ஹராமை உண்ணும் ஹஜ்ரத்க(ல்)ள்!

in 2021 ஆகஸ்ட்

ஹராமை உண்ணும் ஹஜ்ரத்க(ல்)ள்!

ஹலரத் அலி

தூய இஸ்லாம் இன்று பெரும்பான்மை முஸ்லிம்களின் நடவடிக்கைகளால் இறை மறுப்புக்கு ஒப்பாகிவிட்டது. சுன்னத்தைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு பித்அத்தை சுன்னத் என்ற பெயரில் அரங்கேற்றிவிட்டார்கள். நன்மைகள் தீமைகள் ஆகவும், தீமைகள் நன்மைகளாகவும், முஸ்லிம்களால் மாற்றப்பட்டுவிட்டன. நபி(ஸல்) அவர்களின் காலத்தில், நபித் தோழர்கள், தாபீயீன்கள் வாழ்ந்த பொற்காலத்தில் இருந்த அசல் மார்க்கம் இன்று காணப்படவில்லை. நபி(ஸல்) அவர்களின் காலத்தில் வழிகேட்டில் வீழ்த்தும் செயல்களாக கருதப்பட்டவை இன்று நேர்வழி காட்டிகளாக கருதப்படுகின்றன. இந்த மாற்றம் ஏன் ஏற்பட்டது? எப்படி ஏற்பட்டது என்று ஆராயும் பொழுது திருமறை இதற்கான பதிலை தருகின்றது.

“ஈமான் கொண்டவர்களே! மார்க்க அறிஞர்கள், மற்றும் துறவிகள் பலரும் மக்களின் செல்வங்களை அநியாயமாக உண்கிறார்கள். மேலும் அல்லாஹ்வின் பாதையிலிருந்து அவர்களைத் தடுக்கிறார்கள்.” (அல்குர்ஆன் 9:34)

இதன் கருத்து தெளிவானதாகும். சுயநலம் கொண்ட ஆதாய நோக்கமுடைய முல்லாக்கள், மெளலவிகள் தங்களது 7 வருட மதரஸா படிப்பை முதலாக்கி அதையே தொழிலாக்கி, தங்கள் பிழைக்கும் மார்க்கமாக்கி கொண்டதுதான். இன்னும் சில மோசடி ஷெய்குகள், பீர்கள் தங்களது மனஇச்சையை தீர்த்துக் கொள்ளவும் அப்பாவி முஸ்லிம்களின் பொருளை விழுங்கவும், மார்க்கத்தை வியாபாரமாக்கி விட்டனர்.

ஷிர்க்கின் தலைமைப் பீடம் அன்று :

அன்றைய அறியாமை காலத்தில் 360 சிலைகள் நிரம்பிய கஃபாவில், முஆவியா கோத்திரத்தார் கொடுத்த ஹுபல் சிலையே பிரதானமானது. அடுத்து குறை´யரின் பெருமைக்குரிய ஆலயங்களாக மூன்று விளங்கின. “கடவுளின் பெண் மக்கள்’ என்று பக்தியோடு வணங்கப்பட்ட லாத், உஸ்ஸா, மனாத் கோவில்களாகும்.

 1. மதீனாவிற்கு மேற்கே செங்கடலை ஒட்டிய “குதைத்’ என்னும் பிரதேசத்தில் இருந்து “மனாத்’ கோவில்.
 2. மக்காவிலிருந்து ஒரு நாள் பிரயாண தூரத்தில் இருந்தது “நக்லா’ எனும் சமவெளி பிரதேசம். இங்கிருந்தது அல்உஸ்ஸாவின் குறைஷ்களின் அதிக சிறப்பு வாய்ந்த ஆலயம்.
 3. தாயிப் நகரில் ஹவாஸின் கோத்திரமான “தகீப்’களின் நிர்வாகத்தில் இருந்த கோயில் “தாயிப்மாது’ என்று பெருமையுடன் அழைக்கப்பட்ட சிலை “அல்-லாத்’ ஆகும்.

ஏகத்துவம் வெற்றி பெற்றதும் நபி(ஸல்) அவர்கள் ஷிர்க்கின் கேந்திரங்களை அழித்தொழிக்க அலி(ரழி), காலித் பின் வலீத்(ரழி) அவர்களுக்கு கட்டளையிட்டார்கள். “அல்-உஸ்ஸா’வின் ஆலயத்தை அழித்த பின் காலித்(ரழி) கூறினார். என் தந்தை வலீத் 100 ஒட்டகங்களையும், செம்மறி ஆட்டு மந்தை களையும் கொண்டு சென்று உஸ்ஸாவிற்கு பலி கொடுத்து தம் நேர்ச்சைகளை நிறை வேற்றி வருவார்.

ஷிர்க்கின் தலைமைப் பீடங்கள் இன்று :

நபி(ஸல்) அவர்கள் அழித்தொழித்த ஷிர்க்கின் கேந்திரங்கள், இன்று நம்மிடையே இஸ்லாமிய பெரியார்களின் பெயர்களை தாங்கி, தர்ஹா ஆலயங்களாக திகழ்கின்றன.

ஜாஹிலியா கால “வலீத்’கள் கூட்டம் இன்றும் தங்கள் நேர்ச்சைகளை, குர்பானிகளை அவ்வாலயங்களில் நிறைவேற்றி மகிழ்ச்சியோடு திரும்புகின்றனர்.

நபி(ஸல்) அவர்கள் இணைவைக்கும் வியாபாரத் தலங்களை மக்கள் நடமாட்டமில்லாத வனாந்திரங்களாகவும், ஷிர்க்கின் பீடங்களாக இருந்த ஊர்களை நகரங்களை ஜன சஞ்சாரமற்ற பாலைவனங்களாக மாற்றியிருந்தார்கள். இன்று நமது நாட்டில், ´ர்க்கின் தலைமை பீடங்களாக இணை வைக்கும் வியாபாரத் தலங்களாக அஜ்மீர், நாகூர், ஏர்வாடி, முத்துப்பேட்டை போன்றவைகள் திருவிழா கோலத்துடன் ஊருக்கு ஊர் காட்சியளிக்கின்றன. இது தான் இஸ்லாம் என்று எண்ணி ஏமாந்த அப்பாவி முஸ்லிம்கள் அங்கு பலியிட்டு பிரார்த்தனை செய்யக் கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். ஆம்! இங்கு இணைவைப்பு இஸ்லாத்தின் பெயரால் அரங்கேறுகிறது.

நபி(ஸல்) அவர்கள் அன்று கூறிய வழிகேடுகள்:

கபுர் வணக்கம், பூ போடுதல், உரூஸ், இசை நிகழ்ச்சி, (யாருக்கு?) ஸஜ்தா செய்தல், கபுர் கட்டிடம் கட்டுதல், தரைக்கு மேல் உயர்த்துதல், பிரார்த்தனை செய்தல் போன்ற அனைத்து செயல்களும் இன்று நேர்வழிகளாக மாற்றப் பட்டன. கபுருக்கு பெண்கள் செல்வது, விளக்கேற்றுவது, அல்லாஹ்வின் லஃனத்திற்குறிய செயல்கள் என்று நபி(ஸல்) அவர்கள் அன்று கூறினார்கள். இன்று “பிரைவேட்’ அடக்கஸ்தலங்கள் பெண்களுக்கு பரக்கத் தரக்கூடிய இடங்களாக காட்சி தருகின்றன. ஆம்! லஃனத் (சபிக்கப்பட்டவைகள்) இன்று பரக்கத்தாக மாறிவிட்டன.

அன்று சீஸர், கிஸ்ரா போன்ற ரோம், பாராசீக பேரரசுகளிடம் “கராஜ்’ வரி வசூலித்து வாழ்ந்தவர்கள் நபித் தோழர்கள்.

“நீங்கள் உண்பதில் மிகச் சிறந்தது, உங்கள் உழைப்பின் மூலம் உண்பதேயாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார். ஆயிஷா(ரழி), திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா, அபூதாவூது.

ஹலாலான முறையில் உழைத்து உண்பது, தர்ஹா வியாபாரிகளுக்கு ஹராமாக மாறிவிட்டது. உண்டியல் காணிக்கை மட்டும் இவர்களுக்கு ஹலாலாகிவிட்டது.

இன்றைய தர்ஹாக்களின் தலைமை பீடாதிபதிகளாகவும், தரீக்காக்களின் பரம்பரை மடாதிபதிகளாகவும் இருப்பவர்கள் பெரும்பாலும் மெளலவிகள், ஆலிம்சாக்கள், லெப்பைகள், ஹஜ்ரத்கள், இவர்கள் அழகாக குர்ஆன் ஓதுவார்கள். நீண்ட ஜுப்பா, பச்சை தலைப்பாகையுடன் நடமாடும் வெளி வேடக் காரர்கள். குர்ஆனின் பொருளை திரித்து வழி கேட்டிற்கு மக்களை அழைப்பார்கள்.

“முந்தைய நபிமார்கள், நல்லடியார்களின் அடக்க தலங்களை, யூத கிருஸ்தவர்கள் உரூஸ் தலமாக ஆக்கியது போல், எனது கபுரையும் ஆக்க வேண்டாம்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை மெய்ப்பிப்பது போன்ற வசனங்கள், மனிதக் கரங்களால் மாசுபடுத்தப்பட்ட இன்றைய பைபிளிலும், ஒருசில காணப்படுகின்றன.

“இயேசு கூறுகிறார், வெளி வேடக்கார மறைநூல் அறிஞரே! பரிசேயரே, உங்களுக்கு ஐயோ கேடு, ஏனெனில் இறைவாக்கினர் களுக்கு கல்லறை கட்டி நீதிமான்களுடைய சமாதிகளை அலங்கரிக்கின்றீர்கள்.  (மத்தேயு 23:29)

கபட வே­தாரி மார்க்க அறிஞர்கள், ஒவ்வொரு நபிமார்களின் உம்மத்தையும் வழிகேட்டிற்கே அழைத்துள்ளனர் என்பது நபி(ஸல்) அவர்களின் கட்டளையிலிருந்து அறியலாம்.

சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களும், ஜாக் உலமாக்களும்:

தர்ஹாவிற்கு போவது ஷிர்க், உண்டியல் வருமானம் ஹராம் என்று பத்வா கொடுக்கும் தக்லீது, தவ்ஹீது மெளலவிகள், அல்லாஹ்வின் பள்ளியில் அமர்ந்தே தம் வருவாயை தேடிக் கொள்கின்றனர்.

விசுவாசிகளே! தொழுகை முடிவு பெற் றால் (பள்ளியிலிருந்து வெளிப்பட்டுப்) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்” (அல்குர்ஆன் 63:10)

என்று அனைத்து விசுவாசிகளுக்கும் அல்லாஹ் கட்டளையிடுகின்றான். ஆனால் இன்றைய மார்க்க உலமாக்கள், அல்லாஹ்வின் கட்டளையை அப்பட்டமாக மீறி, உடலுழைத்து ஹலாலை உண்ணுங்கள் என்ற நபி(ஸல்) அவர்களது கட்டளையை மீறி மார்க்க அறிஞர்களாக உலா வருகிறார்கள். “அல்லாஹ்விற்கு அஞ்சுபவர்களே ஆலிம்கள்” என்று அல்லாஹ் கூறுகின்றான். ஆனால் இன்றைய பள்ளி இமாம்கள் அல்லாஹ்விற்கு அஞ்சவில்லை. மாறாக அவனது கட்டளைக்கு மாறு செய்து ஹராமான வருவாயை உண்ணுகிறார்கள்.

சாத்தான் வேதம் ஓதுகிறது :

தனக்கு கடமையான தொழுகையை தானே தொழுதுகொண்டு இமாமத் செய்கின்ற மெளலவிகள், தங்கள் தொழுகைக்கே கூலி வாங்குகிறார்கள். இந்த ஹராமான கூலியை உண்டு, மக்களுக்கு ஹராம், ஹலால் பயான் செய்கிறார்கள். “சாத்தான் வேதம் ஓதுகிறது” என்ற பழமொழிப்படி இவர்களும் வேதம் ஓதுகிறார்கள். நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்த அழகிய சுன்னத்களை தொழுகையில் பின்பற்றாமல், தொழுகையின் பின்னால் கேட்கப்படும் “பித்அத்’ ஆன கூட்டு துஆவை மார்க்கமாக்கி விட்டனர். சுன்னத் புறந்தள்ளப்பட்டு பித்அத் சுன்னத்தாக நடைமுறைப் படுத்தப்படுகிறது. இந்த பித்அத் ஆன துஆ கபூலாகும் என்று அப்பாவி முஸ்லிம்களை ஏமாற்றுகிறார்கள்.

“தொழுகை முடிவு பெற்றால், பள்ளியில் இருந்து வெளியேறி” அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள் என்ற அல்லாஹ் வுடைய கட்டளையை இம் மெளலவிமார்களும் பின்பற்றத்தான் செய்கிறார்கள்.

அல்லாஹ்வுடைய ரஹ்மத்தையும் நிஃமத் தையும் ஹலாலான உடல் உழைப்பின் மூலம் பெறுவதற்கு இக்கூட்டம் தயாராக இல்லை. ஹராமான, ஷிர்க்கான, பித்அத் ஆன செயல்களின் மூலமே பொருள் தேட முனைகிறார்கள்.

எங்கே மய்யித் வீடு என்று கத்தம், பாத்திஹாவிற்கு ஓடுகிறார்கள். பித்அத் ஆன மீலாது விழாக்களில் கூலிக்கு பேசுவது, மெளலூது, புர்தா ஓதி அல்லாஹ்வின் அருளை(?) தேடுவார்கள். கல்யாணம், கத்னா, காது குத்து, பந்தக் கால் நடுதல், பைனான்ஸ் (வட்டிகள்), லாட்டரி கடை திறப்பு அத்தனையிலும் முதல் ஆளாக நீண்ட துவா ஓதிகாசு பார்ப்பர். தங்களுக்கென தனி உடை, நீண்ட ஜுப்பாவுடன் “ஹஜ்ரத்’ என்ற அடைமொழியுடன் ஆதாயம் அடைவார்கள்.

இன்றைய மார்க்க அறிஞர்களைப் போலவே யூத கிறிஸ்து சமூகங்களிலும் பாதிரிகள், துறவிகள் மக்களின் பொருளை அநியாயமாக விழுங்கியதாக 9:34ல் அல்லாஹ் கூறுகின்றான். அல்லாஹ்வின் வசனத்தில் கூறியபடி, இன்றைய கறை பட்ட பைபிளிலும் ஒரு சில வசனங்கள் காணப்படுகின்றன. அவை அப்படியே நமது மெளலவிகளுக்கும் முற்றும் முழுதாக பொருந்துகின்றன. இங்கு நடைபெறும் மெளலவிகளின் செயல்பாடுகள் அனைத்தும் யூத கிருஸ்தவர்களிட மிருந்து அடிக்கப்பட்ட அப்பட்டமான காப்பி என்பதை இவ்வசனம் தெளிவுபடுத்துகிறது.

வெளி வேடக்கார மறை நூல் அறிஞர்கள்:

மறை நூல் அறிஞர் மட்டில் எச்சரிக்கையாக இருங்கள், அவர்கள் நீண்ட அங்கி தரித்து நடமாடவும் பொது இடங்களில் வணக்கம் பெறவும் விரும்புகிறார்கள். தாங்கள் செய்வ தெல்லாம் மக்கள் பார்க்க வேண்டும் என்றே செய்கிறார்கள்.

ஏனெனில் அவர்கள் தம் சீட்டுப் பட்டங் களை அகலமாக்கி, குஞ்சங்களை பெரிதாக்கு கிறார்கள். செபக்கூடங்களில் முதலிருக்கை களையும், விருந்துகளில் கைம்பெண்களின் உடமைகளையும் விழுங்குகிறார்கள். மக்களால் “ராபீ'(ஹஜ்ரத்) எனப்படவும் ஆசிக்கிறார்கள். பார்வைக்கோ நீண்ட செயல் செய்கிறார்கள். “இவர்கள் அதிக தண்டனைக்கானவர்கள்’ என்று இயேசு கூறினார்.   (மாற்கு 13:38,மத்தேயு 73:18)

தவ்ஹீது மெளலவிகளின் தனித் திறமை:

10, 20 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் மெளலவிகள் எதைச் சொன்னாலும் “ஆமாம்’ போடும் அப்பாவி முஸ்லிம்கள் இருந்ததால், பல வகைகளில் பயான் சொற்பொழிவு, தராவீஹ், ரமழான் 27, ஷபே பராஅத், மிஃராஜ் போன்ற விஷேச தினங்களை தாங்களே உருவாக்கி காசு பார்த்தனர். ஆனால் அல்லாஹ்வின் அளப்பெரும் அருளால் வளைகுடா நாடுகளுக்கு வேலை வாய்ப்பு பெற்று போய் வந்த இளைஞர்கள் எதிர்க் கேள்வி மெளலவிகளிடம் கேட்க ஆரம்பித்தனர். இதை நன்குணர்ந்த புத்திசாலி ஆலிம் கூட்டம், பித்அத் ஷிர்க்கை சொல்லி இனி வாழமுடியாது. தவ்ஹீதை சொன்னால் பெரும் பணம் பார்க்கலாம் என்று ஒரு தனி கூட்டம் புறப்பட்டது. இவர்களும் தவ்ஹீதை பேசி பள்ளிகளில் அமர்ந்தே வருவாயை கூடுதலாக தேடுகிறார்கள்.

பார்ப்பன புரோகிதர்களும், தவ்ஹீது புரோகிதர்களும் :

அன்று பார்ப்பன புரோகிதர்கள் அரசர்களை ஆதரித்து, மக்களை நான்கு வர்ணமாக பிரித்து ஆதாயம் அடைந்து செல்வம் செல்வாக்கோடு விளங்கினார்கள்.

அரசர்கள் காலம் முடிந்து, வெள்ளைக்காரன் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவைப் பிடித்ததும் இப்பார்ப்பனர்கள் உடனடியாக தங்கள் வேதத்தை போட்டுவிட்டு “ஆங்கிலத்தை” படித்து வெள்ளை துரைமார் களிடம், துபாஷ், திவான், ஸர், பகதூர் போன்ற பெரும் பெரும் பொறுப்புகளில் அமர்ந்து தம் வருவாயையும், அந்தஸ்தையும் தக்க வைத்துக் கொண்டனர். இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் சாம்ராஜ்யம் பெருக இந்தியாவையும் பிடித்து விடுவான் என்று உணர்ந்த பார்ப்பன புரோகிதர்கள் அனைவரும் உடனடியாக “ஜெர்மன்’ படிக்க ஆரம்பித்தனர். அவர்கள் நோக்கம் யார் ஆண்டாலும் பரவாயில்லை. தங்கள் வாழ்வு அந்தஸ்து உயர் நிலையிலேயே இருக்க வேண்டும் என்பதுதான். இது வரலாறு கூறும் பாடம்.

தவ்ஹீது புரோகிதர்களும், தக்லீதை விட்டு தவ்ஹீதிற்கு வந்தது சமுதாய ஒற்றுமைக்கோ, மக்களை ஒன்றுபடுத்தவோ, அல்லாஹ்வின் தீனை நிலைநாட்டுவதற்காகவோ அல்ல. தங்கள் புரோகித வர்க்கத்தை தக்க வைத்துக் கொள்வதற்கே. இதை நாமாக சொல்லவில்லை, அவர்கள் செயல்கள் சொல்லுகின்றன.

தனிப் பள்ளி, இமாமிற்கு கூலி, சுன்னத் வல்ஜமாத் இமாமை பின்பற்றக்கூடாது என்ற ஃபத்வா, மெளலவிகளுக்கு தனிப் பயிற்சி, ஊதியம், ஆரம்பத்தில், புஞக்ஷி (அஹ்லே, குர்ஆன் ஹதீஃத்) பின்பு இதற்கு ஒரு அமீர், இவரையும் பின்பற்றுவது, அரசியலுக்கு தனி அமீர், த.மு.மு.க. அவரையும் பின்பற்றுவது, மதரஸா நடத்துவது; பள்ளி கட்டுவது; “ஜாக்ஹ்’ மெளலவிகளுக்கு வேலை வாய்ப்பு அளிப்பது, உடல் உழைப்பு வருமானம் இவர்களுக்கும் ஹராமாகிவிட்டது. வசூலை பிரித்தே வருமானம் அடைகிறார்கள்.

நபிமார்களின் வாரிசுகளுக்கு நபிமார்கள் போதனை :

அல்லாஹ்வின் மார்க்கத்தை உங்களுக்கு நாங்கள் எடுத்துச் சொல்கின்றோம். “இதற்காக உங்களிடத்திலே யாதொரு கூலியையும் கேட்கவில்லை. எங்களுடைய கூலி யாவும் உலகத்தாரை போஷிக்கும் இறைவனிடமேயன்றி (வேறுயாரிடமும்) இல்லை”.

 1. நூஹ்(அலை) அவர்கள் கூறுகிறார்கள்.  (அல்குர்ஆன் 10:72, 26:109)
 2. ஹூது(அலை) அவர்கள் கூறுகிறார்கள்.  (அல்குர்ஆன் 26:126)
 3. ஸாலிஹ்(அலை) அவர்கள் கூறுகிறார்கள். (அல்குர்ஆன் 26:145)
 4. ஷிஐப்(அலை) அவர்கள் கூறுகிறார்கள். (அல்குர்ஆன் 26:180)
 5. லூத்(அலை) அவர்கள் கூறுகிறார்கள்.  (அல்குர்ஆன் 26:164)
 6. நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.  (அல்குர்ஆன் 23:72, 12:104)

உடல் உழைப்பு அவசியம் :

புத்தி சுவாதீனமற்று இருப்பவனோ, உழைத்து உண்ண முடியாத சிறுவனோ, உழைக்கவே முடியாத உடல் ஊனமற்றவனோ பிறரை அண்டி வாழ்வதில் தவறில்லை. ஆனால் உடல் ஆரோக்கியமும், உழைக்கும் சக்தியும் இருப்போர், பிறரை நம்பி, பிறரது உழைப்பில் வாழ்வை அமைத்துக் கொள்ள இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்கவில்லை. உழைத்து வாழவேண்டும் என்றே மனித சமுதாயத்தை தூண்டுகிறது. ஆனால் இன்று நடப்பதென்ன? பார்ப்பன புரோகிதர்கள் கர்ப்பகிரகத்தில் நின்று அர்ச்சனை செய்தும், திதி, திவசம் என்று கூறி காசைப் பறிப்பது போல், நமது மெளலவி புரோகிதர்களும் பள்ளிகளில் “இமாமத்” செய்தும் கத்தம், பாத்திஹா ஓதியே ஹராமை வளர்க்கிறார்கள். அப்பாவி முஸ்லிம்களை சுரண்டி வாழ்வதற்கு 7 வருட மதரஸா ஸனது உதவுகிறது.

மார்க்கத்தை போதிக்க வந்த நபிமார்களின் உடல் உழைப்பு :

 1. நூஹ்(அலை) தம் கரங்களால் மிகப் பெரிய கப்பலை கட்டினார்கள் என்று திருமறை கூறுகிறது. (அல்குர்ஆன்23:27)
 2. ஹிளிரு(அலை) அவர்கள் விழுந்து விடக் கூடிய நிலையில் இருந்த அனாதை சிறுவர்களின் சுவரை மண் எடுத்து செப்பனிட்டு அச்சுவரை விழாது நிலைநிறுத்தினார்கள். (அல்குர்ஆன் 18:77)

இந்த உழைப்பிற்கே கூலி எதிர்பார்க்கவில்லை :

 1. இப்ராஹீம்(அலை), இஸ்மாயீல் (அலை) (அல்குர்ஆன் 2:127)

கஃபாவின் அஸ்திவாரத்தை உயர்த்திக் கட்டி கஃபாவை நிர்மாணித்தவர்கள், அவர்களின் உழைப்பின் பெருமையை உயர்த்துவதற் காகவோ என்னவோ அல்லாஹ் அவர்கள் நின்று கட்டிய கல்லில் அவர்கள் பாதச் சுவட்டை பதித்து “மகாமே இப்ராஹீமாக பெருமைப்படுத்தியுள்ளான்.

 1. மூஸா(அலை) அவர்கள் கூலிக்கு ஆடு மேய்த்துள்ளார்கள், தண்ணீர் இறைத்துள்ளார்கள். (அல்குர்ஆன் 28:20)
 2. துல்கர்ணைன் என்பவர் யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்திலிருந்து ஒரு கூட்டத்தைக் காக்க, இரும்பு, செம்பு பாளங்களை உருக்கி இரு மலைகளுக்கிடையில் தடுப்பு சுவர் எழுப்பினார்கள். கூலி வாங்கவில்லை.  (அல்குர்ஆன் 18:95
 3. தாவூது(அலை) அவர்கள் இரும்பை உருக்கி சங்கிலி வளையங்களாக்கி போர்ச் சட்டை செய்தார்கள். (அல்குர்ஆன் 34:10, 21:80)
 4. சுலைமான்(அலை) அவர்கள் ஜின்களை கொண்டு, பெரும் ஆலயத்தையும், சிற்பங்கள், பெரும் கொப்பறைகள், தண்ணீர் தொட்டிகள் செய்தார்கள். (அல்குர்ஆன் 34:13)
 5. யூசுஃப் நபி அவர்கள், எகிப்து மன்னர் அஜீஸ் அமைச்சரவையில் உணவு தானிய களஞ்சிய பொறுப்பாளராக பணி புரிந்துள்ளார்கள். (அல்குர்ஆன் 12:55)

உலக மக்களின் வாழ்வின் வழிகாட்டிகளாக வந்த நபிமார்கள், நாம் மார்க்கப் பணி செய்கின்றோம்; நமது உணவு தேவைகளை பொதுமக்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று இருந்திடாமல் உழைத்துத்தான் வாழ்ந்துள்ளார்கள்.

 1. நபி தாவூது(அலை) அவர்கள், தங்கள் கைகளால் பாடுபட்டு அதனால் கிடைக்கும் வருவாயைக் கொண்டே தவிர வேறு எதனையும் உண்பதில்லை” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (மிக்தாது(ரழி) புகாரி)
 2. “ஸக்கரியா(அலை) அவர்கள் இரும்பு கொல்லராக இருந்து உழைத்து உண்ணக் கூடியவராக இருந்தார்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா(ரழி), முஸ்லிம்.
 3. நபி(ஸல்) அவர்களும் ஆரம்பத்தில் கூலிக்கு ஆடு மேய்த்தும் பின்பு வியாபாரம் செய்தும் வாழ்ந்துள்ளார்கள். அல்லாஹ் அவர்களுக்கு ஹலாலாக்கிய கனீமத்து பொருளில் 5ல் 1 பங்கையும், ஏழைகள், அனாதைகள், ஆதரவற்ற வர்களுக்கு முழுதாக வழங்கிவிட்டார்கள். ஆகவே நபி(ஸல்) வீட்டில் தொடர்ந்தாற்போல் 3 இரவுகள் அடுப்பு எரிந்ததில்லை.

நபிமார்கள் கஷ்டப்பட்டு உழைத்து உண் டதற்கு காரணம் அல்லாஹ்வின் கட்டளையை பின்பற்றியது தான்.

“ரசூல்மார்களே! நீங்கள் நல்லவற்றிலிருந்து உண்ணுங்கள், மேலும் நல்லறங்கள் செய்யுங்கள்’ (அல்குர்ஆன் 23:51)

விசுவாசிகளே! உங்களுக்கு நாம் அளித்த வற்றிலிருந்து நல்லதையே (ஹலாலானதையே) உண்ணுங்கள். (அல்குர்ஆன் 2:172)

அன்றைய மூட ஆலிம்களின் மூளைச் சலவை:

இன்றைய இளைஞர்கள், மாணவர்கள் ஏகத்துவத்தை எளிதாகப் பின்பற்றுவது போல் அவர்கள் தாய் தந்தையர்கள் மற்றும் பெரியவர்கள் பின்பற்றுவதில்லை. மாறாக இளைஞர்களின் ஏகத்துவக் கொள்கையை எதிர்க்கின்றார்கள். மெளலவி உலமாக்களின் சொல்லிற்கே செவி கொடுக்கின்றார்கள். இதன் காரணம் என்ன என்று சிந்திக்கும் பொழுது நம் பெற்றோர்கள் சிறிய வயதில் மார்க்கம் அறியும் பொழுது அவர்கள் மூளையில் தவறான கொள் கைகளை திணித்து திணித்து சிந்தனை சக்தியையே முற்றாக பறித்துவிட்டதுதான். இம் மெளலவிகள் எவற்றையெல்லாம் இஸ்லாமாக காட்டினார்கள் என்பதற்கு ஒரே ஒரு புத்தகம் உதாரணம்.

1964ம் ஆண்டு, சென்னை ஹாஜி எம்.ஏ. ஷாஹுல் ஹமீது அண்டு சன்ஸ் வெளியிட்ட “தமிழ் மஜ்முஅ முனாஜாத்” புத்தகம். இப்புத்தகத்தில் இடம் பெறுபவைகளை விளம்பரமாக கொடுத்துள்ளார்கள். அவை ஹக்கு பேரில் முனாஜாத்து, யாஸைய்யிதி மாலை, யாகுத்பா மாலை, தலை பாத்திஹா, ஸலவாத்துப் பாட்டு, முத்து மணி மாலை, பக்தி ஆனந்த பாத்தி முத்து மாலை, முஹிய்யதீன் முனாஜாத்து, காஜா பந்தெ நவாஸ் முனா ஜாத்து, ஸரசுவதி மாலை, ரஸூலுல்லாஹ் பேரில் இன்னிசை, கல்வத்து நாயகம் பேரில் இன்னிசை, கல்வத்து நாயகம் பேரில் கஸீதா.

இந்த புத்தகத்தில் உள்ளவைகளில் கருத்து வேறுபட்டாலும் பெயர்களில் இஸ்லாமிய வாடை லேசாக அடிக்கிறது. ஆனால் “ஸரசுவதி மாலை’ என்று இடையில் ஒரு வாழ்த்து உள்ளது. இது எந்த ஸரஸ்வதியோ? எழுதிய ஆலிமுக்கே வெளிச்சம்?

இதுபோன்ற மெளட்டீக கருத்துக்களிலி ருந்து எங்களை காப்பாற்றிய அல்லாஹ் (ஜல்)வுக்கே எல்லாப் புகழும்.

Previous post:

Next post: