா?

in 2021 ஜுலை

மனிதனே உனக்கு மறு உலக வாழ்வு உண்டா?

S.H.  அப்துர் ரஹ்மான்

“இவ்வுலக வாழ்வு மட்டுமே மனிதனுக்கு உண்டு. மறு உலக வாழ்க்கை என்பது கற்பனையைத் தவிர வேறில்லை” என்றே பலரும் கருதிக் கொண்டிருக்கின்றனர்.

…”(இவ்வுலகத்தில் நாம் வாழ்ந்திருப்பதைத் தவிர (அப்பால் மறு உலக வாழ்வு என்று) ஒன்றும் இல்லை, நாம் (மரணத்திற்குப் பின் மறுபடியும்) எழுப்பப்பட மாட்டோம்” என்றும் அவர்கள் கூறுகின்றனர். (இறைநூல்: 6:29)

இவ்வுலக வாழ்க்கையின் முடிவு மரணமே, இதை யாரும் மறுக்க முடியாது. மரணம் எனும் சத்தியத்தை சந்தித்த பின்னர் மனிதர்கள் அனைவரும் தன்னை படைத்தவனிடம் மீள வேண்டும். இதனையே இறை நூல், “ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைக்கக் கூடியதேயாகும். பின்னர் நீங்கள் நம்மிடமே மீள்விக்கப்படுவீர்கள்.” (29:57) உணர்த்தி நிற்கின்றது.

மறு உலகில் (மரணத்திற்குப் பின் உள்ள மனிதனின் நிலை) படைத்தவன் அருளை பெற்று மறு உலக வாழ்வில் சுகமாக வாழ்வதற்கே. இம்மையில் மனிதனைப் படைத்துள்ளான் இறைவன். ஆனால் ஒரு நிபந்தனை. இவ்வுலகில் மனிதன் எந்த முறையில் வாழ்கின்றான்? தன்னுடைய நற்பண்புகளாலும், நல்லொழுக்கத்தாலும் மனித நேயத்துடனும், பிறருக்கு எவ்விதத் தீங்கு தராமலும் வாழ்கின்றானா? இவற்றை பொறுத்தே அவனுடைய மறு உலக வாழ்வு சிறப்பாக அமையும்.

இம்மையில் மனிதன் தான் செய்யும் செயல்களுக்கு ஏற்ப வெகுமதியோ, தண்டனையோ பெற்று முடிவற்ற நிலையான வாழ்க்கை வாழ வேண்டும் என்று இறைவன் விதித்த வாழ்க்கையே “மறு உலக’ வாழ்க்கை.

இவ்வுலகம் ஒரு நாள் முற்றுமாக அழியக்கூடியதே ஒவ்வொருவரும் மரணத்தைத் தழுவியே ஆகவேண்டும்.

இவ்வுலகில் பிறந்த மனிதன் தான் நிச்சயமாக சந்திக்கப் போகும் மரணத்தை சுகிப்பது வரை மரணத்தை மறந்தவனாக இவ்வுலக சுகங்களில் தன்னை மறந்து மூழ்கிப் போயுள்ளான். இவ்வுலக வாழ்வு அற்பமானது என்றும், நிலையற்றது என்றும் பல்வேறு இறைநூல் வசனங்கள் கூறுகின்றன. ஆனால் இவற்றைப் படித்து மனிதன் உணர்வு பெறுகின்றவனாக இல்லை.

அறிந்து கொள்ளுங்கள்: “நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும். மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும், பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும். இது மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும். அதாவது அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப்படுத்துகிறது. ஆனால், சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கிறீர். பின்னர் அது கூளமாகி விடுகிறது. (உலக வாழ்வும் இத்தகையதே) எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு! மறுமையில் கடுமையான வேதனையுண்டு. (நம்பிக்கையாளர்களுக்கு) படைத்தவனின் மன்னிப்பும் அவன் பொருத்தமும் உண்டு. ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை. (இறைநூல்: 57:20)

இவ்வுலக வாழ்க்கை வீணானதும் வேடிக்கையானதும் தான் என்பதை அவ்வப்போது ஏற்படும் இயற்கை அழிவுகள் மனிதர்களுக்கு போதித்துக் கொண்டுதான் உள்ளன. எனினும் உலக அலங்காரங்களில் தன்னை மறந்து லயிக்கும் மனிதன் சில கால இடைவெளிகளிலேயே இதனை மறந்து விடுகின்றான்.

பேரிழப்புகளின் போது மனிதன் தன்னை காத்துக்கொள்ள அங்குமிங்கும் அலை பாய்வதை பார்க்கும் பொழுது இறைநூல் எச்சரிக்கும் மறுமை நாள் நிகழ்ச்சிகள் கண் முன்னே விரிகின்றன.

“அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான், தன் சகோதரனை விட்டும், தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும், தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும், அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமான தாகயிருக்கும்” (இறைநூல்: 80:34-37)

இத்தகைய நிலையற்ற வாழ்க்கையில் நிச்சயித்த மரணம் நெருங்கும் பொழுது, தான் மிகவும் நேசிக்கும் தன் மனைவி, பிள்ளைகள், சம்பாதித்து வைத்த செல்வங்களால் எவ்வித உதவியும் பெற முடியாத கையாலாகாத நிலையில் தான் மனிதன் இருக்கின்றான். இதனை எண்ணிப் பார்க் கும் தருணமே இவ்வுலக வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மை புலப்படும்.

“படைத்தவனே! எங்களுக்கு இவ்வுலக வாழ்வையும் அழகாக்கி வைப்பாயாக! மறு உலக வாழ்வையும் அழகாக்கி வைப்பாயாக! நரகின் நெருப்பை விட்டும் பாதுகாப்பாயாக!” என்று இறைவனை இறைஞ்சக் கூடியவர்களாக இருக்கின்றோம்.

இறை நம்பிக்கையும், இறையச்சமும், நற்செயல்களுமே நம்மை மறு உலக வாழ்வில் மகிழ்விக்கும்.

“நீங்கள் எப்படி படைத்தவனை நம்ப மறுக்கின்றீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான். பின்பு அவன் உங்களை மரணமடைய செய்வான். மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான். மேலும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக் கொண்டு வரப்படுவீர்கள்.
(இறை நூல் : 2:28)

எவர்கள் நம் வசனங்களையும், (அத் தாட்சிகளையும்) மறு உலகில் (நம்மைச்) சந்திப்பதையும் பொய்யயனக் கூறுகின்றார் களோ அவர்களுடைய நற்கருமங்கள் யாவும் அழிந்துவிடும். அவர்கள் எவ்வாறு செயல்பட்டார்களோ அதற்குத் தகுந்த கூலியைத் தவிர வேறு எதைப் பெற முடியும்?
(இறைநூல் : 7:147)

இம்மையில் ஈமானுடன், இறை வணக்கம் பேணி, முறையாகத் தன் சேமிப்பு செல்வத்தில் இரண்டரை விழுக்காட்டை எழைகளுக்கு தந்து நோன்பு நோற்று மனித நேயத்துடன் கூடிய பிற அன்றாடச் செயல்பாடுகளில் எவர்கள் முன்மாதிரி யாகத் திகழ்கின்றார்களோ அவர்களே வெற்றியாளர்கள். அவர்கள் இறையருளுடன் கூடிய மறு உலக வாழ்வை நிச்சயமாக அடைவர்.

இவ்வுலகம் ஒரு விளை நிலம், இதில் செய்யும் விளைச்சலைப் பொறுத்து மறு உலக வாழ்வு சிறப்பாக அமையும். இவ்வுலக வாழ்வை விட மறு உலக வாழ்க் கையே சிறந்தது என்பது இறைவன் சொல். இவ்வுலக வாழ்வு சில காலம்தான், மறு உலக வாழ்வோ நிரந்தரமானது.

“விசாரணை நாள்” எனும் “”இறுதி நாள் பற்றி நூலில் ஓர் அத்தியாயமே உள்ளது.

“அந்நாளில் பார்வையும் மழுங்கி சந்திரனின் ஒளியும் மங்கி, சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும். அந்நாளில் தப் பித்துக்கொள்ள எங்கு ஓடுவது என்று மனி தன் வினவுவான். இல்லை, இல்லை தப்பித்துக் கொள்ள இடமே இல்லை. அந்நாளில் உம் இரட்சகனிடம் தான் தங்குமிடமுண்டு” (இறைநூல் : 75:7-12)

“படைத்தவன் ஒருவனே தீர்ப்பு நாளின் அதிபதி” (இறைநூல் : 1:3)

…(மரணத்திற்கு பின்) படைத்தவனைச் சந்திப்பதைப் பொய் என்று கூறியவர்கள் நிச்சயமாக நஷ்டம் அடைந்தவர்களாகி விட்டனர். அவர்களிடம் மறுமை நாள் திடீரென வரும்பொழுது உலகில் நாங்கள் அலட்சியமாய் இருந்ததற்காக எங்களுக்கு ஏற்பட்ட கை சேதமே என்று கூறுவார்கள். மேலும் அவர்கள் தங்கள் (பாவச்) சுமைகளை தங்கள் முதுகுகளின் மேல் சுமப்பார்கள். அவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள். (6:31)

எனவே, “மனிதர்கள் ஒவ்வொருவரும் இவ்வுலக வாழ்க்கையை விட மறு உலக வாழ்க்கைக்காகவே படைக்கப்பட்டுள்ளனர். மறு உலக வாழ்வே மிக சிறந்தது” என்பதை நம்பி இம்மையில் பணிவுடனும் இறை நம்பிக்கையுடனும் இறையச்சத்துடனும் வாழ முயற்சிப்போம்.

—————————————–

படியுங்கள்!  சிந்தியுங்கள்!  வாழ்வியலாக்குங்கள்  குர்ஆனை!

ஷரஹ் அலி,  உடன்குடி

வற்றாத கருவூலம் கூட வற்றிவிடுமோ என அஞ்சுபவன்:

(தூதரே!) “என் இறைவனின் அருள் கருவூலங்கள் அனைத்தையும் நீங்கள் உடைமையாக்கிக் கொண்டிருந்தாலும், அப்போதும் அவை செலவாகி விடுமோ என அஞ்சி (யாருக்கும் வழங்காமல்) நீங்கள் இறுக்கி வைத்துக் கொள்வீர்கள்” என்று நீர் கூறுவீராக! மனிதன் பெரும் கருமியாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 17:100)

நபிகளாரின் எச்சரிக்கை :

எவர் ஒருவர், பிறருடைய நிலம், பொருட்கள் போன்றவற்றை அபகரிக்கின்றாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்ல என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார் கள்.

நபிமொழி ஆய்வாளர் :

இப்னு மாஜா, நபிமொழி எண். 3935, முஸ்னத் அஹ்மத் நபிமொழி எண். 1465, அபூதாவூத், நபிமொழி எண். 4391.

பிறரை கேவலப்படுத்துபவனாக, சபிப்பவனாக, கெட்ட வார்த்தை பேசுபவனாக தீய சொற்களை கூறுபவனாக ஒரு உண்மையான இறை நம்பிக்கையாளன் முஃமின் இருக்க மாட்டான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

நபிமொழி ஆய்வாளர்கள்:

திர்மிதி, நபிமொழி எண். 1977, இப்னு ஹிப்பான், நபிமொழி எண். 194, அதபுல் முஃப்ரத், நபிமொழி எண். 3121, சுனன் பைஹகீ, நபி மொழி எண். 4693, முஸ்னத் பஸ்ஸார், நபிமொழி எண். 3206.

(நபியே!) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர். (அல்குர்ஆன் 68:4)

(தூதரே!) நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில் நிச்சயமாக நல்லுபதேசம் உண்மை இறை நம்பிக்கையாளர்களுக்குத்தான் நற்பயனளிக்கும். (அல்குர்ஆன் 51:55)

தீய சூழ்ச்சிகளை செய்யும் (அந்த) சூழ்ச்சிக்காரனை தவிர மற்றெவரையும் (அவனுடைய சூழ்ச்சி) சூழ்ந்து கொள்ளாது. (அல்குர்ஆன் 35:43)

Previous post:

Next post: