ஹதீஃத் பெட்டகம்…

in 2021 ஜுலை

ஹதீஃத் பெட்டகம்…

Dr. A.  முஹம்மது அலி,

ஜுன் மாத தொடர்ச்சி :

அனஸ் பின் மாலிக்(ரழி) அவர்கள் விளக்குகிறார்கள்:

யூதர்கள் மாதவிடாய் பெண்களுடன் உணவு உண்ணமாட்டார்கள். அவர்களது வீட்டில் தங்க வைக்க மாட்டார்கள். எனவே நபித்தோழர்கள் ரசூல்(ஸல்) அவர்களிடம் மாதவிடாய் பற்றி வினவினார்கள். அல்லாஹ் அருளிய வஹீ (இறைச் செய்தி)யை 2:222 ஓதிக் காட்டினார்கள். இதற்கு விளக்கமாக, மாதவிடாய் பெண்களுடன் உடலுறவைத் தவிர அனைத்தும் அனுமதிக்கப்பட்டது எனத் தெரிவித்தார்கள். இதனைச் செவியுற்ற யூதர்கள், இம் மனிதர் ரசூல்(ஸல்) அவர்கள் நமக்கு மாற்றமாக சொல்வதையே வழக்கமாக்கியுள்ளார் எனக் கூறினர். உசைது பின் ஹுதைர், அப்பாது பின் பிஷர் (ரழி அன்குமா) என்ற இரு நபித்தோழர்கள் ரசூல்(ஸல்) அவர்களிடம் வந்து யூதர்கள் கூறுவதை எடுத்துரைத்து நாமும் யூதர்கள் போல மாதவிடாய் பெண்களை முழுமையாக ஒதுக்கி வைக்கலாமே எனக் கூறினார்கள். இதனைக் கேட்ட ரசூல்(ஸல்) அவர்களது முகம் மாறியது. தங்கள் மீது ரசூல்(ஸல்) கோபப்பட்டு விட்டார்களோ என நினைத்து அவ்விருவரும் விலகிச் சென்றார்கள். அப்போது ரசூல்(ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக பால் வந்தது. அதனை அவ்விரு நபித்தோழர் களுக்கும் வழங்கினார்கள். இதன்மூலம் தங்கள் மீது ரசூல்(ஸல்) அவர்களுக்கு கோபமில்லை என உணர்ந்தனர்.

யூதர்களைப் போல மாதவிடாய் பெண்களை தொட்டால் தீட்டு, பார்த்தால் பாவமென, எல்லாவிதத்திலும் ஒதுக்கி வைக்கத் தேவையில்லை. அவர்களுடன் உடலுறவில் மட்டும் விலகி மற்ற அனைத்து விஷயங்களிலும் சகஜமாக ஒட்டி உறவாடலாமென ரசூல்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் ஆணையை அறிவுறுத்தினார்கள். அன்னை ஆயிஷா(ரழி), உம்மு ஸலமா(ரழி) போன்றவர்கள் மாதவிடாய் காலங்களில் ரசூல்(ஸல்) அவர்களுடன் ஒரே போர்வையில் படுத்திருந்திருக்கிறார்கள், ரசூல்(ஸல்) அவர்களுடன் உணவு உண்டிருக்கிறார்கள், அவர்களுக்கு தலைக்கு எண்ணையிட்டு தலை சீவி விட்டிருக்கிறார்கள், ஒரு சிறந்த இறை வணக்கமான இஃதிகாஃபில் கலந்து கொண்டிருக்கிறார்கள். இவையனைத்தை யும் புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, திர்மிதி, இப்னுமாஜ்ஜா போன்ற எல்லா ஹதீஃத் நூல்களிலும் “ஹைழ்’ என்ற பாடங்களில் காணலாம்.

இன்று நமது முஸ்லிம் சகோதரிகளிடம் ஒரு தவறான எண்ணம் நிலவி வருவதைக் காணலாம். அவர்கள் மாதவிடாயில் இருக்கையில் தொழும் பாய் (முஸல்லா), இஸ்லாமியர்கள் குறிப்பாக அரபியிலுள்ள குர்ஆன், ஹதீஃத் நூல்களைத் தொடக் கூடாது என நினைத்துள்ளனர். இந்நிலை இன்று, நேற்று உருவானதல்ல, ரசூல்(ஸல்) அவர்களது காலத்திலேயே, அவரது மனைவியர்களிடையே நிலவியுள்ளதை இந்நபி மொழி தெளிவுபடுத்துகின்றது. எனவே தான் ரசூல்(ஸல்) அவர்கள் தனது மனைவி ஆயிஷா(ரழி) அவர்களிடம் தொழும் பாயை அல்லது தனது ஆடையை எடுத்து வரக் கூறிய போது அன்னையவர்கள் தான் மாதவிடாயிலிருப்பதாக அறிவிக்கிறார்கள். மாதவிடாய்காரியான தான் தொழும் பாயை, துணியைத் தொட்டால் தீட்டா குமே! என்ற நினைவில் கூறுகிறார்கள். அருமை நபி(ஸல்) அவர்கள் “மாதவிடாய் உனது கைகளிலிருந்து வரவில்லை, எனவே கையால் எடுத்து வருவதால் அது தீட்டா காது, எடுத்து வா” என ஆணையிடுகிறார் கள். ஆயிஷா(ரழி) அவர்களும் தெளிவு பெற்று எடுத்து வந்து தந்தார்கள்.

மாதவிடாய் பெண்கள் குர்ஆனை, ஹதீஃத் நூல்களைத் தொடலாமா? என்ற நியாயமான கேள்விக்கும் பதில் காண்பது அவசியம். குர்ஆனை தொடுவதால் நன்மையோ, தீமையோ அறவே கிடையாது. அதனை ஓதுவதாலும், விளங்கி செயல்படுவதாலும் மட்டும் நன்மை கிடைக்குமேயன்றி சாதாரணமாக தொடுவதால் கிஞ்சிற்றும் நன்மை கிடைப்பதற்கு ஆதாரமில்லை. தொடுவதால் நன்மை கிடைக்குமென்றால் திருகுர்ஆனை அச்சடித்த அச்சகத்தவர்கள், அதனை பைண்டிங் செய்த பைண்டர்கள், அதனை விற்கும் புத்தக வியாபாரிகளுக்கு நம்மை விட அதிகம் நன்மைகள் கிடைக்கும். ஏனெனில் நாம் ஒரே ஒரு குர்ஆனைத் தொடுகிறோம். அவர்கள் அநேக குர்ஆனை தொடுகிறார்கள். எனவே குர்ஆனை தொடுவதால் நன்மை கிடைக்குமென நினைப்பது தவறாகும்.

குர்ஆனை தொடுவது கண்ணியமானது, சிறப்பானது என நினைப்பவர்கள் அகில உலகத்திற்கும் அருட்கொடையாக அனுப் பப்பட்ட ரசூல்(ஸல்) அவர்களை தொடுவதும் சிறப்பானது, மகிமை மிக்கது என்பதை மறுக்க மாட்டார்கள். அந்நிலையில் அவர்களது மனைவியவர்கள் மாதவிடாய் காலங்களில் தொடாமல் விலகியிருந்திருக்க வேண்டும். அப்படி செய்யவில்லை, ரசூல் (ஸல்) அவர்களும் அதனை அனுமதிக்கவில்லை. தனது மனைவி ஆயிஷா(ரழி) அவர்கள் மாதவிடாயிலிருந்த போது ரசூல் (ஸல்) அவர்கள் நமது அன்னை, அவரது மனைவி, அவர்களது மடியில் தலை வைத்து படுத்தவர்களாக திருகுர்ஆனை ஓதியிருக்கிறார்கள்.

அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நாம் மாதவிடாயிலிருந்த போது ரசூல் (ஸல்) அவர்கள் எனது மடியில் படுத்து திரு குர்ஆனை ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள். ஆதாரங்கள்: புகாரி: ஹைழ் : 5:1:296, முஸ்லிம்: ஹைழ்: 3:1:591, முஸ்னத் அஹ்மத்.

மிகவும் கண்ணியத்திற்குரிய ரசூல்(ஸல்) அவர்கள் மாதவிடாயிலிருந்த தனது மனைவியை தொட்டிருக்கிறார்கள், அவர்களது மடியில் படுத்து இருக்கிறார்கள், அது மட்டுமல்ல திருகுர்ஆனையும் ஓதியிருக்கிறார்கள். இதிலிருந்து மாதவிடாய்ப் பெண் கள் நமது சகோதரிகள் நினைப்பது போல, மாற்று மதத்தினர் வழக்கம் போல, தீட்டானவர்கள், தீண்டதகாதவர்களல்ல என்பதையும் மகிமைக்குரிய ரசூல்(ஸல்) அவர்களே திருகுர்ஆனை ஓதும்போதே தொட்டிருக்கிறார்கள் என்பதையும் விளங்கலாம்.

மாதவிடாய்ப் பெண்கள் ரசூல்(ஸல்) அவர்களையே தொடலாமெனில் இன்று குர்ஆனைத் தொடுவது தவறாகுமா? சிந்தியுங்கள்.

நாம் ஆய்ந்தறிந்த வரையில் மாதவிடாய் பெண்களிடம் உடலுறவு மட்டும் கொள்ளக்கூடாது, மற்றபடி சகஜமாக அவர்களுடன் இணைந்து வாழலாம். மாதவிடாய் பெண்களுக்கு தொழுகை, நோன்பு, ஹஜ்ஜின்போது தவாஃப்(மட்டும்) என்ற இறைவணக்கங்கள் இல்லை, மாதவிடாய் நின்ற பின் மாதவிடாயால் விடுபட்ட நோன்பை மட்டும் வைக்க வேண்டும். தொழுகை, தவாஃப்களை திரும்ப செய்யத் தேவையில்லை.

மற்றபடி வேறு எந்த நிலையிலும் மாதவிடாய் பெண்களை ஒதுக்கி வைப்ப தற்கோ, தீட்டானவர்கள், தீண்டதகாதவர்கள் என நினைப்பதற்கோ இஸ்லாத்தில் இடம் இல்லை.

முழு மனித சமுதாயத்திற்கும் ஒரே நேர்வழியான இஸ்லாம் பகுத்தறிவு, அறிவியல் பூர்வமான தூய்மையான வாழ்விற்கு வழி காட்டுகிறது. மாதவிடாயிலிருக்கும் பெண் களுடன் உடலுறவு கொள்ளக்கூடாது என்று இஸ்லாம் 1400 வருடங்களுக்கு முன்பே எழுத படிக்கத் தெரியாத நபி(ஸல்) அவர்கள் மூலம் அறிவுறுத்தியிருப்பதை இன்றைய நவீன மருத்துவத் துறையின் ஆய்வுரைகள் உண்மைப்படுத்தியுள்ளன. மாதவிடாய் பெண்களுடன் உடலுறவு கொள்வதால் Severe Menorrhagia, perimetritic, irritation and parametritic inflammations போன்ற உடல் அசெளகர்யங்கள் ஏற்படும் என மருத்துவத்துறை கூறுகிறது. மேலும் உடல், உள்ள ரீதியாக அச்சமயம் பெண்கள் உடலுறவை விரும்புவதில்லை என்றும் தெரிவிக்கின்றன. மாதவிடாய் இயற்கை யாக பெண்களுக்கு ஏற்படும் ஒரு நிகழ்வு எனக் கொண்டு பழக வேண்டும். முஸ்லிமான மாதவிடாய் பெண்கள் மாற்று மதத்தினர், கலாச்சாரத்தினர் கூறுவதை, செயல்படுவதைக் கண்டு தாங்களும் அப்படிப்பட்டவர்களே! என நினைத்தல் கூடாது.

இஸ்லாமிய சகோதரிகளே! தோழிகளே!

உங்களது வாழ்வில் ஏற்படும் மாதவிடாயை ஒரு இயற்கை நிகழ்வாகக் கொண்டு அல்லாஹுவும், அவனது தூதர் (ஸல்) அவர்களும் அளித்துள்ள வேறு, எவருக்கும் கிடைக்காத சலுகைகளை முழுமையாக பயன்படுத்தி வாழுங்கள். அல்லாஹ் நம்மனைவரும் அவன் நல்லருள் பெற வாய்ப்பளிப்பானாக! ஆமீன்.

Previous post:

Next post: