அமல்களின் சிறப்புகள்….

in 2021 அக்டோபர்

தப்லீக்  ஜமாஅத்தினரின்  தஃலீம்  தொகுப்பு நூல்

அமல்களின் சிறப்புகள்….

ஒரு திறனாய்வு!

  1. அப்துல் ஹமீத்

தொடர் : 74

ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் :

புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம்  (1154 பக்கங்கள்)

தலைப்பு : திக்ரின் சிறப்புகள்

குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள்.

தமிழாக்கமும், வெளியிட்டோரும் :  பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட்,  திண்டுக்கல்.

பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த ஒரு பக்கத்திலும் இப்புத்தகம் எத்தனையாவது பதிப்பு என்பது குறிப்பிடப்படவில்லை.

சென்ற இதழில் ….!

“திக்ர் செய்வதில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு துஆ செய்பவர்களுக்கு கிடைக்கப் பெறும் பாக்கியங்களை விட அதிகமானவை கிடைக்கும். என்னுடைய திக்ரு, துஆச் செய்வதை விட்டு யாரைத் தடுத்து விட்டதோ, துஆ கேட்பவர்களுக்குக் கொடுப்பதை விட சிறந்ததை நான் அவருக்கு வழங்குவேன்’ என்று அல்லாஹு தஆலா ஒரு ஹதீதில் கூறியதாக(?) அசி புத்தகம் பக்கம் 410ல் 30வது எண்ணில் எழுதப்பட்டிருந்ததை ஆய்வு செய்து, எழுதப்பட்ட செய்தி பச்சைப் பொய் என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்தோம்.

இந்த இதழில்…!

அசி (அமல்களின் சிறப்புகள்) புத்தகம் பக்கம் 410ல் 35வது எண்ணில் எழுதப்பட்டிருப்பதை இப்போது ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம். அதற்காக அப்புத்தகத்தில் எழுதப்பட்ட செய்தியை முதலில் காண்போம்.

“திக்ரு செய்வது மனிதனுக்கு முன்னேற் றத்தை வழங்கிக் கொண்டே இருக்கிறது. படுக்கையிலும், கடைத்தெருவிலும், நோயிலும், சுகத்திலும், இன்பத்திலும், துன்பத் திலும் அனைத்து நேரங்களிலும் திக்ரைப் போன்று உயர்வு தரும் பொருள் வேறெதும் இல்லை. எவருடைய உள்ளம் திக்ரினால் ஒளி பெற்று விடுகிறதோ அவர் தூங்கினாலும், திக்ரை மறந்து இரவில் விழித்திருப்ப வர்களை விட மேலான அந்தஸ்தை அடைந்து கொள்கிறார்’.

எமது ஆய்வு :

படுக்கையிலும், கடைத்தெருவிலும், நோயிலும், சுகத்திலும், இன்பத்திலும், துன்பத்திலும் அனைத்து நேரங்களிலும் “திக்ரு செய்வது மனிதனுக்கு முன்னேற்றத்தை வழங்கிக் கொண்டே இருக்கிறது” என அசி புத்தகம் எழுதி இருப்பது உண்மையா என்பதை முதலில் ஆய்வு செய்வோம்.

எல்லா நேரமும் திக்ர் செய்யும் தப்லீக் ஜமாஅத்திலுள்ள மனிதர்களுக்கு எதில் முன்னேற்றம் கிடைத்திருக்கிறது என்று பார்க்க புகுந்தால், ஆய்வு செய்ய முதலில் நமக்குத் தெரியவேண்டிய விஷயம் யாதெனில், அவர்களின் மார்க்கக் கல்வியில் அவர்களுக்கு முன்னேற்றம் கிடைத்திருக்கிறதா அல்லது அவர்கள் செய்கின்ற அமல்களிலா அல்லது அவர்களது செல்வத்திலா அல்லது ஒற்றுமையிலா அல்லது சந்ததி அபிவிருத்தியிலா அல்லது நோயிலிருந்து நிவாரணம் கிடைத்ததா அல்லது இதுபோன்று இன்னுமுள்ள பிற பல விஷயங்களிலா, எதில் ஆய்வு செய்வது என்பது தெரியவில்லை. ஏனெனில் எல்லா நேரமும் திக்ர் செய்வதால் முன்னேற்றம் எதில் கிடைக்கும் என்பதை அசி புத்தகம் தெரியப்படுத்தவில்லை. எனவே, எதில் முன்னேற்றம் கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டியது எமது இந்த ஆய்விற்கு அவசியமாகிறது.

இதைத் தெரிந்துகொள்ள ஒரு சுலபமான வழி இருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் அந்த வழியும் அடைபட்டுவிட்டது. அது யாதெனில், அசி புத்தகத்தை எழுதிய ஆசிரியரைக் கேட்டுக் தெரிந்து கொள்வது தான். ஆனால், அவர் இப்போது உயிருடன் இல்லை, எனவே அவரிடமிருந்தும் இதைத் தெரிந்து கொள்ள முடியாது.

அப்படி என்றால், அசி புத்தகம் தந்திருக் கும் தகவலின் அடிப்படையில் மற்றொரு வழியைக் கையாளலாம். அது என்ன வழி? திக்ரு செய்வது மனிதனுக்கு முன்னேற் றத்தை வழங்கிக் கொண்டே இருக்கிறது என்று எடுத்த எடுப்பிலேயே அசி புத்தகம் கூறி இருப்பதால், தப்லீக் ஜமாஅத்தின் மனிதர்கள் செய்து கொண்டிருக்கும் அந்த திக்ரைத் தான் நாம் நேரடியாக கேட்டாக வேண்டியிருக்கிறது. இது சாத்தியமா? நிச்சயமாக சாத்தியமில்லை!

சாத்தியமில்லாததைக் கூறுவதன் மூலமே, தமது புளுகு மூட்டையை அவிழ்த்து, “திக்ரு செய்வது மனிதனுக்கு முன்னேற்றத்தை வழங்கிக் கொண்டே இருக்கிறது’ என்ற பொய்யை மூட்டையிலிருந்து இப்போது கையில் எடுத்து, அதை முன்னிலைப்படுத்தி மார்க்கத்தில் சொல்லப்பட்ட விஷயங்களுக்கு எதிரான கருத்தை பிரகடனப்படுத்தி விடுகின்றனர்.

சரி! சாத்தியமான (POSSIBLஆன) வழிகள் அடைக்கப்பட்டிருக்கிறது. மாற்றுவழி காண முயற்சிப்போம். சதா திக்ர் செய்பவர்களைக் கேட்டுப்பார்க்கலாமா என்றால், இவர்களில் உள்ள முக்கியஸ்தர் பொறுப்பில் உள்ள எவரையேனும் ஒருவரைக் கேட்கலாம் என்றால், திருச்சியிலுள்ள அந்த புரபசர்தான் எம் நினைவிற்கு வருகிறார். ஆனால் அவரைக் கேட்டால் சரியான பதில் கிடைக்காது என்று எமது மனம் எச்சரிக்கை அலாரத்தை அலற விட்டுக் கொண்டே இருக்கிறது. ஏனெனில் எவரையும் முஃமின் என்று சொல்வதற்கு மார்க்கத்தில் தடை இருக்கும்போது, அசி ஆசிரியரை அந்த புரபசர், முஃமின் என்று நினைத்துக் கொண்டு, முஃமினை இழிவுபடுத்துவது கஃபத்துல்லாஹ்வை இடிப்பதற்கு சமம் என்றொரு புதிய பொய்யையே கூறியவரல்லவா அந்த மனிதர்!

எனவே இவரையல்லாத தப்லீக் ஜமாஅத்தில் உள்ள வேறு சகோதரர்களில் எவரையேனும் ஒருவரைக் கேட்டுத் தெரிந்து கொள்ள முயற்சி செய்யும்போது, கையில் தஸ்பிஹ்மணி வைத்து அலைந்து கொண்டிருக்கும் ஒருவரை கவனிக்க முற்பட்டதில், அவர் கையில் தஸ்பிஹ்மணி வைத்து இருக்கிறாரே ஒழிய, அவரது வாயோ திக்ர் செய்வதாகத் தெரியவில்லை. எப்படி என்றால் அவரது வாய் அசைவற்று இருப்பதால் அவர் எந்த திக்ரையும் செய்யும் நபராக எமக்குத் தெரியவில்லை, இருந்தாலும் வாயைத் திறக்காமல் மனதிற்குள் திக்ர் செய்பவராக இருப்பாரோ என்று நினைத்து அவரை அணுகி சலாம் சொன்னால், சலாமுக்கு அவர் பதில் சொல்லாமல் திக்ர் செய்வது போல் வாயை அசைத்துக் கொண்டு எமது சலாமை ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாக தலையை மட்டும் அசைத்து சைகை செய்கிறார். அவர் திக்ர் செய்கிறார் என நாம் நினைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக வாயை அசைக்கிறாரே, இந்த செயல் பிறர் அவரைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக செய்யப்பட்டதாக ஆகி விடுமே. இதை அவர் திக்ர் என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறார். தப்லீக் ஜமாஅத்தினரின் திக்ர் மார்க்கத்தில் இல்லாத தவறானவை என்று ஏற்கனவே நாம் சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த மனிதர் இப்படியயல்லாம் திக்ர் செய்கிறாரே, அவரின் அந்த திக்ரால் அவருக்கு நன்மை கிடைக்காதே என்றெல்லாம் நினைக்க வேண்டியதாகி விட்டது. எனவே எவரையும் கேட்டுத் தெரிந்து கொள்வது என்பது குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும். எனவே, இது சாத்தியமற்ற (IMPOSSIBLE ஆன) வி­யமாகத் தெரிகிறது.

எனவே, அசி புத்தகத்தின் மீது நல்லெண்ணம் கொண்டு, திக்ர் செய்வதால் திக்ர் செய்பவரின் மார்க்க அமல்களில் முன்னேற்றம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற நல்ல முடிவிற்கு வந்து, விஷயத்தை ஆய்வு செய்வோம். இந்த ஆய்விற்கு எங்கேயும் எவரிடமும் செல்ல வேண்டியதில்லை! அசி புத்தகத்திலிருந்து நாம் இந்தத் தொடருக்காக ஆய்விற்கு எடுத்துக்கொண்ட மேலே கூறப்பட்டுள்ள வாசகங்களில் எமக்கு சாதகமான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.

“படுக்கையிலும், கடைத்தெருவிலும், நோயிலும், சுகத்திலும், இன்பத்திலும், துன்பத்திலும் அனைத்து நேரங்களிலும் திக்ரைப் போன்று உயர்வு தரும் பொருள் வேறெதுவும் இல்லை” என்று அசி புத்தகம் உளறி இருப்பது எமது ஆய்விற்கு போதுமானதாக இருக்கிறது. காலையிலும், மாலையிலும் தம்மை திக்ர் செய்யும்படியும், தம்மிடம் பிரார்த்தனை செய்யும்படியும் அகிலங்களைப் படைத்த அல்லாஹ், உலக மக்களுக்கு கட்டளை இட்டிருக்கும் பல இறை வசனங்களை முந்தைய எமது தொடரில் ஏற்கனவே தெரிவித்திருக்கிறோம். எப்போது திக்ர் செய்யவேண்டும் என்று உயர்ந்தோன் அல்லாஹ் குறிப்பிட்டுள்ள அந்த காலை மாலை நேரங்களை புறந்தள்ளி விட்டு, அசி புத்தக ஆசிரியர் தம் மனம் போல போக்கில் வேண்டுமென்றே, படுக்கையிலும், கடைத்தெருவிலும், நோயிலும், சுகத்திலும், இன்பத்திலும், துன்பத்திலும் அனைத்து நேரங்களிலும் திக்ர் செய்யும்படி வலியுறுத்துகிறார்.

அதுமட்டுமல்ல! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்த ஹதீது ஒன்றை கவனியுங்கள்.

அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் கூறியதாவது: “என்னிடம் ஒரு பெண்மணி இருந்த போது, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் வந்து, “இவர் யார்’; என்று கேட்டார்கள். நான், “இவர் இரவெல்லாம் உறங்காமல் தொழுது கொண்டே இருப்பார்” என்று கூறினேன். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், “நற்செயல்களில் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் சடைவடையாத வரை, அல்லாஹ்வும் சடைவடைய மாட்டான்’ என்று கூறினார்கள். நிலையாகத் தொடர்ந்து செய்துவரும் நற்செயலே அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுக்கு விருப்பமானதாக இருந்தது. (நூல்: முஸ்லிம், ஹதீத் எண். 1439, இந்த ஹதீத் இன்னும் 3 அறிவிப்பாளரின் தொடர்களில் வந்துள்ளது)

சுலபமான மார்க்கத்தை போதித்த நபி (ஸல்) அவர்களின் முன்மாதிரியை அசி ஆசிரியர் பொருட்படுத்தாமல், வேண்டும் என்றே அனைத்து நேரங்களிலும் திக்ர் செய்ய வேண்டும் என்று பிதற்றி வருகிறார்.

அசி ஆசிரியரின் அடுத்த தகவலை கவனத்துடன் உற்று நோக்குங்கள்! அப்பா வித்தனமாக தெரிவிப்பது போல இருக்கும்; சரியாகத்தானே சொல்லி இருக்கிறார் என்றெல்லாம் நினைக்கத் தோன்றும். உங்களின் அந்த நினைப்பு சரியா என்பதை கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அவரது அடுத்த தகவலைப் படித்துப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

“எவருடைய உள்ளம் திக்ரினால் ஒளி பெற்று விடுகிறதோ அவர் தூங்கினாலும், திக்ரை மறந்து இரவில் விழித்திருப்பவர்களை விட மேலான அந்தஸ்தை அடைந்து கொள்கிறார்?’ இதைப் படித்துவிட்டு, இது உண்மைதான். உண்மைதான் என்று சொல் லத் தோன்றுகிறதா? தொடர்ந்து படித்துப் பாருங்கள்.

திக்ர் என்ற பெயரில் திக்ர் மஜ்லிஸ்களில் தங்கள் உடலை அசைத்து “ஹூ, ஹூ, அல்லாஹூ’ (அவன், அவன், அல்லாஹ்) என்று அர்த்தம் தராத வார்த்தைகளை

அனர்த்தமாக உரக்கக் கத்திக்கொண்டு அவர்கள் செய்யும் சேட்டைகளைப் பற்றி தான் அசி புத்தகம் திக்ர் என்று கூறுகிறது. இப்படிப்பட்ட திக்ரினால் உள்ளம் ஒளி பெற்று விடுகிறதாம்? அவர் இருந்த வரை யார் யாருடைய உள்ளங்கள் ஒளி பெற்றதை அசி ஆசிரியர் இதுவரை பார்த்திருக்கிறார்? இது என்ன? மனித உடலுக்குள் உள்ளே இருக்கின்ற உறுப்புகளையும், குறிப்பாக வயிற்று பகுதியின் உறுப்புகளின் உள்ளேயும், வெளியேயும், பக்கவாட்டிலும் சென்று நோயின் தன்மையை அறிய, தேவைப்படும் இடங்களை உள்நோக்குக் கருவி (ENDOSCOPIC) மூலம் மருத்துவர்கள் படம் பிடிப்பது போல என்று நினைத்துக் கொண்டு, திக்ரினால் உள்ளம் ஒளி பெறுகிறது என்று கூறுகிறாரா அசி ஆசிரியர்? அப்படியானால், ஒளி பெற்ற உள்ளத்தை ஒரு படம் பிடித்து காட்டி இருக்கலாமே!

அடுத்து இங்கே அசி ஆசிரியர் வி­த்தை கக்கி இருப்பதை இப்போது பாருங்கள்!

“இரவில் விழித்திருப்பவர்களை விட மேலான அந்தஸ்தை அடைந்து கொள்கிறார்’ என்று கூறுகிறார் அசி ஆசிரியர்! இரவில் விழித்து என்ன செய்ய வேண்டும் என்று அல்லாஹ் கட்டளை இட்டிருப்பதை இப்போது கவனியுங்கள்!

போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே! (குர்ஆன் 73:1)

இரவில் சிறிது நேரம் தவிர்த்து (தொழ) நிற்பீராக! (குர்ஆன் 73:2)

அதில் பாதி அல்லது அதில் சிறிது குறைத்துக் கொள்வீராக! (குர்ஆன் 73:3)

அல்லது அதைவிடச் சற்று அதிகப்படுத்திக் கொள்வீராக! (குர்ஆன் 73:4)

மேலும் குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி நிறுத்தியும் ஓதுவீராக.

நிச்சயமாக, நாம் விரைவில் கனமான சொல்லை (குர்ஆனை) இறக்கி வைப்போம்.  (குர்ஆன் 73:5)

நிச்சயமாக, இரவு வணக்கம் வலுவானது, தாக்கமானது, மிகத் தெளிவான வாக்காகும். (குர்ஆன் 73:6)

மேலே கூறப்பட்டுள்ள இறை வசனங்களில், இரவில் விழித்து தொழ வேண்டும் என்ற இறை கட்டளை இடம் பெற்றிருக்கிறது. அந்த இறை கட்டளையை அசி ஆசிரியர், நிராகரித்து விடுகிறார். ஆனால் அந்த இறை கட்டளையை அப்படியே ஏற்று தொழுது காட்டிய இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் கூறியதை முஸ்லிமில் இடம் பெற்றுள்ள ஹதீத் எண் 4836ஐப் படித்துத் தெரிந்து கொள்வோம்.

முஃகீரா இப்னு ஷிஅபா(ரழி) அவர்கள் அறிவித்தார்: நபி(ஸல்) அவர்கள் தம் பாதங்கள் வீங்கும் அளவிற்கு நின்று தொழு தார்கள். அப்போது அவர்களிடம், “தங்களின் முந்தைய பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்து விட்டானே?’ (இவ்வாறு இருக்கும்போது இரவில் விழித்து நின்று சிரமத்துடன் தொழவேண்டுமா) என்று கேட் கப்பட்டதற்கு, நபி(ஸல்) அவர்கள், “நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண் டாமா?’ என்று வினவினார்கள். (முஃகீரா இப்னு ஷிஅபா(ரழி), புகாரி:4836)

ஆக இரவில் விழித்து தொழ வேண்டும் என்பது இறைக்கட்டளை என்பதை அறிந்த இறைத்தூதர் திக்ர் செய்யாமல் தொழுது காட்டியதை தவறு என்பது போல் இந்த மனுஷன் அசி ஆசிரியர் சித்தரிப்பதைப் பாருங்கள். “திக்ர் செய்பவர் தூங்கினாலும், திக்ரை மறந்து இரவில் விழித்திருப்பவர்களை விட, மேலான அந்தஸ்தை அடைந்து கொள்கிறார்’ என்று எவ்வளவு துணிச்சலாக நெஞ்சழுத்தத்துடன் விழித்திருந்து தொழுவதை விட மேலான அந்தஸ்தை அடைந்து கொள்கிறார்’ என்று கூறுகிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

எனவே, இறைக்கட்டளையையும், இறைத்தூதரின் அமல்களையும் அவமதிக்கும் அசி புத்தகத்தை பள்ளியிலோ, வீட்டிலோ படிப்பதை புறக்கணித்து புனித குர்ஆனை தினமும் படித்து நேர்வழியில் இருக்குமாறு தப்லீக் ஜமாஅத் சகோதரர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

Previous post:

Next post: