ஏகன் இறைவனின் வல்லமை பாரீர்!

in 2021 செப்டம்பர்

ஏகன் இறைவனின் வல்லமை பாரீர்!

அபூ அப்தில்லாஹ்

மறு பதிப்பு :

மனிதன் முன்னேறி விட்டான்; சந்திரனில் கால் பதித்து விட்டதாக சொல்கின்றான்; பல கோள்களுக்கு செயற்கைக் கோள்களை அனுப்ப பெரும் பெரும் ஆராய்ச்சிகள் செய்து வருவதாக சொல்கின்றான். ஒரு சில அணுகுண்டுகள் மூலம் உலகையே அழித்துவிடும் ஆற்றல் பெற்றுள்ளதாக சொல்கின்றான். கணினி யுகத்தில் சாதிக்க முடியாத சாதனைகளே இல்லை என் றெல்லாம் மனிதன் பெருமைப்பட்டுக் கொள்கிறான். தனது ஆற்றலில் அகம்பாவம் கொள்கிறான். தன்னை மிஞ்சிய ஒரு சக்தி உலகில் இல்லை என இறுமாப்படைகிறான்.

ஆனால் அவனது அகம்பாவமெல்லாம் ஒரு நொடியில் தரைமட்டமாகி விடுகிறது. பெரும் உயிர்சேதத்தையும், கோடிக்கணக்கான பொருள் நஷ்டத்தையும் உண்டாக்கிய சுனாமிப் பேரழிவை இவனால் தடுக்க முடிந்ததா? நிலநடுக்கத்தை இல்லாமல் செய்ய முடிந்ததா? இந்திய மாநிலங்களில் பெரும்பாலானவற்றை தண்ணீரில் மிதக்க வைத்த பெரும் மழையை தடுத்து நிறுத்த முடிந்ததா? தொடர்ந்து உருவாகி வந்து தாக்கிய காற்றழுத்தத் தாழ்வு நிலையை சீராக்க முடிந்ததா? அடுத்தடுத்துச் சீறி வரும் பெரும் புயல்களை கட்டுப்படுத்த மனிதனால் முடிந்ததா? இவை அனைத்திலும் மனிதன் படுதோல்வியடைந்தான் என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

உலகின் பெரும் வல்லரசு, உலக நாடுகளின் நாட்டாண்மை, விஞ்ஞான வளர்ச்சி யில் உச்சத்தைத் தொட்டுள்ளோம் என் றெல்லாம் பெருமை பேசும் அமெரிக்க அரசால் தனது நாட்டைத் தாக்கிய சூறாவளிகளைத் தடுத்து நிறுத்த முடிந்ததா? கத்ரினா, ரிட்டா, வில்மா இத்தியாதி போன்ற பேரழிவுகளை ஏற்படுத்திய சூறாவளி களுக்கு பெயர் சூட்டவே முடிந்தது.

ஒருசில நாள் பெய்த மழையின் காரணமாக தமிழகம் தண்ணீரில் மிதக்கிறது. சாலைகள் அனைத்தும் துண்டிப்பு. ஒவ் வொரு ஊரும் ஒவ்வொரு தீவாக தண்ணீரில் மிதக்கிறது என்ற நிலை என்றால், நூஹ் (அலை) அவர்கள் காலத்தில் நடந்தது போல் சில நாட்கள் பூமியிலிருந்து நீர் வெளிப்பட்டும், வானமும் மழையைப் பொழிந்தால் இவ்வுலகின் நிலை என்ன ஆகும் என சிந்தித்துப் பாருங்கள்.

கண்ணுக்குத் தெரியாத சிறு கிருமி கொரோனா வைரஸிற்கு அஞ்சி உலகத்தில் உள்ள மனிதர்கள் எல்லாம் உயிருக்கு அஞ்சி வீட்டில் அடைந்து இருந்தது உலகம் அறிந்ததே. அது மனிதர்களின் இயலாமையை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. உலக வல்லரசாக இருந்த அமெரிக்கா பட்ட கஷ்டத்தை அனைவரும் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர்.

இந்த நிலையைச் சிந்தித்து உணர்வு பெறுவதற்கு இது தக்க தருணமாகும். இப்போதாவது சிந்தித்து தனது நிலையை மாற்றிக் கொள்ளாதவன் இறைவன் கூறியுள்ளது போல் ஆடு, மாடுகளை விடக் கேடுகெட்டவனாக மட்டுமே இருக்க முடியும். (பார்க்க: 7:179) ஏன் என்றால் ஆடு, மாடுகளுக்குச் சிந்தித்து உணரும் பகுத்தறிவு இல்லை. எனவே அவை சிந்திப்பதில்லை. மறுமையில் அவை களுக்கு சுவர்க்க, நரகமும் இல்லை.

ஆடு, மாடுகளைப் போல் மனிதனும் இவ்வுலகிற்காக மட்டும் படைக்கப்பட்டிருந்தால், அவனுக்கும் ஆறாவது அறிவான பகுத்தறிவு இவ்வுலகிற்கு அவசியமே இல்லை. மிருகங்களைப் போல் மனிதனும் பகுத்தறிவு இல்லாமல் ஐயறிவுடன் படைக்கப்பட்டிருந்தால், மனித இனம் இன்றிருப் பதைவிட நிம்மதியாக, சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கும். காரணம், பகுத்தறிவின் துணை கொண்டு மனிதன் இன்று செய்யும் அட்டூழியங்கள், அநியாயங்கள் எதுவுமே இருக்காது. பல தலைமுறைகளுக்குத் தேவையான சொத்து சுகங்களை சேர்த்து வைக்க மாட்டான். உணவு தானியங்களில் கலப்படம் செய்ய மாட்டான். உணவு தானியங்களைப் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்க எண்ணமாட்டான்.

\ஆடு, மாடுகளைப் போல் அடுத்த நேர உணவை சேமித்து வைக்காமலும், அதற் காக கவலைப்படாமலும் சந்தோ­மாக, நிம்மதியாக வாழ்வான். ஆடு, மாடுகள் மற்றும் பிராணிகள் அனைத்திற்கும் தட்டில்லாமல் உணவு கிடைத்துக் கொண்டிருப்பது போல் மனிதப் பிராணிக்கும் தாராளமாக எவ்வித தட்டுத்தடங்கள் இல்லாமல் உணவு கிடைத்துக் கொண்டிருக்கும். கிடைத்ததைத் தின்று வாழ்வு முடிந்தால் மரணிக்கத் தயாராக இருக்கும். இன்று உலகில் காணப்படும் அனைத்துச் சீர்கேடுகளுக்கும், சீரழிவு களுக்கும், பஞ்சமா பாவங்களுக்கும் மனிதப் பிராணிக்கு பகுத்தறிவு இருப்பதே காரணமாகும்.

எனவே மனிதனைப் படைத்த இறைவன் அவனது வாழ்க்கை இவ்வுலகோடு முடிவதாக இருந்தால், இந்த ஆறாவது அறிவான பகுத்தறிவை கொடுத்தே இருக்கமாட்டான். ஐயறிவோடு மனிதனையும் தட்டலைய விட்டிருப்பான். ஆனால் மனிதனுக்குப் பகுத்தறிவு கொடுக்கப்பட்டுள்ளது. காரணம் மனிதன் மட்டுமே மறு உலக வாழ்க்கைக்காக இவ்வுலகில் பரீட்சை வாழ்க்கை வாழ்கிறான். இந்தப் பரீட்சையில் வெற்றி பெற்றால் மறு உலக வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுவான். இந்தப் பரீட்சையில் தோல்வியுற்றால், மறுமையில் பெரும் தோல்வியடைவான்.

இவ்வுலகில் நடைபெறும் பரீட்சைகளில் தோல்வியடைந்தாலும், மீண்டும் மீண்டும் பரீட்சை எழுதி வெற்றியடைய பல வாய்ப்புகள் உண்டு. ஆனால், வாழ்க்கைப் பரீட்சையில் தோல்வியுற்றால் அது நிரந்தர தோல்விதான். அதை வெற்றியாக மாற்றிக் கொள்ள இரண்டாவது வாய்ப்பே இல்லை. இதை முறையாக உணர்ந்து முறையான வாழ்க்கை வாழ்பவனே வெற்றியாளன். இவ்வுலகில் செல்வச் செழிப்புடனும், ஆடம்பரத்துடனும், பதவி புகழுடனும் வாழ்வதால் மட்டும் மறுமையில் வெற்றி பெறமுடியாது. ஏகன் இறைவனின் இறுதி வழிகாட்டல் நூலில் அந்த இறைவன் கட்டளையிட்டுள்ளபடி நடப்பவனே வெற்றி பெறமுடியும். அதற்கு முரண்பட்டு வாழ்கிறவர்கள் தோல்வியுறுபவர்களே. இறைவனையும், மறுமையையும், மறுப்பவர்கள் தங்களைப் பகுத்தறிவுவாதிகள் என்று கூறிக் கொண்டாலும் அவர்கள் உண்மையிலேயே பகுத்தறிவுவாதிகள் அல்ல. மிருகங்களைப் போன்ற ஐயறிவுவாதிகளே. மிருகங்கள் எப்பொருளையும், தங்களின் உணவைக் கூட கண்ணால் கண்டால் மட்டுமே நம்பும்; மிருகங்களின் ஆகாரத்தை மறைத்து வைத்துக் கொண்டு வருந்தி வருந்தி அழைத்தாலும் அவை வராது. ஆனால் அந்த உணவை கண்ணில் காட்டிவிட்டால் விரைந்து ஓடி வரும். இந்த நிலையில்தான் தங்களைப் பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொள்வோரும் இருக்கின்றனர்.

இன்னொரு வகையில் சிந்தித்தால் தாயின் கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தை யின் அறிவை உடையவர்களாக இந்த பகுத் தறிவாளர்கள் இருக்கிறார்கள். தாயின் கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தைக்கு அந்தக் கர்ப்பப்பைதான் வாழ்விடம். கர்ப்பப் பையிலிருந்து தொப்புள் கொடி வழியாகக் கிடைக்கும் ஆகாரம்தான் அமிர்தம். மற்றபடி ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின் நீ இந்தக் கர்ப்பப் பையை விட்டு இதைவிட மிகப் பெரிய இடமான இன்னொரு உலகத்திற்குப் போவாய். அங்குதான் இங்கு செயல் படாமலும், அதே சமயம் இங்குதான் தயாராவதுமான உனது உடலின் உறுப்புகள் அனைத்தும் செயல்பாட்டிற்கு வரும். இங்கு உனது உடல் உறுப்புகள் ஒழுங்காக செவ்வையாகத் தயாராகாவிட்டால் அதன் நஷ்டம் இங்கு உனக்குத் தெரியாது. தாயின் கர்ப்பப் பையில் இந்த உடல் உறுப்புகள் இருப்பது உனக்குத் துன்பம் போல்தான் தெரிகிறது. ஆனால் இந்தக் கர்ப்பப்பை உலகிலிருந்து மறு உலகிற்குச் சென்றால் மட்டுமே உனது உடல், உறுப்புகளின் அருமை, பெருமை உனக்குத் தெரிய வரும் என்று அக்குழந்தையிடம் சொன்னால், இவை அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மையாக இருந்தாலும் அந்தக் குழந்தை ஏற்றுக் கொள்ளுமா? ஒருபோதும் ஏற்றுக் கொள் ளாது. காரணம் அது தாயின், கர்ப்பப்பை உலகை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கி றது. மறு உலகமான இவ்வுலகை அது நினைத்துக் கூட பார்க்காது.

அந்தக் குழந்தையின் அறிவைப் பெற்ற வர்களாகத்தான் தங்களைப் பகுத்தறிவாதி கள் என்று கூறிக் கொள்வோரும் இருக்கின் றனர். அவர்கள் கண்ணால் பார்க்கும் அவர்களது அறிவில் படும் இவ்வுலகம் மட்டுமே அவர்களுக்குத் தெரிகிறது. கண்ணிற்கும், அறிவுக்கும் புலப்படாத மறு உலகை அவர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். தாயின் வயிற்றில் இருக்கும் சிசுவைப்போல்.

இவ்வுலகில் இவர்களை விட நேர்மையாகவும், உண்மையாகவும், மக்களுக்குத் தொண்டு செய்து தங்களின் வாழ்நாளில் சொல்ல முடியாத அளவு துன்பங்களை அனுபவித்த முஹம்மத், ஈஸா, மூஸா, தாவூது, சுலைமான், யாகூப், இப்ராஹீம் போன்ற நல்ல சிறப்புக்குரிய மனிதர்கள், நம்மைப் படைத்த ஒரு இறைவன் இருக்கி றான்; மறுமை என்ற ஒரு அசலான உண்மையான வாழ்க்கை இருக்கிறது. இங்கு மனிதர் களின் செயல்பாடுகளின் பலாபலன்களை அங்கு கண்டு கொள்வார்கள்; நாங்கள் அந்த இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள், அவனது அடிமைகள் என்று ஏன் கூற வேண்டும் என்று கூட இந்தப் பகுத்தறிவாளர்கள் சிந்திப்பதில்லை.

அந்த நல்லடியார்கள் மக்களிடம், பின் னர் தங்களுக்குக் கிடைத்த செல்வாக்கைப் பயன்டுத்திக் கொண்டு தங்களையே வணக்கத்திற்கு உரியவர்களாக ஆக்கி இருக்கலாமே? ஏன் அப்படிச் செய்யவில்லை? என்று கூட இந்தப் பகுத்தறிவாளர்கள் சிந்திப்பதில்லை. அப்படி முறையாகச் சிந்தித்து இருந்தால், மனிதர்களால் கற்பனையாகப் படைக்கப்பட்டுள்ள சிலைகள், சமாதிகள், மற்றும் கற்பனை தெய்வங்கள்தான் பொய்க் கடவுள்கள்; அவற்றை வணங்குவதே மூட நம்பிக்கை, காட்டுமிராண்டித்தனம், ஆனால் அகில உலகங்களையும், அவற்றிலுள்ள அனைத்தையும், மனிதனையும் படைத்துப் பரிபாலித்து, ஆட்டிப் படைக்கும் ஒரே ஒரு இறைவன் இருக்கிறான். அந்த இறைவன் மட்டுமே உண்மையான, அடிபணிந்து நடக்க வேண்டிய இறைவன் என்பதை தங்களின் பகுத்தறிவால் உணர்ந்து கொண்டிருப்பார்கள். அப்படி உணரத் தவறுகிறவர்கள் குறைந்தபட்சம் இவ்வுலக வாழ்க்கைக்குப் பகுத்தறிவு தேவையே இல்லை. பகுத்தறிவற்ற இவ்வுலக வாழ்க்கையே மிருகங்களை போல் மனிதனுக்கும் ஆரோக்கியமான, சந்தோசமான நிம்மதியான வாழ்க்கையைத் தரும் என்ற முடிவுக்கு வரலாம்.

நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும், இரவும் பகலும் மாறிமாறி வருவதிலும், மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும், வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்தபின் அதை உயிர்ப்பிப்பதிலும், அதன் மூலம் ஒவ்வொரு விதமான உயிரினத்தையும் பரவவிட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி மாறி வீசச் செய்வதிலும், வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும், விளங்கும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக்காட்டும்) சான்றுகள் உள்ளன. (2:164)

Previous post:

Next post: