நல்லது இருந்தால் அதனை எடுத்துக்கொள்ளலாம்!

in 2021 அக்டோபர்

நல்லது இருந்தால் அதனை எடுத்துக்கொள்ளலாம்!

எஸ்.எம்.அமீர்,   நிந்தாவூர்.

செப்டம்பர் மாத தொடர்ச்சி…..

“வழிகெட்டவனை தலைகுப்புற விழுந்தவனுக்கு உதாரணமாக ஒப்பிடுதல்”

முகம் குப்புற (மண்ணில்) விழுந்து கிடப்பவன் நேர்வழி பெற்றவனா? அல்லது நேரான பாதையில் சீராக நடந்து செல்பவனா? (67:22) என்கின்றான். அத்துடன், “உத்தம நபித்தோழர்களைச் செழிப்பான தோட்டத்திற்கு ஏக இறைவனான அல்லாஹ் உவமை காட்டும் அழகு பாரீர்”

முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார். அவருடன் இருப்போர் (ஏக இறைவனை) மறுப்போர் மீது (கொள்கை ரீதியில்) கடுமையனவர்களாகவும், தங்களுக்கிடையே இரக்கம் மிகுந்தும் இருக்கின்றனர். ருகூவு, ஸஜ்தா செய்தோராக அவர்களைக் காண்பீர்! அல்லாஹ்விடமிருந்து அருளையும், பொருத்தத்தையும் தேடுவார்கள். அவர்களின் அடையாளம் ஸஜ்தாவின் தழும்பாக அவர்களின் முகத்தில் இருக்கும். இதுவே தவ்ராத்தில் அவர்களது உதாரணமாகும். இன்ஜீலில் அவர்களுக்குள்ள உதாரணமாவது ஒரு பயிரைப் போன்றது.

அது (முதலில் துளிர் விட்டுத்) தனது குருத்தை வெளிப்படுத்துகின்றது. பின்னர் அதைப் பலப்படுத்துகிறது. பின்னர் அது பெருத்துக் கடினமாகி (வளர்ந்து விவசாயிகளை மகிழ்விக்கும் வகையில்) அதன் தண்டின் மீது(ம் உறுதியான வேரின் மீதும்) செவ்வனே நிலையாக நிற்கிறது. நிராகரிப்பவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்துவதற்காக விவசாயி(கள் எனும் நம்பிக்கையுடைய வர்)களை அது மகிழ்ச்சியடையச் செய்கிறது. அவர்களில் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு மன்னிப்பையும், மகத்தான கூலியையும் அல்லாஹ் வாக்க ளித்துள்ளான். (48:29,5:54,9:123,72)

“இறை நம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் துணை நிற்கும் வி­யத்தில் ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள்”

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறை நம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் (ஒத்துழைக்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுசேர்க்கிறது. இப்படிக் கூறும்போது) நபி(ஸல்) அவர்கள் தங்களின் கை விரல்களை ஒன்றோடொன்று கோர்த்துக் காண்பித்தார்கள். (அபூமூசா அல்ஃஅஷ்அரீ (ரழி) புகாரி 6011, 6026, 2446, முஸ்லிம்: 2586, 5043)

“தீய வழியில் செல்வது நஷ்டம் தரும் வியாபாரம் போன்றது”

அவர்களே, நேர்வழியை விற்று வழிகேட்டை (விலைக்கு) வாங்கியவர்கள். எனவே அவர்களின் வியாபாரம் பயன் தராது. அவர்கள் நேர்வழி பெற்றோரும் அல்லர். (2:16) அவர்கள் நேர்வழிக்குப் பகரமாகத் தவறான வழியைக் கொள்முதல் செய்துகொண்டவர்கள். ஆனால் அவர்களின் இவ்வணிகம் (அவர்களுக்கு எவ்விதமான) இலாபத்தை(யும்) அளிக்கவில்லை. மேலும் அவர்கள் நேர்வழி பெற்றவர்களாகவும் இருக்கவில்லை. நயவஞ்சகர்கள் தங்களுக்குக் கிடைத்த விலைமதிப்பற்ற நேர்வழியை விலையாகக் கொடுத்து அற்ப உலகாதாயத்திற்காக “இறை மறுப்பு” எனும் பொருளைக் கொள்முதல் செய்து கொண்டனர்.

ஆனால் அவர்களால் இந்த வணிகத்தில் இலாபம் அடைய முடியவில்லை நயவஞ்சகர்களை முஸ்லிம்கள் இனம் கண்டு கொண்டதாலும் அந்நயவஞ்சகர்களின் முயற்சி பலிக்காமல் போனதாலும் “நேர்வழி” எனும் முதலையும் அவர்கள் இழந்தார்கள் “உலகாதாயம்” எனும் இலாபத்தையும் இழந்தார்கள். அதாவது நயவஞ்சகர்கள் நேர்வழியைக் கைவிட்டு தீய வழியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள் என இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்களும், இறை நம்பிக்கைக்குப் பதிலாக இறை மறுப்பை வாங்கிக் கொண்டார்கள் என இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களும், முதலில் இறை நம்பிக்கை கொண்டுவிட்டுப் பின்னர் இறை மறுப்பைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர் என கத்தாதா(ரஹ்) அவர்களும் இவ்வசனத்திற்கு விளக்கமளித்துள்ளார்கள். (தஃப்ஸீர் இப்னு கஸீர் 1:100,101) மேலும் பார்க்க 41:17)

“நயவஞ்சகர்களுக்கு மற்றுமோர் உதாரணம்”

அவர்களின் நிலை (வெளிச்சத்திற்காக) நெருப்பை மூட்டிய ஒருவனின் நிலையைப் போன்றதாகும். அ(ந்த நெருப்பா ன)து அவனைச் சுற்றிலும் (சுடர்விட்டு) ஒளிர்ந்தபோது அல்லாஹ் அவர்களின் (கண்களின்) ஒளியைப் பறித்து (எதையுமே அவர் களால்) காண இயலாதவாறு (கடுமையான) இருள்களில் அவர்களை ஆழ்த்திவிட்டான். (அதனால்) அவர்கள் (கருத்துச்) செவிடர்கள், ஊமையர்கள், குருடர்கள். எனவே அவர்கள் (ஒருபோதும் நல்வழிக்குத்) திரும்ப மாட்டார்கள். (2:17,18) “இவை மக்களுக்காக நாம் கூறும் உதாரணங்களாகும் அறிவுடையோர் மட்டுமே இவற்றைப் புரிந்து கொள்வார்கள். (29:43) மேலும்,

இருளில் சிக்கிக் கொண்ட வழிப் போக்கர்களில் சிலர் தாம் செல்லவேண்டிய பாதையைக் கண்டறிவதற்காகத் தீ மூட்டினர் சுற்றிலும் அதன் வெளிச்சம் பரவியது. இந்நிலையில் திடீரெனக் காற்றோ மழையோ வந்து நெருப்பை அணைத்து விடவே அவர்கள் காரிருளில் சிக்கித் தவித்தனர். இவர்களின் நிலையைப் போன்றது தான் நயவஞ்சகங்களின் நிலையும் அறியாமை. இறைமறுப்பு ஆகிய இருளில் அமிழ்ந்து கிடந்த அவர்களுக்கு “இஸ்லாம்’ எனும் ஒளி விளக்கு கிடைத்தது நன்மை தீமையை அது வெளிச்சம் போட்டுக் காட்டியது. ஆனால் நயவஞ்சகர்களோ அப்பேரொளியை அலட்சியப்படுத்திவிட்டு “இறைமறுப்பு’ எனும் பழைய இருட்டி லேயே மூழ்கிப்போனார்கள். இவர்கள் கருத்துக் குருடர்கள், உண்மையை உரைக்க மறுக்கும் ஊமைகள், நல்லதைக் கேட்க விரும்பாத செவிடர்கள், இவர்கள் திருந்த மாட்டார்கள்.

அல்லது (அந்நயவஞ்சகர்களின் நிலை யானது) காரிருளும் இடியும் மின்னலும் உள்ள மேகத்திலிருந்து பொழியும் பெருமழையைப் போன்றதாகும். (அதில் சிக்கிக் கொண்டோர்) இடியோசையைக் கேட்டு மரணத்திற்கு அஞ்சித் தமது விரல்களைக் காதுகளில் திணித்துக் கொள்கின்றனர். (ஆனால்) அந்த இறை மறுப்பாளர் களை அல்லாஹ் சூழ்ந்து கொண்டிருக்கின்றான். (2:19) மேலும்,

மின்னல் அவர்களின் கண்ணொளி யைப் பறிக்கப் பார்க்கிறது. அது அவர்களுக்கு (சற்று) ஒளி தரும்போதெல்லாம் அ(தன் வெளிச்சத்)தில் அவர்கள் (சிறிது தூரம்) நடக்கின்றனர். அவர்களை இருள் கவ்வும்போது நின்றுவிடுகின்றனர். அல்லாஹ் நாடினால் அவர்களின் செவிப் புலனையும் கண் பார்வையையும் பறித்திருப்பான். அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் ஆற்றல் உள்ளவன். (2:20) மின்னல் அடிக்கும்போது அதன் ஒளியில் சிறிது தூரம் அவர்கள் நடப்பார்கள் அது நின்று இருள் படர்ந்துவிட்டால். அப்படியே திகைத்துப் போய் நின்றுவிடுவார்கள். இப்படித்தான் நயவஞ்சகர்களின் நிலையும்,

இறை நம்பிக்கையால் உள்ளத்திற்கு உண்மை புலப்படும்போதெல்லாம் அவர்கள் ஆறுதலடைவார்கள். அதைப் பின்பற்றவும் செய்வார்கள். ஆனால் அடுத்ததொரு சமயம் சந்தேகம் தலைதூக்கி விட்டால் அவர்களின் உள்ளம் இருளடைந்து விடுகிறது. அப்படியே விக்கித்துப் போய் நின்றுவிடுவார்கள். இத்தகையவர்கள் தொடர்பாகவே மற்றுமொரு வசனத்தில், இறைவன் கூறுகின்றான்.

அன்றைய தினம் நயவஞ்சகர்களான ஆண்களும், பெண்களும் இறை நம்பிக்கை கொண்டவர்களிடம் “எங்களைக் கொஞ்சம் கவனியுங்களேன்’ உங்களது ஒளியிலிருந்து நாங்களும் சிறிதளவு வெளிச்சம் பெற்றுக் கொள்கிறோம்’ என்று கேட்பார்கள். உங்களுக்குப் பின்னால் திரும்பிச்சென்று ஒளியைத் தேடுங்கள் என்று (அவர்களிடம்) கூறப்படும். (57:13)

“ஏக இறைவனை மறுத்துவிட்டவர்களின் நிலையானது!

(ஏக இறைவனை) மறுத்துவிட்டவர்களின் நிலையானது சப்தமிட்டு அழைக்கப்படுகின்ற (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) வற்றின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அவை வெறும் அழைப்போசையையும் கூப்பாட்டையும் தவிர (கருத்து) எதையும் கேட்(டு விளங்)காது. இ(த்தகைய)வர்கள் (கருத்துச்) செவிடர்கள்; ஊமையர்கள், குருடர்கள். எனவே அவர்கள் விளங்கமாட்டார்கள். (2:171) மேலும், நபியே குருடர்களுக்கு அவர்களின் வழிகேட்டிலிருந்து நல்வழி காட்டுபவராக நீர் இல்லை. நம் வசனங்களை நம்பி கட்டுப்பட்டு நடப்போரைத் தான் உம்மால் கேட்கச் செய்ய முடியும். (30:53) அதனால்,

அறியாமையிலும் தவறான வழியிலும் உழன்றுவரும் இறைமறுப்பாளர்கள் மேய்ந்து திரியும் கால்நடைகளைப் போன்றவர்கள் அவற்றுக்குச் சொல்லப்படும் வார்த் தகள் எதையும் அவை விளங்குவதோ புரிந்து கொள்வதோ இல்லை மாறாக அவற்றை மேய்க்கும் இடையன் அவற்றைக் கூவி அழைத்தால் அவனது சப்தம் மட்டுமே அவைகளின் காதுகளில் விழும். என இந்த வசனத்திற்கு இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்கள். (தஃப்சீர் இப்னு கஸீர் 1:524,525 இது போன்றே) “மறுமையை (மறுத்து) நம்பிக்கை கொள்ளாதோருக்குக் கெட்ட உவமைதான் உண்டு (16:60) என்று மேற்கண்ட வசனம் கூறுகிறது.

“ஏக இறைவசனங்களை நிராகரிப்பவர் களை செவிடர்களுக்கும், ஊமையர்களுக்கும் உவமையாக அல்லாஹ் சொல்வது”

நமது வசனங்களைப் பொய்யயனக் கருதியோர் செவிடர்களாவர், ஊமைகளாவர், இருள்களில் அவர்கள் உள்ளனர். தான் நாடியோரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறான். தான் நாடியோரை நேரான பாதையில் செலுத்துகிறான் (6:39) எனவே நபியே!

உமது கூற்றை காது கொடுத்துக் கேட்போரும் அவர்களில் உள்ளனர். “அவர்கள் விளங்காத போதும் செவிடர்களை நீர் கேட்கச் செய்வீரா? (10:42)

என்ன, உம்மைப் பார்ப்போரும் அவர்களில் உள்ளனர். அவர்கள் பார்க்காத போதும் குருடனுக்கு நீர் வழிகாட்டுவீரா? (10:43)

என்ன, இவ்விரு பிரிவினருக்கும் உதாரணம் குருடன் மற்றும் செவிடனும், பார் வையுள்ளவன் மற்றும் கேட்பவனும் ஆவார்கள். தன்மையில் இவ்விருவரும் சமமாவார்களா? நீங்கள் படிப்பினை பெறமாட்டீர்களா? (11:24) என்று இறைவன் கேட்கின்றான்.

உமது இறைவனிடமிருந்து அருளப்பட்டது உண்மையே என்று அறிந்திருப்பவர், குருடரைப் போல் ஆவாரா? அறிவுடையோரே படிப்பினை பெறுவார்கள். (13:16,19) என்கின்றான்.

“தூதுச் செய்தியைக் கொண்டே உங்களை எச்சரிக்கிறேன்” என்று (முஹம்மதே) கூறுவீராக! எச்சரிக்கப்படும்போது அழைப்பை, செவிடன் செவியுறமாட்டான். (21:45) என்பதே உண்மையாகும்.

நீர் இறந்தோரைச் செவியேற்கச் செய்ய முடியாது! அழைப்பைப் புறக்கணித்து ஓடும் செவிடர்களைக் கேட்கச் செய்ய உம்மால் முடியாது. (27:80)

மேலும், இறந்தோரைச் செவியுறச் செய்ய உம்மால் முடியாது. செவிடர்கள் பின்வாங்கி ஓடினால் அழைப்பை அவர்களுக்குச் செவியேற்கச் செய்ய உம்மால் முடியாது.(30:52)

நீர் செவிடரைச் செவியேற்கச் செய்வீரா? குருடருக்கும், தெளிவான வழிகேட்டில் இருப்பவருக்கும் நீர் வழிகாட்டுவீரா?  (43:40)

Previous post:

Next post: