மீலாது, மெளலூது, மார்க்கம் சொல்வதென்ன?

in 2021 அக்டோபர்

மீலாது, மெளலூது, மார்க்கம் சொல்வதென்ன?

K.M.H.  அபூ அப்தில்லாஹ்

மறு பதிப்பு :

ரபீவுல் அவ்வல் மாதம், நாடெல்லாம் மீலாது விழாக்களும், பள்ளிகளில், வீடுகளில் மெளலூதுகளும் மிக விமரிசையாகக் கொண்டாடப்படும். இவை கொண்டு இறை திருப்தியும், நபி(ஸல்) அவர்கள் ஷபாஅத்தும் (பரிந்துரை) தங்கள் உலகக் காரியங்களில் நலனும், அபிவிருத்தியும் ஏற்படும் என்பது இன்றைய முஸ்லிம்களின் மூட நம்பிக்கையாகும். இவற்றை எல்லாம் மார்க்கமாகக் கொள்ள இவர்களுக்கு ஆதாரங்கள் எங்கிருந்து கிடைத்தன? என்பதை நாம் அறியோம். ஆனால் இவையயல்லாம் மார்க்கத்தில் உள்ளவை அல்ல. நபி(ஸல்) அவர்களால் கண்டிக்கப்ப ட்ட பித்அத்துகள் (வழிகேடுகள்) என்பதற்குக் குர்ஆனிலிருந்தும், ஹதீதுகளிலிருந்தும் பல ஆதாரங்கள் கிடைக்கின்றன.

நபி(ஸல்)அவர்களது முதல் மீலாதைக் கொண்டாடியவன் இறைவனால் சபிக்கப்பட்ட அபூலஹப்! நபி(ஸல்) அவர்கள் பிறந்த வுடன் மீலாது நடந்துள்ளது. அது நல்ல செயலாக இருந்திருந்தால், நபி(ஸல்) அதை ஏற்று, நடந்திருப்பார்கள். உம்மத்துக்கும் போதித்திருப்பார்கள். நடந்ததை விட்டிருக்கின்றார்கள் என்றால், அது அறியாமைக்கால மூடப்பழக்கமாகத்தான் இருக்க வேண்டும். நபி (ஸல்) அவர்களால் ஒழிக்கப்பட்டு நபிதோழர்களால், தாபியீன், தபஉத் தாபியீன்களால், இமாம்களால், பெரியார்களால் கடைபிடிக்கப்படாமல், ஹிஜ்ரி 600ல் எகிப்து அரசன் “இர்பல்’ என்பவரால், “இயேசுவுக்குப் பிறந்தநாள் கொண்டாடும்போது, நபி(ஸல்) அவர்களுக்கு ஏன் கொண்டாடக் கூடாது?’ என்ற சில மூட முஸ்லிம்களின் பேச்சைக் கேட்டு ஆரம்பிக்கப்பட்டது தான் இன்று நம்மவர்கள் எடுத்து நடத்தி வரும் மீலாதாகும். நம்மவர்கள் நபி(ஸல்) அவர்களைத் தங்கள் வழிகாட்டியாகக் கொள்ளவில்லை. அபூலஹபையும், இர்பலையும் வழிகாட்டியாகக் கொள்ளவில்லை. அபூலஹபையும், இர்பலையும் வழிகாட்டிகளாக எடுத்துக் கொண்டுள்ளனர். இவர்கள் நிலை என்ன? கோபப்படாமல் சிந்தித்து விளங்கவும்.

“நாம், உமது புகழை உயர்த்தி விட்டோம்’. அல்குர்ஆன் 94:4

“பனூ ஆமிர் தூதுக் குழுவுடன் நானும் நபி (ஸல்) அவர்களிடம் சென்றிருந்தேன். அப்போது நாங்கள் அவர்களை நோக்கி, நீங்கள் எங்களின் தலைவர் என்று கூறினோம். அதற்கு அவர்கள் “தலைவன் அல்லாஹ்வே!’ என்று கூறினர். “தாங்கள் எங்களை விட மாண்பு மிக்கவர், பெரும் கொடையாளர் என்றோம்; அதற்கு அவர்கள் “இவ்விதம் கூறுங்கள். அல்லது இதில் சிலவற்றைக் கூறுங்கள் (இறைவனுக்குரிய அடைமொழிகளைக் கொண்டு என்னை வர்ணிப்பதன் மூலம்) உங்களுக்கு உறுதுணையாக ஷைத்தானை அழைக்காதீர்கள்” என்று கூறினர். அறிவிப்பவர்: மத்ரஃப் இப்னு அப்துல் லாஹ், நூல்: அபூதாவூது.

இப்னு மர்யமைக் கிறிஸ்தவர்கள் மிகைப்படப் புகழ்ந்தது போன்று, நீங்கள் என்னை மிகைப்படப் புகழாதீர்கள்; எனினும் (என்னை) அல்லாஹ்வுடைய அடியார் என்றும், தூதர் என்றும் கூறுங்கள் என்று நபி(ஸல்) கூறியதை உமர்(ரழி) கேட்டதாக உரைத்ததை நான் கேட்டேன்.  அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரழி), நூல்: ரஜீன்

ஒருபொழுது நபி(ஸல்) எங்கள் முன் தோன்றினர். அப்போது நாங்கள், “இறைத் தூதர் அவர்களே தங்களுக்கு எவ்வாறு சலாம் உரைப்பது? என்பதை அறிந்துள்ளோம். ஆனால், தங்கள் மீது எவ்வாறு சலவாத்து கூறுவது?’ என்று வினவினோம். அதற்கு நபி (ஸல்) “அல்லாஹும்ம சல்லி அலா முஹம்மதிவ் வஅலா ஆலி முஹம் மதின் கமா சல்லைத்த அலா இப்ராஹீம் இன்னக ஹமீதும் மஜீத், “அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதிவ் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம இன்னக ஹமீதும் மஜீத்” என்று கூறுங்கள் என்று கற்றுத் தந்தனர். அறிவிப்பவர் : கஃபுப்னு உஜ்ரா(ரழி), நூல்கள்: புகாரீ, முஸ்லிம், அபூதாவூது, திர்மிதி, நஸயீ.

சலவாத்தில் சிறிது மாறுதல்களோடு இதேபோன்ற ஹதீதுகளை அபூ மஸ்ஊதில் பதரிய்யி(ரழி) அபூ ஹுமைதிஸ்ஸாயி திய்யி (ரழி) ரிவாயத்துச் செய்ததாக புகாரீ, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், நஸயீ ஆகிய நூல்களில் காணக் கிடைக்கின்றன.

நபி(ஸல்) அவர்களின் புகழை எந்த அளவு உயர்த்த வேண்டுமோ அந்த அளவு அல்லாஹ் உயர்த்தி விட்டான். அதற்கு மேல் நபி(ஸல்) அவர்களின் புகழை யாராலும் உயர்த்த முடியாது என்பதைத் திருகுர்ஆன் வசனமும், நபி (ஸல்) அவர்கள் மீது சலவாத்துச் சொல்லும் முறையை நபிதோழர்களே நபி(ஸல்) அவர்களிடமிருந்து கேட்டுக் கற்றுக் கொண்டார்கள்! அவர்கள் இஷ்டத்திற்குக் வாயில் வந்தபடி சொல்லவில்லை. அதற்கு அனுமதிக்கப்படவில்லை என்பதை ஹதீதுகளும் நிரூபிக்கின்றன. நபிதோழர்களே துணிவு பெறாத ஒரு காரியத்தில் அதற்குப் பின்னால் வந்தவர்கள் அவர்கள் இஷ்டத்திற்கு “சலவாத்து’ அமைத்து ஓதுகிறோம் என்று சொன்னால், நபி(ஸல்) அவர்களைப் புகழ்வதாகச் சொல்லிக்கொண்டு வாயில் வந்ததை, கவிதைகளைப் பாடி வைத்தால், அவற்றை முஸ்லிம்களும் மிகப் பக்தி சிரத்தையோடு ஓதுவதால் நலனும் அபிவிருத்தியும் உண்டாகும். நாட்டங்கள் நிறைவேறும் என்று நம்பினால், இதை வழிபாடு என்று சொல்வதா? வழிகேடு என்று சொல்வதா? தயவு செய்து ஆத்திரப்படாமல் சிந்தியுங்கள். நபி(ஸல்) அவர்களால் கற்றுத்தரப்படாத சலவாத்தாக இருக்கட்டும், அவர்களைப் புகழ்ந்து பாடப்பட்ட கவிகளாக இருக்கட்டும், அவை இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படாமல் நிராகரிக்கப்படும் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.

சலவாத்து ஓதுவதை, நபி(ஸல்) அவர்கள் மீது புகழ் பாடுவதாகத் தப்பாக மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். நபி(ஸல்) கற்றுத்தந்த சலவாத்தை உற்றுநோக்குங்கள். அதில் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்கிறோமா? அல்லது புகழ்கிறோமா? “இப்றாஹிம்(அலை) அவர்கள் மீது எப்படி சாந்தியையும், அபிவிருத்தியையும் பொழிந்தாயோ, அதேபோல் நபி(ஸல்) அவர்கள் மீதும், அவர்களைச் சார்ந்தவர்கள் மீதும் சாந்தியையும், அபிவிருத் தியையும் பொழிவாயாக அல்லாஹ்வே என்று அவர்களுக்கு துஆ செய்கிறோம். ஆம்! இந்த சலவாத்தின் மூலம் நபி(ஸல்) அவர்கள் ஒரு மாபெரும் உண்மையை நமக்குக் கற்றுத் தருகிறார்கள். “ஏகத்துவத்தை’ முறையாக உலகில் நிலைநாட்டுவதில் முழு வெற்றி பெற்றவர்கள் நபி(ஸல்) மாத்திரமே, அவர்கள் கற்றுத் தந்த சலவாத்திலும், அந்த “தவ்ஹீதையே’ உறுதிப்படுத்தப்படுகின்றது. முன்னுள்ள மக்கள் தங்கள் நபிமார்களையே, மூடத்தனமாக வணங்கும் குற்றத்திற்கு ஆளாகிவிட்டார்கள். அந்தத் தவறுக்குத் தனது சமூகமும் ஆளாகி விடக்கூடாது என்பதற்காக, முன்ஜாக்கிரதையாக சலவாத்திலேயே அதைக் கற்றுத் தருகிறார்கள் நபி(ஸல்) அதாவது அல்லாஹ் ஒருவன் மட்டுமே தேவையற்றவன், முஹம்மதாகிய நான் மிகத் தேவையுடையவன் என்பதைத் தனது உம்மத்துத் தன்மீது அதிகமதிகமாக சலவாத்து ஓதுவது கொண்டு நினைவுபடுத்துவதனால், தவ்ஹீதில் நிலைபடச் செய்கிறார்கள். எக்காரணம் கொண்டும் அல்லாஹ்வுக்குரிய வர்ணிப்புக்களைத் தனக்காக தன்னுடைய உம்மத்து செய்து விடக்கூடாது என்பதைச் சலவாத்தின் மூலம் நபி(ஸல்) கற் றுத் தருகிறார்கள். விஷயம் இவ்வளவு தெளிவாக இருந்தும், நம்மவர்கள் நபி(ஸல்) அவர்கள் மீது சலவாத்துச் சொல்வதாக, புகழ்வதாகச் சொல்லிக்கொண்டு, அவர்கள் மனம் போன போக்கெல்லாம் சொல்லி வைத்தால் இவை இறைவனால் அங்கீகரிக்கப்படுமா? தயவு செய்து சிந்தியுங்கள்.

அடுத்து, கவிதைகள் நம்மவர்களால் மார்க்கத்தில் ஒரு முக்கிய அம்சமாக ஆக்கப்பட்டுள்ளது. எதை எடுத்தாலும் கவிதை மயமாக்க முயன்று வருகிறார்கள். இது மிகப் பெரும் வழிகேடு என்பதைக் குர்ஆன், ஹதீதுகள் மூலம் அறிய முடிகிறது.

“(தூதராகிய) அவருக்கு நாம் கவிதை (இயற்றக்) கற்றுக் கொடுக்கவில்லை. அது அவருக்குத் தகுமானதுமல்ல”. அல்குர்ஆன் 36:69

“கவிஞர்களை வீணர்களே (வழிகேடர்களே) பின்பற்றுவார்கள்; நிச்சயமாக அவர்கள் பள்ளத்தாக்குகளில் அலைந்து திரிவதை நீர் பார்க்கவில்லையா? அவர்கள் செய்யாததைச் சொல்வார்கள்”. அல்குர்ஆன் 26:224-226

குறை´ காஃபிர்கள் நபி(ஸல்) அவர்களைக் கவிஞர் என்றும், குர்ஆனைக் கவிதை என்றும் குற்றம் சாட்டினார்கள். அது கற்பனை, உண்மையல்ல என்று சொல்வதே அவர்கள் நோக்கம். அல்லாஹ் அதை மறுத்துக் கவிஞரல்ல, அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்; திருகுர்ஆன் கவிதையல்ல நல்லுபதேசம் செய்யக்கூடியது என்று பல இடங்களில் வலியுறுத்திக் கூறுகிறான். கவிதை என்றால், அது கற்பனை; அதில் உண்மை இருக்க முடியாது என்று குறைஷ் காஃபிர்கள் விளங்கி இருந்ததை நம்மவர்கள் விளங்க முடியாமல் இருப்பது விந்தையாக இருக்கிறது.

“பள்ளியில் பழிக்குப் பழி கொலை செய்வதையும், அதில் கவிகள் பாடுவதையும் (அல்லாஹ்வுடைய) தண்டனைகளை நிறை வேற்றுவதையும் நபி(ஸல்) தடை செய்தனர்”. அறிவிப்பாளர்: ஹகீமுப்னு ஹிசாம்(ரழி), நூல்: அபூதாவூத்.

“நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் விற்பதையும், வாங்குவதையும், தவறி விட்டதைத் தேடுவதையும், கவிபாடுவதையும், வெள்ளிக்கிழமை ஜும்ஆவுக்கு முன்னர் அங்கு கூட்டமாகக் கூடுவதையும் தடை செய்தனர்”.   அறிவிப்பாளர்: அம்ருப்னுஷிஐப்(ரழி), நூல்: ஸுனன்

கவிகள் பற்றி குர்ஆனையும், ஹதீத்களையும் ஆராயும்போது மார்க்க ரீதியாக கவிகளுக்கு இடமில்லை என்பதே தெளிவாகின்றது. நபி(ஸல்) அவர்களும், நபிதோழர்களும் கவி பாடியுள்ளதாக ஹதீதுகளில் வந்துள்ளதே! என்று கேட்கலாம். எந்தச் சந்தர்ப் பத்தில் எங்கு பாடியதாக வந்துள்ளது? என் பதையும் பார்க்க வேண்டும். யுத்த சந்தர்ப்பத்தில், களத்தில் வைத்துப் பாடியுள்ளார்கள். அங்கு சிரமங்களை மறந்து, உற்சாகத்துடன் போர் புரியப் பாடப்பட்டுள்ளது. பாரம் சுமக்கும் ஒட்டகம் சுமையை மறந்து வேகமாகப் பாலைவனத்தில் செல்லவும் அன்று கவிகள் பாடினார்கள். யுத்தங்கள் முஸ்லிம்கள் மீது நிர்ப்பந்தமாகத் திணிக்கப்பட்டன; அவற்றைத் தவிர்த்துக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் இஸ்லாம் அடியோடு ஒழிக்க விரும்பிய அடிமைகள் பிரச்சினையையும், உடனடியாகத் தீர்க்க முடியவில்லை. அதேபோல் பழிக்குப் பழி கொலை செய்தல், கவிபாடுதல் இவை யுத்தகளத்தில் தவிர்க்க முடியாமல் போய்விட்டன. ஆகவே யுத்த களத்தில் கவிபாட நபி(ஸல்) அனுமதி கொடுத்தார்கள்; பாராட்டினார்கள். பரிசும் கொடுத்திருக்கலாம். நபி(ஸல்) அவர்களும் ஓரிரு அடிகள் பாடி இருக்கலாம்; பிரயாணத்திலும், சில சந்தர்ப்பங்களிலும் கவிகள் பாடச் சொல்லி நபி(ஸல்) கேட்டதாக ஹதீதில் வந்துள்ளது.

ஆனால் மக்களுக்கு நல்லுபதேசமாக பள்ளியிலோ, வெளியிலோ நபி(ஸல்) அவர்கள் கவி பாடியதாகவோ, கவிபாடச் சொன்னதாகவோ, தோழர்கள் பாடியதாகவோ எந்த ஆதாரமும் இல்லை. பள்ளியில் கவிபாடு வதைத் தடை செய்தார்கள் என்றுதான் ஹதீதுகளில் காணப்படுகின்றன. அல்லாஹ்வே குர்ஆனில்பல இடங்களில் நபி(ஸல்) அவர்கள் கவிஞர் அல்ல என்று குறைஷ் காஃபிர்களின் கூற்றை மறுத்துக் கூறும்போது, நபி(ஸல்) அவர்கள் கவிபாடினார்கள், கனவில் வந்து கவியைக் கற்றுக்கொடுத்தார்கள் என்று சொல்பவர்கள், குறைஷ் காஃபிர்களுக்கு வக்காலத்து வாங்கி, அவர்கள் கட்சியில் சேரு கிறார்கள் என்று தான் சொல்ல முடியும். விளங்கித் திருந்த முன்வாருங்கள்.

அடுத்து, இவர்களாக இயற்றிக்கொண்ட சலவாத்துகள், கவிகள், மெளலூதுகள், புருதா இவற்றை மார்க்கத்தில் இணைக்க இவர்களுக்குக் கிடைத்த “உரைகல்’ குர்ஆனும், ஹதீதுமல்ல, அவற்றால் இவர்களுக்குக் கிடைக்கும் அனுபவம், கனவுக் காட்சிகள், நோய், பேய், கஷ்ட நஷ்டம் இவற்றிலிருந்து கிடைக்கும் நிவாரணம், ஏற்படும் நலன், அபிவிருத்தி இவைதான். கைசேதம்! நம்மவர்களுடைய நிலையைப் பார்த்தீர்களா? அப்படி என்றால், புதைகுழிகளிடம் சென்று முறையிடுவதால், இது போன்றவற்றிலிருந்து நிவாரணம் கிடைப்பதாகத் தெரிகின்றதே, கோயில், குளம், குட்டை, சிலை என்று சென்று முறையிட்டாலும், நிவாரணம் கிடைப்பதாகத் தானே தெரிகின்றது. அதனால்தானே கோடிக்கணக்கான ரூபாய்கள் உண்டியலில் சேருகின்றன. அப்படிஎன்றால், இவற்றையும் மார்க்கத் தில் இணைத்துவிட வேண்டியதுதானா? இது சரிதானா? அறிவுடைமைதானா?

இன்று நம்பவர்களுக்கிடையில், இவர்களால் இயற்றப்பட்ட சலவாத்துகள், மெளலூதுகள், கவிகள், புர்தா இவை அனைத்தும் மறுமையில் நன்மையைக் கருதி ஓதப்படுவதில்லை. நோய், பேய், கஷ்ட, நஷ்டம் நீங்கி, உலகில் நலனும், அபிவிருத்தியும் ஏற்படத்தான் ஓதப்படுகின்றன. மாந்திரீகர்கள் மிகுதமாக இவற்றை ஓதி வருவார்கள். இதிலிருந்தே இவை மார்க்க சம்பந்தப்பட்டதல்ல. ஷைத்தானின் வழியைப் பின்பற்றி வழிகெட்டுச் செல்கிறார்கள் என்பது புரியும்.

அன்புச் சகோதரர்களே, நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத அனைத்து செயல்களும் பித்அத், அனைத்துப் பித்அத்துக்களும் வழிகேடுகள், வழிகேடுகள் அனைத்தம் நரகிற்கு இட்டுச் செல்லும், என்ற ஹதீதை இங்கு நினைத்துப் பாருங்கள். இவர்களால் இயற்றப்பட்ட சலவாத்துகள், மெளலூதுகள், கவிகள், புர்தா அனைத்திலும், நபி(ஸல்) அவர்கள் போதனைக்கு மாற்றமாக, இறைவனுக்குரிய அடைமொழிகளைக் கொண்டு நபி(ஸல்) அவர்களை வர்ணிப்பதும், ஷிர்க், குஃப்ர் கவிகளும் மற்ற நபிமார்களை மதிப்புக் குறைவாகச் சொல்லும் கவிகளும் மலிந்து காணப்படுகின்றன. உதாரணமாக புர்தாவின் ஒரு கவியில் “நாயகமே, இம்மை மறுமை நீங்கள் இட்ட பிச்சை, லவ்ஹுல் மஃபூல் நீங்கள் சொல்லி எழுதப்பட்டதுதான்’ என்று பாடப்பட்டிருக்கிறது. அல்லாஹ்வுடைய வர்ணிப்புக்களை எல்லாம் நபி(ஸல்) அவர்களுக்கும், அல்லாஹ்விடம் கேட்க வேண்டியதை எல்லாம், நபி(ஸல்) அவர்களிடம் கேட்டும், பாடக்கூடிய இடத்தில் நபி(ஸல்) அவர்கள் ஆஜராகி இருக்கிறார்கள் என்ற எண்ணத்திலும் கவிகள் பாடப்பட்டிருக்கின்றன.

“முஹம்மதாகிய(ஸல்) என்னை மூஸா (அலை) அவர்களுக்கு மேல் மேன்மைப்படுத்தாதீர்கள்”. அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரழி), நூல்கள்: புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி.

“யூனூஸ்(அலை) அவர்களை விட நான் முஹம்மது(ஸல்) மிகவும் மேலானவர்” என்று எந்த அடியானும் கூறுவது தகாது. அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரழி), நூல்கள்:புகாரீ, முஸ்லிம், அபூதாவூது.

“(எல்லா) நபிமார்களையும் விட என்னை மேலானவர்” என்று கருதாதீர்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஸயீது (ரழி), நூல்: அபூதாவூத்.

இந்த ஹதீதுகளுக்கு மாற்றமாக மெளலூது களிலும், புர்தாவிலும் பல கவிகள் காணப்படுகின்றன. நூல் புகாரியில் காணப்படும், “அல்லாஹ்வின் நெறிநூலில் இல்லாத நிபந்தனைகளை யிடும் மாந்தருக்கு என்ன கேடு நேர்ந்ததோ? அல்லாஹ்வின் நெறிநூலில் இல்லாத நிபந் தனைகள் அனைத்தும் தள்ள வேண்டியவை. அவை நூறு ஷரத்துக்களாயினும் சரியே!” என்ற ஆயிஷா(ரழி) அவர்களின் அறிவிப்பை யும், அதே புகாரியில் காணப்படும், “நபி(ஸல்) அவர்களின் ஹதீதுகள் எது? எது? என்று கவ னித்து அதனை எழுதிக்கொள்ளவும், ஏனெ னில், நிச்சயமாக கல்வி அறிவு பழையதாகி மறந்துவிடும் என்றும், உலமாக்கள் தவறி ழைத்து விடுவார்கள் என்றும் நான் அஞ்சுகிறேன். நபி(ஸல்) அவர்களின் ஹதீதுகளைத் தவிர, வேறு யாதும் ஒப்புக்கொள்ளத் தக்கதாக இல்லை” என்ற உமர் இப்னு அப்துல் அஜிஸ் (ரஹ்) அவர்களின் அறிவிப்பையும்,

ரஜீனில் காணப்படும், சிந்தித்து ஆரா யாது குர்ஆன் ஓதுவதில் அதிக நன்மை இல்லை. விளங்கிச் செய்யாத வணக்கம் வணக்கமல்ல, முழுக்க முழுக்க அறிவு படைத் தவர் எவரெனில், மக்களை இறைவனின் அருளை விட்டும் நம்பிக்கை இழக்கச் செய் யாதிருப்பவரும், இறைவனின் வெறுப்பை விட்டும் அவர்களை அச்சமற்று இருக்கச் செய்யாதிருப்பவரும், குர்ஆனை விட்டும் குர்ஆன் அல்லாதவற்றின் பக்கம் அவர்களைத் திரும்பச் செய்யாதிருப்ப வருமாவார், என்ற அலீ(ரழி) அவர்களின் அறிவிப்பையும், தயவு செய்து ஒவ்வொருவரும் சிந்தித்து, மார்க் கத்தை விட்டு எந்த அளவு நாம் விலகிச் சென்றிருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

நபி(ஸல்) அவர்கள் மீது நமக்கிருக்கும் அன்பையும், பிரியத்தையும் எப்படித்தான் வெளிப்படுத்துவது என்று கேட்கலாம். அதற்கும் அல்லாஹ், குர்ஆனில் தெளிவாக வழிகாட்டுகிறான்.

(நபியே!) கூறும், “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான். உங்கள் பாவங்களையும் மன்னிப்பான்”.
அல்குர்ஆன்3:31

(நபி(ஸல்) உங்களுக்கு) “எதைக் கொடுத்தாரோ, அதை எடுத்துக் கொள்ளுங்கள், எதைத் தடுத்தாரோ அதைத் தவிர்த்து கொள்ளுங்கள்.’  அல்குர்ஆன் 59:7

“அல்லாஹ்வையும், மறுமையும் நம்பி அல்லாஹ்வை நினைவு கூறுவோருக்கு, நிச்சயமாக நபி(ஸல்) அவர்களிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது”.
அல்குர்ஆன் 33:21

இந்த இறைவசனங்களை ஓதி விளங்குபவர்கள், நபி(ஸல்) அவர்கள்மீது பிரியத்தைக் காட்டுவதன்றால், அவர்கள் நடந்து காட்டியபடி நடப்பதுதான். அவர்கள் மீது கவிபாடுவதோ, மெளலூது ஓதுவதோ, மீலாது நடத்துவதோ அல்ல என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். நம்மவர்கள் இவற்றைச் செய்துவிட்டு, நபி(ஸல்) அவர்கள் செய்து காட்டிய தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் இவற்றை விட்டு விடுகிறார்கள். இது தெளிவான ஷைத்தானின் ஏமாற்றல் என்பதை இவர்களால் புரிய முடியவில்லை. இது பகிரங்க வழிகேடேயாகும்.

நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த முறைப்படி ஒரு முறை ஸலவாத்து ஓதினால் “ஓதுபவருக்கு அல்லாஹ் 10 வாழ்த்துக்களைச் சொல்கிறான்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். தங்கள் இஷ்டத்திற்கு ஸலவாத்து அமைத்து ஓதினால் அதற்கு அல்லாஹ்வின் அங்கீகாரம் உண்டா? என்பது தெரியாது. அதனால் கிடைக்கும் உலக ஆதாயங்கள் அங்கீகாரம் ஆனதாக எண்ணக் காரணமாக மாட்டாது. அங்கீகாரம் வஹி வந்து கொண்டிருந்த நபி(ஸல்) அவர்களது ரநுபவத்து காலத்தில் மட்டும் தான் கிடைத்திருக்க முடியும். நபி (ஸல்) அவர்களது மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட எந்தச் சடங்குகளுக்கும் அல்லாஹ்வின் அங்கீகாரம் கிடைத்திருக்க முடியாது.\

மார்க்க வி­யத்தில் மனித அறிவு செல்லாது. அல்லாஹ் சொன்னது மட்டும்தான் மார்க்கமாகும். நபி(ஸல்) அவர்கள் நபித்துவ காலத்தில் தன்னுடைய கண்காணிப்பில் இருந்ததாக அல்லாஹ் சொல்கிறான். (அல்குர் ஆன் 52:48) ஹுதைபியா உடன்படிக்கையை உமர்(ரழி) போன்ற கீர்த்தி மிக்கவர்கள் உட்பட அனைத்து நபிதோழர்களும், பெரிய தவறான உடன்படிக்கை என்றே எண்ணினார்கள். அல்லாஹ் அதைத் தெளிவான வெற்றி உடன்படிக்கை என்று அறிவித்தான். அப்படி யானால் பின்னால் தோன்றியவர்களின் எண் ணங்களை எல்லாம் எப்படி மார்க்கமாகக் கொள்ள முடியும்? சிந்தித்து சீர்திருத்துங்கள்.

அந்தப் பெரியார் சொன்னார், இந்தப் பெரியார் சொன்னார், அவர்கள் குர்ஆன், ஹதீதுகளைத் தெரியாதவர்களா? தப்பாகவா சொல்லி இருப்பார்கள்? என்று மூளையைப் போட்டு குழப்பாதீர்கள். அல்லாஹ்வின் “உண்மை’ பற்றி சிந்திப்பவன் எப்படி வழிகெடுவானோ, அதேபோல் இந்தச் சிந்தனையும் வழிகேட்டில் கொண்டு போய்விடும். பெரியார்கள் சொன்னார்கள் என்று குர்ஆன், ஹதீதுகளுக்கு மாற்றமாகச் சொல்லப்படும் சொல்களெல்லாம் ஈசா(அலை) சொன்னதாக கிறிஸ்தவர்கள் நம்பும் சொல்களை ஒத்தவை தான். இவை எல்லாம் செய்திப் பத்திரிக்கைகளில் வதந்திகளை சொல்லப்படுகிறது, நம்பப்படுகிறது, கூறப்படுகிறது என்று சொல்லும் தரத்தைச் சார்ந்தவை தான். மெளலூது புர்தா ஆரம்ப ஏடுகளைப் புரட்டிப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும். குர்ஆன், ஹதீத்கள் மட்டும்தான் சந்தேகத்திற்கிடமின்றி ஆதாரபூர்வமாக நிலைநாட்டப்பட்ட உண்மைச் சொற்களாகும்.

அன்புச் சகோதரர்களே, பெரியார்களின் பெயரால் புனையப்பட்டிருக்கும் கற்பனை, கட்டுக்கதைகளை எல்லாம் விட்டு நபி(ஸல்) அவர்கள் மீது முறையாக பிரியம் வைத்து குர்ஆன் போதிக்கும் தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் இவற்றைக் கடைபிடித்து, நாம் விரும்புவதையே பிறருக்கும் விரும்பும் பண்பாளர்களாகவும், உண்மையான மார்க்கத்தை பிரசாரம் செய்யும்போதகர்களாகவும் நாம் செயல்படுவோமாக. ஆமீன்.

Previous post:

Next post: