தவ்ஹீதுவாதிகளே! கொஞ்சம் திரும்பிப் பாருங்கள்!

in 2021 அக்டோபர்

தவ்ஹீதுவாதிகளே!

கொஞ்சம் திரும்பிப் பாருங்கள்!

        மறு பதிப்பு :

எல்லாம் வல்ல இறையோனே! ஏகத்துவத்தைச் சார்ந்தோர்களின் இதயங்களை இணைப்பாயாக! சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னர் இறைவனுக்காக, இறைவ னின் சமுதாயத்திற்காக ஒன்றுபட்ட இதயங்கள் பதவி, அதிகாரம் போன்றவற்றால் ஏற்பட்ட பொறாமையின் காரணமாக ஒன்றுபட்ட சமுதாயத்தை பிரித்துவிட்டார்கள்; அன்று இறைவனுக்காக இதயங்கள் இணைந்தன; இன்றோ தலைவர்களுக்காக இணைந்தவர்கள் பிரிந்துவிட்டனர். சத்தியதோழர்கள் இறைவனின் மார்க்கத்திற்காக தியாகங்களைப் புரிந்தார்கள். இன்றைய தினம் தனி நபர் வளர்ச்சிக்காக, வாழ்விற்காக தியாகங்கள் புரிகின்றனர். தக்லீது அறவே கூடாது என்றே முழங்கினீர்கள். இன்று உங்களிடம் தக்லீது வெகு வேகமாக வளர்ந்து கொண்டே வருகின்றது. மத்ஹபு என்ற பெயராலும், தரீக்கா என்ற பெயராலும் இஸ்லாமிய சமுதாயத்தை பிளவுபடுத்திவிட்டீர்களே என்று குற்றம் சாட்டினீர்கள்; ஆனால் நீங்களோ மிகக் குறுகிய காலத்தில் இயக்கங்களின் பெயரால் பல பிரிவுகளாக ஆகிவிட்டீர்கள். காலங்கள் செல்லச் செல்ல இன்னும் எத்தனை இயக்கப் பிரிவுகள் ஏற்படுமோ? அல்லாஹ் தான் மிக அறிந்தவன், ஒன்றுபட்ட சமுதாயமாக இருக்கும்போது ஏகத்துவத்தின் எழுச்சி பிரகாசித்தது. பிரிவுகளும், பிளவுகளும் ஏற்பட்ட பிறகு ஏகத்துவத்தின் எழுச்சியின் பொலிவு குறைந்துவிட்டது.

குர்ஆனின் 6வது அத்தியாயம் 162வது வசனத்தின் அடிப்படையில் “என் தொழுகை, என் குர்பானி, என் வாழ்வு, என் மரணம் அகிலத்தாரின் இறைவனான அல்லாஹ்வுக்கே” என உறுதி கொண்டு அல்லாஹ்வின் கயிறான குர்ஆனை பற்றிக் கொண்ட பிறகு ஏன் பிரிந்து பல பிரிவுகளாக ஆகவேண்டும்; உலகப் பொதுமறையாம் குர்ஆனையும், உலகத் தூதர் நபி(ஸல்) அவர்களையும் ஏற்றுக்கொண்டவர்கள் ஏன் பிரிய வேண்டும்? பிரிந்துதான் செயல்படும்படி அல்லாஹ் அறிவுறுத்தி உள்ளானா? அல்லது உலகத் தூதர் அவர்கள் கூறியிருக்கின்றார்களா? சமுதாயத்தைப் பல பிரிவுகளாகப் பிரித்து விட்டவர்களே! தயவுசெய்து ஆதாரத் தைத் தாருங்களேன்! ஆனால் வல்லவனாம் அல்லாஹ் நீங்கள் ஒன்றுபட்டு வாழுங்கள் என்றே கூறுகிறான். இஸ்லாமிய சமுதாயத்தில் பிளவு அறவே கூடாது என்றே எச்சரிக்கை செய்கிறான். தங்களிடம் தெளிவான சான்றுகள் வந்த பின்னர் தங்களுக்குள் பிரிவை உண்டாக்கிக் கொண்டு வேறுபட்டு போனார்களே அவர்களைப் போன்று நீங்களும் ஆகிவிட வேண்டாம்; (பிரிந்து சென்றார்களே!) அத்தகையோருக்குத்தான் (மறுமையில்) மகத்தான வேதனையுண்டு. அல்குர்ஆன் 3:105

இறைவனுக்காக வாழ்வோம்! இறை வனுக்காக வீழ்வோம்! என அமர்க்களமாக கோசங்களைக் கூறி ஏகத்துவத்திற்கு வந்தவர் கள் ஒற்றுமையை வலியுறுத்தும் குர்ஆனிய வசனங்களையும், உலகத்தூதரின் போதனைகளையும் ஏன் மறந்து விட்டீர்கள்? அல்லாஹ்வுக்காக ஒன்றுபட வாருங்கள் என அழைத்த போதிலும் “அல்லாஹ்வின்’ பெயர் கூறி விடுத்த அழைப்பை நிராகரிக்க எப்படித்தான் உங்(நெஞ்சங்கள் மறுத்தன)களுக்கு மனம் வந்தது.

வல்லவனாம் அல்லாஹ் 8வது அத்தியாயம் 2வது வசனத்தில் கூறியுள்ளதை உங்களுக்கு நினைவூட்டுகிறேன். அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டால் உண்மை விசுவாசிகளின் உள்ளம் அஞ்சி நடுங்கும். பல்வேறு கொள்கைகளைக் கொண்டவர்கள் தங்களுக் கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைக் களைந்துவிட்டு ஒன்றுபடுவதைப் பார்க்கின்றோம். ஆனால் ஒத்த கருத்துடையவர்கள் இறைவனுக்காக ஒன்றுபட்டு செய லாற்றுவதற்கு என்ன தடை? உலகத் தூதர் நபி(ஸல்) அவர்கள் ஒரே தலைமையின் கீழ் தான் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்கள். “யாராவது ஒருவர்’ தன் தலைவரிடமிருந்து வெறுக்கத்தக்க ஒன்றைப் பார்த் தால் அவர் அதைப் பொறுத்துக் கொள்ளட்டும். தலைமைக்கு கட்டுப்படுவதை விட்டும் ஒரு முழம் கூட யாராவது பின்வாங்கி விட்டாலோ அவர் அறியாமை காலத்து மரணமடைவார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

இஸ்லாம் அரசியல் கட்சி போன்றதல்ல; அது அல்லாஹ்வின் மார்க்கம்; அல்லாஹ் ஏற்றுக்கொண்ட சத்திய மார்க்கம்; பிரிவுகளும், பிளவுகளும் இல்லாத மார்க்கம்; இஸ்லாமாகும். இதையே வல்ல அல்லாஹ் 6வது அத்தியாயம் 159வது வசனத்தில் சுட்டிக் காட்டுவதைப் பாருங்கள்; “நிச்சயமாக தங்கள் மார்க்கத்தைப் பிரித்துப் பல பிரிவினர்களாகி விட்டனரே அத்தகையோர் அவர்களின் எக்காரியத்திலும் நீர் இல்லை; அவர்களுடைய விசயமெல்லாம் அல்லாஹ்விடமே இருக்கின்றது; அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை பின்னர் அவன் அவர்களுக்கு அறிவித்துவிடுவான்.

இறைவனின் மார்க்கமான இஸ்லாம் உயர்ந்தோங்க வேண்டும் என்ற உணர்வுடையவர்கள் ஒன்றுபடுவது மிக மிக அவசியமானதாகும். ஒற்றுமையாக வாழவேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளையாகும். அல்லாஹ்வின் கட்டளையை மீறுவது உண்மை முஸ்லிம்களுக்கு அழகல்ல. நாங்கள் தனித்தே செயல்படுவோம் என்று கூறக் கூடியவர்களுக்கு இறுதியாக ஓர் வசனத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். “தன்னுடைய இரட்சகனின் வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டு பின்னர் அவைகளைப் புறக்கணித்து விடுகிறவனை விட மிக அநியாயக்காரன் யார்? நாம் (இத்தகைய) குற்றவாளிகளை உறுதியாக தண்டிக்கக் கூடியவர்களே!  அல்குர்ஆன் : 32:22

ஆகவே, எனதருமைச் சகோதரர்களே! அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்; ஒன்றுபட்ட சமுதாயத்தை உருவாக்க தியாகம் செய்வோம். நம்முடைய கடந்த கால வாழ்வை நினைத்து, வருந்தி இறைவனிடம் முறையிடுவோம். விருப்பு, வெறுப்பு எதுவாக இருந்தாலும் இறைவனுக்காக, இறைவனின் மார்க்கத்திற்காக மறப்போம், மன்னிப்போம் என்ற உயர்ந்த எண்ணத்தின் அடிப்படையில் ஒன்றுபடுவோம். எல்லாம் வல்ல அல்லாஹ் இஸ்லாமிய உள்ளங்களை ஒன்றுபடுத்துவானாக!

Previous post:

Next post: